search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175142"

    • மாரியப்பன் தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார்.
    • திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. இதில் ஓடையில் விழுந்த அவர் முச்சுத்திணறி இறந்து விட்டார்.

    கடலூர்:

    சிதம்பரத்தை அடுத்த அகரநல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 68). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார். நிலத்தை சுற்றிப்பார்த்து விட்டு அருகில் இருந்த ஓடையில் கை, கால் கழுவச் சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. இதில் ஓடையில் விழுந்த அவர் முச்சுத்திணறி இறந்து விட்டார்.

    இது குறித்து அவரது மகன் சுப்பரமணியன் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • மக்காச்சோளம், ஏக்கருக்கு 45 மூட்டை வரை மகசூல் இருக்கும்.

    குடிமங்கலம் :

    உடுமலை பகுதிகளில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன நிலங்கள், அமராவதி பாசன நிலங்கள் மற்றும் மானாவாரி நிலங்களில் ஏறத்தாழ, 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை வழக்கமாக டிசம்பர் தொடங்கி மார்ச் வரை நீடிக்கும்.நடப்பாண்டும் பயிர் வளர்ச்சி மற்றும் கதிர் பிடிக்கும் பருவத்தில் பெய்த கன மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதோடு படைப்புழு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள் பாதித்துள்ளனர்.

    தற்போது மழை குறைந்துள்ளதால் உடுமலை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் அறுவடை துவங்கியுள்ளது. வழக்கமாக மக்காச்சோளம், ஏக்கருக்கு 45 மூட்டை வரை மகசூல் இருக்கும்.படைப்புழு தாக்குதல், கன மழை காரணமாக தற்போது 25 குவிண்டால் மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது. மகசூல் குறைந்துள்ள நிலையில் கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் குவிண்டால், 2,400 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது :- கடந்த ஆண்டு மக்காச்சோளம் குவிண்டால் 2,800 ரூபாய் வரை விற்றதால் நடப்பாண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.இதனால் சாகுபடி பரப்பு அதிகரித்தது.படைப்புழு தாக்குதல், கன மழை, இடு பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், சாகுபடி செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது.ஆனால் கொள்முதல் விலை கடந்த ஆண்டை விட தற்போது குறைந்துள்ளது. இதனால் மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகள் பாதித்துள்ளனர்.

    எனவே குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயித்து அரசு கொள்முதல் செய்யவும், வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக விலை குறைப்பை தவிர்க்கும் வகையில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் ஏல வசதி செய்து தர வேண்டும்.வேளாண் வணிகத்துறை வாயிலாக கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி கூடுதல் விலைக்கு உள்ளூர் மக்காச்சோளம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • தோட்டத்து கிணற்றின் அருகே திடீரென தவறி கிணற்றின் உள்ளே விழுந்து விட்டார்.
    • தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி கிணற்றில் உள்ளே இறங்கி இறந்து கிடந்த தங்கராஜை மேலே கொண்டு வந்தனர்.

    பல்லடம்  :

    பல்லடம் அருகே உள்ள கொடுவாய், தொட்டிபாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் தங்கராஜ் (வயது 55). விவசாயி. இவர் நேற்று தனது தோட்டத்து கிணற்றின் அருகே அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென தவறி கிணற்றின் உள்ளே விழுந்து விட்டார்.

    அந்த பகுதியில் வந்தவர்கள் இதனை பார்த்து உடனடியாக அவினாசிபாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி கிணற்றில் உள்ளே இறங்கி இறந்து கிடந்த தங்கராஜை மேலே கொண்டு வந்தனர். பின்னர் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    • லூா்தபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
    • விபத்து குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

    திருப்பூர் : 

    திருப்பூர் அடுத்த அவினாசி சேவூா் அருகே மங்கரசுவலையபாளையம், லூா்துபுரத்தை சோ்ந்தவா் முருகேசன் மகன் கனகராஜ் (38), விவசாயி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் அதே பகுதியைச் சோ்ந்த வேலுச்சாமி (50) என்பவரை பின்னால் அமர வைத்துக் கொண்டு புளியம்பட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். லூா்தபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் அவிநாசி அரசு மருத்துவமனை அனுப்பிவை க்கப்பட்டனா். அங்கு வேலுச்சாமி உயிரிழந்தாா்.

    மேல் சிகிச்சை க்காக கனகராஜ் திருப்பூா் அரசு மருத்துவமனை அனுப்பிவை க்கப்பட்டாா். விபத்து குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

    • கடந்த ஆண்டு தோட்டத்தில் சேனைக்கிழங்கு பயிரிடத் தொடங்கினார்.
    • சேனைக்கிழங்கு பொதுவாக பத்து மாத பயிர்.

    திருவட்டார் :

    குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள வேர்கிளம்பி கல்லங்குழி பகுதியை சேர்ந்தவர் வில்சன்(வயது72). இவர் திருவட்டார் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தனது தோட்டத்தில் சேனைக்கிழங்கு, கூவைக்கிழங்கு, சேம்பு, வாழை, தென்னை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்.

    கடந்த ஆண்டு தோட்டத்தில் சேனைக்கிழங்கு பயிரிடத் தொடங்கினார். அதன்படி அந்த ஆளுயர இலை பரப்பி வளர்ந்த சேனைக்கிழங்கு செடிகள் அறுவடைக்கு தயாரான நிலையில் காணப்பட்டது. அந்த செடிகளில் இருந்து அறுவடை செய்தபோது நான்கு சேனைக்கிழங்குகள் பிரமாண்டமான அளவில் இருப்பதை கண்டு பூரிப்படைந்தார். அவற்றை எடை போட்டபோது 61.700 கிலோ, 55.900 கிலோ, 37 கிலோ, 29 கிலோ எடை கொண்டவைகளாக இருந்தது. அதிகபட்ச எடை கொண்டது 61.700 கிலோ ஆகும்.

    இதுகுறித்து வில்சன் கூறுகையில், "நான் அரசு வேலையில் இருக்கும்போதே விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பேன். என்னுடைய வீட்டைச்சுற்றி தென்னை, வாழை, நல்லமிளகு, இஞ்சி, கூவைக்கிழங்கு, சீனிக்கிழங்கு ஆகியவை பயிரிட்டுள்ளேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு வேலையில் இருந்து ஓய்வு பெற்று முழுநேர விவசாயி ஆகிவிட்டேன். இயற்கை விவசாயத்தில் எனக்கு முழுமையான நம்பிக்கை உண்டு. பொதுவாக சேனைக்கிழங்கு 5 முதல் 10, 12 கிலோ எடை கொண்டவையாக இருக்கும்.

    கடந்த ஆண்டு இந்திய சாதனைப்புத்தகத்தில் கேரளாவை சேர்ந்த ஒருவர் 56.100 கிலோ எடை கொண்ட சேனையை அறுவடை செய்த தகவல் வெளியானது. அதை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த ஆண்டு நான் சேனைக்கிழங்கு பயிரிட்டேன்.

    சேனைக்கிழங்கு பொதுவாக பத்து மாத பயிர். பங்குனி மாதம் பயிர் செய்து கார்த்திகையில் அறுவடை செய்வார்கள். நான் சேனை மற்றும் என்னுடைய தோட்டப்பயிர்களுக்கு இலை தழை, மாட்டுச்சாணி, ஆட்டுப்புழுக்கை, கோழிக்காரம் ஆகிய இயற்கையான உரங்களை மட்டுமே வைப்பேன். தண்ணீர் தவறாமல் பாய்ச்சுவேன். மேலும், அருகில் குளம் இருப்பதால் எப்போதும் ஈரப்பதமாகவே எனது தோட்டம் இருக்கும். இப்போது 61.700 எடையில் சேனைக்கிழங்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும் ஆண்டில் 75 கிலோ எடை கொண்ட சேனையை விளைவிப்பேன்" என்றார்.

    இந்த பிரமாண்ட எடை கொண்ட சேனைக்கிழங்குகளை அப்பகுதியில் உள்ள மக்கள் அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர்.

    • 6 கிராம ஊராட்சி பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பலர் எதிர்ப்பு.
    • 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.

    அன்னூர்:

    கோவை மேட்டுப்பாளையம், அன்னூர் ஒன்றியங்களில் உள்ள 6 கிராமங்களில் சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்து, 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிட்டிருந்தது.

    இதற்கு 6 கிராம ஊராட்சி பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிப்காட் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன பேரணி, நடைபயணம், கடையடைப்பு உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களையும் அவர்கள் நடத்தினர். மேலும் போராட்டக்குழு சார்பில் அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விவசாய நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன வசதி அதிகம் உள்ள இடங்களை தேர்வு செய்து தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிரசார நடைபயணம் நடத்த முடிவு செய்யப்பட்து.

    அதன்படி இன்று காலை அக்கரை செங்கப்பள்ளியில் இருந்து விவசாயிகள் தங்கள் நடைபயணத்தை தொடங்கினர். அக்கரை செங்கப்பள்ளியில் தொடங்கிய விவசாயிகள் நடை பயணம் கரியானூர், சோளவாம்பாளையம், ஆலங்குட்டை, குழியூர் வழியாக வடக்கலூரில் முடிவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். நடைபயணத்தின் போது கிராம மக்களிடம் இதுகுறித்து விரிவாக எடுத்து கூறினர்.

    நடைபயணத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறும்போது, விவசாய நிலங்களை எடுக்கமாட்டோம் என்ற அரசின் அறிவிப்பில் தெளிவு இல்லை. எனவே விளைநிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாய நிலங்களை பாதுக்காக வேண்டும்.

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் ஒருங்கிணைப்புக்குழுவை ஏற்படுத்த வேண்டும்.அனைத்து விவசாய சங்கத்தினரை அழைத்து அரசு பேச வேண்டும் என தெரிவித்தனர். இதற்கிடையே விவசாயிகள் நடைபயணம் பற்றி அறிந்ததும் தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் வங்கியில் விவசாயி வாங்கிய ரூ.1½ லட்சம் கடன் பணம் திருடு போனது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள குன்னூர் புதூர் ரோட்டை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 62). விவசாயியான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு வங்கியில் வேளாண் கடன் கிடைத்தது. இந்த பணத்தை எடுப்பதற்காக கருப்பசாமி நேற்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றார்.

    வங்கி கொடுத்த கடன் பணத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். பணத்தை மோட்டார் சைக்கிள் லாக்கரில் வைத்திருந்தார். மார்க்கெட் அருகே சென்ற போது கருப்பசாமி அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒரு நகைக்கடைக்கு சென்றார்.

    அங்கு அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் லாக்கரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், பான் கார்டு, வங்கி புத்தகம் மற்றும் ஆவணங்கள் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கருப்பசாமி கொடுத்தபுகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    கருப்பசாமி நகைக்கடையில் இருந்தபோது மர்மநபர் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    • பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டியை சேர்ந்தவர் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி வந்து காரில் அமர்ந்து குடித்துள்ளார். காரில் இருந்து வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ள கடைக்காரர்கள் சென்று பார்த்தபோது, உதயகுமார் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டியை சேர்ந்தவர் உதயகுமார் ( வயது 50) விவசாயி. இவர் மனைவியை விட்டு பிரிந்து, தனது தாய் கருப்பாயி வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு குழந்தைகள் இல்லை.

    உதயகுமார் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தனது காரில் பரமத்தி வந்த உதயகுமார், டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி வந்து காரில் அமர்ந்து குடித்துள்ளார். காரில் இருந்து வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ள கடைக்காரர்கள் சென்று பார்த்தபோது, உதயகுமார் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

    இதுகுறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், இறந்து கிடந்த உதயகுமாரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், உதயகுமார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்தசம்பவம் குறித்து பரமத்தி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறுவடைக்கு தயாராக உள்ள இளநீர், தேங்காய்கள், குரும்பைகளை குரங்குகள் கடித்தும் பறித்தும் சேதப்படுத்துகின்றன.
    • குரங்குகளிடம் இருந்து தேங்காய்களை பாதுகாப்பது தென்னை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் சுமார் 1,600 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. தென்னை வளர்க்கும் விவசாயிகள் சிலர் பருவமழையை நம்பி மானாவாரியாகவும், மற்ற விவசாயிகள் கிணற்று பாசனத்திலும் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர்.

    இங்கு மலைபகுதிகளும், வனப்பகுதிகளும் அதிகம் உள்ளதால் குரங்குகள் ஏராளமாக இருக்கிறது. அவை உணவு தேடி கிராம பகுதிகளுக்குள் வந்து விடுகிறது. அங்குள்ள வயல் மற்றும் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பழங்கள், தேங்காய் உள்ளிட்டவைகளை சேதப்படுத்துகிறது.

    பிரான்மலை வனப்பகுதியில் ஏராளமான குரங்குகள் மற்றும் அணில்கள் இந்த தென்னை மரத்தை தேடி வந்து தென்னை மரத்தில் ஏறி அறுவடைக்கு தயாராக உள்ள இளநீர், தேங்காய்கள், குரும்பைகளை கடித்தும் பறித்தும் சேதப்படுத்தி, அதில் உள்ள தண்ணீரை குடித்தும் விடுகிறது.

    இதனால் தென்னை விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், அவைகளிடம்இருந்து தேங்காய்களை பாதுகாப்பது தென்னை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

    இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் முதலில் ஒரு சில மரங்களில் முள்வேலி அமைத்து பார்த்தனர். அதை குரங்குகள் லாவகமாக அகற்றிவிட்டு மேலே ஏறி சென்று தேங்காய்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் தற்போது வித்தியாசமாக புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர்.

    பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, பாம்பு நெளிவது போன்ற ஓவியத்தை தனித்தனியாக ஒவ்வொரு தென்னை மரத்திலும் பெயிண்டு மூலம் வரைந்துள்ளனர். இந்த ஓவியத்தை காணும் குரங்குகள் மற்றும் அணில்கள் தென்னை மரத்தில் நிஜபாம்புதான் இருக்கிறது என நினைத்து பயந்துபோய் மரத்தில் ஏறாமல் அங்கிருந்து சென்று விடுவதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி ஒடுவன்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வீரனன் கூறியதாவது:-

    இந்த பகுதியில் குரங்குகள் அதிகமான அளவில் தொந்தரவு செய்து தேங்காய் விளைச்சலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குரங்குகள் தென்னை மரத்தின் மீது ஏறி குறும்பைகள், இளநீர் காய்கள் மற்றும் பூக்களை சேதப்படுத்துவதால் தென்னை மரத்தில் அதிக விளைச்சல் காண முடியவில்லை.

    குரங்குகளுக்கு பாம்பு என்றால் பயம் என்று பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன். அதை மனதில் வைத்து எனக்கு சொந்தமான இடத்தில் உள்ள தென்னை மரங்களில் பாம்பு படம் வரைந்துள்ளேன். தென்னை மரங்களில் பாம்பு படம் வரைந்ததால் இந்த படத்தை பார்த்த குரங்குகள் நிஜ பாம்பு என்று பயந்து மரத்தில் ஏறுவதில்லை. இதனால் எனக்கு தென்னை விவசாயத்தில் சரியான மகசூல் கிடைத்து வருகிறது.

    இளநீர் மற்றும் தேங்காய்களை பறித்து குரங்குகள் அட்டகாசம் செய்தால் பாம்பு ஓவியத்தை தென்னை மரத்தில் விவசாயிகள் அனைவரும் வரைந்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கைரேகை நிபுணர்களை கொண்டு லோகநாதன் வீட்டில் கைரேகை பதிவாகியுள்ளதா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர்.
    • எழுத்துப்பூர்வமாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க முன்வராமல் இருந்ததால் போலீசருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சார்வாய் புதூர் சாமியார் கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது45) விவசாயி. இவர் கடந்த 7-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றதாகவும் அப்போது வீட்டின் பின்புறம் கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையர்கள் பீரோவில் வைத்திருந்த ஒரு கோடி ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாகவும் தலைவாசல் போலீஸ் நிலையத்தில் தெரிவித்தார்.

    ஆத்தூர் மணிவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கணேசன், அவரது மகன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேக்குகளில் 2 கோடி பணத்தை லோகநாதன் வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

    இந்த பணத்தை பத்திரமாக வைக்குமாறு கூறினார்கள். இந்த நிலையில் ரூ.1 கோடி இருந்த பேக்கை முகமூடி கொள்ளையர்கள் எடுத்து சென்றுவிட்டதாகவும் பணத்தை கொள்ளையார்கள் தனது வீட்டின் அருகில் உள்ள கரும்பு தோட்டம் வழியாக தப்பி சென்றதாக லோகநாதன் போலீசாரிடம் கூறினார்.

    இதையடுத்து லோகநாதன் கூறியபடி கரும்பு தோட்டத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு டிராவல்ஸ் பேக் ஒன்று கிடந்தது. அதனை எடுத்து பார்த்தபோது அதில் கட்டுகட்டாக ரூ.1 கோடி பணம் இருந்தது.

    உடனே போலீசார் அதனை கைப்பற்றினார். கணேசன் வீட்டில் கொள்ளை போன பணம் என்பதையும் உறுதி செய்தனர். ஒரு கோடி ரூபாய் கொள்ளை போனதாக கூறியதால் கைரேகை நிபுணர்களை கொண்டு லோகநாதன் வீட்டில் கைரேகை பதிவாகியுள்ளதா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் சந்தேகத்துக்கு இடமாக எந்த தடயங்களும் சிக்கவில்லை. கொள்ளை நடைபெற்றதற்கான சாத்திய கூறுகள் இல்லாததால் லோகநாதன் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

    மேலும் அவர் எழுத்துப்பூர்வமாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க முன்வராமல் இருந்ததால் போலீசருக்கு அவர் மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டது.

    போலீசார் அவரிடம் கிடிக்கு பிடி விசாரணை நடத்தினார். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    ரியல் எஸ்டேட் அதிபரான கணேசன் கொடுத்து வைத்த பணத்தை அபகரிக்கும் நோக்கத்தில் லோகநாதன் கரும்பு தோட்டத்திற்குள் மறைத்து வைத்துவிட்டு முகமூடி கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது.

    போலீசாரின் கவனத்தை திசை திருப்பி கணேசன் பணத்தை அபகரிக்கும் நோக்கத்தில் இந்த சம்பவத்தை லோகநாதன் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து லோகநாதன் போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தலைவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி சந்திரசேகரன் உத்தரவு பிறப்பித்தார்.
    • செம்புலிங்கம் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீது காவல்துறை பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையில் கடந்த 24-ந்தேதி நடந்த தடியடி வழக்கில் அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மாமனார் செம்புலிங்கம் (வயது 54) என்பவரிடம் விக்கிரமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் கடுமையான காயம் ஏற்பட்ட செம்புலிங்கம் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், அதன் பின்னர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

    அதைத்தொடர்ந்து காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து குடும்பத்தார் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் செம்புலிங்கத்தின் குடும்பத்தார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தஞ்சை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவர்களை கொண்ட சிறப்பு குழுவை நியமித்து அரியலூர் விவசாயி செம்புலிங்கம் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், இன்று மதிய 12 மணிக்குள் பிரேத பரிசோதனை முடித்து உடலை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மனுதரார் தரப்பில் மருத்துவர் அல்லாத ஒரு பிரதிநிதியை பிரேத பரிசோதனையின் போது அனுமதிக்க வேண்டும் எனவும், பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதி சந்திரசேகரன் உத்தரவு பிறப்பித்தார். மேலும் செம்புலிங்கம் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீது காவல்துறை பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி இன்று காலை 10.05 மணிக்கு செம்புலிங்கம் உடல் பிரேத பரிசோதனை தொடங்கியது. கார்த்திகேயன் உள்ளிட்ட மேற்கண்ட மருத்துவக் கல்லூரிகளின் டாக்டர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் உடன் இருந்தனர். 11.45 மணியளவில் பிரேத பரிசோதனை முடிவடைந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை மகன் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர்.

    முன்னதாக பிரேத பரிசோதனை நடந்ததையொட்டி, திருச்சி மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் உமாநாத், வன்னியர் சங்க துணைத் தலைவர் கதிர்ராஜா, தொழிற்சங்க பிரதிநிதி பிரபாகர், பாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறவினர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் செம்புலிங்கத்தின் உடலுக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் அரியலூர் கொண்டு செல்லப்பட்டது.

    மரணம் அடைந்த விவசாயி செம்புலிங்கத்தின் சொந்த ஊரான காசாங்கோட்டையில் பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கும், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    • மிளகாய், பருத்தி, உளுந்து பயிர்களுக்கு இந்த மழை போதுமானதாக உள்ளது என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் நெல், மிளகாய், உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு தற்போது களை எடுப்பு, பூச்சிமருந்து தெளிக்கும் பணி, உரமிடுதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. சில நாட்களாக போதிய மழை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் மாண்டஸ் புயலால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும். பரவலாக மழை பெய்தது. அபிராமம் பகுதியிலும், ஒரளவுக்கு மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அபிராமம் விவசாயிகள் கூறுகையில், அபிராமம், அதை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த ஆண்டு பருவமழை இல்லாததால், மிகவும் சிரமப்பட்ட நிலையில் நெல், பருத்தி, மிளகாய், உளுந்து பயிர்கள் கருகும் நிலைக்கு வந்துவிட்டது.

    இந்த நிலையில் மாண்டஸ் புயலால் அபிராமம் பகுதி யில் ஒரளவுக்கு பெய்த மழையால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டாலும் மிளகாய், பருத்தி, உளுந்து பயிர்களுக்கு இந்த மழை போதுமானதாக உள்ளது. இந்த மழையால் பண்ணையில் உள்ள மிளகாய் நாற்றுகளை வயலில் நடுவதற்கும் மிளகாய் கன்றுகள் நன்றாக வளருவதற்கும் இந்த மழை போதுமானதாக உள்ளது என்றனர்.

    ×