search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரணம்"

    • டாக்டர்கள் நிஷாந்தினிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.
    • மாவட்ட சுகாதாரதுறை அதிகாரிகளும், கர்ப்பிணி பெண் இறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிர்த்திவர்மன். பூ வியாபாரி. இவரது மனைவி நிஷாந்தினி (வயது 22). இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் 2-வது பிரசவத்திற்காக மனைவி நிஷாந்தினியை நேற்று காலை வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அங்கிருந்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள், அரை மணி நேரத்தில் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.

    இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் நிஷாந்தினிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. பிரசவ வழியில் துடித்த நிசாந்தினி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    முறையான சிகிச்சை அளிக்காததாலும், கால தாமதம் செய்ததாலும் தான் நிஷாந்தினி உயிரிழந்துள்ளார் எனக் கூறி உறவினர்கள் மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மாவட்ட சுகாதாரதுறை அதிகாரிகளும், கர்ப்பிணி பெண் இறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், நிஷாந்தினி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பணியில் இருந்த டாக்டர்களிடம் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது. 

    • 4 முறை தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
    • உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் கல்லுக்குளம் பகுதியை சேர்ந்தவர் உபயதுல்லா (வயது 83). தி.மு.க மூத்த தலைவர்.

    இவர் 4 முறை தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார். இதில் கடந்த 2006-2011 காலகட்டத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஆட்சியின் போது வணிகவரித்துறை அமைச்சராக இருந்தார். தற்போது தி.மு.க மாநில வர்த்தக அணி தலைவராக பதவி வகித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று தஞ்சையில் உள்ள ஒரு மண்டபத்தில் உபயதுல்லாவின் பேரனுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தை இவர் தலைமை தாங்கி நடத்த இருந்தார். இதற்காக இன்று காலை புறப்பட்டு கொண்டிருந்தார்.

    அப்போது இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.

    இதையடுத்து தஞ்சையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட உள்ளது. ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் உபயதுல்லா உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.

    மறைந்த உபயதுல்லாவின் மனைவி மற்றும் மகன் ஏற்கனவே இறந்து விட்டனர். தற்போது ஒரு மகள் மட்டும் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரறிஞர் அண்ணா விருதை உபயதுல்லாவுக்கு , முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். மேலும் உபயதுல்லா தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். குறள் நெறி செல்வராக அழைக்கப்பட்டார். அவரது மரணம் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • புதிதாக பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சிக்காக சென்னைக்கு சென்றிருந்தார்.
    • தங்கி இருந்த இடத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    நாமக்கல்:

    சேலம் ஏற்காடு மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு டேன்மேக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்தவர் கதிரவன். சேலம் டேன்மேக் நிறுவனத்தின் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்தது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சேலம் டேன்மேக் நிறுவனத்தில் மேலாண் இயக்குனர் பதவிலிருந்து வேறொரு துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.

    இன்று காலை தனது புதிதாக பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சிக்காக சென்னைக்கு சென்றிருந்தார். சென்னையில் தங்கி இருந்த இடத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். கதிரவனின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காந்திபுரம் ஆகும்.

    இது குறித்து தகவல் அறிந்து அவரது உறவினர்கள் சென்னை சென்றனர்.

    முதுகலை வேளாண்மை பட்டதாரியான இவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2002-ம் ஆண்டு பயிற்சி துணை கலெக்டராக தர்மபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார்.

    2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற இவர் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றினார். சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் பணியாற்றி உள்ளார். பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார். 2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற இவர் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றினார்.

    சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் பணியாற்றி உள்ளார். 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற இவர் வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக பணியாற்றினார். பின்னர் மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கலெக்டராக பதவி ஏற்றார். பின்னர் ஈரோடு மாவட்டத்தின் 33-வது கலெக்டராக கடந்த 2018--ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    • தாளவாடி வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தேக்கு மர டிப்போ பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • வனத்துறையினர் விசாரணையில் இறந்து போன முதியவர் தாளவாடி அருகே உள்ள பாலப்படுகை கிராமத்தை சேர்ந்த மாதேவன்.

    சத்தியமங்கலம்,

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தாளவாடி வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    இந்நிலையில் வன விலங்குகள் அடிக்கடி உணவுக்காகவும், தண்ணீர்காகவும் வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. சில சமயம் காவலில் இருப்பவர்களை தாக்கும் சம்பவம் தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்த நிலையில் தாளவாடி வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தேக்கு மர டிப்போ பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யானை தாக்கி முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிடந்தார்.

    உடனடியாக வனத்துறையினர் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த போது முதியவர் பரிதாபமாக இறந்தார்.

    வனத்துறையினர் விசாரணையில் இறந்து போன முதியவர் தாளவாடி அருகே உள்ள பாலப்படுகை கிராமத்தை சேர்ந்த மாதேவன் (66) கோவில் பூசாரி என்பதும், இவர் விறகு எடுக்க சென்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர். விறகு எடுக்க சென்ற இடத்தில் யானை மிதித்து இறந்தது தெரிய வந்தது.

    இது குறித்து தாளவாடி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த மாதவன் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

    • வீட்டின் மைய பகுதியில் உள்ள சுவரை இடிக்கும் போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து விழுந்தது.
    • சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சுங்குவார்சத்திரம்:

    சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 48). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான வீட்டை இடித்து மறுசீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தார். அப்போது வீட்டின் மைய பகுதியில் உள்ள சுவரை இடிக்கும் போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து விழுந்தது.

    இதில் இடிபாடுகளில் சேகர் சிக்கினார். உடன் இருந்த சக தொழிலாளர்கள் சேகரை மீட்டு ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பூட்டிய வீட்டுக்குள் 2 பேர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குமலன் வீதியில் ஒரு வீட்டில் மோகனசுந்தரம் (74) அவரது மாமியார் கனகாம்பாள் (80) ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த 3 நாட்களாக இவர்களது நடமாட்டம் இல்லாமல் இருந்தது. மேலும் அவர்கள் வீடும் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அவர்கள் 2 பேரும் எங்கேயாவது ஊருக்கு சென்று இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டனர்.

    இந்நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அருகில் வசிக்கும் பொதுமக்கள் கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பார்த்த போது மோகன சுந்தரம் மற்றும் கனகாம்பாள் ஆகியோர் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வயதானவர்கள் என்பதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய வீட்டுக்குள் 2 பேர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குமார் புரோட்டாவை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது திடீரென புரோட்டா தொண்டையில் சிக்கி கொண்டது.
    • பூமியான்பேட்டையில் தொண்டையில் புரோட்டா சிக்கி பெயிண்டர் பரிதாபமாக இறந்து போனார்.

    புதுச்சேரி:

    புதுவை குமரகுரு பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கண்ணகி. இவருக்கு ஏற்கனவே ஜெகதீசன் என்பவருடன் திருமணமாகி யுவராஜ் என்ற மகன் உள்ளார். ஜெகதீசன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து கண்ணகிக்கு குமார் (வயது42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கணவன்-மனைவியாக வசித்து வந்தனர். குமார் மூலம் கண்ணகிக்கு டோனி என்ற 8 வயது மகன் உள்ளான்.

    பெயிண்ட் வேலை செய்து வந்த குமார் கடந்த 3 ஆண்டுகளாக சரியாக வேலைக்கு செல்லாமல் கண்ணகியிடம் அடிக்கடி பணம் வாங்கி மது குடித்து வந்தார். அதுபோல் நேற்று மதியம் குமார் தனது மனைவியிடம் பணம் வாங்கி சென்று மது பாட்டில் வாங்கி வந்து வீட்டில் மது அருந்தினார். பின்னர் தூங்கி விட்டார்.

    மாலையில் குமாரின் நண்பர் ஜெகன் என்பவர் குமார் குடும்பத்துக்கு சாப்பிட புரோட்டா வாங்கி கொடுத்து விட்டு சென்றார். இரவு தூங்கி எழுந்த குமார் தனது மனைவியிடம் சாப்பாடு கேட்டார்.

    அப்போது குமாரின் நண்பர் வாங்கி கொடுத்த புரோட்டாவை சாப்பிட கொடுத்தார். குமார் புரோட்டாவை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது திடீரென புரோட்டா தொண்டையில் சிக்கி கொண்டது.

    இதையடுத்து குமார் தொண்டையில் சிக்கிய அந்த புரோட்டாவை கையால் எடுக்க முயன்றார். ஆனால் இயலவில்லை. இதனால் குமார் மயங்கி சரிந்தார். இதனை பார்த்த அவரது மனைவி கண்ணகி அதிர்ச்சியடைந்து குமாரின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே அவரது நண்பர்கள் ஆட்டோ மூலம் குமாரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி கண்ணகி கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மரணம் அடைந்தார்
    • அரசியல் கட்சியினர் அஞ்சலி

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி படையாச்சி–யாரின் மைத்துனர் ப.தங்க–வேலு (வயது 87).வழக்கறிஞரான இவர் கடந்த 1960-65 ஆம் ஆண் டுகளில் காட்டுபிரிங்கி–யம் ஊராட்சி மன்ற தலைவரா–க–வும், அரியலூர் யூனி–யன் சேர்மனாகவும் இருந்துள் ளார்.அதேபோல் 1980 முதல் 1984-ம் ஆண்டு வரை ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றி உள்ளார். தற் போது அரியலூர் ராஜாஜி நகரில் வசித்து வந்தார்.

    இதற்கிடையே உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை மரணம் அடைந் தார்.அவரது உடலுக்கு சகோதரர் வி.ராமகி–ருஷ் ணன், சகோதரி மகன்களும், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் ஆதீன பரம்பரை தர்மக்கர்த்தாக்களுமான கோ.ராமச்சந்திரன், கோ.ராமதாஸ், கோ.–வெங்கடாஜலபதி மற்றும் அனைத்து அரசியல் கட்சி–யினர் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்டு, அரியலூரில் உள்ள மயானத்தில் உடல் அடக்கம் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளர்.


    • ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன்,
    • சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 55).

    இவர் சென்னையில் தபால் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரது விவசாய நிலம் ஐப்பேட்டில் உள்ளது. அங்கு சென்று வருவதாக நேற்று வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    இந்நிலையில் இரவு 9 மணியளவில் அதே கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி ஜெகதீசனை தேடினர். அப்போது ஜெகதீசனை பிணமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேத்துப்பட்டு:

    சென்னை டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 28). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இவரது தாத்தா இறந்து விட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜெகதீசன் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த சென்னந்தல் கிராமத்திற்கு வந்தார்.

    நேற்று மாலை ஜெகதீசன் தவணி மேட்டூர் சாலையில் உள்ள விவசாய கிணற்றின் அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து விட்டார். நீண்ட நேரம் ஆகியும் ஜெகதீசன் வீடு திரும்பாததால் அவரது தந்தை மற்றும் உறவினர்கள் தேடி பார்த்தனர்.

    கிணற்றின் அருகே ஜெகதீசன் செருப்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பெரணமல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி ஜெகதீசனை தேடினர். அப்போது ஜெகதீசனை பிணமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் அவரது உடலை ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த பெரணமல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
    • சி.ஆர்.ஆர்.புரம் பகுதியில் இன்று காலையில் பாபு பிணமாக கிடந்தார்.

    போரூர்:

    சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபு (65). மது பழக்கம் உடையவர். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வந்தார். ஆட்டோவிலேயே படுத்து தூங்கி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சி.ஆர்.ஆர்.புரம் பகுதியில் இன்று காலையில் பாபு பிணமாக கிடந்தார். அவரது முகத்தில் ரத்த காயங்கள் இருந்தன. மர்மமான முறையில் பாபு இறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உதவி கமிஷனர் சுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் தாம்சன் ஜார்ஜ் சேவியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாபு மது போதையில் தவறி விழுந்து அடிபட்டு இறந்தாரா? தகராறு காரணமாக அவரை யாரும் அடித்ததில் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.

    அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புரோட்டா சாப்பிட்ட வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது.
    • வியாசர்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆர்.கே.நகர்:

    வியாசர்பாடியை சேர்ந்தவர் கார்த்திக்(38) ஆர்.டி.ஓ.அலுவலக ஏஜெண்டாக வேலை பாத்து வந்தார்.

    வீட்டில் இருந்த போது குடும்பத்தினர் கார்த்திக்கிற்கு புரோட்டா வாங்கி கொடுத்தனர். அதனை கார்த்திக் சாப்பிட்டார்.

    சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடல் நிலை மோசம் அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பலியானார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    புரோட்டா சாப்பிட்டதால் கார்த்திக் பலியானாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை. அவர் எப்படி இறந்தார் என்று மர்மமாக உள்ளது. இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புரோட்டா சாப்பிட்ட வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது.

    ×