search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவுரை"

    அறிவுரை கூறியதால் ஆத்திரமடைந்த வாலிபர் தனது பாட்டியை விறகு கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள சிங்காரக்கோட்டை எஸ்.குரும்பபட்டியைச் சேர்ந்தவர் காளையன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 75). இவர்களது மகன் சந்திரசேகரன். விவசாய தோட்டம் வைத்து பராமரித்து வந்தனர். சந்திரசேகரனின் மகன் சுதாகரன் (22) 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்.

    அடிக்கடி வீட்டில் செலவுக்கு பணம் வாங்கி சுற்றி வந்துள்ளார். இதனை அவரது பாட்டி சரஸ்வதி கண்டித்துள்ளார். இதனால் சரஸ்வதிக்கும் அவரது பேரன் சுதாகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்குமாறு தனது பேரனுக்கு சரஸ்வதி அறிவுரை கூறி வந்தார். இது சுதாகரனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

    நேற்று வழக்கம் போல் வீட்டுக்கு வந்த சுதாகரனை சரஸ்வதி சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுதாகரன் விறகு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினார். வலி தாங்க முடியாமல் சரஸ்வதி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெற்றோர்கள் தங்களது நிறைவேறாத கனவுகளை குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். #Modi #Parikshapecharcha
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டின் இறுதித்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுடன் உரையாடினார். இதேபோல இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக மாணவ-மாணவிகளுடன் மோடி உரையாடினார்.

    பரீக்‌ஷா பே சர்ச்சா (பரீட்சை தொடர்பான விவாதம்)  என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில்  9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 2 ஆயிரம் மாணவ-மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ரஷ்யா, நைஜீரியா, ஈரான், நேபாளம், குவைத், சவுதிஅரேபியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர்.

    10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற இன்னும் இருமாதங்கள் உள்ளன. தேர்வு நேரத்தில் ஏற்படும் மனஅழுத்தத்தை எப்படி குறைப்பது? என்பது பற்றி மாணவ-மாணவிகளுக்கு மோடி ஆலோசனைகளை கூறினார். மாணவர்களின் நலன்தான் முக்கியம் என்றும், அவர்கள்தான் எதிர்கால இந்தியா என்றும் தெரிவித்தார்.



    பெற்றோர்களை நான் ஒன்று கேட்டுக் கொள்வேன். உங்களால் நிறைவேற்ற முடியாத கனவுகளை உங்கள் குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியான பலமும் திறமையும் உண்டு. அதை சரியான வகையில் நீங்கள் புரிந்துகொண்டு ஊக்கப்படுத்த வேண்டும்.

    அறிவுத்திறனை விரிவாக்கம் செய்யும் வகையிலும் புதிய படைப்புகளுக்கான உந்துசக்தியாகவும் தொழில்நுட்பத்தை மாணவ-மாணவியர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால், விளையாட்டுத்துறையை நீங்கள் மறந்து விடக்கூடாது எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

    இந்த உரையாடலில் பங்கேற்க கடந்த 7-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 17 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் இருந்து 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Modi #Parikshapecharcha #Unfulfilleddreams 
    தாய், தந்தையின்றி குற்ற செயலில் ஈடுபட்டு வந்த வாலிபரை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அறிவுரை கூறி பழ வியாபாரத்தில் ஈடுபட வைத்துள்ளார். #Fruitbusiness #erodebusstand

    ஈரோடு:

    ஈரோடு திண்டல் பாலாஜி கார்டனை சேர்ந்தவர் கந்தசாமி மகன் மணிகண்டன் (வயது19). சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து விட்டார்.

    தனது பாட்டி பாதுகாப்பில் மணிகண்டன் வளர்ந்து வந்தார். படிப்பில் ஆர்வம் இல்லாததால் எந்த வேலைக்கும் செல்லாமல் ஈரோடு பஸ் நிலையத்தில் சுற்றி வந்து சிறு சிறு திருட்டு சம்பவ செயலில் ஈடுபட்டு வந்தார்.

    இதையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு மணிகண்டன் தண்டனை முடிந்து வெளியே வந்தார்.

    பின்னர் மணிகண்டனை ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேரில் அழைத்து திருந்தி வாழுமாறு அறிவுரை வழங்கினார். இதை ஏற்று மணிகண்டன் தான் திருந்தி வாழ்வதாக எஸ்.பி.யிடம் உறுதி கூறினார்.

    ஆனால் மணிகண்டனுக்கு யாரும் வேலை கொடுக்க முன் வரவில்லை. இதையறிந்த எஸ்.பி. சக்திகணேசன் மணிகண்டனுக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்ய உதவினார்.

    இதையடுத்து தற்போது மணிகண்டன் ஈரோடு பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். எஸ்.பி.சக்திகணேசனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.  #Fruitbusiness #erodebusstand

    புதுவையில் காவலர்கள் ஊழல் இன்றி பணியாற்ற சபதம் ஏற்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுரை கூறியுள்ளார். #Puducherry #Narayanasamy #ChiefMinister
    புதுச்சேரி:

    புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி முதல் 134 காவலர்கள் பயிற்சி பெற்றனர். அவர்கள் பயிற்சியின் நிறைவு மற்றும் அணிவகுப்பு நேற்று காலை கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. விழாவிற்கு போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா தலைமை தாங்கினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பயிற்சியில் முதலிடம் பிடித்த காவலர்களுக்கும், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் நம் மாநிலத்தில் காவல்துறைக்கு என்று தனித்திறமை உண்டு. இரவு பகல் பார்க்காமல் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கொடுப்பது, குற்றங்களை உடனே கண்டுபிடிப்பது, குற்றவாளிகளை வெளியில் நடமாட விடாமல் பார்த்து கொள்வது. அதுமட்டுமின்றி தொடர் குற்ற செயல்கள் செய்பவர்களை கண்டறிந்து அவர்களை ஒடுக்குவது, போக்குவரத்து சரி செய்வது, சமூக பணிகள் செய்வது போன்றவைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி 2½ ஆண்டுகளுக்கு முன் ஆட்சிக்கு வந்த போது புதுவையில் மக்கள் நிம்மதியாகவும், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு வந்து செல்ல வேண்டும் என்பதற்காகவும் காவல்துறையில் நிர்வாக சீர்திருத்தம் செய்து, அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை முழுமையாக கிடைக்க வேண்டும் என்று உறுதி ஏற்றோம்.

    புதுச்சேரி காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். மக்களுக்காக நாம், நமக்காக மக்கள் இல்லை என்ற உணர்வு இருக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் சம்பளம் வாங்குகின்றோம் என்ற எண்ணம் இருக்க வேண்டும். பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மக்களுக்கு முழு உரிமை தர வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கான உதவியை காவல்துறை மிக சிறப்பாக செய்து வருகிறது. போலீசாரின் ஒத்துழைப்பு இல்லாமல் அமைதியை காண முடியாது. புதுச்சேரியில் நிம்மதியாக இருக்கலாம், தொல்லை இருக்காது, குற்றம் செய்பவர்கள் நம்மை நெருங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சட்டம்-ஒழுங்கை பாதுகாத்து வரும் போலீசாருக்கு அதிக சலுகைகள் வழங்க வேண்டும். பதவி உயர்வு, காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும். காவல்துறையை நவீனப்படுத்துவதற்கு மத்திய அரசிடம் நிதியை பெற வேண்டியுள்ளது. போலீசார் குற்றங்களை தடுப்பதுடன், குற்றம் நடைபெறுவதற்கு முன் எப்படி தடுப்பது என்ற தகவல்களை சேகரித்து அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். குற்றம் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் பிற மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பணத்தை இழந்துள்ளனர்.

    இந்த வழக்கை சி.ஐ.டி. மற்றும் சைபர் கிரைம் போலீசார் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்துள்ளனர். தற்போது மற்றொரு போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் 2 பேரை கைது செய்துள்ளனர். தற்போது பாரம்பரிய குற்றங்கள் மட்டுமின்றி, விஞ்ஞான ரீதியான குற்றங்களும் நடைபெற்று வருகிறது. இவைகளை எதிர்கொள்ள பயிற்சி பெற வேண்டும். ஊழல் இன்றி பணியாற்ற சபதம் ஏற்க வேண்டும். புகார் கொடுக்க வருபவர்களிடம் கடுமையாக பேசக்கூடாது. உரிய நேரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். கடமையில் எப்போதும் முனைப்பாக இருக்க வேண்டும். திறமையை காட்டினால் பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    அரசியல் சட்டத்தின் அறிவுரையை கேட்காவிட்டால் ஆபத்து என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். #SupremeCourt #ChiefJustice #RanjanGogoi
    புதுடெல்லி:

    அரசியல் சட்ட தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பேசியதாவது:-

    அரசியல் சட்டம், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும், பெரும்பான்மையினரின் மதிநுட்பமாகவும் திகழ்கிறது. சிக்கலான, நிச்சயமற்ற சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டியாக தொடர்ந்து வருகிறது. அரசியல் சட்டத்தின் அறிவுரையை கேட்பது நமக்கு நல்லது. இல்லாவிட்டால், நமது கர்வம், நம்மை பெரும்குழப்பத்துக்கு இட்டுச் சென்று விடும்.

    நாம் இன்னும் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. ஆகவே, வெறுமனே கொண்டாடாமல், வருங்காலத்துக்கான பாதையை வடிவமைக்க இந்நாளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    வேலூரில் காய்ச்சலை தடுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.
    வேலூர்:

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் காய்ச்சல் அதிகரித்து வருவதால், நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நகரம் மட்டுமல்லாது கிராமங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குகிறது. இதன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் ஒன்றியத்துக்கு 3 மருத்துவ முகாம் என 20 ஒன்றியங்களில் மொத்தம் 60 முகாம்கள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை செய்த பின்னர், 'டெங்கு' அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்வார்கள்.

    அத்துடன் காய்ச்சல் பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுகாதார ஊழியர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மற்றவர்களுக்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் பொதுமக்களும் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

    உதாரணமாக, மழைக்காலத்தில் தண்ணீரை நன்கு காயவைத்து குடிக்க வேண்டும். உணவுகளை சமைத்த உடனே சிறிது நேரத்தில் உட்கொள்வது நல்லது. நீண்ட நேரம் கழித்து உட்கொள்வதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உணவுக்கு முன் தங்கள் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.

    அதுமட்டுமின்றி, திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையோ, அரசு மருத்துவமனைகளையோ அணுகி சிகிச்சை பெற வேண்டும். வீட்டின் அருகில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ள தமிழக அரசு, தொடர்ந்து வெடிக்கும் சரவெடிகளை வெடிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. #Diwali #CrackersBurstingTime #TNGovernment
    சென்னை:

    தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த 2 மணி நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் கூறியிருந்தது. அதன்படி, இன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்தது. காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என கூறியுள்ளது.



    மேலும், வெடி வெடிப்பதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களையும் தமிழக அரசு வழங்கி உள்ளது. அவை வருமாறு:-

    • அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்

    • குறைந்த ஒலி எழுப்பும், குறைந்த அளவில் மாசுபடுதல் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்

    • மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்

    • குடிசைப் பகுதி மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் வெடி வெடிப்பதை தவிர்க்க வேண்டும்

    • உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று திறந்தவெளியில் மக்கள் ஒன்றுகூடி கூட்டாக வெடி வெடிக்கலாம்

    • திறந்த வெளியில் கூட்டாக வெடி வெடிப்பற்கு அந்தந்த பகுதியில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். #Diwali #CrackersBurstingTime #TNGovernment
    அன்றாட உரையாடல்கள் மூலம் இந்தியை பரப்ப வேண்டும் என மத்திய இந்தி குழுவின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். #Hindi #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், மத்திய இந்தி குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், குஜராத், இமாசலபிரதேசம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அரசு விவகாரங்களில் இந்தி மொழியின் பயன்பாட்டை வலியுறுத்தினார். அவர் பேசுகையில், “அன்றாட உரையாடல்கள் மூலம், இந்தியை பரப்ப வேண்டும். அரசு விவகாரங்களுக்காக அதிகாரிகள் உரையாடும்போது, சிக்கலான, தொழில்நுட்ப வார்த்தைகளை தவிர்த்து, உரையாடலை எளிமைப்படுத்த வேண்டும். அரசில் இந்தியின் பயன்பாட்டுக்கும், சமூகத்தில் இந்தியின் பயன்பாட்டுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும். இதற்கு கல்வி நிறுவனங்கள் உதவலாம். இந்தி உள்பட அனைத்து இந்திய மொழிகள் மூலமும் உலகத்துடன் இந்தியா தொடர்பு வைத்துக்கொள்ள முடியும்” என்றார். #Hindi #PMModi

    தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவில் கொடைவிழா நடைபெற்றது. இதில் பேசிய கீதாஜீவன் எம்.எல்.ஏ. இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும் அறிவுரை வழங்கினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவில் கொடைவிழா நடைபெற்றது. விழாவில் கீதாஜீவன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தார். பின்னர் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன்பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

    அப்போது கீதாஜீவன் எம்.எல்.ஏ பேசுகையில்,'' இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும். அதுவும் ஆன்மீக பணியில் ஈடுபடுவது நல்ல காரியம் கோவில் விழாவில் ஓற்றுமையுடன் அனைவரும் பணியாற்றி எதிர்வரும் காலத்தில் தி.மு.க.விற்கு துணை நிற்க வேண்டும்" என்றார். 

    விழாவில் பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பர்ட், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், வட்டச்செயலாளர் நடராஜன், பிரதிநிதி மதியழகன், கோவில் தலைவர் முருகேசன், செயலாளர் அய்யாச்சாமி, பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் சண்முகவேல்,கௌரவ ஆலோசகர் சண்முகசுந்தரம், வக்கீல் நாகராஜ், நிர்வாக கமிட்டியினர் வெற்றிவேல், முருகேசன், வேல்ராஜ், பாக்கியசெல்வன், முருகேஸ்வரன், மோகன், அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×