search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தாண்டு"

    ரவுடி பினு பாணியில் அரிவாளால் ‘கேக்’வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அம்பத்தூர்:

    மாங்காடு பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல ரவுடி பினு தனது பிறந்த நாளை பட்டாக்கத்தியால் ‘கேக்’ வெட்டி நண்பர்களுடன் கொண்டாடினார். இதையடுத்து ரவுடி பினு உள்ளிட்ட கூட்டாளிகள் 72 ரவுடிகளை ஒரே நாளில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

    இதேபோல் ரவுடி பினு பாணியில் அயனாவரத்தில் வாலிபர் ஒருவர் தனது பிறந்த நாளை அரிவாளால் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய வீடியோ காட்சி சமூகவலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    இதுபற்றிய விவரம் வருமாறு:-

    ஆவடியை அடுத்த அண்ணனூர் வைஷ்ணவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கார் டிரைவரான இவர் கடந்த மாதம் 17-ந் தேதி, தனது பிறந்த நாளை அயனாவரம், சோலையம்மன் கோவில் மைதானத்தில், நண்பர்களுடன் கொண்டாடினார்.

    அப்போது கிருஷ்ண மூர்த்திக்கு அவரது நண்பர்கள் ஆளுயிர மாலை அணிவித்து, மலர் கிரீடம் வைத்தனர். பின்னர் கிருஷ்ணமூர்த்தி ரவுடி பினு பாணியில் 2 அடி நீள அரிவாளால் கேக்கை வெட்டினார்.

    இதனை அவரது நண்பர்கள் மொபைல் போனில் படம் பிடித்து வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலை தளங்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி, அவரது நண்பர்கள் அயனாவரம் வீராசாமி தெருவைச் சேர்ந்த சுனில், நிவாஸ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் மீது ஆயுத தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

    தாம்பரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தாம்பரம்;

    கிழக்கு தாம்பரம் கணபதி புரத்தை சேர்ந்தவர் யுவராஜ் என்கிற பப்லு (வயது 20). கடந்த 31-ந் தேதி இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது யுவராஜூக்கும் அவருடைய நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினர் மோதிக் கொண்டனர்.

    இந்த நிலையில், யுவராஜை இரும்புலியூர் ஏரிக்கரையில் சிலர் வெட்டிக் கொன்றனர். குற்றவாளிகள் குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் கொலைக்கு காரணமானவர்கள் யார்? என்பது குறித்து துப்பு துலங்கியது. இதையடுத்து கணபதிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற தேரிமணி, ராஜூ, லெனின் என்கிற பில்லா, பட்டாபி ராமத்தை சேர்ந்த முகேஷ் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். 4 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் தவிர மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிகளை மீறியதாக 1,254 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    விருதுநகர்:

    புத்தாண்டு கொண்டாட்டத்தை அனைவரும் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். வாகனங்களை ஓட்டுவதில் கவனமாக செயல்பட வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை காவல் துறை அறிவித்திருந்தது.

    மது அருந்தி வாகனம் ஓட்டினாலோ, அதிவேகமாக சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் புத்தாண்டு நாளில் இரவு முழுவதும் முக்கிய பகுதிகளை கண் காணித்து வந்தனர். இதில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக 1,254 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக வழக்கு பதிந்தவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

    முதலியார்பேட்டையில் புத்தாண்டில் மதுகுடித்து வந்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை அனிதாநகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 53). இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், பிரத்தீஸ் யுமணன் (18) என்ற மகனும், தேவகி (13) என்ற மகளும் உள்ளனர்.

    கனகராஜ் முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் வீதியில் பூக்கடை நடத்தி வருகிறார். மகேஸ்வரி திப்புராயப்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று புத்தாண்டையொட்டி மகேஸ்வரி கணவரிடம் மாலை கோவிலுக்கு செல்ல வேண்டும். அதனால் கடையை சீக்கிரம் பூட்டி விடுங்கள் என கூறினார். இதையடுத்து மகேஸ்வரியும், தனது குழந்தைகளும் கோவிலுக்கு செல்ல தயாராக இருந்தனர்.

    இந்த நிலையில் இரவு 8 மணிக்கு கனகராஜ் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் மது அருந்தி இருந்தார்.

    இதை கண்ட மகேஸ்வரி புத்தாண்டுக்கு கோவிலுக்கு செல்ல இருக்கும் நேரத்தில் இன்றும் மது குடித்து வந்துள்ளீர்களே? என கணவனை திட்டினார். இதனால் மன வருத்தம் அடைந்த அவர் மேல் மாடிக்கு சென்று படுத்து கொண்டார்.

    பின்னர் மகேஸ்வரி குழந்தைகளை மட்டும் அழைத்து கொண்டு பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டார்.

    மனைவி திட்டியதால் சோகத்தில் இருந்த கனகராஜ் அங்கு மின் விசிறி கொக்கியில் மனைவியின் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த மனைவி- குழந்தைகள் மேல் மாடிக்கு சென்று பார்த்தனர். அங்கு தூக்கில் தொங்குவதை கண்டு அலறி துடித்தனர்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டது. தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுபஸ்ரீ விளம்பி வருடம் மார்கழி மாதம் 17-ந்தேதி (1.1.2019) செவ்வாய்க்கிழமை ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரம், துலாம் ராசியில் புத்தாண்டு பிறக்கின்றது.
    சுபஸ்ரீ விளம்பி வருடம் மார்கழி மாதம் 17-ந்தேதி (1.1.2019) செவ்வாய்க்கிழமை ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரம், துலாம் ராசியில் புத்தாண்டு பிறக்கின்றது. குருமங்கள யோகத்தோடும், புத ஆதித்ய யோகத்தோடும். தைரியகாரகன் செவ்வாய்க்கு உரிய செவ்வாய்க்கிழமையில் புத்தாண்டு பிறப்பதால் எண்ணங்களை நிறைவேற்றி வைத்து இனிய வாழ்வை நமக்கு வழங்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.

    புத்தாண்டின் கூட்டுத் தொகை (2+0+1+9=12, (1+2)=3 என்ற) குருவிற்குரிய எண் ஆதிக்கத்தில் வருவதால் குருவருளும், திருவருளும் நமக்குக் கிடைக்க குரு பகவான் வழிபாட்டையும், தட்சிணாமூர்த்தி வழிபாட்டையும், அறுபத்துமூவர் வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்ல இயலும்.

    யோகம்பெறும் ராசி மற்றும் நட்சத்திரங்கள்

    இந்தப் புத்தாண்டு குருவின் ஆதிக்கத்தில் பிறப்பதால் குருவிற்குரிய நட்சத்திரங்களாக விளங்கும் விசாகம், புனர்பூசம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கும், 3 எண் ஆதிக்கத்தில் பிறப்பதால் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இந்தப் புத்தாண்டு பொன்கொழிக்கும் ஆண்டாக அமையப்போகின்றது.

    மற்ற ராசிக்காரர்களும், மற்ற நட்சத்திரக்காரர்களும், தங்கள் சுய ஜாதகத்தில் பாக்ய ஸ்தானத்தின் பலமறிந்து, அதற்குரிய தெய்வ வழிபாடுகளை, யோகபலம் பெற்ற நாளில் தேர்ந்தெடுத்து வழிபட்டு வந்தால் யோக வாய்ப்புகள் அனைத்தும் அடுக்கடுக்காக வந்து சேரும். உங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.

    கீர்த்தி தரும் கிரக சஞ்சாரம்

    இந்தப் புத்தாண்டில் 13.2.2019-ல் ராகு-கேது பெயர்ச்சியும், 28.10.2019-ல் குருப்பெயர்ச்சியும் நிகழ இருக்கின்றது. முரண்பாடான கிரக சேர்க்கை காலத்திலும், கிரகப்பெயர்ச்சி காலங்களிலும் போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாற சிறப்புப் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

    வெற்றி தரும் வழிபாடு

    ஆண்டின் தொடக்க நாளில் ஆனைமுகப் பெருமானை வழிபட்டு அதன்பிறகு சிவாலயம், விஷ்ணு ஆலயம், குலதெய்வம், இஷ்ட தெய்வம், முன்னோர்களையும் வழிபட்டால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 
    புத்தாண்டு தினமான இன்று மட்டும் இந்தியாவில் சுமார் 70 ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மதிப்பிட்டுள்ளது. #childrenborn #Indiachildbirth #Highestnumber #Unicef
    நியூயார்க்:

    உலகளாவிய அளவில் இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 18 சதவீதமாக இருந்து வருகிறது. இந்நிலையில், புத்தாண்டு தினமான ஜனவரி முதல் தேதி இந்தியாவில் சுமார் 70 ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மதிப்பிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, 'யூனிசெப்’ எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

    உலகில் நிகழ்ந்த குழந்தை பிறப்புகளில் 90 சதவிகிதம் பிரசவங்கள் அதிகமான வளர்ச்சியடையாத பகுதிகளில்தான் நடந்துள்ளன.

    கடந்த 2016-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, பல்வேறு காரணங்களால் 5 வயதுக்குள் இறந்துவிடும் குழந்தைகள் எண்ணிக்கை 56 லட்சமாக இருந்தது. இவற்றில் ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் பிறந்த முதல் 24 மணிநேரத்துக்குள் சுமார் 2600 குழந்தைகள் உயிரிழந்தன.

    சுமார் 20 லட்சம் குழந்தைகள் பிறந்த முதல் நாளில் இருந்து ஒருவார காலத்துக்குள் உயிர் நீத்தன. சுமார் 26 லட்சம் குழந்தைகள் பிறந்த முதல் நாளில் இருந்து ஒருவார காலத்துக்குள் உயிர் நீத்தன.

    இவற்றில் சுமார் 80 சதவீதம் உயிரிழப்புகள் முன்கூட்டிய பிரசவம் மற்றும் பிரசவத்தின்போது ஏற்படும் ரத்தம்சார்ந்த நோய்த்தொற்று, கபவாதம் ஆகிய காரணங்களால் நிகழ்ந்தன. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

    பிறந்த குழந்தைகள் 5 வயதுக்குள் இறந்துப்போவதை தடுக்கும் வகையில் பிரசவகால மரணம் மற்றும் பிறந்தவுடன் மரணம் என்னும் நிலையில் இருந்து அனைத்து குழந்தைகளையும் காப்பாற்றும் வகையில் Every Child Alive என்ற பெயரில் உலகளாவிய நிலையில் பிரசார இயக்கத்தை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தீர்மானித்துள்ளது.



    சராசரியாக தினந்தோறும் உலகளாவிய அளவில் நடைபெறும் மகப்பேறில் பாதியளவில் இந்தியா(69,070), சீனா(44,760), நைஜீரியா(20,210), பாகிஸ்தான்(14,910), இந்தோனேசியா(13,370), அமெரிக்கா(11,280), காங்கோ குடியரசு(9,400), எத்தியோப்பியா (9,020), வங்காளதேசம்(8,370) ஆகிய இந்த 9 நாடுகளில் நடக்கின்றன.

    அவ்வகையில், இந்த ஆண்டின் புத்தாண்டு தினமான ஜனவரி முதல் தேதி உலகளாவிய அளவில் சுமார் 3 லட்சத்து 86 ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் மட்டும் புத்தாண்டு தினத்தன்று 69 ஆயிரத்து 944 குழந்தைகளும், சீனாவில் 44 ஆயிரத்து 940 குழந்தைகளும், நைஜீரியாவில் 25 ஆயிரத்து 685 குழந்தைகளும் பிறக்கும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வேகத்தில் இருக்கும் குழந்தைகள் பிறப்பு விகிதத்தால்  21-ம் நூற்றாண்டுக்குள் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய நாடாக இந்தியா வளர்ந்துவிடும் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. #childrenborn #Indiachildbirth #Highestnumber #Unicef  
    டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் உற்சாக மிகுதியால் யாரோ நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். #NewYearcelebrations #DelhiBoydies
    புதுடெல்லி:

    நாட்டின் வடமாநிலங்களில் தேர்தல் வெற்றி, திருமண விழா, பிறந்தநாள் விழா ஆகிய கொண்டாட்டங்களின்போது வசதிபடைத்த சிலர் உற்சாக மிகுதியில் வானத்தை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு வேடிக்கை காட்டும் சம்பவங்கள் பெருகி வருகின்றன.

    இதைப்போன்ற சம்பவங்களில் சில அசம்பாவிதங்களில் முடிந்துள்ளன. துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களும் சில இடங்களில் உயிரிழந்ததாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் உள்ள உஸ்மான்புரா பகுதியில் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி பட்டாசுகளை வெடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது, எங்கிருந்தோ பாய்ந்துவந்த துப்பாக்கி தோட்டாக்கள் அங்கு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த 8 வயது சிறுவனின் உடலில் பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தான்.



    இதேபோல், வடகிழக்கு டெல்லியில் உள்ள வெல்கம் ஏரியா பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வீட்டின் மாடியில் இருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த 12 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக அந்தந்தப் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #NewYearcelebrations #DelhiBoydies 
    இந்த புத்தாண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையட்டும்! 2019-ல் உங்கள் எண்ணங்கள் நிறைவேற பிரார்த்திக்கிறேன் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். #2019NewYear #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டையொட்டி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.



    அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக இந்த புத்தாண்டு அமைய வேண்டுமென விரும்புகிறேன். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் 2019-ல் நிறைவேற பிரார்த்திக்கிறேன் என தனது வாழ்த்து செய்தி அவர் குறிப்பிட்டுள்ளார். #2019NewYear #PMModi
    புத்தாண்டு பிறந்திடும் போது நமது முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய பழைய எண்ணங்களை, செயல்முறை, நடவடிக்கைகளை மாற்றி அமைத்து புதிய தீர்மானத்தை மேற்கொண்டு அதற்கேற்ப செயல்பட தொடங்குவோம்.
    புத்தாண்டு பிறந்திடும் போது நம் வாழ்வில் புதிய எண்ணங்கள் உதயமாகும். அந்த வகையில் நமது முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய பழைய எண்ணங்களை, செயல்முறை, நடவடிக்கைகளை மாற்றி அமைத்து புதிய தீர்மானத்தை மேற்கொண்டு அதற்கேற்ப செயல்பட தொடங்குவோம்.

    பொதுவான புத்தாண்டு உறுதிமொழிகள்

    உலகளவில் எடுக்கப்படும் புத்தாண்டு உறுதிமொழிகள் என்பது உடல் நலத்தை மேம்படுத்துதல், உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி செய்தல், மது, புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களை குறைத்தல் போன்றவையாகும். அதுபோல் நேர்மறை எண்ணங்களை வளர்க்க செய்வது, வாழ்க்கையை அனுபவித்து வாழ்தல், அதிக மகிழ்ச்சி மற்றும் சந்தோஷமான சூழலை பேணுதல் போன்றவாறு நமது உடல் நலம் மற்றும் மனநலனை பாதுகாக்கும் வகையிலான உறுதிமொழிகள் எடுக்கப்படுகின்றன.

    பொருளாதாரத்தை மேம்படுத் தும் வகையில் அதிக செலவுகளை கட்டுப்படுத்துதல், கடன்களை அடைத்தல், நிதி நிலைமையை மேம்படுத்த முயற்சிகள், கடன்கள் பெறாமல் வாழ்க்கையை நடத்துவது போன்றவையும், செய்யும் பணி சார்ந்த உறுதி மொழிகள் எடுக்கப்படுகின்றன.

    ஒவ்வொரு ஆண்டும் தான் செய்கின்ற பணியில் முன்னேற்றம் பெறுவது, பதவி உயர்வது, அதிக சம்பளம் பெறுவது போன்ற லட்சியங்களை அடைய ஏற்ற உறுதிமொழிகளை ஆண்டின் தொடக்கத்தில் எடுத்துக் கொள்கின்றனர்.

    தொழில் செய்வோர் தங்கள் தொழிலை இந்தாண்டு கூடுதல் லாபத்துடன் செய்ய முயற்சிப்பது, தொழிலை விரிவு படுத்துவது, புதிய கூடுதல் தொழில்களை உருவாக்குவது, போன்ற புதிய உறுதிமொழிகளை புத்தாண்டில் எடுத்துக் கொள்கின்றனர். புத்தாண்டு உறுதிமொழிகள் என்பவை நம் வாழ்வை வளப்படுத்துவது, மேம்படுத்துவதுடன் நாம் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு உந்துதலாகவும் அமைகின்றன.

    பிரபலமான புத்தாண்டு தீர்மானங்கள்

    தினமும் அதிகாலையில் எழுந்திடுவேன், நேர மேலாண்மையை கடைபிடிப்பேன், புத்தாண்டில் என் உடல் எடையை குறைத்து கொள்வேன். ஆக்கமுடன் படிக்க முயல்வேன், என் அலுவலகம் மற்றும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பேன், குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பேன். தினசரி நடைபயிற்சி மேற்கொள்வேன், இந்தாண்டில் புதிய வீடு வாங்குவேன், குடும்பத்தினர் உடன் புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்வேன், புதிய கல்வி சார்ந்த விஷயங்களை கற்றுக் கொள்வது, சமூக நலப்பணிகளை மேற்கொள்வது என்பது போன்ற புத்தாண்டு தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. உடலினை அழகுபடுத்துதல், உடற்பயிற்சி மேற்கொள்வது போன்ற தீர்மானங்கள் அதிகளவில் எடுக்கப்படுகின்றன.
    புத்தாண்டையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கல் விலை உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ ரூ.1500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. #thovalaimarket
    நாகர்கோவில்:

    தோவாளை பூ மார்க்கெட்டுக்கு நெல்லை, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கடந்த ஒரு மாத காலமாக கடுமையான பனிப்பொழிவு உள்ளதால் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புத்தாண்டையொட்டி பூக்கள் வாங்குவதற்கு ஏராளமான வியாபாரிகள் இன்று காலையில் தோவாளை பூ மார்க் கெட்டில் குவிந்திருந்தனர். இதனால் மார்க்கெட் களை கட்டி இருந்தது.

    மல்லிகை, பிச்சிப்பூக்களின் வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகமாக இருந்தது. பிச்சிப்பூ கிலோ ரூ.1500-க்கு விற்கப்பட்டது. இதேபோல் மல்லிகைப்பூவும் நேற்றையவிட இன்று விலை உயர்ந்து காணப்பட்டது. கிலோ ரூ.2200-க்கு விற்கப்பட்டது.

    சம்பங்கி ரூ.40, கேந்தி ரூ.60, ரோஜா ரூ.90, கோழிப் பூ ரூ.40, வாடாமல்லி ரூ.40, கனகாம்பரம் ரூ.800, துளசி ரூ.30, சிவந்தி ரூ.80-க்கு விற்பனையானது.

    விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், பனிப்பொழிவின் காரணமாக பூக்கள் குறைந்த அளவுதான் வருகின்றன. ஆனால் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். #thovalaimarket
    நியூசிலாந்து நாட்டு மக்கள் உலகில் முதன்முதலாக ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக '2019' புத்தாண்டை வரவேற்று இன்று கொண்டாடி மகிழ்ந்தனர். #NewYear2019 #NewYearCelebration #NewZealandCelebration
    வெலிங்டன்:

    பூமிப் பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரலேசியா, ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் முதன்முதலாக சூரியன் உதிக்கும் முதல் நாடாக உள்ளது. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் நம்மைவிட ஏழரை மணிநேரம் கூடுதலாகும்.

    இந்நிலையில், (இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில்) நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.


    நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக (இந்திய நேரப்படி இன்றிரவு சுமார் 8.30 மணியளவில்) ஜப்பான் நாட்டு மக்கள் உலகிலேயே இரண்டாவதாக புத்தாண்டை கொண்டாடி மகிழ்வார்கள். அதன் பின்னர் சுமார் மூன்றரை மணி நேரத்துக்கு பிறகு நமது நாட்டில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கவுள்ளது.


    மாலைமலர் டாட்காம் வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!  #NewYear2019 #NewYearCelebration #NewZealandCelebration
    புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நாளில், கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #newyear2019 #partyleaders

    சென்னை:

    புத்தாண்டையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:-

    உலக ஜனத்தொகையில் அதிகப்படியான இளைஞர்களை கொண்ட நமது நாட்டில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை வள மாக்கி உலகை வெல்லும் வல்லமை படைத்தவர்களாக ஒவ்வொரு இந்திய இளைஞனும் உருவாகும் காலத்திற்கான துவக்கம் 2019. இந்த நல்ல நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக இந்திய மக்கள் ஒவ்வொருவரும் நல்லமுடி வினை எடுத்து, நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு பக்கபலமாக துணைநிற்க வேண்டும் என்ற எனது அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    இந்திய நாடு மதச்சார்பற்ற நாடு. ஜாதி, மத, மொழி வேற்றுமைகளை மறந்து நாம் அனைவரும் இந்தியத் தாயின் புதல்வர்களாக பல்வேற்றுமைகளிலும் ஒற்றுமை உள்ளவர்களாக வாழ்ந்து வரும் நிலை ஏற்பட வேண்டும். வெறுப்பு அரசியல் அகன்றிட வேண்டும். ஆட்சிகள் ஊழல் அற்றதாக, ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை பெற்றதாக இருந்திட வேண்டும்.

    இப்புத்தாண்டில் மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் விரும்பும் நல்லாட்சி மலர்ந்திட வேண்டும். மாற்றங்கள் நிகழ்த்தப்பட மக்கள் இந்நாளில் சபதம் ஏற்க வேண்டும்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன்:-


    ஊழல் இல்லாத ஆட்சி நடத்தி காட்டிய சாதனை நாயகன், மெய் வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், ஓய்வின்றி நாட்டு மக்களுக்காக உழைத்த நம் பாரதப் பிரதமர் மோடியின் ஆட்சி மீண்டும் அமைய இப்புத்தாண்டில் நாம் அனைவரும் சபதமேற்போம்.

    2019-ம் ஆண்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறை வேற்ற வேண்டும். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக் கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டு மென எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    இந்த புத்தாண்டாவது சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனித நேயம் மலர்ந்திட வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    2019-ம் ஆண்டை அரசியல் விழிப்புணர்வு ஆண்டாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். அல்லவை அகன்று நல்லவை நிறைந்த ஆண்டாக 2019-ம் ஆண்டு அமைய வேண்டும். தமிழ் நாடு இதுவரை சந்தித்த ஏமாற்றங்கள் அனைத்தும் பழங்கதையாகி மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட வேண்டும். அதன் பயனாக தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் வளர்ச்சியும், மலர்ச்சியும் மட்டுமே தொடர்கதையாக வேண்டும். அதற்காக இப்போதிலிருந்தே உழைக்க ஆங்கிலப் புத்தாண்டு நாளில் தமிழக மக்கள் அனைவரும் சபதம் ஏற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன்:-

    மீண்டும் அம்மாவின் உண்மையான நல்லாட் சியை தமிழகத்தில் இப்புத் தாண்டில் படைத்திட நம் இதயங்களும், கரங்களும் ஒன்றிணையட்டும்.

    மலர்ந்திடும் இப்புத்தாண்டில் மதநல்லிணக்கமும், சகோதர நேசமும் மேலோங்கிடும் மகிழ்ச்சியின் ஆண்டாக, செழிப்பின் ஆண்டாக, சாதனைகளை நாம் செதுக்கிடும் ஆண்டாக அமைந்திடட்டும் என வாழ்த்தி மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித் தாக்குகிறேன்.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மையமாக ஆக்கி, அதற்கு முன்பும்பின்பும் இரண்டாகப் பகுக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குப் பின் தற்போது இரண்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து, இந்த நாளில் 2019-ல், உலகம் அடி எடுத்து வைக்கின்றது.

    தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெற வாக்காளப் பெருமக்கள் இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டுகின்றேன்.

    அதன் தொடர் விளைவாக, தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க தமிழக வாக்காளப் பெருமக்கள் கடமை ஆற்ற வேண்டும். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-

    மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்தி ஒன்றுபட்டு விரிவான பரந்துப்பட்ட, மக்கள் மேடை அமைப்பதும், மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்து வகுப்புவாத சக்திகளையும், நிதிமூலதன சக்திகளையும் அகற்றுவதும் 2019-ம் ஆண்டு முன்நிறுத்தும் கடமையாகும்.

    காலம் முன்னிறுத்தும் கடமையினை நிறைவேற்ற புத்தாண்டில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-


    ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். கஜா புயலால் கடும் துயரத்தை சந்திக்க நேர்ந்தது. தூத்துக்குடி பயங்கரம் நிகழ்ந்தது. ஆற்றுநீர் பிரச்சினைகள் நம் அமைதியை சீர்குலைத்தது. இவ்வாறு பல இன்னல்களை சுமந்த ஆண்டாக 2018 கடந்து இருகிறது.

    புதிய ஆண்டு 2019 இயற்கை பேரிடர் இல்லாத ஆண்டாக, இன்னல்கள் நம்மை சூழாத ஆண்டாக, ஜனநாயகம் தழைக்கும் ஆண்டாக மலர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புகிறது.

    தமிழகத்திலும் அகில இந்திய அளவிலும் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு ஆட்சி அதிகாரத்தை வெல்லும் ஆண்டாக அமைய வேண்டும், அதற்கு ஏதுவாக புத்தாண்டு அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    புத்தாண்டை மகிழ்வோடு வரவேற்கும் தமிழ் மக்களாகிய நாமெல்லாம் தமிழ்நாட்டில் இனி ஒரு போதும் லஞ்ச லாவன்யத்துக்கு இடம் கொடுக்க மாட்டோம், நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காக மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடிய நல்லோர்களை தேர்ந்தெடுப்போம், வளமான தமிழகத்தையும் வலிமையான பாரதத்தையும் படைப்போம் என்று உறுதி ஏற்போம்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பகுதிநேர ஊழியர்கள், அனைவருக்கும் வரும் புத்தாண்டில் விடிவு காலம் பிறந்திட வேண்டும். மத்தியில் உள்ள சர்வாதிகார ஆட்சியும், மாநிலத்தில் உள்ள செயல்படாத ஆட்சியும் முழுமையாக அகன்றிட வரும் புத்தாண்டு வழிவிடட்டும்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    இந்திய இறையாண்மைக்கும், சகிப்புத்தன்மைக்கும் சவால்விட்டு ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் அதிகாரத்தை தகர்க்கும் விதமாகவும், தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தும் 2019-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    புதிய நீதிக்கட்சித் தலை வர் ஏ.சி.சண்முகம்:-

    ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தொடங்கிவிட்டால் இல்லாமை, இயலாமை போன்ற தீமைகளை நம் தேசத்தைவிட்டே விரட்டி விடலாம். ஒவ்வொரு குடும்பமும் வளமானால் ஒட்டுமொத்த தேசமும் வளமாகும். இந்த நாடும் யாராலும் அசைக்க முடியாத வல்லரசாகும். நம்நாட்டை உயர்த்த நாட்டுமக்கள் அனை வரும் கரங்கள் கோர்ப்போம். இந்த இனிய புத்தாண்டு தினத்தில் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    இந்த புத்தாண்டில் சாதி, சமய, மொழி வேறுபாடுகளை மறந்து, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற சகோதர எண்ணத்துடன் செயல்பட வேண்டும்.

    இந்த புத்தாண்டு மக்களுக்கு நன்மைகளையும், நம்பிக்கைகளையுமே வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும். ஊழலயற்ற, பொதுநலன் காக்கும் அரசு அமைய வேண்டும்.

    தமிழக முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் அருள்தாஸ்:-

    2019-ம் ஆண்டு தமிழக மக்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சிதரும் ஆண்டாகவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையக்கூடிய ஆண்டாக அமைந்திடவும், ஜாதி, மதம் கடந்து தமிழக மக்கள் அனைவரும் தமிழன் என்ற உணர்வோடும், அன்பு, அமைதி, சகோதரத்துவத் துடன் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வாழ் வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

    மேலும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள் விவரம் வருமாறு:-

    பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், மக்கள் தேசிய கட்சித் தலைவர், சேம.நாராயணன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #newyear2019 #partyleaders

    ×