search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல்காந்தி"

    • எல்லையில் என்ன நடந்தது என்பதை நாட்டிற்கு மத்திய அரசு சொல்ல வேண்டும்.
    • விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு பாதிக்கப்படும்.

    அருணாசல பிரதேச மாநிலம் தவாங் செக்டரில் அண்மையில் அத்துமீறலில் ஈடுபட்ட சீன வீரர்களை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர். இந்த மோதல் காரணமாக இரு நாட்டு எல்லைப் பகுதியில் பதற்றமான நிலை காணப்படுகிறது.

    இந்நிலையில் பீஜிங்கில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய சீன வெளியுறவு மந்திரி வாங் யி, எல்லைப்பகுதிகளில் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் இரு தரப்பும் உறுதியுடன் உள்ளதாகவும், இரு தரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    இந்நிலையில், யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்தியாவுக்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பதாக கூறியுள்ளார். போர் வெடித்தால் அவர்கள் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    எல்லையில் என்ன நடந்தது என்பதை நாட்டிற்கு மத்திய அரசு சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்ட ராகுல்காந்தி, நாம் என்ன நடவடிக்கை எடுத்தாலும், இப்போதே அதை தொடங்க வேண்டும், உண்மையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு.
    • காந்தி, நேரு வாரிசுகளின் பேச்சுக்கள் கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும்.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து தமிழக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,

    தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த புத்தகத்தை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

    நேரு உண்மையான ஜனநாயகவாதி, அதனால்தான் அனைத்து ஜனநாயக சக்திகளும் அவரைப் போற்றுகின்றன. நேரு காங்கிரஸின் குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலை எதிரொலித்தார். இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு. ஒரே மொழி, ஒரே நம்பிக்கை, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சட்டத்திற்கு அவர் எதிரானவர். 


    வகுப்புவாதமும், தேசியவாதமும் சேர்ந்திருக்க முடியாது என அவர் சொன்னவர். இந்தி பேசாத மக்கள் விரும்பாதவரை இந்தி திணிக்கப்படாது என்று அவர் வாக்குறுதி அளித்தார். தற்போது குறுக்கு வழிகளில் இந்தி நுழைகிறது

    இன்றைய அரசியல் சூழ்நிலை நேருவின் உண்மையான மதிப்பை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. தமிழ்நாட்டிற்கு பெரியார், அண்ணா, கருணாநிதியை போன்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், கூட்டாட்சி, சகோதரத்துவம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை நிலைநாட்ட காந்தியும் நேருவும் தேவைப்படுகிறார்கள்.

    ராகுலின் பேச்சு நாட்டில் தற்போது பூகம்பத்தை உருவாக்குகிறது. அவர் தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ பேசவில்லை, கொள்கை அரசியலைத்தான் பேசுகிறார்.

    சில நேரம் அவர் நேருவை போன்று பேசுகிறார். அதனால்தான் சிலரால் அவர் கடுமையாக எதிர்க்கப்படுகிறார். மகாத்மா காந்தி மற்றும் நேருவின் வாரிசுகளின் பேச்சுக்கள் கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும். அதனால்தான் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல திட்டமிட்டு உள்ளனர்.
    • நடைபயணத்தை நிறைவு செய்து விட்டு அனைவரும் சென்னை திரும்புகிறார்கள்.

    புதுடெல்லி:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாத யாத்திரையில் பங்கேற்க வரும்படி ராகுல்காந்தி அழைப்பு விடுத்து இருந்தார்.

    அவரது அழைப்பின் பேரில் பாத யாத்திரையில் டெல்லியில் கலந்து கொள்வதாக கமல் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்ட கமல்ஹாசன் காலை 10 மணியளவில் டெல்லி சென்றார்.

    இன்று மாலை ராகுல் காந்தியின் யாத்திரையில்  கமல் கலந்து கொண்டார். பாத யாத்திரையில் கமலுடன் சுமார் 250 மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர்.

    மாநில நிர்வாகிகள் மவுரியா, தங்கவேல், முரளி அப்பாஸ், பொன்னுசாமி உள்பட மாநிலம் முழுவதிலும் இருந்து 20 பெண் நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல திட்டமிட்டு உள்ளனர். நடைபயணத்தை நிறைவு செய்து விட்டு அனைவரும் சென்னை திரும்புகிறார்கள்.

    • சீன வீரர்களின் அத்துமீறலை முறியடித்த இந்திய ராணுவ வீரர்களின் வீரம் பாராட்டுக்குரியது.
    • பிரதமர் மோடியின் தலைமையில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.

    தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியாக இருந்தாலும் சரி, தவாங் பகுதியாக இருந்தாலும் சரி, சீன ராணுவத்திற்கு எதிராக நமது ராணுவ வீரர்கள் வெளிப்படுத்திய வீரத்தை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என்று தெரிவித்தார்.

    சீனாவுடனான எல்லை விவகாரத்தில் மத்திய அரசு குறித்த ராகுல் காந்தியின் கருத்தை விமர்சித்த அவர், யாருடைய நோக்கத்தையும் எப்போதும் அவர் சந்தேகிப்பதன் காரணம் எனக்குப் புரியவில்லை என்று கூறினார். நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சி தலைவரின் நோக்கத்தை கேள்வி கேட்டதில்லை என்றும்,  கொள்கையின் அடிப்படையில் மட்டுமே விவாதித்தோம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

    உண்மையின் அடிப்படையில்தான் அரசியல் இருக்க வேண்டும், பொய்யின் அடிப்படையில் நீண்ட காலமாக அரசியல் செய்ய முடியாது, சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லும் செயல்முறையே சரியான அரசியல் ஆகும் என்றும் ராகுல்காந்தியின் விமர்சனத்திற்கு அவர் பதில் அளித்தார்.

    உலக நன்மை மற்றும் செழுமைக்காகவே இந்தியா வல்லரசாக மாற விரும்புகிறது, இதனால் உலக நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம் என்று ஒருபோதும் யாரும் கருதக் கூடாது என்றும் மத்திய மந்திரி குறிப்பிட்டார். எந்த ஒரு நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட கைப்பற்றும் எண்ணம் இந்தியாவிற்கு கிடையாது, பிரதமர் மோடி தலைமையில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது என்றும் மத்திய மந்திரி ராஜ்நாத் தெரிவித்தார்.

    • இந்தியாவின் மகாராஜாக்கள் என நான்கு அல்லது ஐந்து பேர் உள்ளனர்.
    • அவர்களின் விருப்பப்படி பிரதமர், அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை, ராஜஸ்தான் மாநிலம் பாத்ஷாபுராவை அடைந்தது .தௌசா மாவட்டத்தில் உள்ள பாக்டி கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி கூறியுள்ளதாவது:

    நீங்கள் அவர்களின் அமைப்பில் (ஆர்.எஸ்.எஸ்.) ஒரு பெண்ணை கூட பார்க்க மாட்டீர்கள். ஆர்எஸ்எஸ் பெண்களை அடக்குகிறார்கள், இதனால் பெண்களை தங்கள் அமைப்பிற்குள் நுழைய அவர்கள் அனுமதிப்பதில்லை. ஸ்ரீராமர் மற்றும் சீதா தேவி இருவரையும் ஏற்றுக் கொள்ளும் ஜெய் சியாராம் என்று சொல்வதற்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம் என்று அவர்கள் அழைக்கிறார்கள்.

    ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரை நான் கேட்க விரும்புகிறேன், நீங்கள் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்கிறீர்கள், ஆனால் ஏன் ஜெய் சியாராம் என்று சொல்லவில்லை? ஏன் சீதா அன்னையை நீக்கினீர்கள்? ஏன் அவமதிக்கிறீர்கள்? ஏன் இந்தியப் பெண்களை இழிவுபடுத்துகிறீர்கள்?. 


    மற்றவர்களின் பயத்தால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பயனடைகின்றன, ஏனென்றால் அவர்கள் இந்த பயத்தை வெறுப்பாக மாற்றுகிறார்கள். அவர்களின் ஒட்டுமொத்த அமைப்புகளும் அதே வேலையைச் செய்கின்றன. அவர்கள் நாட்டைப் பிரிக்கவும், வெறுப்பையும், பயத்தையும் பரப்பவும் வேலை செய்கிறார்கள். நாட்டில் பரப்பப்படும் பயம் மற்றும் வெறுப்பை எதிர்த்து நிற்பதுதான் பாரத் ஜோடோ யாத்ரா.

    நாட்டில் உள்ள 55 கோடி பேரின் சொத்துக்கு சமமாக இந்தியாவில் உள்ள 100 பணக்காரர்களிடம் சொத்து இருக்கிறது. இந்தியாவின் பாதி செல்வம் 100 பேரிடம் மட்டுமே உள்ளது, நாடு அவர்களுக்காக இயங்குகிறது.

    இந்தியாவின் மகாராஜாக்கள் என்று நான்கு அல்லது ஐந்து பேர் உள்ளனர். முழு அரசாங்கமும், ஒட்டு மொத்த ஊடகங்களும் மற்றும் அனைத்து அதிகாரிகளும் அவர்களின் விருப்பப்படி செயல்படுகிறார்கள்.பிரதமர் மோடி ஜியும் அவர்களின் விருப்பப்படி செயல்படுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ராகுல்காந்தியின் பாத யாத்திரை வெள்ளிக்கிழமை 100 வது நாளை நிறைவு செய்கிறது.
    • இது அரசியல் யாத்திரை அல்ல, மக்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரம்.

    சவாய் மாதோபூர்:

    இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 7ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, பாதயாத்திரை நடத்தி வருகிறார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களை தாண்டி இந்த யாத்திரை டிசம்பர் 4 ஆம் தேதி ராஜஸ்தானுக்குள் நுழைந்து நடைபெற்று வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை இந்த பாத யாத்திரை 100வது நாளை நிறைவு செய்கிறது. இதையொட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளதாவது:

    பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வரும் ராகுல் காந்தி, தினமும் 30 கிலோமீட்டர் நடந்து வருகிறார். மக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள், அவருடன் இணைந்து நடந்து வர முயற்சிக்கிறார்கள். அனைத்துப் பிரிவினரும் யாத்திரையில் பங்கேற்று வருகின்றனர். ராகுல் காந்தி தொடர்ந்து 100 நாட்களாக பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது,

    இதனால் பாஜக மிகவும் வருத்தமடைந்துள்ளது. இவ்வளவு பேர் எப்படி யாத்திரையில் இணைக்கிறார்கள் என்பது அந்த கட்சிக்கு கவலை அளிக்கிறது. குழந்தைகள், முதியவர்கள், விவசாயிகள், முன்னாள் ராணுவத்தினர், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோரை ராகுல் நேரில் சந்தித்து பேசுகிறார். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அவர் பணியாற்றி வருகிறார். இது அரசியல் யாத்திரை அல்ல, நாட்டை மற்றும் மக்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விமானியும், ராகுல் காந்தியும் இணைந்து ஹெலிகாப்டரின் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் கொடுத்தனர்.
    • எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது என மாணவிகள் கூறினர்.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ராகுல் காந்தி கடந்த நவ.29-ம் தேதி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது 11-ம் வகுப்பு மாணவிகள் ஷீத்தல், லகானியா, 10-ம் வகுப்பு மாணவி கிரிஜா ஆகியோர் அவரை சந்தித்தனர். மாணவிகளின் கல்வி, எதிர்கால லட்சியம் குறித்து ராகுல்காந்தி கேட்டறிந்தார். அப்போது 3 மாணவிகளும் ஹெலிகாப்டரில் பறக்க ஆசையாக இருப்பதாக ராகுல் காந்தியிடன் வெள்ளந்திதனமாக கூறினர். மாணவிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.

    கடந்த 8-ம் தேதி ராஜஸ்தானின் கோடா பகுதியில் ராகுல்காந்தி நடைபயணத்தை தொடர்ந்தார். அப்போது ராஜஸ்தானின் பண்டி பகுதியில் இருந்து சவாய் மாதோபூருக்கு ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் பயணத்தின்போது மத்திய பிரதேசம் உஜ்ஜைனியை சேர்ந்த ஷீத்தல், லகானியா, கிரிஜா ஆகிய 3 மாணவிகளையும் ராகுல்காந்தி தன்னுடன் அழைத்துச்சென்றார்.

    விமானியும், ராகுல் காந்தியும் இணைந்து ஹெலிகாப்டரின் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் கொடுத்தனர். 3 மாணவிகளும் ராகுல்காந்தியுடன் இணைந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். சுமார் 20 நிமிட பயணத்துக்குப் பிறகு மாணவிகள் விடைபெற்றனர்.

    இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், முதல்முறையாக ஹெலிகாப்டரில் சென்றது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் ராகுல் காந்தியுடன் பயணம் செய்ததை நாங்கள் கவுரவமாக கருதுகிறோம். எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. குடும்பம், சமுதாயத்தை பார்க்காமல் எங்களுக்கு எது விருப்பமோ அந்த துறையை தேர்வு செய்து படிக்க ராகுல் காந்தி அறிவுறுத்தினார் என்று தெரிவித்தனர்.

    • சமூக ஊடகங்களில் மட்டுமே பாத யாத்திரைக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.
    • அத்வானி யாத்திரை குறித்து தேசிய ஊடகங்கள் பெரிய அளவில் செய்திகள் வெளியிட்டன.

    ஜாலாவர்:

    கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை, மத்திய பிரதேச மாநிலத்தை கடந்து ராஜஸ்தான் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. இது குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளதாவது: 


    தேசிய செய்தி ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களின் உரிமையாளர்கள் மீது அழுத்தம் கொடுக்கப் படுகிறது. இதனால் முக்கிய தேசிய ஊடகங்கள் பாத யாத்திரை குறித்த செய்திகளை புறக்கணித்து விட்டன. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்கள் கடமையை நிறைவேற்ற முழுமையாகத் தவறி விட்டன.

    வரலாறு அவர்களை மன்னிக்காது. நாடு முழுவதிலும் சமூக ஊடகங்களில் யாத்திரைக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் பாத யாத்திரையில் இணைகிறார்கள். ஆனால் தேசிய ஊடகங்கள் அதற்கு ஆதரவளிக்கவில்லை. சமூக நோக்கத்திற்கும. அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1

    1990-ல் பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி யாத்திரை சென்ற போது ஊடகங்கள் அதை பெரிய அளவில் செய்தியாக்கவில்லையா? நடந்ததைச் சொல்வது ஊடகங்களின் கடமை. ராகுல் காந்தி நேர்மறை சிந்தனையுடன் பயணம் செய்கிறார், இது நேர்மறை யாத்திரை, வன்முறை இல்லை, வெறுப்பு இல்லை. இந்த யாத்திரையை எடுத்து கூறி நீங்கள் உங்கள் கடமையைச் செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மத்திய பிரதேச மாநிலத்தில் 88வது நாளாக பாதயாத்திரை நடைபெறுகிறது.
    • மத்திய பிரதேசத்தில் மட்டும் 380 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை நடைபெற்றுள்ளது.

    கடந்த செப்டம்பர் மாதம் 7ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை பயணம், கடந்த மாதம் 23ந் தேதி மகாராஷ்டிராவிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்திற்குள் நுழைந்தது. 88வது நாளாக இன்று காலை மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

    காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் நகுல் நாத், முன்னாள் மத்திய மந்திரி அருண் யாதவ், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியவ்ரத் சிங் ஆகியோரும் இந்த அணிவகுப்பில் ராகுல் காந்தியுடன் நடந்து சென்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் புர்ஹான்பூர், கந்த்வா, கர்கோன், இந்தூர் மற்றும் உஜ்ஜைனி மாவட்டங்களை கடந்து மொத்தம் 380 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை நடைபெற்றுள்ளது. இந்த பாத யாத்திரையின்போது உஜ்ஜயினியில் உள்ள 12 ஜோதி லிங்கங்களில் ஒன்றான மகா காளேஸ்வரர் கோயிலுக்கு சென்ற ராகுல்காந்தி வழிபாடு நடத்தினார்.

    இந்நிலையில் இன்று மாலை ராஜஸ்தான் மாநிலத்திற்குள் ராகுலின் யாத்திரை நுழைகிறது. அங்குள்ள சான்வ்லி கிராமத்தில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் உறுப்பினர்கள், ராஜஸ்தானை சேர்ந்த கட்சி உறுப்பினர்களிடம் தேசியக் கொடியை ஒப்படைக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அம்மாநில காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர்.

    • நடத்தை விதிகளை மீறி அரசியல் பேரணியில் கலந்து கொண்டதாக கூறி பாஜக அரசு நடவடிக்கை.
    • அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக காங்கிரஸ் புகார்

    பர்வானி:

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் பர்வானி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    கனஸ்யாவில் உள்ள பழங்குடியினருக்கான தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ள ராஜேஷ் கண்ணோஜ், முக்கியமான வேலையைக் காரணம் காட்டி விடுப்பு எடுத்திருந்தார். ஆனால் அவர் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டதாகவும், பழங்குடியினர் விவகாரத் துறையின் உதவி ஆணையர் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.

    அரசு ஊழியர்களுக்கான சேவை நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரகுவன்ஷி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ராஜேஷ் சஸ்பெண்ட் உத்தரவு சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து தற்போது இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் மாநில காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் மிஸ்ரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிவராஜ் சிங் சவுகான் அரசு, அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்க அனுமதித்துள்ளது, ஆனால் பழங்குடியினரான ராஜேஷ் கண்ணோஜ், அரசியல் சாராத அணிவகுப்பில் பங்கேற்றதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

    • நான் வெறுப்பை வளர்க்கவில்லை, என் இதயத்தில் காதல் மட்டுமே மலர்ந்தது.
    • உங்கள் இதயத்தில் உள்ள பயத்தைப் போக்குங்கள், வெறுப்பு மறைந்து விடும்.

    காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறுகிறது. அம்பேத்கரின் பிறந்த இடமான மோவ்வில் உள்ள அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் பேசிய ராகுல்காந்தி கூறியுள்ளதாவது:


     அம்பேத்கர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட பெரிய ஆளுமைகள் நமக்கு அரசியலமைப்பை வழங்கினர். நமது அரசியலமைப்பு அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கி உள்ளது. மாநிலங்களவை, நீதித்துறை மற்றும் நாட்டின் அதிகார அமைப்புகள், அரசியலமைப்பிலிருந்து தோன்றியவை.

    அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் அல்ல, ஒரு வாழும் சக்தி, ஒரு சிந்தனை. அந்த எண்ணத்தை ஆர்.எஸ்.எஸ் அழிக்க விரும்புகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.அதன் அலுவலகங்களில் மூவர்ணக் கொடியை ஏற்றாததற்காக, அதன் எதிர்ப்பாளர்களால் விமர்சிக்கப்பட்டது.

    ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவும் அரசியல் அமைப்பு சட்டத்தை வெளிப்படையாக அழிக்க முடியாது. அவர்களுக்கு அந்த தைரியம் கிடையாது. அவர்கள் அதை முயற்சித்தால், நாடு அவர்களை தடுத்து நிறுத்தும். அதனால் அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க பின்கதவு வழியாக முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ், தனது ஆட்களை, முக்கிய அமைப்புகள், நீதித்துறை, ஊடகங்களில் ஈடுபடுத்தி வருகிறது. 


    என் பாட்டி 32 தோட்டாக்களை உடலில் வாங்கி கொல்லப்பட்டார், என் தந்தை கொல்லப்பட்டார். ஆனால் யாரிடமும் எனக்கு வெறுப்பு இல்லை. வெறுப்பு என்னை விட்டு விலகிய நாள், என் இதயத்தில் காதல் மட்டுமே மலர்ந்தது, வேறொன்றுமில்லை. வெறுப்பின் ஒரு துளி கூட என்னிடம் இல்லை. நான் வெறுப்பை வளர்க்கவில்லை.

    அதனால் பாஜக, பிரதமர் மோடி ஜி, அமித் ஷா, ஆர்எஸ்எஸ்காரர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், உங்கள் இதயத்தில் உள்ள பயத்தை கைவிடுங்கள், வெறுப்பு மறைந்து விடும். உங்கள் பயமே நாட்டில் வெறுப்பை உண்டாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது. அன்பு உள்ளவர்கள் ஒரு போதும் பயப்பட மாட்டார்கள், அஞ்சம் கொண்டவர்களால் நேசிக்க முடியாது. இதுவே எனது பாதயாத்திரையின் செய்தியும் கூட. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • புரளியாக இருக்கக் கூடும் என போலீசார் சந்தேகம்.
    • மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து ராகுல்காந்திக்கு கூடுதல் பாதுகாப்பு

    காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் இந்தியா ஒற்றுமை நடை பயணம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷெகானில் நடைபெற்று வருகிறது. சாவர்கர் குறித்து கருத்து தெரிவித்ததாக கூறி ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் ஷெகானில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் ராகுல்காந்தியின் நடைபயணம் அடுத்ததாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் நுழைய உள்ள நிலையில் இந்தூரில இனிப்பு கடை ஒன்றில் கிடந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என மிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது புரளியாக இருக்கக் கூடும் என்று சந்தேகிப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து ராகுல்காந்திக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×