search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி"

    புதுவையில் மாமூல் கேட்டு மிரட்டும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை மற்றும் கடை வியாபாரிகள் தொழில் செய்ய முடியாமல் ரவுடிகளால் மாமூல் வசூலிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    தற்போது மாமூல் வேட்டைகளுக்கு சென்று ரவுடிகள் மாமூல் வசூலிப்பதால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதோடு, புதிய தொழில்கள் தொடங்கப்படுவதும் தடைபட்டு வருகிறது.

    ரவுடிகளின் ராஜ்ஜியமாக புதுவை மாறி வருவதை வில்லியனூர் சம்பவம் உறுதி செய்கிறது.

    இச்சம்பவத்தில் ஆளும் கட்சியினரே ஈடுபட்டு உள்ளனர். ஆனால், குற்றவாளிகள் திருந்தி நல்ல முறையில் வாழ்ந்து வரும் நிலையிலும் அவர்கள் மீது 144 சட்டத்தை போட்டு அவர்கள் பழிவாங்கப்பட்டு வருகின்றனர்.

    வணிகர்களிடமும், சிறு, சிறு தொழில் செய்வோரிடமும் மாமூல் வசூல் செய்யும் அனைவரின் மீதும் குண்டர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    புதுவை மாநிலத்தில் தற்போது தொழில்கள் நலிவடைந்த நிலையில் வணிகர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள மின்சார வரி, தொழில் வரி, குப்பை வரி என அனைத்துக்கும் அதிக அளவில் வரிவசூல் செய்வதோடு புதிதாக மாமூல் வசூல் என்ற வரியையும் வணிகர்களிடம் வசூலிப்பது நியாயமா? இந்த நிலை நீடித்தால் புதுவை மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும்.

    தற்போது காவல்துறையில் குறுக்கிடும் எந்த அரசியல் வாதியாக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சட்ட விரோதமான 3 நம்பர் ஆன்-லைன் லாட்டரி விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அவற்றை எல்லாம் தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் ரோந்து பணியை அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    சென்னை ஆதம்பாக்கத்தில் 17 வயது இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த ரவுடியை கைது செய்ய வேண்டும் என்று அப்பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் ராபின். ரவுடி. இவர் மீது ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 6 கொலை வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் ராபின் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை சந்தித்து அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.

    சம்பவத்தன்று இளம்பெண் வெளியே சென்று இருப்பதை அறிந்த ராபின் பின் தொடர்ந்து சென்றார். திடீரென அவர் இளம்பெண்ணை மிரட்டி கடத்தி சென்றார்.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மாந்தோப்பில் வைத்து அவரை கற்பழித்தார். பின்னர் இளம்பெண்ணை துரைப்பாக்கத்தில் விட்டு விட்டு ராபின் தப்பி ஓடி விட்டார்.

    வீட்டுக்கு திரும்பிய இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி மடிப்பாக்கத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இளம்பெண்ணை ராபின் கடத்தி சென்றபோது மாந்தோப்பில் அவரது நண்பர்கள் 4 பேர் இருந்ததாக தெரிகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூறும்போது, “உறவுப் பெண்ணுக்கு நடந்த கொடுமை குறித்து மடிப்பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தோம். ஆனால் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி புகாரை வாங்க மறுக்கிறார். மேலும் புகாரை வாபஸ் பெறக்கோரி எங்களை மிரட்டுகிறார்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடி ராபினை கைது செய்ய வேண்டும் என்றனர்.
    காஞ்சீபுரம் அருகே நள்ளிரவில் ரவுடியை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மடம் தெருவைச் சேர்ந்தவர் தேவா (25).

    காஞ்சீபுரம் பகுதிகளில் தேவா அடிக்கடி தகராறுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வழக்குகள் உள்ளது.

    நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இந்திரா பெட்ரோல் பின்புறம் இவரை மர்மநபர்கள் அரிவாளால் சராமாரியாக வெட்டி தப்பி சென்று விட்டனர். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் ரவுடி தேவாவை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சம்பவம் குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு அவருடைய நண்பர்கள் சதீஷ், துரைபாபு, பாரதி காரணமாக இருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    கரூர் அருகே பணம் கேட்டு மிரட்டிய ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பேக்கரி உரிமையாளர் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை:

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை செவனப்பாறை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 37). நேற்றிரவு இவர் அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் கூட்டுறவு சேமிப்பு கிடங்கு அருகே தலையில் அரிவாள் வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

    உடனே அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மகேஸ்வரன் இறந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் கரூர் ஏ.டி.எஸ்.பி. பாஸ்கரன், குளித்தலை டி.எஸ்.பி. சுகுமார், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மகேஸ்வரனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    மேலும் மகேஸ்வரன் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது.

    மகேஸ்வரன் மீது கர்நாடகா மாநிலம் மற்றும் நாமக்கல், சேலம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. வெளியூர், வெளி மாநிலங்களுக்கு அவ்வப்போது செல்லும் மகேஸ்வரன் அங்கு திருட்டில் ஈடுபட்டு விட்டு பின்னர் ஊருக்கு திரும்பி வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த சம்பவங்களில் அடிக்கடி கைதாகி ஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.

    இந்தநிலையில் கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை சரவணபுரத்தை சேர்ந்த பிச்சை (33) என்பவர் அய்யர்மலை உள்ளிட்ட 4 இடங்களில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகேஸ்வரன் ரூ.1.50 லட்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.

    ஆனால் அவர் ரூ.10 ஆயிரம் மட்டும் தருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் மகேஸ்வரன் ரூ.1.50 லட்சத்தை தரவேண்டும் என்றும், இல்லையென்றால் தொழில் செய்ய விட மாட்டேன் என்று மிரட்டியுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மகேஸ்வரனை தொடர்பு கொண்டு பேசிய பிச்சை, ரூ.1.50 லட்சம் பணம் தருவதாகவும், செவனப்பாறை நுகர்பொருள் கூட்டுறவு சேமிப்பு கிடங்கு அருகே வந்து பணத்தை வாங்கி கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு மகேஸ்வரன் சென்றுள்ளார். அதன் பிறகே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இதனால் பண பிரச்சினையில் மகேஸ்வரனுக்கும், பிச்சைக்கும் ஏற்பட்ட தகராறில் பிச்சை அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மகேஸ்வரனை அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக பிச்சை உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மகேஸ்வரன் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    கொலை செய்யப்பட்ட மகேஸ்வரனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும், யஷ்வந்த் என்ற மகனும் உள்ளனர். பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் குளித்தலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    திருமங்கலம் அருகே ரவுடியை அரிவாளால் வெட்டிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை நரிமேடு மருது பாண்டியன் நகரை சேர்ந்தவர் கற்பூர பாண்டியன் (வயது 24). பிரபல ரவுடி. இவர் கடந்த ஆண்டு தல்லா குளத்தில் நண்பர்களுடன் சேர்ந்து வாலிபர் ஒருவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இதையடுத்து கற்பூர பாண்டியன் மதுரையை காலிசெய்துவிட்டு திருமங்கலம் அருகில் உள்ள மருதங்குடி கிராமத்தில் வசித்து வருகிறார். அங்கிருந்து தினமும் மதுரை வந்து தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.

    இந்த நிலையில் கற்பூர பாண்டியன் சம்பவத்தன்று நண்பர் அய்யனாருடன் மோட்டார் சைக்கிளில் தல்லாகுளம் சென்று மருதங்குடிக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

    அப்போது இலந்தை குளம் விலக்கில் வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் கற்பூர பாண்டியனை வெட்டியது.

    படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த கற்பூர பாண்டியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கற்பூர பாண்டியனை வெட்டிய திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையை சேர்ந்த சுடலை முத்து, மதுரை ஜெய்ஹிந்த் புரம் ஜெகன் (33), தினேஷ் குமார் (23), சங்கர் (23), லோகேஸ் கண்ணன் (23), தனசேகர் (21) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரவுடிகளுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கற்பூர பாண்டியனை கொல்ல முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கற்பூர பாண்டியனிடமும் கொலை முயற்சி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியாங்குப்பத்தில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த ரவுடியை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்தபோது காணாமல் போனார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அதில், தனது மகளை யாரோ கடத்தி சென்று விட்டனர் என்று கூறி இருந்தனர்.

    இந்த புகாரை அடுத்து போலீசார் கடத்தல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த சிறுமியை கடத்தி சென்றது அவரது உறவினரான ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ரமணா என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சிறுமி தானாகவே வீட்டுக்கு வந்தார். இதை அறிந்த அரியாங்குப்பம் போலீசார் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக எல்லைப் பிள்ளைச்சாவடியில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது டாக்டர்கள் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். அதில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து டாக்டர்கள் குழந்தைகள் நலக்குழு ராஜேந்திரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில், சிறுமியை ரமணா கர்ப்பமாக்கியது தெரிய வந்தது.

    இதையடுத்து குழந்தைகள் நலக்குழுவினர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.

    இதன் மீது விசாரணை நடத்திய போலீசார் கடத்தல் வழக்கை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் (போக்சோ) வழக்காக மாற்றி ரமணவை தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரமணா ரவுடியாக செயல்பட்டு வந்தார். அவர் மீது 2 கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    நொளம்பூரில் ஜாமீனில் வந்த ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    நொளம்பூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவன் சதீஷ் (30). ரவுடி. இவன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த மாதம் கோயம்பேட்டில் ஒருவரை வெட்டி வழிப்பறி செய்த வழக்கில் சதீசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவன் ஜாமீனில் வெளியே வந்தான்.

    நேற்று இரவு சதீஷ் நொளம்பூர், பாஞ்சாலி அம்மன் நகர் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் நண்பர்களுடன் மது அருந்தினான். அப்போது ஆட்டோவில் 5-க்கும் மேற்பட்ட மர்ம வாலிபர்கள் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர்.

    அவர்கள் சதீசை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் இருந்த நண்பர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    பலத்த காயம் அடைந்த சதீஷ் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். உயிருக்கு போராடிய சதீசை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக இறந்தார்.

    இறப்பதற்கு முன்பு சதீஷ் நொளம்பூரை சேர்ந்த ரவுடி ஜெயசீலன் தன்னை வெட்டியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவான ஜெயசீலனை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் சிக்கினால்தான் உடன் வந்த கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வரும்.

    கொலையுண்ட சதீஷ் மீது 2014-ம் ஆண்டு மதுரவாயலில் நடந்த ஒரு இரட்டை கொலை வழக்கு உள்பட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சில மாதங்களுக்கு முன்னர் பூந்தமல்லியில் அன்பழகன் என்ற போலீஸ்காரரை வெட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    மதுரையில் நேற்று இரவு மர்ம நபர்களால் ரவுடி மற்றும் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை செல்லூர் வைத்தியநாதபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது25), பிரபல ரவுடி. இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில்தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்.

    அசோக்குமார் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் வந்தனர். அவர்கள் யார் என்று பெற்றோர் கேட்டபோது, தெரிந்தவர்கள்தான் பேசி விட்டு வருகிறேன் என்று அசோக்குமார் வெளியே சென்றார்.

    சிறிது நேரத்தில் அவரது அலறல் சத்தம் கேட்டது. பெற்றோர் சென்று பார்த்த போது அசோக்குமார் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து செல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அசோக்குமாருக்கும், வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த மற்றொரு ரவுடி கும்பலுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்களில் யாராவது அசோக்குமாரை கொன்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்லூர் அருள்தாஸ்புரத்தில் நேற்று நள்ளிரவில் மற்றொரு வாலிபரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    அவரது பெயர் ஹரிராஜா (26). செல்லூர் பாக்கியநாதபுரம் அனுமார் கோவில் சந்து பகுதியைச் சேர்ந்த பெரியபாண்டியின் மகன் ஆவார்.

    பெரியபாண்டி பாக்கிய நாதபுரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். ஹரிராஜா அவருக்கு உதவியாக இருந்து வந்தார்.

    நேற்று இரவு வெளியே போய் வருவதாக கூறி சென்ற ஹரிராஜா அருள் தாஸ்புரம் தண்ணீர் தொட்டி அருகே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    மதுரை சிறைத்துறை எஸ்.பி.க்கு மிரட்டல் விடுத்தது உண்மை என்றால் ரவுடி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். #TNMinister #CVeShanmugam
    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு சென்னை மாகாணம் என்று முன்பு அழைக்கப்பட்டது. அண்ணாவின் சீரிய முயற்சியால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது.

    இதைபோல் சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரையும் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் மதுரையில் சிறைத்துறை பெண் எஸ்.பி.யை ரவுடி மிரட்டி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு அமைச்சர் பதில் அளிக்கும்போது, இந்த பிரச்சனை பற்றி எனக்கு தெரியாது. போலீஸ் சூப்பிரண்டுக்கு ரவுடி மிரட்டல் விடுத்தது உண்மை என்றால் தமிழகத்தில் உள்ள ரவுடிகள் அனைவருக்கும் எச்சரிக்கை விடும் விதமாக பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #TNMinister #CVeShanmugam
    சேலம் மாநகரில் 37 ரவுடிகள் உள்பட 57 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ரவுடிகள் நின்று கொண்டு ரோட்டில் நடந்து செல்பவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து நகை பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டனர்.

    சேலம் மாநகரில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்தன. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ரவுடிகளை ஒடுக்க வேண்டும் என்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம், பொதுமக்கள் பல்வேறு புகார்களை அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர் ரவுடிகளை பிடிக்க கோரி துணை கமிஷனர்கள் தங்கதுரை, சுப்புலட்சுமி ஆகியோருக்கு உத்தரவிட்டார். அதன்படி துணை கமிஷனர்கள் உத்தரவின் பேரில், அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய தனிக்குழுவினர் நேற்று முன்தினம் இரவு ரவுடிகளை பிடிக்க சேலத்தில் அதிரடி வேட்டையில் இறங்கினர்.

    அதன்படி அன்னதானப்பட்டி போலீசார் நடத்திய வேட்டையில் வள்ளுவர் நகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜவகர் (வயது42), மணியனூர் காந்திநகரை சேர்ந்த ஜெரால்டு (27), அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் (44), வைத்தீஸ்வரன் ஆகிய பிரபல ரவுடிகளை கைது செய்தனர். அதேபோன்று கிச்சிபாளையம் போலீசார் நடத்திய சோதனையில் அந்த பகுதியை சேர்ந்த செந்தில், பிரபாகரன், சரவணன், திருநாவுக்கரசு, தமிழ்செல்வன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    அதேபோன்று அஸ்தம்பட்டி போலீசாரின் சோதனையில் அந்த பகுதியை சேர்ந்த மகுடீஸ்வரன் என்பவரை கைது செய்தனர். சூரமங்கலம் போலீசாரின் சோதனையில் புருசோத்தமன், செல்வன் என மாநகர் பகுதி முழுவதும் நடந்த அதிரடி வேட்டையில் 37 ரவுடிகள் உள்பட 57 பேரை போலீசார் கைது செய்தனர். 
    பல்வேறு குற்றவழக்குகளில் சரணடைந்த ரவுடி பினு, ஜாமீனில் வெளிவந்த பின்னர் தலைமறைவானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #RowdiBinu #Abscond
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வலம்வந்த பிரபல ரவுடி பினு கடந்த சில வருடங்களாக தலைமறைவாக இருந்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம் பினுவின் பிறந்தநாளை கொண்டாட அவரது தம்பி மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த கொண்டாட்டத்தில் நகரத்தின் முக்கிய ரவுடிகள் பலர் பங்கேற்றனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அதிரடியாக அப்பகுதிக்கு சென்று ரவுடிகளை கைது செய்தனர். ஆனால் அங்கிருந்து பினு உள்ளிட்ட சிலர் மட்டும் தப்பிச் சென்றார். பின்னர் அவர் தாமாக வந்து சரணடைந்தார்.

    இந்நிலையில், கடந்த 23-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் ரவுடி பினுவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி, தினமும் மாங்காடு காவல்நிலையத்தில் கையெழுத்து போட உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், ஜாமீனில் வெளியான நாள்முதல் ரவுடி பினு கையெழுத்திட வரவில்லை எனவும், பினு தலைமறைவாகி விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #RowdiBinu #Abscond
    போலீஸ்காரரை தாக்கிய ரவுடியை அமைச்சர் சந்தித்து ஆறுதல் கூறியது கடும் கண்டனத்துக்குரியது என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘போலீசார் பணி சுமையினால், மன உளைச்சலுக்கு ஆளாகி, பலர் தற்கொலை செய்கின்றனர். எனவே, அவர்களது பணி நேரத்தை நிர்ணயம் செய்ய ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்க வேண்டும்’ என்று 2012-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

    ஆனால், இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இந்தநிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ஆணையம் அமைக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், மனுதாரர் வக்கீல் எம்.புருஷோத்தமன் ஆஜராகி வாதிட்டனர்.

    அப்போது வக்கீல் யானை ராஜேந்திரன் ஆஜராகி, இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். பின்னர், ‘ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக டி.ஜி.பி. கூறுவது சுத்தப்பொய். ஆயுதப்படை போலீசார் மட்டுமல்லாமல், போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசாரையும் ஆர்டர்லியாக உயர் அதிகாரிகள் வைத்துக்கொள்கின்றனர். இதனால், அந்த ஆர்டர்லி போலீசாருக்கு வழங்கப்படும் கோடிக்கணக்கான சம்பளம் வீணாகிறது’ என்று அவர் வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதி, ‘போலீசாரை காவல் பணிக்கு மட்டும் தான் பயன்படுத்தவேண்டும். ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தாலும், இன்னும் போலீசார் பல்வேறு மாற்றுப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுத்தான் வருகின்றனர். எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் போலீசாரை தவறாகத்தான் பயன்படுத்துகின்றனர். ராமநாதபுரத்தில் ஒரு போலீஸ்காரரை தாக்கிய ரவுடியை அமைச்சர் ஒருவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியிருக்கிறார். இவரது செயல் கடும் கண்டனத்துக்குரியது’ என்று கருத்து தெரிவித்தார்.

    பின்னர், ‘போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் காவல் பணிக்காக போலீசாரை பயன்படுத்துவது தவறில்லை. ஆனால், துணி துவைப்பதற்கும், காய்கறி வாங்குவதற்கும், சமையல் செய்வதற்கும் பயன்படுத்துவதுதான் தவறு. ஆனால், வேலை செய்யாமல் இருப்பதற்காக ஆர்டர்லி வேலையை விரும்பும் போலீசாரும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன்’ என்று நீதிபதி கூறினார். #tamilnews
    ×