என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கூட்டணி"
- தேர்தல் விதிமுறைகள் நடை முறைக்கு வந்துள்ளதால், புதுவை சட்டசபைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மந்தமாக இருப்பது அந்த கூட்டணி கட்சிகளின் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலையொட்டி சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சட்டசபை வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. தேர்தல் விதிமுறைகள் நடை முறைக்கு வந்துள்ளதால், புதுவை சட்டசபைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டும் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் வெளிநபர்கள், கட்சி நபர்கள், தொகுதி மக்கள் வர அனுமதி கிடையாது.
இதையடுத்து சட்டசபை நுழைவு வாயிலை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு சட்டசபை செயலாளர் தயாளன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சட்டசபை காவலர்கள், நுழைவு வாயிலை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபை ஊழியர்கள் அடையாள அட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
தேர்தல் முடியும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என சட்டசபை அலுவலகம் அறிவித்துள்ளது.
அதேநேரத்தில் சட்ட சபையில் அமைச்சர்கள், சில எம்.எல்.ஏ.க்கள் ரிலாக்சாக அமர்ந்து அரசியல் குறித்த கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அதுபோல் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று காலை வீட்டிலிருந்து சட்டசபைக்கு வரும் முன்பு, நேரு வீதியில் காரை நிறுத்தி விட்டு தனது நண்பரின் வாட்ச் கடைக்கு சென்றார். அங்கு சுமார் 1 மணி நேரம் வாட்ச் கடையில் ரிலாக்ஸாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். பாதுகாவலர்களும் தங்களின் வாகனங்களுடன் அங்கு நின்றிருந்தனர்.
இதுகுறித்து முதல்-அமைச்சரின் ஆதரவாளர்கள் கூறும்போது,
சட்டசபைக்கு சென்றாலும் மக்களை சந்திக்க முடியாது. அதனால் வழக்கமாக வரும் தனது நண்பர் கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில் கூறுகையில், புதுச்சேரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுகிறது. இம்முடிவு அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையிலும் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் நிலவி வருகிறது. பா.ஜனதாவினர் வேட்பாளர் அறிவிப்பில் மும்முரமான முயற்சியில் இருக்கின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள் சட்டசபைக்கு வர அனுமதி இல்லை. இதனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி தற்போது ரிலாக்ஸாக உள்ளார்" என்று தெரிவித்தனர்.
மற்ற மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் சூடுபிடித்த நிலையில் அரசியல்வாதிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகின்ற வேளையில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மந்தமாக இருப்பது அந்த கூட்டணி கட்சிகளின் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
- தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்ட 2 கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
- அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது தொடர்பாக தே.மு.தி.க. இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. கடந்த 1-ந் தேதி அன்று அ.தி.மு.க. குழுவினர் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்து முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் தே.மு.தி.க. நிர்வாகிகள் கடந்த 6-ந் தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்று பேச்சு நடத்தினார்கள். இப்படி 2 கட்ட பேச்சு வார்த்தைகள் அடுத்தடுத்து நடைபெற்ற நிலையில் 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறாமல் இழுபறி நீடித்துக் கொண்டே செல்கிறது. 10 நாட்களாக அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் நேரடியாக நடைபெறாத நிலையில் இரு தரப்பினரும் ரகசியமாக சந்தித்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வருகிற 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்ட 2 கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
இது தொடர்பாக நேற்றே இரு தரப்பிலும் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தனர். ஆனால் நேற்று சந்திப்பு ஏதும் நடைபெறவில்லை. இந்த நிலையில் 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் இன்று நேரில் சந்தித்து பேசி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, அ.தி.மு.க. தரப்பில் இன்று தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பதாக கூறியுள்ளனர். எனவே இன்று தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகும் என்று நம்புகிறோம் என்றார்.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தே.மு.தி.க.வும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
அதே நேரத்தில் மேல்சபை எம்.பி. பதவி கண்டிப்பாக வேண்டும் என்று தே.மு.தி.க. தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. இதில் தான் இழுபறி நீடிக்கிறது.
இதனால் தே.மு.தி.க.வுக்கு மேல்சபை எம்.பி. பதவி கிடைக்குமா? என்பது கேள்விக் குறியாக மாறி உள்ளது.
- அ.தி.மு.க., பா.ம.க. தலைவர்கள் இன்று மாலையில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- பேச்சுவார்த்தையின் போது தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் பா.ம.க. எந்த கூட்டணியில் சேரப்போகிறது? என்பது மிகப் பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் பா.ம.க. ரகசியமாக பேசி வந்தது.
இதில் எந்த அணியில் பா.ம.க. சேரப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக பா.ம.க. இறுதி முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்று பா.ம.க. அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளை கேட்ட நிலையில் 7 தொகுதிகளை ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. சம்மதித்திருப்பதாகவும், இதனால் 2 கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக அ.தி.மு.க., பா.ம.க. தலைவர்கள் இன்று மாலையில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் சென்றிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று பிற்பகலில் சென்னை திரும்புகிறார்.
பா.ம.க. நிர்வாகிகள் இன்று மாலை அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழுவினரை சந்தித்து பேச இருப்பதாகவும் அப்போது நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பின்னர், கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
அதே நேரத்தில் தே.மு. தி.க. நிர்வாகிகளும் அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை இன்று மாலையில் சந்தித்து 3-வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பேச்சுவார்த்தையின் போது தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- 2-ம் கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேட்டி அளித்த தே.மு.தி.க. நிர்வாகிகள் வெற்றிக் கூட்டணியில் இடம் பெற்று உள்ளோம் என்று கூறினார்கள்.
- வருகிற 17-ந் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு. தி.க. தொகுதி பங்கீடு தொடர்பாக 2 கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துள்ளது. கடந்த 1-ந் தேதி அன்று விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்ற அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்தனர்.
இதன் பின்னர் தே.மு. தி.க. குழுவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு நேரில் சென்று பேசினார்கள். 2-ம் கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேட்டி அளித்த தே.மு.தி.க. நிர்வாகிகள் வெற்றிக் கூட்டணியில் இடம் பெற்று உள்ளோம் என்று கூறினார்கள்.
ஆனால் பிரேமலதா அளித்த பேட்டியில் அ.தி.மு.க.வுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவித்தார். இதனால் குழப்பம் நிலவியது.
இருப்பினும் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடை பெற்று வந்துள்ளது. 7 எம்.பி. தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தே.மு.தி.க. கேட்டுள்ளது.
இதில் 4 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வருகிற 17-ந் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றி 3-வது கட்டமாக அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இதன் பின்னர் 2 கட்சிகளின் நிர்வாகிகளும் தொகுதி உடன்பாடு தொடர்பாக நேரில் சந்தித்து கையெழுத்து போட உள்ளனர்.
பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளது.
- தெலுங்கு தேசம் 17 பாராளுமன்றம் 144 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.
- பிரகாசமான எதிர்காலத்திற்கு இந்த கூட்டணி வழிவகுக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. நேற்று ஆந்திர மாநிலம் அமராவதியில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது.
இதில் மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், பா.ஜ.க தேசிய துணை தலைவர் பைஜயந்த், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர் .
இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு 6 பாராளுமன்றம் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பவன்கல்யாண் கட்சி 2 பாராளுமன்ற தொகுதி 21 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. தெலுங்கு தேசம் 17 பாராளுமன்றம் 144 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.
தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளதால் வேட்பாளர்கள் தேர்வில் அந்தந்த கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா கூட்டணி மிகவும் வலிமையானது. ஆந்திர மாநிலத்தை மீட்டெடுக்க மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கு இந்த கூட்டணி வழிவகுக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் சிலக்கலுரி பேட்டையில் வருகிற 17 அல்லது 18-ந் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.அப்போது பா.ஜ.க. வேட்பாளர்களை பொதுக்கூட்ட மேடையில் அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
- நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க பாஜகவுடன் செயல்பட முடிவு.
- மற்ற விபரங்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கப்படும்.
பாராளுமன்ற தேர்தலில் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக முக்கிய கட்சிகளில் கூட்டணி அமைத்து வருகிறது.
அந்த வகையில், அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதாக அக்கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
இதைதொடர்ந்து, மத்திய அமைச்சர் எல்.முருகன், ஹெச்.ராஜனா, தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் சரத்குமாரை சந்தித்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில், நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க பாஜகவுடன் இணைந்து செய்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மற்ற விபரங்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கப்படும் எனவும் சரத்குமார் கூறியுள்ளார்.
- கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு சீட் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் இருவரும் ஆர்வமாக உள்ளனர்.
- எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் பட்டியல் தயாரித்து கொடுத்துள்ளனர்.
சென்னை:
பா.ஜனதா கூட்டணியில் இணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதாக முன்னாள் முதலமைச் சர் ஓ.பன்னீர்செல்வமும், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் அறிவித்தனர்.
தொகுதி பங்கீடு குறித்து இதுவரையில் வெளிப்படையான பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. ஆனால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வினர் பேசி வருகின்றனர்.
தமிழகத்திற்கு பிரதமர் மோடி ஒரு வாரத்தில் 2 முறை சுற்றுப் பயணம் செய்தார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.ஜனதாவிடம் இருந்து அழைப்பு வரவில்லை.
இந்நிலையில் பா.ஜனதா தொகுதி பங்கீடு குழுவினர் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரனை விரைவில் சந்திக்க முடிவு செய்து உள்ளனர். பா.ஜ.க. விடம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் 10 தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளனர். அதே போல் டி.டி.வி. தினகரன் தரப்பிலும் 10 தொகுதிகள் கேட்கின்றனர்.
கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு சீட் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் இருவரும் ஆர்வமாக உள்ளனர்.
ஆனால் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகிய இருவருக்கும் சேர்ந்து பா.ஜ.க. 10 தொகுதிகளை ஒதுக்க முன் வருவதாக தெரிகிறது. அதை இருவரும் சமமாக தலா 5 தொகுதிகள் வீதம் பிரித்து கொள்ளும்படி கூறி உள்ளனர்.
இது குறித்த பேச்சு வார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் பட்டியல் தயாரித்து கொடுத்துள்ளனர். ஓ.பி.எஸ். தரப்பில் யார்-யாருக்கு எந்தெந்த தொகுதிகள் கேட்கப்படுகிறது என்ற விவரம் வருமாறு:-
1.தேனி-ப.ரவீந்திர நாத்குமார், 2. ஸ்ரீபெரும்புதூர், 3.திருச்சி, 4.மதுரை, 5.சிவகங்கை, 6.தஞ்சை, 7.வட சென்னை, 8.காஞ்சிபுரம், 9.கிருஷ்ணகிரி, 10.கோவை
அ.ம.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள்: 1.ராமநாதபுரம், 2.திருநெல்வேலி, 3.திருச்சி, 4.தென்சென்னை, 5.வேலூர், 6.நீலகிரி, 7.நாகப்பட்டிணம், 8.விழுப்புரம், 9.திண்டுக்கல், 10.திருவள்ளூர்
தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனும் தனி சின்னத்தில் நிற்க விரும்புவதாக தெரிவித்து உள்ளனர்.
- இன்றைக்கும் மக்களுக்கு இலவச சோறு போடுகிற நிலைமையில் தான் இருக்கிறோம்.
- போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க.வினரின் போராட்டம் அரசியல்.
வேலூர்:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் இன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேலூர் தாலுக்கா மற்றும் காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொது செயலாளர் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவினை வழங்கினார்.
ஒருவனுக்கு தங்க நிழல் கூட இல்லாமல் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் விண்ணில் ஊர்திகளை செல்கிறோம், சந்திரனுக்கு அனுப்புகிறோம், சூரியனை நெருங்கிவிட்டோம் என்று பேசுவது மனிதாபிமானம் ஆகாது. அது அறிவுடைமைக்கு வேண்டுமானால் எடுத்துக்காட்டாக இருக்கலாம்.
அதனால் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகளை வழங்கி வருகிறோம்.
இன்றைக்கும் மக்களுக்கு இலவச சோறு போடுகிற நிலைமையில் தான் இருக்கிறோம். பிள்ளைகளுக்கு மூன்று வேளை சோறு கூட போட முடியாத சூழ்நிலையில் உள்ளது பஞ்சத்தில் உள்ளார்கள்.
உடுக்கும் உடை கூட யாராவது கொடுக்க மாட்டார்களா என காத்துக்கொண்டி ருக்கிறார்கள். இதை மாற்றுவது தான் நமது அரசு. தேர்தல் முடிந்த உடன் 8 லட்சம் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்படும்.
மக்களுக்கு தொண்டு செய்வது எங்கள் தலையாய கடமை என கருணாநிதி செய்தார் அதை அவரது மகன் மு க ஸ்டாலின் இப்போது செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் முடிவடையும்.
மதுரை எய்ம்ஸ் அவர்கள் கொண்டு வந்த திட்டம் தான், அவர்கள் தான் செயல்படுத்தவில்லை. எங்கள் மீது பழி சொல்வது நியாயம் இல்லை. நாங்கள் தடுத்திருக்கிறோம் என்று ஒரு திட்டத்தை சொல்ல சொல்லுங்கள். மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர், நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர் எந்த திட்டத்தை தடுத்தோமா? இல்லையா என்று சொல்ல வேண்டும்.
பா.ஜ.க.வினர் அ.தி.மு.க. தலைவர்கள் படத்தை தவறாக பயன்படுத்து கிறார்கள் என்று அதிமுகவினருக்கு தான் ரோசம், கோபம் வர வேண்டும்.
பிரதம மந்திரி பத்து முறை கூட வரலாம் யார் வேண்டாம் என்று சொன்னார்கள்.
இவ்வளவு நாள் தி.மு.க.வை பற்றி பேசினாரா பிரதமர். தேர்தல் வரும்போதுதான் தி.மு.க.வை பற்றி பேசுகிறார். ஜல்லிக்கட்டு காலத்தில் வண்டி மாடு ஒரு மாறி தலையை ஆட்டும். அதுபோல தான் பிரதமரின் பேச்சு. இதெல்லாம் ஒரு அரசியல் சீசன்.
போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க.வினரின் போராட்டம் அரசியல்.
இதெல்லாம் பண்ணாமலா இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை முடக்குவதில் தான் தி.மு.க.வினர் குறியாக உள்ளனர்.
- எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய சிறப்பான ஆட்சியின் பலன்களை மக்கள் உணர்ந்து அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் ஊராட்சி கள்ளிமேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொது க்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி., வேலுமணி பேசியதாவது:-
மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவதை விட்டு, விட்டு , அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை முடக்குவதில் தான் தி.மு.க.வினர் குறியாக உள்ளனர். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஜெயலலிதா செய்த நல்ல பல திட்டங்களும், எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய சிறப்பான ஆட்சியின் பலன்களை மக்கள் உணர்ந்து அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
- முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதாலும் அ.ம.மு.க.வுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் என்று கட்சி தலைமை கணக்கு போட்டுள்ளது.
- அ.ம.மு.க. இந்த தொகுதியில் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சி கள் கூட்டணிகளை உறுதிப் படுத்துவதிலும் தொகுதி பங்கீட்டிலும் அதிக தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்க தமிழக அரசியல் கட்சிகள் அதிக அக்கறை காட்டி வருகிறது.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பா.ஜனதா கூட்டணியில் இந்த தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி பா.ஜனதா கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளரை நிறுத்தும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தினகரனே போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பும் மேலோங்கி உள்ளது.
சிவகங்கை தொகுதியை பொருத்தவரை முக்குலத்தோர் அதிகம் உள்ள தொகுதியாகும். இந்த தொகுதியில் கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிட்டு ஒரு லட்சத்து 22 ஆயிரம் வாக்குகள் பெற்றது. தற்போது பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதாலும், முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதாலும் அ.ம.மு.க.வுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் என்று கட்சி தலைமை கணக்கு போட்டுள்ளது.
அதன் காரணமாக இப் போதிலிருந்தே தொகுதி முழுவதும் அ.ம.மு.க.வினர் குக்கர் சின்னத்தை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். சிவகங்கை தொகுதியை பொருத்தவரை தி.மு.க-காங்கிரஸ் கூட்ட ணியில் கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? அதுபோல பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீண்டும் பா.ஜனதா சார்பில் களம் இறக்கப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட் டுள்ள நிலையில் அ.ம.மு.க. இந்த தொகுதியில் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தேர்தல் தேதி அறிவிப்பு வராவிட்டாலும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
- அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் விவரங்களை விரைவிலேயே முழுமையாக அறிவிக்க உள்ளன.
திருவனந்தபுரம்:
மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் சில நாட்க ளுக்கும் வெளியிடும் என்று கருதப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிப்பு வராவிட்டாலும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
கேரள மாநிலத்தில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள், பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கிவிட்டன. அந்த கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் விவரங்களை விரைவிலேயே முழுமையாக அறிவிக்க உள்ளன.
இந்நிலையில் கேரள மாநில மக்களவை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடுமா? என்பது சந்தேகமாக உள்ளது. தேர்தலில் போட்டியிடும் விவகாரத்தில் அந்த கட்சி மத்தியில் குழப்பம் நிலவுவதால் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறது.
கேரள மாநிலத்தில் கட்சியின் புதிய தலைமை பொறுப்பேற்று சில மாதங்களே ஆகிறது. கேரளாவில் போட்டியிடுவது குறித்தும், தனது நிலைப்பாடு குறித்தும் இதுவரை எந்தமுவும் எடுக்கவில்லை என்று ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்படி தேர்தலில் போட்டியிடாவிட்டால் யாருக்கு ஆதரவளிக்கும் என்பதும் தெரியவில்லை. கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை ஆம்ஆத்மி கடைபிடிக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் ஆம்ஆத்மி கட்சி கடந்த 2014-ம் ஆண்டு 11 தொகுதிகளில் போட்டியிட்டது. கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ‘டார்ச் லைட்’ ஒளி வீசுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
- காங்கிரஸ் 10 தொகுதிகளை கேட்கும் நிலையில், தி.மு.க.வோ 6 தொகுதிகளை மட்டுமே தருவதாக கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிப்பதாக கருதப்படும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி கொடுப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதியிலேயே கமல்ஹாசனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கூறும்போது, அதுபோன்று எந்தவிதமான ஒப்பந்தங்க ளும் போடப்பட வில்லை என்றும் இதுபற்றி கமல்ஹாசனும் எங்களுடன் எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் தி.மு.க. தரப்பிலும் கமல்ஹாசன் கூட்டணியில் இருப்பதை யாரும் உறுதி செய்யாமலேயே உள்ளனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்த தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு, தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசன் இடம் பெறுவது பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று கூறியிருந்தார். வெளிநாட்டு பயணம் முடிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பியதும் கமல்ஹாசன் சந்தித்து பேச இருப்பதாக வும் தகவல்கள் வெளியா னது.
ஆனால் அது தொடர்பான எந்த சந்திப்புகளும் நடைபெறவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள தி.மு.க.வி னர், கமல்ஹாசன், ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குதான் ஆதரவு தெரி வித்து பிரசாரம் செய்தார். அவர்களோடுதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுடன் எதுவும் பேசவில்லை என்றும் கூறியுள்ள னர்.
இதனால் கமல்ஹாச னுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி கொடுப்பது தி.மு.க.வா? காங்கிரசா? என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது.
கமல்ஹாசனை பொறுத்தவரையில் காங்கிரஸ் டெல்லி மேலிட தலைவர்கள் மற்றும் ராகுல்காந்தியுடன் மிகவும் நெருக்கமாகவே இருந்து வருகிறார்.
இதனால் அவர் காங்கிரசோடு பேசி எளிதாக தனக்கு தேவையான தொகுதிகளை கேட்டுப் பெற்றுக் கொள்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே எத்தனை இடங்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
காங்கிரஸ் 10 தொகுதிகளை கேட்கும் நிலையில், தி.மு.க.வோ 6 தொகுதிகளை மட்டுமே தருவதாக கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி குறைவான தொகுதிகள் கிடைக்கும் பட்சத்தில் அதில் ஒரு தொகுதியை கமல்ஹாசனுக்கு எப்படி ஒதுக்க முடியும் என்று கூறியே காங்கிரஸ் கட்சி 'கை' விரித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறி வருகிறார்கள். இதனால் பாராளுமன்ற தேர்தலில் 'டார்ச் லைட்' ஒளி வீசுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல் மற்றும் இழுபறியால் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்