search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமமுக"

    • புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து.
    • தி.மு.க. தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கான பதில் வருகின்றன பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும்.

    தஞ்சாவூர்:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று தனது 60-வது பிறந்தநாளை தஞ்சையில் நிர்வாகிகள், தொண்டர்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும். அப்படி இணைந்தால் தான் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியும். எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் இல்லை என்பதை பல இடங்களில் நிருபித்து வருகிறார்.

    உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் தவறில்லை. ஆனால் ஏன் இவ்வளவு அவசரத்தில் அமைச்சராக்க மு.க.ஸ்டாலின் நினைக்கிறார் என தெரியவில்லை.

    புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து. தி.மு.க. தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கான பதில் வருகின்றன பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயலலிதா தலைவராக இருந்த அ.தி.மு.க.வில் இன்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள்.
    • எடப்பாடி பழனிசாமி ஒரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.ம.மு.க. சுதந்திரமாக இயங்கக் கூடிய இயக்கம். நாங்கள் மற்றவர்களுடன் கூட்டணி தான் போக முடியும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். மெகா கூட்டணி பற்றிய பேச்சு வந்துள்ளதால் அதில் சேர தயார் என்றேன். எனவே பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணியில் அ.ம.மு.க. சேரும்.

    ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் ஓரணியில் திரண்டு தி.மு.க. அணியை எதிர்க்க வேண்டும்.

    அடுத்தவர்களை தரம் தாழ்த்தி பேசுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை என்பதை காண்பிக்கிறார். நான் அரைக்கால் சதவீதம் கூட எடப்பாடி பழனிசாமியுடன் செல்வேன் என்று எங்கும் சொல்லவில்லை.

    நீங்கள் அ.தி.மு.க. கூட்டணியுடன் செல்வீர்களா என்று பத்திரிக்கையாளர்கள் திரும்ப திரும்ப கேட்கிறார்கள். அ.தி.மு.க. என்பது இன்று செயல்படாத கட்சியாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்.

    ஒரு கட்சி பெரிய கட்சியாக இருந்தாலும் சரி, சின்ன கட்சியாக இருந்தாலும் சரி இடைத்தேர்தல் வரும்போது கட்சி வேட்பாளர்களுக்கு சின்னம் கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும். அங்கு அந்த இடத்தில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

    2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தனியாக போட்யிட்டோம். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியாததாலேயே தோல்வியை சந்தித்தோம். தேர்தல் பின்னடைவுக்கு அதுவும் ஒரு காரணம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. ஒரு அணியை போல செயல்படும். இந்திய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் அ.ம.மு.க. தமிழ்நாட்டில், சிறப்பாக பணியாற்றும். எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

    ஏற்கனவே தேர்தலில் நாங்கள் பின்னடைவை சந்தித்ததால் வருங்காலத்தில் நாங்கள் தேர்தலில் பின்னடைவை தான் சந்திப்போம் என்று யாராவது நினைத்தால் அது அவர்களின் எண்ணம். எங்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

    ஜெயலலிதா தலைவராக இருந்த அ.தி.மு.க.வில் இன்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஒரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார்.

    அ.தி.மு.க. தலைவர் யார் என்பதை நீதிமன்றம் போய் முடிவு செய்யும் இடத்தில் அந்த கட்சி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் போதைப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. இதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • அ.ம.மு.க.வை எங்கள் கூட்டணியில் இணைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் தலச்சங்காட்டில் நேற்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைவது உறுதி. டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வை எங்கள் கூட்டணியில் இணைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை.

    தமிழகத்தில் போதைப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. இதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
    • மத்திய அரசை குறை கூறாமல் இழப்பீடு பெற்று வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் முன் கூட்டியே தொடங்கி விட்டார்கள். மழை காரணமாக காலதாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து விட்டோம். மழை காரணமாக பணிகள் முடிக்கவில்லை என சொல்லி இருக்க வேண்டும். கண்முன்னே குழி தோண்டி வைக்கப்பட்டுள்ளது. 80 சதவீதம், 90 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது என பொய் சொல்லாமல் உண்மையை மக்களிடம் சொல்லி இருக்கலாம். செய்ய முடிந்ததை சொல்லுங்கள். மக்களை ஏமாற்றாதீர்கள்.

    அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை தன்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது தவறு இல்லை. ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதில் தி.மு.க.வின் செயல் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பலம் வாய்ந்த கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளதை அவரிடம் தான் கேட்க வேண்டும். குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக திருமாவளவன் பேசுவதை நிறுத்த வேண்டும். அவர் மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.

    ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ அதுபோல்தான் கவர்னர் பதவியும் என்பது எங்களது கொள்கை. கவர்னர் ஆர்.என்.ரவி பேசுவதை பெரிதுபடுத்த தேவையில்லை. அவர் ஒரு அதிகாரி தான்.

    மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசை குறை கூறாமல் இழப்பீடு பெற்று வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. ஆட்சியில் இருக்கும் போது இருவரும் அதிகாரத்துடன் செயல்படுகின்றனர்.

    தி.மு.க.வை வீழ்த்த கூட்டணியால்தான் முடியும். அந்தக் கூட்டணிக்கு நேசம்கரம் நீட்ட நான் தயார். கூட்டணியின் தலைமை குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்வோம். எனவே ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. ஆட்சியில் குடிநீர், சொத்து வரி, வீட்டு வரி போன்ற வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • ஜெயலலிதா தந்த மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது.

    பெரம்பூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மின் கட்டணம் உயர்வு, அனைத்து துறைகளிலும் முறைகேடு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் செயல்படும் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. நாளை காலை சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் தினகரன் கண்டன உரையாற்றுகிறார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.ஆட்சியில் குடிநீர், சொத்து வரி, வீட்டு வரி போன்ற வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா தந்த மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மக்கள் விரோத அரசை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வருவாய் மாவட்டங்களிலும் அ.ம.மு.க.கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    • 2024-ல் பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் என்பது எனது யூகம். இருந்தாலும் உறுதியாக கூற முடியாது.
    • கடந்த 1991-ம் ஆண்டு நடந்த தேர்தல் போல் அரசியலில் எது வேண்டுமானாலும நடக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு அவர்களது படத்திற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு கோர்ட் அனுமதி கொடுத்துள்ளது. கோர்ட் உத்தரவிட்டதால் நான் அதை பற்றி எதுவும் கூற முடியாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் இன்று அதன் பேரணிக்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை.

    2024-ல் பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் என்பது எனது யூகம். இருந்தாலும் உறுதியாக கூற முடியாது. கடந்த 1991-ம் ஆண்டு நடந்த தேர்தல் போல் அரசியலில் எது வேண்டுமானாலும நடக்கலாம்.

    அரசு டவுன் பஸ்சில் பெண்களின் இலவச பயணத்தை பற்றி அமைச்சர் ஒருவர் இழிவாக பேசியது தி.மு.க.வின் குணாதிசயத்தை காட்டுகிறது. தி.மு.க. என்னும் தீய சக்தியை வெல்ல அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். சாத்தூர் ராமசந்திரன் தலித் ஒருவரை நிற்க வைத்து பேசியது ஏன் என்று தெரியவில்லை.

    அ.ம.மு.க. கடந்த 5 ஆண்டுகளாக தனித்து சுதந்திரமாக செயல்படும் ஒரு இயக்கம்.

    ஓ.பன்னீர்செல்வம் கருத்தும் எனது கருத்தும் ஒன்றாக தான் உள்ளது. நான், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் நேரம் வரும் போது ஒன்றிணைவதில் தவறு இல்லையே? ஏன் எடப்பாடி பழனிசாமி கூட நேரம் வரும்போது எங்களிடம் இணையலாம்.

    சசிகலா சிறையில் இருக்கும் போது அப்போதைய அ.தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் அவரை பார்க்க சென்றோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி வரவில்லை. ஏன் என்று கேட்டதற்கு ஒரு லோக் ஆயுத்தா பிரச்சினை இருக்கிறது. நான் வந்தால் என்னை சிறையில் போட்டு விடுவார்கள் என கூறினார். அவர் வீட்டுக்கு போலீஸ் சென்றாலே பயந்து விடுவார். நீங்கள் தவறான ஆளை முதலமைச்சர் பதவியில் அமர வைத்துள்ளீர்கள் என சசிகலாவிடம் ஏற்கனவே நான் கூறினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை.
    • திராவிட மாடல் என கூறிக்கொண்டு வரிச்சுமையை ஏற்றி துன்பப்படுத்துகின்றது.

    கோவை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி கோவை அவினாசி ரோட்டில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் நடக்கும் கூத்தை பற்றி பதில் சொல்ல வேண்டியதில்லை. அது நீதிமன்றத்தில் போராடி கொண்டு இருக்கின்றது. தமிழக மக்கள் பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

    எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிகாத்த இயக்கம். ஒரு சிலரின் ஆணவத்தால், பதவி வெறியால், சுயநலத்தில் சிக்கி கொண்டிருக்கிறது. இதற்கு காலம் பதில் சொல்லும். அப்போது எல்லாம் சரியாகி விடும்.

    தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை. திராவிட மாடல் என கூறிக்கொண்டு வரிச்சுமையை ஏற்றி துன்பப்படுத்துகின்றது. இப்படி மக்களை துன்பப்படுத்துவது தான் திராவிட மாடல் என்பதை தி.மு.க அரசு நிரூபித்து வருகின்றது. இதற்கு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள்

    எந்த மொழியையும், எந்த மாநிலத்திலும் திணிக்க கூடாது. தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் விரும்பி ஏற்று கொள்ளாமல், திணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    கொரோனா பாதிப்பால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்டியை குறைக்க வேண்டும். கடந்த தி.மு.க ஆட்சியில் மின்வெட்டால் பாதிக்கப்பட்டனர். இந்த தி.மு.க ஆட்சியில் மின்கட்டண உயர்வால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது.

    மின்கட்டணம் மக்களால் ஏற்கும் அளவிற்கு இருக்க வேண்டும். வாட்டி வதைக்கும் வகையில் இருக்க கூடாது

    முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தி ஊழலை ஒழிப்போம். முறைகேடுகளை அனுமதிக்க மாட்டோம் என்ற வாக்குறுதிகளை மட்டும் செயல்படுத்தினால் போதாது.

    நீட் தேர்வு ரத்து, ஆயிரம் ரூபாய், சொத்து வரி குறைப்பு என பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. தி.மு.க.வினர் திருந்தவே மாட்டார்கள் என மக்கள் உணர்ந்து விட்டனர்.

    எடப்பாடி ஆட்சி மீது கோபம் அடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை போல இந்த ஆட்சியும் மாறும். அண்ணா, பெரியார், தமிழ், திராவிடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி தனது குடும்பத்தை வளர்த்து இருக்கின்றது. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பகுதி செயலாளர் புகழேந்தி, இணை செயலாளர் ராஜேஷ்குமார், துணை செயலாளர் பொன்தங்க மாரியப்பன், வட்ட செயலாளர் கர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுக்கூட்டத்திற்கு அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு தலைமை தாங்குகிறார்.
    • திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி வரவேற்று பேசுகிறார்.

    திருப்பூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த மேற்கு மண்டலம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோடு பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்திற்கு அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு தலைமை தாங்குகிறார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி வரவேற்று பேசுகிறார். மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவை, ஈரோடு, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் இன்று காலை முதலே திருப்பூருக்கு திரண்டு வந்தனர். மேலும் டி.டி.வி. தினகரனை வரவேற்று திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் வரவேற்பு டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    • கட்சி உடன் பிறப்புகள் தங்களால் இயன்ற நிதியினை கட்சி வளர்ச்சி நிதியாக அளிக்க வேண்டுகிறோம்.
    • தாங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் நம்முடைய லட்சியப் பயணத்தை தொய்வின்றி நடத்திட உதவிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    சென்னை:

    அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜெயலலிதாவின் மக்கள் நலக் கொள்கைகளை தொடர்ந்து நிலை நாட்டிட போராடி வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு நிலையிலுள்ள கட்சி நிர்வாகிகளும், ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களுக்கும் ஓர் வேண்டுகோள்.

    கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் அவரை நேரில் சந்திப்பவர்கள் இனி பொன்னாடைகள், பூங்கொத்துக்கள், பரிசுப் பொருட்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதை கண்டிப்பாக தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    அதற்கு பதிலாக கட்சி உடன் பிறப்புகள் தங்களால் இயன்ற நிதியினை கட்சி வளர்ச்சி நிதியாக கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் அளிக்க வேண்டுகிறோம்.

    தாங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் நம்முடைய லட்சியப் பயணத்தை தொய்வின்றி நடத்திட உதவிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் செயலைத் தடுத்திடும் வகையில் உரிய சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
    • தமிழகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

    பூந்தமல்லி:

    சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2650 செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 3 ஆயிரம் பேர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருமண மண்டபத்திற்கு உள்ளேயும், சிறப்பு அழைப்பாளர்கள் மண்டபத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக அரங்கிலும் அமர்வதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது.

    இக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். டிடிவி தினகரன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வீட்டிலிருந்து புறப்பட்டு அடையாறு, கிண்டி, பட்ரோடு, நந்தம்பாக்கம், ராமாபுரம், போரூர், 200 அடி ரோடு, வானகரம் வழியாக 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வந்தார். வரும் வழியில் மேளதாளம் முழங்க டிடிவி தினகரனுக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஜெயலலிதாவின் மக்கள் நலக்கொள்கைகளைப் பாதுகாக்கப் போராடும் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வீரத்தலைமையின் கீழ் உண்மைத் தொண்டர்களாக என்றும் பயணிப்பது.

    ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறச்செய்ததோடு, கழகத்தை அனைத்து நிலைகளிலும் கட்டியெழுப்பி, எதிர்வரும் களத்திற்கு ஆயத்தமாக்கி வரும் டி.டி.வி. தினகரனுக்கு இப்பொதுக்குழு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

    ஆடு, மாடு வழங்கும் திட்டம் மற்றும் மக்கள் வாகனத்திட்டம், தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பெட்டகம் திட்டம், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டம், அம்மா குடிநீர் திட்டம், அம்மா சிமெண்ட் திட்டம் மற்றும் அம்மாவின் பெயரில் இயங்கிய மினி கிளினிக் ஆகியவற்றை முடக்கி வைத்திருக்கும் தி.மு.க. அரசுக்கு இப்பொதுக்குழு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

    காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் செயலைத் தடுத்திடும் வகையில் உரிய சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க தமிழக அரசை வலியுறுத்துகிறோம். தமிழகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

    பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். மாநில அரசு அமைத்துள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிடவும், மத்திய அரசின் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுவித்து முன்னுதாரணத்தைக் கொண்டு உரிய சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, சிறையில் உள்ள எஞ்சிய 6 தமிழர்களின் விடுதலையையும் மேற்கொள்ள வேண்டும்.

    மக்களிடமிருந்து வரியைப் பல வகையில் பறிப்பதே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தி.மு.க. அரசு 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி உள்ளதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

    இல்லத்தலைவிகளுக்கான உரிமைத் தொகையான ரூ.1000 மற்றும் கேஸ் சிலிண்டருக்கான ரூ.100 மானியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு உடனடியாக நிறைவேற்றட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

    விடியல் ஆட்சி என்று சொல்லிக் கொண்டு யாருக்கும் விடியலைத் தராத அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

    தி.மு.க. ஆட்சியின் இந்த அவலங்களை எல்லாம் மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டும் வகையில் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக நடத்த வேண்டும்.

    ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் அனைத்து பலத்தோடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கியபோதும், தேர்தல் களத்தில் நின்று கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், கடுமையாக போட்டியிட்டவர்களுக்கும், உழைத்திட்ட கழகத்தினர் அனைவருக்கும் இப்பொதுக்குழு தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது.

    மேலும், 2024-ல் நடைபெற இருக்கிற பாராளுமன்றத் தேர்தலுக்கு கழகம் அனைத்து வகையிலும் ஆயத்தமாகி வரும் நிலையில், கழகப் பணிகளை எல்லா நிலைகளிலும் மேலும் தீவிரப்படுத்திட கழகப் பொதுச்செயலாளரின் வழிகாட்டுதலின்படி செயல்பட இப்பொதுக்குழு உறுதி ஏற்கிறது.

    கழகப் பொறுப்புகளுக்கு பொதுச்செயலாளர் அவர்களால் செய்யப்பட்ட நியமனங்களையும் இப்பொதுக்குழு அங்கீகரிக்கிறது. கழக சட்ட விதி எண்கள் 24, 25 மற்றும் 26 ஆகியவற்றின் படி நான்கு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட கழக பொதுச்செயலாளர், தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பொறுப்புகளுக்கான பதவிக்காலம் வருகிற 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு நிறைவடைகிறது. இப்பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் போது, துணைத்தலைவர் அவர்களால் தற்போது கூடுதலாக சேர்த்து கவனிக்கப்பட்டு வரும் தலைவர் பதவிக்கான தேர்தலையும் நடத்துவது என இப்பொதுக்குழு ஏக மனதாக தீர்மானிக்கிறது.

    • அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாக டி.டி.வி. தினகரன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை மறுநாள் (15-ந்தேதி) நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்துக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அ.ம.மு.க.வினர் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    பொதுக்குழுவில் பங்கேற்கும் டி.டி.வி.தினகரனுக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாக டி.டி.வி. தினகரன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.

    இதனால் இது தொடர்பாக தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் தற்போது நிலவும் பிரச்சினையை மையமாக வைத்து முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் எப்போதும் இல்லாத வகையில் அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • எடப்பாடி பழனிசாமியிடம் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் கிடையாது.
    • 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்தபோது அமைச்சர்கள் அனைவரும் சசிகலாவிடம் தான் விசுவாசம் காட்டினார்கள்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. கட்சியில் நடக்கும் சண்டையில் நான் இல்லை. நான் தனிக்கட்சி தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. அ.ம.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது. நாங்கள் நடத்தும் போராட்டத்தில் வெற்றிபெறுவோம். அ.தி.மு.க.வை திரும்பப்பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    அ.தி.மு.க.வையும், அ.ம.மு.க.வையும் இணைப்பதற்கு டெல்லியில் சில நலம் விரும்பிகள் முயற்சி மேற்கொண்டது உண்மை தான். தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்துக்கு நான் சம்மதித்தேன்.

    எடப்பாடி பழனிசாமியிடம் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் கிடையாது. ஆனால் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் முதல்-அமைச்சர் வேட்பாளராக அவரை களம் இறக்கக்கூடாது என்று தெரிவித்தேன். அவரை முன்னிலைபடுத்தினால் அ.தி.மு.க. வெற்றி பெறாது என்றேன்.

    ஆனால் எங்களது முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. அதனால் டெல்லி மேலிடமும், எடப்பாடி பழனிசாமியை கை கழுவி விட்டனர்.

    கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமி சீனியராக இருந்ததால் அவரை முதல்-மந்திரி பதவிக்கு சசிகலா தேர்வு செய்தார். ஆனால் அவர் கட்சி தொண்டர்களுக்கும், சசிகலாவுக்கும் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார்.

    எடப்பாடி பழனிசாமியை எந்தவிதத்திலும் நம்ப முடியாது. சசிகலா பெங்களூரு சிறையில் இருந்தபோது அவர் தமிழகத்துக்கு வந்து செல்ல அனுமதி கொடுக்க மறுத்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்று கூறினார். அந்த அளவுக்கு அவர் கொடூரராக நடந்து கொண்டார்.

    அரசியலுக்காக அவர் எதையும் செய்வார். ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டு எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்த்தது மிகப்பெரிய தவறாகும். அதை அவர் இப்போதுதான் உணருகிறார்.

    எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் நாங்கள் இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் எடப்பாடி பழனிசாமியை நம்ப இயலாது. எனவே எந்த காலத்திலும் அவருடன் சேரும் எண்ணம் இல்லை.

    நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா டான்சி வழக்கில் சிறை சென்றபோதே மிக எளிதாக முதல்-மந்திரி ஆகி இருக்க முடியும். ஆனால் எனது இயல்பு அப்படிப்பட்டது அல்ல. ஆனால் நாங்கள் ஓ.பன்னீர்செல்வத்தை பரிந்துரை செய்து முதல்-மந்திரி ஆக்கினோம்.

    நான் போராட்ட குணம் கொண்டவன். போராடி மக்கள் ஆதரவுடன் நிச்சயமாக ஆட்சியை பிடிக்க முடியும்.

    2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்தபோது அமைச்சர்கள் அனைவரும் சசிகலாவிடம் தான் விசுவாசம் காட்டினார்கள். அதனால்தான் ஓ.பன்னீர்செல்வத்தை பதவி விலக சொன்னார்கள். ஆனால் அவர் தர்மயுத்தம் செய்தார். பிறகு மோடி பேச்சை கேட்டு எடப்பாடி பழனிசாமியிடம் போய் சேர்ந்தார்.

    தற்போது ஓ.பன்னீர்செல்வம் என்னுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் உண்மை இல்லை. அவர் என்னிடம் எப்போதும் தொடர்பு கொண்டதே கிடையாது. அவர் எனது நண்பர். 10 ஆண்டுகள் நாங்கள் இணைந்து அரசியல் பணிகள் செய்துள்ளோம்.

    பிரச்சினை ஏற்பட்ட சமயத்தில் ஒரு வாரம் மட்டும் அவர் அமைதியாக இருந்திருந்தால் இப்போது நடக்கும் அரசியல் நாடகம் எல்லாம் நடந்திருக்காது.

    சசிகலாவுக்காக நாங்கள் தலைவர் பதவியை தயாராக வைத்துள்ளோம். கோர்ட்டில் அவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் உரிமையை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்தால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை ஏற்பார்.

    அதன்பிறகு மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். நாங்கள்தான் அம்மாவின் உண்மையான விசுவாசிகள் என்பதை நிரூபித்து காட்டுவோம். அதன்பிறகு ஒவ்வொருவராக நிச்சயம் எங்கள் பக்கம் வருவார்கள்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் கூட்டணி மாற்றம் இருக்கும் என்று நினைக்கிறேன். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலக வாய்ப்பு உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர்களின் சமீபத்திய பேச்சுகள் இதை பிரதிபலிப்பதாக உள்ளன.

    அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருக்கிறார். மேற்கு வங்காளத்தில் நடந்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கலாம். எனவே தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

    அ.தி.மு.க. தொண்டர்கள் என்னை விரும்புகிறார்கள். மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை நோக்கித்தான் நான் உழைத்து கொண்டிருக்கிறேன்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பா.ஜனதாவுக்கு மிக மிக முக்கியமானது. பா.ஜனதா உரிய மரியாதை கொடுத்தால் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்வேன். இல்லையென்றால் தனியாக போட்டியிடுவோம்.

    இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

    ×