search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றவாளி"

    • மேற்கு வங்க பா.ஜனதா தலைவர் டாக்டர் சுகந்தோ மஜும்தார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு படத்தை வெளியிட்டார்.
    • தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லலித்ஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தபஸ்ராயுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் அத்துமீறிய வழக்கில் மூளையாக செயல்பட்ட லலித்ஜாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. தபஸ்ராயுடன் நீண்ட காலமாக தொடர்பு இருந்ததாக பா.ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இது தொடர்பாக மேற்கு வங்க பா.ஜனதா தலைவர் டாக்டர் சுகந்தோ மஜும்தார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு படத்தை வெளியிட்டார்.

    அதில், தபஸ்ராயுடன், லலித்ஜா செல்பி புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி உள்ளது. அந்த புகைப்படத்துடன் மஜும்தாரின் பதிவில், நமது ஜனநாயக கோவில் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லலித்ஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தபஸ்ராயுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

    எனவே அவரது உடந்தையை விசாரிக்க இந்த ஆதாரம் போதாதா? என பதிவிட்டு இருந்தார்.

    இதே போல பா.ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறுகையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இப்போது திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது என கூறியதோடு, இந்தியா கூட்டணி மீதும் புகார் கூறியுள்ளார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. பார்வையாளர்களாக வந்தவர்களுக்கு பாஸ் வழங்கிய பா.ஜனதா கட்சியின் மைசூர் எம்.பி. பிரதாப் சிம்ஹாவை விசாரிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

    அதே நேரம் பாஸ்களை வழங்கியதை தவிர குற்றம் சாட்டம் பட்டவர்களுடன் தனக்கு எந்த தொடர்பு கிடையாது என பிரதாப் சிம்ஹா மறுத்துள்ளார். 

    காதல் ஜோடி கொலை வழக்கில் கொலையாளி திவாகரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. #SuruliMalaiMurder #SC
    புதுடெல்லி:

    தேனி அருகே சுருளிமலையில் கடந்த 2011ம் ஆண்டு கஸ்தூரி மற்றும் அவரது காதலன் எழில் முதல்வன் ஆகியோர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட திவாகர் மீது தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திவாகருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.



    இதையடுத்து திவாகர் தரப்பில் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், திவாகரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன் திவாகரின் மேல்முறையீட்டு மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திவாகருக்கு வரும் 22ம் தேதி (திங்கட்கிழமை) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. #SuruliMalaiMurder #SC

    தேவகோட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளியை உடனடியாக கைது செய்யக் கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவகங்கை:

    தேவகோட்டையில் கடந்த 26–ந்தேதி இரவு பிரபு (வயது 28) என்ற வாலிபர் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்குபதிவு செய்து 8 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான ஜெயராமன் மகன் பிரகாஷ், சின்னத்தம்பி மகன் முத்துக்குமார் ஆகியோர் தலைமறைவானார்கள். இவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், முத்துக்குமார் திருச்சி கோர்ட்டில் சரணடைந்தார்.

    முக்கிய குற்றவாளியான பிரகாஷ் என்பவர் இதுவரை தலைமறைவாக இருக்கிறார். இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 1,150 பேர் நேற்று கலெக்டர் ஜெயகாந்தனை சந்திக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததாக கூறினர். அதற்கு போலீசார் மறுத்ததும், அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களில் 10 பேரை மட்டும் கலெக்டரை சந்திக்க அனுப்பி வைத்தனர். மற்ற அனைவரையும் போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே அனுப்பினர்.

    இந்தநிலையில் வெளியே இருந்தவர்கள் திடீரென்று அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாலிபரை கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். அதைதொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கலெக்டரை சந்தித்து விட்டு வெளியில் வந்தவர்கள், தங்களுடன் வந்தவர்களை காணாததால் அதிர்ச்சியடைந்தனர். அதில் கலெக்டரை சந்திக்க சென்ற 2 பெண்கள் தங்கள் விட்டு சென்ற கைக்குழந்தைகளை காணவில்லை என்று பதறினர். உடனே அங்கிருந்த போலீசார் அனைவரும் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்றனர்.

    இது குறித்து கலெக்டரிடம் சென்று முறையிட்டனர். இதையடுத்து கலெக்டர் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #pollachiissue

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீது கூட்டு பாலியலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், தளி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டி.ராமச்சந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் லகுமய்யா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    மேலும் இதில் இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

    பெண்கள் மீதும், சிறுமிகள் மீதும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை தொடராமல் இருக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. #pollachiissue

    பொள்ளாச்சி பலாத்கார விவகாரத்தில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #pollachimolestation
    பொள்ளாச்சி 

    பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதில் தொடர்புடைய சபரிராஜன் (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை போலீஸ் கைது செய்தது. கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பேசுகையில், பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் அரசியல் கட்சியினர் யாருக்கும் தொடர்பில்லை. உள்நோக்கத்துடன் தவறான செய்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார். 

    இரண்டு ஆண்டுகளாக தற்கொலை செய்துக்கொண்ட பெண்களின் விபரங்களை எடுத்தும் விசாரிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #pollachimolestation
    வேடசந்தூர் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கெண்டையகவுண்டனூரைச் சேர்ந்தவர் சவடமுத்து (வயது 45). இவருக்கு பூங்கொடி, லெட்சுமி ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

    சவடமுத்து தி.மு.க. கிளை பிரதிநிதியாக இருந்து வந்தார். சொந்தமாக வேன், லாரிகள் வைத்து ஓட்டி வந்தார். கடந்த வாரம் தனது அலுவலகத்தில் தூங்கிக் கொண்டு இருந்த சவடமுத்துவை மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரது உடலை மீட்டு விசாரித்து வந்தனர். நகை, பணத்துக்காக இந்த கொலை நடந்ததா? என விசாரணை நடத்தப்பட்டது. ஏனெனில் சவடமுத்து கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் மாயமாகி இருந்தது.

    அதன் பிறகு அலுவலகத்தில் சோதனை நடத்திய போது அந்த நகையை அவர் அடகு வைத்திருந்தது தெரிய வந்தது. எனவே இந்த கொலை வேறு காரணங்களுக்காக நடந்திருக்கலாம் என போலீசார் தீர்மானித்தனர்.

    சவடமுத்துவுக்கு வேறு பெண்கள் யாருடனாவது தொடர்பு இருந்ததா? என விசாரணை நடத்தப்பட்டது. அவரது செல்போனில் அதிக முறை யாரிடம் பேசினார்? கொலை செய்யப்பட்டதற்கு முன்பாக அவருக்கு ஏதேனும் அழைப்புகள் வந்ததா? என விசாரணை நடத்தப்பட்டது.

    ஆனால் அதில் எவ்வித தடயமும் சிக்க வில்லை. இதனால் கொலையாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானியை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்து அபராதம் விதித்துள்ளது. #RelianceCommunication #AnilAmbani
    புதுடெல்லி:

    அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் நஷ்டத்தில் திணறி வரும் நிலையில், எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டிய 1600 கோடி ரூபாய் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அந்த நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் நீதிமன்றம் மூலம் சென்டில்மென்ட் தீர்வு காணப்பட்டு 550 கோடி ரூபாய் பெற்றுக்கொள்ள எரிக்ஸன் சம்மதித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அந்தத் தொகையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம்  கொடுத்திருக்க வேண்டும். அனில் அம்பானி அந்தத் தொகையை வழங்கவில்லை.



    இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது எரிக்ஸன் நிறுவனம். நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட விதிகளை மதிக்கவில்லை என்று எரிக்ஸன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2018-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் நிலுவை தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ஆனால், குறிப்பிட்ட தேதி கடந்தும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானி அந்த தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கவில்லை. இதையடுத்து, எரிக்ஸன் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    கடந்த 12ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அனில் அம்பானி நேரில் ஆஜரானார். மேலும், அவரது சார்பில் 118 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் அனில் அம்பானி மற்றும் அந்த நிறுவனத்தின் இரண்டு இயக்குனர்களை குற்றவாளிகள் என அறிவித்தது.

    அத்துடன், அனில் அம்பானி மற்றும் 2 இயக்குனர்களும் இன்னும் 4 வாரங்களுக்குள் எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.453 கோடியை செலுத்த வேண்டும், தவறினால் 3 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

    இதுதவிர 3 பேருக்கும் தலா 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை ஒரு மாதத்திற்குள் செலுத்தாவிட்டால், ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. #RelianceCommunication #AnilAmbani 
    பாகிஸ்தானில் ரூ.1,400 கோடி ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் குற்றவாளி என அந்நாட்டு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. #ShahbazSharif #Pakistan #Corruption
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் (வயது 67). ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஷாபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அத்துடன் அவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார்.

    இந்த நிலையில் ஷாபாஸ் ஷெரீப் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி பதவி வகித்தபோது, ஆசியானா வீட்டு வசதி திட்டத்தில், ரூ.1,400 கோடி ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

    அதேபோல் ரூ.400 கோடி மதிப்பிலான பஞ்சாப் சாப் சானி ஊழலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து, மேற்கூறிய 2 ஊழல் புகார்கள் தொடர்பாக ஷாபாஸ் ஷெரீப் மீது அந்நாட்டு தேசிய பொறுப்புடைமை முகமை (லஞ்ச ஒழிப்பு போலீசார்) வழக்குப்பதிவு செய்தது.

    ஷாபாஸ் ஷெரீப் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் லாகூரில் உள்ள தேசிய பொறுப்புடமை கோர்ட்டில், ஆசியானா வீட்டு வசதி ஊழல் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி சையத் நஜாமுல் ஹாசன் வழக்கை விசாரித்தார்.

    ஷாபாஸ் ஷெரீப் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 9 பேர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். தேசிய பொறுப்புடைமை முகமை சார்பில் ஆஜரான வக்கீல் அலி ஜான்ஜூவா, ஷாபாஸ் ஷெரீப் உள்ளிட்ட 10 பேர் மீதான குற்றசாட்டுக்குரிய ஆதாரங்களை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

    ஷாபாஸ் ஷெரீப் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதால் அவரை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என கூறி தேதி குறிப்பிடாமல் வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். அப்போது ஷாபாஸ் ஷெரீப்பின் வக்கீல், தனது கட்சிக்காரருக்கு உடல் நிலை சரி இல்லாததால், அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும், எனவே தண்டனை அறிவிப்பை ஒரு வாரத்துக்கு தள்ளிப்போட வேண்டும் என்றும் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். #ShahbazSharif #Pakistan #Corruption
    மும்பை இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்று நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த குற்றவாளி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். #MumbaiBlast #HanifSyed
    மும்பை:

    மும்பை கேட்வே ஆப் இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் ஆகிய இரண்டு இடங்களில் கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந் தேதி குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

    இரண்டு டாக்சிகளில் வைக்கப்பட்டு இருந்த சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்து சிதறியதில் 52 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 260 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மும்பையை உலுக்கிய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஹனிப் சையது, அவரது மனைவி பெமிடா மற்றும் அஷ்ரத் அன்சாரி ஆகிய 3 பேருக்கு மும்பை பொடா சிறப்பு கோர்ட்டு கடந்த 2009-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

    தீர்ப்புக்கு பின்னர் முகமது ஹனிப் சையது நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அண்மையில் சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை அவரது உடல் நிலைமை மோசமானது. உடனடியாக சிறை அதிகாரிகள் அவரை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் அவரது உடல் நிலையை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

    இந்த நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்தார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 1½ மணி நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    முகமது ஹனிப் சையது உயிரிழந்தது பற்றி மும்பையில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் நாக்பூர் சென்றனர்.

    முதல்கட்ட தகவலின் அடிப்படையில் முகது ஹனிப் சையது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என கருதுவதாக நாக்பூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ராணி போஸ்லே தெரிவித்தார். இருப்பினும் அவரது மரணத்துக்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனையின் மூலம் தான் உறுதியாக தெரியவரும் என்றார்.
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொல்லப்பட்ட வழக்கில் முன்னர் மம்தாவின் ஆதாரவாளராக இருந்து பா.ஜ.க.வுக்கு தாவிய முகுல் ராய் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். #MukulRoybooked #TMCMLAkilling #SatyajitBiswas
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ளது கிருஷ்ணகஞ்ச் சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

    இந்நிலையில், எம்.எல்.ஏ. சத்யஜித் பிஸ்வாஸ் வங்காளதேசம் நாட்டின் எல்லைப்பகுதியான நாடியா மாவட்டம், புல்வாரியில் உள்ள தனது வீட்டின் அருகில் நடந்த சரஸ்வதி பூஜையில் நேற்று பங்கேற்றார்.

    அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சத்யஜித் பிஸ்வாசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியில் சத்யஜித் பிஸ்வாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  சத்யஜித் பிஸ்வாஸ் கொல்லப்பட்ட வழக்கில் முன்னர் மம்தாவின் ஆதாரவாளராக இருந்து கடந்த ஆண்டு பா.ஜ.க.வுக்கு தாவிய முன்னாள் எம்.பி. முகுல் ராய் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த கொலை வழக்கில் இவருடன் மேலும் மூன்றுபேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #MukulRoybooked #TMCMLAkilling #SatyajitBiswas 
    பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி மெகுல் சோக்சி ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். #PNBFraud #MehulChoksi #IndianCitizenship
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, அவரது உறவினர் நிரவ்மோடி ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. வெளிநாடு தப்பிச்சென்ற அவர்கள் இருவரையும் இந்தியா தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது.

    ஆண்டிகுவா நாட்டுக்கு தப்பிச்சென்ற மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு அழைத்துவர தூதரகம் வழியாகவும், சட்டரீதியாகவும் இந்தியா முயற்சி செய்துவருகிறது. இந்நிலையில் மெகுல் சோக்சி கடந்த ஆண்டு ஆண்டிகுவா நாட்டின் குடியுரிமை பெற்றார். இந்திய குடிமக்கள் வெளிநாட்டு குடியுரிமை பெறும்போது தங்கள் இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். அதன்படி மெகுல் சோக்சி ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.  #PNBFraud #MehulChoksi #IndianCitizenship 
    15 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் பீகார் எம்.எல்.ஏ. ராஜ்பல்லா யாதவ் இன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். #RJDMLA #RajballabhYadav #RajballabhYadavconvicted
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜ்பல்லா யாதவ்.  ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமியை கடந்த 2016-ம் தேதி கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியே போலீசில் புகார் அளித்தார்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி, மயக்கி, பாலியல் உறவுக்காக எம்.எல்.ஏ.விடம் ஒப்படைத்த சுலேகா தேவி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவருடன் சுலேகாவின் தாய் ராதா தேவி, சோட்டி குமாரி, துளசி தேவி, மோத்தி ராம் ஆகியோரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



    இதற்கிடையில், ராஜ்பல்லா யாதவை கட்சியில் இருந்து நீக்கியதாக அம்மாநில ராஷ்டரிய ஜனதா தளம் தலைவர் ராமச்சந்திரா புர்பே அறிவித்தார். தலைமறைவாக இருந்த ராஜ்பல்லா யாதவை பின்னர் போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

    சுமார் இரண்டாண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ராஜ்பல்லா யாதவ் உள்பட 5 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ளார். இவர்களுக்கான தண்டனை விபரம் தொடர்பாக வரும் 21-ம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது. #RJDMLA #RajballabhYadav #RajballabhYadavconvicted

    ×