search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 152754"

    33 வழித்தடங்களில் செல்லும் அரசு விரைவு பஸ்களை போக்குவரத்து கழகங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. #TNGovtBus #Bus

    சென்னை:

    நீண்ட தூரம் பயணம் செல்லும் பயணிகள் வசதிக்காக அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, கோவை, சேலம், தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல் போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப்படும் அரசு பஸ்களும் மற்ற மாவட்ட தலை நகரங்களுக்கு செல்கின்றன.

    இதனால் பகலில் இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது. இதன் காரணமாக 300 கிலோ மீட்டர் தூரத்துக்கும் குறைவாக செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழகங்களில் வருமான இழப்பு ஏற்படுகிறது.

    எனவே இந்த வருமான இழப்பை சரி கட்டுவது எப்படி என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து கழகங்கள் சார்பில் வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வழித்தடங்களில் அரசு விரைவு பஸ்களை இயக்கு வதை தவிர்க்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் அரசிடம் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீண்ட தூர வழித்தடங்களில் மட்டும் அரசு விரைவு பஸ்களை இயக்கலாம். மற்ற வழித்தடங்களை அந்தந்த போக்குவரத்து கழகங்களுக்கே விட்டுக் கொடுக்கலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது.

    இதன்படி குறைந்த தூரங்களில் இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து பஸ்களை நிறுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. போக்குவரத்து கழக பஸ்கள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    அரசு விரைவு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் வருமான இழப்பும் தவிர்க்கப்படும். எனவே வருமான இழப்பு ஏற்படும் 33 வழித்தடங்களில் அரசு விரைவு பஸ்கள் நிறுத்தப்படும். இதற்கு பதிலாக அந்தந்த பகுதியில் உள்ள போக்குவரத்து கழகங்கள் மூலம் இந்த வழித்தட பஸ்கள் இயக்கப்படும

    அரசு விரைவு பஸ்கள் நீண்ட தூரங்களுக்கு மட்டும் இயக்கப்படும். வெளி மாநிலங்களுக்கும் கூடுதலாக 50 அரசு விரைவு பஸ்களை இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    சென்னையில் மாநகர பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. நகரின் விரிவாக்க பகுதிகளுக்கும் தனி பஸ்கள் செல்கின்றன. இதில் பல இடங்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

    எனவே சென்னை நகரில் 40 மாநகர பஸ் வழித் தடங்களில் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான சாத்தியகூறுகள் குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது. இது பற்றிய முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. #TNGovtBus #Bus

    அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் 16 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. #Omnibuses

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண் டாட செல்லும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ், ரெயில்கள் விடப்பட்டுள்ளன. ஆம்னி பஸ்களிலும் இடங்கள் நிரம்பி வழிகிறது. தமிழகத்தில் 1100 ஆம்னி பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன.

    பண்டிகை கால கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் பலமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தைவிட 3 மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சில ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் ஆன்லைனில் வெளிப்படையாக கூடுதல் கட்டணம் நிர்ணயித்து பொதுமக்களிடம் வசூலித்து வருகின்றனர்.

    அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கோயம்பேடு ஆம்னி பஸ்நிலையம், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி, கிழக்கு கடற்கரை சாலை சுங்கசாவடி, ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்கிறார்கள்.

    இன்று (வெள்ளிக் கிழமை) 3,4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் தீவிர சோதனை செய்கின்றனர். 4 நாட்களிலும் 4 குழுக்கள் வீதம் 16 குழுக்கள் நியமிக்கப்பட்டு கூடுதல் கட்டணம், பெர்மிட் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கின்றனர். இதுகுறித்து அமலாக்கப் பிரிவு இணை ஆணையர் முத்து கூறியதாவது:-

    ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும். 4 பஸ் நிலையங்களிலும் 4 நாட்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த பஸ் சிறை பிடிக்கப்படும். ஆன்லைனில் அதிக கட்டணம் குறிப்பிடப்பட்டு இருந்தாலும் சம்பந்தப்பட்ட பஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது.

    அதனால் பஸ்சில் பயணம் செய்யும் போது அதிக கட்டணம் வசூலித்தது குறித்து புகார் தெரிவித்தால் கூடுதல் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும். மேலும் பெர்மிட் இல்லாமலும் இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார். #Omnibuses

    ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பதாகைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரப்பகுதி கடைவீதிகளில் பல்வேறு இடங்களில் தனியார் ஜவுளி கடை உரிமையாளர்கள் மற்றும் திருமண விழா, கோவில் திருவிழா, அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் பொது நிகழ்ச்சிகளுக்காக பதாகைகள் வைத்து ரோட்டை அடைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருகின்றனர். மேலும் கடைவீதி, நான்கு ரோட்டில் நாலாபுறமும் குற்ற கண்காணிப்புக்காக போலீசாரால் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களும் மறைக்கப்படுகின்றன. இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசாருக்கு மிகுந்த சிரமமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

    மேலும் ஜெயங்கொண்டம் கடைவீதியில் சுமார் 10 மாதத்திற்கு முன்பு சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த மளிகைக் கடைக்காரர் ஒருவரிடம் இருந்து பணப்பையை மர்ம நபர் ஒருவர் திருடி கொண்டு தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் அந்த மர்ம நபரை கண்டுபிடிப்பதற்காக, போலீசார் கேமராவில் பார்க்கும் போது பதாகைகள் மறைத்து விட்டது. இதனால் மர்ம நபர் யார் என்று இதுவரை கண்டு பிடிக்கவில்லை. மேலும் கடைவீதிகளில் ரோட்டு ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள கடை களால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை ரோட்டின் நடுவே நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுப்பதுடன் சாலை ஓரங்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தியும், பதாகைகளை அகற்றியும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    சுற்றுச்சூழலை பாதிக்காத பயோ டீசல் மும்பையில் விற்பனை செய்யப்படுகிறது. இது தற்சமயம் பயன்படுத்தப்படும் டீசலுக்கு மாற்றாக அமைந்துள்ளது. #biotech #diesel



    சுற்றுச்சூழலை பாதிக்காத பயோ டீசலை மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த மை எகோ எனர்ஜி (எம்.இ.இ.) எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. புனே-மும்பை நெடுஞ்சாலையில் இதற்கான விற்பனையகத்தையும் அமைத்துள்ளது. இந்நிறுவனம் பயோ டீசல் விற்பனைக்காக அமைக்கும் இரண்டாவது விற்பனையகம் இதுவாகும்.

    தாவர எண்ணெய், வேளாண் கழிவுகள், உணவில் பயன்படுத்த முடியாத எண்ணெய் வித்துகள் உள்ளிட்டவை மூலம் இந்த பயோ டீசல் தயாரிக்கப்படுகிறது. இது அனைத்து டீசல் என்ஜின் வாகனங்களுக்கும் ஏற்றது.

    வழக்கமாக வாகனங்களில் பயன்படுத்தப்படும் டீசலுக்கான தர அளவீட்டின்படி இ.என். 590 தரத்தைக் கொண்டதாக இந்த பயோ டீசல் உள்ளது. இதனால் டீசல் என்ஜினில் எவ்வித மாறுதலும் செய்யத் தேவையில்லை என்று எம்.இ.இ. நிறுவனத்தின் இணை நிறுவனர் சந்தோஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

    ‘இண்ட்-டீசல்’ என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த பயோ டீசல் ஒரு லிட்டர் 64 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் இந்த டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வருவதால் ஜி.எஸ்.டி.யில் பதிவுபெற்ற சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் இண்ட்-டீசலை பயன்படுத்தினால் லிட்டருக்கு ரூ.8 வரை சலுகை பெறலாம்.

    இண்ட்-டீசலை பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் மாசுபடுவதும் குறையும். ஏனெனில் இதில் வழக்கமான டீசலில் உள்ளதைப் போன்ற கந்தக அளவு கிடையாது. இது அதிக அளவில் புழக்கத்திற்கு வரும்போது நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவும் கணிசமாகக் குறையும்.
    நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் குமுளி மலைச்சாலையில் 8-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு அந்த மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டதால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

    தமிழக கேரள எல்லைப்பகுதியான குமுளி, போடிமெட்டு, கம்பம் மெட்டு ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதனால் குமுளி மலைச்சாலையில் கடந்த வாரம் நிலச்சரிவு ஏற்பட்டது.

    அதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்த போது மற்றொரு இடத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கனமழை காரணமாக கம்பம், கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

    வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே எப்படியாவது வேலைக்கு சென்றுவிட வேண்டும் என போடி மெட்டு, கம்பம் மெட்டு வழியாக வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போது குமுளி மலைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் தனியார் வாகனங்கள் கொள்ளை லாபம் பார்க்கின்றார்.

    பைக் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் லோயர் கேம்ப்பில் இருந்து குமுளி வரை மோட்டார் சைக்கிளில் ட்ரிப் அடித்து வருகின்றனர்.

    பஸ்களில் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் மோட்டார் சைக்கிளில் ஒரு நபருக்கு ரூ.100 வசூலிக்கின்றனர். மேலும் மலைச்சாலையில் 3 முதல் 4 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    இது குறித்து போலீசார் எச்சரித்த போதும் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் வேறு வழியின்றி மோட்டார் சைக்கிளில் அதிக விலை கொடுத்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    எனவே அரசு சார்பில் பொதுமக்கள் சென்று வர வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மோட்டார் சைக்கிளில் அதிக ஆட்களை ஏற்றிக் கொண்டு மலைச்சாலையில் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
    பெரும்பாறை அருகே மலைச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    பெரும்பாறை:

    கொடைக்கானல் கிழ்மலை பகுதிகளான பெரும்பாறை, தாண்டிக்குடி, தடியன்குடிசை, கே.சி.பட்டி ஆகிய பகுதிகளுக்கு வத்தலக்குண்டு மற்றும் திண்டுக்கல்லில் இருந்து செல்வதற்கு மலைச்சாலை உள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்த மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது.

    மேலும் தடுப்புச் சுவர்களும் சேதமடைந்தன. இந்த மலைச்சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. எனவே இதனை சீரமைக்க மண், ஜல்லி கற்கள் சாலையிலேயே கொட்டப்பட்டன.

    ஆனால் பணிகள் தொடங்காததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சித்தரேவு-பெரும்பாறை மலைப்பகுதியில் ஏணிக்கல் என்ற இடத்தில் சாலையை அகலப்படுத்தி புதிதாக தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    அந்த இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் வருவதால் மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

    தற்போது வனத்துறையினர் முன்னிலையில் வன நிர்ணய திட்ட அலுவலர் (தாசில்தார்) பஷீர் அகமது, ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜோதிபாசு, சாலை ஆய்வாளர் மஞ்சுநாத், மணலூர் வி.ஏ.ஓ. காளிதாஸ், சர்வேயர் சபரிநாதன் ஆகியோர் மீனாட்சி ஊத்து முதல் ஏணிக்கல் வரை சாலையை சர்வே செய்யும் பணியை ஆய்வு செய்தனர்.

    இது குறித்து மாவட்ட வன அலுவலருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு அதன் பின்பு பணிகள் தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். #tamilnews
    நடுரோட்டில் லாரி கவிழ்ந்து கிடந்ததால் கடலூர்-சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் சக்தி(வயது 45). லாரி டிரைவர். இவர் நேற்று நள்ளிரவு நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் இருந்து லாரியில் பிளாஸ்டிக் டேங்குகளை ஏற்றி கொண்டு புதுவைக்கு வந்து கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த லாரி கடலூர்-சிதம்பரம் சாலை கோ-ஆப்-டெக்ஸ் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி சாலையில் பலத்த சத்தத்துடன் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் சக்தி அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    நடுரோட்டில் லாரி கவிழ்ந்து கிடந்ததால் கடலூர்-சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

    பின்னர் சாலையில் கவிழ்ந்து கிடந்த அந்த லாரியை கிரேன் மூலம் அகற்றினர். இந்த விபத்து காரணமாக சுமார் 3 மணி நேரம் கடலூர்- சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. லாரியை அகற்றிய பின்பு போக்குவரத்து மீண்டும் சீரானது.

    இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போக்குவரத்துக்கு தகுதியற்ற நாலுமாவடி-குரும்பூர் சாலையை சீரமைக்காவிட்டால் பஸ் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக செயலாளர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

    நாசரேத்:

    ஆழ்வார்திருநகரி ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    நாலுமாவடி-குரும்பூர் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாகவும் பெரிய பள்ளங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மிகவும் சிரமப்படுகின்றன.

    குறிப்பாக வனத்திருப்பதி கோவிலில் நடக்கும் விழாக்களுக்கும் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் நடைபெறும் ஜெபக் கூட்டங்களுக்கும் செல்லும் பஸ்கள் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் ஆழ்வார்திருநகரி-பேரூர் சாலை, குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    இந்த வழியாக தூத்துக்குடிக்கு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நாலுமாவடி- குரும்பூர் சாலை மற்றும் ஆழ்வார்திருநகரி-பேரூர் சாலையை விரைவில் சீரமைக்கவேண்டும். சாலையை சீரமைக்க தவறும் பட்சத்தில் ஆழ்வார்திருநகரி ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் பஸ் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    ×