search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 145409"

    • ராப்பத்து உற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்சியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவிலில் ராப்பத்து உற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது.

    இந்த உற்சவத்தின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள் சவுரி கொண்டை, சந்திரகலை பதக்கம், வைரலட்சுமி பதக்கம், நெற்றிச்சரம், ரத்தின காதுகாப்பு, ரத்தின அபயஹஸ்தம், ரத்தின லெஷ்மி பதக்கம், பங்குனி உத்திர பதக்கம், மகரி, 8வட முத்துச்சரம், பவள மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில்எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 11-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
    • 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது.

    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் நேற்று கோவில் நான்காம் பிரகாரம் கிழக்கில் உள்ள மணல்வெளியில் கோலாகலமாக நடைபெற்றது.

    இதற்காக உற்சவர் நம்பெருமாள் மாலை 5 மணியளவில் தங்க குதிரை வாகனத்தில் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஆரியபடாள் வாசல் வழியாக மாலை 5.30 மணிக்கு கோவில் மணல்வெளிக்கு வந்தார். அங்கு நம்பெருமாள் மாலை 6 மணிவரை தங்ககுதிரை வாகனத்தில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார். இதனை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார். இரவு 8.15 மணி முதல் இரவு 9.30 மணிவரை அரையர் சேவையுடன், பொதுஜன சேவையும் நடைபெற்றது. அங்கிருந்து நம்பெருமாள் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், தனது பெருமாள் தொண்டு தொடர வழிப்பறிக் கொள்ளையன் ஆனானார். இவரை தடுத்து ஆட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிது நேரம் விளையாட்டுக்காட்டி பின் அவரது காதில் ஓம்நமோ நாராயணாய எனும் மந்திரத்தை தானே உபதேசித்து ஆட்கொண்ட விதம் நேற்றைய வேடுபறி வைபவத்தின் ஒருபகுதியாக பக்தர்கள் முன்னிலையில் நடத்தி காட்டப்பட்டது.

    இதையடுத்து திருமங்கை மன்னன் மரபில் வந்தவர்கள் என்று கூறப்படும் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காவல்காரர் குடும்பத்தினர் மற்றும் அவர்தம் உறவினர்களுக்கு பெருமாள் சார்பில் மரியாதைகள் வழங்கப்பட்டது. அதன்பின் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் சென்றடைந்தார். வேடுபறி உற்சவத்திற்கென நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் ஆரியபடாள் வாசல் வழியே மணல்வெளிக்கு வந்துவிடுவதால் ராப்பத்து உற்சவத்தில் வேடுபறியன்று மட்டும் பரமபதவாசல் திறப்பு நடைபெறுவதில்லை. 10-ம் திருநாளான 11-ந்தேதி தீர்த்தவாரியும், 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

    • சொர்க்க வாசல் திறப்பு அன்று மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • கடந்த 7 நாட்களில் ராப்பத்து உற்சவத்தில் 7.35 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 23-ந்தேதியிலிருந்து பகல் பத்து உற்சவம் தொடங்கி நடந்தது. பகல் பத்து உற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரங்களில் புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஒவ்வொரு நாளும் அரையர்கள் சேவையுடன் நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பகல் பத்து உற்சவத்தின் 10 நாட்களில் மொத்தம் 4 லட்சத்து 99 ஆயிரத்து 87 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10-ம் நாள் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாளை தரிசிக்க 81 ஆயிரத்து 754 பக்தர்கள் குவிந்தனர். இதைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவம் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. 7-ம் திருநாளான நேற்று திருக்கைத்தல சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 7 நாட்களில் ராப்பத்து உற்சவத்தை 7 லட்சத்து 34 ஆயிரத்து 955 பேர் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்துள்ளனர்.

    ராப்பத்து உற்சவத்தில் முதல் நாள் நம்பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுத்தருளினார். நம்பெருமாளுடன் சேர்ந்து சொர்க்கவாசலை கடந்தால் சொர்க்கத்தை அடையலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக ஏராளமான அன்று மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர். வைகுண்ட ஏகாதசி விழா தொடக்க நாள் முதல் நேற்று வரை 17 நாட்களில் 12 லட்சத்து 34 ஆயிரத்து 42 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 11-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
    • 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது.

    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 22-ந் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா 23-ந் தேதி தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான கடந்த 1-ந் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.2-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ராப்பத்து நாட்களில் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழி பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

    ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது. இதையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபத வாசலை கடந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு மாலை 6 மணி முதல் 6.15 மணி வரை திருக்கைத்தல சேவை (நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில்) நடைபெற்றது.மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை உயபகாரர் மரியாதையுடன் பொது ஜன சேவையும் நடைபெற்றது. இரவு 11.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான இன்று(திங்கட்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை வையாளி வகையறா கண்டருளுகிறார். பின்னர் மாலை 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைகிறார்.

    அங்கு இரவு 8.15 மணி முதல் இரவு 9.30 மணி வரை அரையர் சேவையுடன், பொது ஜன சேவையும் நடைபெறுகிறது. இரவு 11.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 10-ம் திருநாளான வருகிற 11-ந் தேதி தீர்த்தவாரியும், 12-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடக்கிறது. இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

    • கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன.
    • திருவரங்கப் பெரியகோவில் 6,13,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.

    வைணவர்களின் திருத்தலமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பல்வேறு அதிசயங்களையும், ரகசியங்களையும் தாங்கி நிற்கிறது. அதன் தொகுப்பு இதோ...

    * திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 'பூலோக வைகுண்டம்' என்ற பெருமை பெற்றது. வைணவர்களின் 108 வைணவ திருத்தலங்களில் தலைமைச் செயலகம் போல் செயல்படுகின்றது.

    * பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், 'மங்களாசாசனம்' பெற்று பாடிய திருத்தலமாகும். 108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு திருத்தலங்கள், பூமியில் இல்லை. ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல்.

    * இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோவில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன.

    * 1961 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கின்படி இங்கு 42 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். தற்போது, இதன் மக்கள் தொகை 3 லட்சத்தைத் தாண்டி விட்டது.

    * கோவில், 'நாழிக்கேட்டான் வாயில்' வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர்.

    * கோவிலின் உட்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி, மகாவிஷ்ணுவுக்கு உரியவராக முறையே சங்கு, தாமரை வடிவங்களில், 'சங்க நிதி', 'பதும நிதி' உருவங்களுடன் இருக்கின்றனர்.

    * விஜயரங்க சொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை முறையில், வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளன.

    * மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

    * மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதில் கோவில் பணியாளரைக் கொண்டு இயற்கை மூலிகைகளினால் தயாரிக்க ப்பட்டதைலக்காப்புடன் மெருகூட்டப்படுகிறது.

    * கோவில் கருவறையின்மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தின் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன.

    * இந்தத் திருத்தலத்துக்கு வந்து ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்க நாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.

    * வருடத்துகொருமுறை,பங்குனி உத்திர நாளில் பெருமாளும், தாயாரும். தாயார் சன்னதியில் இருக்கும் சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

    * கோவிலில் உள்ள நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரால் கட்டமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள 1,000 தூண்களும் முழுமையாக கட்டி முடிக்கப்ப டாமல் போய்விட்டது. 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 49 தூண்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் காலத்தில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களுடன் விழா நடைபெறுகிறது.

    கோவில் தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோவிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார்.

    ராமானுஜரது திருமேனி 5-வது 'திருச்சுற்று' எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சந்நிதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.

    ஐந்து குழி மூன்று வாசல்

    ஸ்ரீரங்கம் கோவிலின் தாயார் சந்நிதிக்கு வெளியே இருக்கும், ஐந்து குழி மூன்று வாசல் அற்புதமானது. இங்குள்ள ஐந்து குழிகள் வழியே, ஐந்து விரல்களை வைத்து தெற்கு பக்கம் பார்த்தால் பரமபத வாசல் தெரியும். இப்படித்தான் தாயார் பெருமாளை சேவிக்கிறார் என்பது ஐதீகம். அர்த்த பஞ்சக ஞானத்தைக் குறிப்பதே ஐந்து குழி என்றும் மூன்று வாசல் என்பது பிரம்மத்தின் வழி என்பதும் பெரியோர்கள் வாக்கு.

    கல்லிலே கலை வண்ணம் திருவரங்கம்

    திருச்சியில் காவிரியும் கொள்ளி டமும் உருவாக்கிய மணல் தீவு முக்கொம்பு தொடங்கி கல்லணை வரை உள்ளது. அரங்கம் என்றால் ஆற்றிடைக்குறை என்றும் பொருள்படும். சிறப்பு கருதி திருவரங்கம் ஆனது. அங்கு பெருமாள் வந்து தங்கியது ஒரு சுவையான புராணம். திருவரங்கப் பெரியகோவில் 6,13,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அதாவது 156 ஏக்கர். கோவில் சுவர்களின் மொத்த நீளம் 32,592 அடி. பெரிய கோவில் 7 திருச்சுற்றுக்களோடு அமைந்துள்ளது. இந்தியாவிலேயே 7 சுற்றுக்களைக் கொண்ட கோவில் இது மட்டுமே. பெருமாள் தென்திசை நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார். கருவறை விமானத்தில் 4 கலசங்கள் உள்ளன. இவை நான்கு வேதங்களை குறிப்பதாக நம்புகிறார்கள். சுந்தர பாண்டியன் விமானத்துக்கு தங்கம் பதித்தான். அதனால் பொன்வேய்ந்த பெருமாள் என அழைத்தனர்.

    நாம் ஸ்ரீரெங்கநாதரை தரிசிக்க ஏழாம் சுற்றின் தெற்கு வாசலில் உள்ள ராஜகோபுரத்தின் வழியாக நுழைகிறோம். முடிவடையாமல் இருந்த அந்த மொட்டை கோபுரத்தை 1979-ல் தொடங்கி 1987 மார்ச்சில் அஹோபில மடத்து 44-ம் ஜூயர் அழகிய சிங்கர் ஜூயர் 236 அடி உயரத்தில் முழுமையாக்கினார். ஆசியாவிலேயே பெரிய கோபுரமிது. இந்த ஏழாவது திருச்சுற்றில் சித்திரை திருவிழா நடப்பதால் சித்திரை திருவீதி என்று அழைக்கிறோம்.

    பங்குனித் திருநாளில் நம்பெருமாள் உலா வரும் கோரதம் இங்குதான் உள்ளது. கோட்டை வாசல் அருகில் உள்ள கண்ணன் சந்நிதியும் இங்குள்ளது.திருவரங்கப் பெருமாள் தென்திசை நோக்கி பள்ளி கொண்டிரு க்கிறார். குணதிசை முடியை வைத்து, குடதிசை பாதம் நீட்டி, வடதிசை முதுகு காட்டி, தென்திசை இலங்கை நோக்கி அரிதுயிலில் இருப்பதை காணும் பக்தர்கள் பரவசம் அடைகிறார்கள். அரங்கன் மீது கொண்ட காதலால் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருவரங்கம் வந்தவர் ஆண்டாள். அவரையே மணக்க விரும்பி அரங்கன் சந்நிதியில் திருமணத்தூணில் புகுந்து மறைந்தார் என்பது வரலாறு.

    திருவரங்கம் கோவிலிலும், சுற்றியுள்ள மண்டபங்களிலும் உள்ள சிற்பங்களை பார்க்கும் போது கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்ற பாடலை நினைவுபடுத்தும்.இங்குள்ள கலைக்கூடத்தில் பழங்கால உலோக சிற்பங்கள் வாள்கள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. 1966-ல் யுனெஸ்கோ செய்த உதவியால் சிற்பங்களும் ஓவியங்களும் புதுப்பிக்கப்பட்டன. பொதுவாக கோவில்களில் வருடத்தில் ஒன்றோ இரண்டோ விழாக்கள் நடக்கும்.

    ஆனால், வருடத்தில் 322 நாட்களும் பெருமாளுக்கு விசேஷம் என்பது திருவரங்கத்தில்தான். இதில்21 நாள் நடக்கும் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமானவை. அதுமட்டுமல்ல, பெருமாள் வீதியில் உலா வரும்போது அவருக்கு முன்பாக தமிழ் மறை ஓதுவரும் இங்குள்ள சிறப்பாகும்.ஆழ்வார்களிடையே அரங்கனை தவிர மற்றொரு பெருமானைப் பாடாமல் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீரெங்கத்திலேயே வாழ்ந்து மறைந்தவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார்தான். அவர் திருவரங்கத்தின் பெருமை உணர்ந்தே, இந்திரலோகம் கூட வேண்டாம்... அரங்க மா நகரமான திருவரங்கம் போதும் என்றார். கி.பி. 10-ம் நூற்றாண்டு வரை இந்தக் கோவிலுக்கு வரலாற்று சான்றே இல்லை.

    எல்லாம் இலக்கியச் சான்றுகளே. கோவிலின் மூன்றாம் சுற்றை திருமங்கை மன்னன் கட்டியதாக கூறுகிறது. ஆதித்ய சோழன் கா லம் தொட்டு 644 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலமாகவே சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள் செய்த திருப்பணிகளையும், கொடுத்த நிலம், பொன் போன்றவையும் அறிய முடிகிறது. இது குறித்து கல்வெட்டுகள் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மராட்டியம், ஒடியா முதலிய 6 மொழிகளில் கிடைக்கின்றன.

    கம்பீரம் காட்டும் ராஜகோபுரம்

    ஸ்ரீரங்கம் கோவில் ஏறத்தாழ 156 ஏக்கர் பரப்பளவில் அதா வது 6,31,000 சதுர மீட்டர் கொண்டதாக, நாட்டிலேயே மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. மையப் பகுதியில் ரெங்கநாத சுவாமி சன்னதி உள்ளது. இது தெற்கு நோக்கிய வண் ணம் அமைந்துள்ளது. ராஜ கோபுரத்துடன்கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.

    கோவிலைச் சுற்றி உட்புற மாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோவில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என முழு நகரத்தையும் உள்ள டக்கியுள்ளது.

    ஸ்ரீரங்கம் கோவில் வளாகத் துக்குள் அமைந்துள்ள ஏழு மதில் சுற்றுக்களும், ஏழு லோகத்தை குறிப்பதாக சொல் லப்படுகிறது. மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சுற்று- பூலோ கம், திரிவிக்ரம சோழன் திருச்சுற்று புவர்லோகம், அகலங்கனென்னும் கிளிச் சோழன் திருச்சுற்று சுவர் லோகம், திருமங்கை மன் னன் திருச்சுற்று -மகர்லோகம், குலசேகரன் திருச்சுற்று -ஜநோ லோகம், ராஜமகே ந்திர சோழன் திருச்சுற்று -தபோ லோகம், தர்மவர்ம சோழன் திருச்சுற்று -சத்யலோகம்.

    தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய ராஜகோபுரம்

    பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தல மாகவும், சோழநாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும் திகழ்கிறது. பரந்து விரிந்த இக் கோயில் வளாகத் தில் அமைந்துள்ள ஏழு சுற்று மதில்களின் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது. இது 17 -ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதானாலும், 1987 -ம் ஆண்டு தான் முழுமை யாகக் கட்டி முடிக்கப்பட்டது. சோழநாட்டு காவிரி ஆற்ற ங்கரையில் அமைந்து ள்ள முதல் திவ்யதேச தலம்.

    கட்டுமான பொருட்கள்

    ஸ்ரீரங்கம் கோவிலின் பிரமாண்டமான ராஜகோபு ரத்தை கட்டுவதற்கு 1.7 கோடி எண்ணிக்கையிலான செங்கற்கள், 20,000 டன் மணல், 1,000 டன் கருங்கல், 12 ஆயிரம் டன் சிமெண்ட், 130 டன் இரும்பு கம்பி கள், 8,000 டன் வர்ண பூச்சுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ராஜ கோபு ரத்தின் மொத்த எடை 1.28 லட்சம் டன் ஆகும்.

    சகல சவுபாக்கியம் தரும் கோவில்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் ரெங்க நாதப்பெருமாள் புஜங்க சயனத்தில் தெற்கு நோக்கி ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டு காட்சி அளிக்கிறார். உற்சவராக நம்பெருமாள், தாயார் ஸ்ரீரங்க நாச்சியார், தீர்த்தம் சந்திர புஷ்கரணி, காவிரி கொள்ளிடம், கோவிலின் விமான மாக பிரண வாக்ருதி, தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது.

    சூரிய குலத்தைச் சேர்ந்த மனுகுமாரன் பிரம்மனை நோக்கித் தவம் புரிந்து திருமாலின் திருவாரா தன விக்ரகத்தை கேட்டு வாங்கி அயோத்தியில் வைத்து வழிபட்டு வந்தார். இந்த விக்ரகத்தை ஸ்ரீராம பிரானும் வழிபட்டார். ஸ்ரீராமன், ராவணனை வென்று சீதா பிராட்டியை மீட்டு அயோத்திக்கு வந்த போது தம் முன்னோர்கள் வழிபட்டு வந்த திருமாலின் திருவாராதன விக்ரகத்தை, அன்பு காணிக்கையாக விபீஷணனுக்கு வழங்கினார். விபீஷணன் அதை எடுத்து இலங்கைக்குக் கொண்டு செல்லும் போது காவிரி, கொள்ளிடம் நதிக்கரையில் வைத்து இளைப்பாறினார்.

    மறுபடியும் அந்த விக்ரகத்தை எடுக்க முயன்றபோது விக்ரகத்தை எடுக்க முடிய வில்லை. தான் இனிமேல் இங்கு தான் நிரந்தரமாக இருக்கப் போவதாக பெருமாளே விபீ ஷணனிடம் கூறியதால் விபீஷணனும் மனம் உவந்து அந்த விக்ரகப் பெருமாளை வணங்கி விட்டு இலங்கைக்கு சென்றான். பெருமாளும் விபீஷணனுக்கு அருளும் வகையில் இலங்கையை நோக்கித் தன் பார்வை வரும்படி சயனித்துக் கொண்டார்.சோழநாட்டு அரசனான தர்மவர்மன் பெருமாளுக்கு முதலில் சிறு கோவிலைக் கட்டினார். இதற்கு பிறகு சேர, பாண்டிய அரசர்களும் இக்கோவிலைக் கட்டி முடிக்க அரும்பாடுபட்டார்கள்.

    அது நாளடைவில் மிகப்பெரிய கோவிலாக உருவெடுத்து இன்றைக்கு வைண வத் தலங்களில் முதலாவது கோவிலாக, புகழ்பெற்ற 108 வைணவ தலங்களில் முன்னிலையில் நிற்கிறது.பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பா ணாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். கம்பனது ராமாயணம் அரங்கேறியதும் இங்கே தான்.

    ஸ்ரீராமானுஜர் இறுதியில் திருநாடு அடைந்தாலும் அவரது திருமேனியை வசந்த மண்டபத்தில் - கெடாதவாறு மூலிகைச் சாந்து பூசி இன்று வரை வைத்திருக்கிறார்கள். இத்தலத்திலுள்ள மூலவரை - வெள்ளியன்று அதிகாலை விஸ்வரூப தரிசனம் கண்டு வந்தால் திருமணமாகாதவர்களுக்கு சுக்கிர தோஷம் விலகி திருமணம் நடக்கும். பணக்கஷ்டம் உள்ளவர்கள் அந்த சங்கடத்திலிருந்து மீண்டு விடுவார்கள். வெளி நாடு சென்று முன்னுக்குவர வேண்டும் என்று துடிப்பவர்கள், வேலை தேடுபவர்கள், சொந்தத் தொழில் செய்ய ஆசைப்படுபவர்கள் அனைவருக்கும் யோகத்தையும் சவுபாக்கியத்தையும் தரக் கூடிய கோவில் என்பது மிகப் பெரிய சிறப்பு.

    வளரும் நெற்குதிர்கள்

    20 அடி விட்டமும் 30 அடி உயரமும் கொண்ட 5 பிரம்மாண்ட நெற்குதிர்கள் சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு அருகே அமைந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இந்த நெல் சேமிப்பு கிடங்கிகள் வட்டவடிவமாக அமைந்தவை. மொத்தமாக 1500 டன் அளவுக்கு இந்த கிடங்கியில் நெல் சேமிக்க முடியுமாம். எந்தக் காலத்திலும் இந்த குதிர்களில் நெல் இல்லாமல் போனதே இல்லை என்ற பெருமையைக் கொண்டதாம் இவை. அதுபோல எத்தனை நெல் கொட்டினாலும் விரிவடைந்து ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டது என்றும் அதிசயமாக இந்தக் குதிர்களைச் சொல்கிறார்கள்.

    • ஆழ்வார் திருவுருவம் முழுவதுமாக துளசி தளங்களால் மூடப்படும்.
    • வைகுண்ட ஏகாதசி முதல் பத்து நாள் நம்மாழ்வாரை முன்னிட்டு போற்றப்படுகிறது

    ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால், நான்முகனை படைத்தார். அந்த பிரம்மாவை வதம் செய்ய இரண்டு அசுரர்கள் வந்தார்கள். அவர்களை தடுத்த திருமாலிடமும், அவர்கள் சண்டைக்கு வந்தார்கள். அந்த அசுரர்களை அடக்கி வதைத்தார் திருமால். அவர்கள், நாங்கள் உம் அருளால் சித்தி பெற்று ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் செய்ய வேண்டும் என்று வரம் வேண்டினார்கள்.

    அவர்களின் வேண்டுகோளை ஏற்ற திருமால் மார்கழி சுக்ல ஏகாதசியன்று விண்ணகத்தின் வடக்கு நுழைவாயிலை திறந்தார். அதன் வழியாக சத்ய லோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அனுப்பினார். அப்போது அந்த அசுரர்கள், மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சொர்க்கவாசல் திருநாளை சிறந்த உற்சவமாக அனைவரும்பூவுலகில் கடைபிடிக்க வேண்டும். அன்று அவ்வாசல் வழியே எழுந்தருளும் அனைவரும் மோட்சம் பெற வேண்டும் என்று பிரார்த்தித்தனர்.

    திருமாலும் அதன்படியே அனுக்ரகித்தார்.அந்த நன்னாளே வைகுண்ட ஏகாதசி திருநாளாக எல்லா திருமால் திருக்கோயில்களிலும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக பகல் பத்து உற்சவமும் அன்று முதல் 10 நாள் இராப்பத்து உற்சவமும் கொண்டாடப்படுகிறது. பகல் பத்து, இராப்பத்து உற்சவகங்களில் ஆழ்வார்களின் பரபந்தங்கள் முழுவதுமாக எம்பெருமான் திருஉருமுன்பு பாராயணம் செய்யப்படுகிறது.

    திருக்கோவில்களில் திருமாலின் திருவுருவம் நடுவில் பிரதானமாக எழுந்தருளியிருக்க ஆழ்வார்கள் ஒரு புறமும் ஆசாரியர்கள் ஒரு புறமும் எழுந்தருளியிருக்கக்கூடிய இந்த அற்புத காட்சியை இந்த இருபது நாள் மட்டுமே த ரிசிக்க வாய்ப்புகள் கிடைக்கும். பொதுவாகவே திருக்கார்த்திகை முதல் விஷ்ணு ஆலயங்களில் உள்ள மூலவர்களுக்கு தைலக்காப்பு நடைபெற்றுவிடுவதால் மூலவர் தரிசனம் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று முதல் அந்த தரிசனம் மீண்டும் கிடைக்கும். முதல் 10 நாட்கள் திருமங்கையாழ்வாரை முன்னிட்டு கொண்டாடப்படுவது மரபு. இதனை திருமொழித் திருநாள் என்பார்.

    வைகுண்ட ஏகாதசி முதல் பத்து நாள் நம்மாழ்வாரை முன்னிட்டு போற்றப்படுகிறது. இதுவே திருவாய்மொழித் திருநாள் என்பர். இராப்பத்து கடைசி நாளில் நம்மாழ்வார் முக்தி அடைவதாகவும் மீண்டும் நம் பொருட்டு அரங்கன் அவரை நமக்கு திரும்ப அளிப்பதாகவும் திருவிழா அமையும். ஆழ்வார் கோஷ்டியிலுள்ள நம்மாழ்வாரை இரண்டு அர்ச்சகர்கள் கைத்தாங்கலாக எழுந்தருளச் செய்து கொண்டு பெருமானின் திருவடியில் சேர்ப்பார்கள்.

    அப்போது ஆழ்வார் திருவுருவம் முழுவதுமாக துளசி தளங்களால் மூடப்படும். இது நம்மாழ்வார் மோட்சம் அடைந்துவிட்டதை குறிக்கும்.பிறகு நம் சார்பில் உலகம் உய்ய எம் பெருமானிடம் அர்ச்சகர், நம்மாழ்வாரை தந்தருளவேணும் என்று பிரார்த்தனை செய்வார். அப்போது சில குறிப்பிட்ட பிரபந்தங்கள் பாராயணம் செய்யப்படும். பின்பு துளசி தளங்களை விலக்கி மீண்டும் ஆழ்வார் கைத்தாங்கலாக எழுந்தருள செய்து கொண்டு அவருக்குரிய ஸ்தானத்தில் அமர்த்துவர். இதுவே நம்மாழ்வார் மோட்சம் எனப்படும் வைபவமாகும். ஒவ்வொரு திருமால் திருக்கோவில்களி லும் இம்முறை கடைபிடிக்கப்படும்.

    • இரண்டு செருப்பையும் இரண்டு ஊர்களில் தனித்தனியாக செய்வார்கள்.
    • இரண்டுமே ஒன்றுபோலவே இருக்கும் என்பதும் அதிசயம்.

    திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள, பெருமாள் அணிந்து கொண்டிருக்கும் காலணிகள் தேய்மானத்திற்கு பின் ஸ்ரீரங்கம் திருக்கொட்டாரம் எனும் இடத்தில் தூணில் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை அங்கு சென்றவர்கள் கண்டிருக்கலாம்.

    இந்த காலணிகளைச் செய்யவென்றே காலம் காலமாக தனித்த தொண்டர்கள் இருக்கிறார்கள். இரண்டு செருப்பையும் இரண்டு ஊர்களில் தனித்தனியாக செய்வார்கள். இரண்டுமே ஒன்றுபோலவே இருக்கும் என்பதும் அதிசயம்.

    6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த செருப்புகளை அரங்கனின் திருப்பாதத்தில் இருந்து கழற்றுவார்கள். அவை பயன்படுத்தப்பட்டவை போல தேய்மானம் கொண்டிருக்கும் என்பதும் அதிசயம்.

    • இக்கோவிலின் ராஜகோபுரமாக விளங்கியது வெள்ளை கோபுரம்தான்.
    • இந்த கோபுரத்திற்கு பின்னால் ஒரு தியாக வரலாறு உள்ளது.

    நம்பெருமாளின் திருவடிகளை சேவிப்பதற்காக ஸ்ரீரங்கம் நோக்கி வரும் பக்தர்கள் அனைவரையும் முதலில் வரவேற்பது வானுயர, விண்ணுயர எழுந்து கம்பீரமாக காட்சியளிக்கும் 236 அடி உயர ராஜகோபுரம் தான் என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் இந்த ராஜகோபுரத்தை விட வரலாற்று சிறப்புமிக்கது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் கிழக்குப்பகுதியில் உள்ள வெள்ளை கோபுரம்.

    இக்கோவிலை சுற்றி அமைந்துள்ள மொத்த கோபுரங்களின் எண்ணிக்கை 21. அனைத்து கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க, இந்த கிழக்கு கோபுரம் மட்டும் வெள்ளையாக காட்சியளிக்கிறதே? இது ஏன்? என்ற ஒரு வினா இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனதில் எழுவது இயற்கையே. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெற்கு கோபுரமான ராஜகோபுரம் 1987-ம் ஆண்டு அகோபில மடம் ஜீயரால் கட்டிமுடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதுவரை இக்கோவிலின் ராஜகோபுரமாக விளங்கியது வெள்ளை கோபுரம்தான். இந்த கோபுரத்திற்கு பின்னால் ஒரு தியாக வரலாறு உள்ளது.

    முகலாய மன்னர்களின் ஆட்சி காலத்தில் அன்னிய படையெடுப்புகளால் ஸ்ரீரங்கம் கோவில் பலமுறை சூறையாடப்பட்டு பொன் பொருள் எல்லாம் அன்னிய படையினரால் கொள்ளை அடித்து செல்லப்பட்டு இருக்கிறது என்பது வரலாறு. அந்த வரலாற்றுடன் இணைந்தே இந்த வெள்ளை கோபுரத்தின் வரலாறும் உள்ளது. அதாவது 15-ம் நூற்றாண்டு கால கட்டத்தில், அப்போது மதுரையை ஆண்ட சுல்தான் படைகள் ஸ்ரீரங்கம் கோவிலை கொள்ளையடிப்பதற்காக வந்தன. தேவையான பொன் பொருள் எல்லாம் அகப்பட்ட பின்னரும், அந்த படையின் தளபதிக்கு ஸ்ரீரங்கத்தை விட்டுச்செல்ல மனமில்லை. அதற்கு காரணம் காவிரிக்கரையில் அமைந்துள்ள இயற்கை அழகு அல்ல. அவன் மனதில் இக்கோவிலில் விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் இன்னும் ஏராளம் இருக்கும். அவற்றையும் கவர்ந்த பின்னரே இங்கிருந்து செல்ல வேண்டுமென திட்டமிட்டான்.

    இதற்காக ஒரு நாள் அல்ல பல நாள் தனது படையுடன் ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டான். ஆனால் அவன் நினைத்த பொக்கிஷம் அவன் கண்களில் எளிதாக சிக்கவில்லை. இந்த நிலையில் அன்னிய படைகளின் ஆதிக்கத்தால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், ஸ்ரீரங்கம் வாசிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்த சிரமத்தை கண்டு மனம் பொறுக்காத வெள்ளையம்மாள் என்ற பெண் வெகுண்டு எழுந்தாள். இந்த வெள்ளையம்மாள் வேறு யாரும் அல்ல, கோவிலில் நடனமாடி திருப்பணி செய்து வந்தவர் தான்.

    அரங்கன் மேல் உள்ள அளவற்ற பற்றின் காரணமாக, பேராசை கொண்ட தளபதிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று திட்டமிட்டார் வெள்ளையம்மாள். பெண்ணாசை பிடித்த அந்த தளபதி வெள்ளையம்மாளிடம் நெருங்கி பழகினான். அந்த நெருக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வெள்ளையம்மாள் ஒருநாள் தளபதியிடம் ரகசியமாக பேசினாள். அப்போது, நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பொக்கிஷம் எங்கே இருக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

    நான் உங்களுக்கு அதை காட்டுகிறேன் வாருங்கள் என்று வெள்ளை கோபுரத்தின் உச்சிக்கு கையோடு அழைத்து சென்றாள். விலைமதிப்பற்ற பொக்கிஷம் இன்னும் சற்று நேரத்தில் தனக்கு கிடைக்கப்போகிறது என்ற பேராசையில், அவனும் பின் தொடர்ந்து படிகளில் ஏறினான். வெள்ளை கோபுரத்தின் உச்சியை அடைந்ததும் வெள்ளையம்மாள் அந்த தளபதியை மேலிருந்து கீழே தள்ளிவிட்டாள். இதில் மண்டை உடைந்து நொறுங்கி தளபதி ஒழிந்தான். ஆனால் அவன் படைகள் நம்மை சும்மா விடமாட்டார்கள் என்று கருதிய வெள்ளையம்மாள் மேலே இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இதுதான் வெள்ளை கோபுரத்தின் தியாக வரலாறு.

    அரங்கனின் பொக்கிஷத்தை காப்பாற்றுவதற்காக தன்னுயிரை ஈந்த அந்த மங்கையின் நினைவாகவே, வெள்ளையம்மாளின் தியாகத்தை உணர்த்துவதாக, அந்த கோபுரம் இன்றுவரை வெள்ளை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது.

    • ராஜாதி ராஜா என்று அழைப்பதற்கு ஒரு வரலாறு உண்டு.
    • அந்த வரலாறு என்ன என்று இங்கு பார்க்கலாம்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பள்ளி கொண்டுள்ள ரெங்கநாதர் இந்த உலகிற்கெல்லாம் ராஜா. ராஜாதி ராஜா என்று அழைக்கப்படுகிறார். இதற்கு ஒரு வரலாறு உண்டு. ஆம் அந்த வரலாறு என்ன என்று இங்கு பார்க்கலாம்.

    மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்க மன்னர் ஒருமுறை ரெங்கநாதரை தரிசிப்பதற்காக ஸ்ரீரங்கம் வந்தார். அவர் வந்த நேரத்தில் ரெங்கநாதர் நகர்வலம் கிளம்பிவிட்டார். மன்னர் வந்ததோ சற்று தாமதமாக. அதனால் மன்னரின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமோ என்று பயந்த கோவில் நிர்வாகிகள், விழாவை மீண்டும் ஒருமுறை நடத்தி ரெங்கநாதரை எழுந்தருள செய்வதற்கு ஏற்பாடுகளை செய்தனர்.

    அதனை கண்டு கோபமுற்ற மன்னர், அது கூடாது. நான் இந்த நாட்டுக்கு தான் ராஜா. ஆனால் ரெங்கநாதர் இந்த உலகையே ஆளும் ராஜாதி ராஜா. அரசருக்கு எல்லாம் அரசர். அதனால் அவரை தடுத்து நிறுத்தக்கூடாது. அடுத்த ஆண்டு இதே எழுந்தருளல் நிகழ்ச்சி வரும் வரை நான் எனது நாட்டுக்கு செல்லப்போவதில்லை. இங்கேயே காத்திருந்து அடுத்தாண்டு தரிசித்துவிட்டு தான் செல்வேன்' என்று அங்கேயே தங்கினார்.

    அதை நினைவுகூறும் வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மகேந்திரன் சுற்று பகுதியில் மன்னர் தனது பட்டத்து ராணி உடன் இருக்கும் சிலை ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. உலகை ஆளும் ராஜா, ராஜாதிராஜா என்பதால்தான் கோவில் உற்சவங்களில் குறிப்பாக சொர்க்கவாசல் திறப்பின்போது நம்பெருமாளுக்கு முன்னால் செங்கோல் ஏந்தி ஒரு சேவகர் செல்வதை இப்போதும் காணலாம். செங்கோல் மன்னர்களுக்கு மட்டுமே உரியது. ஆம் மன்னர்களுக்கு எல்லாம் மன்னர் என்பதால் நமது நம்பெருமாள் செங்கோலுடனே பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2021-ம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் தான் வைகுண்ட ஏகாதசி நடைபெற்றது.
    • இது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பொறுத்தவரை ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமம் முறைப்படி நாள், நட்சத்திரம், திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன. ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை மாதத்தில் முன்கூட்டியே வரும் ஏகாதசி, கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

    மார்கழியில் வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது. பொதுவாக மார்கழி மாதத்திலேயே பகல் பத்து உற்சவமும், ராப்பத்து உற்சவமும் கொண்டாடப்படும். சில சமயங்களில் மார்கழி மாத கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், மறுநாள் தைத்திருநாளும் வந்தால், தை பிரம்மோற்சவம் கொண்டாட ஏதுவாக, வைகுண்ட ஏகாதசி உற்சவம் கார்த்திகை மாதத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் தான் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற்றது. கார்த்திகை மாதத்தில்தான் பரமபத வாசலும் திறக்கப்பட்டது. இது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும்.

    • கோவிலின் பரப்பு 6 லட்சத்து 31 ஆயிரம் சதுர அடி.
    • ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு.

    நாட்டிலேயே ஏழு பிரகாரங்களை கொண்ட கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மட்டுமே. இந்த பிரகாரங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும்.

    பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். ஆனால், இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலின் பரப்பு 6 லட்சத்து 31 ஆயிரம் சதுர அடி.

    அதாவது 156 ஏக்கர். ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு. உடலின் நடுவே ஆத்மா உள்ளது போல, கோவிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார். மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனதாக சொல்வதுண்டு.

    இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டது.

    • இன்று இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
    • 11-ந்தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். விழாவின் ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெறும்போது பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறக்கப்படும்.

    7-ம் திருநாளான வருகிற 8-ந்தேதி மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 8-ம் திருநாளான 9-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. 9-ம் திருநாளான 10-ந் தேதி பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    ராப்பத்து நிகழ்ச்சியின் 10-ம் நாளான 11-ந்தேதி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். இன்று திறக்கப்படும் சொர்க்கவாசல், மேலும் 8 நாட்களுக்கு தினமும் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட நாட்களில் மூலவர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ராப்பத்து நிகழ்ச்சிகளிலும் நம்பெருமாள் ரத்தின அங்கி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    ×