search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏரி"

    பாடாலூர் அருகே புதுக்குறிச்சி ஏரியில் சாலை அமைப்பதை கண்டித்து அந்தப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அருகே உள்ள காரை கிராமத்தில் ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள், கிணறுகள் காரை ஊராட்சி புதுக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான ஏரிக்கு அருகே உள்ளது. அந்த நிலத்திற்கு செல்வதற்காக புதுக்குறிச்சி ஏரியினுள் சந்திரசேகர் சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றி விட்டு, சாலை அமைத்து வருவதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஏரியில் சாலை அமைப்பதை கண்டித்து புதுக்குறிச்சி கிராமத்தை பொதுமக்கள் நேற்று காலை காரை பஸ் நிறுத்தம் அருகே ஆலத்தூர் கேட்டில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவலறிந்த ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாளன், வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் சிரில்சுதன், பாடாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏரியில் ஆக்கிரமித்து சாலை அமைப்பதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் வரும் நாட்களில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    சென்னை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பவில்லை.

    நான்கு ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம் தற்போது மொத்தம் வெறும் ஆயிரத்து 162 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் உள்ளது. இது வெறும் 10 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் மொத்தம் 4 ஆயிரத்து 875 மில்லியன் கனஅடி தண்ணீர் ஏரிகளில் இருந்தது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது வெறும் 65 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. (மொத்தக்கொள்ளளவு 3645 மி.கனஅடி) இதே போல் சோழவரம் ஏரியில் 48 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருக்கிறது.(மொத்த கொள்ளளவு 1081).

    எனவே வரும் வாரங்களில் செம்பரம்பாக்கம் ஏரியும், சோழவரம் ஏரியும் முழுவதும் வறண்டு விடும் சூழ்நிலை உருவாகி உள்ளன. பூண்டி ஏரியில் 236 மி.கன அடியும் (3231 மி.கனஅடி).செங்குன்றம் ஏரியில் 813 மி.கனஅடியும்(3300 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் வரும் நாட்களில் சென்னை மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

    சென்னையில் வழக்கமாக ஒரு குடும்பத்துக்கு 140 லிட்டர் என்ற அளவில் மொத்தம் 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் சப்ளை செய்யப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்ததன் காரணமாக கடந்த மாதம் முதலே நீர் சப்ளை குறைக்கப்பட்டுவிட்டது.

    தற்போது 450 முதல் 480 மில்லியன் லிட்டர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.

    இது தினந்தோறும் ஒருவருக்கு வழங்கப்படும் தண்ணீரில் 60 லிட்டர் குறைப்பு ஆகும். வரும் நாட்களில் தண்ணீர் வினியோகம் மேலும் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

    தற்போதைய நிலையில் மீஞ்சூர், நெமிலிச்சேரியில் உள்ள கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம், விவசாய கிணறுகள், கல்குவாரி நீரை மட்டுமே சென்னை மக்கள் நம்பி இருக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் தொழில் நிறுவனங்கள் சுத்திகரித்த நீரை மீண்டும் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    சென்னை மக்களின் ஒரே நம்பிக்கையாக வீராணம் ஏரி மட்டும் உள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளவை எட்டி இருப்பதால் அங்கிருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது அதிகரித்து உள்ளது. #tamilnews
    விழுப்புரம் அருகே ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு குண்டு அங்கு நின்ற மாட்டின் வாயில் பாய்ந்து ரத்தம் கொட்டியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள வீராமூர் ஏரியில் இன்று அதிகாலை மாட்டு வண்டி தொழிலாளர்கள் சிலர் அனுமதி பெறாமல் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதில் ஒரு குண்டு அங்கு நின்ற மாட்டின் வாயில் பாய்ந்து ரத்தம் கொட்டியது. போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியதாக கூறி மாட்டு வண்டி தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    போலீஸ் காரர்கள் மனிதநேயம் மிக்கவர்கள். அவர்கள் விலங்குகள் மீது துப்பாக்கிசூடு நடத்த மாட்டார்கள். இதில் 90 சதவீதம் போலீசார் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அந்த பகுதியில் காட்டுபன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் காட்டு பன்றிகளை விரட்ட வேட்டைக்காரர்களை கொண்டு துப்பாக்கியால் சுட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 350 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.

    இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி செப்டம்பர் 22ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 29-ந் தேதி வந்தடைந்தது.

    வடகிழக்கு பருவ மழை சீசன் தொடங்கியதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு கடந்த 28-ந் தேதி நிறுத்தப்பட்டது.

    இதன் காரணமாக 31-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்று போனது. செப்டம்பர் 29-ந் தேதி முதல் கடந்த 31-ந் தேதி வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 1,604 டி.எம்.சி. தண்ணீர் வந்த சேர்ந்தது.

    பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு தொடர்ந்து வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் இணைப்பு கால்வாயில் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று விட்டதால் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 350 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீர் பேபி கால்வாய் மூலமாக அனுப்பப்படுகிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 23 . 60 அடியாக பதிவானது. 656 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    சென்னை நகர மக்களுக்கு புதிய நீர் ஆதாரமான ஏரி-குவாரிகளில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும் பட்சத்தில் குடிநீர் சப்ளை முழுமையாக பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ChennaiWater

    சென்னை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. கோடை காலத்தில் ஏரிகளில் நீர் இருப்பு குறையும் போது சென்னைக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது போரூர் ஏரி, சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து வினியோகிக்கப்பட்டது. இதனால் குடிநீர் தட்டுப் பாட்டை சமாளிக்க முடிந்தது.

    இதைத் தொடர்ந்து சென்னை குடிநீர் ஆதாரங்களை விரிவுபடுத்தவும் புதிய நீர் ஆதாரங்களை கண்டறியவும் சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் அசோக் டோஸ்ரே, செயல் இயக்குனர் பிரபு சங்கர் ஆகியோரின் கீழ் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டது.

    அவர்கள் பொதுப்பணித் துறை, மத்திய நிலத்தடி நீர் ஆணையம், அண்ணா பல்கலைக்கழகம், கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வு மற்றும் திட்டம் வகுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் சென்னையின் புதிய குடிநீர் ஆதாரங்களாக போரூர் ஏரி, ரெட்டேரி, மணிமங்கலம் அயனம்பாக்கம், திருநீர்மலை, நேமம், அயப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், தென்னேரி, தையூர், சிட்லபாக்கம், மாம்பாக்கம், அரசன் கழனி, பெரும்பாக்கம், கொரட்டூர் ஆகிய 15 ஏரிகள் கண்டறியப்பட்டு உள்ளன.

    இதே போல சிக்கராயபுரம், எருமையூர், நன்மங்கலம், பம்மல், பல்லாவரம், திருநீர்மலை, நல்லம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள 7 கல்குவாரி நீரையும் பயன் படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    புதிதாக கண்டறியப்பட்டுள்ள நீர் ஆதாரங்களான ஏரிகள் மற்றும் கல்குவாரிகளில் இருந்து தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இதன் முடிவை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இதற்கிடையே பலகட்ட ஆய்வுக்கு பிறகு ரெட்டேரியில் உள்ள நீரை சுத்திகரித்து குடிநீருக்கு பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி சென்னை குடிநீருக்கு தினசரி 1 கோடி லிட்டர் பெறும் வகையில் ரெட்டேரியில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

    சென்னை நகர மக்களுக்கு புதிய நீர் ஆதாரமான ஏரி-குவாரிகளில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும் பட்சத்தில் குடிநீர் சப்ளை முழுமையாக பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ChennaiWater

    பூண்டி ஏரியில் தண்ணீர் வந்து சேரும் பகுதியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள லிங்க் கால்வாய் மதகு வரை கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருகின்றன.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.

    இங்கு மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாயிலும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயிலும் திறந்து விடப்படுகின்றன.

    கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியில் நீர் இருப்பு மிகவும் குறைந்ததால் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி புழல் ஏரிக்கும், மே மாதம் 21-ந்தேதி செம்பரம்பாக்கம் ஏரிக்கும், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஆகஸ்டு 27-ந்தேதி பேபி கால்வாயில் தண்ணீர் அனுப்புவதும் நின்று போனது.

    முற்றிலுமாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து நிலவியது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கடிதம் எழுதினர்.

    இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 29-ந்தேதி பூண்டிக்கு வந்தடைந்தது.

    தொடக்கத்தில் வினாடிக்கு 70 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது. அதன் பின்னர் தண்ணீர் வரத்து அதிகமானது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 620 கனஅடி வீதம் வந்து தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. கண்டலேறு அணையிலிருந்து வரும் தண்ணீர் பூண்டி ஏரியில் முழுவதுமாக பரவுவதை தவிர்த்து நேராக லிங்க் கால்வாயில் தண்ணீர் வந்து சேர்வதற்கு பொதுப் பணித்துறை அதிகாரிகள் திட்டம் வகுத்து உள்ளனர்.

    அதன்படி கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி ஏரியில் தண்ணீர் வந்து சேரும் பகுதியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள லிங்க் கால்வாய் மதகு வரை கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருகின்றன.

    பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் மேற்பார்வையில் நடை பெற்று வரும் இப்பணி ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பணிகள் நிறைவடைந்தால் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை நேராக லிங்க் கால்வாய் வழியாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விட முடியும்.

    பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி 198 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. #Poondilake #Lake

    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் படி கண்டலேறு அணையிலிருந்து கடந்த 22-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தொடக்கத்தில் வினாடிக்கு 200 கனஅடி திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் 300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 1200 கன அடியாக திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் கடந்த 29-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி 146 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 620 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சென்னை குடிநீருக்கு பேபி கால்வாயில் தண்ணீர் திறந்துவிடும் படி சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் பொதுப் பணித்துறை அதிகாரிகளை கேட்டு கொண்டனர்.

    அதன் படி நேற்று மாலை பூண்டி ஏரியில் இருந்து பேபி கால்வாயில் 20 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் பொதுப் பணித்துறை முதன்மை பொறியாளர் ஜெயராமன், செயற் பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் ரமேஷ், பொறியாளர் சந்திரகுமார் மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்கள் மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்.

    கண்ணமங்கலம் அருகே ஏரியில் தவறி விழுந்த மாணவன் பரிதாபமாக இறந்தான். சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி கோமதி. இவர்களது மகன் டெல்லிகணேஷ் (வயது 11). நீலகண்டன் இறந்து விட்டார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் டெல்லிகணேஷ் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று கோமதி 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து டெல்லிகணேசும், அவரது சித்தப்பா பலராமனின் மகன் உமாபதி (10) என்பவரும் அந்த ஊரில் உள்ள ஏரியில் விளையாடச் சென்றனர். அப்போது திடீரென இருவரும் தண்ணீரில் தவறி விழுந்தனர்.

    இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி டெல்லிகணேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். உமாபதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    போச்சம்பள்ளி பகுதியில் போதிய மழை இல்லாததால் வறட்சியின் பிடியில் மா மரங்கள் காய்ந்து கருகும் நிலையில் உள்ளன.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் வானம் பார்த்த பூமியாக நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் பல்வேறு வகையான பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக "மா'' சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்ட அளவில் மா விளைச்சளில் போச்சம்பள்ளி தாலுக்கா 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகாவில் மழை பொய்தாலும் கேரளாவில் மழை புரட்டி போட்டது. ஆனால்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  உள்ள போச்சம்பள்ளி, வெப்பாலம்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் மா சாகுபடி செய்துள்ளனர். தற்போது, இந்த பகுதிகளில் மழை இல்லாததால் மா மரங்கள் காய்ந்து கருகும் நிலையில்  உருவாகியுள்ளது. 

    இந்த நிலையில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி மா மரங்களை காப்பாற்றினாலும் சில வாராங்களில் மீண்டும் தண்ணீர் இல்லாமல் மா மரங்கள் காய்ந்து விடுகிறது. மேலும், மற்ற பயிர்களை காப்பாற்ற, பாலேகுளி ஏரியில் இருந்து  கூடுதலாக மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் நிரம்பினால், ஆண்டு முழுவதும் தண்ணீருக்கு தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும். இதன் மூலம் விவசாயம் செழிக்கும். 

    உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதற்கு தனி கவனம் செலுத்தி கால்வாய்களை சீரமைத்து போச்சம்பள்ளி பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அணைகள், ஏரிகள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் கடும் வறட்சி நிலவி போதிய தண்ணீரின்றி கரும்பு, நிலக்கடலை பயிர்கள் காய்ந்து வருகின்றன.
    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அணைகள், ஏரிகள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் கடும் வறட்சி நிலவி போதிய தண்ணீரின்றி கரும்பு, நிலக்கடலை பயிர்கள் காய்ந்து வருகின்றன.

    நடப்பு ஆண்டில் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் சுமார் 2 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு அரவை நிர்ணயித்து கரும்பு நடவு செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருவதாலும், பஞ்சப்பள்ளி சின்னாறு அணை, தும்பல அள்ளி அணை, மற்றும் பொதுப்பணித்துறை ஏரிகள் முற்றிலும் வறண்டு இருப்பதால் ஆற்றுப்பாசனம் மற்றும் நிலத்தடிநீர் பாசனம் போதிய தண்ணீரின்றியும், நிலத்தடிநீர் ஆயிரம் அடிக்குகீழ் சென்றதாலும் கரும்பு, நிலக்கடலை, காய்கறி பயிர்கள் காய்ந்து வருகின்றன.

    கரும்பு அருவடைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கரும்பு காய்ந்ததால் வெல்லம் தயாரிக்க விவசாயிகள் கரும்பை வெட்டி வருகின்றனர். இதற்கு அரசு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    ஒகேனக்கலில் சுமார் 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. தருமபுரி மாவட்டத்தில் ஓடும் காவிரி ஆற்றால் தருமபுரி, பாலக்கோடு பகுதி பொதுமக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடைப்பதில்லை.

    மேலும், குடிநீருக்காக ஒகேனக்கல்லில் இருந்து ராட்சத மோட்டர்கள் மூலம் தருமபுரி, பாலக்கோடு பகுதிகளுக்கு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகின்றது.

    தற்போது வரும் உபரிநீரை ஒகேனக்கல் குடிநீர் குழாய் மூலம் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணிதுறை ஏரிகள், அணைகள் என தண்ணீரை நிறப்பினால் நிலத்தடிநீர் மட்டம் உயரும், குடிநீர் தட்டுபாடு குறையும், விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், கூடுதலாக ஒருசில மின்மோட்டர்கள் பொருத்தினால் பொதுப்பணித் துறை ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பலாம் எனவும் கூறுகின்றனர்.

    எனவே, பொதுப் பணித் துறை ஏரிகளில் தண்ணீரை நிரப்ப பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும், வறட்சியால் கரும்பு பயிர்கள் காய்ந்து வருவதால் உடனடியாக கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மூலம் கரும்பை வெட்டவும், காய்ந்த கரும்பிற்கு இழப்பீடு வழங்கவும், கரும்பு பயிருக்காக வாங்கிய கடனை தள்ளுபடி செய்யவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சூளகிரி அருகே ஏரிகளை தூர்வாரும் பணிகளை கலெக்டர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சொரக்காயலபள்ளி மற்றும் கோட்டங்கிரியில் உள்ள ஏரிகளை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகளை கலெக்டர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறுகையில், சூளகிரி ஒன்றியம், இம்மிடிநாயக்கனபள்ளி அருகே உள்ள சொரக்காயலபள்ளி ஏரி மற்றும் அங்கொண்டபள்ளி அருகே கோட்டங்கிரி ஏரியில் தூர்வாரும் பணிகளை, சூளகிரி வட்டார ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த 2 ஏரிகளும் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், கரைகளை பலப்படுத்தும் வகையில் மண்ணை உயர்த்தி கொட்டப்பட வேண்டும். இந்த பணிகளுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    அப்போது, ஓசூர் வருவாய் கோட்ட அலுவலர் விமல்ராஜ், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரபாஸ்கர், ஆப்தா பேகம் உள்பட பலர் உடனிருந்தனர். 
    தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டதிற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜி.வி.மாதையன் தலைமை தாங்கினார். பி.என்.பி. இன்பசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர்கள் முனிராஜ், லட்சுமி மாது, சட்டதிருத்தக்குழு இணை செயலாளர் தாமரைசெல்வன், ஆதி திராவிடர் நலக்குழு இணை செயலாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.கே.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 3-ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். இதையொட்டி மாவட்டம் முழுவதும் கட்சியின் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் 1,450 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 20 முகவர்களை நியமித்து அற்கான பட்டியலை தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்போது குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. பெரும்பாலான கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கொண்டு செல்லப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை தொடங்கும் முன்பு மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கு ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி அளவில் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், சித்தார்த்தன், கோபால், குமரவேல், செல்வராஜ், தேசிங்குராஜன், சார்பு அமைப்பு நிர்வாகிகள் முத்துலட்சுமி, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஜெகநாதன் நன்றி கூறினார். 
    ×