search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rameswaram fishermen"

    • நாகை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கடுமையாக பாதிப்பு.
    • இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

    பாம்பன்:

    தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மற்றும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.

    அவர்கள் பாக்ஜலசந்தி உள்ளிட்ட இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து விட்டு கரை திரும்புகிறார்கள். இதற்கிடையே எல்லை தாண்டி வந்தாக கூறி அண்டை நாடான இலங்கையை சேர்ந்த கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்வதும், அவர்களின் பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுளை பறிமுதல் செய்வதும் காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.

    அதிலும் சமீப காலமாக சிறைபிடிக்கப்படும் மீனவர்களுக்கு இலங்கை கோர்ட்டு கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பதுடன், அதனை கட்டத்தவறினால் கூடுதல் சிறைவாசம் அனுபவிக்க உத்தரவிடுகிறது.

    இதனால் மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு மாற்று தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையே நாகை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இலங்கையில் சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. எனவே மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் பாரம்பரிய இடங்களில் சுமூகமான முறையில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத்தரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீனவர்கள் பாதியில் கரை திரும்பியுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியில் இருந்து நேற்று காலை 470 விசைப் படகுகளில் 1,800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே மீன்வளம் நிறைந்த பகுதியில் வலைகளை விரித்திருந்தனர்.

    வழக்கமான நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தான் இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிக்கு வந்து அவர்களை எச்சரிப்பதும், சிறைபிடிப்பதும் நடக்கும்.

    ஆனால் நேற்று ஒரே நேரத்தில் 6 ரோந்து கப்பலில் வந்த கடற்படையினர் தமிழக மீனவர்களின் 20-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றி வளைத்தனர்.

    இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக் கொண்டு புறப்பட தயாரானார்கள். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தங்களிடமிருந்த எந்திர துப்பாக்கிகளை உயர்த்திப்பிடித்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

    எங்கள் நாட்டின் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க வந்தால் உங்களையும் சுட்டுத்தள்ளுவோம் என்று எச்சரித்துள்ளனர்.

    உடனடியாக ராமேசுவரம் மீனவர்கள் அங்கு தொடர்ந்து மீன்பிடிக்கும் சூழ்நிலை இல்லாததால் பாதியிலேயே புறப்பட்டனர்.

    ஒரு சில படகுகளில் இருந்த மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் கடலில் வீசியிருந்த வலைகளை தாங்களே அறுத்துக்கொண்டு தப்பித்தோம், பிழைத்தோம் என்று கரையை நோக்கி படகை செலுத்தினர்.

    ஒரே பகுதியில் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள் மீன்பிடித்த நிலையில் சில படகுகள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு இடத்திற்கு சென்றது. 15-க்கும் மேற்பட்ட படகுகளை சேர்ந்த மீனவர்கள் கரை திரும்பினர்.

    இதனால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறி புலம்பினர். ஆனால் இதுதொடர்பாக அவர்கள் போலீசில் எந்தவித புகாரும் தெரிவிக்க வில்லை.

    இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபர் பதவியேற்ற ஒரு சில நாட்களில் அந்நாட்டு கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை குறிவைத்து அராஜக செயல்களில் ஈடுபடுவது பெரும் கொந்தளிப்பையும், பதட்டத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    ஏற்கனவே புரட்டாசி மாதம் பிறந்துள்ள நிலையில் மீன்களுக்கு போதிய விலை கிடைக்காமல் மீனவர்கள் தவித்துவருகிறார்கள். இதற்கிடையே நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்களை மத்திய, மாநில தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    • மண்டபம் பகுதிகளிலிருந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
    • 1,500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் படகு இறங்கு தளத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தொழிலே பிரதானமாக உள்ளது. இதனை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் இருக்கிறது.

    இந்தநிலையில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக வங்கக்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என ராமேசுவரம் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

    அதனால் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை இயக்குநர் தடை விதித்தார். இதையடுத்து, பாதுகாப்பு நலன் கருதி, கடந்த 21-ந் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளிலிருந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இந்த தடை 5-வது நாட்களாக தொடர்வதால் ரூ.8 கோடி வரை மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடை காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1,500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் படகு இறங்கு தளத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையால் மீன வர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமலும், 5 நாட்கள் ஆன நிலையில் வருமானம் இல்லாமலும் தவித்து வருகிறார்கள்.

    • இலங்கை கடற்படைக்கு சொந்தமான 2 குட்டி ரோந்து கப்பல்கள் அதிவேகமாக மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தது.
    • ஒரு மீனவர் குறித்து எந்தவொரு விபரமும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ராமேசுவரம்:

    பாக் ஜலசந்தி, மன்னார் குளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடந்த 15-ந்தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து மீனவர்கள் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனர்.

    இதற்கிடையே கடலில் காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மண்டபம் பகுதி மீனவர்கள் நேற்று முன்தினமும், நேற்று காலை ராமேசுவரம் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 497 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இன்று அதிகாலையில் பெரும்பாலான படகுகள் இந்திய கடல் எல்லையை ஒட்டிய கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான 2 குட்டி ரோந்து கப்பல்கள் அதிவேகமாக மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தது.

    இதைப்பார்த்து அச்சமடைந்த மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனாலும் ஒரு சில படகுகளில் இருந்த மீனவர்கள் மீது அவர்களின் படகுக்குள் தாவிக்குதித்த இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

    இந்த கொடூரதாக்குதலின் உச்சக்கட்டமாக ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் என்பவரது விசைப்படகு மீது தங்களது பலம் வாய்ந்த ரோந்து கப்பலை வைத்து மோதி படகை உடைத்து சேதப்படுத்தினர். இதில் படகில் இருந்த 5 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக அவர்களின் பிடியில் இருந்து உயிர் தப்பி கரைக்கு வந்து சேர்ந்தனர்.

    மேலும் ஈசாக் ராபீன், செல்வக்குமார் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை சுற்றி வளைத்த கடற்படையினர் அதில் இருந்த சகாய ராபர்ட் (வயது 49), ராதா (44), முத்துராமலிங்கம் (51), யாக்கோப்பு (24), ஹரி கிருஷ்ணன் (50), இவரது மகன்கள் பொன்ராமதாஸ் (26), ராம்குமார் (24), லிபின்ராஜ் உள்ளிட்ட 9 மீனவர்களை கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

    இரண்டு படகுகள் மற்றும் அதில் பிடித்து வைத்திருந்து மீன்களை பறிமுதல் செய்தனர். மேலும் 9 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்யும் பணியில் இலங்கையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்களில் 8 மீனவர்கள் குறித்த விபரம் மட்டுமே உள்ளது. ஒரு மீனவர் குறித்து எந்தவொரு விபரமும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், மீனவ சங்கத்தலைவர் சாகயம் கூறியதாவது:-

    ராமேசுவரத்தில் மீன்பிடி தடைகாலம் நிலைவடைந்து மீன்பிடிக்க சென்ற நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் 22 பேருடன் மூன்று படகுகள் பறிமுதல், இதன் பின்னர் பாம்பன், நம்பு தாளை மீனவர்கள் 25 பேருடன் நான்கு நாட்டுப்படகு பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று 9 மீனவர்களுடன் இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இலங்கை கடற்படையினர் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என்றார். படகுகளையும், மீனவர்களையும் மீட்கவில்லையென்றால் ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் முடங்கி விடும் எனவும் அவர் ஆதங்கம் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினை என 2 கடல் பகுதிகளை கொண்டுள்ளது. இதில், மன்னார் வளைகுடா கடல் பகுதியான தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றன.

    இதே போன்று பாக் நீரினை கடல் பகுதியான ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தேவிபட்டணம், சோளியகுடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் கடற்கரை மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.

    குறிப்பாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்தை விட 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.

    இதனைத்தொடர்ந்து மீனவர்களின் பாதுகாப்பு கருதி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்துள்ளது.

    மேலும் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன் மற்றும் மீன்பிடி இறங்குதளத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பல ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது.
    • மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதாபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இதில், பெரும்பாலும் இறால், நண்டு, கனவாய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள், மற்றும் கோழித்தீவனத்திற்கு பயன்படும் சங்காயம் பிடித்து வருகின்றனர். மீன்பிடி தடைகாலத்திற்கு முன்பு இறால் ரூ.650, கனவாய் ரூ.400, நன்டு ரூ.350, காரல் ரூ.70, சங்காயம் ரூ.25 விலை இருந்து வந்தது.

    இந்த நிலையில், மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்க சென்ற பின்னர் இறால் ரூ. 350-400, நன்டு ரூ. 250, கனவாய் ரூ. 180, காரல் ரூ.15, சங்காயம் ரூ.10 என 50 சதவீதம் வரை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒன்றினைந்து சிண்டிகேட் அமைத்துக்கொண்டு விலையை குறைந்துள்ளனர்.

    இதனால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பல ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது.

    இதனால் படகுகளை இயக்க முடியாத நிலையில் கடந்த 8-ந்தேதி முதல் காலவரையற் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 5 நாட்கள் ஆன நிலையில் பெரும்பால மீனவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று காலையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    5 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்லும் தங்களுக்கு இலங்கை கடற்படை அச்சுறுத்தல் இன்றி மீன்பிடிக்கவும். பிடித்து வரும் இறால் மீனுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • இலங்கையில் உள்நாட்டு சண்டை நிறைவடைந்த காலகட்டத்திலும் அகதிகளாக தமிழர்கள் வந்தனர்.
    • இலங்கை அதிகாரிகள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் உள்நாட்டு சண்டை நடைபெற்ற காலகட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சேர்ந்த தமிழர்கள் அகதிகளாக தொடர்ந்து படகுகளில் தனுஷ்கோடி, ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்தனர். அவர்களை போலீசார் அழைத்து சென்று மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்தனர். இதன் பின்னர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முகாம்களுக்கு மாற்றப்பட்டும் வருகிறார்கள்.

    இந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு சண்டை நிறைவடைந்த காலகட்டத்திலும் அகதிகளாக தமிழர்கள் வந்தனர். தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்திலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் அனைவருமே தமிழகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதில், மீன்பிடிக்க செல்லவும், கச்சத்தீவு திருவிழாவிற்கும் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று மூன்று படகுகளுடன் 22 மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இலங்கை கடற்படையினர் நடத்திய விசாரனையில் தீபன் (வயது 35), சுதாகர் (42) ஆகிய இரண்டு பேர் மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வ முகாமில் உள்ள அகதிகள் என்பது தெரியவந்தது. சட்ட விரோதமாக விதிகளை மீறி கடலுக்கு சென்ற அவர்களிடம் மீன் பிடிக்க செல்வதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லை.

    இதுகுறித்து இலங்கை அதிகாரிகள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அகதிகளை அழைத்து சென்றது குறித்தும் கண்காணிக்க தவறிய அதிகாரிகள் குறித்தும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒவ்வொரு நாளும் துயரத்துடன் கட லுக்கு சென்றுவரும் மீனவர்கள் மீது அக்கறை கொண்டு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • இலங்கையில் மன்னார், பேசாளை, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதி மீனவர்களும் தற்போது இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி சிறை பிடித்து வருகின்றனர். மேலும் படகுகளை பறிமுதல் செய்வதுடன் மீனவர்களுக்கும் தண்டணை விதித்து வருகின்றனர்.

    இதனால் வாழ்வாதாரம் இழந்த ஏராளமான மீனவர்கள் மாற்று தொழிலை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மீன்பிடி தொழிலை சார்ந்துள்ள லட்சக்கணக்கானோரும் வேலையிழந்து தவித்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் துயரத்துடன் கட லுக்கு சென்றுவரும் மீனவர்கள் மீது அக்கறை கொண்டு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது.

    மீனவர்கள் சிறை பிடிப்பதை கண்டித்தும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று இலங்கையில் மன்னார், பேசாளை, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதி மீனவர்களும் தற்போது இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடிக்கும் போது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதன் காரணமாக ராமேசுவரத்தில் சிறிய படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்றுள்ளது. பெரிய படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது. இலங்கை கடற்படையை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தற்போது தமிழக மீனவர்களை கண்டித்து இலங்கை மீனவர்கள் போராட்டத்தில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மத்திய பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை வன்மையாக கண்டிக்கிறேன்.
    • மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், சிறைவாசம் தொடர்கதையாகி வருகிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3-ந் தேதி ராமேஸ்வரம், தங்கச்சி மடத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததோடு, பயன்படுத்திய இரண்டு நவீன மீன்பிடி படகுகள் நெடுந்தீவுக்கு அருகே பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் இன்றைக்கு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்கள்.

    பாக் நீர் இணைப்பு பகுதியில் அடிக்கடி மீன்பிடிக்க செல்கிற மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், விலை உயர்ந்த மீன்பிடிப்பு படகு கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

    தங்களது வாழ்வாதாரத்தை பணயம் வைத்து இரவு-பகல் பாராமல் கடலில் பயணித்து மீன்பிடி தொழில் செய்து நாட்டிற்கு அந்நிய செலாவணியை தங்களது தொழில் மூலம் பெற்றுத் தருகிற மீனவ சமுதாயத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை வன்மையாக கண்டிக்கிறேன்.

    இலங்கை கடற்படையினரின் தொடர் நடவடிக்கையின் மூலம் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், சிறைவாசம் தொடர்கதையாகி வருவதை கண்டிக்கிற வகையிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் வருகிற 10-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் ராமேஸ்வரம், பாம்பன் பஸ் நிலையம் அருகில் உள்ள அன்னை இந்திரா தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் முன்பு மீனவ அமைப்புகளை இணைத்துக் கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 18ந்தேதி தடை விதிக்கப்பட்டது.
    • விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    ராமேசுவரம்:

    தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வாரம் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடலோர மாவட்டமான ராமநாதபுரத்திலும் பரவலாக மழை பெய்தது.

    வங்கக்கடலில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 18ந்தேதி தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வேலை இழந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் தற்போது மழை, காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான தடை நீக்கப்பட்டது. இதன் காரணமாக 5 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். முன்னதாக கடலுக்கு செல்ல மீன்வளத்துறை சார்பில் அவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது. தடை நீக்கப்பட்டதால் ராமேசுவரம், பாம்பன் துறைமுகம் மீண்டும் பரபரப்பாக காணப்பட்டது.

    • ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைபிடித்து சென்றனர்.
    • விடுதலையான மீனவர்கள் மீண்டும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என நிபந்தனையுடன் நீதிபதி விடுதலை செய்தார்.

    ராமேசுவரம்:

    கடந்த நவம்பர் மாதம் 6-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைபிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் மீண்டும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என நிபந்தனையுடன் நீதிபதி விடுதலை செய்தார்.

    இதனை தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    • தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

    ஆலந்தூர்:

    ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 64 மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த அக்டோபர் மாதத்தில் 6 முறை அடுத்தடுத்து கைது செய்தது.

    இலங்கை சிறையில் இருந்த அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

    இதைத்தொடர்ந்த இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து ஒரு மீனவரை தவிர மற்ற 63 மீனவர்களை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது. ஒரு மீனவர் மட்டும், தற்போது இரண்டாவது முறையாக கைதாகி இருப்பதாக கூறி, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை சிறையில் அடைத்தனர்.

    விடுவிக்கப்பட்ட 63 மீனவர்களில் 3 கடந்த 21-ந் தேதி 15 மீனவர்கள், 22 -ந்தேதி 15 மீனவர்கள், 24-ந் தேதி 12 மீனவர்கள் என்று மூன்று தடவையாக 42 மீனவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று கடைசி கட்டமாக மேலும் 21 தமிழக மீனவர்களும் விமானம் பயணிகள் சென்னை திரும்பினர். அதிகாலை 4:15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அரசு சார்பில் ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், அவர்களுடைய சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் மீனவர்களின் உறவினர்கள் மகிழ்ச்ச அடைந்து உள்ளனர்.

    • 10 படகுகளை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர்.
    • சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந் தேதி மீன்பிடிக்க சென்றபோது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இதே போன்று கடந்த மாதம் சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப் படகுகளுடன் 37 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

    64 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதே போன்று 10 விசைப்படகுகள் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.

    இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள 64 மீனவர்கள், 10 படகுகளை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர்.

    இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற மீனவர்கள் பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    இதனையடுத்து 5 நாட்களுக்கு பின் இன்று அதிகாலை முதல் ராமேசுவரத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் ராமேசுவரம் துறைமுகம் மீண்டும் பரபரப்பானது. ஆனாலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இன்று குறைந்த அளவே மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை பரமக்குடி, திருவாடானை, ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலையும் சில இடங்களில் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. தனுஷ்கோடியில் வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

    ×