search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முற்றுகை"

    சங்கரன்கோவிலில் 18 நாட்கள் ஆகியும் குடிநீர் வழங்காததால் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் லட்சுமிபுரம் 7-ம் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 18 நாட்களுக்கு முன்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் 18 நாட்கள் ஆகியும் குடிநீர் வழங்காததால் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சங்கரன்கோவில் - ராஜபாளையம் சாலையில் உள்ள வாட்டர் டேங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    இது குறித்து தகவலறிந்து அந்த பகுதிக்கு வந்த சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, சங்கரன்கோவிலில் சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் வினியோகம் ஒழுங்காக செய்யப்படுகிறது. மற்ற பகுதி மக்களை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மேலும் மக்களுக்கு தண்ணீர் இல்லாத சமயத்தில் வாட்டர் டேங்கில் இருந்து சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அடிக்கடி டேங்கர் வாகனம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதையடுத்து அவர்களுடன் பேசிய இன்ஸ்பெக்டர் கண்ணன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் முற்றுகையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரையில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு நுழைய முயன்ற அரசு ஊழியர்கள் 800 பேரை போலீசார் கைது செய்தனர். #BharatBandh
    மதுரை:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது.

    தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடாது என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் நேற்றும், இன்றும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

    இதில் வருமான வரித்துறை, தபால் துறை, தொலை தொடர்புத்துறை உள்ளிட்ட மத்திய அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்று உள்ளனர்.

    இதே போல் வங்கி, காப்பீடு நிறுவன ஊழியர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் 2-வது நாளாக நடைபெற்ற வேலைநிறுத்தம் காரணமாக மத்திய அரசு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. வங்கிகள் செயல்படாததால் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமம் அடைந்தனர்.

    பல ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன்பு இன்று காலை தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட தொழிற்சங்கங்ள் சார்பில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 800-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    அவர்கள் சாலையை மறித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். பின்னர் ரெயில் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக அவர்கள் பேரணியாக சென்றனர்.

    தொழிலாளர்களின் முற்றுகையையொட்டி மதுரை ரெயில் நிலைய கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

    பேரணியாக வந்தவர்களிடம் கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் தடுத்து நிறுத்தி பெண்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    மதுரை கீழவெளி வீதியில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெண்கள் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

    மதுரை ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் முன்பு இன்று எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  #BharatBandh
    பிளாஸ்டிக் தடையை எதிர்த்து விக்கிரமராஜா தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற 5 ஆயிரம் வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதிப்பு, அதனை பயன்படுத்தும் வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல், அபராத நடவடிக்கை எடுக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் இன்று சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகில் வியாபாரிகள், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

    பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் சதக்அப்துல்லா, மண்டல தலைவர் ஜோதிலிங்கம், கூடுதல் செயலாளர் வி.பி. மணி, பாண்டிய ராஜன், மாவட்ட தலைவர் அயனாவரம் சாமுவேல், என்.டி. மோகன், ஆதிகுருசாமி, ஜெயபால், அம்பத்தூர் காஜிமுகமது, கொளத்தூர் ரவி, ஆவடி அய்யாத்துரை, தேசிகன், சின்னவன், ஆர். எம்.பழனியப்பன், சுப்பிர மணியன், கே.ஏ.மாரியப்பன், அருணாசலமூர்த்தி, எம்.பி. ரமேஷ், சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் குவிந்தனர்.

    அங்கிருந்து பேரணியாக சட்டசபை நோக்கி புறப்பட்டு சென்றனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் வியாபாரிகள் அனைவரையும் போலீசார் தடுத்து கைது செய்தனர்.

    முன்னதாக விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிளாஸ்டிக் தயாரிக்கின்ற வியாபாரிகளை அரசு அழைத்து பேச வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து அனுப்பும் பிஸ்கட், சாக்லெட் போன்ற தின்பண்டங்களில் பிளாஸ்டிக் சுற்றப்பட்டு விற்க அனுமதிக்கப்படுகிறது.

    அதே பிளாஸ்டிக் பொருட்களை உள்ளூர் வியாபாரிகள் உபயோகப்படுத்தினால் அரசு பறிமுதல் செய்து அபராதம் விதிக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு நியதி, உள்ளூர் வியாபாரிகளுக்கு ஒரு நியதியா?

    எனவே அரசு இதில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கு உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும். கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் தொடர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு செல்ல உள்ளதாக கருதி ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Sabarimala #AyyappaDevotees
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக திறந்துள்ளது. இதனால் சபரிமலைக்கு திரளான ஐயப்ப பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலையே இதுவரை நிலவுகிறது. சபரிமலை செல்லும் இளம்பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

    இதனால் சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கேரளாவில் தமிழக பெண் பக்தர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொல்லம் அருகே புனலூரில் பிரசித்தி பெற்ற ஆரியங்காவு அச்சன்கோவில் என்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். பெண் பக்தர்களும் சென்று வழிபாடு நடத்துவது வழக்கம்.

    சபரிமலை செல்லும் பக்தர்களும் இந்த கோவிலுக்குச் சென்றுவிட்டு சபரிமலை செல்வார்கள். தற்போது சபரிமலை கோவில் நடைதிறந்து உள்ளதால் அச்சன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் 27 பேர் வேன் மூலம் ஆரியங்காவு அச்சன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் சிவப்பு சேலை அணிந்து அந்த கோவிலுக்குச் சென்றனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்ததும் ஐயப்ப பக்தர்கள் அங்கு திரண்டு தமிழக பெண் பக்தர்களை முற்றுகையிட்டு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு அந்த பெண்கள் சாமி தரிசனத்திற்கு செல்ல உள்ளதாக கருதி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும் விரைந்துச் சென்று ஐயப்ப பக்தர்களை சமரசப்படுத்தினார்கள்.

    தமிழக பெண் பக்தர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தாங்கள் சபரிமலை செல்லவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். கேரளாவில் உள்ள முக்கிய கோவில்களான அச்சன் கோவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில், சோட்டானிகரை பகவதி அம்மன் கோவில் போன்ற ஆன்மீக தலங்களுக்கு தான் செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

    அதன் பிறகு சமாதானம் அடைந்த ஐயப்ப பக்தர்கள் தமிழக பெண்பக்தர்கள் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்.

    இதுபற்றி தமிழக பெண் பக்தர்கள் கூறும்போது, நாங்கள் சபரிமலை கோவிலின் ஆச்சாரத்தை மதிப்பதாகவும், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் பலர் சபரிமலைச் சென்று உள்ளதாகவும் தெரிவித்தனர்.  #Sabarimala #AyyappaDevotees


    சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தாலுகா நடுவக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்த சுமார் 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதியதமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் இன்பராஜ் தலைமையில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பின்னர் துணை வட்டாச்சியர் மாரியப்பனிடம்  மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நடுவக்குறிச்சி காலனி பகுதியில் சுமார் 35 வீடுகளில் 100-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மதுக்கடை ஆரம்பிக்கபட்டது. மது வாங்க வருபவர்களால் இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பாற்ற சூழல் உள்ளது. இது தொடர்பாக வழக்குகளும் நிலுவையில் உள்ளது. அதனால் இப்பகுதி பெண்கள் மற்றும் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மதுக்கடையை  மூட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதில் ஊர் நாட்டாண்மை மாடசாமி, புதியதமிழகம் கட்சி தொகுதி செயலாளர்கள் ராஜேந்திரன், செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் முருகன், காசிப்பாண்டி, சந்திரன், அழகுமணி, மாணவரணி தங்கம்சுந்தர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள் இது குறித்து மாவட்டநிர்வாகத்திற்கு தகவல் அளித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து கிராமமக்கள் கலைந்து சென்றனர்.
    கஜா புயலால் மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளதால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் வாடகையாக பெறப்படுகிறது. #Gaja
    புதுக்கோட்டை மாவட்டத்தை புரட்டிப்போட்ட கஜா புயல் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் மீண்டு வர ஒரு சில வாரம் ஆகலாம் என கூறப்படுகிறது. மழையை தரும் புயல் என்று நம்பியிருந்த நிலையில் மரங்களை வேரோடு பிடுங்கி எறியும் புயலாகவே கஜா இருந்துள்ளது.

    கிராமங்களின் அழகை முற்றிலும் அழித்துள்ள இந்த புயலால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன் பெரும்பாலும் வீடுகளில் உணவு சமைப்பது முதல் குளிப்பது வரை பொதுமக்களின் தண்ணீர் தேவைக்கு போர்வெல் கிணறே ஆதாரமாக இருந்தது. ஆனால் தற்போது மின்சாரம் இல்லாததால் மக்கள் முடங்கியுள்ளனர். செல்போன் ரீசார்ஜ் செய்ய கடைவீதிகளில் உள்ள நிறுவனங்களை நாடியுள்ளனர்.

    இந்தநிலையில் புதுக்கோட்டை நகர் பகுதியில் திருக்கோகர்ணம், திலகர்திடல், காமராஜ் நகர் பகுதியில் ஜெனரேட்டர்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. ஒருமணி நேரத்திற்கு ரூ.1000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இதனை நாடியுள்ளனர்.
    பட்டுக்கோட்டையில் கஜா புயலால் பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆறுதல் கூறினார். #Gaja #GajaCyclone
    பட்டுக்கோட்டை:

    கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து உள்ளது. ‘கஜா’ புயல் சேத பகுதிகளை பார்வையிடுவதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார்.

    நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கடற்கரைக்கு முதலில் முக ஸ்டாலின் சென்றார். அப்போது அவர், சேதம் அடைந்த பைபர் படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்படி உபகரணங்களை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்த மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டார். நாகையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் வழியில் காரில் இருந்து இறங்கிய அவர், நாகை அக்கரைப்பேட்டை மீன் இறங்கு தளத்துக்கு சென்றார். அங்கு புயலால் சேதமடைந்து இருந்த மீன் இறங்கு தளத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். மேலும் புயல் காற்றால் ஒன்றோடொன்று மோதி சேதமடைந்த படகுகளையும் பார்வையிட்டார்.

    பின்னர் அங்கிருந்து வேதாரண்யம் காந்திநகர் பகுதியில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட முக ஸ்டாலின், அங்கு உள்ள உயர்நிலை பள்ளியில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் பாதிப்புகளை நேரில் பார்க்கும்போது சில குறைகள் உள்ளதை பார்த்தேன். இந்த குறைகளை சொல்லித்தான் ஆக வேண்டும். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை யாரும் வந்து பார்க்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் தெரிவித்தனர். புயல் சேதம் அதிக அளவில் உள்ளது. இந்த சேத விவரங்களை ஊடகங்கள்தான் தெரியப்படுத்த வேண்டும்.

    கஜா புயலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து பட்டுக்கோட்டை சிவக்கொல்லை பகுதியில் கஜா புயலால் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் பலியான சதீஷ் குமார், ரமேஷ்குமார், தினேஷ் குமார், அவரது உறவினர் அய்யாதுரை ஆகியோரது வீட்டுக்கு முக ஸ்டாலின் சென்றார். அங்கு 4 பேரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து பட்டுக்கோட்டை அருகே அணைக்காட்டில் தென்னை மரம் விழுந்ததில் பலியான ஜெயலெட்சுமி வீட்டுக்கு சென்று முக ஸ்டாலின் ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.
    கஜா புயல் காரணமாக மூன்று நாட்கள் மின்சாரம் இல்லாததால் செல்போன் பவர் பேங்க், எமர்ஜென்சி லைட் அதிக அளவில் விற்பனையாகிறது. #Gaja #GajaCyclone
    கோரதாண்டவம் ஆடிய கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டது. புயல் - மழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததாலும், மின்கம்பங்கள் சாய்ந்ததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

    தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அனைத்து துறை ஊழியர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் அன்றாட தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் ஆகியவை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் கடந்த 3 நாட்களாக மின் இணைப்பு கிடைக்காமல் 100-க்கும் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

    தஞ்சையில் ஒரு சில இடங்களில் மின்சார கம்பங்கள் சீரமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மின் ஊழியர்கள் மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஊழியர்கள் தஞ்சைக்கு வரவழைக்கப்பட்டு மின் கம்பங்கள் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கஜா புயலில் மின்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் வீடுகள் 3 நாட்களாக இருளில் மூழ்கி உள்ளன. எப்போதும் மக்கள் கைகளில் இருக்கும் செல்போன்கள் சார்ஜ் போட வசதி இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கும் நிலை நீடித்து வருகிறது.

    தஞ்சை நகரத்தில் பெரும்பாலானவர்களின் செல்போன்கள் சார்ஜ் போட வசதி இல்லாமல் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் அவர்கள் செல்போன்களுக்கு சார்ஜ் செய்ய பவர் பேங்குகளை வாங்க கடைகளில் திரண்டனர்.

    செல்போன் வசதி இருந்தால் மட்டும் எந்த தகவல்களையும் மற்றவர்களுக்கு பரிமாற முடியும். மேலும் ஏதாவது ஆபத்து என்றால் கூட உதவிக்கு மற்றவர்களை அழைக்க முடியும் என்பதால் செல்போனில் சார்ஜ் வைத்திருப்பது இந்த தருணத்தில் அவசியமாக உள்ளது.

    இதையொட்டி தஞ்சை பர்மா பஜாரில் உள்ள கடைகளில் நேற்று மக்கள் அதிக அளவில் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் பவர் பேங்குகளை வாங்கி சென்றனர். பவர் பேங்குகளை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு கடைக்காரர்கள் அவர்களது செல்போனில் சார்ஜ் ஏத்தி விட்டும், அவர்கள் வாங்கி செல்லும் பவர் பேங்கில் சார்ஜ் முழுமையாக ஏத்தி விட்டும் விற்பனை செய்தனர்.

    இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, மக்கள் அவர்கள் பகுதியில் மின் இணைப்பு இல்லை என்பதால்தான் பவர் பேங்க் வாங்கி செல்கின்றனர். இதனால் எங்களால் முடிந்த உதவியாக அவர்கள் செல்போனுக்கும், வாங்கி செல்லும் பவர் பேங்குக்கும் சார்ஜ் நிரப்பி கொடுக்கிறோம் என்றனர்.

    இதேபோன்று மின்சாரம் இல்லாமல் பேட்டரியில் இயங்கும் எமர்ஜென்சி லைட்டுகளும் தஞ்சையில் அதிகமாக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
    நிவாரம் கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் முக ஸ்டாலின் பயணத்தை ரத்து செய்து திருச்சியில் இருந்து சென்னை புறப்பட்டார். #GajaCyclone #GajaStorm
    தஞ்சாவூர்:

    கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தது. கிராம மக்கள் வீடுகளை இழந்தும், கால்நடைகளை இழந்ததும் தவித்து வருகின்றனர். மேலும் மீனவர்களின் படகுகளும் சேதமாகி உள்ளன.

    பல்லாயிரக்கணக்கான சம்பா பயிர்கள், வாழைகள், தென்னைகள் முறிந்து விழுந்ததில் டெல்டா விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். தரங்கம்பாடி, நாகை அக்கரைபேட்டை, வேதாரண்யம், மற்றும் பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு சென்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து பயணத்தை முடித்து கொண்டு நேற்று இரவு தஞ்சை சங்கம் ஓட்டலில் முக ஸ்டாலின் தங்கினார். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் முக ஸ்டாலின், தஞ்சையில் இருந்து புதுக்கோட்டைக்கு காரில் புறப்பட்டு சென்றார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து அவர் பார்வையிட நிர்வாகிகளுடன் புறப்பட்டு சென்றார்.

    புதுக்கோட்டை செல்லும் வழியில் கந்தவர்வக்கோட்டை பகுதியில் சாலையில் பொது மக்கள், கஜா புயல் நிவாரணம் கேட்டு மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்ததால் முக ஸ்டாலின் பயணத்தை கைவிட்டு திரும்பினார். பிறகு அங்கிருந்து திருச்சி வழியாக கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பொதுமக்கள் போராட்டம் காரணமாக முக ஸ்டாலின் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    சிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பியதைக் கண்டித்து சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். #CongressProtests #AlokVerma #CBIVsCBI #RahulArrest
    புதுடெல்லி:

    சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

    ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. அத்துடன் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதைக் கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் சிபிஐ அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். பேரணியின் முடிவில் சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.



    இதையடுத்து ராகுல் காந்தி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். போலீசாருக்கு ஒத்துழைக்க மறுத்த சிலர் குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #CongressProtests #AlokVerma #CBIVsCBI #RahulArrest
    காரைக்குடி அருகே ரசாயன ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆலையை முற்றுகையிட சென்ற முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுநீரால் அந்த பகுதியில் குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் புகையினால் பல்வேறு வியாதிகள் பரவி வருவதாக கூறி அந்த ஆலையை மூட வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை அந்த பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக அந்த போராட்டக்குழு சார்பில் நேற்று அந்த ஆலை முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் போலீசார், இந்த முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். அனுமதி மறுக்கப்பட்டதால் முற்றுகை போராட்டம் கோவிலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டதால் அதற்கு போலீசார் அனுமதி வழங்கினர். இதையடுத்து காரைக்குடி மற்றும் கோவிலூரில் உள்ள ஆலை முன்பு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

    மேலும் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்கள் கழனிவாசல் வழியாக பேயன்பட்டி பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டது. இந்த போராட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் அதை தடுக்கும் வகையில் போலீசார் தரப்பில் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன.

    ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி மேற்பார்வையில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, சிவகங்கை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன் உள்பட 8 துணை சூப்பிரண்டுகள், 36 இன்ஸ்பெக்டர்கள், 136 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1300 போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

    ஆலையை மூடக்கோரி நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் காந்திய தொண்டர் மன்ற ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழ.கருப்பையா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைச்செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திலகபாமா ஆகியோர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி, முன்னாள் கவுன்சிலர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் அழகப்பன், காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவர் பாண்டிமெய்யப்பன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சகுபர்சாதிக், அழகன் அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருக்கும்போது முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா தலைமையில் சென்ற ஒரு பகுதியினர் அந்த ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா, போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பழ.கருப்பையா, காந்திய தொண்டர் மன்ற நிர்வாகி விஜயராகவன், நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் வேணுகோபால், தாலுகா செயலாளர் தட்சணாமூர்த்தி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வணிகர்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் அடுத்த கட்டமாக தமிழக சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என்று விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
    சென்னை:

    சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது, உணவு பாதுகாப்பு, தரநீர்ணய சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது:-

    வணிகர்களின் கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்றுவது இல்லை. அந்நிய நிறுவனங்களான வால்மார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் சில்லரை வணிகத்தில் ஈடுபடுகிறது. இதை தடுக்க வேண்டும்.

    நாங்கள் கடந்த 4½ ஆண்டுகளில் 5 முறை மத்திய மந்திரிகளை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், தமிழக அமைச்சர்களையும் சந்தித்து மனு கொடுத்தேன். எங்கள் மனுக்கள் என்ன ஆனது? பத்திரமாக வைத்து இருக்கிறீர்களா? அல்லது குப்பை தொட்டியில் போட்டு விட்டீர்களா?

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிறது. வணிகர்களின் ஓட்டு உங்களுக்கு வேண்டுமா? வேண்டாமா? அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் நிறுவனத்திடமா ஓட்டு கேட்பீர்கள்?

    தமிழ்நாட்டில் ஒரு கோடி வணிக குடும்பங்கள் உள்ளன. நாங்கள் பணத்துக்கு ஓட்டுகளை விற்பதில்லை. அதற்கு வியாபாரிகள் துணை போகமாட்டார்கள். எங்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும் என்று கேட்கிறோம். நாங்கள் எந்த கால கட்டத்திலும் அரசியல் பக்கம் செல்ல மாட்டோம்.

    எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் அடுத்த மாதம் 23-ந்தேதி உண்ணாவிரதம் இருப்போம். அடுத்த கட்டமாக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம். அதன் பிறகும் அரசு அழைத்து பேசாவிட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மாவட்ட தலைவர்கள் ஜோதிலிங்கம், மோகன், ஜெயபால், அமல்ராஜ், ஆதிகுருசாமி, சாமுவேல், ரவி, நிர்வாகிகள் வி.பி.மணி, ராஜ்குமார், அம்பத்தூர் ஹாஜிமுகமது, ஆர்.கே.எம்.துரைராஜன், அய்யார் பவன் அய்யாதுரை, தங்கதுரை, மனோகரன், ராஜேந்திரன், வேலுசாமி, ஆர்.எம்.பழனியப்பன், சுப்பிரமணியன், பால்ஆசீர், எட்வர்டு, வில்சன், முகமது செரீப், தேசிகன், சின்னவன், அடையாறு துரை, பாஸ்கர், கே.ஏ.மாரியப்பன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    இதுபோல் 12 மண்டலங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    ×