search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித்ஷா"

    • குஜராத் ஹராமி நாலா பகுதி மற்றும் அங்குள்ள எல்லை கண்காணிப்பு சாவடி பகுதிகளில் ஆய்வு
    • இந்தியாவின் சர்வதேச எல்லை பகுதிக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார்

    மத்திய மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக குஜராத் சென்றார். அப்போது குஜராத் ஹராமி நாலா பகுதி மற்றும் அங்குள்ள எல்லை கண்காணிப்பு சாவடி பகுதிகளில் ஆய்வு செய்தார். அங்குள்ள எல்லை பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பார்வையிட்டார்.

    கட்ச் பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப்படையின் வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

    ரூ.257 கோடி செலவில் கட்டப்படும் இந்த வளாகத்தில் நிர்வாக கட்டிடம், உணவகம், அலுவலர்கள் மெஸ், பயிற்சி மையம், அணிவகுப்பு மைதானம் மற்றும் 450-க்கும் மேற்பட்ட உப கரணங்களை பராமரிக்கும் பணிமனை ஆகியவை அடங்கும்.

    மேலும், ஹராமி நாலா மற்றும் எல்லைப் புறக்காவல் நிலையத்தை பார்வையிட்ட அவர், மேற்கில் உள்ள இந்தியாவின் சர்வதேச எல்லை பகுதிக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார். இந்த எல்லையில் பாதுகாப்புப் படையினருக்கு 7 கண்காணிப்பு கோபுரங்களை உருவாக்க இருப்பதாக அமித்ஷா தெரிவித்தார்.

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று விவாதம் தொடங்கியது
    • இன்று ராகுல் காந்தி, அமித்ஷா பேசுகிறார்கள்

    மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பேச்சை தொடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ராகுல் காந்தி நேற்று பேசவில்லை. காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் பேச்சை தொடங்கினார். தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு போன்றோரும் பேசினர்.

    இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி மக்களவையில் பேசுவார் என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பேசுகிறார் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று வாக்கெடுப்பிற்கு வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

    • மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்கு கொத்தடிமை ஆக்கும் எதேச்சதிகார முயற்சி
    • தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும்...

    மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி இந்தி மற்றும் பிற அனைத்து இந்திய மொழிகளையும் உலக அரங்கில் பெருமைப் படுத்தி வருகிறார். மாநில மொழிகளுடன் இந்தி போட்டியிடவில்லை. அனைத்து மாநில மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும்.

    தமிழ், மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளுக்கு இந்தி மொழி போட்டியாக கொண்டு வருவதாக கூறப்படுவது தவறு. அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை நாம் உருவாக்க வேண்டும்.

    அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வது சட்டம் மூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இருக்கக் கூடாது. அது நல்ல முயற்சியின் மூலமாக வரவேண்டும். பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை பிரதான 10 மாநில மொழிகளில் தொடங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் இதற்கான பாடத்திட்டங்கள் வெளியாகும்.

    பிரதமர் மோடி ஒருமுறை கூட பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தியதில்லை. மத்திய மந்திரிகளும் இந்திய மொழிகளில் உரை நிகழ்த்த முயற்சிக்கின்றனர். இது பல்வேறு மொழிகளை இணைக்கும் முயற்சிற்கு அதிக வேகத்தை அளிக்கிறது.

    இந்திய மொழிகளும் அவற்றின் அகராதிகளும் ஆட்சி செய்த காலகட்டத்திற்குப் பிறகும் அப்படியே இருந்தன. இது ஒரு பெரிய சாதனை. மொழிகள் நாட்டை ஒன்றிணைக்க பாடுபட்டுள்ளன.

    மொழியின் மரியாதை இல்லாமல் பாரம்பரியத்தின் மரியாதை முழுமையடையாது. உள்ளூர் மொழிகளுக்கு அனைவரும் மரியாதை கொடுக்கும்போதுதான் அலுவல் மொழி ஏற்றுக்கொள்ளப்படும். அலுவல் மொழியின் வேகம் மெதுவாக இருந்தாலும் எந்தவித எதிர்ப்பும் இன்றி அதற்கு ஏற்புணர்வை வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை மந்திரி அமித்ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல.

    தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம்.

    இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கம், கர்நாடகம் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உணர வேண்டும்.

    1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • எதிர்க்கட்சி கூட்டணியினர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்று சந்திக்க உள்ளனர்.
    • உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று ஜனாதிபதி முர்முவை நேரில் சந்தித்தார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை எதிர்க்கட்சிகள் (I.N.D.I.A.)கூட்டணியினர் சந்திக்க உள்ளனர்.

    மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் மனு அளிக்க உள்ளன. மேலும், பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறாதது குறித்தும் முறையிட உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

    மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்துப் பேசினார் என ஜனாதிபதி மாளிகை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    • மணிப்பூர் சம்பவம் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க மோடி, அமித்ஷா தயாராக இல்லை என மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
    • அமித்ஷா முதல் நாள் போபால் செல்கிறார்.

    விருதுநகர்

    விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    மணிப்பூர் பாதிப்பை கண்டறிய பிரதமர் மோடி நேரில் செல்லாத நிலையில் ராகுல்காந்தி அங்கு சென்று மக்களை சந்தித்ததுடன் கவர்னரையும் சந்தித்துள்ளார். பிரதமர் மோடி மணிப்பூர் பிரச்சினையை பற்றி நாடாளுமன்றத்துக்கு வெளியே 85 நாட்கள் கழித்து பேச தொடங்கி 80 வினாடிகள் பேசியுள்ளார்.

    மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் சென்றுள்ளனர். இதில் தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, திருமாவளவன், ரவிக்குமார் உள்பட 21 பேர் சென்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ இதற்கு பதிலளிக்க தயாராக இல்லை.

    அமித்ஷா முதல் நாள் போபால் சொல்கிறார். மறுநாள் ராமேசுவரம் வருகிறார். மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் பிரதமர் இந்தியா கூட்டணி என்ற பெயர் நாடு முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் பெரும் தாக்கத்தை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காஷ்மீரில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து நாடாளு மன்றத்தில் பதிலளித்ததோடு சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய அனைத்து கட்சி குழுவினரை காஷ்மீர் அழைத்துச் சென்றார்.

    ஆனால் பிரதமர் மோடி யின் செயல்பாடு மாறுபாடாக உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையால் தமிழகத்தில் எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை. தமிழகத்திற்கு வரும் வடமாநில தலைவர்கள் ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் அமித்ஷா இந்தியில் தான் பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர் பால கிருஷ்ணசாமி, மாவட்ட நிர்வாகிகள் சிவகுருநாதன், கிருஷ்ணமூர்த்தி, மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் உடனிருந்தனர். முன்னதாக விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின விழாவில் காமராஜர் விருது வழங்குவதற்கு சேவையாற்றிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட 40 பேருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கதர் ஆடை அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    • மணிப்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் சி.பி.ஐ. இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • விசாரணை அனைத்தும் யாருக்கும் சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

    புதுடெல்லி:

    மணிப்பூரில் கடந்த மே மாதம் மைதேயி இனத்தவருக்கும் குகி இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள். சுமார் 40 ஆயிரம் பேர் உடமைகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் இன்று வரை நீடித்து வருகிறது. இந்த நிலையில் மே மாதம் 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலகமாக அழைத்து செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி நாட்டையே உலுக்கியது.

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முடியாத நிலை நிலவுகிறது. இதற்கிடையே 2 பெண்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தாமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.

    நேற்று நடந்த விசாரணையின்போது, மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் இது தொடர்பான வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மணிப்பூரில் மே 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் காட்சியை வீடியோவாக பதிவு செய்த நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மைதேயி இனத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் வீடியோவாக பதிவு செய்த காட்சிகள் அடங்கிய செல்போன் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த விசாரணைகளில் என்னென்ன நடந்தது என்பது தெரிய தொடங்கி இருக்கிறது.

    குகி இனப் பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட காட்சியை பதிவு செய்தவர்கள் அதை ரகசியமாக வைத்திருந்துள்ளனர். பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 2 நாட்கள் முன்பு அந்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டுள்ளது.

    இதன் பின்னணியில் மிகப்பெரிய சதித் திட்டம் இருப்பது முதல் கட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டு அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே அந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

    பாராளுமன்றம் நடக்கும் நேரத்தில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டிருக்கிறது.

    மணிப்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் சி.பி.ஐ. இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கு ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்த 7 வழக்குகள் விசாரணை பாரபட்சமின்றி நடத்தப்படும். விசாரணை முடிவில் நிச்சயம் உண்மை தெரியும்.

    விசாரணை அனைத்தும் யாருக்கும் சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. எனவேதான் மணிப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    சி.பி.ஐ. விசாரிப்பது போல மணிப்பூர் கலவரத்தின் 3 வழக்குகள் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பான காட்சிகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு இருப்பதால் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்குகிறார்கள்.

    மேலும் மணிப்பூர் மாநில அரசு செயல் இழந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் மே 4-ந்தேதி 2 பழங்குடியின பெண்கள் ஆடைகள் இன்றி அழைத்து செல்லப்பட்டபோது அங்கு ராணுவமோ, உள்ளூர் போலீசாரோ இல்லை.

    சம்பவம் குறித்து தெரிய வந்த பிறகே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    மணிப்பூரில் மைதேயி இனத்தவருக்கும், குகி இனத்தவருக்கும் இடையே சமரசம் செய்து கொள்வதற்கு இதுவரை 12 தடவைக்கு மேல் பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இரு இனத்தவர்களின் வாழ்விடங்களுக்கு இடையே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமரச முயற்சிகள் செய்யப்பட்டு உள்ளன. அவர் ஒவ்வொரு நாளும் மணிப்பூர் சட்டம் ஒழுங்கை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    மணிப்பூரில் நாங்கள் முழுமையாக அமைதி ஏற்படுத்தி வருகிறோம். 16 மாவட்டங்களில் தலா ஒரு படை வீதம் 16 படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கலவரத்தை அவர்கள் முழுமையாக கட்டுப்படுத்தி உள்ளனர்.

    மணிப்பூரில் 72 சதவீதம் அரசு ஊழியர்கள் இடையூறு இல்லாமல் பணியாற்றி வருகிறார்கள். 82 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு திரும்பி உள்ளனர். சமீபத்தில் கூட மத்திய, மாநில சிவில் சர்வீஸ் தேர்வுகள் திட்டமிட்டபடி அமைதியாக நடந்தன.

    90 சதவீதம் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. விரைவில் மணிப்பூர் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    மணிப்பூரில் வன்முறை ஏற்படுவதற்கு அம்மாநில ஐகோர்ட்டில் வழங்கப்பட்ட மைதேயி இனத்தவருக்கு பழங்குடியின அந்தஸ்து கொடுக்கலாம் என்ற தீர்ப்புதான் காரணமாகி விட்டது. இது தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யும். மேலும் மணிப்பூரில் நாங்கள் ஆயுத சட்டத்தை திரும்ப பெறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு வருபவர்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறார்கள். வருகிற டிசம்பர் மாதம் இது தொடர்பான பட்டியல் வெளியிடப்படும். பட்டியலில் இல்லாதவர்கள் இந்திய குடியுரிமை அடையாள அட்டை பெற இயலாது.

    மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் பா.ஜனதா ஆட்சியில் மட்டும் நடப்பது போல காங்கிரசார் பிரசாரம் செய்கிறார்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது 1993, 1995, 1997, 1998 ஆண்டுகளில் 4 தடவை மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அப்போது கலவரங்கள் தொடர்பாக மத்திய ராஜாங்க மந்திரி ராஜேஷ் பைலட் விளக்கம் அளித்தார்.

    மணிப்பூர் எம்.பி. ஒருவர் பிரதமர் இதில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் சபையை விட்டே வெளிநடப்பு செய்தார். ஆனால் நாங்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை.

    பாராளுமன்றத்தில் முழுமையாக விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அதை கேட்பதற்கு முன் வருவது இல்லை.

    காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது 14 நாட்கள் கழித்துதான் துணை நிலை ராணுவத்தை அனுப்பி வைத்தார்கள். ஆனால் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மணிப்பூர் குழுக்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்கிறோம். இதன் மூலம் வன்முறை மற்ற மாவட்டங்களுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் பரவுவதை தடுத்து நிறுத்தி இருக்கிறோம்.

    காங்கிரஸ் ஆட்சியின் போது மணிப்பூரில் கலவரம் ஏற்பட்ட போது 149 நாட்கள் தொடர்ந்து அந்த மாநிலத்துக்குள் யாரும் செல்ல முடியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 240 ரூபாய்க்கும், கியாஸ் சிலிண்டர் ரூ.1900-த்துக்கும் விற்பனை ஆனது.

    ஆனால் நாங்கள் அத்தியாவசிய பணிகள் அனைத்தையும் சீராக வைத்திருக்கிறோம். மணிப்பூருக்கு இப்போதும் யாரும் சென்று வரலாம் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

    ராகுல்காந்தி சென்ற போது ஹெலிகாப்டரில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சில இடங்களில் வாகனத்தில் செல்வது சரியாக இருக்காது என்று சொல்லப்பட்டதால் அவர் தடுக்கப்பட்டார். அது அவருக்கே தெரியும்.

    தற்போது மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. விரைவில் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

    இவ்வாறு மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

    • நடைபயண தொடக்க விழா இன்று மாலை ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெறுகிறது.
    • அண்ணாமலையின் நடைபயணத்தின் பங்கேற்பதற்காக சுமார் ஒன்றரை லட்சம் பேர் முன் பதிவு செய்திருந்தனர்.

    ராமேசுவரம்:

    தமிழகம் முழுவதும் 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று நடைபயணம் தொடங்குகிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

    நகர பகுதிகளில் நடந்து 1,700 கி.மீ. தூரமும், மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்து மூலம் 900 கி.மீ. தூரமும் அண்ணாமலை யாத்திரை செல்கிறார்.

    5 கட்டங்களாக 168 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையிலும், ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 10 மாநகர பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்படுகிறது. இதில் மத்திய மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.

    நடைபயண தொடக்க விழா இன்று மாலை ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை பாராளுமன்ற கட்டிடம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நடைபயணத்தை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக மத்திய மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு விமானப்படைக்கு சொந்தமான தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மதுரையில் இருந்து புறப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு 4.50 மணிக்கு சென்று இறங்குகிறார்.

    அங்கு ஒரு ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அமித்ஷா, அங்கிருந்து புறப்பட்டு, நடைபயண தொடக்க விழா மேடைக்கு மாலை 5.45 மணிக்கு வருகிறார். இரவு 7 மணி வரை நடைபெறும் நடைபயண தொடக்க விழா கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஓ.பன்னீர் செல்வம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன், பூஜை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்கிறார்கள்.

    ஏற்கனவே அண்ணாமலையின் நடைபயணத்தின் பங்கேற்பதற்காக சுமார் ஒன்றரை லட்சம் பேர் முன் பதிவு செய்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு நேற்று முதலே ராமேசுவரம் வரத்தொடங்கினர். இதனால் ராமேசுவரம் முழுவதும் பா.ஜ.க. தொண்டர்கள் தலையாகவே காட்சி அளித்தது.

    இதற்கிடையே பொதுக்கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி அமித்ஷா, ராமேசுவரத்தில் உள்ள ஓட்டலில் இரவு உணவு சாப்பிடுகிறார். 8.30 மணிக்கு பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் அமித்ஷா, நாளை (29-ந்தேதி) அதிகாலை 5.45 மணிக்கு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். காலை 11 மணிக்கு ராமேசுவரத்தில் நடைபெறும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவுகள் இறப்பதில்லை என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறார்.

    அரிச்சல்முனை கடற்பகுதிக்கு சென்று பார்வையிடும் மத்திய மந்திரி அமித்ஷா, பகல் 12 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசுகிறார். இதையடுத்து 12.45 மணிக்கு குந்துகால் விவேகானந்தர் நினைவு இல்லம் சென்று விட்டு, மதியம் 1.20 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை செல்லும் அவர், அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்படுகிறார்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் மண்டபம் பகுதியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு வரவேற்பு பேனர்கள், தோரணங்கள், கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மாவட்ட காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, எஸ்.பி. தங்கதுரை தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கீழக்கரை முதல் தொண்டி வரை 100 கி.மீ. கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் தமிழக கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் மேற்பார்வையில் கூடுதல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் அதிநவீன ஆயுதங்களுடன் 3 அதிவேக ரோந்து படகுகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மொத்தத்தில் மத்திய மந்திரி அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ராமேசுவரம் வருகையையொட்டி அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • நடைபயண தொடக்க விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
    • ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வரை சாலையின் இருபுறமும் பா.ஜ.க. கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டுள்ளன.

    ராமேசுவரம்:

    2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக தயாராகி வருகின்றன. 3-வது முறையாக தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சியை மத்தியில் கொண்டுவர பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் பணிகளை தொடங்கியுள்ளனர்.

    அந்த வகையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தவும், பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறவும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயண திட்டத்தை அறிவித்துள்ளார்.

    அதன்படி இந்த நடைபயணம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக அமித்ஷா 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு நாளை மாலை 4.50 மணிக்கு மதுரை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டரில் பிற்பகல் 5 மணிக்கு மண்டபம் ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் செல்லும் அவர் அங்குள்ள தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

    மாலை 5.45 மணிக்கு விழா நடைபெறும் திடலுக்கு வரும் அமித்ஷா, அண்ணாமலையின் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். முன்னதாக அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    நடைபயண தொடக்க விழாவுக்கு பின்னர் ராமேசுவரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் (29-ந்தேதி) காலை 6 மணிக்கு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

    அதன்பிறகு காலை 11 மணிக்கு மற்றொரு தனியார் ஓட்டலில் நடைபெறும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு அப்துல் கலாமின் இல்லத்திற்கு செல்லும் அமித்ஷா, அப்துல்கலாமின் அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து கலாமின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேச உள்ளார். அதன்பிறகு பகல் 12.40 மணிக்கு குந்துகாலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார்.

    அங்கிருந்து மண்டபம் வரும் அவர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் மதியம் 2.15 மணியளவில் டெல்லி செல்கிறார்.

    அண்ணாமலை நடைபயணம் தொடக்கம், அமித்ஷா வருகையால் ராமேசுவரத்தில் டி.ஐ.ஜி. துரை தலைமையில், 5 எஸ்.பி.க்கள், 30 டி.எஸ்.பி.க்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் கடற்கரை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நடைபயண தொடக்க விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த தொடக்க நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாகவும், இதற்காக அவர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வரை சாலையின் இருபுறமும் பா.ஜ.க. கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டுள்ளன. விழா மேடையானது பாராளுமன்ற கட்டிடத்தை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைபயண பிரசாரத்தின் போது வழிநெடுக பிரதமர் மோடி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திருக்கும் சாதனைகளை 10 லட்சம் புத்தகங்களாக அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்கவும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மக்களுக்கு எழுதியுள்ள கடிதங்களை ஒரு கோடி குடும்பங்களுக்கு விநியோகிக்கவும் பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.

    அதேபோல் முக்கிய இடங்களில் இருந்து புனித மண் சேகரிக்கப்பட்டு அதை வைத்து தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை செய்யவும் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

    நாளை நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை, ராமேசுவரம் நகருக்குள் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். இதற்காக புகார் பெட்டி ஒன்றும் எடுத்து செல்லப்படுகிறது. முதல் நாள் பயணத்தை ராமேசுவரத்தில் முடிக்கும் அவர் இரவு ராமேசுவரத்திலேயே தங்குகிறார்.

    நாளை மறுநாள் (29-ந்தேதி) காலை ராமேசுவரத்தில் இருந்து நடைபயணம் புறப்படும் அண்ணாமலை தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் அவர் பொதுமக்களை சந்தித்துவிட்டு இரவு ராமநாதபுரத்தில் தங்குகிறார்.

    இதைதொடர்ந்து ஜூலை 30-ந்தேதி முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை, சிவகங்கையில் நடைபயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 1-ந்தேதி மானாமதுரையிலும், 2-ந்தேதி ஆலங்குடியிலும் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை ஆகஸ்ட் 5-ந்தேதி மதுரைக்கு செல்கிறார். 9-ந்தேதி திருச்சி செல்லும் அவர், 13-ந்தேதி தூத்துக்குடியிலும், 14-ந் தேதி திருச்செந்தூரிலும், 15-ந்தேதி கன்னியாகுமரியிலும் நடைபயணம் சென்று மக்களை சந்திக்கிறார்.

    ஆகஸ்ட் 20-ந்தேதி நெல்லையிலும், 31-ந்தேதி தென்காசியிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். செப்டம்பர் மாதம் 1-ந்தேதி சங்கரன்கோவிலில் நடைபயணம் மேற்கொள்ளும் அவர் 9-ந்தேதி பழனிக்கும், 13-ந்தேதி கோவைக்கும் செல்கிறார். ஈரோட்டில் செப்டம்பர் 21-ந்தேதியும், கரூரில் அக்டோபர் 9-ந் தேதியும், திருச்சியில் 11-ந் தேதியும் நடைபயணம் மேற்கொள்ளும் அவர் அக்டோபர் இறுதியில் சீர்காழிக்கு நடைபயணம் செல்கிறார்.

    நவம்பர் 1-ந்தேதி மயிலாடுதுறை செல்லும் அண்ணாமலை நவம்பர் 27-ந்தேதி சேலம் செல்கிறார். டிசம்பர் 8-ந்தேதி தர்மபுரி செல்லும் அவர் டிசம்பர் 31-ந்தேதி அன்று திருத்தணி மற்றும் அரக்கோணத்துக்கு செல்கிறார்.

    அடுத்த ஆண்டு ஜனவரி 2-ந்தேதி திருவள்ளூரில் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு ஜனவரி 4-ந்தேதி மதுரவாயல், அம்பத்தூரில் நடைபயணம் செல்கிறார்.

    சென்னையில் ஜனவரி 7, 8, 9 மற்றும் 11 ஆகிய 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். நாளை தொடங்கும் அண்ணாமலையின் நடைபயணம் ஜனவரி 11-ந்தேதி சென்னையில் முடியும் வகையில் பயண திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அண்ணாமலை 5 மாதங்களுக்கும் மேலாக 100 நாட்களை கடந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    • ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள தனியார் திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • யாத்திரையின் போது மக்கள் புகார் பெட்டி ஒன்றும் எடுத்துச் செல்லப்படுகிறது.

    ராமேசுவரம்:

    தமிழக அரசு மீதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சிக்கு ஆதரவு திரட்டவும், பலம் சேர்க்கவும் 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் தமிழக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடைபயணம் செல்வதற்கு திட்டமிட்டு உள்ளார்.

    இந்த நடைபயணம் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நாளை மறுநாள் (28-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் தொடங்க உள்ளது. இந்த நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா வருகை தர உள்ளார்.

    ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள தனியார் திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பரந்த நிலப்பரப்பில் பாராளுமன்ற வடிவில் மேடை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதில் கட்சி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அமருவதற்காக தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமித்ஷா, அண்ணாமலை, பா.ஜ.க. தலைவர்களை வரவேற்று விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அண்ணாமலையின் இந்த பாதயாத்திரை நடைபயணத்தில் பங்கேற்க இதுவரை சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். 234 தொகுதிகளிலும் 100 நாட்கள் நடைபயணம் செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் ஐந்து கட்டங்களாக இந்த யாத்திரை நடைபெறுகிறது.

    ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி நடைபெறும் முதற்கட்ட யாத்திரை ஆகஸ்ட் 22-ந்தேதி நிறைவடைகிறது.

    அதன் பிறகு சிறு சிறு இடைவெளிகளுடன் அடுத்தடுத்த கட்டங்களாக யாத்திரை நடைபெறுகிறது. ஜனவரி மாதம் சென்னையில் யாத்திரை நிறைவடைகிறது. இந்த நிறைவு நாளில் பிரதமர் பங்கேற்க இருக்கிறார். மேலும் இதில் பங்கேற்க வருமாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த நடைபயண பிரசாரத்தின் போது வழிநெடுக பிரதமர் மோடி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திருக்கும் சாதனைகளை 10 லட்சம் புத்தகங்களாக அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்கவும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மக்களுக்கு எழுதியுள்ள கடிதங்களை ஒரு கோடி குடும்பங்களுக்கு விநியோகிக்கவும் திட்டமிட்டு உள்ளனர். நடைபயணத்தின் போது 11 இடங்களில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    இந்த யாத்திரையின் போது மக்கள் புகார் பெட்டி ஒன்றும் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த பெட்டியில் மக்கள் தங்கள் புகார்களையும் எழுதி போடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முக்கிய இடங்களில் இருந்து புனித மண் சேகரிக்கப்பட்டு அதை வைத்து தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    அண்ணாமலை நடைபயணம் தொடக்கம், அமித்ஷா வருகையால் ராமேசுவரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே பா.ஜனதா இந்த யாத்திரையை மேற்கொள்கிறது.
    • திராவிட மாடல் என்பதை திராவிட மாயை என்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். ராமேசுவரத்தில் தொடங்கும் இந்த யாத்திரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜனவரி 11-ந்தேதி சென்னையில் முடிவடைகிறது.

    இந்த யாத்திரை தொடக்க விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார். பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே பா.ஜனதா இந்த யாத்திரையை மேற்கொள்கிறது. திராவிட மாடல் என்பதை திராவிட மாயை என்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    எனவே அமித்ஷா பங்கேற்கும் தொடக்கவிழா கூட்டத்தையே தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார கூட்டமாகவும் நடத்த வியூகம் அமைக்கப்பட்டு உள்ளது.

    எனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கல்வி உரிமை கழக தலைவர் தேவநாதன் யாதவ், ஐ.ஜே.கே. கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    கடந்த முறை பா.ஜனதா கூட்டணியில் இருந்த பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுவது பற்றி இன்னும் அறிவிக்கவில்லை. எனவே அந்த கட்சிகளையும் சேர்ப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது. அழைப்பு வந்தால் பரிசீலிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • ஆந்திராவில் 108 அடி உயர ராமர் சிலையை அமைக்க அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
    • ஜெய் ஸ்ரீராம் அறக்கட்டளை மூலம் 500 கோடி ரூபாய் செலவில் 108 அடி உயர பஞ்சலோக சிலையாக இது உருவாகிறது.

    திருப்பதி:

    அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ள நிலையில், ஆந்திராவில் 108 அடி உயர ராமர் சிலையை அமைக்க அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

    ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் உள்ள மந்ததிராலயத்தில் துங்கப்பத்ரா நதிக்கரையில் புகழ்பெற்ற ராகவேந்திரர் சாமி கோவில் உள்ளது. இந்த நகரில் பிரமாண்டமாக ராமர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடம் 10 ஏக்கர் நிலத்தை ராமர் சிலை கட்டுவதற்காக நன்கொடையாக வழங்கியது. இதில் அழகிய பூங்கா அமைப்புடன் உலகிலேயே உயரமான 108 அடி உயர பஞ்சலோக ராமர் சிலை நிறுவப்பட உள்ளது.

    ஜெய் ஸ்ரீராம் அறக்கட்டளை மூலம் 500 கோடி ரூபாய் செலவில் 108 அடி உயர பஞ்சலோக சிலையாக இது உருவாகிறது.

    குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் வஞ்சி சுதார் இந்த சிலையை வடிவமைக்கிறார்.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரமாண்ட ராமர் சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த ராமர் சிலை பிரமாண்டமானது. இது மந்திராலயம் நகரத்தை பக்தி உணர்ச்சியுடன் மூழ்கடிக்கும், "நமது செழுமையான மற்றும் பண்பாடு நாகரீக உறுதிப்பாட்டில் மக்களைத் தளராமல் இருக்க ஊக்குவிக்கும்.

    இந்த சிலை பிராந்தியத்தில் சனாதன மதத்தை பரப்புவதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஒரு மைல் கல்லாக இருக்கும்.

    ரூ.500 கோடிக்கும் அதிகமான செலவில் சிலை அமைக்கப்படவுள்ளது. இந்து கலாச்சாரத்தில் 108 மிகவும் புனிதமான எண்.

    2½ ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும் என அமித்ஷா தெரிவித்தார்.

    விழாவில் ராகவேந்திர சுவாமிகள் மடத்தின் பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள், ராஜ்யசபா முன்னாள் உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு வார பயணமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
    • தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் கவர்னரின் இந்த பயணம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, கடந்த 7-ந் தேதி ஒரு வார பயணமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் கவர்னரின் இந்த பயணம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் டெல்லியில் தங்கி இருந்த கவர்னர் ஆர்.என்.ரவி, தனது பயணத்தை முடித்து கொண்டு நேற்று இரவு 8 மணிக்கு சென்னை திரும்பினார்.

    ×