search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 130486"

    • கடந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட இவரது காளை, பிடிமாடாக அறிவிக்கப்பட்டது.
    • மனம் தளராக மாணவி, தனது ஜல்லிக்கட்டு காளை வீராவை அலங்காநல்லூரில் களமிறக்கினார். அந்த போட்டியில் அவரது காளை வெற்றி பெற்றது.

    அவனியாபுரம்:

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மதுரை ஐராவதநல்லூரை சேர்ந்த யோக தர்ஷினி என்ற மாணவியின் காளை வெற்றி பெற்று உள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் அந்த மாணவி தனது வீட்டில் வடமுகத்து கருப்பு, வீரா, பாண்டி மணி ஆகிய 3 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.

    கடந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட இவரது காளை, பிடிமாடாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் போட்டி குழுவினர் அவருக்கு ஆறுதல் பரிசு கொடுக்க முன் வந்தனர். ஆனால் தனது மாடு பிடிமாடாகியதால், அந்த பரிசு வாங்க மாணவி யோக தர்ஷினி மறுத்துவிட்டார்.

    அதன் பிறகு இந்த ஆண்டு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தனது காளைகளை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று, அதனை தயார்படுத்தி வந்தார். அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் நடக்க இருந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க தனது காளைகளை பதிவு செய்திருந்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இவரது காளை பிடிமாடாகியது. அதில் மனம் தளராக மாணவி யோக தர்ஷினி, தனது ஜல்லிக்கட்டு காளை வீராவை அலங்காநல்லூரில் களமிறக்கினார். அந்த போட்டியில் அவரது காளை வெற்றி பெற்றது. இதற்காக யோக தர்சினிக்கு 2 தங்க காசுகள், ஒரு சைக்கிள் பரிசாக கிடைத்தது. அந்த பரிசை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மூர்த்தி ஆகியோர் நேரடியாக மாணவிக்கு வழங்கி பாராட்டினர்.

    • நவலூர்குட்டபட்டு கிராமத்தில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார்
    • ஜல்லிக்கட்டு விழாவிற்காக சுமார் 700 காளைகளுக்கும், 450 வீரர்களுக்கும் டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது.

    ராம்ஜிநகர்:

    திருச்சி அருகே உள்ள நவலூர்குட்டப்பட்டு கிரா–மத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பாக வருடம் தோறும் ஜல்லிக் கட்டு போட்டி நடைபெறு–வது வழக்கம். அதேபோன்று இந்த வருடமும் நாளை (19-ந்தேதி, வியா–ழக்கிழமை) கிராம பொது–மக்கள் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்து–வதற்காக அரசு அனுமதி கோரப்பட்டு இருந்தது.

    அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து நாளை நக–ராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் ஆகியோர் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து போட்டியை தொடங்கி வைக்கிறார். இதில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் பழனியாண்டி, மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, தொழிலதிபர்கள் அருண் நேரு, ஜோசப் லூயிஸ், தி.மு.க. மணிகண்டம் ஒன்றிய செயலாளர் மாத் தூர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர்.

    இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்காக சுமார் 700 காளைகளுக்கும், 450 வீரர்களுக்கும் டோக்கன் வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக வாடிவாசல் அமைப்பது, பார்வையாளர்கள் கேலரி, பாதுகாப்புக்கான வலை அமைப்பது மற்றும் தேங்காய் நார் பரப்புவது போன்ற பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், நவலூர் குட்டப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராம பட்டையாதாரர்கள், மணி–யக்காரர்கள், ஊர் பொது–மக்கள் மற்றும் விழாக்குழு–வினர் செய்து வரு–கின்றனர்.


    • திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
    • பொங்கலையொட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மொத்தம் 450 பேர் காயமடைந்துள்ளனர்.

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காயமடைந்த இளைஞர் சிவக்குமார் (21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர், அதே மாவட்டத்தில் உள்ள வடசேரி பள்ளப்படியை சேர்ந்தவர்.

    ஆர்.டி.மலையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளை முட்டி வலது கண் பார்வையை சிவக்குமார் இழந்தார்.

    இதைதொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

    பொங்கலையொட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மொத்தம் 450 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    • சிறந்த காளையின் உமையாளர் புதுக்கோட்டை தமிழ்ச்செல்வனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
    • ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் என மொத்தம் 53 பேர் காயமடைந்தனர்

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளையர்களின் பிடியில் சிக்காமல் பெரும்பாலான காளைகள் கெத்து காட்டின. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், தங்க காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

    விறுவிறுப்பாக மொத்தம் 10 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. மொத்தம் 823 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில், அபி சித்தர் என்ற மாடுபிடி வீரர் 26 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

    20 காளைகளை அடக்கிய ஏனாதி அஜய் என்பவர் இரண்டாம் பரிசும், 12 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் ரஞ்சித் மூன்றாம் பரிசும் பெற்றனர். 

    புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் என மொத்தம் 53 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    • முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு களத்திற்கு சென்று மீண்டும் காளைகளை அடக்கினார்.
    • 9ம் சுற்று முடிவில் அபி சித்தர் 25 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்தார்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளையர்களின் பிடியில் சிக்காமல் பெரும்பாலான காளைகள் கெத்து காட்டின.

    7 சுற்றுகளின் நிறைவில் அபி சித்தர் என்ற வீரர் 23 காளைகளை அடக்கி முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர் ஒரு காளையை அடக்கும் முயற்சியில் எதிர்பாராத விதமாக காவலதுறையினரின் வேனில் மோதி காயமடைந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் களத்திற்கு சென்று மீண்டும் காளைகளை அடக்கினார்.

    9ம் சுற்று முடிவில் அபி சித்தர் 25 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்தார். அஜய் 19 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்திலும், ரஞ்சித் குமார் 12 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்திலும் இருந்தனர்.

    • தமிழகத்தில் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை இருந்து வருகிறது.
    • சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    திருச்சி:

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு ஊர்களில் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் கடந்த 8-ந்தேதி நடைபெற்றது. அதையடுத்து மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேட்டிலும், திருச்சி மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு நேற்று பெரியசூரியூரிலும் நடந்தது.

    அந்த வகையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆவாரங்காட்டில் உள்ள பொன்னர் சங்கர் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி, சோலையம் மாபட்டி, கீரணிப்பட்டி ஆகிய நான்கு கிராம மக்களால் இந்த ஜல்லிக்கட்டு விழாவானது நடத்தப்படுகிறது.

    ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வம் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் ஒரே நேரத்தில் 4 கோவில் காளைகள் அவிழ்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 650 ஜல்லிக்கட்டு காளைகள் கோவில் திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.

    சீறிப்பாய்ந்து வந்து ஆக்ரோஷம் காட்டிய காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் ஒரு பிரிவுக்கு 50 வீரர்கள் என 6 பிரிவுகளாக களம் இறக்கப்பட்டு வருகின்றனர். வெற்றியை ருசிப்பது யார் காளையர்களா? காளையா? என்ற போட்டியில் களமே ஆராவாரம் பூண்டுள்ளது.

    போட்டியில் வீரர்களின் பிடிக்கு அடங்க மறுத்து வெற்றி பெறும் காளைகளுக்கும், காளைகளை அடக்கி வெற்றி பெற்ற காளையர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், பீரோ, கட்டில், கிரைண்டர், சைக்கிள், ரொக்கப் பணம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

    தமிழகத்தில் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை இருந்து வருகிறது. அந்த வகையில் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் சித்தி விநாயகர், மாயன் பெருமாள் கோவில் பொங்கலையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில் முன்பதிவு செய்யப்பட்ட 700 காளைகள் களமிறக்கப்படுகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின்னர் கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை.

    இதையடுத்து புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்பட்டது. அந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்கினர்.

    இதில் பெரும்பாலான காளைகள் தன்னை நெருங்க விடாதவாறு களத்தில் நின்று விளையாடியது. அந்த காளைகள் பரிசுகளை வென்றது. அதேபோல் ஜல்லிக்கட்டு விதிகளின்படி காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களும் பரிசு மழையில் நனைந்தனர். அவர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், பீரோ, சைக்கிள், சேர்கள், அண்டா உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட் டன. 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராச்சாண்டார் திருமலையில் அமைந்துள்ள விரையாச்சிலை, ஈஸ்வரர் சமேத பெரியநாயகி அம்மன் மற்றும் கோலமாவயிரம் கொண்ட பிடாரியம்மன், கரையூர் மற்றும் ஸ்ரீ நீலமேகம் கோவில் ஊர் பொதுமக்கள் சார்பாக 61-வது ஆண்டாக தை பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

    இதற்காக 800 காளைகளுக்கும், 400 மாடுபிடி வீரர்களுக்கும் இன்று அனுமதி டோக்கன் வழங்கப்பட்டு பங்கேற்றனர்.

    விழாவில் ராச்சாண்டார் திருமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்திலேயே ஜல்லிக்கட்டு இங்கு மட்டுமே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
    • லாரியில் காளைகளை ஏற்றி கொண்டு திரும்பியபோது, எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில், லாரியில் ஏற்றி வந்த 2 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 2 பேர் உயிரிந்துள்ளனர்.

    புதுக்கோட்டை வன்னியம் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

    லாரியில் காளைகளை ஏற்றி கொண்டு திரும்பியபோது, எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

    • காளைகளும் தங்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை வெளிப்படுத்தி வருகிறது.
    • வடசேரி பள்ளப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்ற மாடுபிடி வீரர் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்றார்.

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள ராச்சாண்டார்மலையில் இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி பரிசுகளை வெல்ல அதிக முனைப்பு காட்டி வருகிறார்கள்.

    அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் காளைகளும் தங்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை வெளிப்படுத்தி வருகிறது. இந்தநிலையில், போட்டியில் பங்கேற்ற வடசேரி பள்ளப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்ற மாடுபிடி வீரர் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்றார்.

    அப்போது வீரர் மீது மாடு ஆக்ரோசமாக பாய்ந்தது. இதில் சிவக்குமாரின் வலது கண் பகுதியில் கொம்பு முட்டியதில் வலது கண் வெளியே வந்து பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்து ஆம்புலன்ஸ் வேன் மூலம் அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிவக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதியம் 12 மணி வரை மாடுபிடி வீரர்கள் 15 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 5 பேர் மற்றும் பார்வையாளர்கள் 5 பேர் என மொத்தம் 25 பேர் காயம் அடைந்தனர். லேசான காயம் அடைந்தவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் படுகாயமடைந்த வீரர்கள் உள்பட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி யில் மாடுபிடி வீரர்கள் உள்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மதுரை

    பொங்கல் பண்டி கையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த 15-ந்தேதி அவனியாபுரத்திலும் ,நேற்று (16 -ந் தேதி)பாலமேட்டிலும் நடந்தன.

    இன்று (17-தேதி)அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி யில் மாடுபிடி வீரர்கள் உள்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர். பாலமேட்டில் நடந்த போட்டியில் 23 காளைகளை அடக்கி மதுரையை சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் முதலிடம் பெற்றார்.

    அவர் காளைகள் முட்டி யதில் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். அவரதுகுடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்ற கருப்பையா (வயது 24) ராமசாமி(33), ராமச்சந்திரன் (22), திரு மலை சீனிவாசன், அபி லாஷ் (21), சிவராஜ்(25), பெருமாள்(27), பிரபு(20), சங்கர்(16), பழனி(37) உள்பட 12 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாடுபிடி வீரர்கள் உட்பட படுகாயம் அடைந்த 12 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • காளைகளை துணிந்து நின்று அவற்றை அடக்கும் மாடுபிடி வீரர்கள் வீரம் அசாத்தியமானது.
    • இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை கொஞ்சமும் அச்சம் கொள்ளாமல் துணிந்து நின்று அவற்றை அடக்கும் மாடுபிடி வீரர்கள் வீரம் அசாத்தியமானது. தமிழர்களுடைய வீரத்தையும், கலாச்சாரத்தை பறைசாற்றும் இந்த ஜல்லிகட்டுப் போட்டிகளை காண உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலகம் முழுவதும் இருந்து திரள்வார்கள்.

    பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் சார்பில் காரும், சிறந்த காளைக்கு அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 7 மருத்துவ குழுக்கள் 20 மருத்துவர்கள் உட்பட 80 பேர் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முன்னிலையில் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டிக்காக 2 எஸ்.பிக்கள், 8 ஏ.டி.எஸ்.பிக்கள், 29 டி.எஸ்.பிக்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பழனிவேல் தியாகராஜன், நடிகர் சூரியும் இந்த போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.

    • 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ், காளை முட்டியதில் உயிரிழந்தார்.
    • இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது, 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ், காளை முட்டியதில் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த் என்ற வாலிபர் காளை முட்டியதில் உயிரிழந்தார்.

    காளை முட்டி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு குடும்பங்களுக்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    • வாடி வாசலில் இருந்து துள்ளி வந்த காளை அருகில் இருந்த விவசாய நிலத்தின் கிணற்றில் விழுந்து இறந்தது.
    • அனுமதியின்றி போட்டி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் கூறினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆயில்பட்டி ராமநாதபுரம் பகுதியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

    இந்த போட்டியில் மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, காயல்பட்டி, தம்மம்பட்டி உள்பட பல பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 50-க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்றன.

    மாடுகளை பிடித்து வீரர்கள் தங்களது வீரத்தை காட்ட மாடுபிடி வீரர்கள் அதிக ஆர்வதத்துடன் விளையாடினர். இதனை பார்க்க அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.

    இதையடுத்து வாடி வாசலில் இருந்து துள்ளி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் படிக்க முயன்றனர். அப்போது ஒரு காளை அருகில் விவசாய நிலத்திற்கு சென்றது. அப்போது அங்கிருந்த கிணற்றில் விழுந்து அந்த காளை இறந்தது. இதனை அறிந்த அந்த பகுதியினர் ஏாளமானோர் அங்கு திரண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அங்கு வந்த மங்களபுரம் மற்றும் ஆயில்பட்டி போலீசார் அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்து நிறுத்தினர். இது குறித்து போலீசார் கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டி அனுமதியின்றி நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நாங்கள் அங்கு விரைந்து சென்று போட்டியை தடுத்து நிறுத்திணோம். காளை உயிரிழந்தது தொடர்பாக விசாரணை செய்து வருகிறோம், அனுமதியின்றி போட்டி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

    ×