search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஜன்னலை உடைத்து சூறையாடினர்.
    • 9 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை பனைமரத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தென்னரசு (வயது48). இவர் பா.ஜனதா அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    பனைமரத்தூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தென்னரசு போலீசாருக்கு தகவல் அளித்தார் . இதன்காரணமாக அவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு எஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று தென்னரசு வீட்டுக்குள் வந்த 9 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் வீட்டு ஜன்னலை உடைத்து சூறையாடினர். இதனை தட்டிக்கேட்ட தென்னரசுவை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். பின்னர் அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்த தென்னரசுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதீய ஜனதாவை சேர்ந்தவரை தாக்கிய பனைமரத்தூர் அகஸ்தியர் தோட்டத்தை சேர்ந்த அரவிந்த் (21), அவரது தம்பி கிஷோர் (19), காமராஜர் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (20), முனீஸ்வரன் தெருவை சேர்ந்த விஜயகுமார் (19), 17 வயது சிறுவன், தெலுங்குபாளையத்தை சேர்ந்த பத்மா (53), அம்பிகா (45), ரோகிணி (41), செல்வபுரத்தை சேர்ந்த நந்தினி (42) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 9 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • படுகாயம் அடைந்த ரகுமத்துல்லா சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • கரூரில் பதுங்கி இருந்த சந்தோசை போலீசார் கைது செய்தனர்.

    கோவை,

    கோவை குனியமுத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் ரகுமத்துல்லா (வயது 29). பெயிண்டர்.

    இவரது மனைவி தஸ்லிமா. இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

    ரகுமத்துல்லா மீது வழிப்பறி, செல்போன் திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. நேற்று இரவு ரகுமத்துல்லா செல்வபுரம் பேரூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாருக்கு தனது நண்பர் மணிகண்டன்(23) என்பவருடன் சென்று மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவர்களது அருகே செல்வபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(26) என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தோஷின் நண்பர் ஒருவரது செல்போன் காணாமல் போனது. இந்த செல்போனை ரகுமத்துல்லா எடுத்திருக்கலாம் என்று சந்தோஷ் அவரிடம் கேட்டு வாக்குவாதம் செய்தார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    பின்னர் பாரில் இருந்து வெளியே வந்த ரகுமத்துல்லாவை ஆத்திரம் அடைந்த சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தினார். தடுக்க முயன்ற மணிகண்டனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த ரகுமத்துல்லா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    பின்னர் அங்கிருந்து சந்தோஷ் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து வந்த செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயம் அடைந்த மணிகண்டன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து செல்வபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சந்தோசை தேடி வந்தனர். கரூரில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

    • கோவிலில் கொடி ஏற்றத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 21 -ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணி அளவில் குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவையை அடுத்த கோவைபுதூர் என் பிளாக்கில் ஸ்ரீபத்திரகாளி அம்மன், ஸ்ரீகருப்பராயர், ஸ்ரீ குரு சக்தி நாதர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 14-வது ஆண்டு சித்திரை குண்டம் திருவிழா இன்று தொடங்கியது.

    இன்று காலை 4.30 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. காலை 7 மணிக்கு கோ பூஜையும், 7:45 மணி அளவில் சப்த கன்னி பூஜையும் நடைபெற்றது. இன்று மாலை 6.30 மணி அளவில் நாக பிள்ளையார் கோவிலில் இருந்து கொடிக்கம்பம் ஊர்வலமாக எடுத்து வந்து பத்ரகாளி அம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    நாளை புதன்கிழமை மாலை 7 மணி அளவில் பிரத்தியங்கரா தேவி ஹோமம் நடைபெற உள்ளது. 20-ந் தேதி வியாழக்கிழமை அன்று காலை 6.45 மணி முதல் மாலை 8 மணி வரை சண்டி பூஜை, ஹோமம் நடைபெற உள்ளது.

    21 -ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.45 மணி அளவில் குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 22 -ந் தேதி சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில் குருதி பூஜை நடைபெற உள்ளது. 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.35 மணிக்கு நாக பிள்ளையார் கோவிலில் இருந்து பட்டு, படைக்கலன், தீர்த்தக்குடம் ஆலயத்திற்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 24 -ந் தேதி திங்கட்கிழமை காலை 4 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற உள்ளது. பின்னர் சிறப்பு பூஜையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    காலை 8.45 மணிக்கு குண்டத்திற்கு பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு சகல வித வாத்தியங்களுடன் சக்தி கரகம் எடுக்க கோவிலில் இருந்து குளத்துப்பாளையம் கோகுலம் காலனி பொன்னுசாமி கவுண்டர் தோட்டத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சி பூஜையும் அன்னதானமும் நடைபெறுகிறது.

    மாலை 4 மணிக்கு சகல வித வாத்தியங்களுடன் பொன்னுசாமி கவுண்டர் தோட்டத்திலிருந்து சக்தி கரகம் எடுத்து கோவைப்புதூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரவு 8 00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 25-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு மகா அபிஷேகமும் அலங்கார பூஜையும் நடைபெறுகிறது. 10 மணிக்கு மேல் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

    மதியம் 12 மணிக்கு உச்சி பூஜையும், கருப்பராயர் காவடி எடுத்து விளையாடுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மதியம் 3 மணிக்கு மேல் நாக பிள்ளையார் கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீட்டு விழாவும், 5 மணிக்கு கரகம் கரைப்பதற்கு புறப்பட்டு கோவைபுதூர் ஓம் சக்தி நகர் குளத்து தோட்டத்திற்கு செல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 7.45 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்ற பின்பு கோவில் நடை அடைப்பு நடைபெறும்.

    பின்னர் மே மாதம் 1-ந் தேதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு வழக்கம் போல் நடை திறக்கப்படும். அன்று மதியம் 12 மணிக்கு கருப்பராயருக்கு உச்சி பூஜை நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை ஸ்ரீ சித்தர் சக்திநாதர் அறக்கட்டளை நிறுவனர் ஆம் ஸ்ரீ சிவஜோதி சித்தரையா செய்து வருகிறார். மேலும் பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு பத்திரகாளி அம்மன் அருள் பெற்று செல்லுமாறு விழா குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.  

    • சாலையில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை கனுவாய் சாலை, இடையர்பாளையம் மற்றும் வேலாண்டிபாளையம் ஆகிய பகுதி வழியாக தார் சாலையில் பில்லூர் 3 என்ற திட்டத்தின் கீழ் சாலையில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. வேலாண்டிபாளையம், புளியமரம், திலகர், கோவில் மேடு உள்ளிட்ட பகுதி வழியில் வாகனங்கள் செல்கின்றன.

    இந்நிலையில் திலகர் வீதி பள்ளி அருகே அருண்குமார் என்பவர் 8-ம் வகுப்பு படிக்கும் தனது மகளை மோட்டார் சைக்கிளில் பள்ளியில் விட சென்று உள்ளார். அப்போது திலகர் நகர் பகுதியில் உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவரது மகள் படுகாயம் அடைந்தார். இதனைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தந்தை-மகள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுவதாவது:- இந்த பகுதியில் வேகத்தடை இருப்பது சரியாக தெரிவதில்லை. வெள்ளை பெயிண்ட் அடிக்காததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்தப் பாதையில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு உள்ளது. பல முறை வார்டு உறுப்பினரிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி இப்பகுதியில் மேலும் விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    • தந்தையிடம் தனது சொந்த தொழிலைத் தொடங்க உதவுமாறு கேட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி இளச்சிபாளையத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது64). இவரது மகன் பிரகாஷ் (31). இந்நிலையில் பிரகாஷூக்கு குடிபழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்து விட்டு வந்து தனது தந்தையிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று பிரகாஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது அவர் தந்தையிடம் தனது சொந்த தொழிலைத் தொடங்க உதவுமாறு கேட்டார். ஆனால் அவரது தந்தை மறுத்துவிட்டார், இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் உடைத்தார். இதனையடுத்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிரகாஷ் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 11-ந் தேதி மாலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.
    • பயர் டிரேசிங் முறையிலும் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்தது

    கோவை,

    கோவை வன கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்தில் உள்ள நாதே கவுண்டன்புதூர் அருகே உள்ள மலையில் கடந்த 11-ந் தேதி மாலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.

    இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் மதுக்கரை வனச்சரக ஊழியர்கள் கொண்ட குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயை அணைக்கும் பணியில் விமானப்படையின் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.

    இதன்மூலம் தீ கட்டுப்படுத்த நிலையில் 2 மண்டலங்களில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. அதன்படி90 சதவீதம் தீ அணைக்கப்பட்டது.

    நேற்று 7-வது நாளாக தீயை அணைக்கும் பணி நடந்தது. இப்பணியில்வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் உள்பட சுமார் 200 பேர் ஈடுபட்டனர்.

    காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், புற்கள் அதிகளவில் இருந்ததாலும் காட்டு தீ நேற்று காருண்யா பின்புறம் உள்ள மலைப்பகுதி வரை பரவியது. இதையடுத்து, தீ தடுப்பு கோடுகள் அமைத்தும், பயர் டிரேசிங் முறையிலும் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்தது.தீயை அணைக்கும் பணியில் கோவை வனத்துறையினர் மட்டுமின்றி நீலகிரி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர்.

    7 நாட்களாக வனத்துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையால் காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

    • 7 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
    • புதிய நூலகம் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அன்னூர்

    கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பேபாளையம் ஊராட்சியில் பொதுநூலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நூலகத்தை போடிதிம்மபாளையம், குரும்பபாளையம், செங்காளிபாளையம், குப்பேபாளையம், கணபதிபாளையம், வடுகபாளையம், செம்பாகவுண்டன் புதூர் என 7 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    நூலகம் கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் நூலகத்தின் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

    மேலும் நூலகத்தின் சுவர்கள் அனைத்தும் விரிசல் விட்டு மழைக்காலங்களில் மழை நீர் உள்ளே வந்து புத்தகங்கள் நனைந்து விடுகின்றன.

    இதனால் புத்தகங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே உடனடியாக இதை அரசு கவனத்துக்கு கொண்டு சென்று நூலகத்தை மாற்றி விட்டு புதிய நூலகம் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 ஆண்டுகளாக கோவை மாநகராட்சி நிர்வாகம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை.
    • பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கவுன்சிலர் சர்மிளா சந்திரசேகரை பாராட்டி உள்ளனர்.

    கோவை,

    கோவை மாநகராட்சி 38-வது வார்டு குருசாமி நகரில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பயன்பெரும் வகையில் நவீன பூங்கா அமைக்கப்பட்டது.

    கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் பயன்பெற்று வந்தனர்.இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கோவை மாநகராட்சி நிர்வாகம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் இந்த பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. மேலும் பூங்கா முழுவதும் புதர்மண்டி மக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கவுன்சிலர் சர்மிளா சந்திரசேகரிடம் புகார் அளித்தனர். உடனடியாக அவர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் சேர்ந்து பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இது குறித்து மாமன்ற கூட்டத்தில் எடுத்து கூறியும், மனுக்கள் கொடுத்தும் எந்த பயனும் இல்லை. மாறாக தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறார்கள். பூங்காக்களை பொருத்தவரை தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறப்பாக பராமரிக்க முடியும். இருந்த போதிலும் மாநகராட்சி டெண்டர் மூலம் பணிகளை மேற்கொள்ளும் என்று காலம் தாழ்த்தி வருகிறார்கள். இந்த அவலம் என்பது அ.தி.மு.க. கவுன்சிலர் வார்டில் மட்டுமல்ல தி.மு.க. கவுன்சிலர் இருக்கக்கூடிய பகுதிகளிலும் இதே நிலை தான்.

    எனவே மாநகராட்சி நிர்வாகத்தை நம்பி பயனில்லை என்பதால் தானாக முன்வந்து பணிகளை சொந்த செலவில் பொதுமக்களின் ஆதரவோடு முன்னெடுத்துள்ளோம். மேலும் இன்று குருசாமி நகர் பகுதியில் உள்ள இந்த பூங்காவில் பணிகளை தொடங்கி உள்ளோம். அடுத்தடுத்து அனைத்து பூங்காக்களையும் தூய்மைப்படுத்தி புத்துயிர் அளிக்கும் பணிகளில் மேற்கொள்ள உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க. கவுன்சிலரின் இந்த முயற்சிக்கு பொது மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கவுன்சிலர் சர்மிளா சந்திரசேகரை பாராட்டி உள்ளனர்.

    • மோட்டார் சைக்கிள் ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது.
    • போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் ஒலம்பசை சேர்ந்தவர் அருண் (வயது 38). காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நந்தகுமார் (28). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சுங்கம் ரவுண்டானா அருகே சென்று கொண்டு இருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை அருண் ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டுன் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அருண் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நந்தகுமார் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை- திருச்சி ரோட்டை 70 வது மதிக்கதக்க முதியவர் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற லோடு வேன் முதியவர் மீது ேமாதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய முதியவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவைஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் அருகே உள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது மனைவி மோகன பிரியா (29). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் கோவைப்புதூர் பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மோகன பிரியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தன்னை பார்த்து கொள்ள யாருமே இல்லை மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
    • வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை

    பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள தேவம்பாடி வலசை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 42). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாய், தந்தையும் இறந்து விட்டனர். இவரது தம்பி வெளியூரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். இதனால் பிரகாஷ் தனியாக வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக இவர் தன்னை பார்த்து கொள்ள யாருமே இல்லை என மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். மேலும் தனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாகவும், இதன் காரணமாக எங்கு வேலைக்கு சென்றாலும் அங்கு என்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும், இதனை கடவுள் கனவில் வந்த கூறியதாகவும் அக்கம் பக்கத்தினரிடம் கூறி வந்தார்.

    மிகுந்த மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் கடந்த 5-ந் தேதி பொள்ளாச்சியில் இருந்து செல்லாண்டி கவுண்டன்புதூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி கண்ணாடியை உடைத்தார். இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பிரகாஷ் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அவரது வீட்டில் இருந்த தூர்நாற்றம் வந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் வடக்கிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அப்போது வீட்டில் பிரகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தற்போது 75 சதவீதம் அளவிற்கு பணிகள் முடிவு பெற்றுள்ளன.
    • நீர்வழிப் பாதையில் உள்ள முட்புதர்களை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் இருந்து வெள்ளியங்காடு செல்லும் பாதையில் பெரியபள்ளம் பகுதியில் ரூ.2.67 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியானது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கியது.

    இந்த நிலையில் தடுப்பணை கட்டும் பணிகள் விறுவிறுவென நடைபெற்று தற்போது 75 சதவீதம் அளவிற்கு பணிகள் முடிவு பெற்றுள்ளன.

    இன்னும் 10 தினங்களில் தடுப்பணை கட்டும் பணி முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே நீர்வழிப் பாதையில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    தோலம்பாளையம் பெரியபள்ளம் பகுதியில் தடுப்பணை கட்டினால் மழைக்காலங்களில் வீணாகும் மழை நீரை சேமித்து வைக்க இயலும்.

    இதனால் தோலம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயம் செழிக்கும்.

    இதனால் பெரியபள்ளம் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என தாங்கள் விடுத்த தொடர் கோரிக்கையினை ஏற்று அப்பகுதியில் தடுப்பணை கட்ட அரசு நிதி ஒதுக்கி அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் தடுப்பணை கட்டப்பட்டு வரும் பகுதியில் நீர் வழித்தடங்கள் புதர் மண்டி காணப்படுகிறது.

    இதனை அகற்றினால் மட்டுமே இப்பகுதியில் தடுப்பணை கட்டுவதன் நோக்கம் நிறைவேறும். அதனை செய்யாமல் தடுப்பணை கட்டி என்ன பயன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் பணிகள் தொடங்கப்பட்டது.
    • அப்பகுதி மக்கள் குடி தண்ணீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில், கோபனாரி, ஆலங்கண்டி, ஆலங்கண்டி புதூர், சீங்குழி, பட்டி சாலை, செங்குட்டை, மேல்பாவி, குழியூர், ஊக்கையனூர், ஊக்கப்பதி,மொட்டியூர், நீலாம்பதி உள்ளிட்ட பல்வேறு மலைவாழ் கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அடர் வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த மலை கிராமங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் கடந்த 2021-2022 ஆம் ஆண்டு 15-வது நிதி குழு மானியத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆலங்கண்டி பகுதியில் அமைக்க திட்டமிட்டது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது.

    இந்த நிலையில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் இப்பணியை பாதியில் நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாகவே அப்பகுதி மக்கள் குடி தண்ணீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கோபனாரி பகுதியைச்சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.10 லட்சம் மதிப்பில் பூமி பூஜை போடப்பட்டு அப்பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதனால் தாங்கள் குடிநீருக்காக வனப்பகுதிக்குள் செல்லும் போது மனித-வனவிலங்குகள் உயிரின மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதனால் அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.தோலம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயா செந்தில் கூறும் போது, பணிகளை எடுத்த ஒப்பந்ததாரரிடம் இருந்து சப் காண்ட்ராக்ட் எடுத்த நபர் பணத்தைப் பெற்றுக் கொண்டு பணிகளை முடிக்காமல் இருந்தார். இதனால் தற்போது வேறு ஒப்பந்ததார் மூலம் இப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. தற்போது ஒப்பந்தம் எடுத்துள்ள நபர் தோலம்பாளையம் புதூர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.அப்பணிகளை முடித்து அடுத்த வாரத்திற்குள் ஆலங்கண்டி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணிகள் தொடரும் என்றார்.

    ×