search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமமுக"

    • ஆரஞ்சு பால் பாக்கெட் மற்றும் பால் பொருட்களின் விலை ஒரே வருடத்தில் 3 முறை உயர்த்தப்பட்டது.
    • மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் தி.மு.க.வுக்கு வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை :

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நல்லாட்சி தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த 2 ஆண்டுகளும், மக்கள் துயரத்தின் தொடர் ஆண்டுகளாகத்தான் இருந்து வருகிறது. நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் ரத்து செய்வோம் என்று சொன்னார்கள். அதற்கான முன்னெடுப்பு கூட முழுமை பெறாத நிலை உள்ளது. சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் தி.மு.க. அரசு தோல்வி அடைந்து விட்டது. ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள், அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம் 2 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆரஞ்சு பால் பாக்கெட் மற்றும் பால் பொருட்களின் விலை ஒரே வருடத்தில் 3 முறை உயர்த்தப்பட்டது.

    மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் தி.மு.க.வுக்கு வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்யும் அரசு அவர்களையே இழிவுபடுத்துவது எந்தவகையில் நியாயம்?
    • ஆட்சியைப் பிடிப்பதற்கு தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைத்தான் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    1000 ரூபாய் உதவி பெறும் மாணவிகள், தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுநிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு பல்வேறு பிரிவினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்யும் அரசு அவர்களையே இழிவுபடுத்துவது எந்தவகையில் நியாயம்?

    இலவசங்கள் தர வேண்டும் என்று பொதுமக்கள் யாரும் இவர்களிடம் கேட்கவில்லை. ஆட்சியைப் பிடிப்பதற்கு தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைத்தான் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.

    பெண்களை இழிவுபடுத்தும் சமூகம் மட்டுமல்ல, பெண்களை அவமதிக்கும் ஆட்சியாளர்களும் நீடித்திருந்ததாக சரித்திரம் இல்லை. பெண்களை அவமதிக்கும் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடிக்கு சாதகமாக இரட்டை இலையும் அ.தி.மு.க.வும் வந்தால் அது அ.தி.மு.க.வை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும்.
    • தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மத்திய அரசு நிறுத்தி கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடாது.

    தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த திட்டத்தையும் அனுமதிக்கக்கூடாது. மேலும் இந்த விஷயத்தில் தேவையற்ற அரசியல் செய்ய வேண்டாம்.

    நீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடிக்கு சாதகமாக இரட்டை இலையும் அ.தி.மு.க.வும் வந்தால் அது அ.தி.மு.க.வை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும்.

    ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி கையில் சிக்கிய அ.தி.மு.க. கட்சி அழிவு பாதையை நோக்கி செல்கிறது. எம்.ஜி.ஆர். கையில் இருந்த இரட்டை இலை சின்னம் சினிமா வில்லன்கள் நம்பியார், வீரப்பா கையில் கிடைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் எடப்பாடி பழனிசாமி கையில் உள்ளது என்று மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

    இரட்டை இலை சின்னம், அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம் என்று வந்தால் அது இரட்டை இலைக்கும், அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் பிடித்த கெட்ட நேரம்.

    கட்சியில் துரோகம் இழைத்ததால் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். ஆனால் துரோகத்தின் மூலமாகவே பொறுப்புக்கு வந்த ஒருவரை இயற்கையும் அனுமதிக்காது. அவரை நிச்சயம் மக்கள் புறக்கணிப்பார்கள்.

    தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அம்மாவின் உண்மை தொண்டர்கள் இணைந்தால் தி.மு.க.வை நிச்சயமாக வீழ்த்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் திறந்திட வேண்டுகிறேன்.
    • பாதசாரிகளுக்கும், இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கும் உதவியாக அமைந்திட வேண்டும்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோடை வெயிலின் தாக்கத்தால் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் அதிகரித்து வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் வருங்காலங்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இச்சூழலில் சாலைகளில் செல்லும் பொதுமக்களை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் திறந்திட வேண்டுகிறேன். இந்தப் பணி, பாதசாரிகளுக்கும், இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கும் உதவியாக அமைந்திட வேண்டும். அதற்குத் தகுந்த இடங்களைத் தேர்வு செய்து தண்ணீர் மற்றும் நீர் மோர்ப்பந்தல்களை நிறுவிட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க. வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு இல்லை.
    • ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் இணைக்க மத்தியில் உள்ளவர்களால் மட்டுமே முடியும்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அ.தி.மு.க. வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு இல்லை.

    ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் இணைக்க மத்தியில் உள்ளவர்களால் மட்டுமே முடியும்.

    வெற்றி பெற்றதன் மூலம் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆராகவோ, ஜெயலலிதாவாகவோ முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து சிலர் வேறு கட்சிக்கு செல்லுபவர்கள் தொண்டர்கள் அல்ல.
    • டெண்டர்கள் கிடைக்கும் என்று அங்கே சென்று இருக்கிறார்கள். நம்மை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார்கள்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6-வது ஆண்டு தொடக்கவிழா ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது.

    விழாவில் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அங்குள்ள 70 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றினார். அதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், சி.ஆர்.சரஸ்வதி, மாவட்ட செயலாளர்கள் வி.சுகுமார்பாபு, சி.பி.ராமஜெயம்,ஏ.ஆர்.பழனி, ஆர்.ஆனந்தன்,எல்.ராஜேந்திரன், கே.முகம்மது சித்திக், கே.விதுபாலன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் டி.டி.வி தினகரன் பேசியதாவது:-

    நமது கட்சியின் 6-வது ஆண்டு தொடக்க விழாவிற்கு வந்துள்ள அனைவரையும் உண்மையான அம்மாவின் வாரிசுகளாக உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மார்ச் 15-ல் வேலூர் பொதுக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கம்பீரமான கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று அம்மா முன்னேற்ற கழகம் பிறந்தநாள். கடந்த 5 ஆண்டுகளில் நாம் எத்தனையோ சோதனைகளை சந்தித்து உள்ளோம். அம்மாவின் பிள்ளைகள் நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள்.

    ஒரு சிறு தொய்வு, தயக்கமின்றி நம்மால் இந்த இயக்கத்தை தொடர்ந்து கொண்டு செல்ல முடியும். அம்மாவின் கொள்கைகளையும், லட்சியங்களையும் அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்கின்ற கடமை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கு இருக்கிறது.

    தொண்டர்களில் ஒருவனாக என்னை இன்றைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். வருங்காலத்தில் அம்மாவின் லட்சியங்களை நமது சந்ததிகளுக்கு கொண்டு செல்லக்கூடிய இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இருக்கும்.

    காரணம் இங்கு உள்ள தொண்டர்கள் உண்மையான தொண்டர்கள். டெண்டர்களுக்காக வந்தவர்கள் அல்ல டெண்டர்களுக்காக வந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து சிலர் வேறு கட்சிக்கு செல்லுபவர்கள் தொண்டர்கள் அல்ல.

    டெண்டர்கள் கிடைக்கும் என்று அங்கே சென்று இருக்கிறார்கள். நம்மை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார்கள். அவர்கள் உண்மையான அம்மாவின் தொண்டர்கள் அல்ல. ஆட்சி அதிகாரம் எதிரிகளின் கையில் இருந்தாலும் அதையெல்லாம் வேண்டாம் என்று ஆட்சி அதிகாரத்தின் லாபங்களை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து இங்கு தொண்டர்கள் இருக்கிறார்கள். வீரத்தோடும், தீரத்தோடும் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு பின்னடைவும் இந்த இயக்கத்தை பாதிக்கப்படவில்லை.

    காரணம் இது ஏதோ சுயநலத்திற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல இது அம்மா என்ற மூன்றெழுத்தின் லட்சியங்களை தொடர்ந்து கொண்டு செல்கின்ற இயக்கம். பல லட்சம் தொண்டர்கள் என்னோடு அணிவகுத்து இருக்கிறீர்கள். நமது இயக்கத்திற்காக பாடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் அமைப்பு ரீதியாக 5 ஆண்டுகளில் இந்த இயக்கம் எல்லா பகுதிகளிலும் வேரூன்றி இருக்கிறது.

    வருங்காலத்திலே இது அம்மாவின் உண்மையான ஆட்சியை தமிழ்நாட்டில் உருவாக்கும் இயக்கமாக வளர்ந்து வரும். புரட்சித் தலைவர் ஆரம்பித்த இயக்கம் இன்று துரோகிகளின் கையிலே சிக்கிக் கொண்டுள்ளது.

    ஆட்சி அதிகாரம், பண பலத்தால் இன்றைக்கு மின்மினி பூச்சிகளாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு சுயநலத்தின் உச்சமாக ஆணவத்தின், அகங்காரத்தின் உச்சமாக திகழ்கிறார்கள்.

    அம்மாவின் ஆட்சியை அவர்களால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை . பண பலத்தால் ஜனநாயகத்தை வென்று விடலாம் என்றார்கள். முடியாது என்று காலம் அவர்களுக்கு உணர்த்தி இருக்கிறது.

    ஆனால் தீய சக்தியான திமுகவை ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களது சுயநலமும், அதிகாரம், ஆணவம் இதற்கு காரணம். வருங்காலத்தில் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் எங்கிருந்தாலும் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திமுகவை வீழ்த்தி காட்டுவோம் என்கின்ற உறுதியினை ஏற்போம்.

    இந்த இயக்கம் இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் அம்மாவின் இயக்கம் இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றியை விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இது மக்கள் கொடுத்த வெற்றி இல்லை.
    • 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் 5 ஆண்டு காலம் ஜெயலலிதா சிறப்பான ஆட்சி வழங்கினார்.

    மதுரை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போதைய தி.மு.க. ஆட்சி மிகவும் மோசமான ஆட்சியாக உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் ஒரு வாக்காளருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் செலவு செய்துள்ளனர். மருங்காபுரி, மதுரை கிழக்கு, ஆர்.கே. நகர் உள்ளிட்டவற்றில் நடந்த இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் தான் ஜெயித்தன.

    மற்ற இடங்களில் ஆளும் கட்சி ஜெயித்தது. தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சியில் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றியை விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இது மக்கள் கொடுத்த வெற்றி இல்லை. 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் 5 ஆண்டு காலம் ஜெயலலிதா சிறப்பான ஆட்சி வழங்கினார். அதன்பின் அ.தி.மு.க.வினரின் 4 ஆண்டுகால ஆட்சி மிகவும் மோசமானதாக இருந்தது. எனவே அவர்களை பொது மக்கள் ஒதுக்கி வைத்தனர்.

    நல்லாட்சி தருவார்கள் என்ற நம்பிக்கையில் தி.மு.க.வுக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் அதைவிட இது மோசம் என்ற அளவில்தான் தி.மு.க.வின் ஆட்சி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வார்த்தை ஜாலம் மட்டுமே செய்கிறார். அனைத்து துறைகளிலும் தி.மு.க. ஊழல் செய்து வருகிறது. இது பாராளுமன்ற தேர்தலுக்கான அச்சாரம் அல்ல. பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் தி.மு.க.வின் அராஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும்.
    • சுவாசம் உள்ளவரை அம்மாவின் ஆட்சியை கொண்டு வர போராடுவோம்.

    மதுரை:

    அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரைக்கு இன்று வந்தார். அவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 75-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை நடத்தியவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பிறகு ஆட்சி கட்டிலில் வெற்றிடம் ஏற்பட்டது. இதனை நிரப்புவதற்காக சசிகலாவால் கொண்டு வரப்பட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி. அதுவும் தவிர ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் குப்பனோ, சுப்பனோ கூட 4, 5 ஆண்டுகள் ஆட்சியை நடத்த முடியும்.

    இதில் பழனிசாமிக்கு எந்த பெருமையும் இல்லை. அவர் மத்திய அரசின் உதவியுடன் தான் அந்த ஆட்சியையும் நடத்தினார். ஆனால் பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னம் இருந்தும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியவில்லை.

    தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைய எடப்பாடி பழனிசாமியின் ஆணவம், பண திமிர்தான் காரணம். அவரால் ஜெயலலிதா ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை. வன்னியர் சமுதாய மக்களை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றினார். அதனால் தான் அவரால் தென் மாவட்டங்களில் ஜெயிக்க முடியவில்லை. பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு வர இயலவில்லை.

    தமிழகத்தில் தி.மு.க.வின் அராஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும். சுவாசம் உள்ளவரை அம்மாவின் ஆட்சியை கொண்டு வர போராடுவோம். அம்மா பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அவருக்கு மரியாதை செலுத்த எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தவறானவர்கள் கையில் இரட்டை இலை சின்னம் உள்ளது. ஆட்சி அதிகாரம் இருந்த போதே, அ.ம.மு.க லட்சியத்திற்காக தொடங்கப்பட்டது. எடப்பாடியுடன் ஒரு சிலர் வியாபார லாப நோக்கத்துடன் உள்ளனர். தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. வளர்ந்துவரும் இயக்கமாக மாறி உள்ளது.

    இரட்டை இலை சின்னம் துரோகிகளின் கையில் இருந்ததால் தி.மு.க. வெற்றி பெற்றது. பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி என்பது பண பலம், ஆட்சி அதிகாரம் காரணமாக கிடைத்துள்ளது. அ.தி.மு.க.வை பழனிசாமி பிராந்திய கட்சியாக மாற்றி விட்டார். அ.தி.மு.க.வில் தற்போது உள்ளவர்கள் தொண்டர்கள் அல்ல, டெண்டர்கள். எங்களுக்கு துரோகம் செய்ததால் ஒரு சிலரை பார்த்து அச்சம் இருக்கலாம். எனவே தான் பழனிசாமி சேர்க்க மாட்டேன் என்கிறார். எனக்கு தகுதி இல்லை. நான் தேவை இல்லை என்கிறார். ஆனால் ஆட்சி அதிகாரம், பணபலம் இருந்தும், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததை பழனிசாமியால் தடுக்க முடியவில்லை.

    ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க வெற்றி பெற முடியாது. பழனிசாமி மெகா கூட்டணி என்றார். ஆனால் தே.மு.தி.க, பா.ம.க ஆகிய கட்சிகள் வெளியேறி விட்டது.

    வன்னியர் உள் இடஒதுக்கீடு 10.5 சதவீதம் அறிவித்தும், அதனை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. பழனிசாமியிடம் இருந்து பா.ம.க. நல்ல வேளையாக தப்பித்து விட்டது. ஒரு கண்ணில் வெண்ணைய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல வன்னியர் உள் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. துரோகம் தான் பழனிசாமியின் மூலதனம். உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் இந்த சுற்றில் பழனிசாமி தற்காலிக வெற்றி பெற்று உள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் பொதுக்குழு செல்லும் என்று கூறி உள்ளனர். தீர்மானத்தை பற்றி எதுவும் கூறவில்லை .

    அம்மா, எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னம் பழனிசாமியிடம் கிடைத்ததால், அது பின்னடவை சந்தித்து உள்ளது. அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் திரண்டு செயல்பட்டால், தி.மு.க என்ற தீய சக்தியை வெல்ல முடியும். அனைவரும் ஒன்றிணைந்து எங்களோடு வரவேண்டும். பழனிசாமி தன்னை அம்மாவின் தொண்டராக உணரவில்லை. அகங்காரத்தில் குதிக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றிக்காக, நாங்கள் 40 சீட் கேட்டோம். ஆனால் பழனிசாமியின் தவறான முடிவால், ஆட்சி பொறுப்பிற்கு வர முடியவில்லை. பழனிசாமி எப்போது திருந்துவார்? என்று தெரியவில்லை. நீதிமன்ற தீர்ப்பில் மேல்முறையீடு போகலாம், தேர்தல் ஆணையம் போகலாம்.

    கட்சி இருப்பதால் மட்டும் சோபித்துவிட முடியுமா? இந்த தீர்ப்பு என்பது தற்காலிகமானதுதான். பழனிசாமி தான் பொதுச்செயலாளர் என்று அறிவித்தாலும் தி.மு.க.வை வீழ்த்த முடியாது. கூட்டணி பலத்தோடு இருக்கும் தி.மு.க.வை வீழ்த்த முடியாத நிலையில் பழனிசாமி உள்ளார். பணபலம், மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தால் மட்டும் வெற்றி பெற முடியாது. எனது உயரம் எனக்கு தெரியும். பாராளுமன்ற தேர்தலில் எனது தலைமையில் கூட்டணி அமைக்கவில்லை. அ.ம.மு.க தான் அம்மாவின் இயக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலையை கொடுத்தால் அது இன்னும் பலவீனப்படும்.
    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பலத்த அடி விழும்.

    திருச்சி:

    திருச்சியில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. ஆனால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை, அதனை தனி நீதிபதி தொடர்ந்து விசாரிப்பார் என்றும், இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் மேல்முறையீடு செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

    ஆகவே இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த தற்காலிக வெற்றி. இந்த வெற்றியின் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. ஜெயித்து விடுமா? ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டால் மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும். இந்த தீர்ப்புக்கு பின்னணியில் யாரும் இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் 2017 ஏப்ரல் முதல் அ.தி.மு.க.வை டெல்லி தான் இயக்குகிறது என்பது உண்மைதான்.

    எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலையை கொடுத்தால் அது இன்னும் பலவீனப்படும். ஆட்சி அதிகாரத்தில் கிடைத்த பண பலம், மமதை ஆகியவற்றை வைத்துக்கொண்டு தன்னை தலைவராக அறிவித்துக் கொண்டுள்ளார். இப்போது பொதுக்குழுவையும் வசப்படுத்தி தனக்கு சாதகமாக்கி கொண்டு இருக்கிறார். அதை மீறி காலம் அவருக்கு தீர்ப்பு சொல்லும்.

    முதல் ரவுண்டில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். இரண்டு, மூன்றாவது ரவுண்டுகளில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார் இன்னும் நான்கு, ஐந்து ரவுண்டுகள் இருக்கிறது பார்ப்போம். எடப்பாடி பழனிசாமியுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைய வாய்ப்பு இல்லை. நாங்கள் ஏற்கனவே தனிக்கட்சி தொடங்கி இருக்கிறோம். அம்மாவின் கொள்கைகள் லட்சியங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் கொண்டு செல்வோம்.

    தென்னை மரத்திற்கு தேள் கொட்டினால் பனை மரத்துக்கு ஒன்றும் ஆகாது. மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து ஒரு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு தற்காலிக பின்னடைவு தான். இதை வைத்துக்கொண்டு என்னுடைய கட்சியில் அவரை அழைப்பது நாகரிகமாக இருக்காது.

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தீய சக்தி தி.மு.க.வுக்கும், துரோக சக்தி அ.தி.மு.க.வுக்கும் எங்கள் ஆதரவு கிடையாது என்று ஏற்கனவே சொல்லி விட்டேன். இந்த தேர்தலில் வேண்டுமானால் ஆளுங்கட்சி ஜெயிக்கலாம். ஆனால், 60 மாதத்தில் வரக்கூடிய கெட்ட பெயரை இரண்டு ஆண்டுகளில் தி.மு.க. சம்பாதித்துள்ளது. எஞ்சியுள்ள வாக்குறுதிகள் என தி.மு.க. வாய்ஜாலம் அடித்துக் கொள்கிறது.

    இடைத்தேர்தலில் தப்பித்துக் கொள்ளலாம், ஆனால் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பலத்த அடி விழும். சீமான் ஜாக்கிரதையாக பேச வேண்டும். கமல்ஹாசனின் செயல்பாடு நகைச்சுவையாக இருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் அணியில் இருப்போம். இல்லையென்றால் தனித்து களம் காண்போம்.

    பேட்டியின்போது மாநில பொருளாளர் ஆர்.மனோகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • டி.டி.வி. தினகரன் நேற்று கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்ள ஈரோடு வந்தார்.
    • நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட டி.டி.வி. தினகரன் இரவு ஈரோட்டிலேயே தங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாந்த் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்து பிரசாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்காததால் வாபஸ் பெறப்போவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்தார். இதையடுத்து வேட்பாளரும் வாபஸ் பெற்றார்.

    இதற்கிடையே டி.டி.வி. தினகரன் நேற்று கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்ள ஈரோடு வந்தார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட அவர் இரவு ஈரோட்டிலேயே தங்கினார்.

    இன்று காலை டி.டி.வி. தினகரன் அ.ம.மு.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து பேசப்பட்டதாகவும், இதில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்று ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    • பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இடையே இருந்த பதவி சண்டை காரணமாக தமிழ்மகன் உசேன் கையெழுத்து போடும் வினோதமான, விசித்திரமான நிலை ஏற்பட்டுள்ளது.
    • நிரந்தரமாக தமிழ்மகன் உசேன் தான் கையெழுத்து போடமுடியும் என உச்சநீதிமன்றம் கூறினால் நிலைமை என்ன ஆகும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் 7-ந் தேதி தான் குக்கர் சின்னம் கிடையாது என அறிவித்தது. முன்கூட்டியே அறிவித்திருந்தால் நாங்கள் சுப்ரீம் கோர்ட் சென்று குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்க அனுமதி வாங்கி இருப்போம். ஆனால் அதற்கான கால அவகாசம் இல்லாததால் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடவில்லை. இருப்பினும் பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக குக்கர் சின்னம் தான் எங்களுக்கு கிடைக்கும். இடைத்தேர்தல் என்பதால் கிடைக்கவில்லை அவ்வளவுதான்.

    தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக தான் அ.ம.மு.க உள்ளது. இதனால் இடைத்தேர்தலில் எங்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் தி.மு.க மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியை புறக்கணிப்பார்கள். அவர்களுக்கு மாற்றாக தங்களது வாக்கை பதிவு செய்வார்கள்.

    எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கினாலும் தற்போது அந்த சின்னம் செல்வாக்கு இழந்ததாகவே கருதப்படுகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கையில் இரட்டை இலை சின்னம் இருந்தபோது செல்வாக்கு மிக்கதாக விளங்கியது. தற்போது அதிகாரம், ஆணவப்போக்குடன் செயல்படும் எடப்பாடி பழனிசாமியால் இரட்டை இலை சின்னம் மதிப்பு இழந்து விட்டது. அவர்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது. தற்போது ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். விரைவில் அவர்கள் அணியில் இருப்பவர்கள் உண்மையை உணர்ந்து எங்களுடன் கைகோர்க்கும் நிலை வரும். அடுத்த தேர்தலிலே அது கைகூடும் என எதிர்பார்க்கிறோம்.

    பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இடையே இருந்த பதவி சண்டை காரணமாக தமிழ்மகன் உசேன் கையெழுத்து போடும் வினோதமான, விசித்திரமான நிலை ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக தமிழ்மகன் உசேன் தான் கையெழுத்து போடமுடியும் என உச்சநீதிமன்றம் கூறினால் நிலைமை என்ன ஆகும்.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை வைப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த சூழ்நிலையில் கடலில் பேனா சிலை தேவைதானா என பலரும் குரல் எழுப்புகின்றனர். ஏன் கருணாநிதி நினைவிடத்திலோ அல்லது அறிவாலயத்திலேயோ தி.மு.க. தனது சொந்த நிதியில் பேனா சிலை வைத்தால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அதற்கு மாறாக நிலைமை இருக்கும் போது தான் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

    அதானி பிரச்சனை தற்போது அரசியல் பிரச்சினையாக மாறி உள்ளது. இது குறித்து மத்திய அரசு தான் பதில் கூற வேண்டும். நான் பதில் கூறுவது சரியாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது துணை பொது செயலாளர் ரங்கசாமி, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • இடைத்தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும்.
    • அமமுகவின் ஆதரவு யாருக்கு? என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு களத்தில் பரப்புரை பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த சூழலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை, இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்கிட இயலாது என தலைமை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில், புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். ஆகவே வரவிருக்கிற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் குக்கர் சின்னத்தோடு தேர்தல்களை சந்திப்போம்.

    இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமைக்கழக நிர்வாகிகளின் ஆலோசனையை கருத்தில் கொண்டு, இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

    மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு? என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×