என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Consultative meeting"
- மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நேற்று நடைபெற்றது.
- தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வேறு வேறு அல்ல.
அரியலூர்:
நாம் தமிழர் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வேறு வேறு அல்ல. 2 கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. தங்கள் கட்சியில் 100 சதவீதம் இந்துக்கள் இருப்பதாக பா.ஜ.க.வினர் கூறுகின்றனர். தி.மு.க.வில் 90 சதவீத இந்துக்கள் இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
எனவே, இரண்டுக்கும் 10 சதவீதம்தான் வித்தி யாசம். விஜய் தனது கட்சி மாநாட்டுக்கு என்னை அழைக்க மாட்டார். அழைக்கவும் கூடாது. அவரது கட்சியின் தொடக்க விழாவுக்கு, மற்றவர்களை அழைக்க மாட்டார்.
நாம் தமிழர் கட்சி எப்போதும் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று நான் முடிவெடுத்து இருக்கிறேன். ஆனால், தேர்தல் காலத்தில் கட்சி நிர்வாகிகள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, கூட்டணி குறித்து யோசிப்பேன்.
2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, 50 தொகுதி களில் வேட்பாளர்களை தேர்வு செய்துவைத்து உள்ளேன். ஆனால் செய்தியாளர்களிடம் இது குறித்து இதுவரை நான் தெரிவிக்கவில்லை.
இவ்வாறூ அவர் கூறினார்.
- ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
- 5-ந்தேதி நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைப்பு.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து பாராளுமன்ற தொகுதி வாரியாக அ.தி.மு.க. நிர்வாகிகளுடனான கலந்தாலோசனை கூட்டங்கள் 10.7.2024 அன்று தொடங்கப்பட்டு தற்போது வரை 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் முடிந்துள்ளன.
இந்த நிலையில் 5-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று நடைபெற இருந்த புதுச்சேரி, கரூர் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கான கலந்தாலோசனை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டு கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 24, 25-ந் தேதிகளில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.
- வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவழைக்க ஏற்பாடு
பழனி:
பழனியில் உலக முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.
முருக பக்தர்கள் மாநாடு அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட்டு 24 மற்றும் 25-ந் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் முருகன் கோவில்களை நிர்மானித்துள்ள அறங்காவலர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு உணவு, தங்கும் இடம் இலவசமாக வழஙகப்படுவதுடன் உள்ளூர் போக்குவரத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முருகனை பற்றிய ஆய்வுகள், முருகனின் புகழ் பரப்பும் கருத்தரங்குகள், சொற்பொழிவுகள் நடைபெறும். மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பழனி முருகன் கோவிலில் ரூ.98 கோடி செலவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் தற்போது முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுவது பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்குவதற்காக பழனி, திண்டுக்கல்லில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் ஆகஸ்ட்டு 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை முன் பதிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்கள் பங்கேற்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து ஆதீனங்கள், மடாதிபதிகள், ஆன்மிக பெரியோர்கள் உள்ளிட்ட பலர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று பழனி வந்தார்.
அதிகாலையில் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் பரிவட்டம் கட்டி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானக் கூடம், பிரசாத ஸ்டால் ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
அதன் பின்பு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் தலைமை தாங்கினார். மாநாட்டுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் வெளிநாட்டு பிரதிநிதிகள் வருவதால் அவர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி, போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி மற்றும் கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் அறிவாலயத்தில் இன்று மாலை நடக்கிறது.
- பல்வேறு செயல்வடிவம் குறித்து பேசப்படுகிறது.
சென்னை:
தி.மு.க.வில் 2026 சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளார்.
இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள 5 பேரும் அண்ணா அறிவாலயத்தில் கூடி அடுத்து என்னென்ன பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
வர இருக்கும் 2026 சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.வில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை செய்ய தி.மு.க. தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரைப்பது, கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வரும் புகார்களை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி அமைப்பு ரீதியாக மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மாவட்டங்களை மேலும் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள இருக்கிறது.
இதன் காரணமாக ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு செயல்வடிவம் குறித்து பேசப்படுகிறது.
- கடந்த 10-ந் தேதி முதல் ஆலோசனை நடத்தி வருகிறாா்.
- 2026 சட்டசபை தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்.
சென்னை:
பாராளுமன்ற தோ்தல் தோல்வி தொடா்பாக தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி, நிா்வாகிகளுடன் கடந்த 10-ந் தேதி முதல் ஆலோசனை நடத்தி வருகிறாா்.
முதல் நாள் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளை வரவழைத்து கருத்துக்களை கேட்டறிந்தார்.
11-ந்தேதி சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை தொகுதி நிர்வாகிகளுடனும், 12-ந்தேதி அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி நிர்வாகிகளுடனும், 13-ந்தேதி சிதம்பரம், மதுரை, பெரம்பலூர் நிர்வாகிகளுடனும், 1-ந்தேதி நாகை, மயிலாடு துறை, கிருஷ்ணகிரி தொகுதி நிர்வாகிகளுடனும், 16-ந் தேதி ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க.வினரிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்தார்.
இதையடுத்து நேற்று 7-வது நாளாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் பொள்ளாச்சி, நீலகிரி, கோவை தொகுதிகளின் நிா்வாகிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.
அப்போது அ.தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
நீலகிரி தொகுதியின் நிா்வாகிகள், பாராளுமன்றத் தோ்தலில் வலுவான தொகுதி கூட்டணி அமைக்காததால் தான் தோல்வி அடைந்ததாக கூறியுள்ளனா். அதற்கு, வரும் சட்டப்பேரவை தோ்தலில் வலுவான கூட்டணி அமையும்.
அதேநேரம், கூட்டணியை நம்பியும் நாம் இருக்கக் கூடாது. மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அ.தி.மு.க.வினா் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளாா்.
கோவை தொகுதி நிா்வாகிகள் பாராளுமன்றத் தோ்தலில் 3-ம் இடத்துக்கு வந்தது குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளனா். அதை ஏற்காத எடப்பாடி பழனிசாமி, கோவை அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.
கடைசி நாளான இன்று காலையில் விழுப்புரம், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தர்மபுரி தொகுதி கூட்டம் பிற்பகலில் நடைபெறுகிறது. இன்றுடன் எடப்பாடி பழனி சாமியின் முதல் கட்ட ஆய்வு நிறைவு பெற்றது.
இதுவரை அவர் 23 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி முடித்துள்ளார். இதர 16 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் தொடா்பாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் தொகுதி நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, வருகிற சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து செயல்படுங்கள். அப்போதுதான் வெற்றிபெற முடியும். கூட்டணியை பற்றி கவலைப்படாதீர்கள். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.
விழுப்புரம் தொகுதியில் கட்சியினர் இன்னும் வேகமாக செயல்பட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் தலைமையின் கவனத்துக்கு நிர்வாகிகள் உடனே தெரியப்படுத்த வேண்டும்.
தகவல் தொழில் நுட்ப பிரிவினர் இப்போது செயல்படுவதை விட மேலும் சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
- வரும் 17ம் தேதியன்று தென்காசி மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார்.
- மொகரம் மற்றும் ஆடி 1 காரணத்தினால் வரும் 17ம் தேதி நடக்க இருந்த கூட்டம் ஒத்திவைப்பு.
அதிமுக பொதுசு்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி, வரும் 17ம் தேதி தேனி, திண்டுக்கல், தென்காசி பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது.
மொகரம் மற்றும் ஆடி 1 காரணத்தினால் வரும் 17ம் தேதி நடக்க இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, வரும் 17ம் தேதியன்று தென்காசி மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார். இந்நிலையில், தென்காசி தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆலோசனை கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெற இருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- ஆலோசனைக் கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- மக்கள் மனதை வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று தொடங்கி உள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்பு தூர் பாராளுமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் சிவகங்கை, வேலூர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.
மாலையில் திருவண்ணா மலை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். இந்த ஆலோசனையின் போது பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது ஏன்? என்பது பற்றி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டுள்ளார்.
அப்போது பலர் காரசாரமாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகள் சிறப்பாக செயல்படாவிட்டால் பதவியில் நீடிக்க முடியாது என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-
எப்போதுமே நடந்து முடிந்த ஒரு விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்காமல் அடுத்து நடக்கப்போவதை பற்றியே சிந்திக்க வேண்டும்.
இதன்படி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நமக்கெல்லாம் மிகவும் முக்கியமான தேர்தலாகும். அதில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் இப்போதே சிறப்பாக செயல்படத் தொடங்குங்கள்.
கூட்டணி சரியாக அமையாத காரணத்தாலேயே தோற்றுப்போய் விட்டோம் என்று இங்கு பலரும் கூறியுள்ளீர்கள். வரும் காலங்களில் நீங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத வகையில் கட்சி உரிய முயற்சிகளை மேற்கொள்ளும்.
நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நிச்சயமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கீழ்மட்ட நிர்வாகிகளை மேல் மட்டத்தில் இருப்பவர்கள் அரவணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் கீழ்மட்ட நிர்வாகிகள் சுறுசுறுப்போடு பணியாற்றுவார்கள். மக்கள் மனதை வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
- ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தேயிலை நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்த வலியுறுத்தி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாஞ்சோலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தொழிலாளர்களுக்கு நிலம், வீடு வழங்க வேண்டும், வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருவாய்துறை, வனத்துறை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் தேயிலை நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
- கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநில இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எதிர்கட்சி தலைவர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் தேவ.பொழிலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விலைவாசி குறைப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, நீட் தேர்வு ரத்து, புதுச்சேரிக்கு மாநில தகுதி கிடைக்க உறுதி அளித்த இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்து பா.ஜனதாவிற்கு தோல்வியை அளித்தனர்.
புதுவையில் கடந்த 3 ஆண்டுகளாக மக்களுக்கு துன்பம் அளித்த என். ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சிக்கு எதிராக இந்திய கூட்டணி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து மக்களின் நம்பிக்கையை பெற்றதனால் புதுச்சேரி மக்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கத்தை வெற்றியடைய செய்தனர். வெற்றியை அளித்த புதுச்சேரி மாநில மக்களுக்கு இந்தியா கூட்டணி நன்றியை தெரிவிக்கிறது.
தொடர்ந்து போராட்டங்களை நடத்தி மக்கள் நம்பிக்கையை இழந்த என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சியை அகற்றி, எதிர்காலத்தில் மக்கள் நலம் காக்கும் அரசை அமைக்க இந்திய கூட்டணி பணியாற்றும். புதுச்சேரி மாநில மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்படும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- நாளை மாலை 6 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
- வெற்றி பெறுவதற்கான வியூகத்தை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலை சந்திக்க தி.மு.க. சுறுசுறுப்புடன் தயாராகி உள்ளது.
தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தி.மு.க. சார்பில் 10 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் 9 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஒவ்வொரு ஒன்றியத்தையும் தனித்தனியாக கவனிப்பதற்காக தேர்தல் பணிக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தல் பணிக்குழுவினர் நாளை விக்கிரவாண்டியில் கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். அங்குள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நாளை மாலை 6 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் 9 அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு விக்கிரவாண்டி தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை மேற்கொள்வது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில் அதன் தொடர்ச்சியாக பிரசாரங்களை மேற்கொள்வது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
- ஆலோசனைக் கூட்டம் ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் நேற்று காலை நடைபெற்றது.
- சுமார் 11 மணி நேரம் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டது.
புதுடெல்லி:
பா.ஜ.க. கூட்டணியில் யார், யாருக்கு மந்திரி பதவி, என்னென்ன இலாகா என்பது தொடர்பாக முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் நேற்று காலை நடைபெற்றது.
இதில், அமித்ஷா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து பிரதமர் மோடி வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டது. நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை சுமார் 11 மணி நேரம் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில் புதிய மத்திய மந்திரிகள் தேர்வு செய்யப் பட்டனர். அதன் பிறகு இன்று காலை அமித்ஷா வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மத்திய மந்திரி சபையில் இடம் பெறுபவர்களை பற்றிய முடிவுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சரவையில் இணைய உள்ளவர்களுக்கு போன் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அவர்கள் அனை வரும் டெல்லி லோக் கல்யாண்மார்க்கில் உள்ள பிரதமர் மோடி இல்லத்துக்கு உடனடியாக புறப்பட்டு வருமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது.
புதிய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி விருந்து கொடுக்க இருக்கிறார் என் றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய மந்திரிகளாக தேர்வானவர்கள் ஒவ்வொருவராக பிரதமர் வீட்டுக்கு வரத் தொடங்கினார்கள்.
அப்படி வந்தவர்கள் அனைவரும் இன்று இரவு புதிய மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்று உறுதிப் படுத்தப்பட்டது. அந்த வகையில் பிரதமர் இல்லத்துக்கு வந்தவர்கள் விவரம் வருமாறு:-
அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, ஜே.பி.நட்டா, பியூஸ்கோயல், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன், சிவராஜ் சிங் சவுகான், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கட்டார், ஹர்ஸ் மல்கோத்ரா, சாவித்திரி தாகூர், ரன்வீத் சிங் பிட்டு, சர்பானந்த் சோனாவால், ஜெயந்த் சவுத்ரி, பி.எல்.வர்மா, பங்கஜ்சவுத்ரி, அன்னப்பூர்ணதேவி, அர்ஜுன்ராம் மேக்வல், தர்மேந்திரபிரதான், ஜிதேந் திரசிங், ராம்தாஸ் அத்வாலே, கஜேந்திர செகாவாத் ஆகியோர் பிரத மர் இல்லத்துக்கு வந்தனர்.
இவர்களில் புதிய மந்திரிகள் ஆவது யார்-யார் என்று பிரதமர் மோடி இறுதி முடிவெடுப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான கூட்டம் இன்று ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்தது. அதன் பிறகு பிரதமர் மோடி வீட்டில் இருந்து அனைவரும் புறப்பட்டு சென்றனர். இதையடுத்து பரபரப்பு தகவல்கள் வெளி யாக தொடங்கியது.
முந்தைய மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த மூத்த மந்திரிகளான அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், நித்தியானந்த் ராய், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, எஸ். ஜெய்சங்கர், அஸ்வினி வைஷ்ணவ், ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் புதிய மந்திரி சபையிலும் இடம்பெறுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, தென் மாநிலங்களில் யார், யாருக்கு மந்திரி பதவிகள் வழங்கப்பட உள்ளன என்கிற விவரத்தை தேசிய ஜனநாயக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் ஏற்கெனவே மத்திய இணை மந்திரியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவது உறுதி என்று தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலத்தைப் பொருத்தவரை பா.ஜ.க. வுக்கு பெரும் பலத்தைக் கொடுத்த ஒக்கலிகர் சமூ கத்தின் வாக்கு வங்கியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலை வர் குமாரசாமிக்கு வேளாண் துறை ஒதுக்கப்பட லாம் என்று கூறப்படுகிறது. அதே மாநிலத்தைச் சேர்ந்தவரும் ஏற்கெனவே மத்திய மந்திரியாக இருந்த வருமான பிரகலாத் ஜோஷி மீண்டும் மந்திரி ஆகிறார்.
தேசிய ஜனநாயக கூட் டணியின் முக்கியக் கட்சி யான தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு கேபினட் மந்திரி பதவியும், ஒரு இணை மந்திரி பதவியும் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
கேபினட் மந்திரியாக மோகன் நாயுடுக்கு ஊரக வளர்ச்சித் துறையும், அக் கட்சியின் பி. சந்திரசேகருக்கு நிதித் துறையின் இணை மந்திரி பதவியும் வழங்கப் படும் எனத் தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரிக்கு இணை மந்திரி தனிப் பொறுப்புடன் வர்த்தக தொழில் துறையும், சி.எம். ரமேசுக்கு சுற்றுலாத் துறை இணை மந்திரி பதவி யும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தெலுங்கானாவிலும் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலை யில், ஏற்கனவே மத்திய மந்திரியாக இருந்த ஜி.கிஷன் ரெட்டிக்கு கேபினட் பதவி மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த மாநி லத்தைச் சேர்ந்த பண்டி. சஞ்சய், டிகே அருணாவுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
பீகாரை சேர்ந்த ஜிதன்ராம் மன்ஜிகி, சிராக் பஸ்வான் ஆகியோரும் மந்தரி சபையில் இடம் பெறுகிறார்கள். அப்னா தளம் கட்சியைச் சேர்ந்த அனுபிரியா பட்டேலும் மந்திரியாவது உறுதியாகி இருக்கிறது.
- பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளை கைப்பற்றியது.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ள நிலையில், 21 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த எம்.பி.க்களில் 10 பேர் புதுமுகங்கள் ஆவர்.
பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி ஆலோசிப்பதற்கு, பாராளுமன்ற குழுவில் இடம் பெறுபவர்களை தேர்வு செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கும், வெற்றிக்கு வழி நடத்தி தி.முக. தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
ஜூன் 14ஆம் தேதி கோவையில் கலைஞருக்கு நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதி வெற்றி விழா, முதல்வருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரை மணி நேரம் நடைபெற்ற எம்.பி. கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் நீட் விவகாரத்தை எழுப்ப தீர்மானம் எடுக்கப்பட்டது.
நீட் தேர்வு விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு உணர்த்துமாறு சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமாருக்கு கோரிக்கை விடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற வளாகத்தில் தேச தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்