search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "house fire"

    • ராமனின் பேரக்குழந்தைகள் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர்.
    • சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவிவிட்டது.

    காளையார்கோவில்:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 65). இவரது ஓட்டு வீடு மறவமங்கலம் வருவாய் ஆய்வாளர் குடியிருப்புக்கு பின்புறம் உள்ளது.

    நேற்று ராமனின் பேரக்குழந்தைகள் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென டி.வி. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. உடனே தீப்பிடித்து பரவ தொடங்கியது.

    இதை பார்த்ததும் வீட்டில் இருந்த குழந்தைகள் அலறியபடி வெளியே ஓடி வந்தார்கள்.

    சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவிவிட்டது. அக்கம்பக்கத்தினர் முயன்றும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், சிவகங்கை தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த நிறைய பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துவிட்டன.

    அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டி.வி. வெடித்து வீடு தீயில் எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஒரே ஒருவர் மட்டும் சுவர் ஏறிக் குதித்து உயிர் தப்பியிருக்கிறார்.
    • வீட்டில் இருந்த பிரிட்ஜ் கம்ப்ரசர் வெடித்ததால் தீப்பிடித்ததாக தெரியவந்துள்ளது.

    லாகூர்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம், லாகூர் நகரில் இன்று அதிகாலையில் ஒரு வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி வீடு முழுவதும் பற்றி எரிந்ததால், வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்தவர்களால் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சர்ந்த கணவன், மனைவி, குழந்தைகள் உள்பட 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஒரே ஒருவர் மட்டும் சுவர் ஏறிக் குதித்து உயிர் தப்பியிருக்கிறார்.

    தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த பிரிட்ஜ் கம்ப்ரசர் வெடித்ததால் தீப்பிடித்ததாக தெரியவந்துள்ளது.

    இந்த விபத்து பற்றி விரிவான விசாரணை நடத்த பஞ்சாப் இடைக்கால முதல்வர் மோஷின் நக்வி உத்தரவிட்டிருக்கிறார்.

    பவானிசாகர் அருகே 3 வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பொருட்கள் சேதம் அடைந்தன. இந்த தீ விபத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பு.புளியம்பட்டி:

    பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம் பாளையம் கற்பூர காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துக்குமாரி (32), சாந்தாமணி (40), பத்மாவதி (40) இவர்கள் 3 பேரும் கூலித் தொழிலாளர்கள். நேற்று காலை 9 மணிக்கு வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு விவசாய தோட்ட வேலைக்கு சென்று விட்டனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் முத்துக்குமாரியின் வீடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்நிலையில் அருகில் இருந்த சாந்தாமணி மற்றும் பத்மாவதி வீடுகளுக்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் முத்துக்குமாரி வீட்டில் உள்ள வீட்டுச் சாமான்கள், சைக்கிள் உள்ளிட்ட பொருட்களும் சாந்தாமணி வீட்டில் இருந்த மற்ற கட்டில், பீரோ மற்றும் ஒரு வெள்ளாடு, மொபட், பத்மாவதி வீட்டில் இருந்த வீட்டுச் சாமான்கள், அரை பவுன் தங்க கம்மல், பள்ளி மற்றும் கல்லூரி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    சேத்தியாத்தோப்பு அருகே 2 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
    சேத்தியாத்தோப்பு:

    சேத்தியாத்தோப்பு அருகே அகரசோழத்தரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்கண்ணன். இவருடைய மனைவி வசந்தா. நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் வெளியூருக்கு சென்று விட்டனர். இதனால் இவர்களுடைய மகன் ஆனந்தபாபு மட்டும் கூரை வீட்டில் இருந்தார். இந்த நிலையில் இரவு திடீரென கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இந்நிலையில் காற்று பலமாக வீசியதால் தீ அருகில் உள்ள தையல்நாயகி என்பவரின் கூரை வீட்டுக்கும் பரவி எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு மற்றும் ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இருப்பினும் தீ விபத்தில் முத்துக்கண்ணன், தையல்நாயகி ஆகியோரின் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில், துணிகள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதன் மொத்த சேத மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து சோழத்தரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்டமங்கலம் அருகே குடிசை வீட்டில் திடீரென தீ பிடித்தது. இதில் தூங்கி கொண்டிருந்த பெண் உடல் கருகி பலியானார்.
    கண்டமங்கலம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால் மருதூர் பகுதியை சேர்ந்தவர் பால கிருஷ்ணன்(வயது55).விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி (51). இவர் அந்த பகுதியில் தனது குடிசை வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார்.

    நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென குடிசை வீடு தீ பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது கண்விழித்த விஜயலட்சுமி வீட்டில் இருந்து வெளியே வரமுயன்றார். ஆனால் வீட்டில் பற்றி எரிந்த தீயின்வேகம் அதிகமாக இருந்ததால் அவரால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியவில்லை. அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் குடிசைவீட்டில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அனைக்க முயன்றனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது. தீயை அணைக்க முடியவில்லை. நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். 

    பின்பு அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது விஜயலட்சுமி தீயில் கருகி இறந்து கிடந்தார். இதைபார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

    இதுகுறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

    தீயில் கருகி பலியான விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் தீ எப்படி பிடித்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அமெரிக்காவில் தீப்பிடித்த வீட்டில் நாயை மீட்க போனவர் எதிர்பாராதவிதமாக உள்ளே சிக்கிக்கொண்டதில் தீயின் கோரப்பிடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார். #HouseFire #Dog #ManDies
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மேய்ன் மாகாணம் ஓர்லண்ட் நகரை சேர்ந்தவர் சாம் கிராபோர்ட் (வயது 40). இவர் அங்குள்ள ஒரு வீட்டில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். சாம் கிராபோர்ட், செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தார். அந்த நாய் மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

    இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் வீடு முழுவதும் தீ பரவிவிட்டதால், சாம் கிராபோர்ட் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வீட்டை வீட்டு வெளியே ஓடி வந்தார். அவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர்.

    இதை எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்ட சாம் கிராபோர்ட், தனது பாசத்துக்குரிய நாய் தன்னுடன் இல்லை என்பதை உணர்ந்து பதறிப்போனார்.

    உடனே அவர் நாயை தேடி பற்றி எரியும் வீட்டுக்குள் சென்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் உள்ளே சிக்கிக்கொண்டார். தீயின் கோரப்பிடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்த பிறகு, கரிக்கட்டையான நிலையில் சாம் கிராபோர்ட் உடல் மீட்கப்பட்டது. அதே சமயம் அந்த நாயின் உடல் கிடைக்கவில்லை. நாயின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
    ஆலங்குடி அருகே குடிசை வீடு தீயில் எரிந்து நாசமானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கூழையன்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். (வயது 50). இவரது மனைவி காளியம்மாள்(46). குடிசை வீட்டில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று அதிகாலை இவர்களது வீடு தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து பொதுமக்கள் சத்தம் போட்டு தூங்கி கொண்டிருந்த ராஜேந்திரன் மற்றும் காளியம்மாளை வெளியே வருமாறு கூறினர். அவர்களும் சுதாரித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். 

    இருப்பினும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், பத்திரங்கள், நெல் மூட்டை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 

    தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். இருப்பினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    பரமத்திவேலூரில் கூரை வீடு தீயில் எரிந்து நாசமானதில் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே சிறுகிணற்றுபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் கூரை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 

    இந்நிலையில் திடீரென்று அந்த கூரை வீடு தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு அலுவலர் திருமுருகன் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். 
    ஆவுடையார்கோவிலில் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசமானதால் ரூ. 5 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதம் அடைந்தன.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் நெல்லியடி ஊரணிக்கரைச் சேர்ந்தவர்கள் வசந்தி(42), அழகுமலை (55), ராஜாத்தி (60). இவர்கள் 3 பேரின் வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. நேற்று மதியம் திடீரென வசந்தியின் வீட்டில் முதலில் தீப்பற்றியது. பின்னர் தீ மளமளவென அழகுமலை, ராஜாத்தி வீடுகளுக்கும் பரவியது. 

    இது குறித்து தகவல் அறிந்தும் ஆவுடையார் கோவில் தீயணைப்பு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் 3 வீடுகளிலும் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பணம், நகை, சான்றிதழ், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து நாசமானது. 

    இச்சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ பிடித்ததா? அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.
    கடலூர் அருகே முன்விரோதத்தில் வீட்டுக்கு தீ வைத்ததால் சிலிண்டர் வெடித்து 6 வீடுகள் எரிந்து சாம்பலானது.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ளது சேடாபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவரது மகன் வெற்றிவேல் (வயது 19). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தஜோதி, முகுந்தன், விஜயகுமார் ஆகியோருக்கிடையே செல்போனில் வாட்ஸ்-அப் அனுப்புவதில் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆனந்தஜோதி உள்பட 6 பேர் சுமதி வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த அவரிடம் தகராறு செய்தனர். அப்போது அங்கு வந்த சுமதியின் உறவினர் கார்த்திக் (29) என்பவர், ஏன் தகராறு செய்கிறீர்கள்? என்று தட்டி கேட்டார்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தஜோதியும், அவரது நண்பர்களும் கார்த்திகை சரமாரியாக தாக்கினர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த கார்த்திக் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தனது அண்ணன் கார்த்திக் தாக்கப்பட்ட சம்பவம் அவரது தம்பி விக்னேசுக்கு தெரியவந்தது. அவரும், அவரது நண்பர் செந்தில்குமாரும் நேற்று இரவு ஆனந்தஜோதியின் வீட்டுக்கு சென்றனர். பின்பு அவரது கூரைவீட்டுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென்று குடிசை வீடு முழுவதும் பரவியது. வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    சிலிண்டர் வெடித்ததில் அருகில் இருந்த தனசேகர், செல்வம், வெங்கடேசன், ராஜவேலு, மாரியம்மாள் ஆகியோரின் வீடுகளுக்கும் தீ பரவியது. உடனே பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.

    மேலும் இது குறித்து கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆனந்தஜோதி வீடு உள்பட 6 பேரின் வீடுகளும் எரிந்து சாம்பலானது.

    வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமாகின. இந்த தீ விபத்தில் 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்தன.

    இந்த சம்பவம் தொடர்பாக முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் முகுந்தன், விஜயகுமார், செந்தில்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சேடாபாளையம் கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பணத் தகராறில் தாய் மற்றும் கல்லூரி மாணவரை சரமாரி கத்தியால் குத்தி விட்டு வீட்டுக்கு தீ வைத்து சென்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    அஞ்சுகிராமம்:

    அஞ்சுகிராமத்தை அடுத்த மயிலாடி அருகே உள்ள லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் நாகர்கோவிலில் தையல் கடை நடத்தி வருகிறார். குமாரின் மனைவி பெயர் லதா. இந்த தம்பதியின் மகன் மெர்வின்ஜோஸ், நாகர்கோவிலில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

    அதே ஊரை சேர்ந்தவர் போஸ் (60). இவர் தற்போது நாகர்கோவிலில் வசித்து வருகிறார். குமார், போசிடம் பணம் கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது. இந்த பணத்தை அவர் திருப்பி கேட்டதால் அவர்களுக்குள்  தகராறு ஏற்பட்டு முன் விரோதம் உருவானது. இந்த நிலையில் இன்று காலை குமார் வீட்டிற்கு போஸ் பணத்தை கேட்பதற்காக சென்றார். அப்போது வீட்டில் குமார் இல்லை. அவரது மனைவி லதாவும், மகன் மெர்வின்ஜோசும் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்களிடம் தகராறு செய்த போஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மெர்வின்ஜோசையும், லதாவையும் சரமாரியாக குத்தினார். இதில் அவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. 

    மேலும் போஸ் சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டார். பிறகு வீட்டின் முன் அறையையும் தீ வைத்து கொளுத்தினார். இதனால் அந்த அறையில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்தன. அதிஷ்டவசமாக தீ சமையல் அறைக்கு பரவாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதற்கிடையில் எத்தியால் குத்தப்பட்ட லதாவும், மெர்வினும் அலறிய சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் படுகாயத்துடன் இருந்த அவர்கள் 2 பேரையும் காப்பாற்றி கொட்டாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் போசையும், பொதுமக்கள் மடக்கிப்பிடித்து அஞ்சுகிராமம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பற்றி அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீடு புகுந்து தாய், மகனை கத்தியால் குத்தி வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×