search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணி"

    மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்து 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
    கின்ஷாசா:

    மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாய் நேடம்போ மாகாணத்தின் தலைநகர் இனான்கோவில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது. இனான்கோவில் சாலை வசதிகள் சரிவர இல்லாததால் பெரும்பாலான மக்கள் படகு போக்குவரத்தையே பிரதானமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இந்த ஏரியில் 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த படகில் 183 பேர் மட்டுமே அமர்ந்துசெல்ல அனுமதி உள்ள நிலையில், அளவுக்கு அதிகமான பயணிகளோடு, சரக்குகளையும் ஏற்றி சென்றுள்ளனர்.

    இதனால் பாரம் தாங்காமல் படகு திடீரென ஏரியில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இந்த கோர விபத்தில் 12 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    இது குறித்து இனான்கோ நகர மேயர் சைமன் எம்பிவோ வெம்பா கூறுகையில், “படகு விபத்தில் பலியானதாக கூறப்படும் எண்ணிக்கை தற்காலிகமானதுதான். இது மேலும் அதிகரிக்கக்கூடும். பயணிகளின் சரியான எண்ணிக்கையையும் தெரிந்துகொள்வது தற்போது கடினமாக உள்ளது. எனினும் மாயமானவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கிறது” என கூறினார்.
    ஜப்பானில் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ரெயில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. #Tokyo #MetroTrain #FreeFood #Crowding
    டோக்கியோ:

    ஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அங்கு உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக தலைநகர் டோக்கியோவில் உள்ள டோசாய் மெட்ரோ ரெயில் நிலையத்தில் காலை வேளையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் வருவதால் அந்த ரெயில் நிலையம் திக்குமுக்காடி போகிறது.

    இதற்கு தீர்வு காண ஜப்பான் மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிய உத்தியை கையாள முடிவு செய்திருக்கிறது. ஆதாவது டோசாய் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் தொடங்குவதற்கு முன்பாக வரக்கூடிய பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 2000 முதல் 3000 பயணிகளுக்கு இலவச உணவு வழங்க வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. #Tokyo #MetroTrain #FreeFood #Crowding 
    விமான நிலையங்களைப் போல் ரெயில் நிலையங்களிலும் பயணிகளை அனுமதிப்பதில் புதிய முறையை அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. #Railway #Airport #Security
    புதுடெல்லி:

    விமான நிலையங்களைப் போல் ரெயில் நிலையங்களிலும் பயணிகளை அனுமதிப்பதில் புதிய முறையை அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

    ரெயில்வே பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரல் அருண் குமார் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரயாக் ராஜ் (அலகாபாத்) நகரில் இந்த மாதம் தொடங்கும் கும்பமேளா விழாவையொட்டி ரெயில் நிலையத்துக்கு வருவோரிடம் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு சோதனை திட்டம் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. கர்நாடக மாநிலம் உப்பள்ளி ரெயில் நிலையத்தில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள 202 பெரிய ரெயில் நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

    இந்த திட்டத்தின்படி பயணிகள் செல்லும் ரெயில்கள் புறப்படுவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பாக அந்த பகுதியில் உள்ள நுழைவு வாயில் மூடப்படும்.

    மற்ற இடங்களில் உள்ள நுழைவு வாயில்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கையாள்வார்கள். மேலும் தானியங்கி மூடும் கதவுகள் வழியாக குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு பயணிகள் நுழைவது தடுக்கப்படும். எனவே பயணிகள் அனைவரும் 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பாகவே ரெயில் நிலையத்துக்கு வந்துவிடவேண்டும். ஒவ்வொரு நுழைவு பகுதிகளிலும் பயணிகளிடம் தோராய முறையில் பாதுகாப்பு சோதனை நடத்தப்படும்.

    2016-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த புதிய நடைமுறை 202 ரெயில் நிலையங்களில் செயல்படுத்தப்படும்.

    இத்திட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள், நுழைவு கட்டுப்பாடு, பயணிகள் மற்றும் உடைமைகள் சோதனை, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் போன்றவை அடங்கும். மேலும், பயணிகள் நுழைவு வாயில்கள் வழியாக வருவது முதல் அவர்கள் ரெயில்களில் ஏறும் வரை கண்காணிக்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.385 கோடி செலவு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரெயில் நிலைய வளாகத்துக்குள் பயணிகள் நுழையும்போதே இந்த சோதனை நடத்தப்பட்டுவிட்டால் பயணிகள் அதிகம் கூடும் நேரங்களில் ஏற்படும் நெருக்கடிகள் தவிர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைக்காக பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே செல்லவேண்டி இருப்பது போன்ற இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ரெயில்வே நிர்வாகம் தீவிரமாக உள்ளது.  #Railway #Airport #Security 
    சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #MedicalEmergency #ChennaiAirport
    சென்னை:

    துபாயில் இருந்து சிங்கப்பூர் நோக்கி தனியார் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. அந்த விமானம் இன்று காலை தமிழக வான் எல்லையில் பறந்தபோது, அதில் பயணித்த 48 வயது நிரம்பிய பயணி திடீரென நெஞ்சுவலியால் துடித்தார்.



    இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட விமானி, நிலைமையை எடுத்துக்கூறி விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டார்.

    சென்னை விமான நிலையத்தின் அனுமதி கிடைத்ததும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நெஞ்சு வலியால் துடித்த பயணிக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் மற்ற பயணிகளுடன் விமானம் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றது. #MedicalEmergency #ChennaiAirport
    துபாய் விமானத்தில் சென்னை பயணியிடம் ரூ.6½ லட்சம் அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு ஒரு விமானம் துபாய் செல்ல தயாராக இருந்தது.

    இந்தநிலையில் பயணி ஒருவர் அனுமதி இல்லாமல், வெளிநாட்டு பணம் கொண்டு செல்வதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் இந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகளிடம் சோதனை செய்தனர்.

    சோதனை நடந்தபோது, ஒருவருடைய நடவடிக்கை வித்தியாசமாக இருந்தது. அவரை தனியாக அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது அவருடைய பை மற்றும் உள்ளாடையில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் நோட்டுகளை மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய பணத்தில் அதன்மதிப்பு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

    அந்த பயணியின் பெயர் அப்துல்லா (38). ராமநாதபுரத்தை சேர்ந்தவர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    திருவாரூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ரெயில்வே போலீசார் வழங்கினர்.
    திருவாரூர்:

    திருவாரூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரெயில்வே போலீசார் துண்டு பிரசுரங்கள் நேற்று வழங்கினர். நிகழ்ச்சிக்கு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போலீசார் வழங்கினர். அப்போது ஒலி பெருக்கி மூலம் பாதுகாப்பான பயணம் குறித்து விழப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் கூறுகையில்,

    பயணிகள் உடைமைகளை பாதுகாப்பாக இருக்கையின் கீழ் வளையத்தில் பூட்டி வைக்க வேண்டும். ஜன்னல் அருகில் நகைகள் வெளியில் தெரியும்படி அமரக்கூடாது. கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது. இதுபற்றி ரெயில்வே போலீசாருக்கு, இலவச பாதுகாப்பு தொடர்பு எண்ணான 182-க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். ரெயில் பயணத்தின் போது அடையாளம் தெரியாதவர்கள் கொடுக்கும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட கூடாது என்று கூறினார். 
    போடி பஸ் நிலையத்தில் பயணிகளை மன நோயாளிகள் மிரட்டி வருகிறார்கள்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி நகராட்சி பஸ் நிலையத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இங்கு நிரந்தரமாக 15 மனநோயாளிகள் மற்றும் பிச்சைக்காரர்கள் தங்கி உள்ளனர். பயணிகள் நிற்கும், இளைப்பாறும் இடத்தில் அவர்கள் படுத்துக்கொண்டும், அதே இடத்தில் இயற்கை உபாதைகளை கழித்தும் வருகின்றனர்.

    இதனால் பயணிகள் நிற்கும் இடத்தில் துர்நாற்றம் வீசி மழைக்கு கூட ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மனநோயாளிகள் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளை கம்பால் துரத்தி தாக்கி வருகிறார்கள். இதனால் பஸ் நிலையத்துக்குள் வருவதற்கே பயணிகள் அச்சம் அடைந்து வருகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் மது அருந்தி அதே இடத்தில் வாந்தி எடுத்து அசுத்தம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுக்கு முன்பு பஸ் நிலையத்தில் மனநோயாளிகளாக சுற்றி திரிந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு அவர்கள் கர்ப்பம் அடைந்து உயிரிழந்தனர். மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்கவும், மனநோயாளிகள் மற்றும் பிச்சைக்காரர்களை கோடாங்கிபட்டியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ரெயில் நிலையத்துக்குள் சென்று பயணிகளை தங்களது வாகனத்தில் பயணிக்குமாறு அழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ரெயில் நிலையத்திற்குள் சென்று பயணிகளிடம் பேரம் பேசி தங்களது வாகனத்தில் பயணம் செய்யுமாறு அழைப்பதாகவும், இதனால் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் சில நாட்களாக புகார்கள் வருகின்றன. சமீபத்தில் இது தொடர்பாக ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கும், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் இதுகுறித்து தெற்கு ரெயில்வேயின் ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பிரேந்திரகுமார் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்டத்தில் பணியாற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர்கள் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ரெயில் நிலையங்களின் உள்ளே பயணிகள் அமரும், நடமாடும் இடங்களுக்கு சென்று ஆட்டோ டிரைவர்கள் சிலர் பயணிகளை தங்கள் ஆட்டோவில் பயணம் செய்ய வருமாறு அழைப்பு விடுப்பதாகவும், இதனால் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் ஏராளமான புகார்கள் வருகிறது. ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகள் நடமாடும் இடத்துக்கு சென்று, தங்கள் வாகனங்களில் பயணம் செய்யுமாறு அழைக்க அனுமதி இல்லை.

    அதாவது டாக்சி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நிறுத்தங்களில் தான் நிற்க வேண்டும். அதனையும் மீறி ரெயில் நிலையத்துக்குள் ரெயில் பயணிகளுக்கான இடத்துக்கு சென்று அவர்களை அழைத்தால் ரெயில்வே சட்டத்தில் உள்ள பிரிவுகளின்படி டாக்சி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

    எனவே இதுபோன்ற நடைமுறையை தடுப்பதற்கான நடவடிக்கையை எடுங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணியிடம் ரூ.4 லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபரை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருச்சி:

    கரூர் மாவட்டம், அரவக் குறிச்சி அருகே மாதிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீரங்கராயன் (வயது60). விவசாயியான இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருவதாக கூறப்படுகிறது. சீரங்கராயன் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கரூருக்கு குளிர்சாதன வசதியான பி.2 பெட்டியில் பயணம் செய்தார்.

    அந்த ரெயில், நேற்று அதிகாலை 5 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் 2-வது நடைமேடைக்கு வந்தது. அப்போது சீரங்கராயன் எழுந்து கழிவறைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது அவர் இருந்த இருக்கையில் வைத்திருந்த சூட்கேசை காணாது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த சூட்கேசில் ரூ.4 லட்சம் மற்றும் 2 ஏ.டி.எம்.கார்டுகள், பான் கார்டு ஆகியவை இருந்தன. மர்மநபர் யாரோ சூட்கேசை திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜங்ஷன் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சீரங்கராயன் புகார் அளித்தார். அதன்பேரில், ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, சீரங்கராயனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம். மூலம் ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஏ.டி.எம். கார்டு வைத்திருந்த அட்டையில் அதன் பின் பகுதியில் ரகசிய குறியீடு எண்ணையும் அவர் எழுதி வைத்திருந்துள்ளார். இதனால் அந்த கார்டு மூலம் மர்மநபர் ரூ.10 ஆயிரத்தை எடுத்திருக்கிறார்.

    சீரங்கராயன் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை வைத்து எந்த ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கப்பட்டது என்பதையும், அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபரின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் ரெயிலில் பயணியிடம் ரூ.4 லட்சம் திருட்டு சம்பவம் தொடர்பாக ஜங்ஷன் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இது குறித்து ரெயில்வே போலீசார் கூறுகையில், “சீரங்கராயன் சென்னையில் அவரது நண்பர் ஒருவரிடம் ரூ.4 லட்சம் கடனாக வாங்கி வந்ததாக தெரிவித்திருக்கிறார். அவர் பணம் கொண்டு வருவதை கவனித்த மர்மநபர் அதே ரெயிலில் பயணம் செய்து வந்தாரா? அல்லது அதே பெட்டியில் அவருடன் பயணம் செய்து வந்த நபர் கைவரிசையை காட்டினாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் அந்த பெட்டியில் பணியில் இருந்த ரெயில்வே ஊழியர் ஒருவரையும் பிடித்து விசாரிக்கப்படு கிறது” என்றனர். 
    ×