search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித்ஷா"

    • அருணாச்சல பிரதேசத்தின் வி.வி.பி. என்ற புதிய திட்டத்தை மத்திய மந்திரி அமித்ஷா நாளை (திங்கட் கிழமை) தொடங்கி வைக்கிறார்.
    • சர்வதேச அரங்கில் சீனாவுக்கு எதிராக இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ஓரணியில் திரண்டு வருகின்றன.

    புதுடெல்லி:

    சீன ராணுவம் கடந்த 1951-ம் ஆண்டில் திபெத்தை ஆக்கிரமித்தது. அப்போது முதல் இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்சினை தொடங்கி நீடித்து வருகிறது.

    இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடுகிறது.

    இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு கடந்த 4-ந்தேதி சீன அரசு புதிய பெயர்களை சூட்டியுள்ளது.

    இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. "அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி. அருணாச்சல பிரதேசத்தின் பகுதிகளுக்கு புதிய பெயர்களை சூட்டுவதால் உண்மையை மாற்றிவிட முடியாது" என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.

    இந்நிலையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருணாச்சல பிரதேசத்தின் எல்லையோர பகுதிகளில் 'துடிப்பான கிராமங்கள் திட்டம்' (வி.வி.பி.) என்ற புதிய திட்டத்தை மத்திய மந்திரி அமித்ஷா நாளை (திங்கட் கிழமை) தொடங்கி வைக்கிறார்.

    இந்திட்டத்தின்படி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 455 எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.

    மேலும் இமாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட், லடாக் ஆகிய பகுதிகளிலும் துடிப்பான கிராமங்கள் திட் டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்காக

    2022-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை ரூ.4800 கோடி செலவிடப்பட உள்ளது.

    சீனாவுடன் 14 நாடுகள் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த 14 நாடுகளுடனும் சீனாவுக்கு எல்லை பிரச்சினை நீடிக்கிறது. மேலும் தென் சீன கடல் பகுதியையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

    இதன் காரணமாக சர்வதேச அரங்கில் சீனாவுக்கு எதிராக இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ஓரணியில் திரண்டு வருகின்றன.

    இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு பக்கபலமாக இருப்போம் என்று அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

    அருணாச்சல பிரதேசத்தில் திபெத்தை சேர்ந்த புத்த மதத்தினரின் மிக முக்கிய ஆன்மீக தலமான தவாங் புத்த மடாலயம் உள்ளது. எதிர்காலத்தில் தவாங் புத்த மடாலயத்தில் இருந்து சீனாவுக்கு எதிராக திபெத் புரட்சி வெடிக்க கூடும் என்று சீனா பயப்படுகிறது.

    மேலும் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதி பூடான் எல்லையில் அமைந்திருக்கிறது. அருணாச்சல பிரதேச பகுதிகளை சொந்தமாக்கினால் பூடானையும் எளிதாக ஆக்கிரமிக்கலாம் என்று சீனா கருதுகிறது.

    இதன்காரணமாகவே அருணாச்சல பிரதேசத்தை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.

    • ராகுல் காந்தி சட்டத்தை பின்பற்றி மேல்கோர்ட்டை நாடி நிவாரணம் பெற வேண்டும்.
    • எதிர்க்கட்சிகளை இந்த நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    கவுஷாம்பி :

    லண்டன் நகரில் சமீபத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு ஆளும் பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் நேற்று பதிலடி கொடுத்துள்ளார். உத்தரபிரதேசத்தின் கவுஷாம்பி நகரில், கவுஷாம்பி மகோத்சவத்தை தொடங்கி வைத்து பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி இந்திய ஜனநாயகத்தில் 3 விதமான காயங்களை ஏற்படுத்தி இருந்தது. அதாவது சாதியவாதம், குடும்ப அரசியல் மற்றும் திருப்திபடுத்தும் அரசியல் ஆகியவை.

    ஆனால் பிரதமர் மோடி இந்த மூன்றையும் தோற்கடித்து விட்டார். அதனால் நீங்கள் அஞ்சுகிறீர்கள்.

    இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் சகோதரரே, ஜனநாயகம் ஆபத்தில் இல்லை, உங்கள் குடும்பம்தான் ஆபத்தில் இருக்கிறது. இந்தியாவின் கோட்பாடு ஆபத்தில் இல்லை, உங்கள் குடும்ப அரசியல்தான் ஆபத்தில் இருக்கிறது. உங்கள் குடும்பத்தின் எதேச்சாதிகாரம்தான் ஆபத்தில் இருக்கிறது.

    நாடாளுமன்றம் நேற்று (நேற்று முன்தினம்) ஒத்திவைக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு அமர்வோ, விவாதமோ இன்றி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தது இல்லை. ஆனால் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் தொடர் முடக்கப்பட்டு இருக்கிறது.

    ராகுல் காந்தியுடன் 17 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இதுவரை தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ராகுல் காந்தி சட்டத்தை பின்பற்றி மேல்கோர்ட்டை நாடி நிவாரணம் பெற வேண்டும்.

    நண்பர்களே, ஒவ்வொரு குடிமகனின் 'தர்மமாக' இருக்கும் சட்டத்தை அவர் பின்பற்ற வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எம்.பி.யாக இருந்தீர்கள். தண்டனையை எதிர்த்து கோர்ட்டில் போராடியிருக்கலாம்.

    ஆனால் நாடாளுமன்ற நேரத்தை வீணடித்துள்ளீர்கள். இதற்காக எதிர்க்கட்சிகளை இந்த நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    ராமபிரான் பிறந்த இடமான அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என நாமெல்லாம் விரும்பினோம். ஆனால் காங்கிரஸ் கட்சி அதை கிடப்பில் போட்டது. சமாஜ்வாடி திசைதிருப்பியது. பகுஜன் சமாஜ் தவிர்த்தது.

    ஆனால் கோவிலுக்கான அடிக்கல்லை மோடிஜி நாட்டினார். விரைவில் ராமபிரான் தனது கோவிலில் அமர்ந்திருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

    பிரதமர் மோடி, நாட்டை வளமாக்கி அதன் பெருமையை உயர்த்தியுள்ளார். 2024-ம் ஆண்டு தேர்தலிலும் அவரையே மீண்டும் பிரதமராக தேர்வு செய்ய மக்கள் முடிவு செய்து விட்டனர்.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    • மத்திய மந்திரி சபையில் மாற்றம் செய்யப்பட்டால் அதில் தனக்கு மத்திய மந்திரி பதவி தருமாறு தம்பிதுரை கேட்டிருக்க கூட வாய்ப்பு உள்ளது.
    • தம்பிதுரை எம்.பி. டெல்லியில் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியது அரசியலில் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ள சூழலில், டெல்லியில் நேற்று முன் தினம் உள்துறை மந்திரி அமித்ஷாவை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை சந்தித்து பேசி உள்ளார்.

    அது மட்டுமின்றி பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டாவையும் சந்தித்து பேசி இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கட்சி கூட்டணி வைக்கும் என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறி இருந்த நிலையில் இதை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உறுதிபடுத்தி இருந்தார்.

    இந்நிலையில் தம்பிதுரை எம்.பி. டெல்லியில் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியது அரசியலில் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறியதாவது:-

    டெல்லியில் பா.ஜனதா தலைவர்களிடம் எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க அவ்வப்போது தம்பிதுரையை அனுப்பி பேச வைப்பது வழக்கம். அதே போல் இந்த முறையும் தம்பிதுரை சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவையும், பா.ஜனதா தேசிய தலைவர் நட்டாவையும் சந்தித்து பேசி உள்ளார்.

    கர்நாடக மாநில சட்ட சபை தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான கோலார் தங்க வயல், பெங்களூரு மற்றும் ராம்ராஜ்நகர் பகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட விரும்புகிறது.

    இங்கு எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வாக்கு வங்கி உள்ளதால் கட்சியின் கர்நாடக மாநில அ.தி.மு.க. பிரிவை கூட ஜெயலலிதா தொடங்கி இருந்தார்.

    தற்போது இந்த தொகுதியில் பிரசாரம் செய்யவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    இதுபற்றி அமித்ஷாவிடம் தம்பிதுரை எடுத்துரைத்துள்ளார். அது மட்டுமின்றி கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை ஆதரிப்பதன் மூலம் தமிழகத்திலும் இந்த கூட்டணி தொடருவது உறுதிபடுத்தப்படுகிறது.

    இந்த கூட்டணி தொடரும் பட்சத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமையும் மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் தருவது குறித்தும் அமித்ஷா உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் இந்த ஆண்டே மத்திய மந்திரி சபையில் மாற்றம் செய்யப்பட்டால் அதில் தனக்கு மத்திய மந்திரி பதவி தருமாறு தம்பிதுரை கேட்டிருக்க கூட வாய்ப்பு உள்ளது.

    தம்பிதுரை இதற்கு முன்பு மத்திய மந்திரியாக இருந்தவர். இப்போது கடந்த பல வருடங்களாக பதவி இல்லாமல் உள்ளார். எனவே மத்திய மந்திரி பதவி மீது அவருக்கு ஆசை உண்டு.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்தித்து பேசினார்.
    • பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கூட்டணி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் போது கூட்டணி குறித்து இப்போது முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது என்றும் கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று தான் அமித்ஷா கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

    இதனைதொடர்ந்து கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர்கள் முடிவெடுக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

    இந்தநிலையில், டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்தித்து பேசினார்.

    பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கூட்டணி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என தம்பிதுரை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான சில விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாஜகவில் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக எம்.பி.தம்பிதுரை சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தகக்து.

    சில நாட்களுக்கு முன் அமித்ஷாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசிய நிலையில் தம்பிதுரை சந்தித்து பேசினார்.

    • பீகாரின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் எனக்கு கவலை அளிக்கிறது.
    • நிதிஷ் குமார் பிரதமராவதற்கு வாய்ப்பே இல்லை.

    நவடா :

    பீகாரின் நவடா மாவட்டத்துக்கு உட்பட்ட ஹிசுவாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். அப்போது பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரை கடுமையாக தாக்கி பேசினார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் இருவரும் திருப்திபடுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இது பயங்கரவாதம் வளர உதவியது. அதே நேரத்தில் பிரதமர் மோடி காஷ்மீரில் 370-வது அரசியல் சட்டப்பிரிவை ரத்து செய்தார்.

    சாதி வெறியை பரப்பும் நிதிஷ் குமார் மற்றும் காட்டாட்சியின் முன்னோடி லாலு பிரசாத் ஆகியோருடன் பா.ஜனதா ஒருபோதும் கைகோர்க்க முடியாது. பீகார் முதல்-மந்திரிக்கு பா.ஜனதாவின் கதவுகள் எப்போதும் முடியே இருக்கும்.

    பிரதமராகும் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக நிதிஷ் குமார் கடந்த ஆண்டு லாலு பிரசாத் யாதவுடன் கரம் கோர்த்து, பா.ஜனதாவுக்கு துரோகம் இழைத்து விட்டார்.

    ஆனால் 2024-ம் ஆண்டு பிரதமர் பதவிக்கான இடம் காலியில்லை. நிதிஷ் குமார் பிரதமராவதற்கு வாய்ப்பே இல்லை.

    பிரதமர் மோடியை, தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக தேர்வு செய்ய நாட்டு மக்கள் முடிவு செய்து விட்டனர். இதைப்போல பீகார் மக்களும் மாநிலத்தின் 40 இடங்களையும் பா.ஜனதாவுக்கு வெற்றியை உறுதி செய்ய முடிவு செய்து விட்டனர்.

    அது நடந்தவுடன், நிதிஷ் குமார் தனது முதல்-மந்திரி பதவியை துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவிடம் ஒப்படைப்பதாக கொடுத்த வாக்குறுதியை திரும்பப் பெறுவார். ஏனெனில் அவரது பிரதமர் கனவு அப்போது நொறுங்கி இருக்கும்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் எதிர்த்து வந்தன. ஆனால் ஒரு நல்ல நாளில் பிரதமர் மோடி, வானுயர்ந்த அந்த கோவிலுக்கு அடிக்கல் நாட்டிவிட்டார்.

    பீகாரில் நடந்து வரும் வகுப்புவாத வன்முறைகள் முடிவுக்கு வந்து இயல்புநிலை திரும்ப நான் பிரார்த்திக்கிறேன். இது தொடர்பாக மாநில கவர்னரிடம் காலையில் நான் பேசியதற்கு ஐக்கிய ஜனதாதள தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் கோபமடைந்தார். நான் ஏன் பீகாரைப்பற்றி கவலைப்படுகிறேன்? என்றும் கேட்டுள்ளார்.

    நான் மத்திய உள்துறை மந்திரி. பீகாரின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் எனக்கும் கவலை அளிக்கிறது.

    நிதிஷ் குமார் தலைமையிலான மெகா கூட்டணி அரசு சாசரம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த வகுப்புவாத வன்முறையை கட்டுப்படுத்த தவறிவிட்டது.

    மாநிலத்தில் 2025-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியமைத்தால், இந்த வன்முறையாளர்கள் தூக்கிலிடப்படுவார்கள்.

    இவ்வாறு உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

    • நாலந்தா மற்றும் சசரம் பகுதிகளில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை உருவானது.
    • குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பாட்னா:

    நாடு முழுவதும் ராம நவமி கொண்டாட்டங்கள் கடந்த 30-ந்தேதி நடந்தன. பீகாரில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டது. நாலந்தா மற்றும் சசரம் பகுதிகளில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை உருவானது. ரோத்தாஸ் மாவட்டம் சசரம் பகுதியில் நடந்த ஊர்வலத்தின் போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு மற்றும் வன்முறை சம்பவம் நிகழ்ந்தன.

    அதைத்தொடர்ந்து குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல நாலந்தா மாவட்டம் பீகார்ஷெரீப் பகுதியில் நடந்த ஊர்வலத் தின்போதும் மோதல் ஏற் பட்டது. இதில் ஒருவர் பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து கலவரம் நடந்த 2 பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்ட னர். வன்முறை தொடர்பாக 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    பீகார் வன்முறை சம்பவம் தொடர்பாகவும், தற்போதைய நிலவரம் குறித்தும் கவர்னரிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேட்டறிந்தார்.

    • இருவரது அறிவிப்பினையும் தொடர்ந்து இரு கட்சிகளிடமும் இருந்த நெருக்கடிகள் தளர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.
    • தேர்தல் ஆணையத்திலும் நமது வெற்றி உறுதியான பிறகு கூட்டணி பற்றி முடிவெடுக்கலாம்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமித்ஷா தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி தொடருகிறது என்று அறிவித்தார்.

    அவர் அறிவித்த மறுநாளே எடப்பாடி பழனிசாமியும் பா.ஜனதாவுடன் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று அறிவித்தார். இருவரது அறிவிப்பினையும் தொடர்ந்து இரு கட்சிகளிடமும் இருந்த நெருக்கடிகள் தளர்ந்தது என்றே சொல்ல வேண்டும். பா.ஜனதாவை பொறுத்தவரை தமிழகத்தில் தனக்கு ஒரு துணை தேவை என்பதில் கவனமாக உள்ளது. அதே நேரம் அ.தி.மு.க.விலோ நமக்கு ஏற்ற துணை பா.ஜ.க. இல்லை என்ற எண்ணம் ஒரு சில நிர்வாகிகளிடம் இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்ற நம்பிக்கைதான். முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி பொன்னையன், சி.வி.சண்முகம் ஆகியோர் அந்த எண்ணத்தில் உறுதியாகவே இருக்கிறார்கள்.

    என்னண்ணே... கூட்டணி பற்றி கேட்டால் தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம் என்று சொல்லி இருக்க வேண்டியது தானே. இப்பவே பா.ஜனதாவோடு ஏன் கமிட் ஆக வேண்டும் என்று கேட்டார்களாம்! அதற்கு எடப்பாடி பழனிசாமி நான் பொதுச்செயலாளர் ஆகி விட்டேன். கட்சி இப்போதுதான் இயல்பு நிலைக்கு வந்திருக்கு. கட்சியை வளர்க்க இன்னும் நிறைய வேலைகள் உள்ளன. அவர் (ஓ.பி.எஸ்.) 2024 தேர்தல் வரைவிடாமல் தொல்லை கொடுக்கத்தான் செய்வார். கோர்ட்டில் நாம் வெற்றி பெற்றாலும் கடைசியில் தேர்தல் ஆணைய அங்கீகாரம் தேவை. அதற்கு பா.ஜனதா ஒத்துழைப்பு அவசியம்.

    எனவே இப்போதே கூட்டணி இல்லை என்று சொல்லி ஏன் அவர்களை பகைக்க வேண்டும்?

    தேர்தல் ஆணையத்திலும் நமது வெற்றி உறுதியான பிறகு கூட்டணி பற்றி முடிவெடுக்கலாம். இப்போதைக்கு இப்படித்தான் அறிவிக்க வேண்டும் என்றார்.

    உண்மையிலேயே அல்வா அமித்ஷாவுக்கா? எடப்பாடி பழனிசாமிக்கா?.

    • குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர் வழக்கில் மோடியை சிக்க வைப்பதற்கு கடுமையான முயற்சிகள் நடந்தன.
    • சி.பி.ஐ. கைது செய்ததற்காக நான் போராட்டம் நடத்தவில்லை.

    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் ஆங்கில தொலைக்காட்சி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் பல்வேறு தலைப்புகளில் எழுந்த கேள்விகளுக்கும் விடையளித்தார். அவரது பேச்சு விவரம் வருமாறு:-

    ராகுல்காந்தி குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்துள்ளது. இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர் மோடி என்ற பிற்படுத்தப்பட்ட இனத்தை அவமானப்படுத்தி உள்ளார். அதற்காகவே அவருக்கு கோர்ட்டு தண்டனை வழங்கி உள்ளது.

    2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் மக்கள் பிரதிநிதி பதவி தானாக காலியாகி விடும் என்று நமது நாட்டின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் நடந்துள்ளது. இதற்காக பா.ஜ.க. தலைவர்களை ராகுல் தொடர்ந்து குறை கூறி வருகிறார்.

    அவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமானால் மீண்டும் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். அதைவிடுத்து அடம்பிடித்து கொண்டிருந்தால் எந்த பலனும் இல்லை.

    நாடு முழுவதும் பா.ஜ.க. பல்வேறு கட்சிகளுடன் தோழமையுடன் உள்ளது. 2024-ம் ஆண்டு தேர்தலிலும் அந்த தோழமை தொடரும் தமிழ்நாட்டில் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி வலுவான நிலையில் உள்ளது.

    தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கொண்டுள்ள கூட்டணியும் தொடர்கிறது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அ.தி.மு.க. கூட்டணியில் தான் பா.ஜனதா இருக்கிறது.

    நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களை விசாரணை அமைப்புகள் மூலம் மத்திய அரசு குறி வைத்து செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் சொல்கிறார்கள். இப்போதுகூட ராகுல் பதவி இழப்பு விஷயத்தில் நாங்கள் அழுத்தம் கொடுத்ததாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை.

    ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இல்லாத மற்ற கட்சி தலைவர்களை அவர்கள் எந்த அளவுக்கு குறிவைத்து செயல்பட்டனர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர் வழக்கில் மோடியை சிக்க வைப்பதற்கு கடுமையான முயற்சிகள் நடந்தன.

    சி.பி.ஐ. மூலம் எனக்கு மிக கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. மோடிக்கு இருந்த நல்ல பெயரை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் ஆட்சியாளர்கள் திட்டமிட்டு எனக்கு அந்த அழுத்தத்தை கொடுத்தனர். ஆனால் அதற்கு பணியவில்லை.

    நான் அப்போது குஜராத் மந்திரியாக இருந்ததால் என்மீதும் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணை அமைப்புகள் அனைத்தையும் அந்த கால கட்டத்தில் காங்கிரஸ் மிக மிக மோசமாக, தவறாக கையாண்டது.

    காங்கிரஸ் அரசு எங்களுக்கு எதிராக ஒரு சிறு ஊழல் வழக்கு கூட பதிவு செய்ய முடியவில்லை. எனவேதான் விசாரணை அமைப்புகளை தூண்டி விட்டு எங்களை சிக்க வைக்க முயற்சி நடந்தது. கடைசியில் சி.பி.ஐ. மூலம் என்னை கைது செய்யவும் வைத்தனர்.

    என்னை கைது செய்வதற்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு நான் சரியான விளக்கமான பதிலை சொன்னேன். ஆனால் அவர்கள் மோடி பெயரை குறிப்பிடும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் நான் உண்மையைத்தான் சொன்னேன்.

    சி.பி.ஐ. கைது செய்ததற்காக நான் போராட்டம் நடத்தவில்லை. கருப்பு சட்டை அணிந்து கொண்டு அலையவில்லை. சபை நடவடிக்கைகளை முடக்கவில்லை. கடைசியில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

    ஆனால் விசாரணை அமைப்புகளை எங்களுக்கு எதிராக தூண்டிவிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று அதே காரணத்தை சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா நிச்சயம் வெற்றிபெறும். தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    சுதந்திரப் போராட்ட வீரர் சவார்கர் பற்றி ராகுல் அவதூறாக பேசுகிறார். சுதந்திரப் போராட்ட தியாகிகளை இப்படி அவமரியாதை செய்யக்கூடாது. அவர்கள் கட்சி மூத்த தலைவர்கள் இதுபற்றி ராகுலுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    • 60 முதல் 70 சதவீத போதைப்பொருள் கடல் வழியாக கடத்தப்படுகிறது.
    • போதைப்பொருள் கடத்தல் ஒரு தேசிய பிரச்சினை.

    பெங்களூரு :

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் பெங்களூருவில் 'போதைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு' தொடர்பான தென்மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 தென் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இதில் அமித்ஷா பேசும்போது கூறியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க போதைப்பொருளுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. சுதந்திர தின பவள விழாவையொட்டி 75 நாள் பிரசாரத்தின்போது, 75 ஆயிரம் கிலோ போதைப்பொருளை அழிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு, ரூ.8,409 கோடி மதிப்பிலான 5 லட்சத்து 94 ஆயிரத்து 620 கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டு, இலக்கைவிட பன்மடங்கை எட்டி விட்டோம். இதுவரை அழிக்கப்பட்ட மொத்த போதைப்பொருட்களில், போதைப்பொருள் தடுப்பு படை (என்.சி.பி.) மட்டும் ரூ.3 ஆயிரத்து 138 கோடி மதிப்புள்ள ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 363 கிலோ போதைப்பொருளை அழித்துள்ளது.

    பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் பேரில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சகம் மும்முனை அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. இந்த மும்முனை அணுகுமுறையில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான அனைத்து நிறுவனங்களுக்கும் அதிகாரமளித்தல் மற்றும் அவர்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்குதல் ஆகியவை அடங்கும்.

    போதைப்பொருள் கடத்தல் என்பது ஒரு மாநிலம் அல்லது மத்திய அரசுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. இது ஒரு தேசிய பிரச்சினை. அதை சமாளிப்பதற்கான முயற்சிகள் தேசிய மற்றும் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும். போதைக்கு எதிரானது போராட்டம் மட்டுமல்ல, அரசால், மக்களால் இந்த பிரச்சினையை சமாளிக்க, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விழிப்புணர்வு கூட்டங்களை தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்.

    போதைப்பொருளின் ஒட்டுமொத்த வலையமைப்பையும் ஒடுக்க, போதைப்பொருள் வழக்குகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தை முழுமையாக அணுக வேண்டும். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கடந்த 2006-2013-ம் ஆண்டில் மொத்தம் 1,257 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது 2014-2022-ம் ஆண்டில் 152 சதவீதம் அதிகரித்து 3,172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே காலக்கட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 260 சதவீதம் அதிகரித்தது.

    அதாவது கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,362-ல் இருந்து 4,888 ஆக அதிகரித்தது. 2006-2013-ம் ஆண்டில் 1.52 லட்சம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது, இது 2014-2022-ம் ஆண்டில் 3.30 லட்சம் கிலோவாக அதிகரித்துள்ளது. 2006-2013-ம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மதிப்பு ரூ.768 கோடியாக இருந்த நிலையில், அது 2014-2022-ம் ஆண்டில் 25 மடங்கு அதிகரித்து ரூ.20 ஆயிரம் கோடியாக இருக்கிறது.

    போதைப்பொருள் பயன்பாட்டை நமது நாட்டில் இருந்து ஒழிக்க பிரதமர் மோடி அரசின் பிரசாரத்திற்கு 4 தூண்கள் உள்ளன. போதைப்பொருள் கண்டறிதல், வலையமைப்பை அழித்தல், குற்றவாளிகளை கைது செய்தல், போதைப்பொருள் பயன்பாட்டால் பாதித்தோருக்கு மறுவாழ்வு அழித்தல் ஆகிய 4 ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.

    போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு பணிக்குழுவை வலுப்படுத்துவது காலத்தின் தேவை. இது தவிர, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். 60 முதல் 70 சதவீத போதைப்பொருள் கடல் வழியாக கடத்தப்படுகிறது. போதைப்பொருள் வழக்கில் பெரிய நபர்கள் கைதாகும்போது, ஒட்டுமொத்த வலையமைப்பு குறித்தும் விசாரிக்க வேண்டும். போதைப்பொருளுக்கு அடிமையானவரை பிடிக்கும்போது, அவருக்கு அதை வினியோகம் செய்தது யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    இந்த மாநாட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களின் பிரதிநிதிகள், கடலோர பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து இதே விஷயம் குறித்து பத்திரிகை அதிபர்கள், ஊடக செய்தி ஆசிரியர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

    இதில் 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் மற்றும் பல்வேறு பத்திரிகை அதிபர்கள், ஊடக செய்தி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு, அதானி விவகாரத்தால் பாராளுமன்றம் தினமும் முடங்கி வருகிறது.
    • எதிர்க்கட்சிகள் முன் வந்தால் பாராளுமன்ற முடக்கத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வின் முதல் 5 நாட்களும் குறிப்பிடத்தக்க பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு, அதானி விவகாரத்தால் பாராளுமன்றம் தினமும் முடங்கி வருகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற முடக்கத்துக்கு அரசும், எதிர்க்கட்சிகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என உள்துறை மந்திரி அமித்ஷா யோசனை தெரிவித்துள்ளார்.

    தலைநகர் டெல்லியில் நடந்த 'இந்தியா டுடே' மாநாட்டில் பேசும்போது இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    வெறும் ஆளுங்கட்சி அல்லது வெறும் எதிர்க்கட்சியால் மட்டும் பாராளுமன்ற அமைப்பு இயங்காது. ஏனெனில் இரு தரப்பும் ஒருவருக்கொருவர் பேசவேண்டும். எனவே பாராளுமன்ற முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு தரப்பும் சபாநாயகர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதற்காக அவர்கள் (எதிர்க்கட்சி) 2 அடி முன்வந்தால், நாங்களும் 2 அடி முன்னோக்கிச் செல்வோம். இதன்மூலம் பாராளுமன்றம் இயல்பு நிலைக்கு திரும்பும். ஆனால் எதையும் செய்யாமல் வெறும் செய்தியாளர் சந்திப்பு மட்டும் நடத்தினால் எந்தப் பலனும் இருக்காது.

    இந்த விவகாரத்தில் எங்கள் முயற்சிகள் இருந்தபோதும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கான எந்தப் பரிந்துரையும் வரவில்லை. அப்படியிருக்க, நாங்கள் யாரிடம் பேச முடியும்? அவர்கள் ஊடகங்களிடம் பேசுகிறார்கள். பாராளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் வேண்டும் என கோஷமிடுகிறார்கள். பாராளுமன்றத்தில் முழுமையான பேச்சு சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் பேசுவதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் பாராளுமன்றத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டே விவாதங்கள் நடத்தப்படும். நீங்கள் சாலையில் பேசுவது போல பாராளுமன்றத்தில் பேசமுடியாது. இந்த அடிப்படை புரிதலே அவர்களுக்கு இல்லையென்றால், நாங்கள் என்ன செய்ய முடியும்?

    சில பிரச்சினைகள் அரசியலுக்கு மேற்பட்டவை. இந்திரா காந்தி கூட உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டில் பேசுவதற்கு மறுத்தார். வெளிநாடுகளிலும், பிற நாடுகளின் பாராளுமன்றங்களிலும் இந்தியா குறித்து அவதூறு பேசுவதா? இதற்கு காங்கிரஸ் பதிலளிக்கும் என நான் நம்புகிறேன்.

    சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் பாரபட்சமின்றி செயல்பட்டு வருகின்றன என குறிப்பிட்டார்.

    • இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
    • இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்றது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.


    நாட்டு நாட்டு (ஆர்.ஆர்.ஆர்.)

    இதையடுத்து, இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    ராம் சரண் -அமித்ஷா- சிரஞ்சீவி

    இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆஸ்கர் விருது வென்ற 'நாட்டு நாட்டு' பாடலில் நடனமாடிய நடிகர் ராம் சரணை நேரில் சந்தித்து, வாழ்த்தினார். இந்தச் சந்திப்பின்போது நடிகர் சிரஞ்சீவியும் உடனிருந்தார். மேலும், அமித்ஷா தனது சமூக வலைதளத்தில் 'இந்திய சினிமாவின் ஜாம்பவான்களை சந்தித்ததில் மகிழ்ச்சி' என பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.
    • இப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.

    புதுடெல்லி:

    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆா்ஆா்ஆா் திரைப்படம், கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

    இதற்கிடையே, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த இசை (ஒரிஜினல் பாடல்) பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது.

    இந்தப் பாடலில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணின் நடனம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. எம்.எம்.கீரவாணி இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை ராகுல் மற்றும் கால பைரவா பாடினர்.

    ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்ற நிலையில் நாட்டு நாட்டு பாடல் தற்போது ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

    இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலில் நடனமாடிய ஆர்.ஆர்.ஆர். திரைப்பட நடிகர் ராம் சரணை உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சந்தித்து, வாழ்த்தினார். இந்தச் சந்திப்பின்போது ராம் சரணுடன் அவரது தந்தை சிரஞ்சீவி உடன் இருந்தார்.

    ×