search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election rules"

    • தேர்தல் பிரசாரத்தின் போது ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
    • சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று மனு தாக்கல் தொடங்கியது.

    திருப்பதி:

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தேர்தல் பிரசாரத்தின் போது ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

    இதேபோல் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ், மனைவி புவனேஸ்வரியும் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    பிரசாரத்தின் போது தேர்தல் விதிமுறையை மீறியதாக சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷ் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று மனு தாக்கல் தொடங்கியது.

    தங்கள் மீதான வழக்குகளால் தேர்தலில் மனுதாக்கல் செய்ய ஏதாவது சிக்கல்கள் ஏற்படுமா? என சந்திரபாபு நாயுடு தனது வக்கீல்கள் மூலம் ஆலோசனை நடத்தினார்.

    வாக்குச்சாவடி முன்பு பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பொதுவாக்காளர்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக அதிமுக புகார் கூறி உள்ளது. #LokSabhaElections2019 #ADMK #MKStalin
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாபு முருகவேல், தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வாக்காளர்களின் மனதை மாற்றும் வகையில் பேசி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி உள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு தான் வாக்களித்ததாக  கூறியதுடன், மத்திய மாநில அரசுகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று பொது வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.



    இதன்மூலம் அவர் தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி வாக்காளர்களிடம் கேட்பது தெளிவாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதும் தெளிவாகிறது. எனவே, தேர்தல் ஆணையம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #ADMK #MKStalin
    தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேட்டியளித்ததாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. #Loksabhaelections2019 #ADMK #MKStalin
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் இன்று ஒரு மனு அளிக்கப்பட்டது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார், இது தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகும்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி 16-ந்தேதி மாலை 6 மணி முதல் அமைதி காலம் கடை பிடிக்கப்படுகிறது. இந்த விதியை கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் கடைபிடிக்க வேண்டும். ஆனால் மு.க.ஸ்டாலின் இன்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளார். இது தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு எதிரானது.


    எனவே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Loksabhaelections2019 #ADMK #MKStalin
    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக அரசு ஊழியரை சஸ்பெண்ட் செய்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஜெயகாந்தன்.

    இவர் புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் முத்தியால்பேட்டையில் இயங்கும் குழந்தைகள் திட்ட பிரிவில் பல்நோக்கு ஊழியராக பணி செய்கிறார். பணிநிரந்தரம் பெற்ற ஊழியரான ஜெயகாந்தன் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலான பிறகும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வந்தார்.

    முகநூல் பக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் வேட்பாளர்கள் படங்களுடன் கதிர்அரிவாள் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பதிவுகளை வெளியிட்டு வந்தார். மேலும் வாட்ஸ்-அப் பதிவுகளிலும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார்.

    இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, தேர்தல் நன்னடத்தை விதிகளை மதிக்காமல் ஜெயகாந்தன் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து ஜெயகாந்தனை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தையா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். ஜெயகாந்தன் மீது துறைரீதியான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. #LSPolls
    திருச்சி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் தேர்தல் விதிமுறையால் பரிசுகள் கிடைக்காமல் வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். #Jallikattu #Election

    லால்குடி:

    திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    இதில் திண்டுக்கல், மதுரை, அரியலூர், பெரம்பலூர், துறையூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி என பல்வேறு பகுதிகளில் இருந்து 564 காளைகள் கலந்து கொண்டன. 254 காளையர்கள் பங்கேற்று, சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். காளைகள் முட்டியதில் 9 பேர் காயமடைந்தனர்.

    போட்டியில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், மொபட், சில்வர் குடம், தங்க, வெள்ளி காசுகள் என்று சுமார் ரூ.5 லட்சத் துக்கு மேல் பரிசுகள் வழங்குவதற்கு விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஆனால், தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகளின்படி ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகள் வழங்க கூடாது என்று தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    இதனால், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திய விழா குழுவினரால் பரிசுகள் வழங்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். #Jallikattu #Election

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் கடலூரில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன.

    கடலூர்:

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையடுத்து பொது இடங்களில் உள்ள சுவர் விளம்பரங்களை அழிக்கும்பணி, கொடிக்கம்பங்களை அகற்றும் பணி நடைபெற்றது.

    கடலூர் பெருநகராட்சியில் நகரசபை ஆணையர்(பொறுப்பு) டாக்டர் அரவிந்த்ஜோதி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் கடலூர் புதுப்பாளையம், ஆல்பேட்டை, கடலூர் முதுநகர், பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றினர். சில அரசியல் கட்சியினர் தாங்களாவே முன்வந்து கட்சி கொடிக்கம்பங்களை அப்புறப்படுத்தினர். மேலும் சில கட்சி தலைவர்களின் சிலைகளையும் ஊழியர்கள் துணியால் மூடி மறைத்தனர்.

    இது குறித்து நகரசபை ஆணையர்(பொறுப்பு) டாக்டர் அரவிந்த் ஜோதி கூறும்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி கடலூர் நகராட்சியில் பொது இடங்களில் உள்ள 30 கொடிக்கம்பங்களை அப்புறப்படுத்தி இருக்கிறோம். அதேபோல் தலைவர்களின் சிலைகளையும் மூடி மறைத்துள்ளோம் என்றார்.

    திருவாரூர், நெல்லை, பெரம்பலூர், பல்லடத்தில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.86 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls
    திருவாரூர்:

    நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், சட்டசபையில் காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் தேர்தல் தேதியை அறிவித்ததுமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து உள்ளது.

    வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    வாகன சோதனை நடத்தப்பட்ட முதல் நாளான நேற்று மட்டும் மொத்தம் ரூ.86 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இதுபற்றிய விவரம் வருமாறு:-

    திருவாரூர் அருகே கானூர் என்ற இடத்தில் திருவாரூர் தாலுகா போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது நாகையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு சொகுசு காரை அவர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரின் பின்புறம் இருந்த பையில் ரூ.50 லட்சம் இருந்தது. அந்த பணம் கொண்டு செல்லப்படுவதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. இதனால் அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, திருவாரூர் உதவி கலெக்டர் முருகதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் காரில் வந்தவர் நாகையை சேர்ந்த சாகுல் ஹமீது என்பதும், அவருடன் 3 பேர் வந்துள்ளதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 லட்சத்தை உதவி கலெக்டர் முருகதாசிடம், போலீசார் ஒப்படைத்தனர்.

    பணம் பறிமுதல் செய்யப்பட்ட காரில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டு இருந்தது. அந்த கார், நாகை மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்றும், பஸ் அதிபரான அவருக்கு கரூரில் புதிய பஸ்சுக்கு பாடி கட்டி வருவதால், அதற்கு கொடுப்பதற்காக அவரது நண்பரான சாகுல் அமீது ரூ.50 லட்சத்தை காரில் எடுத்து சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினார்கள்.

    இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் நெல்லை அருகே நடந்த வாகன சோதனையின்போது ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த அத்தியூத்து பகுதியில் வீரகேரளம்புதூர் தாலுகா பாதுகாப்பு திட்ட தாசில்தாரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரியுமான கோமதி சங்கரநாராயணன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்திய போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்தனர்.

    காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தூத்துக்குடியை சேர்ந்த சங்கர்ராஜ் (வயது 40) என்ற வக்கீல் என தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் கட்டுக்கட்டாக ரூ.20 லட்சம் இருந்தது தெரியவந்தது.

    அதுபற்றி அதிகாரிகள் விசாரித்தபோது, செங்கோட்டையில் உள்ள தனது அண்ணன் வீடு கட்டி வருவதாகவும், அதற்காக அந்த பணத்தை கொண்டு செல்வதாகவும் சங்கர்ராஜ் தெரிவித்தார். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் ரூ.20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணைக்காக அவரை ஆலங்குளம் தாலுகா அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 14 ஆயிரத்து 490 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    பெரம்பலூர் நான்கு ரோட்டில் நேற்று அதிகாலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது, திருச்சியில் இருந்து வந்த, கேரளாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பிரேம்குமாரின் காரை தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதேபோல் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் அன்னமங்கலம் கைகாட்டி பகுதியில் காரில் வந்த ஆத்தூரைச் சேர்ந்த தண்டபாணி என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    மேலும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நடந்த சோதனையின் போது கார்களில் வந்த லப்பைக்குடிகாடு கணேசன் என்பவரிடம் இருந்து 75 ஆயிரத்து 200 ரூபாயையும், ஆசிம்பாஷா என்பவரிடம் இருந்து 67 ஆயிரத்து 500 ரூபாயையும், சரக்கு வாகனத்தில் வந்த திருச்சி மாவட்டம் அரப்பள்ளிப்பட்டியைச் சேர்ந்த சேகர் என்பவரிடம் இருந்து 71 ஆயிரத்து 790 ரூபாயையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்களிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி மஞ்சுளாவிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி பாமாமணி மற்றும் போலீசார் பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் பாரதி பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை போட்டனர். அப்போது, அந்த காரில் கட்டுகட்டாக ரூ.10 லட்சம் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து காரை ஓட்டிச்சென்றவரிடம் நிலை கண்காணிப்பு குழுவினர் விசாரித்தபோது, அவரது பெயர் லோகநாதன் (வயது 72) என்றும், பொள்ளாச்சி அருகே உள்ள ஆவல் சின்னாம்பாளையத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவர் கொண்டு சென்ற ரூ.10 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து பல்லடம் தாசில்தார் சாந்தி, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் மயில்சாமி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
    திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை வாகன சோதனையில் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #LSPolls
    திருவாரூர்:

    தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே தேதியில் திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.

    தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

    18 தொகுதி இடைத்தேர்தலில் குறிப்பாக திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அனைவரின் எதிர்பார்ப்பையும் ஈர்த்து வருகிறது. ஏனென்றால் மறைந்த தி.மு.க. தலைவர் சொந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார்.

    இதனால் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற தி.மு.க.- அ.தி.மு.க. கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் நேற்று மாலை முதல் அமுலுக்கு வந்ததால் புதுச்சேரி மாநில எல்லை பகுதியில் உள்ள விழுதியூரிலும், கந்தன்குடி, பேரளம் ஆகிய இடங்களிலும் மாவட்ட எல்லைகளான கானூர், கங்களாஞ்சேரி, சோளிங்கநல்லூர், வடுவூர் ஆகிய இடங்களிலும் நிலையான வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்களை எடுத்து செல்வதை தடுக்க 24 மணி நேரமும் 200 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்ககள். மேலும் 12 பறக்கும் படை, 12 கண்காணிப்பு படை அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் சுமார் 6 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட எல்லையான கானூர் பகுதியில் இன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது காரில் இருந்த ஒரு பையை போலீசார் எடுத்து சோதனை செய்த போது, அதில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் ரூ.50 லட்சம் இருந்தது.

    பின்னர் காரில் வந்த வாலிபர் சாகுல் அமீதுவிடம் போலீசார் விசாரித்தனர். ரூ.50 லட்சத்துக்கு முறையான ஆவணங்கள் உள்ளதா? இந்த பணம் எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என்று விசாரித்தனர்.

    அப்போது அவர் பஸ் பாடி கட்டும் வேலைக்காக திருச்சிக்கு இந்த பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் ரூ.50 லட்சம் பணத்துக்குரிய கணக்குகள், முறையான ஆவணங்களை எதையும் அவர் காட்டாததால் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ஆனந்துக்கு போலீசார் தெரியப்படுத்தினர்.

    நேற்று மாலை முதல் தான் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலையில் திருவாரூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் 400 ரவுடிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 100 பேர் நேற்று இரவோடு இரவாக அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 300 ரவுடிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #LSPolls
    ×