search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • தமிழ் உள்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது.
    • நீட் தேர்வு நடக்கும் மையங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை,

    நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடந்தது. கோவை மாவட்டத்தில் நீட் தேர்வு கோவை பப்ளிக் பள்ளி- சரவணம்பட்டி, புலியகுளம் வித்யா நிகேடன் பப்ளிக் பள்ளி, துடியலூர் விவேகம் பள்ளி, கோவை வட்டமலைபாளையம் கங்கா நர்சிங் கல்லூரி, கோவை பொள்ளாச்சி ரோடு கற்பகம் அகாடமி, பட்டணம் எஸ்எஸ்விஎம் பள்ளி, திருச்சி ரோடு ரத்தினவேல் சுப்பிரமணியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சவுரிபாளையம் கேந்திரிய வித்யாலயா, காளப்பட்டி ரோடு நேரு நகர் பிப் பள்ளி உள்ளிட்ட 9 மையங்களில் நடந்தது. மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வினை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.

    தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது.

    தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுத வந்த மாணவர்கள் காலை 11.30 மணியில் இருந்தே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப் பட்டனர். 1.30 மணி வரை மட்டுமே அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப் பட்டனர்.

    1.30 மணிக்கு பிறகு வந்த மாணவ, மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.தேர்வு அறைக்குள் நுழைவு சீட்டு மற்றும் அடையாள சான்று மட்டுமே எடுத்து செல்ல அனுமதித்தனர்.

    தேர்வர்கள் மெட்டல் டிடெக்டர்களின் உதவியுடன் நுழைவு வாயிலில் பரிசோதனை செய்யப்பட்ட பின்பு தேர்வறைக்குள் அனுமதிக்க ப்பட்டனர்.

    தேர்வு அறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதிக் கப்படவில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், கம்மல், மூக்குத்தி அணியவும் தடை விதிக்கப்பட்டது. தலைமுடியில் ஜடை பின்னல் போட அனுமதிக்கப்படவில்லை.

    மேலும் அனுமதிச் சீட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது. தவறான விடைக்கு நெகட்டிவ் மதிப்பெண் இருப்பதால் தேர்வின்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.கோவையில் நீட் தேர்வு நடக்கும் மையங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வாடிக்கையாளர்களுக்கு போலி- இமெயில் அனுப்பி மோசடி செய்துள்ளார்
    • கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

    கோவை,

    கோவை வெள்ளலூர் அசோகர் தெருவை சேர்ந்தவர் வெங்கட் கிருஷ்ணா(வயது51). தனியார் கம்பெனி உரிமையாளர்.

    இவர் தானியங்கி தீ பாதுகாப்பு உபகரணங்களை தயாரித்து டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இவரது கம்பெனிக்கு தமிழகம் மட்டுமின்றி பிறவெளி மாநிலங்களிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    இந்தநிலையில், வெங்கட் கிருஷ்ணா கம்பெனியின் இ-மெயில் முகவரியை முடக்கிய மர்ம நபர், அவரது வாடிக்கையாளர்களுக்கு போலி- இமெயில் அனுப்பி உள்ளார்.

    அதில் நிறுவனத்தின் வங்கி கணக்கை முடக்கி வேறொரு வங்கி கணக்கை அனுப்பினார். தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் ரூ. 24.94 லட்சத்தை மர்ம நபர் தனது வங்கி கணக்கிற்கு செலுத்த வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

    இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த வெங்கட் கிருஷ்ணா கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் கம்பெனி வங்கி கணக்கை முடக்கி நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • குடிநீர் மாநகராட்சியில் உள்ள 30 வார்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது
    • கேரள அரசு 45 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்க அனுமதிப்பது இல்லை.

    கோவை

    கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணையாக சிறுவாணி அணை உள்ளது.

    இந்த அணை கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் மாநகராட்சியில் உள்ள 30 வார்டு மக்களுக்கு வழங்கப்படுவதுடன், வழியோரங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    சிறுவாணி அணை 49.53 அடி உயரம் கொண்டது. ஆனால் கேரள அரசு 45 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்க அனுமதிப்பது இல்லை.

    கடந்த 3 வருடங்களாக கேரள நீர்பாசனத்துறை அணை பாதுகாப்பு காரணம் என்று கூறி சிறுவாணி அணை முழு கொள்ளளவு அடைய அனுமதிப்பதில்லை.

    அதிலும் குறிப்பாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அணையில் இருந்து அதிகப்படியான நீரினை சிறுவாணி ஆற்றில் திறந்து விட்டு அணையின் நீர்மட்டத்தை மிக கணிசமாக குறைத்துள்ளது.

    மேலும் தற்போது மழையின்றி அணையில் நீர்மட்டம் குறைந்த காரணத்தினால், சிறுவாணி அணையில் இருந்து குகை வழிப்பாதை வழியாக நாள் ஒன்றுக்கு வரும் நீரின் அளவு தற்போது மிகவும் குறைந்துள்ளது.

    இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அணையின் நீர்மட்டம் 7.5 அடியாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 45 எம்.எல்.டி. நீர் குடிநீர் தேவைக்காக எடுக்கப்படுகிறது. மாநகர பகுதிகளுக்கு 41 எம்.எல்.டி நீர் தரப்படுகிறது என்றார்.

    • மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த பசுமாடு ஒன்றினை சிறுத்தை தாக்கி இழுத்துச்சென்றுள்ளது.
    • கேமரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வனத்துறையினர் நடவடிக்கை

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானை,காட்டு மாடு, மான்,சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவுக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

    காரமடையை அடுத்துள்ள முத்துக்கல்லூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(45). விவசாயியான இவர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பசு மாடுகளை வளர்த்து பால் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை தான் வளர்த்து வரும் மாடுகளை முத்துக்கல்லூர் பகுதியை ஒட்டியுள்ள தோகை மலை அடிவாரப்பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துச்சென்றுள்ளார்.

    அப்போது,அங்கு மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த பசுமாடு ஒன்றினை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து பதுங்கி இருந்த சிறுத்தை தாக்கி இழுத்துச்சென்றுள்ளது. மாட்டின் அலறல் சத்தம் கேட்ட கோவிந்தராஜ் மாட்டினை சிறுத்தை தூக்கி சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதனையடுத்து அவர் காரமடை வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.விரைந்து வந்த வனத்துறையினர் உதவியுடன் அங்கு சென்று பார்த்த போது அங்குள்ள புதர் பகுதியில் பசுமாடு இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

    இதனையடுத்து உயிரிழந்த பசுமாட்டினை வனத்துறையினர் ஆய்வு செய்தபோது சிறுத்தை தாக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும்,காலடித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டும் அது சிறுத்தைதான் என வனத்துறையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காரமடை வனச்சரகர் திவ்யா கூறுகையில் முத்துக்கல்லூர் பகுதியில் பசு மாட்டினை அடித்துக்கொன்றது குறித்து காலடித்தடங்கள் மற்றும் நகக்கீறல்கள் உள்ளிட்டவற்றை வைத்து அது சிறுத்தை தான் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது.

    கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பெயரில் விவசாயி கோவிந்தராஜின் பட்டா நிலம்,இரவு நேரங்களில் மாடுகளை அடைக்கும் பட்டி சாலை, வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறும் இடம் என 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், நடமாட்டம் தெரிய வந்தவுடன் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் கூண்டு வைத்து பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

    • அடிக்கடி தனது தாயிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்
    • விரக்தி அடைந்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை,

    கோவை பொள்ளாச்சி, பாலக்காடு ரோடு பகுதியை சேர்ந்தவர் விமல்பிரபு (24). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு ஐ.டி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.

    விமல்பிரபுவிற்க்கு குடிபழக்கம் உள்ளது. இவர் அடிக்கடி தனது தாயிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். அத்துடன் பணம் தராவிட்டால் விஷம்குடித்து இறந்து விடுவதாகவும் மிரட்டி வந்தார்.

    நேற்று மீண்டும் தனது தாயிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு பிரிவு போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கின்றனர்
    • அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை,

    கோவையில் நேற்று போலீசார் நடத்திய தீவிர சோதனையில் ஒரே நாளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 2.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை மாநகரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை கும்பலை பிடித்து வருகின்றனர். இந்த நிலையில், கோவை மாநகரில் நேற்று போலீசார் கஞ்சா விற்பனையை ஒழிக்க தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரத்தினபுரி, செல்வபுரம், குனியமுத்தூர், சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து கஞ்சா விற்பனை கும்பலை சேர்ந்த ரத்தினபுரி சம்பத் நகர் சூர்யபிரகாஷ்(23), செல்வபுரம் கீரைத்தோட்டத்தை சேர்ந்த சரவணன்(40), தேனி மாவட்டத்தை சேர்ந்த கோவை கல்லூரி மாணவர் மாதேஷ் குமார்(19) உள்ளிட்ட 10 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • விளையாடும் போது தடுமாறி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.
    • செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை அருகே உள்ள ஒத்தகால் மண்டபத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்.

    இவரது மகள் ஹார்சினி (வயது 3). சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டு முன்பு விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி அங்கு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.

    சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சிறுமியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு ஹார்சினிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாகடர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • அபிநயாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பழனி கவுண்டன்புதூரை சேர்ந்தவர் தனபால்.

    இவரது மகள் அபிநயா (வயது 17). இவர் பள்ளியில் படிக்கும் போது அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ் (18) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் அபிநயாவின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர்.

    இதனால் அபிநயா காளிதாசுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். ஆனால் காளிதாஸ் செல்போன் மூலமாக அழைத்து தொந்தரவு கொடுத்து வந்தார்.

    கடந்த 3-ந் தேதி அபிநயாவின் வீட்டிற்கு சென்ற காளிதாஸ் ஏன் என்னுடன் பேசவில்லை என கேட்டார். அபிநயா சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் வந்தனர். ஆனால் அதற்குள்ளாகவே அவர் அங்கு இருந்து சென்றார்.

    இது குறித்து அபிநயா காளிதாஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவரை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    வீட்டிற்கு சென்ற அபிநயா திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட அபிநயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக் அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காட்டு பகுதியில் வைத்து அவர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி.

    இவர் 10-ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். தந்தை இறந்து விட்டதால் சிறுமி தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.

    சிறுமியின் வீட்டு அருகே தாஸ் என்ற கவுதம் (வயது 30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி விட்டது

    சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த தாஸ், சிறுமியிடம் பேச வேண்டும் என கூறி, அருகே உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து அவர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் நடந்ததை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி விட்டு தாஸ் அங்கு இருந்து சென்றார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதையடுத்து அவரது தாய் சிறுமியை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் சிறுமியை காட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாளை(ஞாயிற்றுகிழமை) 9 மையங்களில் நடக்கிறது
    • தேர்வின் போது தேர்வர்கள் அனைவரும் வீடியோ பதிவு செய்யப்படுவார்கள்.

    கோவை,

    மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 7-ந் தேதி நடக்கிறது.

    கோவை மாவட்டத்தில் சரவணம்பட்டி கோயமுத்தூர் பப்ளிக் பள்ளி, விகேகம் சீனியர் செகண்டரி பள்ளி, புலியகுளம் ரோடு வித்யா நிகேதன் பள்ளி, வட்டமலை பாளையம் கங்கா நர்சிங் கல்லூரி, ஈச்சனாரி கற்பகம் அகாடமி, சிங்காநல்லூர் எஸ்.எஸ்.வி.எம்.வேர்ல்டு பள்ளி, திருச்சி ரோடு ரத்தினம் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி, சவுரி பாளையம் ரோடு கேந்திர வித்யாலயா பள்ளி, நேரு நகர் சுகுணா பிப்பள்ளி ஆகிய 9 மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளது.கோவை மாவட்டத்தில் மொத்தம் 7,127 பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர். இதில் அரசு பள்ளியில் இருந்து 166 மாணவ- மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து 42 மாணவ-மாணவிகள் என 208 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

    தேர்வுகள் மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறுகிறது.

    தேர்வு எழுத வருபவர்கள் மதியம் 1.15 மணிக்கு தேர்வு அறைக்கு அனுமதிக்கப்படுவார்கள். 1.30 மணி முதல் 1.45 மணிவரை முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கி நுழைவு சீட்டு சரிபார்க்கப்படும்.

    மதியம் 1.45 மணிக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும்.

    தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்த மொழியில் தேர்வை எழுதலாம். நுழைவு சீட்டு, அடையாள சான்று தவிர வேறு எந்த ஆவணங்களையும் தேர்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

    எழுது பொருட்கள், கால்குலேட்டர், பென்சில் பாக்ஸ், பென் டிரைவ், அழிப்பான்கள், செல்போன், புளூடூத், இயர்போன் ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை. வாட்ச் பேக், பெல்ட், தொப்பி அணிய கூடாது. மேலும் ஆண் தேர்வர்கள் முழு ஸ்லீவ் சட்டைகள் அணிய கூடாது. அரை ஸ்லீப் சட்டை மட்டுமே அணிய வேண்டும். குர்தா, பைஜாம் அனுமதி இல்லை. செருப்பு அணிய கூடாது. சட்டையில் பாக்கெட் இருக்க கூடாது.

    பெண் தேர்வர்கள் எம்பிராய்டரி, பூக்கள், பட்டன்களை கொண்ட ஆடை, முழு கை நீள ஸ்லீவ் ஆடை அணிய கூடாது. அரை ஸ்லீப் ஆடை அணிய வேண்டும்.

    ஜீன்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். லெக்கிங்ஸ் அணிய அனுமதி இல்லை. தேர்வு அறைக்குள் செருப்பு அணிய தடை. மேலும் தேர்வர்கள் காதணிகள், மூக்குத்திகள், மோதிரங்கள், பதக்கங்கள், நெக்லஸ்கள், பிரேஸ்லெட், கொலுசு போன்ற எந்த வகையான நகைகளையும் அணிய கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் தேர்வின் போது தேர்வர்கள் அனைவரும் வீடியோ பதிவு செய்யப்படுவார்கள். நீட் ஹால்டிக்கெட், பாஸ்போர்ட் அளவுக்கு ஒரு புகைப்படம், புகைப்ப டத்துடன் கூடிய ஆதார் போன்ற அடையாள அட்டை ஆகியவற்றை தேர்வர்கள் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். 

    • 3,250 ஹெக்டேர் பரப்பளவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ. 27.27 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டு உள்ளது
    • 2023-24-ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடம் இருந்து வரவேற்கப்படுகிறது.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நுண்ணீர் பாசன திட்டம் மூலம் 2023-24-ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடம் இருந்து வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கப்பட உள்ளன.

    சிறு, குறு விவசாயிகள் குறைந்தபட்சம் 0.40 ஹெக்டேர் முதல் அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருந்தால் பயன்பெறலாம். இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் கோவை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் 3,250 ஹெக்டேர் பரப்பளவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ. 27.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இதன்படி பாதுகாப்பான மற்றும் செமி கிறிட் 5 டிக்கல் குறுவட்ட பகுதிகளுக்கு 250 ஹெக்டேர் இலக்கும், ஓவர் எக்ஸ்பிளோடெடு மற்றும் கிறிட்டிக்கல் குறுவட்ட பகுதிகளுக்கு 3000 ஹெக்டேரும் இலக்கு பெறப்பட்டு உள்ளது. ஆனைமலை 150 ஹெக்டேர், அன்னூர் 390 'ஹெக்டேர், காரமடை 450 ஹெக்டேர், கிணத்துக்கடவு 385 ஹெக்டேர், மதுக்கரை 270 ஹெக்டேர், பி.என்.பாளையம் 140 ஹெக்டேர், பொள்ளாச்சி வடக்கு 265 ஹெக்டேர். பொள்ளாச்சி தெற்கு 145 ஹெக்டேர், சர்க்கார்சாம குளம் 125 ஹெக்டேர், சுல்தான்பேட்டை 360 ஹெக்டேர், சூலூர் 165 ஹெக்டேர், தொண்டாமுத்தூர் 405 ஹெக்டேர் என வட்டாரங்களுக்கு இலக்கு அளிக்கப்பட்டு விவசாயிகளின் விண்ணப்பங்கள் tnhorticulture.tn.gov. in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தாங்களாகவே விண்ணப்பங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் இணையதளத்தில் பதிவு செய்ய தெரியாத விவசாயிகள் வட்டார தோட்டக்கலை அலுவலர்களின் உதவியுடன் பதிவு செய்யலாம். இத்திட்டத் தின் கீழ் பயன்பெற வட்டாட்சியரால் வழங்கப்பட்ட சான்று மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, நில வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல், விண்ணப்ப தாரரின் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 2 ஊழியர்கள் ஜெப கூடத்தில் ஜன்னலை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • இதுகுறித்து ஆனந்தன் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை பேரூர் மெயின் ரோடு தனலட்சுமி நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (48). வியாபாரி. இவர் செல்வபுரம் எல்ஐசி காலனி சிஜிவி நகரில் ஜெப கூடம் நடத்தி வருகிறார். இந்தநிலையில், நேற்று 2 ஊழியர்கள் இவரது ஜெப கூடத்தில் ஜன்னலை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவர்களிடம் தகராறு செய்தார். மேலும் அங்கிருந்த லேப்டாப்பை அடித்து உடைத்து சேதப்படுத்தினார். தொடர்ந்து அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த 2 பேரை தாக்கி மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஊழியர்கள் செல்போன் மூலம் ஆனந்தனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் இதுகுறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    அதில், முன் விரோதம் காரணமாகவும், பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் ஜெப கூடத்தில் புகுந்து ஊழியர்களை தாக்கி மிரட்டிய செட்டிபாளையம் பேரூர் மெயின் ரோட்டை சேர்ந்த கந்து வட்டி தொழில் செய்யும் சுசாந்த் (36) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×