search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100849"

    திண்டுக்கல் அருகே 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே நத்தம்- துவரங்குறிச்சி இடையே 27 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக 4 சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால் 500 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும். அதோடு அந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிணறுகள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறினர். எனவே இந்த பகுதியில் 4 வழிச்சாலை அமைக்க தேவை இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனாலும் அதனை மீறி அதிகாரிகள் நிலம் சர்வே பணியில் ஈடுபட்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் இன்று காலை ஒன்று திரண்டனர். அவர்கள் நேரடியாக திண்டுக்கல் வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து பேரணியாக வந்து நெடுஞ்சாலை நிலம் எடுப்பு துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகளை சந்தித்து மனுகொடுத்தனர்.

    சென்னையில் போராட்டம் நடத்தி கைதான விவசாயிகளை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். #Farmersstruggle

    சென்னை:

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் வழியாக சத்தீஸ்கர் மாநிலத்துக்கு உயர் மின் அழுத்த கோபுரங்கள் வழியாக மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக 11 உயர் மின் அழுத்த கோபுரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட உள்ளது.

    இந்த கோபுரங்கள் அமைக்கப்பட்டால் விவசாயம், கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை ஆகிய தொழில்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    மற்ற மாநிலங்களைப் போல் பூமிக்கடியில் புதைவடங்கள் மூலம் கொண்டு செல்லும்படி வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காக கடந்த 15 நாட்களாக பலகட்ட போராட்டங்களையும் நடத்தினார்கள்.

    போராட்டத்துக்கு தீர்வு கிடைக்காததால் சென்னைக்கு திரண்டு வந்து நேற்று சேப்பாக்கத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடத்தினார்கள். இந்தபோராட்டத்துக்கு கொங்கு ராஜாமணி, திருப்பூர் செந்தில், வக்கீல் ஈசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விவசாய பிரதிநிதிகளுடன் மின்துறை அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து அனைவரும் மீண்டும் நேற்று இரவு சேப்பாக்கத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 460 விவசாயிகளை போலீசார் கைதுசெய்தனர். அவர்கள் அனைவரும் சிந்தாதிரிபேட்டையில் உள்ள இரண்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மண்டபங்களில் இருக்கும் விவசாயிகளை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவருடன் கோவை தங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றனர்.

    விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஜி.கே.வாசன் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களது நியாயமான கோரிக்கைக்கு அரசுசெவி சாய்க்க வேண்டும் என்றார். #Farmersstruggle

    பந்தளத்தில் போராட்டம் நடத்திய இந்து அமைப்பினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சபரிமலை கர்ம சமிதி உறுப்பினர் உயிரிழந்தார். #SabarimalaProtest #KeralaShutdown #ProtesterDies
    பந்தளம்:

    கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலைக்கு 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்துள்ளது.

    சபரிமலை கர்ம சமிதி சார்பில் பந்தளத்தில் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றபோது, அங்கிருந்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும், மார்க்சிஸ்ட் கட்சியினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சபரிமலை கர்ம சமிதியைச் சேர்ந்த சந்திரன் உன்னிதான் (55) என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் இருந்து கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த சந்திரன் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அவர் இறந்துபோனார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே கேரளாவில் இன்று சபரிமலை கர்ம சமிதி அமைப்பு சார்பில்  முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்ததைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்று நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. #SabarimalaProtest #KeralaShutdown #ProtesterDies 
    சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிராக திருவனந்தபுரம் அருகே நடந்த போராட்டத்தில் பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டது. #Sabarimala #BJP
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசு ஸ்திரமாக இருந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு பின்னர் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை. பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் கேரளாவை சேர்ந்த பிந்து, கனகதுர்கா இரு பெண்கள்  சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று அய்யப்பனை தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.



    சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிராக திருவனந்தபுரத்தில் பா.ஜனதாவினர் தரப்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் போலீஸ் இடையே மோதல் நேரிட்டது. #Sabarimala #BJP
    ஈரோடு மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக பிளாஸ்டிக் தடையை மறுபரிசீலனை செய்யக்கோரி உற்பத்தியாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #PlasticBan
    ஈரோடு:

    தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை இந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களும், பிளாஸ்டிக் விற்பனை செய்யும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை பல்வேறு பகுதிகளில் 160 பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களும் மாவட்டம் முழுவதும் 350 பிளாஸ்டிக் கடைகள் செயல்படுகின்றன. தடை உத்தரவை நீக்க வலியுறுத்தி நேற்று முதல் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டன.

    பிளாஸ்டிக் தடை உத்தரவால் ஈரோடு மாவட்டத்தில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் தங்களது வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இதனால் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் துணைத்தலைவர் ஜெப்ரீ கூறியதாவது:-

    அரசு அறிவித்துள்ள 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருட்களைப் பயன்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு விளக்கமும் சரியாக அளிக்கவில்லை. இதன் மூலம் சிறு குறு உற்பத்தியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.

    தற்போது இந்த தடை உத்தரவால் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் தொழிலாளர்கள் தங்களது வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். எங்களது வேலை நிறுத்தத்தால் நாளொன்றுக்கு ரூ. 15 கோடி வர்த்தகம் முடங்கியுள்ளது.

    நமது அண்டை மாநிலங்களில் இன்னும் இந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. இன்னும் அது எங்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இவர் அவர் கூறினார். #PlasticBan

    டெல்லியில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் போராட்டம் வெற்றி பெற கவர்னர் கிரண்பேடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #GovernorKiranbedi

    புதுச்சேரி:

    புதுவை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கால்நடைத்துறை அலுவலகத்தில் கவர்னர் கிரண்பேடி இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் நிருபர்களிடம் கவர்னர் கிரண்பேடி கூறியதாவது:-

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே நியாய விலைக்கடைகள் மூலம் இலவச பொருட்கள் வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது. இதன்படியே, பொங்கல் இலவச பொருட்களும் வழங்க முடியும். அதனடிப்படையில் கோப்புகளை அனுப்பினால் மட்டுமே ஒப்புதல் வழங்க முடியும்.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார்.

    அவரிடம் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 4-ந் தேதி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற உள்ளதே? என கேட்டதற்கு என்னை திரும்ப பெறக் கோரி டெல்லியில் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    அவர்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டு வரட்டும். இன்று என்ன நடக்கிறது என்பதை மட்டுமே பார்க்க வேண்டும், நாளை நடப்பதை யாராலும் கணிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #GovernorKiranbedi

    உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாழப்பாடியில் விவசாயிகள் மண்ணை சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம் :

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உயர்மின் கோபுரங்கள் விவசாய நிலங்களில் அமைக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மாவட்டம் வாழப்பாடியில் விவசாயிகள் நேற்று 12-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் 6-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதமும் இருந்தனர். தொடர்ந்து விவசாயிகள் மண்ணை சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.

    இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

    வாழப்பாடியில் ஏற்கனவே விவசாய நிலங்களில் அமைக் கப்பட்ட மின் கோபுரங்களுக் காக உரிய இழப்பீடு தொகை வழங்கப்படாமல் உள்ளது. தற்போது மீண்டும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. இதை கண்டித்து கடந்த 12 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எதிர்காலத்தில் விவசாயம் செய்ய வழியில்லாமல் போனால் அடுத்த தலைமுறை மண்ணைதான் சாப்பிட வேண்டி இருக்கும். இதை வலியுறுத்தி மண்ணை சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த போராட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது பந்தலில் அமர்ந்திருந்த சிறுவனுக்கு மண்ணை ஊட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    குறைந்தபட்ச வரி விதிப்பு வேண்டும் என்றும், வரி விதிப்பில் பாரபட்சமின்றி செயல்பட கோரியும் ஆயிரக்கணக்கான தைவான் மக்கள் மஞ்சள் அங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். #Taiwan #YellowVest
    தைபே :

    பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியது மஞ்சள் அங்கி போராட்டம் என்ற மக்கள் போராட்டத்துக்கு வித்திட்டது. கார் டிரைவர்கள் தான் முதலில் இந்த போராட்டத்தை தொடங்கினர்.

    அதன்பிறகு மஞ்சள் அங்கி அணிந்த மக்கள் அவர்களுடன் கைகோர்த்ததும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. 10-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். ஒரு மாதத்துக்கு மேல் நடந்த இந்த போராட்டத்துக்கு அரசு பணிந்தது. வரி உயர்வை ரத்து செய்வதாக அறிவித்தது.

    இந்த நிலையில் பிரான்சை தொடர்ந்து தைவானும் மஞ்சள் புரட்சியில் இறங்கியுள்ளது. குறைந்தபட்ச வரி விதிப்பு வேண்டும் என்றும், வரி விதிப்பில் பாரபட்சமின்றி செயல்பட கோரியும் ஆயிரக்கணக்கான தைவான் மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மஞ்சள் நிற உடைகளை அணிந்து, வரிவிதிப்பு கொள்கைகள் சட்ட ரீதியாக இல்லை என்ற பதாகைகளை ஏந்தி நிதி அமைச்சகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #Taiwan #YellowVest
    தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் குறைவாக உள்ளதை கண்டித்து நோயாளிகளுடன் இணைந்து தி.மு.க. எம்.எல்.ஏ. போராட்டத்தில் ஈடுபட்டார்.
    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அங்கு டாக்டர்கள் குறைவாக இருப்பதால் நோயாளிகள் சிகிச்சை பெற மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். இன்று மருத்துவமனை பணியில் ஒரு டாக்டர் மட்டும் இருந்துள்ளார். இதனால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தொடர்ந்து தினமும் இது போல் டாக்டர்கள் குறைவாக உள்ளதால் நோயாளிகள் சிகிச்சை பெற சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் பென்னாகரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இன்ப சேகரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து அவர் இன்று காலை மருத்துவமனைக்கு வந்தார்.

    அப்போது பணியில் டாக்டர் ஒருவர் மட்டுமே இருந்ததால் நோயாளிகளுடன் மருத்துவமனையின் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.

    போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க ஈரோடு மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மூலக்கரை பிரிவில் இன்று விவசாயிகள் 11-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையொட்டி 11 விவசாயிகள் தொடர் உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள்.

    இன்று (வியாழக்கிழமை) அவர்களின் உண்ணாவிரதம் 5-வது நாளாக நீடித்து வருகிறது.

    காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று ஈரோடு அடுத்த மேட்டுக் கடை பகுதியில் உள்ள வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் காலை முதல் எந்த கடையும் திறக்கப்பட வில்லை. 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு கிடந்தன. இதனால் மேட்டுக்கடை பகுதி இன்று வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதற்கிடையே உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று காலை 10 மணி முதல் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

    விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நீடித்தது.

    கோவை:

    கோவையில் சுல்தான் பேட்டையிலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கள்ளிப் பாளையத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    பல்லடத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. கடுங்குளிர் மற்றும் கடும் பனிப் பொழிவு ஆகியவற்றை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்ட பந்தலிலேயே தங்கி அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்ட பந்தலில் படுத்து உறங்கினர்.

    காலையில் பந்தலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 23-ந்தேதி முதல் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி, விஸ்வநாதன், பச்சியப்பன், பால்ராஜ், சிவக்குமார், நாச்சிமுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட விவசாயிகள் 16 பேர் தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுல்தான் பேட்டையில் 17 பேரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த தொடர் உண்ணா விரதப்போராட்டம் இன்று 4- வது நாளாக நடை பெற்று வருகிறது. விவசாயிகள் காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதம் என தனிதனியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    காத்திருப்பு தொடர் போராட்டத்தில் போராட்ட பந்தலின் முன்பு, விவசாயிகள்தூக்கு போட்டுக் கொண்டு நூதன போராட்டம் நடத்தினர்.

    காத்திருப்பு தொடர் போராட்டத்தை இதுவரை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். உண்ணாவிர போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உடல் நிலை மோசமடைந்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு உண்ணாவிரத பந்தலிலேயே குளுக்கோஸ் செலுத்தப்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வே.கள்ளிப்பாளையத்தில் கடந்த 10 நாட்களாக காத்திருப்பு தொடர் போராட்டம், மற்றும் தொடர் உண்ணா விரதப்போராட்டம் நடை பெற்று வருகிறது.

    போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பொங்கலூரில் அனைத்து கடைகள்,மற்றும் நிறுவனங்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு செய்தனர்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசன் சாவடியில் விவசாயிகள் கடந்த 17-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    இன்று 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் உண்ணாவிரத போராட்டத் தின்போது விவசாயிகள் ஆறுகளூரை சேர்ந்த ராஜேஷ்(வயது 26), இளையப்பன் (40), பெரியகுட்டிமடுவு பகுதியை சேர்ந்த குமார் (30), ராமகிருஷ்ணன்(32) ரத்த அழுத்தம், உடல் நிலை கோளாறு காரணமாக மயங்கி விழுந்தனர்.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு சாமாண்டூர் பகுதியில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்தது.

    நாமக்கல் மாவட்ட விவசாய சங்க செயலாளர் படைவீடு பெருமாள் தலைமையில் நடைபெற்றுவரும் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று பெருமாள், பொன்னுசாமி, முருகவேல், கே.சுப்ரமணியம், நடராஜன், முத்துசாமி, சி.சுப்ரமணியம், பழனிசாமி, சுரேஷ், பச்சியப்பன் ஆகிய 10 பேர் பங்கேற்றனர். இதில் சுப்ரமணியம், நடராஜன், பழனிசாமி ஆகிய 3 பேருக்கு ரத்தஅழுத்தம் குறைவின் காரணமாக திடீரென தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டது.

    ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள மூலக்கரை பிரிவில் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று (புதன்கிழமை) 10-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. பல்வேறு நூதன வகையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    6 பெண்கள் உள்பட 11 விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களின் உண்ணா விரதம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது.

    இதனால் 6 பெண்கள் உள்பட 11 பேரும் தொடர் உண்ணாவிரதத்தால் சோர்வாக உள்ளனர்.

    இவர்கள் உண்ணா விரதத்துடன் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர். உண்ணாவிரதம் ஒரு புறம் நடக்க விவசாயிகள் தங்கள் இடுப்பில் வேப்பிலை கட்டி கொண்டு வாயில் அருகம் புல்லை வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சபரிமலைக்கு சென்று திரும்பிய சென்னை பெண்களுக்கு எதிராக தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. #Sabarimala

    கம்பம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கேரள அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. ஆனால் கோவிலுக்குள் பெண்களை நுழைய விடாமல் இந்து அமைப்பினரும் ஐயப்ப பக்தர்களும் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    சென்னையைச் சேர்ந்த மனிதி பெண்கள் அமைப்பைச் சேர்ந்த 11 இளம்பெண்கள் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் சபரிமலை நோக்கி வந்தனர். பம்பையில் அவர்களை தடுத்து நிறுத்திய ஐயப்ப பக்தர்கள் அவர்களை உள்ளே நுழைய விடாமல் கோ‌ஷம் எழுப்பினர். இதனையடுத்து அவர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    அவர்கள் வந்த வாகனம் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. திரும்பி வரும் வழியில் கேரளாவில் கட்டப்பனையில் அந்த வாகனம் மீது சிலர் தாக்குதல் நடத்த முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கோவிலுக்கு வந்த பெண்களை பத்திரமாக திருப்பி அனுப்பும்படி தெரிவிக்கப்பட்டது. கேரள-தமிழக எல்லையில் அவர்கள் வாகனம் கம்பம் மெட்டு வந்தடைந்தவுடன் தேனி மாவட்ட போலீசார் அவர்களை பத்திரமாக அழைத்து வந்தனர்.

    ஆமையாறு, கம்பம், சின்னமனூர், சீலையம்பட்டி, தேனி வழியாக ஆண்டிப்பட்டி என பல்வேறு இடங்களில் அவர்கள் வந்த வாகனம் மெயின் ரோட்டில் வராமல் குறுக்கு பாதையில் போலீசார் உதவியுடன் அழைத்து வரப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் பல இடங்களில் அவர்கள் வாகனத்தை மறிக்க திரண்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அங்கு வந்து மாற்றுப்பாதையில் பெண்களை அழைத்துச் சென்றனர்.

    இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை பத்திரமாக அழைத்து வந்து மதுரை விமான நிலையம் வரை கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் 11 பெண்களும் சென்னை சென்றனர். #Sabarimala

    ×