search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல்துறை"

    காவல்துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் லத்திகள், 26 ஆயிரம் விசில்கள் வாங்கப்படுகின்றன. ஒரு லத்தி ரூ.165 விலையில் வாங்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. #TNPoliceDepartment
    சென்னை:

    தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது லத்திகள் பயன்படுத்துகிறார்கள். இதேபோல் விசிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் லத்திகள், விசில்கள் பழையதாகி விட்டன. இதையடுத்து போலீசாருக்கு புதிதாக லத்திகள், விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    காவல்துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் லத்திகள், 26 ஆயிரம் விசில்கள் வாங்கப்படுகின்றன.

    ஒரு லத்தி ரூ.165 விலையில் வாங்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.17 லட்சம் செலவில் 10 ஆயிரத்து 326 லத்திகள் வாங்கப்படுகிறது.



    இதேபோல் ரூ.13 லட்சம் செலவில் 26 ஆயிரத்து 196 விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதிய லத்திகள், விசில்கள் அனைத்தும் சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு போலீசாருக்கு வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புதிதாக வாங்கப்படும் லத்தி மற்றும் விசில்கள் மாநிலம் முழுவதும் உள்ள போலீசாருக்கு ஜூலை மாதம் முதல் வழங்கப்படும்.

    பொதுவாக பணியின்போது விசில்கள் பயன்படுத்துவது இல்லை. செல்போன்கள் வந்த பிறகு விசில் பயன்பாடு குறைந்து விட்டது. செல்போன் மூலம் சக போலீசாரை விரைவில் தொடர்பு கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TNPoliceDepartment
    பொள்ளாச்சி விவகாரத்தில் காவல்துறை சரியாக செயல்படாவிட்டால் மனித உரிமை ஆணையம் தலையிடும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கூறினார்.
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மனித உரிமை மீறல் வழக்குகள் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் நெல்லையில் விசாரணை நடத்தியது.

    வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற இந்த விசாரணையில், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரும், நீதிபதியுமான ஜெயச்சந்திரன் பங்கேற்று விசாரணை மேற்கொண்டார்.

    இதில் 56 வழக்குகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் நீதிபதி ஜெயச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சியில் மாணவிகள் மீதான பாலியல் கொடுமை விவகாரத்தில் புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள், இருப்பினும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதிக்கப்பட்டவரின் பெயரை குறிப்பிட்டு சொல்வது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயல். மேலும் காவல்துறை சரியான முறையில் செயல்படுகிறார்களா? இல்லையா? என எங்களது ஆணையத்திற்கு பாதிக்கப்பட்ட நபரோ அல்லது சமூக ஆர்வலர்களோ புகார் அளித்தால் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

    தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டாலும் பல காரணங்கள் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடத்துவது நியாயமாக இருக்கும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். தமிழக அரசு இந்த சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கும் என ஆணையம் நம்புகிறது, அப்படி சரியான முறையில் காவல்துறை செயல்படாவிட்டால் ஆணையம் தலையிட்டு உரிய உத்தரவினை பிறப்பிக்கும்.

    ஏற்கனவே மகளிர் ஆணையம் தலையிட்டு அறிக்கை கேட்டு உள்ளனர். இந்த வழக்கை பொறுத்தவரையில் பொது சேவையில் அஜாக்கிரதையாக செயல்பட்டால் தான் மனித உரிமை ஆணையம் தலையிட முடியும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்.

    குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்காது. அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், சட்டம் தன் கடமையை செய்யும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காவல்துறை சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வாரவிழா கண்காட்சியை கலெக்டர் அன்புசெல்வன் திறந்து வைத்தார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அமைத்திருந்த சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் 20 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மாவட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த படைப்புகளை பார்வைக்காக வைத்திருந்தனர்.

    இதுபற்றி கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களிடம் கூறுகையில், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி சாலையை பயன்படுத்தும் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும். பொருளாதாரத்தில் மட்டும் உயர்ந்து விட்டால் போதாது ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும். இளைஞர்கள் சாலையில் சாகசம் செய்யாமல் சாலை விதிகளை மதித்து விபத்தில்லா மாவட்டமாக ஆக்க வேண்டும் என்றார்.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பேசியதாவது:-

    மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு இந்த கண்காட்சியை சிறப்பாக அமைத்துள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மனம் சஞ்சலமாக உள்ள போதும், சந்தோஷமாக உள்ள போதும் வாகனம் ஓட்டக்கூடாது. அற்புதமான பிறவி மனித பிறவி. கொலை குற்றம் என்பது படுபாதக செயல். ஆனால் அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ஆனால் எந்த ஒரு காரணமும் இன்றி விபத்தில் மரணம் அடைவது என்பது பெரிய இழப்பாகும். விபத்தினால் ஒருவர் மரணம் அடையும் போது அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே பாதிப்பு ஏற்படுகிறது.

    சாலை விதிகளை கடைப் பிடிக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளாகிய நீங்கள் சொன்னால் உங்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டிப்பாக கேட்பார்கள். இதற்கு நீங்கள் முன் னுதாரணமாக இருக்க வேண்டும். உயிரின் மதிப்பு உங்களுக்கு தெரியவந்தால் சாலை விபத்தில் உயிரிழப்பு, தற்கொலை போன்ற சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர்(பொறுப்பு) முக்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு(ஆயுதப்படை) சரவணன், தர்மபுரி சமூக சேவகர் முரளி, கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக ஆதாரம் இருந்தால் அதனை காவல்துறையிடம் தரலாம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #KodanadVideo #Stalin #OPS
    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநரை சந்தித்து, கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடும்படி கோரிக்கை வைக்க உள்ளார்.



    இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், அரசியலில் தங்களை நேரடியாக எதிர்க்க முடியாத சக்தியற்ற எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புவதாக கூறினார்.

    “கொடநாடு விவகாரம் தொடர்பாக ஆதாரம் இருந்தால் அதனை காவல்துறையிடம் தரலாம். ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஓபிஎஸ் எச்சரித்தார்.

    தேர்தல் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ், அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் மாறலாம் என்றும், கூட்டணி தொடர்பாக விரைவில் நல்லது நடக்கும் என்றும் கூறினார். #KodanadVideo #Stalin #OPS
    காவல்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை இணையதளத்தில் பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வேலூரில், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
    வேலூர்:

    தமிழக காவல்துறையில் தனிநபர் விபரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமான விபரம் சரிபார்ப்பு, வாடகைதாரரின் விபரம் சரிபார்ப்பு, வீட்டு வேலையாட்கள் விபரம் சரிபார்ப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தனிநபர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக பார்ஸ்போர்ட்டு மற்றும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதற்கு நன்னடத்தை சான்றிதழ் பெறுவது அவசியமான ஒன்றாகும்.

    இந்த சேவையில் பொதுமக்களின் வீண் அலைச்சலை தடுக்க முதன் முறையாக இணையதளம் மூலம் நன்னடைத்தை சான்றிதழை பெறும் வசதியை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் தனிநபர் விபரம் சரிபார்ப்பு சேவை உள்ளிட்ட 4 விதமான சேவைகளை இணையதளம் மூலம் வழங்கும் புதிய திட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவல்துறையின் இந்த சேவைகளை பெற பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.ese-rv-i-ces.tnp-o-l-i-ce.gon.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் கடிதம் அல்லது அடையாள அட்டை போன்றவற்றை இணைக்க வேண்டும். ஒருவர் யாருடைய விபரத்தை கேட்டும் விண்ணப்பிக்கலாம். காவல்துறையினர் விசாரணைக்கு செல்லும்போது சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்புதல் பெறப்பட்டதா? என விசாரிப்பார்கள். ஒருவேளை ஒப்புதல் பெறவில்லை என்றால் விபரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படாது. இந்த புதிய நடைமுறையால் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அனைத்து விபரங்களும் இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.

    விண்ணப்பித்த நபரின் செல்போனுக்கு 4 இலக்க எண்கள் அனுப்பப்படும். அதன் மூலம் விண்ணப்பத்தின் நிலைகுறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த சேவையை பெற தனிநபர் ஒரு விண்ணப்பத்துக்கு 500 ரூபாயும், தனியார் நிறுவனங்கள் ஆயிரம் ரூபாயும் இணையதளம் வழியாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மற்றும் இணையவழி வங்கி சேவை மூலம் கட்டணத்தை செலுத்தலாம். இந்த புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் யாரும் காவல் நிலையங்களுக்கு நேரில் அலைய தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே இணையதளத்தின் வழியாக சேவையை பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட குற்ற ஆவண காப்பகப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
    சர்கார் திரைப்படத்தில் அதிமுக அரசுக்கு எதிராக காட்சிகள் இருப்பதாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்துவதால், அந்த திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #ARMurugadoss #Sarkar #Vijay
    சென்னை:

    நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஆளும் அதிமுக அரசை தாக்குவதுபோல் அமைந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்குமாறும், இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



    இந்த நிலையில், சர்கார் படத்துக்கு என வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இதன் ஒருபகுதியாக சர்கார் படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. #ARMurugadoss #Sarkar #Vijay
    பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலை தொடர்ந்து மஞ்சூர் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினர்.
    மஞ்சூர்:

    பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசார் பொதுமக்களுக்கு நிலவேம்பு காசாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகபிரியா அறிவுறுத்தியுள்ளார்.

    இதன்படி மஞ்சூர் காவல் சரகத்திற்குட்பட்ட மஞ்சூர் பஜார், எமரால்டு பகுதிகளில் இன்ஸ்பெக்டர் தெஹலத்நிஷா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, சுதாகர் மற்றும் போலீசார் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கியதுடன், சுற்றுபுறங்களில் தண்ணீர் தேங்கி நிற்ககூடிய தேவையற்ற பொருட்களை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள். #tamilnews
    ஜிம்பாப்வே நாட்டில் எதிர் எதிரே வந்த 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Zimbabwe #BusAccident
    ஹராரே:

    ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேயில் இருந்து ருசாபே நகருக்கு செல்லும் சாலையில், எதிர் எதிரே வந்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி பால் நியாதி, இந்த விபத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Zimbabwe #BusAccident
    ஆளுநர் மாளிகை அளித்த புகாரில் நக்கீரன் ஊழியர்களை வரும் 25-ம் தேதி வரை கைது செய்ய மாட்டோம் என ஐகோர்ட்டில் காவல்துறை தெரிவித்துள்ளது. #NakkeeranGopal #RajBhavan #NakkeeranEmployees
    சென்னை:

    பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகையை தொடர்புபடுத்தி நக்கீரனில் கட்டுரை வெளியானது. இதையடுத்து நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் நக்கீரன் அலுவலக ஊழியர்கள் மீது ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நக்கீரன் கோபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அத்துடன், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124-ன் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.



    இந்நிலையில் ஆளுநர் அளித்த புகாரின் அடிப்படையில் தாங்கள் கைது செய்யப்படலாம் என அஞ்சிய நக்கீரன் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.
    அப்போது,  ஆளுநரின் துணை செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவதூறு வழக்குதான் பதிவு செய்ய முடியுமே தவிர, 124-வது சட்டப்பிரிவின்கீழ் எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்? என நீதிபதி தண்டபாணி கேள்வி எழுப்பினார்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக வரும் 25-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக நக்கீரன் ஊழியர்களை வரும் 25ம் தேதி வரை  கைது செய்யமாட்டோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #NakkeeranGopal #RajBhavan #NakkeeranEmployees
    நெல்லை பல்கலைக் கழக மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். #MDMK #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியும், பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திட முன் வரவில்லை.

    இதனைக் கண்டித்து மாணவர்கள் தீவிர முழக்கங்கள் எழுப்பிய பின்னரே, மாணவப் பிரதிநிதிகள் ஓரிருவரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.

    முற்றுகையிட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குள் நுழைய முற்பட்ட போது அவர்களை சமாதானப்படுத்த முயலாமல், காவல் துறையினர் கண் மூடித்தனமாக தடியடி நடத்தியுள்ளனர்.

    இந்தத் தாக்குதலில் மாணவ- மாணவியர் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியர் சிலரை காவல்துறையைச் சேர்ந்த பெண் காவலர்களே முரட்டுத்தனமாக அடித்துத் தள்ளுகின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. போர்க்களம் போல் நேற்று நடந்த இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.

    மாணவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

    மாணவர்களின் உரிமைப் போராட்டத்தில் மிக மெத்தனமாகச் செயல்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

    அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது அரக்கத்தனமான தாக்குதல் தொடருமேயானால், எதிர் விளைவுகள் ஏற்படும் என்பதை உணரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MDMK #Vaiko
    காரைக்கால் அருகே உள்ள திருக்கடையூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, தாம் தலைமறைவாக இல்லை என தெரிவித்துள்ளார். #BJP #HRaja
    காரைக்கால்:

    இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்திக்கு தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் அரசு விதித்து இருந்தது. அந்த கட்டுப்பாடுகளின் அடிப்படையில் போலீசார் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளித்து வந்தனர்.

    அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொள்ள வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, உயர்நீதிமன்றத்தையும், தமிழக காவல்துறையையும் அவதூறாக பேசினார். இதுதொடர்பாக அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எச்.ராஜாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், இன்று காரைக்கால் அருகே உள்ள திருக்கடையூரில் பேட்டியளித்த எச்.ராஜா, தாம் தலைமறைவாக இல்லை என்றும், தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், தன்னை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட விஷயமே தமக்கு தெரியாது எனவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார். முன்னதாக ஹெச்.ராஜாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிலரை போலிசார் கைது செய்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  #BJP #HRaja
    தெலுங்கானா மாநிலத்தில் மனைவியின் கண் முன்னே தந்தை அனுப்பிய கூலிப்படையால் கணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். #Telangana #HonourKilling
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாருதி ராவ். இவரது மகள் அம்ருதா மாற்று ஜாதி இளைஞரான பிரணாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த தந்தை மாருதிராவ், கூலிப்படையை ஏவி, மகளின் கணவரை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

    இதற்காக கூலிப்படைக்கு 1 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கூலிப்படையைச் சேர்ந்த சர்மா என்பவரை வைத்து இந்த கொலை அரங்கேற்றப்பட்டது.

    பொது இடத்தில் தன் மனைவியின் கண் முன்னேயே பிரணாய் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவானது. வெளியிடப்பட்ட சிசிடிவி காட்சி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.

    இதனை அடுத்து, குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது கொலையாளி சர்மாவை காவல்துறையினர் கைது செய்தனர். பீகாரில் பதுங்கி இருந்த கொலையாளியை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்துள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து சர்மாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலைக்கு பின்னால் இருக்கும் அனைவரையும் கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். #HonourKilling #Telangana
    ×