என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீஸ்காரர்"
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த வக்கீல்கள் ராமசுப்பு, வேல்முருகன் உள்பட 15 பேர் நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வீட்டின் முன்பு ஒரு புகார் மனு கொடுக்க போவதாக கூடி நின்றார்கள்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் நள்ளிரவு 11.30 மணி ஆகிவிட்டதால் மறுநாள் காலையில் மனு கொடுக்கு மாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் வக்கீல்களும், அவருடன் வந்தவர்களும் போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு புளியரையில், கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அப்போது சில லாரிகள் அபராதம் இல்லாமல் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் கொடுக்க போவதாக அவர்கள் கூடி அங்கு ஆர்ப்பாட்டம் செய்தனர். சம்பவ இடத்திற்கு பாளை போலீசார் விரைந்து வந்து அவர்களை சமரசம் செய்து அனுப்பினர்.
இது குறித்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ்காரர் சதீஸ் மோகன் பாளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், வக்கீல்கள் ராமசுப்பு, வேல்முருகன் ஆகியோர் உட்பட 15 பேர் மீது போலீஸ்காரருடன் வாக்குவாதம் செய்து அவதூறு பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் குன்னூர் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து குன்னூர் வரும் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. குறிப்பாக மூப்பர்காடு, கொலக்கம்பை, முள்ளிகூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்து வருகிறார்கள். இதனால் பஸ்களில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சம்பவத்தன்று மாலை முள்ளிகூர் செல்லும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் துண்டு, கைப்பை உள்ளிட்டவைகளை போட்டு சீட் பிடித்தனர். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்ய 2 போலீஸ்காரர்கள் வந்தனர். அதில் ஒருவர் ஜன்னல் வழியாக தனது துப்பாக்கியை சீட்டில் போட்டு இடம் பிடித்தார்.
இதைப்பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பயணிகள் கூறும்போது, பஸ்களில் சீட் பிடிக்க துப்பாக்கியை போடும்போது பயணிகள் அச்சம் அடைந்தனர். சமூக விரோதிகள் துப்பாக்கியை எடுத்துச்சென்றிருந்தால் விபரீதமாகி இருக்கும். போலீசார் இந்த செயலை தவிர்த்திருக்க வேண்டும் என்று கூறினர்.
போலீஸ்காரர் பஸ்சில் இடம் பிடிக்க துப்பாக்கி போட்ட போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள தூத்தூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமான்-கடம்பூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கோமான் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் (வயது 30) என் பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவரை வழி மறித்த போலீசார், வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். இதில் அவர் நான் அவசரமாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டியது உள்ளது. ஏன் எனது வண்டியை மறுக்கிறீர்கள் என சப்- இன்ஸ்பெக்டர் தேவராஜன் மற்றும் போலீஸ்காரர்கள் 3 பேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் போலீஸ்காரர் ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்றதாக தெரிகிறது. பின்னர் தேவேந்திரனை போலீசார் எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மோதல் நடந்தபோது அங்கு நின்ற சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் நேற்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. அதில் தேவேந்திரன், போலீஸ் காரர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸ் உயர் அதிகாரிகள், தேவேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்த தூத்தூர் போலீசார், தேதேவந்திரனை கைது செய்து அரியலூர் கோர்ட்டு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் தேவேந்திரனை அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
நல்கொண்டா மாவட்டம் நிதிமனூரு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசலு. சாட்டப்பல் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இவர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் தீவிர ஆதரவாளர். இந்த நிலையில் சந்திரசேகர் ராவ் மீதிருந்த அளவு கடந்த அன்பு காரணமாக அவருக்கு கோவில் கட்ட சீனிவாசலு முடிவு செய்தார்.
இதுபற்றி அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து தனது சொந்த ஊரான நிதிமனூரு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் சந்திரசேகர் ராவுக்கு கோவில் கட்டும் பணியை தொடங்கினார்.
இக்கோவிலை ரூ.2 லட்சம் செலவில் கட்டி முடித்தார். அதில் சந்திரசேகர் ராவின் மார்பளவு சிலையை வைத்துள்ளார். இக்கோவிலை முதல்வர் சந்திரசேகர் ராவ் திறக்க வேண்டும் என்று சீனிவாசலு கோரிக்கை விடுத்து இருந்தார்.
சந்திரசேகர் ராவ் தனது கிராமத்துக்கு வரும்போது கோவிலின் திறப்பு விழாவை நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். #TelanganaCM #ChandrashekarRao
பிரேசில் நாட்டின் வடமேற்கு பகுதியில் ரொமேயூ கான்கேல்வ்ஸ் அப்ரான்டெஸ் நகரில் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. இங்கு பல தரப்பட்ட குற்றங்கள் புரிந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. இருந்தும் அவற்றை மீறி ஒரு கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது. பின்னர் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 92 கைதிகளை தப்பிக்க வைத்தனர்.
முன்னதாக 20 பேர் கொண்ட கும்பல் 4 வாகனங்களில் வந்து சிறை வாசலில் இறங்கினர். துப்பாக்கி மற்றும் வெடி குண்டுகளை வைத்திருந்தனர். அதன் மூலம் சிறையின் முன்பக்க ‘கேட்’ உடைந்து நொறுங்கியது.
பின்னர் உள்ளே புகுந்த கும்பலுக்கும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காயம் அடைந்த போலீசாரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார்.
இதற்கிடையே கும்பல் விடுவித்ததால் தப்பி ஓடிய கைதிகளை தேடும் பணியில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் 41 பேரை போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
சர்வதேச அளவில் சிறை கைதிகள் அதிகம் உள்ள நாடுகளில் பிரேசில் 3-வது இடத்தில் உள்ளது. அங்கு 7 லட்சத்து 26 ஆயிரத்து 712 கைதிகள் சிறை கைதிகளாக உள்ளனர். #BrazilPrison
கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூரைச் சேர்ந்தவர் அஜ்மல்கான். இவர் கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார்.
இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்து கடந்த 2001-ம் ஆண்டு பரகத் நிஷா என்பவரை 2-வது திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
இது தொடர்பான வழக்கு உத்தமபாளையம் மகளிர் போலீசில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே கடந்த ஆண்டு அஜ்மல்கான் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த சர்க்கரையம்மாள் என்பவரை 3-வது திருமணம் செய்து கூடலூரில் வசித்து வருகிறார். இந்த விபரம் 2-வது மனைவி பரகத் நிஷாவுக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் கூடலூர் வந்தார்.
அங்கு கணவர் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் செய்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில் முறைப்படி விவாகரத்து பெறாமல் 3-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று ஆவேசமாக கூறினார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் போலீஸ்காரரை கடத்தி கொலை செய்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் முத்தலாமா கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரரான முகமது சலீம் ஷா, சமீபத்தில் விடுமுறையில் வீட்டுக்கு சென்றார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முகமது சலீம் ஷா வீட்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள், அவரை கடத்தி சென்றனர்.
அதன் பின்னர் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் ரெட்வாணி என்கிற இடத்தில் முகமது சலீம் ஷா பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த நாசவேலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் மாநில போலீசாரும், ராணுவ வீரர்களும் ஈடுபட்டனர். இந்த நிலையில் ரெட்வாணி பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசாரும், ராணுவ வீரர்களும் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். அப்போது வீட்டினுள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
அதனை தொடர்ந்து போலீசாரும், ராணுவ வீரர்களும் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் வீட்டினுள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்களுடைய உடலை போலீசார் கைப்பற்றினர். ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. சுட்டுக்கொல்லப்பட்ட மூவரில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டுக்காரர் என்பதும், இவர்கள் 3 பேரும் தான் போலீஸ்காரர் முகமது சலீம் ஷாவை கடத்தி கொலை செய்தனர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் 3 பேரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா உடன் தொடர்பில் இருந்ததாகவும், காஷ்மீரில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு அப்பாவி மக்களை கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கதுவா மாவட்டம் கிரான் நகரில் போபியா என்கிற இடத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து மர்ம நபர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தார். இதனை பார்த்த எல்லை பாதுகாப்புபடை வீரர்கள், அந்த நபரை தங்களிடம் சரணடைந்து விடும்படி எச்சரித்தனர்.
ஆனால் அதனை பொருட்படுத்தாத அந்த மர்ம நபர் தொடர்ந்து முன்னேறினார். இதையடுத்து வேறுவழியின்றி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அவரை சுட்டுவீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். #policeconstableMohdSalim #Murder #tamilnews
தாம்பரம், லட்சமி நகரில் வசித்து வருபவர் ஞானசேகர். ஆயுதப்படை போலீசில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு அவர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். உடன் சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றும் கலைச்செல்வனும் தனியாக மோட்டார் சைக்கிளில் வந்தார்.
தாம்பரம் ரெயில் நிலையம் அருகே வந்த போது போலீஸ்காரர் ஞானசேகர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக தண்டவாளம் அருகே தனியாக நடந்து சென்றார்.
அப்போது அங்கு பதுங்கி நின்ற வாலிபர் திடீரென ஞானசேகரை மிரட்டி செல்போனை கொடுக்கும்படி கேட்டான். அதிர்ச்சி அடைந்த அவர் செல்போனை கொடுக்க மறுத்து கொள்ளையனை மடக்கி பிடிக்க முயன்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஞானசேகரின் கையில் வெட்டினான். இதில் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்த மற்றொரு போலீஸ்காரர் கலைச்செல்வன் அங்கு விரைந்து சென்றார். உடனே கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
கையில் பலத்த காயம் அடைந்த ஞானசேகர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போனை பறிக்கும் முயற்சியில் போலீஸ்காரரை கொள்ளையன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம் ரெயில் நிலையம் அருகே இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை மிரட்டி நகை, செல்போன் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி உள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது, தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி கூறியிருந்தார். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார் என விவசாய சங்கத்தினரும், பா.ஜனதாவினரும் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும், அருண் டோலின் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் முதல்-மந்திரிக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். விவசாய கடனை தள்ளுபடி செய்யாத குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வது எப்போது? என அவர் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த தார்வார்-உப்பள்ளி மாநகர போலீஸ் கமிஷனர் எம்.என்.நாகராஜூ, அருண் டோலினை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக விளக்கம் கேட்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அருண் டோலின் இதற்கு முன்பும் இதுபோல் குமாரசாமி அரசை விமர்சித்து முகநூலில் சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Kumaraswamy #Constable #Suspended
திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி அடைக்கலமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்சன் அலெக்ஸ் (வயது 29). இவர் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து வந்தார். இவருக்கு மெட்டில்டா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் காலையில் பணிக்கு சென்ற ஜான்சன் அலெக்ஸ் மாலை 6 மணியளவில் பணி முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இதற்கிடையில் மனைவிக்கு போன் செய்து ராம்ஜிநகர் அருகே உள்ள நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்து விடுவதாக கூறியுள்ளார்.
அதன்படி நண்பரை பார்த்துவிட்டு ராம்ஜிநகரில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மணிகண்டம் போலீஸ் நிலையம் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் உள்ள தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மணிகண்டம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஜான்சன் அலெக்ஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை பொன்மலைப்பட்டியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஜான்சன் அலெக்சின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கு தீவிர நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இவ்வாறு தேடுதல் வேட்டையின்போது மாவோயிஸ்டுகள் தரப்பில் மட்டுமின்றி, காவல்துறை தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், சராய்கேலா-கர்சவான் மாவட்டம் தல்பாகா அர்கி பகுதியில் மாவோயிஸ்டுகள் சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை இன்று காலையில் சிஆர்பிஎப் படையின் கோப்ரா கமாண்டோ பட்டாலியன் வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் சுற்றி வளைத்தனர்.
பின்னர் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே கடுமையான சண்டை நடைபெற்றது. இதில், கோப்ரா கமாண்டர் ஒருவர் உயிரிழந்தார். ஒரு போலீஸ்காரர் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.
சிறிது நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, மாவோயிஸ்டுகள் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #JharkhandEncounter
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்