search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணத்தகராறு"

    பணத்தகராறில் டீக்கடை உரிமையாளரை உருட்டுகட்டையால் தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருச்சி:

    திருச்சி டி.வி.எஸ்.டோல் கேட் பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் கருப்பசாமி (28). இவர் தொழிலுக்காக திருச்சி தில்லை நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரிடம் பணம் வாங்கியுள்ளார். பின்னர் அந்த பணத்தை திருப்பி செலுத்த வில்லை. 

    இந்நிலையில் ரமேஷ்குமார் தனது உறவினர் சபரிசீனிவாசனுடன் டீக்கடைக்குசென்று கருப்பசாமியிடம் பணம் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ்குமார் உருட்டுகட்டையால் கருப்பசாமியை தாக்கினர். இதில் அவரின் மண்டை உடைந்தது. 

    இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குபதிவு செய்து ரமேஷ்குமார், சபரிசீனிவாசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    திருவாலங்காடு அருகே பணத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பள்ளிப்பட்டு:

    திருவாலங்காடு அடுத்த ஜெ.எஸ்.ராமாபுரத்தில் வசித்து வருபவர் சரவணன் (46). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சுதா. இவர்களது மகன் சக்திவேல், மகள் மகாலட்சுமி. இவர்களில் சக்திவேல் 9-ம் வகுப்பும், மகாலட்சுமி 7-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

    நேற்று இரவு சரவணன் குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். அப்போது அவர்கள் திடீரென குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

    சரவணன், அவரது மனைவி சுதா, மகன், சக்திவேல், மகள் மகாலட்சுமி ஆகியோர் பூச்சி மருந்தை குடித்து மயங்கினர்.

    அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு அரக்கோணத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அனைவரும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சரவணன், கடந்த 6 மாதத்துக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதனை திருப்பி கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு பணம் கொடுத்தவருக்கும், சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சரவணனின் குடும்பத்தினை அசிங்கமாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் அவமானம் அடைந்த சரவணன் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

    இது குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    பணத்தகராறில் மிரட்டல் விடுத்ததால் லாரி டிரைவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த மேல்நிம்மியம்பட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 52). லாரி டிரைவர். இவருக்கு தாமரை என்ற மனைவி, ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கோவிந்தசாமிக்கு செக்குமேட்டில் 75 சென்ட் நிலம் உள்ளது.

    அந்த நிலத்தை விற்க கோவிந்தசாமி முடிவு செய்தார். அதன்படி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான எம்.ஜி. என்ற ஜெய்சங்கரிடம் ரூ.7 லட்சம் விலை பேசினார்.

    முன் பணம் ரூ.2½ லட்சம் பெற்று கொண்டார். மீதித் தொகையை 3 மாதத்திற்குள் கொடுத்து நிலத்தை கிரயம் செய்வதாக அ.தி.மு.க. பிரமுகர் கூறினார். கடைசி வரை மீதி பணத்தை தந்து அவர் நிலத்தை கிரயம் செய்யவில்லை.

    இதனால், காலக்கெடு முடிந்ததையடுத்து வேறு நபருக்கு கோவிந்தசாமி தனது நிலத்தை விற்றுவிட்டார். இதனால் அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கர் ஆத்திரமடைந்தார். முன் பணமாக கொடுத்த ரூ.2½ லட்சத்தை திருப்பி கேட்டு நச்சரித்தார். பணத்தை கோவிந்தசாமி தராததால் அ.தி.மு.க. பிரமுகர் மிரட்டல் விடுத்தார். மேலும், தனது ஆதரவாளர்களுடன் சென்று தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும், வாணியம்பாடி தாலுகா போலீசிலும் கோவிந்தசாமி மீது அ.தி.மு.க. பிரமுகர் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்தனர். கோவிந்தசாமி வரும் 20-ந் தேதிக்குள் 2½ லட்சம் ரூபாயையும் கொடுப்பதாக எழுதி கொடுத்தார்.

    இந்த நிலையில், நேற்று அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கர் ஆதரவாளர்களுடன் மீண்டும் கோவிந்தசாமியை அழைத்து மிரட்டினார். இதனால் மனமுடைந்த கோவிந்தசாமி தனது பைக்கில் பெட்ரோலை பிடித்து, உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. கட்டப்பஞ்சாயத்து பேசி மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓடி விட்டனர். அப்பகுதி மக்கள், கோவிந்தசாமி உடல் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவிந்தசாமி மாற்றப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, ஆலங்காயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×