search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 127529"

    அமெரிக்காவின் 2019ம் ஆண்டிற்கான சிறந்த வனவிலங்கு புகைப்படமாக சிங்கங்களின் புகைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. #BestPhotographyAward #BondOfBrothers
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இந்த ஆண்டிற்கான சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞருக்கு விருது வழங்கும் விழாவில், 45000க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்களின் புகைப்படங்கள் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டன.



    இதில் 25 புகைப்படங்கள் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டன. இவற்றுள் மக்களின் ஆதரவை அதிகம் பெறும் புகைப்படத்துக்கு விருது வழங்கப்படும். இதையடுத்து இந்த அருங்காட்சியகத்தில் தேர்வு செய்யப்பட்ட 25 புகைப்படங்கள் மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு , வாக்குகள் பெறப்பட்டன.



    இந்த வாக்குகளின் கணக்கெடுப்பில், இரண்டு ஆண் சிங்கங்களின் பாசத்தினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த 'பாண்ட் ஆஃப் ப்ரதர்ஸ்' எனும் தலைப்பில் வைக்கப்பட்ட புகைப்படத்திற்கு அதிக வாக்கு கிடைத்தது. நியூசிலாந்தைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் டேவிட்  லாய்ட் இந்தப் புகைப்படத்தை எடுத்திருந்தார்.



    இந்த புகைப்படத்திற்கு அடுத்தபடியாக, மேலும் சில புகைப்படங்களுக்கு அதிக வாக்குகள் பதிவாகின. அவற்றில் ஃபாக்லேண்ட் பகுதியில் மூன்று பென்குயின்கள் சூரிய அஸ்தமனத்தின்போது உற்சாகமாக நடனமாடும் படம் (விம் வான் டென் ஹீவர்), லண்டனில் நரி ஒன்று சாலையோரம் நடந்து செல்லும் படம் (மேத்யூ மாறன்), மூன்று ஓநாய்கள் ஒன்று சேர்ந்து எலும்பினை கவ்வுவது போன்ற படம் (பென்ஸ் மாட்டே, ஹங்கேரி) ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. #BestPhotographyAward #BondOfBrothers
    சிறந்த எலக்ட்ரானிக் சேவைக்காக கேரள போலீஸ் செயலிக்கு உலக அரசு உச்சி மாநாட்டில் அமீரக துணை பிரதமர் மேதகு ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யான் விருதை வழங்கினார். #KeralaPolice #TrafficGuruApp #MobileApplication
    துபாய் மதினத் ஜுமைராவில் 3 நாட்கள் நடந்த உலக அரசு உச்சி மாநாடு நேற்று நிறைவடைந்தது. மாநாட்டில் 140 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இதில் அரசுத்துறைகளின் எதிர்காலம் குறித்து பல்வேறு சொற்பொழிவுகளும், விவாதங்களும் நடந்தது. 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்கள்.

    அமீரக துணை பிரதமரும், உள்துறை மந்திரியுமான மேதகு ஷேக் சைப் பின் ஜாயித் அல் நஹ்யான் நேற்று நடந்த இறுதிநாள் நிகழ்ச்சியில் ‘வெற்றிப் பயணம்’ என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

    அப்போது அவர் பேசும்போது, ‘‘2007-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அமீரகம் சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில் 50 திட்டங்களை அறிவித்தது. இதன் மூலம் உலக நாடுகளில் அமீரகம் முதலிடத்தை பெற்றுள்ளது. துபாய் நகரின் மறைந்த ஆட்சியாளர் மேதகு ஷேக் ராஷித் சிறப்பான எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டு ராஷித் துறைமுகத்தை ஏற்படுத்தினார். இன்று இந்த துறைமுகம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 80 துறைமுகங்களை கையாண்டு வருகிறது’’ என குறிப்பிட்டார்.

    அமீரக பருவநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி டாக்டர் தானி பின் அகமது அல் ஜயூதி பேசும்போது, “கடல்களை நாம் பாதுகாக்க வேண்டும். கடல்களின் மூலம் உலகில் 10 கோடி மக்களுக்கு தேவையான வாழ்வாதாரம் கிடைத்து வருகிறது” என்றார்.

    அமீரக கலாசாரம் மற்றும் அறிவு மேம்பாட்டுத் துறைக்கான மந்திரி நூரா பிந்த் முகம்மது அல் காபி, நமது கலை மற்றும் கலாசாரத்தை பாதுகாக்க எந்த வகையான தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பேசினார்.

    மாநாட்டில், சிறந்த எலக்ட்ரானிக் சேவைக்காக கேரள போலீசின் ‘டிராபிக் குரு’ என்ற செயலிக்கு அமீரக துணை பிரதமரும், ஜனாதிபதி விவகாரத்துறை மந்திரியுமான மேதகு ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யான் விருது வழங்கி கவுரவித்தார். மேலும் அரசுத்துறைகளின் பல்வேறு சிறப்பான சேவைகளுக்கும் விருது வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அதிகாரிகளுடன் அமீரக அரசு பல்வேறு ஒப்பந்தங்களை செய்துள்ளது.

    இந்த மாநாட்டில் துபாய் ஆட்சியாளரும், அமீரக துணை அதிபரும், பிரதமருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், அபுதாபி பட்டத்து இளவரசரின் மகள் ஷேக்கா மரியம் பிந்த் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் மந்திரிகள், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #KeralaPolice #TrafficGuruApp #MobileApplication
    ஆரோக்கியமான உணவு, பாதுகாப்பான உணவு மற்றும் செறிவூட்டப்பட்ட உணவு என்ற செய்திகளை மக்களுக்கு சென்றடையச் செய்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. #HealthyBharat
    சென்னை:

    காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை யொட்டி இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் சார்பில் “சரிவிகித, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நலமுடன் வாழ்வோம்” என்னும் கருத்தை அனைவரையும் சென்றடைய 1930-ல் காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரக தண்டியாத்திரையை நினைவு கூரும் வகையில் உலக உணவு நாளான அக்டோபர் 16 அன்று தொடர் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் தொற்றாநோய்களை வருமுன் தடுக்க இயலும். பாதுகாப்பான உணவை உண்பதன் மூலம் உணவு சார்ந்த நோய்களை தடுக்க இயலும் மேலும், செறிவூட்டப்பட்ட உணவுகளை உண்பதால் நுண்ணிய சத்துக்களின் குறைபாட்டை தவிர்க்க இயலும் என்பதை மையப்படுத்தி இந்த பேரணி நடைபெற்றது.

    தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உள்பட 12 மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

    தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையானது, இந்திய தரநிர்ணய ஆணையம், பங்குதாரர்கள், உணவு வணிகர்கள் மற்றும் பல்வேறு துறையினருடன் கைகோர்த்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஆரோக்கியமான உணவு, பாதுகாப்பான உணவு மற்றும் செறிவூட்டப்பட்ட உணவு என்ற செய்திகளை மக்களுக்கு சென்றடையச் செய்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

    டெல்லியில் நடந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரிடம் தமிழகத்துக்கு சிறந்த மாநிலத்துக்கான விருதை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுடான், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தலைவர் ரீட்டா டியோட்டியா, முதன்மைச் செயல் அலுவலர் பவன்குமார் அகர்வால், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், உணவு பாதுகாப்புத்துறை கூடுதல் இயக்குநர் மரு. வனஜா மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர். #HealthyBharat

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை மறுநாள் ஊட்டிக்கு வருகை தரஉள்ளார். அப்போது தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். #TNGovernor #Banwarilalpurohit
    ஊட்டி:

    இந்தியாவில் கடந்த 1954-ம் ஆண்டு இந்திய மண்வள பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், வல்லுனர்களை கொண்டு இயங்கி வருகிறது.

    இந்த சங்கம் மற்றும் ஊட்டியில் இயங்கி வரும் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மண் மற்றும் நீர்வள தொழில்நுட்பங்கள், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்த 28-வது தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து, இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகள் 25 பேருக்கு விருதுகளை வழங்குகிறார்.

    மண் மற்றும் நீர் வளங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், மண் அரிப்பு, நிலச்சரிவு, மழைநீர் சேகரிப்பு மற்றும் காலநிலை மாற்ற சூழலில் அதன் பன்முக பயன்பாடு, மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை புதிய தொழில்நுட்பங்களின் உதவியோடு மதிப்பீடு செய்தல், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம், தோட்டக்கலை பயிர்கள், வனங்கள் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், எந்திரமயமாக்கப்பட்ட மண் மற்றும் நீர் வள மேலாண்மை துல்லிய பண்ணையம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு உள்பட 10 தலைப்புகளில் கருத்தரங்கம் நடக்கிறது.

    கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், விவசாய சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

    கருத்தரங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய மண்வள பாதுகாப்பு சங்க தலைவர் சுராஜ் பான், அணுசக்தி கழக முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

    தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் மதியம் 2 மணி முதல் மாலை 3.30 மணி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவனில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்க விருப்பம் உள்ளவர்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். #TNGovernor #Banwarilalpurohit
    குலசேகரன்பட்டினம் சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆசியாவிலேயே அதிகமான பக்தர்கள் பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்து கலந்துகொண்டதை சிறப்பிக்கும் வகையில் விருதுக்கான சான்றிதழ்கள் கோவில் நிர்வாக அலுவலரிடம் வழங்கப்பட்டது. #Kulasekarapattinam #MutharammanTemple
    குலசேகரன்பட்டினம்:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கி, 21-ந் தேதி நிறைவு பெற்றது. விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபட்டனர்.

    இந்த நிலையில் ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’, ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய அமைப்புகள் சார்பில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வேடம் அணிந்து வந்த பக்தர்களை கணக்கெடுக்கும் பணி நடந்தது.

    இதில் ஆசியாவிலேயே அதிகமான பக்தர்கள் பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தெரியவந்தது. இதை அங்கீகரிக்கும் விதமாக வழங்கும் விருதுக்கான சான்றிதழ்களை அந்த அமைப்பினர், கோவில் நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியனிடம் வழங்கினர். கோவிலுக்கு வேடம் அணிந்து வந்த பக்தர்களின் எண்ணிக்கை பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.  #Kulasekarapattinam #MutharammanTemple
    அமெரிக்காவில் சட்டமீறலான ஆள் கடத்தலை தடுத்து நிறுத்த சேவையாற்றிய இந்திய - அமெரிக்க பெண்ணான மினால் பட்டேல் டேவிஸ் அமெரிக்க ஜனாதிபதியின் உயரிய விருதைப் பெற்றார். #IndianAmericanawarded #WhiteHouse #humantrafficking #USPresidentialaward #MinalPatelDavis
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டன் நகரில் இருந்து வெளிநாடுகளுக்கு சிறுமிகள், பெண்கள் உள்பட சட்டமீறலாக நடந்துவரும் ஆள் கடத்தலை தடுக்க அந்நகர மேயர் தலைமையில் தனி குழுவினர் நியமிக்கப்பட்டனர்.

    இந்த குழுவில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி பெண்ணான  மினால் பட்டேல் டேவிஸ் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். ஆள் கடத்தலை தடுப்பது தொடர்பாக சர்வதேச அளவில் பல்வேறு கருத்தரங்கங்களில் உரையாற்றியுள்ள  மினால் பட்டேல் டேவிஸ், தனது துறையில் ஆற்றிய சேவைக்காக அமெரிக்க ஜனாதிபதியின் உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ அவருக்கு இந்த விருதினை அளித்தார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த நான் ஹுஸ்டன் நகர மேயர் அலுவலத்துக்கு செல்வேன். பெருமைக்குரிய இந்த வெள்ளை மாளிகைக்குள் நுழைவேன் என்று முன்னர் ஒருபோதும் எண்ணிப் பார்த்ததுகூட இல்லை என விருது வழங்கும் விழாவில் பேசிய மினால் பட்டேல் டேவிஸ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். #IndianAmericanawarded #WhiteHouse #humantrafficking #USPresidentialaward  #MinalPatelDavis
    தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.100 கோடி வழங்கிய அமிர்தானந்தமயிக்கு, பிரதமர் நரேந்திரமோடி, ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர். #Modi #Amritanandamayi #SwacchBharat
    புதுடெல்லி:

    சர்வதேச தூய்மை மாநாடு புதுடெல்லி கலாசார மையத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.100 கோடி வழங்கிய அமிர்தானந்தமயிக்கு, பிரதமர் நரேந்திரமோடி, ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர்.

    அவர் வழங்கிய ரூ.100 கோடி மூலமாக கங்கைக்கரையில் வசிக்கக் கூடிய ஏழை, எளிய மக்களுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டில் ஆசிரமத்தின் தூய்மைத் திட்டங்கள் குறித்த காணொளி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. மாநாட்டில் மத்திய மந்திரிகள் உமாபாரதி, சுஷ்மா சுவராஜ், மனோஜ் சின்கா, ஹர்தீப்சிங்பூரி மற்றும் 50 நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.  #Modi #Amritanandamayi #SwacchBharat 
    மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தபோது முதியோருக்கு சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவையா துணை ஜனாதிபதியிடம் விருது பெற்றார். #VicePresident #VenkaiahNaidu #VeeraRaghavaRao
    புதுடெல்லி:

    மத்திய அரசு சார்பில் உலக முதியோர் தின விழா நேற்று டெல்லி விஞ்ஞான பவனில் நடந்தது. விழாவில் 2017-2018-ம் ஆண்டில் முதியோருக்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவையாவும் விருது பெற்றார். இவர் மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தபோது முதியோருக்கு சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

    விழாவில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி தாவர் சந்த் கெலாட், இணை மந்திரிகள் ராம்தாஸ் அத்வாலே, கிருஷ்ணா பால் குர்ஜர், விஜய் சாம்பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  #VicePresident #VenkaiahNaidu #VeeraRaghavaRao
    தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் பொன் மாணிக்கவேலுக்கு, அரசு விருது வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். #BJP #PonRadhakrishnan #PonManickavel
    நாகர்கோவில்:

    சுசீந்திரத்தை அடுத்த தேரூரில் இன்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலக நாடுகள் மத்தியில் ஒரு நாட்டிற்கு பெருமை கிடைக்க வேண்டும் என்றால் அந்த நாடு தூய்மையாக இருக்க வேண்டும். இதற்காகவே மத்திய அரசு தூய்மை பாரதம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

    காந்தி கண்ட கனவை நனவாக்க பிரதமர் மோடி நேரடியாக தூய்மை பாரத திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். எனவே தான் தெருக்களை நேரடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறி அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் பொது மக்களும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.

    நாடு சுதந்திரம் அடைந்த பின்பு 6 கோடி கழிவறைகளே அமைக்கப்பட்டிருந்தன. மத்தியில் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்பு 8 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.

    தமிழகத்தில் குட்கா போன்ற போதை பொருட்கள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சனையில் இப்போது சிறுதுளிதான் வெளிவந்துள்ளது. மாநில அரசு இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிடும் என்று கூறிவருகிறார். அவர் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார் என எண்ணுகிறேன்.

    தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் அதிகாரி பொன். மாணிக்கவேல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரை போன்ற அதிகாரிகளுக்கு அரசு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

    தமிழகத்தில் மக்கள் நல திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு மாநில அரசு முன்வர வேண்டும்.

    கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைப்பு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தேரூர் பேரூராட்சியில் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து தூய்மை பணியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டார். #BJP #PonRadhakrishnan #PonManickavel
    தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது, காமராஜர் விருது மற்றும் தூய்மைப் பள்ளி விருது வழங்கும் மும்பெரும் விழா கலைவாணர் அரங்கில் நாளை மாலை நடைபெறுகிறது. #TeachersDay
    சென்னை:

    ஆசிரியர் தினம் நாளை (செப்டம்பர்5) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது, காமராஜர் விருது மற்றும் தூய்மைப் பள்ளி விருது வழங்கும் மும்பெரும் விழா கலைவாணர் அரங்கில் நாளை (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

    விழாவுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்குகிறார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முன்னிலை வகிக்கிறார். பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் திட்ட விளக்கவுரை நிகழ்த்துகிறார்.

    அனைவரையும் பள்ளிக் கல்வி இயக்குனர் முனைவர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்கிறார்.

    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று 373 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, 920 பேருக்கு காமராஜர் விருது, 40 பள்ளிகளுக்கு தூய்மை பள்ளி விருதுகளை வழங்கி விழா பேருரை நிகழ்த்துகிறார்.

    இதில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு விருது கிடைக்கிறது.

    மதிப்பெண் ரேங்கில் சிஸ்டம் மாற்றப்பட்டு தமிழ் வழியில் 10-வது, பிளஸ்-2 படித்தவர்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தும் 30 பேர் வீதம் 920 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகிறது.

    40 பள்ளிகளுக்கு தூய்மை விருதுகளும் வழங்கப்படுகிறது. மொத்தம் 1373 விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

    விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்ற, அமைச்சர் டி.ஜெயக்குமார், பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பேசுகிறார்கள். முடிவில் தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி நன்றி கூறுகிறார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் முன்னின்று கவனித்து வருகிறார்.  #TeachersDay
    அகில இந்திய அளவில் தென்னக ரெயில்வேயில், மதுரை ரெயில்நிலையத்தில் பயணிகளை கவரும் வகையில் வரையப்பட்ட ஓவியத்துக்காக விருது வழங்கப்பட உள்ளதாக முதுநிலை வர்த்தக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.
    மதுரை:

    இந்திய ரெயில்வேயில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களில் தூய்மை மற்றும் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதில் பயணிகளை கவருவதற்காக ரெயில்நிலைய வளாகங்கள், பிளாட்பாரங்கள் ஆகியவற்றில் ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

    மதுரை கோட்ட ரெயில்வேயில் மதுரை, கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ரெயில்நிலையங்களிலும் பயணிகளை கவரும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களுக்கு தற்போது ரெயில்வே மந்திரியின் விருது கிடைத்துள்ளது.

    இது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறியதாவது:-

    ரெயில்வே துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தில் பயணிகளை கவரும் வகையிலான ஓவியங்கள் அனைத்து மண்டலங்களில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் வரையப்பட்டு வருகின்றன. இந்த ஓவியங்கள் அனைத்தும் ரெயில்வே வாரியத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதில் இந்திய ரெயில்வேக்கு உள்பட்ட 16 ரெயில்வே மண்டலங்களில் இருந்தும் ரெயில்நிலையங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன. இந்த நிலையில், தென்னக ரெயில்வேயில் மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் மதுரை ரெயில்நிலையத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் ரெயில்வே அமைச்சகத்தின் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, மதுரை ரெயில்நிலையத்தின் 2-வது பிளாட்பாரத்தில் தானியங்கி படிக்கட்டு பகுதியில் வரையப்பட்ட ஓவியத்துக்காக கண்ணன் என்ற ஓவியருக்கும், ரெயில்நிலையத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட கட்டண காத்திருப்பு அறையில் வரையப்பட்ட ஓவியத்துக்காக ரமேஷ் என்பவருக்கும் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ரெயில்வே மந்திரி தலைமையில் வருகிற 12-ந் தேதி டெல்லியில் நடக்க உள்ளது. இதற்காக இந்த ஓவியர்கள் 2 பேரும் டெல்லி செல்கின்றனர். இந்த ஓவியம் குறித்து முதன்முதலாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக மக்களுக்கு வரமாக அமையும் என்று ராஜ் பவனில் நடந்த விருது வழங்கும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார். #BanwarilalPurohit
    சென்னை:

    தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் விருது வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் தர்பார் அரங்கில் நேற்று நடந்தது.

    விழாவுக்கு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று டாக்டர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். இதையடுத்து விருது பெற்றவர்களுடன் அவர் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    முன்னதாக விழாவில் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

    நோயை கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் எப்போதும் முக்கிய மையமாக திகழ்கிறது. பொது சுகாதார சட்டத்தை இயற்றிய முதல் மாநிலமும் தமிழகம் தான். சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையும், அரசு கண் மருத்துவமனையும் ஆசியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்தது ஆகும்.

    தமிழகத்தில் குழந்தை மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்து சாதனை படைத்திருக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து கொடுப்பதில் நாட்டிலேயே முதலாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உலகின் கிழக்கு பிராந்தியத்தில் மருத்துவ சுற்றுலா மையமாகவும் விளங்குகிறது.

    120 கோடிக்கும் அதிக மக்கள் தொகையை கொண்ட நமது நாட்டில், தேசிய சுகாதார தகவலின்படி 10 லட்சம் அலோபதி டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் கூட இல்லை. இதில் 10 சதவீதம் பேர் மட்டுமே பொது சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்றனர்.

    அதனால் பயிற்சி பெற்ற டாக்டர்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதேபோல பொது சுகாதாரத்துறையில் பணியாற்றுவதற்கும், கிராமப்புற பகுதிகளில் சேவை செய்வதற்கும் டாக்டர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    உடல் உறுப்பு தான மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. கடுமையான வறுமையில் சிக்கி தவிக்கும் ஏழை மக்களின் உயிர்களை காப்பதில் அரசு காப்பீடு திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. மதுரையில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

    இதன்மூலம் தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள 15 மாவட்டங்கள் பயன்பெறும். தமிழகத்தின் சுமார் 4 கோடி மக்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரமாக அமையும். சமூகத்துக்காக தங்களுடைய அர்ப்பணிப்பு செய்தவர்களை நினைவுகூர்ந்து கவுரவப்படுத்துவது பெருமைக்குரிய விஷயம் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் டாக்டர்கள் ஆர்.வி.எஸ்.சுரேந்திரன், கே.செந்தில், டி.மருதுபாண்டியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 
    ×