search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமராஜர்"

    • விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
    • தமிழக நாடார் சங்க நிர்வாகிகளுடன் மத்திய விமான போக்கு வரத்துத்துறை செயலாளர் ராஜீவ் பன்சாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி நாடாளு மன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தமிழக நாடார் சங்க நிர்வாகிகளுடன் மத்திய விமான போக்கு வரத்துத்துறை செயலாளர் ராஜீவ் பன்சாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலைய கட்டிடத்துக்கு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வருகிற 8-ந் தேதி புதிதாக திறக்கப்பட இருக்கும் விமான நிலைய கட்டிடத்தில் 'பெருந்த லைவர் காமராஜர் விமான நிலையம்' என்ற பெயர் பலகை இடம்பெற வேண்டும்.

    மற்ற விமான நிலை யங்களில் தலைவர்களுக்கு சிலை உள்ளது போல் சென்னை உள்நாட்டு விமான நிலைய வளாகத்தில் காமராஜருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைத்து தரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    விஜய் வசந்த் எம்.பி.யுடன், தமிழ்நாடு நாடார் சங்கபொதுச் செயலாளர் வி.எல்.சி. ரவி, தலைமை நிலைய செயலாளர் பொன் ராஜ், கொள்கை பரப்பு செயலாளர் சுரேஷ்மாறன், மாநில ஒருங்கிணைப்பாளர் அனந்தகுமார், மராட்டிய மாநில் தலைவர் தெய்வ குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இளைஞர்கள் காமராஜர் போன்ற அரசியல்வாதிகளை தேட ஆரம்பித்து விட்டார்கள்.
    • காமராஜர் படத்தையும் புகழையும், இருட்டடிப்பு செய்து அவருடைய பெயரை உச்சரிக்காத அரசியல்வாதிகளை புறந்தள்ள தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு நடவடிக்கை குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்ட விளம்பரங்களில் பெருந்தலைவர் காமராஜர் படம் இடம் பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் சமயங்களில் மட்டும் காமராஜர் படத்தை சிறிய அளவில் பயன்படுத்தி காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மற்ற நேரங்களில் அவரது படத்தையும், பெயரையும் மறைக்கிறார்கள்.

    காமராஜர் பெயரையும், புகழையும் மறைக்க நினைக்கும் காங்கிரஸ்காரர்களின் எண்ணங்கள் காங்கிரஸ் கட்சியை அழிவு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதை உணர வேண்டும். இளைஞர்கள் காமராஜர் போன்ற அரசியல்வாதிகளை தேட ஆரம்பித்து விட்டார்கள். எனவே காமராஜர் படத்தையும் புகழையும், இருட்டடிப்பு செய்து அவருடைய பெயரை உச்சரிக்காத அரசியல்வாதிகளை புறந்தள்ள தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராகுலின் நடைப்பயணம் நேற்று நிறைவு பெற்றது.
    • காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.

    அரூர்,

    காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் முதல் ஜம்மு காஷ்மீரில் வரை நடைப்பயணம் மேற்கொண்டார். 12 மாநிலங்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற நடைப்பயணம் நேற்று நிறைவு பெற்றது.

    இதனையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் அரூர் பேருந்து நிலையம், கச்சேரி மேட்டில் ஆகிய இடங்களில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சி கொடியேற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    பின்னர் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தை ஒட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.  

    • ஒரே நேரத்தில் கல்வி புரட்சியும் தொழில் புரட்சியும் விவசாய புரட்சியும் மின்சார புரட்சியும் இன்னும் பல நன்மைகளும் நடப்பதற்கு காமராஜரின் ஆளுமையை காரணம்
    • காமராஜருடைய இடத்தில் வேறு எவரையும் வைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதீதமான நம்பிக்கை கொண்டிருந்தார் பெரியார்...

    காமராஜருடைய ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு நாள் பொழுதும் ஒரு பொற்காலமாய் தெரிந்தது தந்தை பெரியாருக்கு... காமராஜர் தமிழ்நாட்டு முதல் அமைச்சராக பொறுப்பேற்ற இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் எப்பேர்பட்ட நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. இன்னும் 10 ஆண்டு காலத்திற்கு காமராஜரே தமிழக முதல்வராக இருந்துகொண்டு ஆண்டால், தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதலிடத்திற்கு கொண்டு வந்து விடுவார் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் பெரியார்...

    ஒரே நேரத்தில் கல்வி புரட்சியும் தொழில் புரட்சியும் விவசாய புரட்சியும் மின்சார புரட்சியும் இன்னும் பல நன்மைகளும் நடப்பதற்கு காமராஜரின் ஆளுமையை காரணம்... அவருடைய நேர்மையே காரணம்... தன்னலமற்ற சேவை மனப்பான்மையே காரணம்... நிர்வாகத் திறமையை காரணம்... எந்தவிதமான பந்தாக்கள் எதுவுமில்லாத எளிமையே காரணம்...

    இப்படிப்பட்ட நற்குணங்கள் கொண்ட ஒரு தலைவர் தமிழகத்திற்கு இனிமேல் கிடைப்பாரா? என்ற அளவுக்கு பெரியாரின் சிந்தனை இருந்தது... காமராஜருடைய இடத்தில் வேறு எவரையும் வைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதீதமான நம்பிக்கை கொண்டிருந்தார் பெரியார்...

    ஆனால் காமராஜருடைய சிந்தனை தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுக்க பரந்தும் விரிந்தும் இருந்தது... தமிழகத்திற்கு தம்மால் முடிந்ததை ஓரளவுக்கு செய்திருந்த திருப்தி இருந்தாலும் அகில இந்திய அளவில் நாடு அத்தனை செழிப்பாக இல்லையே.. பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவ்வளவு நிம்மதியாக இல்லையே என்ற கவலை காமராஜர் நெஞ்சிலே நிரம்பி இருந்தது. 1962-ம் ஆண்டு நடைபெற்று முடிந்திருந்த சீன போரிலே இந்தியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவால் நேரு மனமடைந்து போயிருந்தார். மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இயங்கிக்கொண்டிருந்த நேருவின் உடல்நிலையில் அது ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

    ஒரு ஆட்சி நன்றாக நடக்க வேண்டும் என்றால் அந்த ஆட்சிக்கு தலைமை ஏற்று இருக்கிற தலைவனது உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும். அவர் சார்ந்திருந்த கட்சியின் கட்டுக்கோப்பும் சீராக இருக்க வேண்டும். இப்படி இரண்டு வகையில் சீர்தூக்கி பார்த்து சிந்தித்தார் காமராஜர்.

    எனவே நேருவைப் பற்றியும் அவரது உடல் நிலையை சீராக்குவதிலும் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதிலும் கவனம் செலுத்தியாக வேண்டியது தனது கடமையாகும் என்று உணர்ந்திருந்தார் காமராஜர்.

    ஐதராபாத்திற்கு வந்திருந்த நேருவை போய் சந்தித்து நாட்டின் நிலை குறித்து விரிவாக கலந்து ஆலோசித்தார் காமராஜர்... அப்போது உருவானது தான் "கே" பிளான் திட்டம்... அந்த திட்டத்தின்படி மூத்த தலைவர்கள் பலர் தாங்கள் வகிக்கும் முதல்வர் பதவியில் இருந்து விலகி இளைஞர்களை பொறுப்பிலே அமர்த்திவிட்டு கட்சிப்பணி ஆற்ற வேண்டும் என்பதே காமராஜரின் திட்டமாகும்... அதுதான் பின்னர் "கே" பிளான் என்று அழைக்கப்பட்டது.

    நேருவும்... இப்பொழுது உள்ள சூழ்நிலையில் இது ஒரு நல்ல ஆலோசனை என்றும் மூத்த தலைவர்கள் பலருடன் ஆலோசனை கலந்து அவர்களுடைய இசைவில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நினைத்தார். முதற்கட்டமாக நானே பதவியை விட்டு விலகுகின்றேன் என்று முன்வந்தார் நேரு. ஆனால்... காமராஜர் உட்பட மூத்த தலைவர்கள் யாரும் நேரு பதவி விலகுவதை விரும்பவில்லை.

    இந்தத் திட்டத்தில் நேருவுக்கு மட்டும் விதிவிலக்கு என்று சொல்லி பதவி விலக முன்வந்த நேருவை சமாதானப்படுத்தி விட்டனர். ஏனென்றால் நேருவுக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கும் உலகளவில் இருந்த மதிப்பும் மரியாதையும் வேறு எவருக்கும் இல்லை. அவரது ஆளுமைக்கு ஈடு சொல்ல எவரும் இல்லை என்ற எண்ணமே தலைவர்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது.

    இப்படி இந்த "கே" பிளான் பற்றிய செய்திகள் எல்லாம் பத்திரிக்கையில் வெளிவந்து அப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தின் முதல்வராக இருந்த காமராஜரும் இந்த "கே" பிளான் மூலம் பதவியை துறப்பார் என்ற செய்திகள் அடிபட தொடங்கியது.

    இதையெல்லாம் ஏடுகளின் மூலமாக அறிந்த தந்தை பெரியார் மிகுந்த கவலைக்குள்ளானார்... தமிழ்நாட்டின் நலன் கருதி இதை எப்படியாவது தடுத்தாக வேண்டுமே... அவரவர் சார்ந்திருக்கும் கட்சியை அவரவர் பலப்படுத்த நினைப்பதில் எந்த தவறும் இல்லை அது அவர்களின் நிலைப்பாடு. ஆனால் காமராஜரை போல ஒருவர் தமிழ்நாட்டுக்கு கிடைப்பாரா? இதுதான் பெரியாருடைய கேள்வி!

    யோசனையை கூறிவிட்டு நாம் பதவியில் இருப்பது நாகரிகமாகாது என்ற நினைப்பில் முதல்வர் பதவியில் இருந்து விலகுவது என்ற முடிவினை காமராஜர் எடுத்து இருப்பார் என்று நினைத்தார் பெரியார். உடல்நலிவு என்று வந்துவிட்டால் நோயாளி தான் மருந்து சாப்பிட வேண்டுமே தவிர டாக்டரே ஏன் சாப்பிட்டு காட்டக்கூடாது என்றெல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள் என்று விடுதலை நாளேட்டில் 10.8. 1963-ல் ஒரு தலையங்கத்தையே எழுதினார் பெரியார்.

    மேலும் அந்த தலையங்கத்தில் நெருக்கடியான இந்த நேரத்தில் நீடிக்க வேண்டியது நேருவின் தலைமையே என்று பலர் கருதுவது போல தமிழகத்தை பொறுத்தவரையில் காமராஜரின் தலைமையும் நீடித்தாக வேண்டும் என நினைத்தார் பெரியார்.

    இதை காங்கிரஸ் மேலிடத்தார் நன்கு உணர்ந்திட வேண்டும். ஒரு பிரச்சினையை தீர்க்கப் போய் புதிதாக பல பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வது புத்திசாலித்தனமான காரியமாகாது. கடைசியாக சொல்கிறேன் தமிழ்நாட்டின் நலனையே முதலில் காமராஜர் மனதில் கொள்ள வேண்டும். மூன்றரை கோடி மக்கள் நலனை கருத்தில் கொண்டே இதனை கூறுகிறோம். முதலில் நாட்டு நலன். பிறகுதான் கட்சி நலன். ஒளி வீசும் தமிழகம் மீண்டும் இருளுக்கு ஆளாகி விடக்கூடாது அது கேடு மட்டுமல்ல பெருங்கேடு என்று விடுதலையில் எழுதி இருந்தார் பெரியார்.

    இந்த சந்தர்ப்பத்தில் வேறு யாராவது ஆட்சியில் வந்து அமர்ந்தால் அவர்களால் சமாளிக்க முடியாமல் கேரளாவை போல் ஒரு நிலையற்ற ஆட்சி தமிழகத்திலும் ஏற்பட்டுவிடும் .இதனை ஒரு எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன் என்றெல்லாம் விடுதலை ஏட்டில் கோடிட்டு காட்டி இருந்தார் பெரியார்.

    மேலும் காமராஜருக்கு ஒரு தந்தியும் கொடுத்தார் பெரியார்...

    Either on your own accord or on the advice of others, your resignation of chiefminister ship will be sucidal to tamilians, Tamilnadu and yourself.

    தாங்களாகவோ அல்லது பிறரது ஆலோசனை காரணமாகவோ தமிழ்நாட்டு முதல் அமைச்சர் பதவியில் இருந்து தாங்கள் விலகினால் அது தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் தங்களுக்கும் தற்கொலைக்கு ஒப்பானதாகும்... என்பதுதான் பெரியார் கொடுத்திருந்த தந்தியாகும் .

    பெரியாரின் இந்த கணிப்பு பின்னாளில் அப்படியே நடந்தது, பலித்தது. காமராஜரின் இடத்திலே வந்து அமர்ந்து முதல்வராக ஆட்சி செய்த பக்தவச்சலம் அவர்களால் காமராஜரை போல செயல்பட முடியவில்லை. விலைவாசி உயர்வை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நமக்கே அரிசி தேவைப்பட்டிருந்த நேரத்தில் கேரளாவுக்கு அதை அனுப்பி வைத்ததால் இங்கே அரிசி பஞ்சம் ஏற்பட்டு அது ஒரு மாபெரும் பிரச்சினையாக உருவானது.

    இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ் நாடெங்கும் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பங்கேற்றதால் ஆங்காங்கே கலவரங்கள் நடைபெற்றது. இப்படி ஒன்றுக்கு மேல் ஒன்று வந்து காமராஜர் இல்லாத தமிழகம் எப்படி இருக்கும் என்று பெரியார் சொன்ன சொற்களை நிரூபித்து காட்டியது.

    இப்படி எல்லாம் நடைபெற்றதற்கு பின்னாலும் காமராஜரை ஆதரிப்பதை பெரியார் கைவிடவில்லை. காந்திஜி சென்னைக்கு வந்த நேரத்தில் காமராஜரை காந்திஜிக்கு அருகிலே செல்லவிடாமல் மாலை கூட போட விடாமல் தடுக்கப்பட்ட காலம் எங்கே... இப்போது காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கம்பீரமாக ஒரு தமிழர் கோலோச்சுகிற காலகட்டம் இங்கே என்றெண்ணி பெருமிதப்பட்டார் தந்தை பெரியார்..

    முனைவர் கவிஞர் இரவிபாரதி

    முனைவர் கவிஞர் இரவிபாரதி

     காமராஜர் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு புவனேஸ்வரம் மாநாட்டிலே அவர் தமிழிலேயே உரையாற்றியதை பெரிதும் வரவேற்று மகிழ்ந்தார். அதுமட்டுமல்ல திராவிட கழக மாநாட்டிலே பேங்குகளை தேசிய மயமாக்க வேண்டும், தொழில்களை தேசிய மயமாக்க வேண்டும், இன்சூரன்ஸ் கம்பெனிகளை அரசு எடுத்துக் கொள்வது என்று நாங்கள் போட்ட தீர்மானங்களை எல்லாம் புவனேஸ்வர் மாநாட்டிலே தீர்மானங்களாக கொண்டு வந்ததையும் பாராட்டி மகிழ்ந்தார் பெரியார்.

    இன்று உலகமே வியந்து போற்றுகிற இடத்திலே நமது காமராஜரை அமர்த்தி அழகு பார்த்து இருக்கிறார் ஜவஹர்லால் நேரு... இந்த நாட்டில் காமராஜருக்கு விரோதமாக எவனும் செயல்பட்டால் அவன் நாட்டுக்கு துரோகம் செய்கிறான் என்று பொருளாகும். தங்களுடைய சுயநலனுக்காக காமராஜர் காரியம் செய்து உதவவில்லை என்று பணக்காரர்களும் சுயநலவாதிகளும் அவரை ஒழிக்க வேண்டும் என்று முயல்கிறார்கள்... காமராஜர் திட்டம் வெற்றி பெற்றால் பணக்காரர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்பதற்காக அவரை செல்வ சீமான்கள் எல்லாம் கூட்டணி சேர்ந்து எதிர்க்கிறார்கள். எனவே நமது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று விடுதலை நாளிதழில் 13.2.1964-ந்தேதி எழுதினார் பெரியார்.

    ஜூன் 1963-ல் முதல்-அமைச்சர் பதவியை துறந்து காமராஜர் டெல்லிக்கு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஆனதற்கு பின்னாலே பெரியார் எழுதிய கட்டுரை இது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஆனதற்கு பின்னாலே காமராஜரின் 63-வது பிறந்தநாள் விழா நாடெங்கும் உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. நாமெல்லாம் காமராஜரை முதல்வர் பதவியிலே அமர்த்தி அழகு பார்த்தோம். இப்போது அகில இந்திய காங்கிரசுக்கே தலைவராக ஆகியிருக்கிறார். உலகமே போற்றுகிற பண்டித ஜவஹர்லால் நேருவுக்கே ஆலோசனை சொல்லுகிற இடத்திலே காமராஜர் அமர்ந்திருக்கிறார் என்று சொல்லி நமது கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஏற்பாட்டில் சென்னை நகரமே திணறுகிற அளவுக்கு விழாக்கள் அன்றைய தினம் நடைபெற்றன.

    இதற்கு முன்னாலே நமது தமிழர்கள் அகில இந்திய தலைமை பொறுப்பிலே ஒரு சிலர் இருந்திருக்கிறார்கள். அந்த காலகட்டம் என்பது வேறு. அப்போது மேல் சாதிக்காரர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் மட்டுமே அது கிட்டியது. அதுவே காங்கிரசில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகவும் இருந்தது. ஆனால் ஒரு ஏழை வீட்டிலே பிறந்து தனது கடினமான உழைப்பால் படிப்படியாக உயர்ந்து தமிழக முதல்வராக சிறப்பாக பணியாற்றி பேரெடுத்த ஒருவரான காமராஜர் இப்பதவிக்கு வந்ததை இந்திய நாடே வரவேற்றது என்பதே உண்மை.

    பெரும்பாலும் வட இந்திய தலைவர்கள் தென்னிந்திய தலைவர்களை அவ்வளவாக வரவேற்பதில்லை. இந்தியாவில் தாங்களே மற்றவர்களை விட மேலோர்கள் என்ற எண்ணம் வட இந்தியத் தலைவர்கள் அடி மனதிலே ஊறியிருந்தது .இப்போதும் அந்த எண்ணம் அவர்களிடம் இருக்கிறது. அந்த எண்ணத்தையும் தாண்டி காமராஜரை "காலா காந்தி" என்று அழைத்து வடஇந்திய தலைவர்கள் வரவேற்று பாராட்டி மகிழ்ந்தது ஒரு ஆச்சரியமான விஷயம் என்றே சொல்லலாம் .

    தந்தை பெரியாரின் ஒப்புதலோடு காமராஜர் பிறந்தநாளையொட்டி அப்போது விடுதலை நாளேட்டின் ஆசிரியராக இருந்த குத்தூசி குருசாமி அவர்கள் எழுதிய கட்டுரை மிக முக்கியமான கட்டுரையாகும்.

    "தமிழகத்தின் பொற்காலத்தை படைத்த தமிழர்களின் இரண்டாம் காவலரான நமது காமராஜர் அவர்களுக்கு இன்று 63-ம் ஆண்டு பிறக்கிறது"

    முல்லைக்கு தேர் கொடுத்தும் மயிலுக்கு போர்வை ஈந்தும் வள்ளலானவர்களுக்கு மத்தியில் கல்வி வள்ளல் என்று பெயர் எடுத்தவர் தான் நமது காமராஜர்... "தனக்கென வாழாப் பிறருக்குறியாளன் " என்ற தலைமைக்கு ஒரு இலக்கணம் வகுத்த, காமராஜர் தனது 50 ஆண்டு கால பொதுவாழ்வில் சேர்த்தது ஒன்றே ஒன்றுதான்... அதுதான் புகழ், மங்காத புகழ், மாசில்லா புகழ் ஆகும்.

    பதவிகளை தேடி அவர் சென்றது இல்லை அவரை தேடித்தான் பதவிகள் வந்துள்ளன. அப்பதவிகளால் அவர் பொலிவு பெற்றதில்லை, அவரால் தான் பதவிகள் பொலிவு பெற்றன. தர்மம் என்ற பெயரால் கொடிகட்டி பறந்த சாதிக்கு மரண அடி கொடுத்த மாமேதை அவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழுத்தப்பட்டு கிடந்த நம்மவர்களை மேலே கொண்டு வந்த மேன்மையாளர் தான் காமராஜர்.

    "அனுபவம் அவரது படிப்பு, நேர்மை அவரது நெறி, உழைப்பு அவரது பாதை, சம தர்மம் அவரது லட்சியம் "இதுவே அவரைப் பற்றிய நமது மதிப்பீடு ...

    அவரது சீரிய தலைமை இந்திய துணை கண்டத்திற்கு இன்றைய தேவையாகி இருக்கிறது. "வாழ்க காமராஜர், வருக சமதர்ம சமுதாயம்" என்ற சிறப்பு தலையங்கம் 15.7.1965 அன்று விடுதலையில் வெளிவந்து எல்லோரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. பெரியாரின் ஒப்புதலோடு கட்டுரை வெளிவந்தது என்பதை மகிழ்ச்சியோடு குறிப்பிட விரும்புகிறேன்.

    - முனைவர் கவிஞர் இரவிபாரதி

    • காமராஜர் பற்றி பேசுவதற்கு இன்றைய தி.மு.க. நிர்வாகிகள் யாருக்கும் தகுதியோ, அருகதையோ இல்லை.
    • பெருந்தலைவர் காமராஜர் பற்றி பொய்யான கருத்துக்களை பரப்பிவரும் ஆ. ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

    சென்னை:

    பெருந்தலைவர் காமராஜர் குறித்து தவறாக பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசா-வுக்கு என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடந்த நாடார் சங்கங்கள் கூட்டத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

     சென்னையிலுள்ள நாடார் சங்க நிர்வாகிகள் கூட்டம் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் அசோக்நகர் என்.ஆர்.டி.டவரில் நடந்தது.

    இக்கூட்டத்தில் முத்துரமேஷ் நாடார், மின்னல் ஸ்டீபன், எம்.வி.எம்.ரமேஷ்குமார், கொளத்தூர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அவை வருமாறு:-

    பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசுவதற்கு இன்றைய தி.மு.க. நிர்வாகிகள் யாருக்கும் தகுதியோ, அருகதையோ இல்லை என்பதால் காமராஜர் பற்றி பேசுவதை தி.மு.க. நிர்வாகிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

    பொய்யான தகவல்களை பொது மேடைகளில் பேசி அதை மெய்யாக்கி முந்தைய வரலாற்றை மாற்றி தங்கள் தான் உத்தமர்கள் போன்ற மாயையை பரப்பும் தி.மு.க. வினரின் முகமுடியை கிழித்தெறிய வேண்டும் என்று இக்கூட்டம் அனைத்து கட்சியினரையும் கேட்டுக்கொள்கிறது.

    பெருந்தலைவர் காமராஜர் பற்றி பொய்யான கருத்துக்களை பரப்பிவரும் ஆ ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும் நடத்துவோம் என்று இக்கூட்டம் ஒருமனதாக முடிவு செய்கிறது.

    தொடர்ந்து கர்மவீரர் காமராஜரின் வரலாற்றை திரித்து தவறுதலாக பேசி வரும் தி.மு.க நிர்வாகிகள் மீது அதிருப்தி கொண்டுள்ள பெருந்தலைவர் தொண்டர்களும், பக்தர்களும் ஒருபோதும் தி.மு.க.வை மன்னிக்க மாட்டார்கள். மேலும் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.விற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்படும் என்று இக்கூட்டம் வாயிலாக தெரியபடுத்துகிறோம்.

    இக்கூட்டத்தில் டி.எஸ்.எஸ். நாடார் சங்கத்தலைவர் மனோகரன், போரூர் நாடார் சங்கத்தலைவர் ஆனந்தராஜ், முகப்பேர் வட்டார நாடார் மகாஜன சங்கத்தலைவர் தேன்ராஜன், நாடார் பாதுகாப்பு தலைவர் ஸ்ரீனிவாசன், அயனாவரம் சந்திரமோகன், ஆவடி வட்டார நாடார் சங்கம் ராஜன், கோவில்பதாகை முரளி, கிராமணி முன்னேற்ற சங்கத்தலைவர் பச்சையப்பன், மட்டுமேடு அருணாசல மூர்த்தி, திருவல்லிக்கேணி நாடார் சங்க பொதுச்செயலாளர் சிவராஜ், மாதவரம் தங்கக்குமார், இருவொற்றியூர் வீரமணி, விருகம்பாக்கம் மணிராஜ், மாங்காடு துரை, கெருகம பாக்கம் பாலமுருகன், உதய குமார், ஓட்டேரி செல்வராஜ், கோயம்பேடு முத்து, பாண்டியநாட்டு நாடார் பேரவை கொளத்தூர் சுவைராஜா, கொளத்தூர் ஜேம்ஸ் நாடார், கோயம்பேடு வைகுண்டராஜா, வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், பாதாவரம் நாடார் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, தமிழ்நாடு என்று சொல்லாததால் தான் காமராஜர் தோற்றுப்போனார் என்று தவறான கருத்தை பதிவு செய்கிறார்.
    • காமராஜரின் மங்காபுகழை சீர்குலைக்கும் வகையில் பேசி வருவது ஏற்புடையதல்ல வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காமராஜரை பற்றி தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ச்சியாக தவறான தகவல்களை நாட்டு மக்களிடம் பரப்பி வருவதை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

    தமிழ்நாடு என்று சொல்லாததால் தான் காமராஜர் தோற்றுப்போனார் என்று தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தவறான கருத்தை பதிவு செய்கிறார்.

    காமராஜர் என்றுமே தோற்றவர் அல்ல. அவர் கொண்டு வந்த கே பிளான் படி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சி பணிக்கு வந்தார். அவர் தொடர்ந்து முதல்வராக இருந்திருந்தால் இன்றளவும் தி.மு.க. என்கிற கட்சியே தமிழ்நாட்டில் இல்லாமல் போயிருக்கும் என்பதை ஆ.ராசா போன்றவர்கள் உணர வேண்டும். விருதுநகரில் தோற்கடிப்பட்ட காமராஜருக்கு, நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை மக்கள் அளித்தார்கள் என்பதை நாடறியும்.

    பெருந்தலைவர் காமராஜர் மறைந்து 47 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் அவரது மங்காபுகழை சீர்குலைக்கும் வகையில் தி.மு.க.வினர் பேசி வருவது ஏற்புடையதல்ல வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதன் முதலில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வந்தது காமராஜர்தான்
    • தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில், 1957-ல் தமிழில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ராமச்சந்திர நாடாரின் திருவுருவச் சிலை, சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலை திறப்பு விழா நேற்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் வி.டி.பத்மநாபன் நாடார் தலைமை தாங்கினார். செயலாளர் பி.சந்திரசேகர பாண்டியன் நாடார் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் எம்.மாரி தங்கம் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக ராமச்சந்திரா நாடாரின் மனைவி எஸ்.ஆர்.காந்திமதி, வரதலட்சுமி ராஜேந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், டாக்டர் கிருஷ்ணன், டி.சிவபால் நாடார், முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் ஆர்.எஸ்.முத்து ஆகியோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில், தெலுங்கானாவின் கவர்னரும், புதுச்சேரியின் துணைநிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு எஸ்.ராமச்சந்திர நாடாரின் உருவச்சிலையை திறந்து வைத்தார்.

    இதில் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் செயலாளர்கள் டி.ராஜ்குமார் நாடார், ஆர்.சுந்தரேஸ்வரன் நாடார், கொட்டிவாக்கம் ஏ.முருகன் நாடார், துணைத்தலைவர்கள் ஒய்.இம்மானுவேல் நாடார், எஸ்.தேவதாஸ் நாடார், எஸ்.பத்மநாபன் நாடார், ஆர்.பிரபு நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    காமராஜர் வழிவந்த இனத்தை சேர்ந்தவர்களுக்கு மகுடம், கடினமான உழைப்பு தான். எது இருக்கிறதோ? இல்லையோ? உழைப்பாளி என்பது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய வார்த்தை. பிரதமர் மோடி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, தொலைக்காட்சியில் பேசும்போது, 'என்னை ஒரு தலைவர் உயிரோடு இருந்திருந்தால் பாராட்டியிருப்பார்' என்றார். அவர் வட இந்திய தலைவரையோ, குஜராத்தை சேர்ந்த தலைவரையோ சொல்லவில்லை. காமராஜரை பற்றிதான் சொன்னார். அந்த அளவுக்கு நேர்மையான, வளர்ச்சிக்கான ஒரு ஆட்சியை இன்று வரை யாராவது உதாரணம் காண்பிக்க முடியும் என்றால், அது காமராஜர் ஆட்சிதான்.

    காமராஜரின் வழித்தோன்றல்களாக இருக்கக் கூடிய நாம், அவருடைய பெயரை காப்பாற்ற வேண்டும்.

    முதன் முதலில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வந்தது காமராஜர்தான். ஆட்சி மொழியாக மட்டுமல்ல பயிற்று மொழியாக்கவும் சட்டசபையில் குரல் கொடுத்தவர். 1959-ம் ஆண்டிலேயே தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி கழகத்தை உருவாக்கினார். இன்று தமிழகமா? தமிழ்நாடா? என்ற விவாதம் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழை ஆட்சிமொழியாகவும், பயிற்று மொழியாகவும் ஆக்கியது, காமராஜர்தான். இந்த சரித்திரத்தை யாரும் மாற்றி அமைத்துவிட முடியாது. 1957, 58 நிதி நிலை அறிக்கையை சி. சுப்பிரமணியம் தாக்கல் செய்யும்போது, அறிக்கையை தமிழில் தாக்கல் செய்தார். ஆனால் இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்பவருக்கு தமிழ் சரியாக வராது என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில், 1957-ல் தமிழில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றும் மசோதாவை முன்மொழிந்த சி.சுப்பிரமணியம், மெட்ராஸ் மகாணம் இனி தமிழ்நாடு என்ற பெயரோடு அழைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு சட்டசபை, தமிழ்நாடு அரசு என்று அழைக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார். அது காமராஜர் ஆட்சி. ஆக தமிழ்நாடு என்ற பெயர் வந்ததற்கு முதலில் காமராஜர், அதற்கு பின் அண்ணா காரணம். ஏனென்றால் யாருடைய உழைப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. பின்னர், 1967-ல் அண்ணா சட்டமாக ஆக்கினார். ஆக அறிவித்த காமராஜருக்கும் பெருமை. அதை சட்ட மாக்கிய அண்ணாவுக்கும் பெருமை சேர்ந்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பள்ளியிலே படிக்கும் பொழுதே மாணவர்கள் மனதிலே தமிழ் பற்று வேரூன்றி நிற்க வேண்டும் என விரும்பினார் காமராஜர்.
    • தமிழின் மீது காமராஜர் கொண்டிருந்த பற்றினை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர் வாழ்ந்து முடித்த திருமலைபிள்ளை சாலை இல்லத்திற்கு சென்றால் தெரிந்து கொள்ளலாம்.

    மொழி தான் ஒரு மனிதனுக்கு முகவரி கொடுக்கிறது. அவன் பேசுகிற மொழியை வைத்து தான் இன்னாரென்று அவனை நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம். தமிழர்களாக பிறந்தவர்களுக்கு எல்லாம் ஒரு தனி பெருமை இருக்கிறது. உலகிலேயே மூத்த மொழி, புகழ் பூத்த தமிழ் மொழியின் புதல்வர்கள் என்பதால் கிடைத்த பெருமை அது. உலகில் ஏறத்தாழ 3 ஆயிரம் மொழிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றிலே முதல் முதலாக தோன்றிய மொழி தமிழ் தான் என்பதனை ஆராய்ச்சியாளர்கள் வலுவான காரணங்களோடு நிரூபித்திருக்கிறார்கள். இதை எண்ணும்போது நாம் தமிழனாக பிறந்ததற்காக என்ன பாக்கியம் செய்தோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    தொன்மையும், இனிமையும், எளிமையும், இளமையும், வளமையும், தாய்மையும், தூய்மையும், செம்மையும், தனித்து இயங்கக்கூடிய திண்மையும் நிறைந்தது நமது தமிழ் மொழி மட்டுமே. இன்னும் பல சிறப்பு இயல்புகளை கொண்டு உயிர்ப்போடு உலா வருவதும் நமது தமிழ் மொழி மட்டுமே.

    வேறு எந்த மொழிக்கும் இந்த பெருமைகள் எல்லாம் முழுமையாக வாய்க்கப் பெறவில்லை. அதனால் தான் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தேவையான அத்தனை பண்புகளும் உள்ளது தமிழ்மொழி என்று மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

    காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடம் தமிழின் அருமை பெருமைகளை எல்லாம் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது எடுத்து சொல்லி கிடைத்திட்ட பெரும் பேறு இது.

    உலகுக்கு இதனை அறிவிக்கும் வகையிலே உலக அறிஞர்களை எல்லாம் வரவழைத்து, கோவையிலே செம்மொழி மாநாட்டினை முதல்வராக இருந்து வெகு சிறப்பாக நடத்திக் காட்டினார் கலைஞர் அவர்கள்.

    மத்திய அரசிலே உள்ளவர்கள் எல்லோருமே, நமது பாரத பிரதமர் மோடி உட்பட எல்லோருமே தமிழின் பெருமை பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவர்களின் நெஞ்சிலே நிரம்பி இருப்பது இந்திமொழி தான் என்பது கண்கூடாகத் தெரிகிறது. அதற்காக மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் இந்தி மொழியை அவர்கள் முன்னிலைப்படுத்துகிறார்கள். நம் மீது திணிக்க பார்க்கிறார்கள்.

    முத்தமிழ் அறிஞரின் புதல்வர் இங்கே முதல்வராய் இருப்பதால் மத்திய அரசின் முயற்சிகள் எதுவுமே இங்கே எடுபடவில்லை என்பதே உண்மையாகும்.

    தமிழகத்தை முதல்வராக இருந்து ஆட்சி செய்த பெருமக்கள் அனைவருமே தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார்கள். இதிலே மாற்று கருத்து இல்லை.

    நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே அதாவது 1946-லேயே அப்போது கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் செட்டியாரின் தலைமையிலே தான் தமிழ் வளர்ச்சி கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் தமிழ் வளர்ச்சி திருநாள் கொண்டாடப்பட்டது. அப்போது தமிழறிஞர்கள் எல்லோருமே கவுரவிக்கப்பட்டார்கள்.

    அப்போதுதான் ரூ.14 லட்சம் செலவிலே தமிழ் கலைக்களஞ்சியம் எனும் முதல் தொகுப்பு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முயற்சியால் வெளியிடப்பட்டது. இது தொடர்ந்து பத்து தொகுதிகளாக வெளிவந்தது. குழந்தைகள் கலைக்களஞ்சியமும் அப்போதுதான் வெளியிடப்பட்டது. ஆனால் இன்னும் இதற்கு மறுப்பதிப்பு வெளியிடப்படவில்லை என்பது வருத்தமான செய்தியாகும்.

    இந்திய நாடு சுதந்திரம் பெற்றதற்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி செட்டியார் அவர்கள் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை 1948, செப்டம்பர் 11-ம் நாள் எட்டயபுரத்தில் பாரதி பிறந்த மண்ணிலே மிகச் சிறப்பாக கொண்டாடினார்.

    இந்த விழாவிலேயே தான் தமிழக அரசவைக் கவிஞர் பதவி அறிவிக்கப்பட்டு நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு அது வழங்கப்பட்டு அவர் கவுரவிக்கப்பட்டார். இன்று தலைமைச் செயலகத்தின் ஒரு பிரிவுக்கு நாமக்கல் கவிஞர் மாளிகை எனும் பெயர் சூட்டப்பட்டு பிரம்மாண்டமான செயலகமாக அது செயல்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.

    அப்போதுதான் (1949) முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி செட்டியார் பாரதியார் கவிதைகளின் உரிமை பெற்றிருந்த ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியாரிடம் பேசி, பாரதியார் கவிதைகள் அனைத்தையும் வாங்கி, பாரதியார் குடும்பத்திற்கு ஒரு தொகை கொடுக்கப்பட்டு, அதனை நாட்டுடைமை ஆக்கினார். அதற்கு பிறகு தான் பாரதியார் கவிதைகள் திரைப்படங்களிலும் மேடைகளிலும் சுதந்திரமாக உலா வந்தன.

    இந்த வரலாறுகளை எல்லாம் நன்கு உணர்ந்த காமராஜர் தனது ஆட்சிக் காலத்தில் எப்படி எல்லாம் தமிழுக்கு பெருமை சேர்ப்பது என்று சிந்தித்துக்கொண்டே வந்து படிப்படியாக அதனை எப்படி சிறப்பாக அமல்படுத்தினார் என்பதுதான் சுவையான வரலாறு.

    ஆரம்ப காலத்தில் இருந்தே நாள், நட்சத்திரம், தேதி இவைகளை எல்லாம் காமராஜர் பார்ப்பதில்லை. செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்ய வேண்டும் என்பதில் தான் குறியாக இருப்பார். ஆனால் தான் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு மட்டும் தமிழ் புத்தாண்டினை தேர்ந்தெடுத்தார் என்ற செய்தி நம்மை வியக்க வைக்கிறது. தமிழ் மீது இருந்த பற்று காரணமாகத்தான் இந்த நன்நாளை அவர் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தோடு காமராஜர் முதலமைச்சராக பொறுப்பேற்றதையும் அன்றைய தினம் தமிழ் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    அடிமட்ட தொண்டனாக இருந்த ஒருவர், தனது கடுமையான உழைப்பினால் படிப்படியாக உயர்ந்து, அர்ப்பணிப்பு நிறைந்த தியாகத்தால் சிறந்து, நேர்மையிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்து, நாட்டினையே ஆளக்கூடிய முதல்வராக வருகிறார் என்றால் அது அனைத்து தமிழ் மக்களுக்கும் பெருமை அல்லவா? இதை எல்லாம் சீர்தூக்கி பார்த்து தான் தந்தை பெரியார், பச்சை தமிழர் காமராஜர் முதல்வராகியிருக்கிறார் என்று பூரிப்போடு பாராட்டி மகிழ்ந்தார்.

    ஒரு மாணாக்கரின் அடிப்படைக் கல்வி அவனது தாய் மொழியிலேயே தான் இருக்க வேண்டும் என்பதே காந்தியின் கருத்தாகும். பல்வேறு மொழி அறிஞர்களும் இக்கருத்தையே வலியுறுத்தி வந்துள்ளனர். காமராஜர் ஆட்சி காலத்தில் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியான தமிழிலே தான் அனைத்தும் பயிற்றுவிக்கப்பட்டது. 6-ம் வகுப்பில் இருந்து தான் ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரை ஏ,பி,சி,டி என்பதே எந்த மாணவர்களுக்கும் தெரியாது என்ற நிலைதான் இருந்து வந்தது.

    ஆனால் இப்போதெல்லாம் எல்.கே.ஜி.யிலேயே இன்னும் சொல்லப்போனால் அதற்கு முன்பாகவே ஏ,பி,சி,டி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் நம்மை விட்டு அகன்றாலும் ஆங்கில மோகம் மட்டும் நம்மை விட்டு அகலமாட்டேன் என்கிறது. தங்கள் பிள்ளைகள் மம்மி, டாடி என்று அழைப்பதிலேயே பெற்றோர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    தமிழின் மீது காமராஜர் கொண்டிருந்த பற்றினை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர் வாழ்ந்து முடித்த திருமலைபிள்ளை சாலை இல்லத்திற்கு சென்றால் தெரிந்து கொள்ளலாம். அவர் படித்து மகிழ்ந்த கம்பராமாயணம், பாரதியார் கவிதைகள், திருக்குறள், சங்க இலக்கிய நூல்கள் எல்லாம் அங்கே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். ஆனால் இதையெல்லாம் ஒருபோதும் அவர் வெளிக்காட்டியதே இல்லை. தேவைப்படும்போது, பொதுக்கூட்டங்களில் பேசும்போது பாரதியார், கவிமணி, நாமக்கல் கவிஞர் போன்ற மூத்த கவிஞர்களின் கவிதைகளை உதாரணம் காட்டி பேசுவார். அவ்வளவுதான்.

    பள்ளியிலே படிக்கும் பொழுதே மாணவர்கள் மனதிலே தமிழ் பற்று வேரூன்றி நிற்க வேண்டும் என விரும்பினார் காமராஜர். கல்லூரியிலும் தமிழே பயிற்று மொழியாக இருக்கும்படி உத்தரவு பிறப்பித்து அதனை அமல்படுத்தினார்.

    சங்க இலக்கிய நூல்களில் திருக்குறளின் மீது காமராஜருக்கு தணியாத தாகம் இருந்தது. ஒன்றே முக்கால் அடியில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பெருமை உடைய திருக்குறளை எல்லோரும் கட்டாயம் படித்தாக வேண்டும் என்று பள்ளிகளில் திருக்குறளை கட்டாய பாடமாக்கினார்.

    தமிழ் இலக்கியங்களை கற்றுக் கொடுக்கும் தமிழ் கல்லூரிகள் காமராஜர் ஆட்சியில் அமருவதற்கு முன்பே இயங்கி வந்தன. கரந்தை தமிழ் சங்க கல்லூரியும், காரைக்குடியில் ராமசாமி தமிழ் கல்லூரியும், தருமபுர ஆதீனம் தமிழ் கல்லூரியும் திருப்பத்தூர், திருவை யாறு, பேரூர் மற்றும் மயிலம் போன்ற இன்னும் பல ஊர்களிலும் தமிழ் கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டன. இக்கல்லூரியில் பயின்றவர்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். காமராஜர் ஆட்சியில் இவை அனைத்தும் நடந்தன. அவர்கள் வித்துவான் என்றும் அழைக்கப்பட்டனர். வித்துவான் என்பது வடமொழியாக இருப்பதால் புலவர் என்று மாற்றப்பட்டது கலைஞர் ஆட்சியில் தான்.

    இளங்கலை பட்டம் பெற்று ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு சமமாக புலவர்கள் கருதப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்ததோடு, அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் தலைமை ஆசிரியராகவும் ஆகலாம் என்ற உத்தரவையும் காமராஜர் தான் பிறப்பித்தார். இந்த உத்தரவு தமிழ் அறிஞர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

    பல ஆங்கில சொற்கள் நமது தமிழ் மொழியோடு சேர்ந்து புழக்கத்திலேயே வந்துவிட்டது. அதனை தவிர்க்க முடியவில்லை. தலைமை ஆசிரியரை எல்லோரும் ஹெட் மாஸ்டர் என்றே அழைத்தனர். உடற்பயிற்சி ஆசிரியரை எல்லோரும் டிரில் மாஸ்டர் என்றே அழைத்தனர். ஓவிய ஆசிரியரை டிராயிங் மாஸ்டர் என்றும், தமிழ் ஆசிரியரை தமிழ் பண்டிட் என்றும், இந்தி ஆசிரியரை இந்தி பண்டிட் என்றும் அழைக்கும் பழக்கமே மேலோங்கி இருந்தது.

    இதேபோன்று தான் பவுதீகத்தை பிசிக்ஸ் என்றும், விஞ்ஞான பாடத்தை சயின்ஸ் என்றும், சரித்திர பாடத்தை ஹிஸ்டரி என்றெல்லாம் அழைத்தது மட்டுமல்ல, பாடப் புத்தகத்தில் பல சொற்களுக்கு சரியான தமிழாக்கம் இல்லாமலும் இருந்தது. இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்ற சிந்தனை அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்தபோதே வந்துவிட்டது.

    அதையொட்டிதான் தமிழ் வளர்ச்சி கழகம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு அதன் மூலம் தமிழ் கலைக்களஞ்சியம் என்ற அகராதியின் முதல் பதிப்பு 1957-ல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து காமராஜர் ஆட்சி காலம் வரை, அதாவது 1963 வரை 9 தொகுதிகள் தமிழ் கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.

    இந்த தமிழ் கலைக்களஞ்சியத்திலே உள்ள சிறப்பு என்னவென்றால், புழக்கத்தில் உள்ள ஒவ்வொரு ஆங்கில சொல்லுக்கும் அர்த்தமும் சொல்லப்பட்டு அதற்கு சமமான தமிழ் சொல்லும் விளக்கமும் அதிலே இடம் பெற்றிருக்கும் அளவுக்கு இந்த அகராதி தயாரிக்கப்பட்டது. இந்த அகராதி வெளிவந்ததற்கு பின்னாலே தான் பாட புத்தகங்களில் பொருத்தமான சொற்கள் பயன்படுத்தப்பட்டு அவை புழக்கத்தில் கொண்டுவரப்பட்டன.

    உதாரணத்திற்கு ஒன்று சொல்ல வேண்டும் என்றால் கணிதத்திலே பித்தாகரஸ் விதி என்று ஒன்று இருந்தது. அதனை பித்தாகரஸ் தேற்றம் என்றும் அதிலே வருகிற ஈக்வேஷன்களை சமன்பாடுகள் என்றும் மாற்றி தமிழ் சொற்றொடர்களை புழக்கத்தில் கொண்டு வந்தனர். இப்படி ஒவ்வொரு பாடத்திலும் செய்தனர்.

    ஆசிரியர்களில் தமிழ் ஆசிரியரை மட்டுமே தமிழ் ஐயா என்று அழைத்தனர். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் அவர்கள் கற்பிக்கும் துறையை சொல்லி மேக்ஸ் டீச்சர் என்றும், ஹிஸ்டரி டீச்சர் என்றும் அழைக்கப்பட்டனர். டீச்சர் என்ற ஆங்கில சொல் நம்மோடு அந்த காலத்தில் இருந்து ஒன்றிப்போய்விட்டது. இன்றைக்கும் பெண் ஆசிரியர்களை டீச்சர் என்று அழைக்கும் வழக்கம் தானே இருந்து வருகிறது.

    கிளாசில் அட்டன்டன்ஸ் எடுத்தாச்சா என்று தான் கேட்பார்கள். மாணவர்களும் ஆஜர் என்று பதில் உரைப்பார்கள். ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாதல்லவா.

    காமராஜர் ஆட்சி காலத்தில் படிப்படியாக அட்டன்டன்ஸ் என்பது வருகை பதிவேடு ஆகவும் ஆஜர் என்று சொல்வதற்கு பதிலாக உள்ளேன் ஐயா என்றும் சொல்லிப் பழக்கப்படுத்தப்பட்டது.

    காமராஜர் ஆட்சி காலத்தில் இந்த மாற்றங்கள் ஆரம்பமாகி நடக்கத் தொடங்கின. ஆனால் இவற்றையெல்லாம் கலந்து பேசி நடைமுறைப்படுத்துகிற பணியினை தமிழறிஞர்களிடமே விட்டுவிட்டார் காமராஜர். அவர்களின் ஆலோசனைப்படியே படிப்படியாக தமிழ் சொற்கள் புழக்கத்திற்கு வந்தன.

    தமிழ் வளர்ச்சியில் காமராஜர் எத்தனை அக்கறையும் ஆர்வமும் காட்டினார் என்பதற்காக தான் இவைகளையெல்லாம் இங்கே குறிப்பிட்டுள்ளேன். இன்னும் காமராஜர் தமிழ் வளர்ச்சிக்கு என்னென்ன செய்தார் என்பதை அடுத்த வாரத்தில் பார்ப்போம்.

    • பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி. பேச்சு
    • வசதிகளை அதிகரித்தால் கன்னியாகுமரி உலகத்தரம் வாய்ந்த ஒரு சுற்றுலா நிலையமாக அமையும்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்றத்தில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை சமர்ப்பித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பி னர் விஜய்வசந்த் பேசிய தாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்களை மேம்படுத்த தேவை யான நடவடிக்கை களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். சுற்றுலா பயணி களை கவர்ந்து இழுக்க குஜ ராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்தது போன்று கன்னி யாகுமரியில் பெருந்தலைவர் காமராஜ ருக்கு சிலை அமைக்க வேண்டும்.

    மேலும் குமரி மாவட்டத் தில் தேவையான ரெயில் மற்றும் விமான போக்குவரத்து வசதி கள் இல்லாததால் கன்னி யாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலாவுக்கு வர பிற மாநில மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சுற்றுலா பணிகள் பயன் பெறும் வகையில் முதல் கட்ட நடவடிக்கையாக கன்னி யாகுமரிக்கு வரும் ரெயில்களின் எண்ணிக் கையை அதிகப்படுத்தி குமரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான விமான நிலையத்தையும் அமைக்க வேண்டும்.

    ஒரு புறம் கடலாலும் மற்றொரு புறம் மலைகளா லும் சூழப்பட்டு பச்சை பசேல் என இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத் தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தரு கின்றனர். ஆனால் வசதி களை அதிகரித்தால் கன்னி யாகுமரி உலகத்தரம் வாய்ந்த ஒரு சுற்றுலா நிலையமாக அமையும். மேலும் மிகப் பழமையான வரலாற்று சிறப்புமிக்க வழிபாட்டு தலங்களை கொண்டி ருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வழி பாட்டுத் தலங்களை மேம்ப டுத்தி ஒரு ஆன்மீக சுற்றுலாத் தலமாக கன்னியாகுமரி மாவட்டத்தை மாற்ற இயலும்.

    மகா சிவராத்திரி அன்று குமரி மாவட்டத்தில் அமைந் துள்ள 12 சிவாலயங்க ளுக்கு இடையே சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசின் பிரசாத் திட்டத்தின் மூலம் இந்த கோவில்களை இணைக்கும் சாலைகளை மேம்படுத்தி மக்கள் அதிகமாக இந்த கோவில்களுக்கு சென்று வர கோவில்களின் சுற்று வட்டம் மற்றும் இணைப்பு சாலைகளை மேம்படுத்த வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளை சீர மைத்து மேம்படுத்தினால் இந்த கடற்கரைகள் உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களாக மாறி லட்சக்க ணக்கான சுற்றுலா பயணி களை கவர்ந்து இழுக்க முடியும். மேலும் அழகான மலைத்தொடர்கள், அருவி கள், அணைகள் என சுற்று லாவுக்கு தேவையான அனைத்தையும் வரமாக பெற்றுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அதிக கவனம் செலுத்தி சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் இங்குள்ள மக்களுக்கு அது வேலைவாய்ப்புக்கான வழிவகையை செய்து தரும்.

    குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் பட்டே லுக்கு 600 அடி உயரத்தில் சிலை அமைத்து சுற்றுலா பயணிகளை ஈர்த்தது போல கன்னியாகுமரியிலும் முன் னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜ ருக்கு வானளாவிய சிலை அமைத்து உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்க வேண் டும் என விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

    • நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கிளை நதியான மணிமுத்தாறு நதியின் குறுக்கே கட்டப்பட்டதுதான் மணிமுத்தாறு திட்டம்.
    • பெரியார் நீர்த்தேக்கத்தில் இருந்து பிரிக்கப்படும் கூடுதல் நீரை இணைத்து, மிகுந்த பாதுகாப்போடு வைகை ஆற்றின் குறுக்கே 2.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது தான் வைகை அணை திட்டம்.

    காமராஜருடைய தோற்றத்தைப் பார்த்தால் பழமையில் ஊறித் திளைப்பவரைப் போல் தோன்றும். ஆனால் புதுமைகளை வரவேற்பதிலும், அவற்றினை நடைமுறைப்படுத்துவதிலும், அவர் தயங்கியதே இல்லை.

    விவசாயம் என்பது நமது பாரம்பரியமான தொழில். மனித குலத்திற்கே உயிர்நாடியான தொழில். அந்த விவசாயம் தழைத்தால் தானே மக்கள் பசியின்றி வாழ முடியும். தமிழகத்தில் விவசாய நிலங்களுக்குப் பஞ்சமில்லை. அதற்கேற்றாற்போல தமிழகத்தில் நீர்வளம் இருந்தால் தானே விவசாயத்தைப் பெருக்க முடியும்.

    1953-ல் ஆந்திர மாநிலம் பிரிந்தபோது மிகப்பெரிய நதிகளான கிருஷ்ணாவும் கோதாவரியும் அவர்களுக்குப் போய் விட்டது. கையிலே கிடைத்தது காவிரி ஒன்றுதான். அதிலும் நீர்ப்பங்கீட்டில் நமக்கும் கர்நாடகத்திற்கும் இன்றளவும் பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இருந்தாலும் காமராஜர் அவைகளைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. இருக்கவே இருக்கிறது உள்ளூர் நதிகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள். இவற்றை சீர்திருத்தி, மேம்படுத்தி விவசாயத்தை எப்படிப் பெருக்குவது என்ற சிந்தனைதான் அவர் மனதிலே ஓடிக்கொண்டிருந்தது.

    மாகாணப் பிரிவினையின்போது ஆந்திராவுக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு 406 லட்சம் ஏக்கராகவும், சென்னை மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு 385 லட்சம் ஏக்கராகவும் இருந்தது. நம்மிடமிருந்த நிலப்பரப்பில் மைசூர் (கர்நாடகா) மாகாணத்திற்கு மேலும் 25 லட்சம் ஏக்கர் பரப்பு ஒதுக்கப்பட்டது. ஆனால் மக்கள்தொகை எண்ணிக்கை கணக்கில் ஆந்திராவுக்கு 2.57 கோடியாகவும், தமிழகத்திற்கு 3.57 கோடியாகவும் இருந்தது.

    மக்கள் தொகைக் கணக்கில் சென்னை மாகாணம் கூடுதல் எண்ணிக்கையில் இருந்தாலும், அவ்வளவு பேருக்கும் உணவு, குடிநீர் என்று எல்லாத் தேவைகளையும் மாநில அரசு தானே வழங்கி ஆக வேண்டும். தமிழகத்தின் முதல்-அமைச்சர் என்ற முறையில் அதற்கும் காமராஜர் தானே தீர்வு கண்டாக வேண்டும்.

    நிலப்பரப்பு என்று வரும்போது, ஊருக்காக ஒதுக்கப்படுகிற இடத்தையும், தரிசாகக் கிடக்கிற இடங்களையும் மற்ற உபயோகத்திற்காக ஒதுக்கப்படுகிற இடங்களையும் கழித்து விட்டுப்பார்த்தால் தமிழகத்தில் விவசாயத்திற்காக கிடைத்த இடம் 204 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே.

    அப்போதைய சென்னை மாகாணத்தின், மக்கள்தொகை 3 கோடியே 37 லட்சமாக இருந்தது. பயிர் விளைவிக்கப்படுகிற 143 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில், 53 லட்சம் ஏக்கர் மட்டுமே நீர்ப்பாசன வசதி பெற்றிருந்தது. இவற்றில் 40 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு அரசாங்கத்தால் பராமரிக்கப்படுகிற ஏரி, குளம், வாய்க்கால்களில் இருந்து பாசன வசதி கிடைத்தது. மீதி உள்ள 13 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, விவசாயிகளுக்குச் சொந்தமான கிணறுகளில் இருந்து நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது என்ற செய்தியை அப்போதைய அமைச்சர் பக்தவச்சலம் அவர்கள் 2.10.1961-ல் வெளியான நவசக்தி நாளிதழில் ஒரு பேட்டியில் தெரிவித்ததை இங்கு பதிவிட்டுள்ளேன்.

    ஆக, சென்னை மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்த வேண்டுமென்றால், உணவுப் பொருள் உற்பத்தியில் முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டார் காமராஜர். எனவே நீர்ப்பாசனத் திட்டங்களை வகுக்கத் தொடங்கினார்.

    நீர்ப்பாசனத் திட்டம் என்றால் அணைக் கட்டுக்களை உருவாக்க வேண்டும். கோடிக்கணக்கில் அதற்காக ஏராளமான நிதி தேவைப்படுகிறது. கால்வாய்கள் மூலம் நீரைக் கொண்டு வருவதற்கு அதிக அளவு நிதி தேவைப்படாது. எனவே எங்கெங்கு அணைக்கட்டுகள் கட்ட வேண்டும், எங்கெங்கு கால்வாய்கள் வெட்ட வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துக் கொண்டு களத்திலே இறங்கினார் காமராஜர்.

    பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்திற்கு காமராஜர் எடுத்துக்கொண்ட முயற்சி கொஞ்ச நஞ்சமல்ல. நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, தேக்கடி என்ற ஐந்தாறுகளையும், ஆழியாறு என்ற ஆற்றையும் இணைத்து உருவாக்கப்பட்ட உன்னதமான திட்டமாகும். இத்திட்டத்தில் 6 பெரிய அணைகளும், கால்வாய்களும், சிறிய அணைகளும் அடங்கி இருந்தன.

    தமிழகத்தின் ஆனைமலையில் உற்பத்தியாகும் நீர், கேரளா வழியாக அரபிக்கடலிலே போய் வீணாகச் சேருகிறது. இதனைத் தடுத்து நிறுத்தி நீர்ப்பாசனத்திற்கும், மின் உற்பத்திக்கும் பயன்படும் வகையில், இரண்டு மாநிலங்களும் பலன்பெறும் வகையில், கேரள அரசோடு பேசி ஓர் உடன்பாட்டினை ஏற்படுத்தினார் காமராஜர். இந்தத் திட்டம் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இடம் பெற்றது. இதன் மதிப்பீடு 48 கோடியாகும். இதனால் 2.40 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி கிடைத்ததுடன் 1,85,000 கிலோ வாட் மின்சாரமும் உற்பத்தியானது.

    சென்னை, கேரளா, இரண்டு மாநிலங்களின் நட்புறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த திட்டத்தை 1961-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் நாளில் மிகுந்த மகிழ்ச்சியோடு பாரதப் பிரதமர் நேரு வருகை தந்து தொடங்கி வைத்தார். இத்திட்டம் கையெழுத்தானபோது கேரள முதல்வர் கோவிந்தமேனன் உட்பட அனைத்து அமைச்சர்களும் எழுந்து நின்று கைதட்டி காமராஜரைப் பாராட்டினர்.

    1948-ம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டது. நடுவிலே பணிகளில் தொய்வு ஏற்பட்டது. காமராஜர் ஆட்சிக்கு வந்து, கவனம் செலுத்தியதற்குப் பின்பு தான் 1958-ல் இப்பணி முடிவடைந்தது. இதன் மதிப்பீடு ரூ.10 கோடியாகும். இத்திட்டத்தின் மூலம் 1,94,000 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது. மேலும் உணவுப் பொருட்களும், பருத்தியும் உற்பத்தி செய்யப்பட்டன.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கிளை நதியான மணிமுத்தாறு நதியின் குறுக்கே கட்டப்பட்டதுதான் மணிமுத்தாறு திட்டம். இத்திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 1.03 லட்சம் ஏக்கர் பயிரிடப்படும் பயிர்கள் பயன்பெறும். ரூ.5.05 கோடி செலவில் மதிப்பீடு செய்யப்பட்ட இத்திட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராகவும், நெல்லை மாவட்டத்தின் மூத்த காங்கிரஸ் தலைவராகவும் விளங்கிய கே.டி.கோடல்ராம் அவர்கள் காமராஜருக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்டதோடு பொதுமக்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் வசூல் செய்த செய்தியினை "காமராஜர் ஓர் வழிகாட்டி" என்ற நூலில் ஆலடி அருணா (முன்னாள் எம்.பி.) பதிவு செய்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

    பெரியார் நீர்த்தேக்கத்தில் இருந்து பிரிக்கப்படும் கூடுதல் நீரை இணைத்து, மிகுந்த பாதுகாப்போடு வைகை ஆற்றின் குறுக்கே 2.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது தான் வைகை அணை திட்டம். இத்திட்டத்தின் மூலம் மதுரை, திருமங்கலம், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி பெற்றன. 20,000 ஏக்கருக்கு மேல் பயன் பெற்றன. 1959-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க முக்கியமான செய்தி என்னவென்றால், திட்டமிடப்பட்ட மதிப்பீட்டுத் தொகையில் 50 லட்சம் ரூபாய் மீதமாக இருந்தது தான்.

    மதுரைக்கு செல்லும்போது எல்லாம் வைகை அணைக்கட்டு வேலைகள் எப்படி நடக்கிறது என்று நேரிலே காமராஜர் சென்று பார்வையிடுவார். அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்துவார். அதன் பயனாக மிஞ்சியதுதான் இந்த 50 லட்சம் ரூபாய்.

    இந்த செய்தியை காமராஜரின் கவனத்திற்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். சற்று யோசித்த காமராஜர், வைகை அணையை சுற்றி மிகச் சிறப்பான வகையிலே, அதன் எழிலை கூட்டும் வகையிலே, பூங்கா ஒன்று அமைத்திடுங்கள். ஒரு சுற்றுலா தளமாகவே அதை ஆக்கிடுங்கள். அதன் மூலம் அரசுக்கு வருவாய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று யோசனை சொல்லி உத்தரவிட்டார்.

    அதன்படி அதிகாரிகள் மிகுந்த வேகமாக செயல்பட்டு வைகை அணையை சுற்றி அழகான பூங்காவை அங்கே உருவாக்கினர். பார்த்தவர்கள் எல்லோரும் வியந்து நிற்கும் வகையிலே அந்தப் பூங்கா உருவானது. அதை பார்வையிட பொதுமக்கள் வெளியூர்களில் இருந்து சாரை சாரையாக வர ஆரம்பித்தனர். இதிலே குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் திரைப்படத்துறையினர் காதல் காட்சிகளுக்கான படப்பிடிப்புகளை இங்கே அடிக்கடி நடத்தினர். காமராஜர் ஏற்கனவே சொன்னது போல அரசாங்கத்திற்கு வருமானமும் அதன் மூலம் கிடைத்தது.

    அப்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த திருவள்ளூர் தாலுகாவில் அடங்கியுள்ளது தான் ஆரணி ஆறு. இந்த ஆற்றின் குறுக்கே ஓர் அணை கட்டப்பட்டு முதற்கட்டமாக 3 ஆயிரம் ஏக்கர் நிலத் திற்கும் படிப்படியாக 13 ஆயிரத்து 600 ஏக்கருக்கும் பாசன வசதி கிடைக்குமாறு அமைக்கப்பட்டு, அந்த பகுதியில் விவசாயம் பெருகியது.

    கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி ஆற்றின் குறுக்கே 2.97 கோடி மதிப்பீட்டில் ஒரு நீர்தேக்கம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் 7,550 டன் உணவுப் பொருட்களின் விளைச்சலுக்கு வழி வகுக்கப்பட்டது. 21,923 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. இந்த திட்டம் 1958-ல் முடி வடைந்து ஆகஸ்ட் முதல் தேதியில் நடைமுறைக்கு வந்தது.

    வட ஆற்காடு மாவட்டத்தில் (தற்போது திருவண்ணாமலை மாவட்டம்) சாத்தனூர் அருகே ஓடும் தென்பெண்ணை குறுக்கே ஒரு நீர்த்தேக்கம் உருவாக்கிட திட்டமிடப்பட்டது. 2.89 கோடி முதலீட்டில் ஏறக்குறைய 40,000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டது.

    ஒகேனக்கல்லில் இருந்து வரும் உபரி நீர் வீணாக போகாமல் கிருஷ்ணகிரி தாலுகாவில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு 7,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் 1956-ல் தொடங்கப்பட்ட இந்த நீர்த்தேக்கம் விரைந்து கட்டி முடிக்கப்பட்டு 1957-ல் பயன்பாட்டுக்கு வந்தது.

    மேட்டூர் கால்வாய் திட்டம் ஒன்று பன்னோக்கு பயனுறும் வகையிலே உருவாக்கப்பட்டது. கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்கள் பயன்பெறும் வகையிலே இந்த திட்டம் 5.45 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு விவசாயம் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டது.

    மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து ஒரு கால்வாய் உருவாக்கப்பட்டு அதற்கு காவிரி கழிமுக வடிகால் திட்டம் என்று பெயரிடப்பட்டு பல நீர் கால்வாய்களை இத்துடன் கொண்டு வந்து இணைக்கப்பட்டு ஆண்டொன்றுக்கு 3.8 லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கு இவைகள் உருவாக்கப்பட்டன.

    திருச்சி மாவட்டத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு காவிரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை பயன்படுத்தும் வகையில் இது அமைக்கப்பட்டது. ஒரு கோடியே 57 லட்சம் செலவில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தின் மூலம் 24,114 ஏக்கர் நிலப்பரப்பு பாசனம் பெற்றது.

    காவிரியின் மேல் அணைக்கட்டில் இருந்து இருந்து 54 மைல் நீளமுள்ள கால்வாய் வெட்டப்பட்டு, லால்குடி உடையார் பாளையம் தாலுகா வழியே இது அமைக்கப்பட்டது. அதனால் அப்பகுதி விவசாயம் தழைத்தது.

    திண்டிவனம் அருகே உள்ள வீடூர் கிராமத்தில் 1958-ல் இந்த வீடூர் அணைக்கட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தினால் 3,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. அப்படி பாசன வசதி பெற்ற கிராமங்களில் புதுவை மாநிலத்தில் உள்ள 1000 ஏக்கர் நிலமும் இதிலே அடங்கும்.

    புதிய மேல்நிலைக் கால்வாய்த் திட்டம் ஒன்று 86 மைல் நீளம் கொண்ட அளவிலே வெட்டப்பட்டு 8,622 ஏக்கர் நிலங்கள் திருச்சி மாவட்டத்திலே பயன் பெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொடையாறுப் பகுதியில் வாய்க்கால்களை மறுசீரமைப்புச் செய்து 16 லட்சம் செலவிலே 2.92 லட்சம் ஏக்கர் பலன் பெறும் வகையிலே, ஏரிகளைப் புதுப்பிக்கும் வேலைகள் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தின் 2-வது கட்டமாக கிட்டத்தட்ட 41 லட்சம் செலவிலே 9,200 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும் வகையிலே உருவாக்கப்பட்டன.

    இவை போக இன்னும் பல ஆறுகள், குளங்கள் கண்மாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, நீர் நிலைகள் மேம்படுத்தப்பட்டு விவசாயம் தழைக்கும் வகையிலே, அல்லும் பகலும் சிந்தித்துப் பாடுபட்டார் காமராஜர்.

    இப்படியெல்லாமா? காமராஜர் தமிழகத்தின் பாசனத்தை உயர்த்துவதற்குப் பாடுபட்டார் என்பது இக்கால இளைஞர்களுக்குப் புதிய செய்தியாக இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் 100 சதவீதம் உண்மையான நிகழ்வுகளாகும். இவையெல்லாம் இன்றும் நடைமுறையில் நமக்குப் பலன் கொடுத்து பயணித்து வருகிறது. நம்மை வாழ வைத்து வரும் திட்டங்களாகும். ஒரு மனிதன் மன உறுதியுடன் செயல்பட்டால், உலகத்தையே தனது விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். சாதித்துக் காட்டலாம் என்ற "கோதே" என்ற அறிஞரின் பொன்மொழிதான் காமராஜரைப் பொறுத்தவரை நினைவுக்கு வருகிறது.

    அடுத்த வாரம் சந்திப்போம்.

    • தான் முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் மாணவர்களுக்கு இலவசக்கல்வி வழங்குவதையும், மதிய உணவு வழங்குவதையும் கையிலே எடுத்துக் கொண்டார் காமராஜர்.
    • பள்ளிக்கூடம் போனால் நிச்சயம் சாப்பாடு உண்டு என்று மாணவர்களை எண்ண வைத்ததால், மாணவர்களின் வருகை நாளாக... நாளாக பெருகியது.

    மகாகவி பாரதியின் மீதும் அவருடைய புரட்சிக் கவிதைகளின் மீதும் காமராஜருக்கு மிகப்பெரிய ஈர்ப்பு உண்டு. சுதந்திரத்தின் அருமை தெரியாமல் உறங்கிக்கிடந்த மக்களை தனது உணர்ச்சிமிக்க கவிதைகளால் தட்டி எழுப்பிய மாபெரும் கவிஞரல்லவா பாரதியார். பொதுக்கூட்டங்களில் காமராஜர் பேசுகிற பொழுது பாரதியார் கவிதைகளை மேற்கோள் காட்டிப் பேசுவார். ஏறக்குறைய பாரதியார் கவிதைகள் அனைத்துமே அவருக்கு மனப்பாடம் என்றே சொல்லலாம். யாராவது பாரதியார் கவிதையைத் தவறாக மேடையில் உச்சரித்து விட்டால் கோபம் வந்துவிடும். உண்மையான வரிகளைச் சொல்லி, திருத்தம் சொல்லி அவர்களைப் பேச வைப்பார்... பாட வைப்பார்.

    1969-ம் ஆண்டு சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பாரதியார் கவியரங்கத்தில் கலந்துகொண்டு நான் முதல் பரிசாக காமராஜர் திருக்கரங்களால் 'பொற்கிழி' பெற்றதை இப்போது நினைத்து பார்க்கிறேன். வருங்காலத்தில் நீயும் பெரிய கவிஞனாக வருவாய் என்று அப்போது என்னை வாழ்த்தியதையும் நினைத்துப் பார்க்கிறேன். அவர் பொற்கிழி வழங்கும் புகைப்படம் என் வீட்டிலே கம்பீரமாக காட்சி அளிப்பதைப் பார்த்து பாராட்டாதவர்களே இல்லை.

    என்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து எழுதுகிறார் பாரதியார். அற்புதமான இந்தக் கவிதை வரிகள் காமராஜர் தமிழகத்தில் கல்விப் புரட்சி ஏற்படுத்துவதற்கு ஓர் உந்து சக்தியாகவே இருந்திருக்கிறது. அது மட்டுமல்ல.

    வயிற்றுக்குச் சோறிட வேண்டும். இங்கு

    பயிற்சி பல கல்வி தந்து- இந்தப்

    பாரதியின் இந்த வைர வரிகளையும் அடிக்கடி பொதுக்கூட்டங்களில் பேசும்போது காமராஜர் பயன்படுத்துவார். காமராஜருடைய அடிமனதில் இவை ஆழமாக புதைந்திருக்க வேண்டும். இருந்திருக்க வேண்டும். வாய்ப்பு வரும்போது இந்த வரிகளை அர்த்தப்படுத்தி செயல்படுத்த வேண்டும் என்ற வைராக்கியம் மனதிலே வேரூன்றி இருந்திருக்கிறது. அதனால்தான், தான் முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் மாணவர்களுக்கு இலவசக்கல்வி வழங்குவதையும், மதிய உணவு வழங்குவதையும் கையிலே எடுத்துக் கொண்டார் காமராஜர்.

    கோட்டையிலே அமர்ந்து கொண்டு கோப்புகளை படித்து உத்தரவு பிறப்பித்தால் மட்டும் போதாது. நாட்டு மக்களை நாடி பிடித்துப் பார்த்து அவர்களின் தேவை அறிந்து சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தார் காமராஜர். அதற்காக அடிக்கடி கிராமங்களை நோக்கிப் பயணப்பட்டார்.

    ஒருமுறை நெல்லை மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதுதான், திருப்பு முனையான அந்த நிகழ்வு நடைபெற்றது. செல்லும் வழியில் ரெயில்வே கேட் மூடியிருந்ததால் ஓட்டுநர் காரை ஒரு ஓரமாக நிறுத்தினார். காரைவிட்டு இறங்கிய காமராஜரை அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் சூழ்ந்து கொண்டனர். காமராஜர் யாரென்று அந்தச் சிறுவர்களுக்குத் தெரியாது. அந்தக் காலங்களில் ஒரு கார் ஒரு கிராமத்தின் உள்ளே நுழைகிறதென்றால் அந்தக் கார் அந்த சிறுவர்களுக்கு அதிசய பொருளாகிவிடும். அப்படித்தான் அந்தச் சிறுவர்கள் காரைச் சூழ்ந்து நின்றார்கள். அழுக்கடைந்த சட்டை, அழுக்கடைந்த டவுசர். எண்ணெய் இல்லாத வாரப்படாத தலைமுடி. அனைத்து சிறுவர்கள் கைகளிலும் ஒரு குச்சி. அந்தக் காட்சி காமராஜரை கண்கலங்க வைத்தது.

    இதுதான் நமது நாட்டின் நிலைமையா? பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி வழங்கிவிட்டோம் என்றல்லவா நினைத்திருந்தேன். இந்த இளஞ்சிறார்கள் இங்கே மாடு மேய்த்துக் கொண்டல்லவா இருக்கிறார்கள். இவர்கள் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை? மிகுந்த கவலையோடு ஒரு சிறுவனிடம் பள்ளிக்கூடத்துக்கு போகலியா? என்று கேட்டார் காமராஜர். அய்யய்யே பள்ளிக்கூடத்துக்குப் போனா யாரு சோறு போடுவா? சிறுவனின் பதில் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் வந்தது. அப்படியே அதிர்ந்து போய்விட்டார் காமராஜர்.

    காரில் பயணத்தை தொடர்ந்தபோது அந்தச் சிறுவர்கள் ஓடிவந்த காட்சி, அவர்களின் ஏழ்மை நிலை, அந்த சிறுவனின் கேள்வி இவை தான் திரைப்படம் போல் மனத்திரையில் ஓடியது. வயிற்றிலே பசி இருந்தால் எந்தப் பிள்ளை பள்ளிக்கூடத்துக்கு போகும்? பசியை சுமந்துகொண்டு பள்ளிக்கு போனால் பிள்ளைக்கு படிப்பு வருமா? இது காமராஜர் தனக்குள்ளேயே கேட்டுக்கொண்ட கேள்வி?

    காமராஜர் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது விருதுநகரில் படித்த ஷத்திரிய வித்யா பாடசாலை இப்போது அவருக்கு நினைவுக்கு வந்தது. அந்தப் பள்ளிக்கூடத்திற்கு பெயரே 'பிடி அரிசி பள்ளிக்கூடம்' என்பதுதான். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பள்ளிப் பிள்ளைகள் கொண்டு வரும் அந்தப் பிடி அரிசியை சேகரித்து, சமைத்து மாணவச் செல்வங்களுக்கு மதிய உணவாக வழங்கினார்கள் அந்தப் பள்ளி நிர்வாகத்தினர். எப்படிப்பட்ட தொலைநோக்கு சிந்தனை. பட்டினிக்கு விடைகொடுத்த பயனுள்ள ஏற்பாடல்லவா... இது...

    சென்னை மாநகராட்சியிலே 1920 வாக்கில் மேயராக இருந்த சர் பிட்டி தியாகராயர் ஆயிரம் விளக்கு பகுதியிலே இருந்த பள்ளியிலே 165 ஏழை மாணவர்களுக்கு நண்பகல் உணவளித்த செய்தி காமராஜரின் மனத்திரையில் வந்து போனது.

    உடனே ஏதாவது செய்தாக வேண்டும். காமராஜரின் மூளை சுறுசுறுப்பாக இயங்கியது. கல்வித்துறை இயக்குனராக இருந்த நெ.து.சுந்தர வடிவேலுவை அழைத்து இதுகுறித்து ஆலோசனை கலந்தார் காமராஜர். அவர் மட்டுமே இது அற்புதமான திட்டம். இதனால் மாணவர்களின் வருகை நிச்சயம் அதிகரிக்கும் என்றார். ஆனால் சில அதிகாரிகள் எதிர்மறை கருத்துக்களையே தெரிவித்தனர்.

    அப்போது சென்னை பூங்கா நகரில் ஒரு தனியார் பள்ளி நிர்வாகிகள் நடத்திய மாநாடு ஒன்று நடந்தது. அதில் காமராஜர் பேசும் போது...

    அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமை பற்றி நான் கவலைப்படவில்லை. அத்தனை பேரும் படிச்சாகணும். ஏழை பிள்ளையும் இந்தியாவுக்கு சொந்தகாரன் தானே. இதை தள்ளிப் போடக்கூடாது. உடனே செஞ்சாகணும். பட்டினி இருந்தால் படிப்பு வருமா?... இதை நான் ரொம்ப முக்கிய வேலையாக கருதுகிறேன். மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு இதற்காக ஊர் ஊராக சென்று பிச்சை எடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்று உணர்ச்சி பொங்க காமராஜர் பேசிய பேச்சு. மாநாட்டுக்கு வந்தவர்களை வியக்க வைத்தது.

    1956-ம் ஆண்டு மதிய உணவளிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 12 லட்சத்து 5 ஆயிரம் மாணவர்கள் இதன் மூலம் மகிழ்ச்சியோடு மதிய உணவருந்தினார்கள். பின்னர் இந்த திட்டம் படிப்படியாக தமிழகமெங்கும் எப்படி எல்லாம் விரிவுபடுத்தப்பட்டது என்பதை தலைசிறந்த பத்திரிகை ஆசிரியரான கோபண்ணா அவர்கள் தான் தயாரித்த அற்புதமான புத்தகமான காமராஜர் ஒரு சகாப்தம் என்ற நூலிலே மிக தெளிவாக பட்டியலிட்டுள்ளார்.

    1957-58-ல் மதிய உணவளிக்கப்பட்ட பள்ளிகள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 270, மதிய உணவு பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 29 ஆயிரம். 1958-59-ல் பள்ளிகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 552. மாணவர்கள் எண்ணிக்கை 14 லட்சம். 1959- 60-ல் பள்ளிகளின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 136. பயன் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்து 91 ஆயிரம். 1960-61-ல் பள்ளிகள் 24 ஆயிரத்து 586 மாணவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 78 ஆயிரம். 1961-62-ல் பள்ளிகள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 406 மாணவர் எண்ணிக்கை 31 லட்சத்து 50 ஆயிரம் 1962-63-ல் பள்ளிகள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 250-ம் மாணவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 65 ஆயிரம். இலவச கல்வி திட்டத்திற்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள பொருள்களை வழங்கி எப்படி ஆதரவு தெரிவித்தார்களோ அதன் படியே மதிய உணவு திட்டத்திற்கு தேவையான அரிசி, காய்கறி போன்றவற்றையும் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆக இந்த மகத்தான திட்டத்தின் செலவுகளை 60 விழுக்காடு அரசு ஏற்க.. மீதி 40 விழுக்காடு அப்பகுதி மக்கள் ஏற்குமாறு வகுத்து செயல்படுத்தி வெற்றி கண்டார் காமராஜர். மத்திய அரசின் (1957 மற்றும் 1962 ஆண்டுகளில்) ஐந்தாண்டு திட்டமும் இதற்கு பேருதவியாக இருந்தது.

    இப்படி ஒரு அருமையான திட்டத்தை கேள்வியுற்ற அமெரிக்காவின் சர்வதேச தன்னார்வ நிறுவனமான கேர் நிறுவனம், பால்பவுடர், சோள மாவு, தாவர எண்ணெய் போன்ற உணவு பொருட்களை 1961-62 வாக்கிலே வழங்கி, இத்திட்டம் வெற்றி பெற உதவியது. அதனால் இந்த மதிய உணவு திட்டம் நகர்ப்புற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

    பள்ளிக்கூடம் போனால் நிச்சயம் சாப்பாடு உண்டு என்று மாணவர்களை எண்ண வைத்ததால், மாணவர்களின் வருகை நாளாக... நாளாக பெருகியது. எனவே காமராஜர் உண்டி கொடுத்து உயிர் கொடுத்த தலைவராக உயர்ந்து நின்றார்.

    கடையர், கடைத்தேற வேண்டும் என்றால் கல்வி மிக மிக முக்கியம். படிக்கிற கல்வியால் அறிவும், திறமையும் பெற்று நாளடைவில் மாணவர்கள் நல்ல எதிர்காலத்தை காணுவார்கள். நிலம் ஈரமாக இருந்தால் பயிரிடலாம். காய்ந்து, வறண்டு போய் கிடந்தால் எப்படி பயிரிடுவது. அது போலத்தான் பிள்ளையின் வயிறு காய்ந்து போய் கிடந்தால், படிப்பு எப்படி மூளையில் பதியும்?

    அன்னதானம் நமக்கு புதிதல்ல. இதுவரை நம் வீட்டுக்கு வந்தவர்களுக்கு போட்டோம். இப்போது பள்ளி கூடத்தை தேடிப்போய் போட சொல்கிறோம். அப்படி செய்தால் உயிர் காத்த புண்ணியத்தோடு படிப்பு தந்த புண்ணியமும் சேரும். இதை உணர்ந்து, இந்த திட்டம் வெற்றி பெற உழைக்கும் அனைவரையும் மனதார பாராட்டுகிறேன் என்று மதிய உணவு திட்டம் துவக்கப்படும் ஒவ்வொரு கிராமத்திலும் பேசினார் காமராஜர்.

    கவிஞர் இரவிபாரதி

    கவிஞர் இரவிபாரதி

    ஞான துறவியான விவேகானந்தர் ஒரு கூட்டத்தில் இலவசமாக கல்வி வழங்குவது பாராட்டக்கூடிய ஒன்றாக இருந்தாலும்.. அவன் வீட்டிலே வறுமை இருந்தால் வயிற்றில் பசி இருந்தால் எப்படி அவனால் பள்ளி செல்ல முடியும்? ஏழை பையன் கல்வியை நாடி வராவிட்டால், கல்வி தான் அவனை நாடி போக வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்த நாட்டு மக்கள் பெற்றிருக்கும் கல்வி, அறிவாற்றலை பொறுத்தே அமைகிறது. நாம் வாழ்வில் உயர்வடைய வேண்டுமென்றால் பொதுமக்கள் மத்தியில் அனைவருக்கும் போய் சேரும் போது கல்வியை பரப்பியாக வேண்டும். எனவே அதனை செய்வது ஒன்று தான் நாம் சிறப்படைவதற்கு அடை யாளமாக அமையும்.

    சுவாமி விவேகானந்தரின் உத்வேகத்தை இந்த பேச்சின் ஒவ்வொரு வார்த்தையையும், கருத்தில் கொண்டு அதை நடைமுறைபடுத்தி வெற்றி கண்டவர் நமது காமராஜர். 1889-ல் விவேகானந்தர் பேசிய இந்த அற்புதமான பேச்சின் உள்ளடக்கத்தை மூத்த வழக்கறிஞர் க.சக்திவேல் அவர்கள் தான் எழுதிய காமராஜரின் பொற்கால ஆட்சி என்ற புத்தகத்தில் பொருத்தமாக பதிவு செய்துள்ளார்.

    மேற்கொண்டு ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக புத்தகமும், சிலேட்டும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். காமராஜர் படிக்கும் பிள்ளைகளுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது. இது ஏழை வீட்டு குழந்தை. இது பணக்கார வீட்டு குழந்தை என்று எவரும் அடையாளப்படுத்திட கூடாது என்பதற்காக இலவச சீருடை வழங்கும் திட்டத்தையும் கொண்டு வந்து நடைமுறைபடுத்தினார்.

    ஒரு சமயம், காலஞ்சென்ற தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காரில் பயணிக்கிறபோது ஒரு பள்ளியில் மாணவ-மாணவியர் பள்ளி சீருடையில் வருகிற அந்த அழகான காட்சியை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தேன். இலவச கல்வி, மதிய உணவு என்ற மகத்தான திட்டங்களோடு சமமாக வைத்து எண்ணப்பட வேண்டிய அற்புதமான திட்டம் இது. காமராஜரின் தொலைநோக்கு சிந்தனையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று பேசியிருக்கிறார்.

    அடுத்ததாக அறிவு பரவலாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கற்றறிந்த சான்றோர்கள் நூல்களை எல்லாம் பொதுமக்கள் படித்து பயனுற வேண்டும் என்ற எண்ணத்தில், முதலில் மாவட்ட தலைநகரங்களிலும், பின்னர் வாய்ப்புள்ள கிராமங்களிலும் நூல் நிலையங்களை ஏற்படுத்தினார். விலை உயர்ந்த நூல்களை காசு கொடுத்து வாங்க முடியாதவர்கள் படிப்பதற்காக செய்திட்ட பயனுள்ள ஏற்பாடு இது. முதற்கட்டமாக 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்க ஏற்பாடு செய்தார் காமராஜர். இப்படி கல்வி புரட்சியும், அறிவு புரட்சியும், செய்த காமராஜரை என்னென்று சொல்லி பாராட்டுவது.

    அடுத்த வாரம் சந்திப்போம்...

    • இந்நிகழ்விற்கு பரிசுத்தம் கல்லூரி தாளாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். மன்ற துணை தலைவர் ராஜ்மோகன் வரவேற்றார்.
    • ரத்ததான முகாமை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்அமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை கீழவாசலில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்விற்கு பரிசு த்தம் கல்லூரி தாளாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். மன்ற துணை தலைவர் ராஜ்மோகன் வரவேற்றார். டாக்டர் ராதிகாமைக்கேல் சிறப்புரை யாற்றினார்.

    இந்த ரத்ததான முகாமை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் ரத்ததானம் அளித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி முன்னாள் மேலாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ், ரத்தவங்கி மருத்துவ அலுவலர் ஹேனாஜெர்லின், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மாநில செயலாளர் பாதுஷா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சை மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மன்ற கவுரவ தலைவர் பரந்தாமன், செயலாளர் சோலையப்பன், பொருளாளர் ரெங்கசாமி, ஆலோசகர்கள் பாண்டித்துரை, பழனிச்சாமி, துணை தலைவர் சாமுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×