என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 100003"
- இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
- ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவில் அருகே இன்று ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது :-
இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும்.
இதன் மூலம் உயிரிழப்பை தடுக்கலாம்.
மாவட்டத்தில் தற்போது ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அபராதம் விதிப்பது எங்களுக்கு நோக்கமல்ல.
ஹெல்மெட் , சீட் பெல்ட் அணிந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பை தடுக்கலாம். ஒரு உயிரின் மதிப்பு விலை மதிப்பற்றது.
இதற்காகத்தான் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் அவர்களுக்கு உடனுக்குடன் இரட்டிப்பு அபராதம் விதிக்க உத்தரவிட்டு உள்ளேன் .
அவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்தாலும் விதிமுறை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். பாரபட்சம் இன்றி அபராதம் விதிக்கப்படுகிறது.
தற்போது தஞ்சை மாவட்டத்தில் விபத்தால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இனி அனைவரும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள். உயிரிழப்பை தடுக்க ஒத்துழைப்பு கொடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து போக்கு வரத்து காவலர்கள் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேரணியாக சென்றனர். செல்லும் வழியில் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விபத்துகளை குறைக்கும் வகையிலும், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரகத்திற்கு உட்பட்ட போலீசார் மற்றும் பெட்ரோல் பங்க் அசோசியேஷன் இணைந்து ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்கிற்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்குவது இல்லை என்ற புதிய முயற்சியை நாளை (1-ந் தேதி) தொடங்க உள்ளனர்.
அதன்படி இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை ஹெல்மெட் அணிந்து வந்த முதல் 30 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. இதேபோல் மாதத்தில் ஒரு நாள் காலை 9 மணி முதல் 12 மணி வரை ‘மகிழ்ச்சி நேரம்’ என்ற தலைப்பில் இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட இருக்கிறது.
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச பெட்ரோல் வழங்கும் நிகழ்ச்சியை திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தொடங்கி வைத்தார்.
புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் உள்ளது.
கட்டாய ஹெல்மெட் சட்டம் புதுவையில் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. ஹெல்மெட் அணியாததால் ஆண்டுதோறும் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்து ஏற்பட்டு அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதனால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தினார். இதையடுத்து கடந்த 11-ந்தேதி முதல் புதுவையில் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டது.
ஹெல்மெட் அணியாத வர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. காவல்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வழக்கு பதிவில் காட்டும் ஆர்வத்தை ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் காட்ட வேண்டும். அதன்பிறகு ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்தலாம் என கூறினார்.
இருப்பினும் காவல்துறை தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களின் வாகன எண்களை குறித்துக்கொண்டனர். இவர்கள் மீது வழக்குபதிவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கவர்னருக்கு எதிராக கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவதில் தளர்வு ஏற்பட்டது. தற்போது கவர்னர் மீண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை புதுவையில் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என வாட்ஸ்அப்பதிவில் வலியுறுத்தியுள்ளார். மேலும் சுப்ரீம்கோர்ட் சாலை பாதுகாப்பு கண்காணிப்புக்குழு மூலம் புதுவை தலைமை செயலாளர் அஸ்வனி குமாருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், இருசக்கர ஓட்டுநர், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் கட்டாய ஹெல்மெட் சட்டம் தொடர்பாக கேட்கப்பட்ட அறிக்கையை இதுவரை ஏன் அனுப்பவில்லை? என விளக்கமும் கேட்டுள்ளது. இதனால் புதுவையில் மீண்டும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. #Kiranbedi
புதுவையில் கட்டாய ஹெல்மெட் சட்டம் இன்று முதல் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வது அவசியம் குறித்து கவர்னர் கிரண்பேடி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அவர் நேற்று மாலை ரெட்டியார்பாளையம் பகுதிக்கு சென்றார். மூலக்குளம் அருகே சென்ற போது அவர் தனது காரில் இருந்து இறங்கினார். பின்னர் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களை நிறுத்தி, ‘ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். அது உங்கள் உயிரை பாதுகாக்கும். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்’ என்றார். அதன் பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு தட்டாஞ்சாவடி, கருவடிக்குப்பம் வழியாக கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.
புதுவை அமைதியான, தூய்மையான மாநிலம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு போக்குவரத்து குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை. இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும் மதிப்பதில்லை.
மதுபானம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது. இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் செல்வது, வாகனங்களை நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்துவது போன்றவை குற்றமாக கருதப்படுகிறது. அதுபோல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவதும் குற்றம்தான். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி செல்வதால் விலை மதிப்பில்லாத உயிர் இழப்பு ஏற்படுகிறது. ஒருவர் உயிரிழக்கும் போது அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது.
குழந்தைகள் பெற்றோரின்றி தவிக்கின்றனர். விபத்து வழக்கிற்கான கோர்ட்டுக்கு செல்லும்போது நேரம், பணம் வீணாகிறது. விபத்தால் உயிரிழக்கும் குடும்பங்களுக்கு விதவை பென்ஷன் வழங்குவது மூலம் அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது. சுகாதாரத்துறைக்கு மருத்துவ செலவும் ஏற்படுகிறது. முதல்-அமைச்சர் நாராயணசாமியின் மனைவி கூட வாகன விபத்தில் உயிரிழந்தார். அதுகூட ஹெல்மெட் அணியாதது தான் காரணம். எனவே கட்டாய ஹெல்மெட் சட்டத்துக்கு சமரசம் கிடையாது. அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.
அவ்வாறு அணியாமல் செல்வோர் மீது போக்குவரத்து போலீசார், பல்கலைக்கழக மாணவர்கள், தன்னார்வலர்கள் வாகன எண்ணை குறித்து வைத்து நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம். நீதிமன்றம் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும். சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பது, திருடுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கை செய்து விடமுடியுமா? அதுபோல் தான் ஹெல்மெட் அணியாமல் செல்வோரை வெறுமனே விடமுடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #KiranBedi #Helmet
புதுவையில் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பெண்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கட்டாய ஹெல்மெட் திட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் ஹெல்மெட் அணிவது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் ஹெல்மெட் அணிவது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் 648 பேர் இறந்துள்ளனர். இதில் 322 பேர் ஹெல்மெட் அணியாததாலேயே உயிரிழந்துள்ளனர். எனவே நாளை (திங்கட்கிழமை) முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாவிட்டால் வழக்கை சந்திக்க வேண்டியது இருக்கும்.
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு முதலில் ரூ.100 அபராதம் விதிப்போம் அல்லது அதற்கான ரசீது கொடுப்போம். 3-வது முறை ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டால் டிரைவிங் லைசென்சு ரத்து செய்யப்படும். காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவதும் அவசியம். இதை மீறுவோருக்கும் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அவர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.100 அபராதம் செலுத்தினார். #tamilnews
சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது ஐகோர்ட்டு உத்தரவு ஆகும்.
எனவே ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வோர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். எனினும் சில போலீசார் சட்டத்தை மதிக்காமல் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்வதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து ‘ஹெல்மெட்’ அணியாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போலீசார் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஆயுதப்படை துணை கமிஷனர்கள் கே.சவுந்தரராஜன், ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 1,300 போலீசார் பங்கேற்றனர். அப்போது அவர்கள், இனி மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லும்போதும், பின்னால் அமர்ந்து செல்லும்போதும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்வோம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 500 போலீசார் ‘ஹெல்மெட்’ அணிந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.
எழும்பூர் ருக்மணி சாலை, எத்திராஜ் கல்லூரி சாலை வழியாக சென்ற பேரணி பின்னர் ராஜரத்தினம் மைதானத்தை வந்தடைந்தது. ‘ஹெல்மெட்’ பிரசாரத்துடன் கார்களில் செல்லும் போது ‘சீட் பெல்ட்’ கட்டாயம் அணிய வேண்டும் என்றும் போலீசார் எடுத்துரைத்தனர்.
சமயபுரம் சுங்கச் சாவடியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமை தாங்கினார். சப்- இன்ஸ்பெக்டர் கள் அகிலன், செல்வராஜ், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வனராஜு ஆகியோர் பேசினர். ஊர்வலம் இனாம்சமயபுரம், சமயபுரம் பஸ் நிலையம், கடைவீதி, நாலுரோடு, பழைய பெட்ரோல் பங்க் வழியாக சென்று மீண்டும் கடைவீதியை வந்தடைந்தது.
இதில் வீரமாமுனிவர் மக்கள் நல்வாழ்வு அமைப்பின் தலைவர் ஆரோக்கியதாஸ், செயலாளர் கபிரியேல், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் போலீசார் ஏராளமானோர் கலந்து கொண்டு, இருசக்கர வாகனங்களில் சென்றனர். முடிவில் சமயபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா நன்றி கூறினார்.
2000 ரூபாய் அபராதம் வாங்கிவிட்டு 500 ரூபாய்க்கு மட்டும் ரசீது கொடுத்து அந்த இளைஞரை அனுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
நாமக்கல்லில் போக்குவரத்து துறை சார்பாக ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. நாமக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
ஊர்வலத்தை நாமக்கல் மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முதலைப்பட்டியில் தொடங்கிய ஊர்வலம், நாமக்கல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பூங்கா சாலையில் முடிவுற்றது. இதில் தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலைய ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஹெல்மெட் அணிந்தவாறு மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்றனர்.
இதில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசாரும் உடன் சென்றனர். பின்னர் பூங்கா சாலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வி, சண்முக ஆனந்த், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்றைய இளைஞர்களும், மாணவர்களும் ஹெல்மெட்டினை தனது உயிர் காக்கும் நண்பனாக கருதவேண்டும். பெண்கள் பின்னே அமர்ந்து செல்லும் போது, அவசியம் ஹெல்மெட் அணியவேண்டும். என்னுடைய அனுபவத்தில் பெங்களூரில் வசித்த காலத்தின் போது, ஒரு முறை 80, 90 கி.மீ. வேகத்தில் சென்று காரின் பின்புறம் மோதி காருக்கு முன்புறம் தூக்கியெறியப்பட்டேன். அந்த சமயம் என் உயிரை காப்பாற்றியது ஹெல்மெட்தான்.
எப்படி கார் தயாரிக்கும் போதே இருக்கைக்கான சீட்பெல்ட்டுடன் அமைக்கப்படுகிறதோ, அது போல இருசக்கர வாகன விற்பனையிலும் இரண்டு ஹெல்மெட் மற்றும் மற்ற பாதுகாப்பு உபகரணங்களும் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Helmet #sarathkumar
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும், மகிழுந்துகளில் பயணிப்பவர்கள் கட்டாயம் இருக்கைப்பட்டை அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் உயர் நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த ஆணை புதிதல்ல. மோட்டார் வாகனச் சட்டத்தில் ஏற்கனவே இருக்கும் பிரிவைத் தான் செயல்படுத்த உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
தமிழகத்தில் 1985ஆம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட உள்துறை (போக்குவரத்து) அரசாணை மூலம் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. பின்னர் 1989-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட அதே துறையின் அரசாணை மூலம் தலைக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டது. எனினும் நீதிமன்ற ஆணைகளின்படி, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய 6 நகரங்களில் 1.6.2007 முதலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 1.7.2007 முதலும் தலைக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது.
ஆனால், இது முறையாக நடைமுறைப்படுத்தப்படாததன் காரணமாகவே சென்னை உயர்நீதிமன்றம் இப்போது தலையிட்டு இந்த ஆணையை பிறப்பித்துள்ளது.
இரு சக்கர வாகனங்களில் செல்வோரில் பெரும்பான்மையினர் தலைக்கவசம் அணிவதை தலையாயக் கடமையாக கருதி பின்பற்றுவதையும், குறைந்த எண்ணிக்கையிலானவர்களிடையே தலைக்கவசம் அணிவதற்கு எதிரான முணுமுணுப்புகள் இருப்பதையும் நான் அறிவேன்.
ஆனால், அவை ஏற்கத்தக்கதல்ல. இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் தலைக்கவசம் அணிவதில் சிரமங்கள் உள்ளன; வாகனமே ஓட்டத் தெரியாதோருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கும் அளவுக்கு போக்குவரத்துத் துறையில் தலைவிரித்தாடும் ஊழலை சரி செய்யாமல் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதால் என்ன பயன்? சாலைகளில் உள்ள குண்டு குழிகளை சரி செய்ய ஆணையிடாத நீதிமன்றங்கள் அப்பாவி மக்கள் மீது தலைக்கவசத்தை திணிப்பது நியாயமா? என எதிர்ப்புக் குரல்கள் எழுவது எனது செவிகளுக்கும் கேட்கிறது. இந்த வினாக்களில் நியாயம் இருக்கலாம்... ஆனால், தர்க்கம் இல்லை என்பதே உண்மை.
சாலைகளில் உள்ள குண்டு குழிகள் சரி செய்யப்பட வேண்டும்; ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் நடக்கும் ஊழல்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதெல்லாம் சரி தான். ஆனால், இவையெல்லாம் சரி செய்யப்பட்ட பிறகு தான் தலைக்கவசத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று கூறுவது நமது உயிருக்கு நாமே வைத்துக் கொள்ளும் வேட்டு ஆகும்.
மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் சரி செய்யப்படாத வரை சாலைகளில் நடக்கும் விபத்துகளில் தலையில் அடிபடாது என்றோ, அடிபட்டாலும் உயிரிழப்பு ஏற்படாது என்றோ யாரால் உத்தரவாதம் அளிக்க முடியும்? யாராலும் உத்தரவாதம் அளிக்க முடியாது எனும் போது அத்தகைய எதிர்ப்புக் குரல்கள் வாதத்திற்கு வேண்டுமானால் உதவும்; வாழ்க்கைக்கு உதவவே உதவாது. மகிழுந்துகளில் இருக்கைப்பட்டை அணிவதற்கு எதிரான கருத்துகளுக்கும் இந்த விளக்கம் பொருந்தும்.
சாலை விபத்துகளில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்பதால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தலைக்கவசம் அணிவதிலும், இருக்கைப்பட்டை அணிவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 2016-ம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாததால் 4091 பேர் உயிரிழந்தனர். 2017-ம் ஆண்டில் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டதால் இது 2956 ஆக குறைந்தது. இதை மேலும் குறைக்க இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் தலைக் கவசம் அணிவது கட்டாயம் ஆகும்.
அதேபோல், மகிழுந்து விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு இருக்கைப்பட்டை அணியாதது தான் மிக முக்கியக் காரணம் ஆகும். கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி ஆந்திராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் அம்மாநில முன்னாள் முதல்-அமைச்சர் என்.டி.ராமராவின் புதல்வர் பாலகிருஷ்ணா உயிரிழந்தார். அனைத்து வசதிகளும் கொண்ட மகிழுந்தில் அவர் பயணித்தாலும் இருக்கைப்பட்டை அணியாததால் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் செயல்படவில்லை. அதனால் அவர் உடல் நசுங்கி உயிரிழக்க நேர்ந்தது.
அலுவல் மற்றும் வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வாகனங்களில் புறப்படுவோர் தங்களுக்காக வீட்டில் காத்திருக்கும் மனைவி, குழந்தைகளை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் தலைக்கவசம் அணிவதும், இருக்கைப் பட்டை அணிவதும் அனிச்சை செயலாக மாறி விடும்.
இந்த விஷயங்களில் இதுவரை அலட்சியமாக இருந்தவர்கள் கூட இனி வெளியில் செல்லும் போது காலனி கைக் கடிகாரம் அணிவது போன்று தலைக் கவசம், இருக்கைப் பட்டை அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Ramadoss #Helmet #HC
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்