search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடுகள்"

    • புத்தூர் கீழத்தோப்பில் 13 குடும்பங்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகிறோம்.
    • உடனடியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது.

    கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அம்மாபேட்டை புத்தூர் கீழதோப்பு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    அம்மாபேட்டை பேரூரா ட்சிக்கு உட்பட்ட புத்தூர் கீழத்தோப்பில் 13 குடும்பங்கள் பல தலைமுறைகளாக குடிசை வீடுகளில் வசித்து வருகிறோம்.

    எங்களுக்கு வீட்டு வரி ரசீது, வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே உடனடியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள வடதில்லை கிராமத்தில் ஏரிக்கரையில் 26 பழங்குடியின குடும்பங்களை சேர்ந்த 50 பேர் குடிசைகள் அமைத்து சுமார் 75 வருடங்களாக வசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

    அதன்படி ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தை சேர்ந்த வருவாய் அதிகாரிகள் வடதில்லை கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினரிடம் குடிசைகளை அகற்றுமாறு உத்தரவிட்டனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்தநிலையில் வடதில்லை கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் இருளர் சமுதாயம் முன்னேற்ற அறக்கட்டளை மாவட்ட தலைவர் முரளி தலைமையில் ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் வக்கீல்கள் வட தில்லை குமார், உதயா, வினோத், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் பழங்குடியினர் தாசில்தார் இளங்கோவனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், “நாங்கள் சுமார் 75 வருடங்களாக வடதில்லை கிராம எல்லையில் வசித்து வருகிறோம். திடீர் என்று வேறு இடத்துக்கு செல்லுங்கள் என்று அதிகாரிகள் உத்திரவிட்டிருப்பது எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் உள்ளது. எனவே அரசு புறம்போக்கு நிலத்தில் எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளனர்.

    தற்காலிகமாக குடிசை வீடுகள் அமைப்பதற்கு உதவுவதற்காக சேலத்தில் உள்ள தமிழக அரசு நிறுவனமான மேக்னசைட் நிறுவனத்தில் இருந்து கஜா புயல் நிவாரணமாக 5 லாரிகளில் மூங்கில்கள் கொண்டு வரப்பட்டன. #Gajastorm

    தஞ்சாவூர்:

    கஜா புயல் தஞ்சை மாவட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சையில் தொடங்கி கடைகோடி பகுதியான அதிராம்பட்டினம் வரை பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த பகுதியில் உள்ள அனைத்து தென்னை, பனை மரங்கள், புளியமரங்கள், அரசமரம், ஆலமரங்கள் உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. இதில் ஏராளமான குடிசை வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. தஞ்சை மாவட்டத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. இது தவிர 15 ஆயிரம் குடிசை வீடுகள் பகுதியாகவும், 52 ஆயிரத்து 137 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன.

    இது தவிர தென்னை மரங்கள் விழுந்ததில் ஏராளமான மாடி வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. வீடுகள் சேதம் அடைந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் தற்போது தங்குவதற்காக இடவசதி இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சிலர் தார்ப்பாய் மூலம் தற்காலிகமாக குடிசை போன்று அமைத்து அதில் வசித்து வருகிறார்கள். சிலர் அருகில் உள்ள மற்ற வீடுகளில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்காலிகமாக குடிசை வீடுகள் அமைப்பதற்கு உதவுவதற்காக சேலத்தில் உள்ள தமிழக அரசு நிறுவனமான மேக்னசைட் நிறுவனத்தில் இருந்து கஜா புயல் நிவாரணமாக 5 லாரிகளில் மூங்கில்கள் கொண்டு வரப்பட்டன.

    இந்த மூங்கில்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பகுதி மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மூங்கில்கள் பட்டுக்கோட்டை பகுதியில் வைக்கப்பட்டு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசை அமைப்பதற்காக வழங்கப்பட உள்ளன. #Gajastorm

    திருவேற்காட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகம், ஆகியவற்றை இடித்து அகற்றினர்.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு பஸ் நிலையம் அருகில் இருந்து வேத புரீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் 40 அடி சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடு, கடைகள் கட்டப்பட்டு இருந்தன.

    இதனால் சாலை மிகவும் குறுகலாகி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் திருவேற்காடு நகராட்சிக்கு வந்தது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நகராட்சி கமி‌ஷனர் சித்ரா தலைமையில் ஊழியர்கள் 2 ஜே.பி.சி. எந்திரத்துடன் அங்கு வந்தனர். அவர்கள் சிவன் கோவில் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகம், ஆகியவற்றை இடித்து அகற்றினர்.

    இதேபோல் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடு வெட்டியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நகராட்சிக்கு சொந்தமான 9 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 2 கோடி ஆகும்.

    இதில் நகராட்சி கமி‌ஷனர் சித்ரா,பொறியாளர் முத்துக் குமார், நகர அமைப்பு ஆய்வாளர் கவிதா, சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ், மேற்பார்வையாளர் குமார் உள்பட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டதையொட்டி 2 இடங்களிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

    பண்ருட்டியில் இன்று ஏரியில் ஆக்கிரமித்து கட்டியிருந்த 200 வீடுகளை இடித்து அதிகாரிகள் அகற்றம் செய்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டியில் உள்ள கடலூர் சாலையில் 10 ஏக்கர் பரப்பளவில் செட்டிபட்டறை ஏரி அமைந்துள்ளது.

    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரியின் மேடான பகுதியில் 200 ஆக்கிரமிப்பு வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் வரும் 24-ந் தேதிக்குள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் இடங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து செட்டிபட்டறை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அங்கு சென்ற அதிகாரிகள், ஏரியில் உள்ள ஆக்கிரப்பு வீடுகள் இடிக்கப்படும்.எனவே வேறு இடங்களுக்கு செல்லுங்கள் என்று அங்கு வசிக்கும் மக்களிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை அவர்கள் காலி செய்யவில்லை.

    இதையடுத்து இன்று காலை பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம், துணை தாசில்தார் சிவராமன் மற்றும் அதிகாரிகள் செட்டிபட்டறைக்கு வந்தனர். பாதுகாப்புக்காக போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வருமாறு ஓலிபெருக்கி மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதை கேட்டு பொதுமக்கள் அனைவரும் வெளியே வந்தனர். அவர்களிடம் கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு வீடுகள் இன்று இடித்து அகற்றப்படும் என்று கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரசபேச்சுவார்த்தை நடத்தினர். உங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    இதையடுத்து 3 பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 200 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதை பார்த்து பெண்கள் கதறி அழுதனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், செல்வம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    தஞ்சை திருக்காட்டுப்பள்ளி அருகே பாரத பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் நகர்ப்புற வீடில்லாத ஏழைகள் பயன்பெறுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 240 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் பூதலூரை அடுத்த திருக்காட்டுப்பள்ளியில் ஏழை மக்கள் பலரும் சொந்தவீடு இல்லாமல் வாடகை வீடுகளிலும், அரசு இடத்தில் குடிசை அமைத்தும் வசித்து வருகின்றனர். அவ்வாறு வீடுகள் இல்லாத ஏழைகள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகில் கூடணாணால் கிராமத்தில் அரசு இடத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

    அதன் அடிப்படையில் பாரத பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் நகர்ப்புற வீடில்லாத ஏழைகள் பயன்பெற ரூ.16 கோடியில் வீடுகள்கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

    தமிழக குடிசை மாற்று வாரியத்தின் திருச்சி கோட்டத்தின் வழியாக கூடணாணால் கிராமத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டும் பணி தொடங்கி உள்ளன. மத்திய. மாநில அரசு மற்றும் பயனாளியின் பங்களிப்புடன் 350 சதுரஅடியில் அனைத்து வசதிகளும் கொண்டு 240 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

    வீடுகள் கட்டப்பட்டு வரும் இடத்தில் உள்ள மண்ணின் தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மண் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் 10 அடி ஆழத்திற்கு அஸ்திவாரம் தோண்டப்பட்டது. அஸ்திவாரம் முழுமையும் சிமிண்ட் கான்கிரீட் போடப்பட்டுள்ளது. அதில் இருந்து தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அஸ்திவாரத்தில் போடப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரிட் தளத்தில் ஆங்காங்கு செவ்வக வடிவில் பள்ளம் அமைக்கப்பட்டுள்ளது.

    இது போன்று செய்வதால் முழு கட்டிடமும் முழுமையாக வலுவுடன் இருக்கும் என்றும். இது போன்ற அஸ்திவாரத்தின் மேல் வீடுகள் அமைக்கப்படும் போது விரிசல்கள் ஏற்படாது என்றும் பொறியாளர்கள் தெரிவித்தனர்.

    இந்த வருட இறுதியில் அல்லது 2019-ம் ஆண்டில் வீடுகள் அனைத்தும் தயாராகி திருக்காட்டுப்பள்ளி நகரில் வீடுகள் இல்லாத ஏழைமக்களுக்கு அவர்களின் பங்களிப்புடன் ஒப்படைக்கப்படும் என்று குடிசை மாற்று வாரியத்தினர் தெரிவித்தனர்.
    சென்னையில் அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் வணிக கட்டிடங்களுக்கும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை ஈடுசெய்ய 60 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. #Chennaiwater
    சென்னை:

    சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்திற்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிதி பற்றாக்குறையை ஈடுசெய்ய 60 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் குடிநீர் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் 8 லட்சத்து 70 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளில் மீட்டர்களும் பொருத்தப்பட்டு உள்ளன. மீட்டர் பொருத்தப்படாமலும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணம் மே மாதம் முதல் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    சென்னையுடன் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் கட்டணம் ஏற்கனவே அதிகமாக இருந்து வந்தது. திருவொற்றியூர், மாதவரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போது மற்றவர்களைவிட அதிகமாக கட்டணம் செலுத்தி வருகின்றனர். அதனால் அந்த பகுதிகளுக்கு 5 சதவீதம் மட்டுமே குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாடு உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை குடியிருப்புவாசிகள் ஒரு மாதத்திற்கு ரூ.50 வீதம் 6 மாதத்திற்கு ரூ.300 குடிநீர் கட்டணம் செலுத்தி வந்தனர். அவை மாதம் ரூ.80 ஆக உயர்த்தப்பட்டு அரையாண்டு கட்டணமாக ரூ.480 செலுத்த வேண்டும். புதிதாக சேர்த்த நொளம்பூர் பகுதியில் தற்போது மாதம் ரூ.25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. புதிய குடிநீர் கட்டணம் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    அதுபோல ரூ.65 நிர்ணயிக்கப்பட்ட அம்பத்தூர் பகுதிக்கு ரூ.100, மீனம்பாக்கம், நந்தம்பாக்கம் பகுதிகளுக்கு ரூ.60 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளகரம், பெருங்குடி, ஆதம்பாக்கம், ஆலந்தூர், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த கட்டணம் ரூ.50 தற்போது ரூ.80 ஆக கூட்டப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், குடிநீர் வழங்குவதன் மூலம் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டதை ஈடு செய்ய கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. புதிதாக இணைத்த பகுதிகளில் ஏற்கனவே வணிக ரீதியான இணைப்புகளுக்கு குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது. குடியிருப்பு பகுதிகளுக்கும் மாத கட்டணம் ரூ.100 ஆக உயர்த்தப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் ஏற்கனவே மாத கட்டணம் ரூ.70 வீதம் வசூலிக்கப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் ஒரே மாதிரியான குடிநீர் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் ஒரு சில பகுதிகளுக்கு தற்போது சிறிது உயர்த்தப்பட்டுள்ளது. #Chennaiwater

    ×