search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai"

    • மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஏற்படும்.
    • பொது மக்களுக்கு முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு.

    தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாகமின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம்.

    மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஏற்படும் என்பதால், சிரமங்களை குறைக்க பொது மக்களுக்கு முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்படுகிறது.

    அதன்படி, சென்னையில் இன்று முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அண்ணாசாலை, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அண்ணாசாலையில் உள்ள ஒயிட்ஸ் சாலையின் ஒரு பகுதி, அண்ணாசாலையின் ஒரு பகுதி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி ஹோட்டல், வாசன் அவென்யூ, ரஹேஜா டவர், ஜிபி சாலை ஒரு பகுதி, சத்திய மூர்த்தி பவன், இபி காம்ப்ளக்ஸ், ஈபி லிங்க் சாலை, கிளப் ஹவுஸ் சாலை, சிட்டி டவர், பட்டுலால்ஸ் சாலை, அண்ணாசாலையின் ஒரு பகுதி , எக்ஸ்பிரஸ் அவென்யூ, கலைக் கல்லூரி, பின்னி சாலை, விசி சாலை, ஹோட்டல் காஞ்சி, டிஎல்எஃப் இன் ஒரு பகுதி, இந்தியன் வங்கி, ஃபகான் கட்டிடம், எத்திராஜ் கல்லூரி, சக்தி டவர்ஸ், சிட்டி பேங்க், மதுரா வங்கி, ஐஓபி வங்கி, பின்னி சாலை, ராணி மெய்யம்மாள் விடுதி மற்றும் திருமண மண்டபம் , ஏர் இந்தியா, அப்பல்லோ மருத்துவமனை, மார்ஷல் சாலை, மான்டித் சாலை, கனரா வங்கி, கன்னர்மாரா ஹோட்டல், ஐஓபி வங்கி, டேட்டா சென்டர், தாஜ் ஹோட்டல், அண்ணாசாலை பகுதியில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொன்னேரி பகுதியில், சிப்காட் I, II மற்றும் IV, பஞ்செட்டி, ஓபிஜி, பிர்லா கார்பன் மற்றும் துல்சியன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சிப்காட் தொழில்துறை வளாகம், சிப்காட் பைபாஸ் சாலை, புதிய GPD, கங்கன் தொட்டி, பாப்பான் குப்பம், சிந்தலக்குப்பம், சித்தராஜ கண்டிகை, பெத்திகுப்பம், எலாவூர், பெரியகுப்பம் ஓபுலாபுரம், சுன்னம்புகுளம், எட்டூர், கொண்டமநல்லூர், நாயுடுகுப்பம், ஆரம்பாக்கம், எழுமதுரை, கும்மிடிப்பூண்டி பஜார், புதிய ஜிபிடி, வேர்காடு, ஏனாதிமேல்பாக்கம், பெத்திக்குப்பம், மா.பொ.சி. நகர், ஆத்துப்பாக்கம், மங்காவரம், ரெட்டம்பேடு, குருவியாகரம், நத்தம், டவுன் கும்மிடிப்பூண்டி, ஜிஎன்டி சாலை, பெத்திக்குப்பம் ரயில்வே பாலம், பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி., நகர், வேர்காடு, ரெட்டம்பேடு மெயின் ரோடு, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், பாலவாக்கம், பாலவாக்கம், சோலியம்பாக்கம். , மங்காவரம் மற்றும் குரு வியாகரம் கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாலையோரங்களில் பானி பூரி கடைகள் அதிகரித்துள்ளன.
    • பயிற்சி அளித்து லைசென்சு வழங்கப்படும்.

    சென்னை:

    சென்னையில் பெருகி வரும் கையேந்தி பவன் போல சாலையோரங்களில் பானி பூரி கடைகளும் அதிகரித்து உள்ளன. நகரின் எந்த பகுதியில் பார்த்தாலும் முக்கிய இடங்களில் வட மாநிலத்தவர்கள் பானிபூரி விற்பனை செய்வதை காண முடியும்.

    சிறிய முதலீட்டில் நடக் கும் இந்த தொழில் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளன. பானிபூரி விற்பனையை முறைப்படுத்தவும் சுகாதாரமாக விற்கவும் உணவு பாதுகாப்புத்துறை புதிய முயற்சியை மேற்கொண்டது.

    சாலையோரங்களில் செயல்படும் சாலையோர பானிபூரி கடைகளுக்கு கட்டாயம் லைசென்சு பெற வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கான லைசென்சு கட்டணமாக ரூ.100 செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்.

    சென்னையில் நேற்று ஒரேநாளில் 600 வட மாநிலத்தவருக்கு பானிபூரி தொழில் செய்வதற்கான லைசென்சு வழங்கப்பட்டன.

    இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ் குமார் கூறியதாவது:-

    சென்னையில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் பானிபூரி விற்பனை நடக்கிறது. 100-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கலாம். அவற்றை வரையறைப்படுத்தவும், பானிபூரி தயாரித்து விற்பனை செய்வதில் சுகாதாரத்தை பின்பற்றவும், கலப்படம் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    பழைய எண்ணெய், மீதமுள்ள பழைய உணவுப்பொருட்களை பயன்படுத்தக் கூடாது, சுகாதாரமான முறையில் விற்பது குறித்து மாநகராட்சி அம்மா மாளிகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. வரும் நாட்களில் வார்டு வாரியாக இந்த பயிற்சி அளித்து லைசென்சு வழங்கப்படும்.

    உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதை முறைப்படுத்தும் நோக்கத்தில் பானிபூரி விற்பனையாளர்களுக்கு லைசென்சு அவசியமாக்கப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடும்ப தலைவிகளுக்கு நேரடியாக ரூ.1000 மாதா மாதம் செலுத்தப்பட்டு வருகிறது.
    • ஜூலை 15-ந்தேதி முதல் ரூ.1000 பணம் செலுத்தப்படும்

    சென்னை:

    குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்திருந்தது.

    இதையடுத்து தி.மு.க. வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1000 மாதா மாதம் செலுத்தப்பட்டு வருகிறது.

    ஆரம்பத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மொத்தம் 1.63 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் மட்டுமே உரிமைத்தொகை செலுத்தப்பட்டது. மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

    இதனையடுத்து 2-ம் கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேலும் 7.35 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    ஆக மொத்தம் 1 கோடி யே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்களுக்கு மாதா மாதம் ரூ.1000 சென்றடைகிறது. இதுதவிர மேலும் 11.85 லட்சம் பெண்கள் ரூ.1000 கேட்டு மேல் முறையீடு செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மனு செய்திருந்த ஒவ்வொருவர் வீட்டுக்கும் பணியாளர்கள் சென்று கள ஆய்வு செய்தனர். அவர்கள் பார்க்கும் வேலை, வருமானம், வசதி எந்த அளவுக்கு என்பது பற்றியும் விசாரித்தனர்.

    இதன் அடிப்படையில் புதிய பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது.

    இந்த பட்டியல்படி மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு உரிமைத் தொகை எப்போது வழங்கப் படும் என்று கேள்விகள் எழுந்தன. இதனையடுத்து இது தொடர்பான முக்கிய அறிவிப்பை விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு உள்ளார்.

    அவர் கூறுகையில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியான வர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வங்கிக் கணக்கில் இந்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி முதல் ரூ.1000 பணம் செலுத்தப்படும் என்று கூறினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் சென்று அரசு உதவிபெறும் பள்ளி களிலும் மாணவ-மாணவிகளுக்கான காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த விழாவில் மேலும் 1.48 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையும் தொடங்கி வைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் இன்று திருவள்ளூர் சென்று விரிவான ஆலோசனையும் நடத்தினார்கள்.

    • ஜூலை 12 காலை 10 மணி முதல் ஜூலை 13 மாலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
    • கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் பைப்லைனில் பாதிப்பு.

    சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் காரணமாக, 5, 6, 8, 9, மற்றும் 10 ஆகிய மண்டலங்களில் 2024 ஜூலை 12 காலை 10 மணி முதல் ஜூலை 13 மாலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மண்டலம் 5ல் உள்ள புரசைவாக்கம் மெயின் ரோட்டில் மெட்ரோ லைன் அமைப்பதற்கான இணைப்பு பணிகளால், கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் பைப்லைனில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதனால், திருவிக நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

    இதேபோல், புரசைவாக்கம், பெரியமேட், சவுகார்பேட்டை, ஜார்ஜ் டவுன், முத்தியால்பேட்டை, வால்டாக்ஸ் சாலை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, சேப்பாக்கம், கொண்டித்தோப்பு, ஓட்டேரி ஆகிய இடங்களில் சப்ளை நிறுத்தப்படும்.

    மண்டலம் 6ல் அயனாவரம், செம்பியம், பெரம்பூர், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், மண்டலம் 8ல் கெல்லிஸ், மண்டலம் 9ல் திருவல்லிக்கேணி, மண்டலம் 10ல் உள்ள தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

    சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், பொதுமக்கள் போதிய குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளவும், அவசர தேவைகளுக்கு நீர் விநியோகம் செய்ய https://cmwssb.tn.gov.in என்ற மெட்ரோ வாட்டர் ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டு முகவரியை பதிவு செய்து கொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு வழக்கம் போல் குடிநீர் தடையின்றி தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    • நீட் தேர்வின் புனிதத் தன்மை மீறப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
    • நீட் வினாத்தாள் கசிவு குறித்து மெட்ராஸ் ஐஐடி ஆய்வு நடத்தியது.

    இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, போனஸ் மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் சர்ச்சையானது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. பீகார், குஜராத், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணை நடத்தியதில் பலர் கைது செய்யப்பட்டனர்.

    நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளியின் முதல்வர், துணை முதல்வரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    கடந்த 8-ந்தேதி நடந்த விசாரணையின் போது, நீட் தேர்வின் புனிதத் தன்மை மீறப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், "நீட் தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் முழுமையாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. ஐ.ஐ.டி. சென்னை வழங்கிய அறிக்கையின்படி நீட் தேர்வில் எந்த ஒரு பெரிய அளவிலான முறைகேடும் நடக்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நீட் முறைகேடு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்ய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "நீட் வினாத்தாள் கசிவு குறித்து மெட்ராஸ் ஐஐடி ஆய்வு நடத்தியது. கசிந்த நீட் வினாத்தாள் சிலருக்கு மட்டும் தான் கிடைத்துள்ளது. பலருக்கு கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கூட வினாத்தாள் கசிவு பரவலான அளவில் நடைபெறவில்லை என்று கூறியுள்ளது. ஆகவே மிகச்சிறிய அளவில் தான் நீட் வினாத்தாள் கசிவு நடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது.
    • பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்கப்பட்டதே இதற்கு காரணம்.

    சென்னை:

    இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, போனஸ் மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் சர்ச்சையானது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. பீகார், குஜராத், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணை நடத்தியதில் பலர் கைது செய்யப்பட்டனர்.

    நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளியின் முதல்வர், துணை முதல்வரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    கடந்த 8-ந்தேதி நடந்த விசாரணையின் போது, நீட் தேர்வின் புனிதத் தன்மை மீறப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் முழுமை யாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. சென்னை ஐ.ஐ.டி. தொழில்நுட்ப மதிப்பீடு, மதிப்பெண்கள் வினியோகம், நகரம் மற்றும் மையங்கள் வாரியாக ரேங்க் வினியோகம் போன்றவற் றின் தரவுகளை ஆய்வு மேற்கொண்டது.

    ஐ.ஐ.டி. சென்னை வழங்கிய அறிக்கையின்படி எந்த ஒரு பெரிய அளவிலான முறைகேடும் நடக்கவில்லை. எந்த அசாதாரணமும் இல்லை. மேலும் மோசடி காரணமாக பெரும்பாலான முறைகேடுகள், அதிக மதிப்பெண் பற்றிய எந்த ஆதாரமும் இல்லை.

    மதிப்பெண்களில் ஒட்டுமொத்த அதிகரிப்பு உள்ளது. குறிப்பாக 550 முதல் 720 வரை இந்த அதிகரிப்பு நகரங்கள் மற்றும் மையங்கள் முழுவதும் காணப்படுகிறது.

    பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்கப்பட்டதே இதற்கு காரணம்.

    கூடுதலாக அதிக மதிப் பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்கள் பல நகரங்கள், பல மையங்களில் பரவி உள்ளனர். இது முறை கேடுக்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு என்பதை குறிக்கிறது.

    சென்னை ஐ.ஐ.டியின் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆலோசனைக் கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • மக்கள் மனதை வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று தொடங்கி உள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்பு தூர் பாராளுமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் சிவகங்கை, வேலூர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.

    மாலையில் திருவண்ணா மலை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். இந்த ஆலோசனையின் போது பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது ஏன்? என்பது பற்றி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டுள்ளார்.

    அப்போது பலர் காரசாரமாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகள் சிறப்பாக செயல்படாவிட்டால் பதவியில் நீடிக்க முடியாது என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

    எப்போதுமே நடந்து முடிந்த ஒரு விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்காமல் அடுத்து நடக்கப்போவதை பற்றியே சிந்திக்க வேண்டும்.

    இதன்படி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நமக்கெல்லாம் மிகவும் முக்கியமான தேர்தலாகும். அதில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் இப்போதே சிறப்பாக செயல்படத் தொடங்குங்கள்.

    கூட்டணி சரியாக அமையாத காரணத்தாலேயே தோற்றுப்போய் விட்டோம் என்று இங்கு பலரும் கூறியுள்ளீர்கள். வரும் காலங்களில் நீங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத வகையில் கட்சி உரிய முயற்சிகளை மேற்கொள்ளும்.

    நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நிச்சயமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    கீழ்மட்ட நிர்வாகிகளை மேல் மட்டத்தில் இருப்பவர்கள் அரவணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் கீழ்மட்ட நிர்வாகிகள் சுறுசுறுப்போடு பணியாற்றுவார்கள். மக்கள் மனதை வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

    • கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • 2 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பத்து உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2024-25-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.

    கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்கிறது.

    பொது கலந்தாய்வு 29-ந் தேதி தொடங்குகிறது. 2 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பத்து உள்ளனர். அவர்களுக்கான தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப் பட்டது.

    இதில் 65 மாணவர் கள் 200-க்கு 200 மதிப் பெண் பெற்று இருந்தனர். இது கடந்த ஆண்டை காட்டி லும் குறைவாகும்.

    அதேபோல 195 கட்-ஆப் மார்க்கிற்கு மேல் பெற்றவர் களின் எண்ணிக்கை 2,862 ஆகும். கடந்த ஆண்டு 2,911 பேர் அதிக மதிப்பெண் பெற்று இருந்தனர். டாப் மார்க் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளதாலும் பொறியியல் கல்லூரிகளில் இடங்களை அதிகரித்து இருப்பதாலும் டாப் கல்லூரிகளில் கட்-ஆப் மதிப்பெண் குறைகிறது.

    கட்-ஆப் மார்க் ஒன்று வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

    அண்ணா பல்கலைக் கழக வளாக கல்லூரிகளில் கடந்த ஆண்டு 400-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. 4 வளாக கல்லூரிகளிலும் அனு மதிக்கப்பட்ட இடங்களில் 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று கேட்டு இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.

    மருத்துவ கவுன்சிலிங் தேதி இதுவரையில் அறி விக்கப்படவில்லை. அதனால் என்ஜினீயரிங் கலந்தாய்வு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2 லட்சம் மாணவர்கள் இதற்காக காத்திருக்க கூடிய நிலைமையை தவிர்க்கும் வகையில் கவுன்சிலங் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதாக தொழில்நுட்ப கல்வி ஆணையர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

    என்ஜினியரிங் தர வரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த செங்கல்பட்டு மாணவி தோஷிதா லட்சுமி அண்ணா பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் (இ.சி.இ) படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் தவிர 5 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற அவர் பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 598 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார்.

    • அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது.
    • உரிய வகையில் வழக்கை சந்திப்பேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தன்மீது வழக்கு தொடர்ந்தது பற்றி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அவருக்கு நான் ரூ.2 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீசு அனுப்பி இருந்தேன். அதற்கு அவரிடம் இருந்து பதில் இல்லை.

    இப்போது கோர்ட்டுக்கு சென்றுள்ளார். அதை சந்திக்க தயார். அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது. அதை ஒவ்வொன்றாக கோர்ட்டில் நிரூபிப்போம்.

    சென்னை விமான நிலையத்தில் ரூ.167 கோடிக்கு தங்கம் பிடிபட்ட விவகாரத்தை திசை திருப்ப கோர்ட்டுக்கு சென்றுள்ளார். யாரும் அதைப் பற்றி பேச மாட்டார்கள். பயந்து விடுவார்கள் என நினைக்கிறார். குற்றவாளியுடன் அவர் இருக்கும் புகைப்படம் வெளி வந்துள்ளதே?

    பா.ஜ.க. தலைவர்களின் புகைப்படம் வந்ததற்கு இன்னும் அவர் பதில் சொல்லவில்லையே?

    இப்போது கோர்ட்டில் என்ன கூறி உள்ளார் என முழுமையாக தெரியவில்லை அதன் நகல் கிடைத்தது. பார்த்துவிட்டு உரிய வகையில் வழக்கை சந்திப்பேன்.

    கள்ளக்குறிச்சி விவகாரம் சம்பந்தமாக அண்ணாமலை மீது ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு 4-ந்தேதி நோட்டீசுக்கு பதில் அனுப்பி உள்ளேன். அதை 6-ந்தேதி அவரது வக்கீல் பால் கனகராஜ் வாங்கி இருப்பார் என கருதுகிறேன்.

    அண்ணாமலை பற்றி நிறைய தகவல்கள் வெளிவரத் தொடங்கி விட்டது.

    நான் மட்டுமல்ல, மற்ற தலைவர்களும் இதுபற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். இனிமேல் அண்ணாமலை பற்றி ஒவ்வொன்றாக வெளிவரும். என்னைப்போல் மற்ற தலைவர்களும் வெளியிடுவார்கள்.

    • கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த நாராயணபுரம் ஏரிக்குள் பாய்ந்தது.
    • ஜே.சி.பி. வாகனத்தை நிறுத்தி ஏரிக்குள் பாய்ந்த காரை மீட்டனர்.

    வேளச்சேரி:

    சிறுசேரியில் பிரபல தனியார் ஐ.டி.நிறுவனம் உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த கவுசல் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இரவு நேரத்தில் பணிமுடிந்து செல்லும் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் உள்ள கார்களில் வீட்டுக்கு பயணம் செய்யும் போது காவலாளி கவுசல் உடன் செல்வது வழக்கம்.

    நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் ஊழியர்கள் சிலர் பணி முடிந்து ஒப்பந்த அடிப்படையில் உள்ள காரில் பல்லாவரம் நோக்கி பயணம் செய்தனர். அவர்களுடன் காவலாளி கவுசலும் சென்றார். காரை டிரைவர் ராஜசேகர் ஓட்டினார். ஊழியர்களை இறக்கிவிட்டதும் கார் மீண்டும் சிறுசேரி நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தது.

    பள்ளிக்கரணை அருகே பல்லாவரம்-துரைப்பா க்கம் 200 அடி ரேடியல் சாலையில் கார் சென்று ெகாண்டு இருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தகார் சாலையோரம் இருந்த நாராயணபுரம் ஏரிக்குள் பாய்ந்தது.

    இதில் காருக்குள் இருந்து வெளியே வரமுடியாமல் டிரைவர் ராஜசேகரும், காவலாளி கவுசலும் சிக்கிக்கொண்டனர். காருக்குள் தண்ணீர் புகுந்ததால் காவலாளி கவுசல் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ரோந்து போலீசார் உடனடியாக வந்தனர். அவர்கள் அவ்வழியே சென்ற ஜே.சி.பி. வாகனத்தை நிறுத்தி ஏரிக்குள் பாய்ந்த காரை மீட்டனர்.

    அப்போது காருக்குள் காவலாளி கவுசல் பிணமாக கிடந்தார். டிரைவர் ராஜசேகர் உயிருக்கு போராடியபடி இருந்தார். அவரை உடனடியாக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டிரைவர் ராஜசேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சாலையோரம் ஏரிக்கரையில் எந்த தடுப்புகளும் இல்லை. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஏரிக்குள் பாய்ந்துள்ளது.

    மேலும் காரில் பயணம் செய்த ஐ.டி.நிறுவன ஊழியர்களை இறக்கிவிட்டு திரும்பி வந்த போது விபத்து ஏற்பட்டதால் அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விபத்து பற்றி அறிந்ததும் போலீசார் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டதால் டிரைவரும் உயிர் தப்பி உள்ளார்.

    இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்கள்.

    • எடப்பாடி பழனி சாமி மீதும் எதிர்ப்பாளர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.
    • தேர்தல் தோல்வி பற்றி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட அ.தி.மு.க. தேர்தலில் பின்னடைவை சந்தித்தது. பா.ஜ.க. கூட்டணி சில தொகுதியில் இரண்டாம் இடத்தை பிடித்ததால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி மீதும் எதிர்ப்பாளர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அனைவரையும் மீண்டும் சேர்த்து கொண்டால் மட்டுமே அ.தி.மு.க. பழைய நிலைக்கு திரும்பி வலுப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் நோக்கர்களும் கணித்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து பாராளுமன்ற தொகுதி வாரியாக கட்சியினர் மாவட்ட செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் ஆலோசனை நடத்த உள்ளார்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த முக்கிய பொறுப் பாளர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்வி பற்றி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளார்.

    நாளை முதல் வருகிற 19-ந் தேதி வரை தொடர்ச்சியாக 26 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார்.

    நாளை முதல் 19-ந் தேதி வரை காலை 9 மணிக்கு தொடங்கும் ஆலோசனை கூட்டம் மாலை வரையில் நடைபெற உள்ளது.

    ஒவ்வொரு நாளும் 3 தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இதன்படி நாளை (11-ந் தேதி) காலை 9 மணிக்கு சிவகங்கை பாராளுமன்ற தொகுதியினருடனும், 11 மணிக்கு வேலூர் நிர்வாகி களுடனும், மாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலை நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்கிறார். எந்தெந்த தொகுதிகளை சேர்ந்தவர்கள் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கிறார்கள் என்பது பற்றிய விவரம் வருமாறு:-

    12-ந்தேதி-அரக் கோணம் தஞ்சை, திருச்சி, 13-ந்தேதி-சிதம்பரம், மதுரை, பெரம்பலூர். 15-ந்தேதி- நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி. 16-ந்தேதி-ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர். 17-ந் தேதி-தென்காசி, தேனி, திண்டுக்கல். 18-ந் தேதி-பொள்ளாச்சி, நீலகிரி, கோவை. 19-ந்தேதி-விழுப்புரம், கன்னியாகுமரி, தர்மபுரி.

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணம் என்ன? என்பதை கண்டறிய முடிவு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் முதல் கீழ் மட்ட நிர்வாகிகள் வரையில் உள்ள அனைவரிடமும் கருத்துக்களை கேட்க உள்ளார்.

    இதைத் தொடர்ந்து தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் தலைமை கழக செயலா ளர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி, பகுதி செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு களில் உள்ளவர்கள் என அனைவரும் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

    இந்த கூட்டங்கள் முடிந்த பிறகு சென்னை உள்பட மீதமுள்ள தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

    இதன் பின்னர் தேர்தல் தோல்விக்கு காரணமான வர்கள் கண்டறியப்பட்டு அவர்கள மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    • பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
    • பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

    தாம்பரம்:

    பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு மறு சுழற்சிக்கு பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கும் குடோனும் உள்ளது. சுமார் 20-க் கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நள்ளிரவு திடீரென பிளாஸ்டிக் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் மளமளவென தீ பரவி அங்கிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்திலும் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

    தீ விபத்து ஏற்பட்டபோது குடோனில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளிகள் உள்ளே இருந்துள்ளனர். குடோனில் தீப்பற்றியதும் அவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். உடனடியாக அவர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×