search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadithabasu"

    • ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீ அம்பாள் வீதி வலம் வருகிறாள்.
    • தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள்.

    ஆடி பவுர்ணமிக்கு 10 நாட்களுக்கு முன் சதுர்த்தி திதியில் பூரம் நட்சத்திரத்துடன் கூடிய புண்ணிய தினத்தில் காலை வேளையில் ஸ்ரீ கோமதி அம்மன் சந்நிதி முன்பாக அமைந்துள்ள தங்கக்கொடிமரத்தில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடக்கும். ஸ்ரீ கோமதி அம்பாளுக்கான தனிப்பெரும் திருவிழா இது. ஆகையால் அம்பாளுக்கே கொடியேற்றம் செய்யப்படுகிறது.

    கொடியேற்றும் அதே வேளையில் ஸ்ரீ அம்பாள் சிவிகையில் (தந்த பல்லக்கில்) எழுந்தருள்கிறாள். தொடர்ந்து 10 நாட்கள் காலையில் ஒவ்வொரு அலங்காரத்திலும், மாலை வேளையில் வெள்ளி சப்பரத்தில் மண்டகப்படி கட்டிடத்திற்கு அம்பாள் எழுந்தருள்கிறாள். இரவு வேளையில் சமுதாய மண்டகப்படி கட்டிடத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீ அம்பாள் வீதி வலம் வருகிறாள்.

    அம்பாளுக்கான விழா ஆகையால் 9-ம் நாள் காலையில் அம்பாளுக்கு மட்டும் ரத உற்சவம் நடக்கிறது. 11-ம் நாள் காலையில் யாகசாலை மண்டபத்தில் ஸ்ரீ கோமதி அம்பாள், ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி, ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு விஷேச அபிஷேகம், அலங்காரமும், சோடஷ உபசாரனையும் நடக்கிறது. தொடர்ந்து ஸ்ரீ கோமதி அம்பாள் தபசுகோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள்.

    ஆடி பவுர்ணமி தினத்தில் மாலை உத்திராட நட்சத்திர வேளையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ சங்கர நாராயண மூர்த்தியாக, தபசுகோலத்தில் உள்ள அம்பாளுக்கு காட்சி அளிக்கிறார். பின் இரவு வேளையில் வெள்ளி யானை வாகனத்தில் அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமியாக காட்சியளிக்கிறார்.

    3-டி அமைப்பில் ஓவியம்

    கோவில் கருவறையின் பின்புறம் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் படுத்திருப்பது போன்ற ஓவியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கண் அமைப்பு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே 3-டி அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் வியப்பான ஒன்று. ஓவியத்தின் வலது மற்றும் இடது புறம், ஓவியத்தின் நடுப்பகுதியில் நின்று பார்த்தாலும் ரங்க நாதர் நம்மையே பார்ப்பது போல அவரது கண்களின் பார்வை அமைக்கப்பட்டு இருக்கும்.

    • இறைவனை வேண்டி ஒற்றைக்காலில் கடும் தவமிருந்தாள்.
    • தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.

    சிவனாரின் திருக்கரத்தைப் பற்றி, அவரின் துணைவியாவதற்காக, உமையவள் தபசு இருந்தது ஆடி மாதத்தில் என்பார்கள்.

    அரியும் சிவனும் ஒன்றே என உலகுக்கு உணர்த்த விரும்பிய ஸ்ரீகோமதியம்மன், அதன் பொருட்டு இறைவனை வேண்டி ஒற்றைக்காலில் கடும் தவமிருந்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.

    திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள், ஆடித்தபசு திருநாளுக்கு முதல்நாள் நீராடி, ஈரப் புடவையுடன் கோவில் பிராகாரத்தில் படுத்துக்கொள்வார்கள். இரவு நமக்கே தெரியாமல், அம்மன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மேலும் ஆடித்தபசு நாளில், அம்பிகையை அபிஷேகிப்பதற்காகவும், அலங்கரிப்பதற்காகவும் நம்மாலான பொருட்களை வழங்கி, தரிசித்தால், தாலி பாக்கியம் நிலைக்கும். நினைத்தபடி வாழ்க்கைத் துணை அமையும் என்கின்றனர் பக்தர்கள்.

    • ஆடித்தபசு திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது.
    • பக்தர்கள் வழிபாட்டில் மிகவும் முக்கியமானது ஆடிச்சுற்று.

    ஆடித்தபசு திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள். பக்தர்கள் வழிபாட்டில் மிகவும் முக்கியமானது ஆடிச்சுற்று.

    சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயண சுவாமி, கோமதி அம்மன் முதலிய சன்னதிகளை உள்ளடக்கிய கோவில் வெளிப்பிரகாரத்தை 108 முறை சுற்றுவதே ஆடிச்சுற்று ஆகும்.

    சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோவிலில் ஆடித்தபசு கொடி ஏறிய பின் ஆடிச்சுற்று எனும் பெயரில் பக்தர்கள் கோவிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையுடன் சுற்றி நேர்ச்சை செலுத்துவார்கள்.

    ஆடிச்சுற்று சுற்றுவதால் ஒரு காலில் நின்று தபசு காட்சியருளும் அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அம்பாளும் இப்படி தனது கால் வலியை ஏற்கும் பக்தர்களின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும், சோதனைகளையும் அகற்றுகிறாள்.

    பக்தர்கள் தங்களின் பல்வேறு வேண்டுதல்களை மனதில் வைத்து, கோமதி அம்மனை வேண்டி ஆடிச்சுற்று செல்கிறார்கள். மாணவ-மாணவிகள், வாலிபர்கள், கன்னிப்பெண்கள், வயதான ஆண்-பெண் என அனைத்து வயதினரும் ஆடிச்சுற்று சுற்றுகிறார்கள்.

    மாணவ-மாணவிகள் நன்கு படிக்க வேண்டும், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும், எதிர்காலத்தில் மருத்துவர், என்ஜினீயர், கலெக்டர், போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று வேண்டி ஆடிச்சுற்று செல்கிறார்கள்.

    கன்னிப்பெண்கள் தனக்கு நல்ல கணவர் அமைய வேண்டும், நல்ல வாழ்க்கை அமைய வேண்டும், குழந்தை பேறு வேண்டும் என பல வேண்டுதல்களை மனதில் வைத்து ஆடிச்சுற்று செல்கின்றனர். இதேபோல் வாலிபர்கள் தங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என வேண்டி ஆடிச்சுற்று செல்கின்றனர்.

    நடுத்தர வயது ஆண் மற்றும் பெண்கள் தங்களின் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தங்களது குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண்டுகிறார்கள். வயதானவர்கள் நோய்நொடியால் அவதிப்படாமல் வாழ வேண்டும் என வேண்டி செல்கிறார்கள்.

    இப்படியாக அனைத்து வயதினருமே தங்களுக்கு தகுந்தா ற்போல் கோமதி அம்மனை மனதில் நினைத்தப்படி ஆடிச்சுற்று சுற்றுகிறார்கள். ஆடிச்சுற்று சுற்றுவதன் மூலம் கோமதி அம்மன் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். இதற்கு ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டமே சாட்சி.

    தொடக்க காலத்தில் ஆடிச்சுற்று செல்பவர்களின் எண்ணிக்கை 100 முதல் 200 வரையே இருக்கும். ஆனால் இன்றோ பல்லாயிரக் கணக்கானோர் ஆடிச்சுற்று செல்கிறார்கள்.

    ஆடிச்சுற்று ஒரே நாளில் முடித்து விட முடியாது என்பதால் பல பக்தர்கள் சங்கரன் கோவிலில் பல நாட்கள் தங்கி ஆடிச்சுற்று செல்கிறார்கள். ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடந்த பிறகே பக்தர்கள் ஆடிச்சுற்று செல்ல தொடங்குவார்கள்.

    ஆடித்தபசு திருவிழாவிற்குள் ஆடிச்சுற்று முடித்துவிட வேண்டும். இதனால் கொடியேற்றப்பட்ட நாளில் இருந்தே பக்தர்கள் ஆடிச்சுற்று நடக்க தொடங்குவர். இதனால் கொடியேற்றபட்டதில் இருந்தே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    வெளி பிரகாரத்தில் பக்தர்கள் ஆடிச்சுற்று சென்றபடியே இருப்பார்கள். விடுமுறை நாட்களில் கோவிலில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காணப்படுவர். ஆடிச்சுற்று செல்லும் பக்தர்களின் நியாயமான அனைத்து வேண்டுதல்களையும் கோமதி அம்மன் நிறைவேற்றுவதாக ஐதீகம்.

    • கல்யாண வரம் கிடைக்கும், சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.
    • ஆடித் தபசு மண்டபத்தில் கோமதியம்மன் எழுந்தருள்வாள்.

    ஒருமுறை 'சிவன் பெரியவரா?... விஷ்ணு பெரியவரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த சக்திகள் இரண்டும் ஒன்றே என்பதை உலக மக்களுக்கு உணர்த்த வேண்டும்' என்று எண்ணினாள் அம்பிகை.

    தனது எண்ணத்தை சிவபெருமானிடம் கூறி, 'சுவாமி... சங்கரரும் நாராயணரும் பேதம் இல்லாமல் பொருந்தி இருக்கும் திருக்காட்சியைக் காட்டியருள வேண்டும்' என வேண்டினாள். உடனே சிவபெருமான், 'தேவி உனது எண்ணம் நிறைவேறும்.

    பூலோகத்தில் அகத்திய முனிவன் இருக்கும் பொதிகை மலையின் அருகில் உள்ள புன்னை வனத்தலத்துக்கு (சங்கரன்கோவில்) சென்று தவமியற்று. அங்கு நீ விரும்பியபடியே, யாம் சங்கர நாராயணராக காட்சி கொடுப்போம். மகாசக்தியான நீயும் அங்கே இடம் பெற வேண்டும்' என்றார்.

    அதன்படியே பூலோகத்தில் உள்ள புன்னை வனத்தலத்தை அடைந்தாள் அம்பிகை. அங்கே, முனிவர்கள் - புன்னை மரங்களாகி நிழல்தர, அந்த நிழலில் பெரும் தவத்தை மேற்கொண்டாள் அம்பிகை.

    தேவ மாதர்கள் பசுக் கூட்டமாக தோன்றி அன்னையின் தவத்துக்கு உதவினர். அதனால் மகிழ்ந்த அம்பிகை, அந்த பசுக்களின் பெருமையை உலகுக்கு உணர்த்த, 'ஆவுடையாள்' எனும் திருநாமம் கொண்டாள் (ஆ-பசு). மேலும், 'கோ'(பசு)க்களின் பெயரை இணைத்து 'கோமதி' எனும் மற்றொரு திருநாமத்தையும் ஏற்றாள். அம்பிகையின் தவத்தால் அங்கே ஆவினங்களும் பெருமை பெற்றன.

    எந்த திருக்காட்சியைக் காண அங்கே அன்னை தவம் செய்தாலோ, அந்த காட்சியைக் காணும் பாக்கியத்தை இரு பாம்புகளுக்கும் அளித்து அருள் புரிந்தாள் அம்பிகை. சங்கன், பதுமன் என்று இரு சர்ப்பங்கள், சங்கன் - சிவபக்தன். பதுமன் - விஷ்ணு பக்தன். இவர்களுக்கிடையே பெரும் போட்டி.

    'சிவன் தான் பெரியவர்' என்று சங்கன் சொல்ல, 'இல்லை, விஷ்ணுவே பெரியவர்' என்று பதுமன் கூற, இருவருக்கும் இடையே சண்டை மூண்டது.

    இருவரும் முனிவர்கள் பலரை சந்தித்து தங்களுக்கு ஆதரவு தேடினார்கள். அப்போது குருபகவான், 'அறியாமை கடலில் மூழ்கிக் கிடக்கும் உங்களுக்கு, ஞான விளக்கம் கிடைக்க வேண்டுமெனில், நீங்கள் புன்னை வனம் செல்லுங்கள். அங்கு உங்களது கேள்விக்கு பதில் கிடைக்கும்' என்றார்.

    அதன்படி இருவரும் அருள் செழிக்கும் புன்னை வனம் வந்து தவமியற்றினர். அவர்களின் தவம் சங்கரரையும் நாராயணரையும் மகிழச் செய்தது. வீண்வாதம் செய்யும் அவர்களுக்காக மட்டுமல்லாமல், உலகிலுள்ள மற்றவர்களுக்கும் உண்மையை உணர்த்த, பாதித்திருமேனி சங்கரர், பாதி திருமேனி நாராயணராக கோலம் கொண்டு சங்கரநாராயணராகத் திருக்காட்சி கொடுத்தனர்.

    அம்பிகைக்கு இறைவன் சங்கரநாராயணராக காட்சி தந்த வைபவமே இங்கே ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த திருவிழாவில் உத்திராட நட்சத்திரத்தன்று, ஆடித் தபசு மண்டபத்தில் கோமதியம்மன் எழுந்தருள்வாள்.

    அன்று மாலை ஸ்ரீ சங்கரநாராயணர் திருக்காட்சி வைபவம் நடைபெறும். ஆடித்தபசு திருவிழாவில் கலந்து கொண்டு தரிசித்தால் கல்யாண வரம் கிடைக்கும், சர்ப்ப தோஷங்கள் நீங்கும், வாழ்வில் தடைகள்யாவும் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்பிகையின் திருமேனி முழுவதும் தங்கமும் வைரமுமாக நகைகள் ஜொலித்தன.
    • அம்பிகையின் அருகில் குப்புசாமி பட்டர் களைப்புடன் உட்கார்ந்திருந்தார்.

    நினைப்பவர்களுக்கும், தன்னைத் தேடி வருபவர்களுக்கும் அருள் மாரி பொழியும் அம்பிகை, 'கோமதி அம்மன்' என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள சங்கரன்கோவில் திருத்தலத்தில் 1944-ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி இது.

    ஆடி மாதம், ஆடித் தபசு திருவிழாவுக்கு உலகில் உள்ள மொத்த பேரும் திரண்டு வந்தது போல, சங்கரன்கோவில் முழுக்க மக்கள் வெள்ளம். இரவு நேரம். தெற்கு ரத வீதியில் இருக்கும் தபசு மண்டபத்தில், பல்லக்கில் எழுந்தருளியிருந்தாள் உற்சவ மூர்த்தியான அம்பிகை. திருக்கல்யாண அலங்காரத்தில் இருந்ததால், அம்பிகையின் திருமேனி முழுவதும் தங்கமும் வைரமுமாக நகைகள் ஜொலித்தன.

    அம்பிகையின் அருகில் குப்புசாமி பட்டர் களைப்புடன் உட்கார்ந்திருந்தார். சங்கரன் கோவிலுக்கு அருகில் உள்ள அரியூரை சேர்ந்த கணக்குப் பிள்ளை ஒருவர், பட்டரைப் போல வேடம் அணிந்து பல்லக்கை நெருங்கினார். அவர் அந்த கிராமத்து முக்கியஸ்தர். கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவர். மனோவசியம் உள்பட பல வித்தைகள் கற்றவர். அவரைப் பார்த்த எவருக்குமே சந்தேகம் ஏற்படவில்லை. 'யாரோ, பூஜை செய்யும் பட்டர்' என்று நினைத்தனர்.

    பல்லக்கை நெருங்கிய அவர், அதில் ஏறி அம்மனின் காதுகளை அலங்கரிக்கும் வைரத் தோடுகளை கழற்றிக் கொண்டு, கும்பலோடு கும்பலாக கலந்து மறைந்தார். (அந்த தோடுகளின் அன்றைய மதிப்பு பதினாறாயிரம் ரூபாய்.) அப்போது அசதியுடன் பல்லக்கில் சாய்ந்திருந்த குப்புசாமி பட்டரை, சுமார் எட்டு வயது சிறுமி ஒருத்தியின் மென்மையான கரங்கள் உலுக்கி எழுப்பின. அரக்கப் பரக்க கண் விழித்து எழுந்த குப்புசாமி பட்டரின் எதிரில் ஒளி மயமாக அந்த குழந்தை நின்று கொண்டிருந்தாள்.

    'என்ன? ஏது?' என்று கேட்பதற்கு முன், அவளாகவே பரபரப்புடன், 'மாமா... மாமா... எனது தோடுகளை ஒருவன் திருடிக் கொண்டு போகிறான். வா, வந்து அவனைப் பிடி' என்று அவரின் கைகளைப் பிடித்து இழுத்தாள். 'ஏதோ நடந்திருக்கிறது' என்பதை சட்டென்று உணர்ந்த குப்புசாமி பட்டர், மந்திரத்தில் கட்டுண்டவர் போல சிறுமியை பின்தொடர்ந்தார்.

    சற்றுத்தூரம் சென்றதும், திருடனை சுட்டி காட்டிய சிறுமி, 'அதோ போகிறானே... அவன்தான் எனது தோடுகளை திருடியவன்' என்றாள். கட்டுமஸ்தான உடம்போடு ஒருவர் போய்க் கொண்டிருந்தார். ஒல்லியான உடல்வாகு கொண்ட பட்டருக்கு எப்படித்தான் தைரியம் வந்ததோ தெரியவில்லை. விறுவிறுவென்று போய், அந்த நபரின் மூடிய கையை பற்றி இழுத்துக் கடித்தார்.

    அந்தநபர், திமிறினாரே தவிர, எதிர்த்து தாக்காமல், பிரமை பிடித்தவர் போல் அப்படியே நின்றார். அவர் கையை பிரித்து பார்த்தால், அம்மனின் ஆபரணம் ஜொலித்தது. 'திருடன் திருடன்' என்று கத்தியபடி சிறுமியை பார்த்தார் குப்புசாமி பட்டர். அவள் மாயமாக மறைந்து விட்டிருந்தாள்!

    அதற்குள் அங்கிருந்த மக்கள் அந்தத் திருடனைப் பிடித்து அடிக்கத் தொடங்கினர். திருவிழாக்கும்பல். கேட்கவா வேண்டும்? ஆளாளுக்கு அடித்தார்கள். ஆனால், அந்த நபரோ, 'அடியுங்கள்... நன்றாக அடியுங்கள். அப்போதுதான் நான் செய்த பாவம் தீரும்' என்று சொன்னாரே தவிர கலங்கவில்லை. அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதிகாச, புராண காலத்தில் மட்டுமின்றி எப்போதும் தெய்வம் தனது திருவிளையாடலை நிறுத்தியதில்லை. அடியாருக்கு அருள்புரிவதன் மூலம் அது எப்போதும் தன்னை வெளிப்படுத்தவே செய்கிறது. அனுபவத்தால் இதை உணர்ந்தவர்கள், அடுத்தவர்களுக்கு சொல்கிறார்கள். அனுபவம் பெற துடிப்பவர்கள் அதை நம்புகிறார்கள். தெய்வத்தின் அருளை தாங்களும் அனுபவிக்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அற்புதங்களுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது சங்கர நாராயண சுவாமி சிலை.
    • சங்கர நாராயண சந்நிதியில் வனக்குழி என்ற ஒரு பள்ளம் உள்ளது.

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் வேறு எந்த ஒரு கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு உள்ளது. இங்கு இருக்கும் நாகராஜர் கோவில் பாம்பு புற்றை சுற்றி கோவில் எழுப்பி இருக்கிறார்கள்.

    நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பழம், பால் படைத்து வணங்கி செல்கின்றனர். அவரவர் வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெறுவதாக சொல்கிறார்கள்.

    இந்த தலத்தில் உள்ள புற்று மண் மிகவும் விசேஷமானது. பல சரும நோய்களை குணமாக்க வல்ல மண் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த புற்றில் இருந்து மண்ணை எடுத்து அருகிலுள்ள தொட்டியில் போட்டிருக்கிறார்கள்.

    அம்பாள் சன்னதியிலும் புற்று மண் இருக்கிறது. இந்த மண்ணை சிலர் மருந்தாக சாப்பிட்டு வருகிறார்கள். நெற்றியிலும் இதை திலகமாக வைத்துக் கொள்கிறார்கள்.

    இந்த கோவில் அற்புதங்களுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது சங்கர நாராயண சுவாமி சிலை. காரணம் ஒரே சிலையில், ஒரு பாதி சிவனும், மறுபாதி விஷ்ணுவும் போன்ற தோற்றம் உடையது. தலையில் கங்கையை முடிந்து இருக்கிறார். ரத்ன கிரீடம் சூடியிருக்கிறார். கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்திருக்கிறார். இடுப்பில் புலித்தோல் கட்டியிருக்கிறார். இவை அனைத்தும் சிவனின் வடிவங்கள்.

    மறுபாதியில் தலையில் கிரீடம், காதில் மசியக் குண்டலம், கையில் சங்கு, சிம்மகரணம், இடுப்பில் பட்டு பீதாம்பரம் இருக்கிறது. இந்த வடிவம் விஷ்ணுவின் வடிவமாகும். எனவே சிவனும், விஷ்ணுவும் சேர்ந்திருப்பதால் சங்கரநாராயண சுவாமி என்கிறார்கள்.

    ஒருமுறை பார்வதி தேவியாருக்கு சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்று சந்தேகம் வந்துவிட்டது. அதை சிவனிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். உடனே சிவபெருமான் பாதி சிவனாகவும், பாதி விஷ்ணுவாகவும் தோன்றினார்.

    உடனே சிவனார், பெரியவர் யார், சிறியவர் யார் என்பது பார்ப்பவர் கண்ணில் தான் உள்ளது. இரண்டு பேருமே ஒன்று தான் என்று விளக்கமும் கூறினார். இதை உணர்த்தும் விழா, சங்கரன் கோவிலில் காட்சி அளிக்கும் ஈசனை காண தேவி புறப்பட்டு வரும் வைபவமாக ஆடித்தபசு எனும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.

    அம்பாள் தவக் கோலத்தில் காணப்படுகிறார். அம்பாள் சன்னதியை சுற்றி உள்ள கிரிவீதியை 108 முறை சுற்றினால் நினைத்தது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இத்தலத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    அதுவும் ஆடித்தபசுக்கு முன்பு சுற்ற வேண்டும். ஆடித்தபசு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று நடந்தேறுகிறது.

    பொதுவாக சிவன் அபிஷேகப்பிரியர். விஷ்ணு அலங்காரப் பிரியர். ஆனால் சங்கரன்கோவிலில் இருவரும் ஒரே சிலையாக அமைந்திருப்பதால் அதற்கு அபிஷேகம் செய்வது சிரமமாக இருந்தது. இதையறிந்த ஆதிசங்கரர் தாம் வைத்திருந்த ஸ்படிகலிங்கத்தை கோவிலுக்கு கொடுத்து அதற்கு அபிஷேகம் செய்யுமாறு கூறினார்.

    இந்த லிங்கத்தை தண்ணீரில் போட்டால் லிங்கம் இருப்பதே தெரியாது. இது ஒரு இயற்கை அற்புதமாகும். அதுபோல் சங்கர நாராயண சந்நிதியில் வனக்குழி என்ற ஒரு பள்ளம் உள்ளது. இதில் சாமியை பிரதிஷ்டை செய்திருப்பதாக ஒரு ஐதீகம். எனவே பேய் மற்றும் பில்லி சூனியத்திற்கு ஆளான பலர் இந்த வனக்குழியில் அமர்ந்து பூஜை செய்வார்கள்.

    • ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறையினர் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
    • தபசு நடக்கும் தெற்கு ரத வீதியில் சுவாமி- அம்பாள் சப்பரம் வரும் இடத்தை ஆய்வு செய்து மீதமுள்ள இடத்தை பக்தர்கள் சிறப்பாக தரிசனம் செய்யும் வகையில் அதிக இடங்கள் விட்டு தடுப்புகள் அமைக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.

    ஆடித்தபசு திருவிழா

    இங்கு அரியும், சிவனும் ஒன்று என்பதை கோமதி அம்மனுக்கு உணர்த்தும் வகையில் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் அன்று சிவபெருமான் சங்கர நாராயணராக கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும்.

    இந்த நிகழ்ச்சியை காண இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன் கோவி லுக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா வருகிற 21-நதேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.

    சங்கரநாராயணராக காட்சி

    இந்த ஆடித்தபசு திருநாள் 12 நாட்கள் விமர்சையாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான கோமதி அம்மனுக்கு சிவ பெருமான் சங்கரநாரா யணராக காட்சி கொடுக்கும் வைபவம் வருகிற 31-தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரி க்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை யினர் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

    பாதுகாப்புத்துறை சான்றிதழ்

    கூட்டத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன்கோ வில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகரா ட்சி கமிஷனர் சபா நாயகம், கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சேர்மன் உமா மகேஸ்வரி பேசிய தாவது:-

    ஆடித்தபசு அன்று குடிநீர் பந்தல் அமைக்கும் தொண்டு அமைப்புகளுக்கு நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படும். அன்னதானம் செய்பவர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படும். அன்னதானம் செய்பவர்கள் உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ் கண்டிப்பாக வாங்கி இருக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் உணவு பொருட்களை மூடி வைத்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இதனை நகராட்சி சுகாதாரதுறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    லட்சக்கணக்கான பக்தர்கள்

    தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    ஆடித்தபசு திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதில் முக்கியமாக தடையில்லா மின்சாரம், தடையில்லா குடிநீர், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஆகியன முக்கிய அம்சமாகும். எனவே மின்வாரிய அதிகாரிகள், காவல்துறை யினர், குடிநீர் வடிகால் வாரியத்தினர் அனைவரும் நகராட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆடித்தபசு திருவிழாவை அனைத்து அரசு துறையினர் இணைந்து சிறப்பாக நடத்த வேண்டும்.

    மேலும் தபசு நடக்கும் தெற்கு ரத வீதியில் சுவாமி- அம்பாள் சப்பரம் வரும் இடத்தை ஆய்வு செய்து மீதமுள்ள இடத்தை பக்தர்கள் சிறப்பாக தரிசனம் செய்யும் வகையில் அதிக இடங்கள் விட்டு தடுப்புகள் அமைக்க வேண்டும். உணவகங்கள் மற்றும் அன்னதானங்கள் நடக்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து உணவுகள் தரமான முறை யில் உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    சம்பந்தப்பட்ட துறையினர் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து பொது மக்களுக்கும், வியாபாரி களுக்கு, பக்தர்களு க்கும் எந்தவித பாதிப்பும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பக்த ர்கள் ஆடித் தபசுக்கு வந்து சிறப்பாக தரிசனம் செய்து விட்டு செல்ல அனைத்து நட வடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    தீயணைப்பு வாகனங்கள் அவசரக்கால ஊர்திகள் தயார் நிலையில் வைப்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் பகுதியில் சுழலும் சி.சி.டி.வி. காமிரா க்கள் அமைத்து அதற்கான கட்டுப்பாட்டு அறையை அமைத்து அதனை முறையாக கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நகராட்சி துணை சேர்மன் கண்ணன், இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி, மருத்துவ அலுவலர் டாக்டர் மகாலட்சுமி, நெடுஞ்சாலைதுறை திருமலைச்சாமி, பலவேசம், மின்வாரிய உதவி பொறியாளர்கள் கணேச ராம கிருஷ்ணன், தங்க மாரிமுத்து, தீயணைப்பு துறை சார்பில் சரவணன் மற்றும் போக்கு வரத்து காவல்துறையினர், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா விமர்சையாக நடைபெற்றதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    • திருவிழாவை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் மேற்பார் வையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணாராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா பிரசித்தி பெற்றது.

    இந்தாண்டு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றமும், 8-ந் தேரோட்டம் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 11-ம் நாளான நேற்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு கும்ப அபிஷேகம், காலை 9 மணி க்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், காலை 11 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாள் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளினார்.

    மாலை 4.30 மணிக்கு சங்கரநாராயண சுவாமி ரிஷப வாகனத்தில் தபசு காட்சிக்கு எழுந்தருளினார். மாலை 6.39 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசு காட்சி கொடுத்தார்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா விமர்சையாக நடைபெற்றதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அம்பாள் சங்கர நாராயணனை மூன்று முறை வலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், பக்தர்கள், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல் உள்ளிட்ட விளைபொருட்களை சப்பரத்தில் மேல் எரிந்தனர்.

    விழாவில் சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, எம்.எல்.ஏ. ராஜா, தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் செல்லத்துரை, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், சுற்றுச்சூழல் அணி அழகுதுரை, அ.தி.மு.க. மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில் குமார், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், இளைஞர் அணி துணைச் செயலாளர் இசக்கியப்பன், அ.தி.மு.க.மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில்குமார், பாரதீய ஜனதா கட்சி கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வர பெருமாள், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ராஜா, செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயலாளர் மாரிமுத்து, புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் ராசையா, தி.மு.க. நகர செயலாளர் மாரிசாமி, துணைச் செயலாளர் கே. எஸ்.எஸ்.மாரியப்பன், ஒப்பந்ததாரர்கள் வெள்ளி முருகன், குட்டி ராஜ், நகர அ.தி.மு.க. செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் வேல்சாமி, கவுன்சிலர்கள் சந்திரசேகர், ராமதுரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுத்தார்.

    திருவிழாவை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் மேற்பார் வையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணாராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ஆடித்தபசு திருவிழாக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.

    12-வது திருநாளான இன்று பகல் 12 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் ஆடித்த பசு திருவிழா தொடங்கியது.
    • இரவு ஆனந்த வல்லிஅம்மன் சிம்ம வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்த ருளினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் ஆடித்த பசு திருவிழா தொடங்கியது.

    திருவிழா தொடக்கமாக ஆனந்தவல்லி அம்பாள் சன்னதி முன் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில்துலா லக்னத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது. அதன் பின் கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகப் பொருள்களாலும் கலச நீராலும் அபிஷேகம் நடத்தி கொடிமரத்திற்கு தர்ப்பை புல், மலர் மாலைகள் சாற்றி கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவில் மண்டபத்தில் சர்வ அலங்கா ரத்தில் எழுந்தருளியிருந்த ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாரா தனைகள் நடைபெற்றது.

    கொடியேற்ற நிகழ்வு களை கோவில் பரம்பரை ஸ்தானிகம் தெய்வ சிகாமணி என்ற சக்கரைபட்டர் ராஜேஷ் பட்டர், குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.

    கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு ஆனந்த வல்லிஅம்மன் சிம்ம வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்த ருளினார். 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் இரவு ஆனந்தவல்லி அம்மன் கோவில் முன் மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து அதன் பின்னர் மண்டகப்படி தாரர்களின் பூஜைகள் முடிந்து வீதி வருதல் நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆடித்தபசு விழா வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது 10-ந்தேதி சந்தன காப்பு உற்சவத்து டன் இந்தாண்டு அடித்தபசு திருவிழா நிறைவு பெறு கிறது.

    ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மன் கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கிறது.

    • அரியும் சிவனும் ஒன்றே என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் ஆடித்தபசு திருநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும்.
    • தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ஆடித்தபசு திருவிழா 12 நாட்களும் வெகு விமர்சையாக நடத்தப்பட உள்ளது.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தின் புகழ்பெற்ற சிவ தலங்களில் சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாக விளங்குகிறது.

    கொடியேற்றம்

    அரியும் சிவனும் ஒன்றே என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் ஆடித்தபசு திருநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் ஆடித்தபசு திருவிழா கட்டு ப்பாடுகளுடன் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

    தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ஆடித்தபசு திருவிழா 12 நாட்களும் வெகு விமர்சையாக நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவிழாவிற்கான பாது காப்பு முன்னேற்பாடுகள் குறித்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தார். தொடர்ந்து கோவில் வளாகம், உட்பிராகாரம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

    2 ஆயிரம் போலீசார்

    கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். எனவே 2,000 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தெரிவித்தார்.

    ×