search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106977"

    • அலங்காநல்லூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • கிராமத்திற்கு பாதை ஒதுக்கி நடந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும்

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு செல்ல பாதை வசதி வேண்டி பொதுமக்கள் அலங்காநல்லூர்-தனிச்சியம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சேது சீனிவாசன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுப்பராயலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், திருவள்ளுவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராமத்திற்கு பாதை ஒதுக்கி நடந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • தனியார் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் மறியல் செய்தனர்.
    • வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதுவரை கல்லூரி வரக்கூடாது எனக்கூறி மாணவர்களை அனுப்பி வைத்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து 2020-ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இந்த கல்லூரியில் 2021-22 கல்வி ஆண்டில் பி.எட். படிப்பில் 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அந்த மாணவர்களுக்கு இதுவரை பருவ தேர்வுகள் நடத்தப்படவில்லை. மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கேட்டு கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, கல்லூரி நிர்வாகத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் தேர்வு எழுத அனுமதி கேட்டு கல்லூரி நுழைவு வாயில் முன்புள்ள வத்திராயிருப்பு-கிருஷ்ணன்கோவில் சாலையில் மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் முத்துமாரி, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜூன் 5-ந் தேதி கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வருகிறது. வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதுவரை கல்லூரி வரக்கூடாது எனக்கூறி மாணவர்களை அனுப்பி வைத்தனர்.

    • பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன்

    புதுக்கோட்டை:

    ஆவுடையார்கோவில் தாலுகா புத்தாம்பூர், செங்கானம் ஆகிய ஊராட்சிகளில் பேயாடிக்கோட்டை, செங்கானம், பறையத்தூர், இடையூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அடம்பூர் நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் திருப்புனவாசல்-ஆவுடையார்கோவில் சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 6 மாதத்திற்கு முன்பு போராட்டம் நடத்துவதாக வந்த பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் கூறினர்.

    ஆனால் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறினர். இதையடுத்து அங்கு வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் திருப்புனவாசல்-ஆவுடையார்கோவில் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஆவுடையார்கோவில் அருகே 6 மாதமாக குடிநீர் தட்டுப்பாடு
    • 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா புத்தாம்பூர், செங்கானம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பேயாடிக்கோட்டை , செங்கானம், பறையத்தூர், இடையூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்களுக்கு அடம்பூர் நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போராட்டம் மூலம் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பொதுமக்கள் முடிவு செய்தனர்.இதையடுத்து இன்று காலை 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருப்புனவாசல்-கரூர் சாலையில் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல வழியின்றி அணிவகுத்து நின்றன. போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துறை அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர்.

    அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து பொது மக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • குடிநீர் வராததை கண்டித்து ராம்பாளையம் பகுதியில மறியல்
    • போக்குவரத்து பாதிப்பு, போலீசார் பேச்சு வார்த்தை

    மண்ணச்சநல்லூர்,

    மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சி உட்பட்ட இராம்பாளையம் மேலுர் பகுதியில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யாததால் அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஊராட்சி பலமுறை புகார் மனு கொடுத்துள்ளனர்.ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் திடீர் இன்று காலை மண்ணச்சநல்லூர்- எதுமலை செல்லும் சாலையில் ராசாம்பாளையம் மேலுர் பஸ் ஸ்டாப் பகுதியில் பெண்கள் கை குழந்தையுடனும், காலிக் குடங்களுடனும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளிடம் போனில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.ஆனால் சமாதானம் ஆகாத பொதுமக்கள் மக்கள் உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் இங்கு வர வேண்டும். இல்லையென்றால் கலெக்டர் வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என்றனர்.குடிநீர் இணைப்பு அனைத்தும் சாலை ஓரத்தில் போடப்பட்டதால் தண்ணீர் பிடிக்க செல்லும் பொழுது விபத்து ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் பெண்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மதுரையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர்.
    • தமிழக அரசின் தொழிற் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டது.

    மதுரை

    மதுரை மாநகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக அரசின் 12 நேர வேலை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற கோரி பெரியார் பஸ் நிலையம், கட்டபொம்மன் சிலை அருகில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.

    மாவட்ட தலைவர் பாவேல்சிந்தன், செயலாளர் செல்வா, நிர்வாகிகள் வேல்தேவா, நிருபனா, நவீன், கவுதம், பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது தமிழக அரசின் தொழிற் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டது.

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் அனுமதியின்றி மறியல் போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து தா.பழூர் அருகே மறியல்
    • போக்குவரத்து பாதிப்பு

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் ஊராட்சியை சேர்ந்த கோட்டியால் மேலத்தெரு பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் இருந்த குளமும் தூர் வருவதற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் பிரச்சினை குறித்து முறையிட்டு வந்துள்ளனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் தா.பழூர், விளாங்குடி சாலையில், கோட்டையால் பாண்டிபஜார் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த தா.பழூர் போலீசார் பொதுமக்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அதே போல ஊராட்சி நிர்வாக அலுவலர்களும் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் தேவை உடனடியாக தீர்த்து வைக்கப்படும் என்று அப்போது உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டமானது கைவிடப்பட்டது. பொதுமக்களின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.

    • மதுரை விமான நிலைய சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் செய்தனர்.
    • இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை விமான நிலைய நுழைவுவாயில் பகுதியில் அம்பேத்கர் சிலை உள்ளது. இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பெருங் குடி பகுதியில் உள்ள விடு தலை சிறுத்தை கட்சியினர் ஊர்வலமாக மாலை அணி விக்க வந்தனர்.

    அவர்கள் செல்லும் பாதையில் பிரச்சினை ஏற்படலாம் என கருதிய போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மாற்று பாதையில் செல்லுங்கள் என கூறினர். ஆனால் இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறுப்பு தெரிவித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. வசந்த குமார் தலைமையில் 20 -க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்று விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராஜபாளையம் வெண்கொடை திருவிழா விவகாரத்தில் மறியலில் ஈடுபட்ட 55 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • 15 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் கலந்துகொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் சித்திரை வெண்குடை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 5 தெருக்களில் வசிக்கும் ஒரு சமூகத்தினர் சுழற்சி முறையில் நடத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான திருவிழாவை நடத்துவது தொடர்பாக தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடப்பட வில்லை எனக்கூறி நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு தெருவைச் சேர்ந்தவர்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் 15 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் கலந்துகொண்டனர். ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தார்.

    இந்த நிலையில் அவர்கள் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டது குறித்து கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆவுடையார்கோவிலில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் 3 பேரை கைது செய்ய கோரி மறியல் போராட்டம
    • 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் பழனி (வயது 39), ஸ்ரீராம்தீபக் (30), சந்தனபிச்சை (46). இவர்கள் 3 பேரும் சமீப காலமாக அடிதடி, பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் உணவகம் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கே வந்த பழனி உள்ளிட்ட 3 பேர் காரணமின்றி மாணிக்கத்தை அடித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த மாணிக்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட உறவினர்கள், பொதுமக்கள், இது போன்ற சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்டது என்று கூறி ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகார் அளித்து 18 நாட்களை கடந்த நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்த்துறையை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே வந்த அறந்தாங்கி டிஎஸ்பி தினேஷ்குமார், வட்டாட்சியர் மார்டின் லூதர்கிங் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது பொதுமக்கள் கூறுகையில் குற்றவாளிகள் 3 பேரும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தெருவில் நடந்து செல்பவர்களை கூட வீண் வம்பு இழுத்து கொலைவெறி தாக்குதல் நடத்துகின்றனர். இவர்கள் மீது பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.எனவே இவர்கள் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 5 நாட்களுக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து பொதுமக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

    • பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி தவறுதலாக பேசியதாக கூறி 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது.
    • மக்கள் பிரச்சனைக்காக ராகுல் காந்தி தொடர்ந்து போராடி வருவதோடு ஊழலுக்கு அப்பாற்பட்டவராக இருக்கும் தலைவராவார்..

    கடலூர்:

    காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது:-

    பா.ஜ.க. அரசு அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் ராகுல் காந்தியை சீண்டி வருகிறார். மேலும் பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி தவறுதலாக பேசியதாக கூறி 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது. வரலாற்றில் இல்லாதது ஒன்றாகும்.ஆனால் இதற்கு ராகுல் காந்தி பயப்படவில்லை. ஆனால் மக்கள் பிரச்சனைக்காக ராகுல் காந்தி தொடர்ந்து போராடி வருவதோடு ஊழலுக்கு அப்பாற்பட்டவராக இருக்கும் தலைவராவார். ஆனால் பிரதமர் மோடி ராகுல் காந்தியை பார்த்து பயப்படுகிறார்.  மேலும் ராகுல் காந்தி அதானி மக்கள் பணத்தில் ஊழல் செய்ததாக கூறியதை பிரதமர் மோடியால் ஏற்க முடியாததால். காங்கிரஸ் கட்சி மக்களை முறையாக அணுகி அதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க எண்ணுகிறார்கள்.

    பா.ஜ.க அரசு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை மக்கள் மத்தியில் திணித்து வருவதோடு, மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ராகுல் காந்தியை அழித்துவிடலாம் என பா.ஜ.க. நினைத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி பக்கம் தான் மக்கள் இருந்து வருகின்றனர். ஆகையால் ராகுல் காந்திக்காக இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டம் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் வருகிற 15-ந்தேதி தீப்பந்தம் ஏந்தியும், 20-ந்தேதி சாலை மறியல் போராட்டம், 25-ந்தேதி ெரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு தெரிவித்தார். அப்போது நிர்வாகிகள் வக்கீல் கலையரசன் ராமராஜ், கடல் கார்த்திகேயன், அன்பழகன், கலைச்செல்வன், வசந்த ராணி, ஏழுமலை, ஆறுமுகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • 24 மணி நேரமும் மது விற்பனை
    • சட்டவிரோத மது விற்பனையை தடுக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பேரூராட்சியாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள பாலக்கரை பகுதியில் 2 அரசு மதுபான கடைகள் இருந்தன. அப்போது, கோவில் மற்றும் பள்ளிக்கூடம் அருகில் இருப்பதை காரணம் காட்டி அங்குள்ள மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதைத்தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் அரும்பாவூரில் இருந்த 2 மதுபான கடைகளையும் மூடிவிட்டது. பின்னர் ஊருக்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் மதுபான கடைகளை திறக்காமல் இருந்தனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில அரசியல்வாதிகள் அரும்பாவூரில் உள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் சட்ட விரோதமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட சந்து கடைகளை திறந்து, 24 மணி நேரமும் மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் குடும்ப பெண்கள் பலரும் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர்.இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை அரும்பாவூர் பாலக்கரையில் திரண்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து அரும்பாவூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் சந்து கடைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அரும்பாவூர்- பெரம்பலூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×