search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வறட்சி"

    காரிமங்கலம் பாலக்கோடு பகுதியில் பருவமழை குறைவால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாங்காய் மகசூல் குறைவால், விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காரிமங்கலம்:

    பாலக்கோடு, காரிமங்கலம்,  அனுமந்தபுரம், கும்பாரஹள்ளி, மாரண்டஅள்ளி, பெல்ரம் பட்டி, ஜக்கசமுத்திரம், குண்டாங்காடு போன்ற பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்கோவா, பெங்களுரா, செந்துரா, நீலம், பங்கன்பள்ளி, சக்கரைகுட்டி, பீத்தர் என 20-க்கும் மேற்பட்ட ரகங்களில் மாங்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மாங்காய் உள்ளூர் தேவைபோக வெளிமாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் மாம்பழம் சீசன் தொடங்கிய நிலையில் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் மாசெடிகளை காப்பாற்ற ஒரு டிராக்டர் தண்ணீர் 900 ரூபாய் கொடுத்து வாங்கி ஊற்றியும் போதிய மகசூல் கிடைக்கவில்லை. மேலும் ஏக்கர் ஒன்றுக்கு கடந்த ஆண்டு 10 முதல் 15 டன் கிடைத்த மாங்காய் தற்போது 2 டன்னுக்கும் குறைவாகவே கிடைக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே, அரசு மாங்காய் விவசாயிகளுக்கு வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    நாட்டின் பல பகுதிகள் கடந்த ஆண்டில் வறட்சியாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் பருவமழை நன்றாகவும், பரவலாகவும் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #IMD #rainfallin2019 #2019monsoon #monsoonseason
    புதுடெல்லி:

    புவி வெப்பமயமாதலின் விளைவாக உலகம் முழுவதும் பருவநிலைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பல நாடுகளில் பெருமழையும், சில நாடுகளில் மழை பொய்த்தும் மக்களை இன்னலுக்கு  உள்ளாக்கி வருகிறது.

    சமீபகாலமாக, இந்தியாவின் சில பகுதிகளிலும் மழைக்காலங்களில் அளவுக்கதிகமான மழைப்பொழிவால் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் பல கோடி ஏக்கர் அளவிலான பயிர்கள் பாழாகிப் போகின்றன. அதேவேளையில், பல பகுதிகளில் எதிர்பார்த்த அளவில் பருவமழை பெய்வதில்லை.

    இதன் விளைவாக இங்கு வானம் பார்த்த பூமியாக கிடக்கும் பல கோடி ஏக்கர் அளவிலான விளைநிலங்கள் போதிய விளைச்சலை பெற முடியாமல் பயிர்கள் வாடியும் கருகியும் போகின்றன. கோடைக்காலத்தில் அடிக்கும் கடுமையான வெயிலால் நிலத்தடி நீராதாரமும் வற்றிப்போவதால் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் தாகத்தால் பரிதவிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.


    இதனால் மண் வளத்தையும் வானத்தில் இருந்து கிடைக்கும் மழை வளத்தையும் மட்டுமே நம்பி வாழும் நம் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

    பயிர் செய்வதற்காக வங்கிகளில் வாங்கிய கடன்களையும், அறுவடைக்காலம் வரை குடும்பத்தை பராமரிக்க வாங்கிய இதர வெளிக்கடன்களையும் செலுத்த முடியாமல் கடன் நெருக்கடிக்கும் உள்ளாகின்றனர். இவர்களில் பலர் கடன்காரர்களின் தொல்லையை சமாளிக்க முடியாமலும் தொடர்ந்து குடும்பத்தை நல்ல முறையில் நிர்வகிக்க இயலாத விரக்தியிலும் மனமொடிந்து தற்கொலை செய்து கொள்வது நமது நாட்டில் தொடர்கதையாகவும் தீராத துயரமாகவும் இருந்து வருகிறது.

    இந்நிலையில், வேதனையில் வாடும் நம் நாட்டின் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக ‘இந்த ஆண்டில் பருவமழை நன்றாகவும், பரவலாகவும் இருக்கும்' என்னும் மகிழ்ச்சியான தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

    இதன் மூலம் இந்த ஆண்டில் சம்பா சாகுபடி (ஆடிப்பட்டம்) செய்யும் விவசாயிகள் நல்ல பலனை அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #IMD #rainfallin2019 #2019monsoon #monsoonseason
    திண்டுக்கல்லில் எலுமிச்சை வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. ஒரு எலுமிச்சை ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனையாகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யம்பாளையம், சிறுமலை, வெள்ளோடு, கொடைக் கானல் கீழ்மலை பகுதியில் அதிக அளவு எலுமிச்சை விளைவிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து திண்டுக்கல் சிறுமலை செட் பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது.

    இங்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. எலுமிச்சையின் தரத்தால் வெளியூர் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

    கடந்த சில வருடங்களாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை போதிய அளவு பெய்ய வில்லை. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    வறட்சி காரணமாக எலுமிச்சை விளைச்சலும் குறைந்துள்ளது. தற்போது வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை விரும்பி அருந்துகின்றனர். இதனால் எலுமிச்சையின் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால் விளைச்சல் இல்லாததால் குறைந்த அளவே எலுமிச்சைகள் சிறுமலை செட் பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு 50 கிலோ கொண்ட சிப்பம் ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.6 ஆயிரம் வரை விலை கேட்கப்படுகிறது. சில்லரையாக ஒரு எலுமிச்சை ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனையாகிறது. ஆனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை.

    அய்யலூர் அருகே குடிநீருக்காக போராட்டத்தில் குதித்த கிராம மக்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

    வடமதுரை:

    அய்யலூர் அருகே மோர்பட்டி, கோப்பம்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும், ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல் நிலை தொட்டியில் தேக்கியும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குடிநீர் சீராக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் தொடர்ந்து குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமதுரை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களை சமரசம் செய்தனர்.

    தற்போது மோர்பட்டி - சித்துவார்பட்டி சாலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. பணியின் போது குடிநீர் குழாயை உடைத்ததால் கோப்பம்பட்டி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை.

    இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட தயாரானார்கள். சம்பவம் குறித்து அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாக்டர் பரமசிவம் எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் பேசி குடிநீர் குழாயை விரைவில் சீரமைக்கப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் போதிய மழையில்லாததால் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாழ்க விவசாயி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    விருதுநகர்:

    போதிய மழையில்லாததால் விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.10ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும். காப்பீடு செய்த அனைத்து பயிர்களுக்கும் பாரபட்சமில்லாமல் 100 சதவீத இழப்பீடு வழங்கவேண்டும். விவசாயிகளுக்கு உற்பத்தி செலவில் இருந்து கூடுதலாக 50 சதவீத ஆதாயவிலையை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வாழ்க விவசாயி இயக்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி வாழ்க விவசாயி இயக்கத்தின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் காளிராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைபாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் வெம்பகோட்டை யூனியன் தலைவர் பெருமாள்சாமி, மாநில குழு உறுப்பினர் ராஜசேகர், வக்கீல் ராகவன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
    வெள்ளம், வறட்சி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதித்த 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.7,214 கோடி நிவாரணம் வழங்குகிறது. #NaturalCalamity #HomeMinistry
    புதுடெல்லி:

    வெள்ளம், வறட்சி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதித்த 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.7,214 கோடி நிவாரணம் வழங்குகிறது.

    மாநிலங்களின் கோரிக்கை குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர் அதிகாரக்குழு நேற்று கூடி, பரிசீலித்து கீழ்க்கண்டவாறு நிவாரண நிதி வழங்க அனுமதி அளித்தது.

    * வறட்சி பாதித்த மராட்டியத்துக்கு ரூ.4,714 கோடியே 28 லட்சம், கர்நாடகத்துக்கு ரூ.949 கோடியே 49 லட்சம், ஆந்திராவுக்கு ரூ.900 கோடியே 40 லட்சம், குஜராத்துக்கு ரூ.127 கோடியே 60 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

    * மழை, வெள்ளம், நிலச்சரிவால் நிலை குலைந்து போன இமாசல பிரதேசத்துக்கு ரூ.317 கோடியே 44 லட்சம் வழங்கப்படும்.

    * மழை, வெள்ளத்தால் சேதங்களை சந்தித்த உத்தரபிரதேசத்துக்கு ரூ.191 கோடியே 73 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

    * புயலால் நிலைகுலைந்து போன புதுச்சேரிக்கு ரூ.13 கோடியே 9 லட்சம் நிவாரணம் தரப்படுகிறது.

    இந்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. #NaturalCalamity #HomeMinistry 
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சியால் கருகும் மா, தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி தலைமையிலான விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

    தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள எண்ணேகொல்புதூர் தடுப்பணையிலிருந்து இடது மற்றும் வலது புறக்கால்வாய் அமைத்து ஏரிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். ஏற்கனவே, தமிழக அரசு அறிவித்துள்ள நீர்பாசன திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். பருவமழை இல்லாமல், கிருஷ்ணகிரி உட்பட 20 மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. 

    மா மரங்கள், தென்னை, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் கருகி உள்ளதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சி மாவட்டமாக அறிவித்து, தென்னை, மாமரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு மின்மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல, ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

    இதேபோல், தமிழக அரசும் மின்மோட்டார் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களையும் ரத்து செய்து வேண்டும். இம்மாவட்டத்தில் யானை கள், காட்டுப்பன்றி கள் விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே, காட்டுப்பன்றிகளை சுட விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் ஸ்ரீராம்ரெட்டி, செயலாளர் சென்னையநாயுடு, ஜெயராமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
    தண்ணீர் இல்லாமல் விசுவக்குடி அணை வறண்டு கிடப்பதால் விவசாயிகளையும், பொதுமக்களையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவகுடி கல்லாறு ஓடையின் குறுக்கே பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார துறையின் மூலமாக செம்மலை, பச்சைமலை ஆகிய மலைகளின் இடையே மலைப்பகுதியில் பெய்யும் மழை நீரை வீணாகாமல் தடுத்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் ரூ.36.37 கோடி மதிப்பீட்டில் 36 அடி உயரம் மற்றும் 665 மீட்டர் நீளமுள்ள கரையுடன் கூடிய புதிய விசுவகுடி அணை 2015-ம் ஆண்டு கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இது பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரே அணையாகும். 

    இந்த அணையானது 30.67 மில்லியன் கனஅடி நீரை 10.30 மீட்டர் ஆழத்திற்கு சேமிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணை திறக்கப்பட்ட 2015 -ம் ஆண்டு அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு கடந்த ஆண்டு பெய்த பருவ மழையின் போது 22 அடி உயரம் மட்டுமே தண்ணீர் நிரம்பியது. அதன் பிறகு கடந்த பல மாதங்களாக போதிய பருவ மழை பெய்யாததால் அணையிலிருந்த தண்ணீர் முழுவதுமாக வற்றி தற்போது வறண்டு காணப்படுகிறது. 

     மேலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் கிணற்று பாசனம் மூலம் பயிர் செய்யக்கூடிய விவசாயிகளும் தண்ணீர் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது மானாவாரி நிலத்தில் பருத்தி, மக்காச்சோளம், ஆமணக்கு, துவரை போன்ற விதைகளை விதைப்பதற்காக பலர் தங்களது நிலங்களை உழவு செய்து தயார் நிலையில் மழைக்காக காத்துக் கிடக்கின்றனர்.

    அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், காவிரி கரையோர மாவட்டங்களிலும் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் நிலையில், பெரம்பலூரில் அணை, ஏரி, மற்றும் குளங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடப்பது விவசாயிகளையும், பொதுமக்களையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
    போச்சம்பள்ளி பகுதியில் போதிய மழை இல்லாததால் வறட்சியின் பிடியில் மா மரங்கள் காய்ந்து கருகும் நிலையில் உள்ளன.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் வானம் பார்த்த பூமியாக நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் பல்வேறு வகையான பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக "மா'' சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்ட அளவில் மா விளைச்சளில் போச்சம்பள்ளி தாலுக்கா 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகாவில் மழை பொய்தாலும் கேரளாவில் மழை புரட்டி போட்டது. ஆனால்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  உள்ள போச்சம்பள்ளி, வெப்பாலம்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் மா சாகுபடி செய்துள்ளனர். தற்போது, இந்த பகுதிகளில் மழை இல்லாததால் மா மரங்கள் காய்ந்து கருகும் நிலையில்  உருவாகியுள்ளது. 

    இந்த நிலையில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி மா மரங்களை காப்பாற்றினாலும் சில வாராங்களில் மீண்டும் தண்ணீர் இல்லாமல் மா மரங்கள் காய்ந்து விடுகிறது. மேலும், மற்ற பயிர்களை காப்பாற்ற, பாலேகுளி ஏரியில் இருந்து  கூடுதலாக மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் நிரம்பினால், ஆண்டு முழுவதும் தண்ணீருக்கு தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும். இதன் மூலம் விவசாயம் செழிக்கும். 

    உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதற்கு தனி கவனம் செலுத்தி கால்வாய்களை சீரமைத்து போச்சம்பள்ளி பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ரஜினியும், கமலும் இணைந்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்காது, நிச்சயம் வறட்சி தான் ஏற்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #ministerjayakumar #kamal #rajinikanth
    சென்னை:

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கவர்னரின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுகிறது. குறிப்பாக தி.மு.க. செயல்தலைவர் நிறைய விமர்சனங்களை முன்வைக்கிறார். கவர்னர் விவகாரத்தில், மு.க.ஸ்டாலின் மாற்றி மாற்றி கருத்துகள் சொல்லி வருகிறார். தமிழக பொறுப்பு கவர்னராக வித்யாசாகர்ராவ் இருந்த சமயத்தில், ‘நிலையான கவர்னர் தேவை’ என்று கருத்து கூறினார். தற்போது நிலையான கவர்னராக பன்வாரிலால் புரோகித் இருந்தும், அவரின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறிவருகிறார்.

    கவர்னர் என்பவர் நிர்வாகத்தின் தலைவர் ஆவார். அதன்படி தான் தனது கடமையை ஆற்றுகிறார். அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி தான் கவர்னர் செயல்படுகிறார். அதே அரசியலைப்பு சட்டத்துக்குட்பட்டு தான் அரசும் செயல்படுகிறது.

    ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இணைந்தால் புரட்சி ஏற்படும் என்று நடிகர் விஷால் கருத்து தெரிவித்திருக்கிறார். நான் ஒன்றுமட்டும் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். ரஜினியும், கமலும் இணைந்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்காது, நிச்சயம் வறட்சி தான் ஏற்படும்.

    தமிழகத்தில் நடப்பது அ.தி.மு.க. எனும் மக்களாட்சி. இந்த ஆட்சி என்றும் தொடரும். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. தான் வெற்றிபெறும். யார் ஒன்று சேர்ந்தாலும் தமிழகத்தில் எதுவும் நடக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerjayakumar #kamal #rajinikanth
    திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியை போக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.
    திருவண்ணாமலை:

    மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக்கோரியும், நதிநீர் இணைப்பை அமைக்கக் கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் தமிழகத்தில் 100 நாள் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று அய்யாக்கண்ணு திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர், சங்க நிர்வாகிகளுடன் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல்லுக்கு ரூ.16.50 அரசு விலை நிர்ணயம் செய்து உள்ளது. ஆனால் நெல்லுக்கு விலை குறைத்து வழங்கப்படுகிறது. சில இடங்களில் நெல் விற்பனை செய்ய 40 கிலோ மூட்டைக்கு ரூ.50 கமிஷன் கேட்கிறார்கள். கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்கவும், காப்பீடு, நஷ்ட ஈடு கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியை போக்க தடுப்பணைகள் கட்ட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றையும், செய்யாற்றையும் இணைத்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும்.

    கார்ப்பரேட் கம்பெனிகள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்த உணவு பொருட்களை மக்களுக்கு கொடுத்து பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே, மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும்.

    மத்திய அரசு அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆறுகளில் தடுப்பணைகள் கட்டவும், ஏரி, குளம், வரத்து கால்வாய்கள் அமைக்கவும், சீமை கருவேல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு நதிகளை தேசிய மயமாக்கி அரபிக் கடலிலும், வங்காள விரிகுடாவிலும் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தென்னகத்திற்கு குறிப்பாக தமிழகத்திற்கு திருப்பி விட வேண்டும்.

    விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகை உடனே வழங்க வேண்டும். இன்னும் 21 நாட்களில் சென்னை செல்ல உள்ளோம். பின்னர் முதல்- அமைச்சரை சந்திக்க உள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவரது வீட்டில் அல்லது அலுவலகத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை அங்கேயே இருந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    இது சம்பந்தமாக உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிப்பதில் மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    2016-2017-ம் ஆண்டில், வறட்சியால் பயிர் பாதிப்பு அடைந்த விவசாயிகளுக்கு இதுவரை ரூ.3,265 கோடியே 39 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பயிர் இழப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் காரீப் 2016 முதல், சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    2016-17-ம் ஆண்டு பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து பணிகளும் காலத்தே நிறைவேற்ற தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளால் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை விரைந்து கணிக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24.4.2017 அன்று தொடங்கி வைத்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் விரைவில் இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    2016-17ம் ஆண்டில் மத்திய அரசால் சம்பா நெற்பயிரை பதிவு செய்வதற்கு நீட்டிக்கப்பட்ட காலத்தில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையையும், காரீப் 2016 மற்றும் ரபி 2016-17-ம் ஆண்டில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையையும் வழங்க காப்பீட்டு நிறுவனங்களை அறிவுறுத்தும்படி பிரதமருக்கு, முதல்-அமைச்சர் கடிதம் எழுதினார்.


    அதைத் தொடர்ந்து இந்திய வேளாண் காப்பீட்டுக்கழகம் நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு ரூ.103.15 கோடி வழங்கியுள்ளது. மேலும், நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கும்படி மத்திய அரசின் அறிவுரைக்கிணங்க மற்ற காப்பீட்டு நிறுவனங்களான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பொது காப்பீட்டுக் கழகம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்டு பொதுக் காப்பீட்டுக் கழகம் ஆகிய நிறுவனங்கள் தற்போது இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

    அதன் அடிப்படையில், 2016-2017-ம் ஆண்டில், வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை ரூ.3,265 கோடியே 39 லட்சம் இழப்பீட்டுத் தொகை பயிர் காப்பீட்டு நிறுவனங்களால் ஒப்பளிக்கப்பட்டு 10 லட்சத்து 62 ஆயிரத்து 495 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    வறட்சியால் பாதிக்கப்பட்ட இதர தென்மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடுதான் மிக அதிகபட்சமான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தந்து இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.

    முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, காப்பீட்டு நிறுவனங்களால் இன்னும் ஒப்புதல் வழங்கப்படவேண்டிய ரூ.453 கோடி இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவாக ஒப்புதல் வழங்குவதற்கு காப்பீட்டு நிறுவனங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்த நடவடிக்கைகள் அனைத்தும், விவசாயிகளின் அரணாக இந்த அரசு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×