search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளி"

    • 3 சக்கர சைக்கிளுக்காக 5 வருடமாக மாற்றுத்திறனாளி தவித்து வருகிறார்.
    • ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்க மனு அளித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு டி.பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பன் (வயது 35). 2 கால்களும் முற்றிலும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியான இவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.

    அவர் தெரிவிக்கையில், எனது தந்தை மாரியப்பன் இறந்து விட்டார். 3 சகோதரர்களும் திருமணம் ஆகி தனியாக சென்று விட்டனர். நான் எனது வயிற்று பிழைப்புக்காக சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டி வருகிறேன்.

    என்னால் தாடிக்கொம்புவில் இருந்து பள்ளப்பட்டிக்கு 3 கி.மீ தூரம் வருவது கடினமாக உள்ளது. எனவே மோட்டார் பொருத்திய 3 சக்கர வாகனம் வழங்க கேட்டு கடந்த 5 வருடமாக மனு அளித்துள்ளேன். ஆனால் இது வரை வழங்கப்படவில்லை.

    எனவே எனது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்க மனு அளிக்க வந்துள்ளேன் என்றார்.

    • நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • இளைஞர்களிடையே நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள கனியாகுளம் பாறையடி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 54).

    இவர் ஒற்றைக் காலை இழந்த மாற்றுத்திறனாளி ஆவார். பெயிண்டராக வேலைபார்க்கும்இவர் இளைஞர்களிடையே நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி இவரது சைக்கிள் பயணத்தின் தொடக்க விழா கன்னியா குமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம் முன்பு நடந்தது.

    இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான வக்கீல் ஆர். மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவரது சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், அகஸ்தீஸ்வரம் பேரூர் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் டென்னிஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் பய ணம் புறப்பட்ட இவர் நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னையை அடுத்த மாதம் (செப்டம்பர்) பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான 15-ந்தேதி சென்றடைகிறார். நாளொன்றுக்கு நூறு கிலோமீட்டர் வீதம் மொத்தம்1500 கிலோமீட்டர் தூரம் இவர் சைக்கிள் பணம் மேற்கொள்ள உள்ளார்.

    • பாலூர் குளத்தையொட்டி உள்ள வாய்க்கால் கரையில் சொந்தமாக வீடு கட்டி தனியாக வசித்து வருகிறார்
    • பொதுமக்கள் வீட்டை இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி பல வருடங்களாக குடியிருந்து வரும் மாற்றுத்திறனாளி வீட்டை இடிக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கருங்கல் அருகே உள்ள பாலூர் குளக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 57). மாற்றுத்திறனாளியான இவர் ஒரு சமூக சேவகர். இவர் கிள்ளியூர் பேரூராட்சி முன்னாள் உறுப்பினராவார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இவர் பாலூர் குளத்தையொட்டி உள்ள வாய்க்கால் கரையில் சொந்தமாக வீடு கட்டி தனியாக வசித்து வருகிறார்.இன்று காலை திடீரென வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருங்கல் போலீசாருடன் வந்து வீட்டை அப்புறப்படுத்த முயற்சி மேற்கொண்டனர்.

    தகவல் அறிந்து வந்த மாநில வணிகர் சங்க துணைத்தலைவர் கருங்கல் ஜார்ஜ், இந்து முன்னணி கிள்ளியூர் ஒன்றிய தலைவர் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் வீட்டை இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.பின்னர் அங்கு வந்த கிள்ளியூர் தாசில்தார் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் ஜெயச்சந்திரன், பாலூர் கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், கருங்கல் காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன், உதவி ஆய்வாளர் மகேஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கடையில் இருந்து துவங்கி அனைத்து சாலையோர ஆக்கிரமிப்புகளையும் அகற்றினால் மட்டுமே இந்த மாற்றுத்திறனாளி வீட்டை இடிக்க அனுமதிப்போம். என்றும் தனியாக இந்த வீட்டை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் பொதுமக்கள் உறுதியாக கூறினர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முடிவில் வேறுவழியின்றி அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

    • சரவணன் நடித்த ‘‘லெஜண்ட்’’ படத்தை 100 மாற்றுத்திறனாளிகள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • எஸ்.வி.எஸ். அக்மார்க் கடலை மாவு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

    மதுரை

    மதுரை எஸ்.வி.எஸ். அக்மார்க் கடலை மாவு நிறுவனத்தின் சார்பில் ''சரவணா ஸ்டோர்'' அதிபர் சரவணா அருள் நடித்த ''தி லெஜண்ட்'' திரைப்படத்தை மதுரை குருதியேட்டரில் நாளை (31-ந் தேதி) காலை 10.30 மணி காட்சிக்கு 100 மாற்றுத்திறனாளிகள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையிலும், தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் இந்த திரைப்படத்தை பார்வையிட எஸ்.வி.எஸ். அக்மார்க் கடலை மாவு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

    சிறிய கிராமத்தில் இருந்து சென்னைக்கு வியாபாரம் செய்யும் நோக்கத்துடன் வந்த சரவணா ஸ்டோர் குடும்பத்தினர் கடின உழைப்பால் உயர்ந்து தற்போது திரையுலகத்திலும் கொடிகட்டி பறக்கும் சரவணா அருளின் ஒவ்வொரு முயற்சியும், அனைவருக்கும் ஆக்கத்தையும், ஊக்கத்தையும் அளித்து முன்உதாரணமாக சிறந்து விளங்குகிறார் என்று எஸ்.வி.எஸ். அக்மார்க் கடலை மாவு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான கல்வி மற்றும் சேர்க்கை நடைபெறும்.
    • தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறனை மேம்படுத்த பயிற்சி வழங்கப்படும்.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வட்டாரஅலுவலகத்தில் இன்று முதல் 24-9-2022 (சனிக்கிழமை) வரை மாற்றுத்திறனாளிக்கான அனைத்து நலத்திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    இதில் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல்.மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த(UDID CARD) அடையாள அட்டை ஆன்லைனில் பதிவு செய்தல், 10வயத்திற்கு மேற்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு நலவாரியத்தில் பதிவு செய்தல், இளம் மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான கல்வி மற்றும் சேர்க்கை நடைபெறும்.

    தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறனை மேம்படுத்த பயிற்சி வழங்கப்படும்.வருவாய்துறை மற்றும் மாற்றுத்திறனாளிக்கான மாதந்திர உதவி தொகை , மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் ,ஆவின் பாலகம் அமைத்தல் , மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பள்ளிகள் மற்றும் இல்லங்கள், மாற்றுத்திறனாளிக்கான நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அந்தந்த வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலஅலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உதவி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
    • இதற்கான சிறப்பு முகாம்கள் 2-ந் தேதி தொடங்குகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் 60 வயது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கு கருவிகள், செயற்கை பல்செட், ஊன்றுகோல்கள், செயற்கை அவயங்கள், பார்வையற்றவர்களுக்கான கண்ணாடிகள் மற்றும் செவி த்திறனற்றவர்களுக்கான காதொலிக்கருவிகள் ஆகிய உபகரணங்களை ஆலிம்கோ என்ற நிறுவனத்தின் மூலம் இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இந்த சிறப்பு முகாமானது கீழ்கண்டவாறு, வட்டாரந்தோறும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. 2-ந் தேதி திருப்பத்தூரிலும், 3-ந் தேதி காளையார்கோவிலிலும், 4-ந் தேதி மானாமதுரை யிலும், 5-ந் தேதி திருப்புவ னத்திலும், 6-ந் தேதி இளையான்குடியிலும், 10-ந் தேதி தேவகோட்டையிலும், 11-ந் தேதி கண்ணங்கு டியிலும், 12-ந் தேதி சாக்கோட்டையிலும், 13-ந் தேதி கல்லலிலும், 16-ந் தேதி எஸ்.புதூரிலும், 17-ந் தேதி சிங்கம்புணரியிலும், 18-ந் தேதி சிவகங்கையிலும் நடைபெற உள்ளது.

    இதில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 2, ஆதார் அட்டை அல்லது வயதினை உறுதி செய்யும் ஏதாவது அங்கிகரிக்கப்பட்ட அடையாள சான்று மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் வழங்கிய வருமானச்சான்று அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்பதற்கான ரேசன் கார்டு அல்லது மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை அல்லது இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை, தேசிய சமூகநல உதவித்திட்ட அடையாள அட்டை அல்லது வருவாய்த்துறை மூலம் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை அல்லது மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் மிகாமல் வருவாய்த்துறை அலுவலர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் வழங்கப்பட்ட வருமானச்சான்று மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் முகாம் நாட்களில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.
    • முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் 5 புகைப்படங்களை எடுத்து வர வேண்டும் .

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் வருகிற 30-ந் தேதி முதல் தொடங்குகிறது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. வருகிற 30-ந் தேதி உடுமலை ஜி.விசாலாட்சி கலை அறிவியல் கல்லூரியிலும், அடுத்த மாதம் 5-ந் தேதி ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 6-ந் தேதி பல்லடம் அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், 12-ந் தேதி பொங்கலூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் 13-ந் தேதி மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மருத்துவ முகாம் நடக்கிறது.

    இதுபோல் 18-ந்தேதி திருப்பூர் எல்.ஆர்.ஜி. கலை அறிவியல் கல்லூரியிலும், 26-ந் தேதி வெள்ளகோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 27-ந் தேதி தாராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், செப்டம்பர் மாதம் 2-ந் தேதி குண்டடம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 3-ந் தேதி பெதப்பம்பட்டி என்.வி.பாலிடெக்னிக் கல்லூரியிலும், 9-ந் தேதி மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 17-ந் தேதி அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 24-ந் தேதி காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    முகாமில் தேசிய அடையாள அட்டை வழங்குதல், நலவாரியத்தில் பதிவு செய்தல், தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்குவதற்கு பதிவு செய்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக்கடன் மானியம், உதவி உபகரணங்கள், வருவாய்த்துறையின் மூலம் இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, புதுப்பித்தல், தனியார் துறை வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும். மாவட்ட தொழில் மையம் மூலம் கிடைக்கும் உதவிகள் உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் இந்த முகாமில் வழங்கப்படும்.

    முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு, அடையாள அட்டை, ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் 5 புகைப்படங்களை எடுத்து வர வேண்டும் .இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • ழந்தைகள் இருவரும் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
    • குடும்பத்தை வழி நடத்துவது பெரும் சிரமமாக உள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 41). இவரது மனைவி பானுமதி( 36).இவர்களது மகன்கள் சந்தோஷ்குமார், (12) மனோஜ்குமார் ( 7) .பிறவி முதலே கணேசனுக்கு பார்வை தெரியாது .இதனால் வாழ்க்கை நடத்த சிரமப்படுவதாகவும்,அரசு சார்பில் குடியிருக்க வீடு தரவேண்டும் என திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாக கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:- நான் பிறந்தபோது மஞ்சள் காமாலை ஏற்பட்டு பார்வை பறிபோனது. பார்வை தெரியாததால் யாரும் வேலைக்கு சேர்க்க மறுக்கின்றனர். குழந்தைகள் இருவரும் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.மனைவி, குழந்தைகளை கவனித்தபடி, வீட்டிலேயே பனியன் வேஸ்ட் பிரிக்கும் வேலை செய்து வருகிறேன். தன்னார்வலர்கள், ஊர் பொதுமக்கள் செய்யும் உதவியால் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். அரசு வழங்கும் உதவித்தொகை வாழ்வாதாரமாக உள்ளது. என்னால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது என்பதால், குடும்பத்தை வழி நடத்துவது பெரும் சிரமமாக உள்ளது.எனவே அரசு சார்பில் குடியிருக்க வீடு ஒதுக்கி கொடுத்தால், மனைவியின் வருமானம் மற்றும் உதவித்தொகை கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொள்வோம். இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • எழுமலையில் மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடந்தது.
    • விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாள் வேலை வாய்ப்புக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உசிலம்பட்டி

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மதுரை புறநகர் மாவட்ட 4 வது மாநாடு மதுரை மாவட்டம் எழுமலையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர்கள் ஜீவா, முத்துக்காந்தாரி, மாவட்டச் செயலாளர் முருகன், துணைத்தலைவர் தவமணி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் முத்துராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சேடபட்டி ஒன்றிய செயலாளர் ராஜா சங்கர் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் நாகராஜ், சின்னச்சாமி மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப அட்டையை ஏ.ஏ.ஒய். குடும்ப அட்டையாக மாற்றித்தர வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு கூலியை முழுமையாக வழங்க வேண்டும். விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாள் வேலை வாய்ப்புக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கோவை கோட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன.
    • தொலைதூர பஸ்களில், மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கென இருக்கைகள் அவர்களுக்கு முறையாக ஒதுக்கப்படுவதில்லை.

    திருப்பூர் :

    அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர மற்றும் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், பிற கோட்டங்களில் இருந்தும் அதிகப்படியான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது புதிய பஸ்கள் இயக்கத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் முன்புற மற்றும் பின்புற படிக்கட்டுகளுக்கு அருகே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு இருக்கைகள், பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன. அந்த இருக்கைகளின் மேல் மாற்றுத்திறனாளிகள், முதியோர் இருக்கை எனஅறிவிப்பு ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது.

    இருப்பினும் உடுமலை மற்றும் உடுமலை மார்க்கமாக இயக்கப்படும் பெரும்பாலான நகர மற்றும் தொலைதூர பஸ்களில், மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கென இருக்கைகள் அவர்களுக்கு முறையாக ஒதுக்கப்படுவதில்லை. ஆண், பெண் பயணிகள் ஆக்கிரமித்துக் கொள்ளும் அந்த இருக்கைகளில், முதியோர், மாற்றுத்திறனாளிகளை அமர வைக்க டிரைவர், கண்டக்டர்களும் முனைப்பு காட்டுவதில்லை.

    இதனால் பஸ்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நின்று கொண்டு பயணிக்கின்றனர். எனவே அந்தந்த கிளை மேலாளர்கள் பஸ்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், எங்களுக்கென ஒதுக்கப்படும் இருக்கைகள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன. தொலைதூர பஸ்களில் நின்று கொண்டே பயணிக்க சிரமப்படுகிறோம் என்றனர்.

    • மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.1கோடி மதிப்பிலான கடனுதவியை இ-சேவை, வணிக வள மையம் தொடக்கங்கியது.
    • ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சின்னஇலந்தைகுளம் கிராமத்தில் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுயஉதவி கூட்டமைப்பு குழு சார்பில் இ-சேவை மையம், வட்டார வணிக வள மையம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு சார்பில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் உணவு தானிய பொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டுசிறந்த சிறுதானிய உணவிற்கான பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த மையத்தின் மூலம் 8-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுவிற்கு மாவட்ட திட்ட இயக்குனர் காளிதாசன் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் குழு தலைவர் ஹெலன்கீதா தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் வெள்ளைபாண்டி, வட்டார மேலாளர் மகாலெட்சுமி, யூனியன் சேர்மன் பஞ்சு, மகளிர் குழு செயலாளர் மணிமேகலை, பொருளாளர் சகாயகில்டா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.

    இதேபோன்று அலங்கா நல்லூர் யூனியன் அலுவ லகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் தொழில் முனைவோர்கள் வாழ்வாதார மேம்பாடு அடையும் பொருட்டு, வட்டார வணிக வள மையம் தொடங்கப்பட்டு இந்த மையத்தின் மூலம் 100 தொழில் முனைவோர்களுக்கு மாவட்ட திட்ட இயக்குனர் காளிதாசன் ரூ.25 லட்சத்திற்கான கடன் தொகையை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர்கள் கதிரவன், பேரூராட்சி பிரேமா, ஊராட்சி மன்ற தலைவர் முருகன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முத்துசெல்வி, ராதிகா, கலாராணி, உமாதேவி, தேவி மற்றும் வட்டார இயக்க மேலாண்மை பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • ஷாகுல் ஹமீது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி இந்திய அணிக்காக 54ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார் .
    • இறுதி போட்டியில் நேபாளத்தை இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது.

    மங்கலம் :

    நேபாள நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் விளையாட திருப்பூர் மாவட்டம், மங்கலத்தை அடுத்த அக்ரஹாரப்புத்தூரைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது, அரியலூர் மாவட்டம் -சந்தோஷ்குமார், ஈரோடு மாவட்டம்-மணிவண்ணன் ஆகியோர் தேர்வாகியிருந்தனர்.பின்னர் நேபாள -இந்திய தொடரில் 2-வது போட்டியில் விளையாடிய திருப்பூர்- ஷாகுல் ஹமீது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி இறுதிவரை அவுட்டாகாமல் இந்திய அணிக்காக 54ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார் .

    . காத்மாண்டுவி்ல் நடந்த போட்டியின் இறுதியில் நேபாளத்தை இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணியில் 15 பேர் இடம் பெற்ற நிலையில் 11பேர் விளையாடினர். இதில் திருப்பூர் ஷாகுல் ஹமீது,அரியலூர்-சந்தோஷ்குமார், ஈரோடு-மணிவண்ணன் ஆகியோர் இந்த தொடரில் சிறந்த வீரர்களுக்கான விருதையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சிறப்பாக விளையாடிய திருப்பூர் மாவட்டம், மங்கலம்அக்ரஹாரப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த இந்திய அணி வீரர் ஷாகுல்ஹமீது க்கு வி. ஜெயம் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ஜெயம் என்.மகேந்திரகுமார் சால்வை அணிவித்தும்,பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.

    ×