search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227917"

    • பக்தர்கள் ஒருவர்பின் ஒருவராக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய காளி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மகாகாளியம்மன் கோவில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 4-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற்றது.

    அப்போது மகாகா ளியம்மன் மணிமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனைத் தொடர்ந்து விரதமிருந்து காப்புகட்டி கொண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்கினர்.

    செண்டை மேளம் முழங்க, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பூக்குழி இறங்கும் வைபவத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்றன்பின் ஒருவராக பூக்குழி இறங்கி பக்தி பரவசத்துடன் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர்.

    அதன் பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய காளி அம்மனுக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.

    தீமிதி திருவிழாவில், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 64 கிராம மீனவ மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • பால்குடம் எடுத்து மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
    • அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த அகரகடம்பனூர் கிராமத்தில் உள்ள கண்ணா கூத்த அய்யனார் பத்திரகாளி அம்மன் கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த 8-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, கணபதி ஹோமம், அம்மன் வீதிஉலா மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் மற்றும் காவடி வீதிஉலா சிறப்பாக நடைபெற்றது.

    விரதமிருந்த பக்தர்கள் அகரகடம்பனூர் பெரியகுளத்தில் இருந்து அலகு காவடி, மயில் இறகு காவடி, ரத காவடி மற்றும் பால்குடம் எடுத்து மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர், பக்தர்கள் எடுத்து வந்த பாலினால் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • மூன்று சக்கரத்தாழ்வார்களுக்கும் சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் ராஜகோபால சுவாமி கோயில் உள்ளது.

    தஞ்சை பகுதியில் சக்கரத்தாழ்வா ருக்கு என உள்ள தனிக் கோவில் இதுவாகும். ஒன்பது தீபமேற்றி ஒன்பது முறை வலம் வந்து வழிபட்டால் எப்பேற்பட்ட பிரார்த்தனைகளையும் பெருமாள் நிறைவேற்றி தருவது என்பது ஐதீகம்.

    இந்த கோயிலில் பங்குனி மாத சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு மூன்று சக்கரத்தாழ்வார்களுக்கும் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

    மூன்று சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • புனித நீர் அடங்கிய கலசம் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை-கொளப்பாடு பிரதான சாலையில் காருகுடி கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு யாகம் நடைப்பெறுவது வழக்கம் போல் அதன்படி பங்குனி மாத பௌர்ணமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

    இதில் 108 வகையான மூலிகை திரவியங்களாலும், ஆல், அரசு, புரசு, வன்னி, நாயுருவி, வெள்ளெருக்குஉள்ளிட்ட மரப்பொருட்களும், 9 வகையான நவதானியங்கள், பழவர்க்கம் முதலியவற்றைக் கொண்டு யாகம் நடைப்பெற்றது.

    அதனைத் தொடர்ந்து யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு பின்னர் மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேரில் எழுந்தருளப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • திருத்தேர் பவனியில் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமாக மக்கள் கலந்து கொண்டனர்.

    பூதலூர்:

    பூதலூர் தாலுகாவில் உள்ள கோவிலடி அப்பால ரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி திருத்தேர் வீதி உலா நடைபெற்றது.

    கோவிலில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து வந்தனர்.

    கோவிலை சுற்றியுள்ள தெருக்களின் வழியாக வந்த திருத்தேர் கோவில் நிலையை அடைந்ததும் தேரின் மேல் இருந்த உற்சவமூர்த்திகள் கோயில் கொண்டு செல்லப்பட்டு திருத்தேர் பவனி நிறைவு பெற்றது.

    திருத்தேர் பவனியில் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமாக மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் பவனி ஏற்பாடுகளை கோவில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜனனி, செயல் அலுவலர் சிவேந்திரராஜா மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • கோபுர வாசல் வழியாக வெளியே வந்து, வீதி உலா தொடங்கியது.
    • பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னிஸ்வர சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவின் 10 ஆம் நாளான இன்று காலை கோவில் உள் மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷம் மற்றும் நாதஸ்வர, கிராமிய இசை முழக்கத்தோடு பஞ்சமூர்த்திகளும் கோவிலில் கோபுர வாசல் வழியாக வெளியே வந்து, வீதி உலா தொடங்கியது.

    திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள அக்னி தீர்த்தத்தில் பஞ்ச மூர்த்திகளும் நிறுத்தப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி மற்றும் ஒன்பத்துவேலி நகர வீதிகளில் வழியாக வீதியுலா நடைபெற்ற பின்பு இன்று மாலை திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் அமைக்க ப்பட்டுள்ள அலங்கார பந்தலில் பஞ்சமூர்த்திகள் எழுந்து அருளப்பட்டு, அங்கே மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து இரவு நாட்டுப்புற மக்கள் இசை பாடகர் செந்தில் கணேஷ் -ராஜலட்சுமி குழுவினரின் இசை நிகழ்ச்சி, வாணவேடிக்கையும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குனி உத்திர பெருவிழா குழு தலைவர் வக்கீல் ஜெயக்குமார், மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • காலபைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் கிராமத்தில் உள்ள மேலமறை க்காடர் கோவிலில் முதலாம் ஆண்டு சம்வஸ்தராபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.

    விழாவையொட்டி கோபூஜை, கும்ப பூஜையுடன் யாகசாலை பூஜைகள் முடிந்து பூர்ணாஹூதியுடன் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், பிள்ளையார், முருகன், காலபைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    பூஜையில் செவ்வந்திநாத பண்டாரசன்னதி கயிலைமணி வேதரத்னம் உள்பட பிரமுகர்களும், கோவில் திருப்பணி குழுவினரும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு பொருட்களை கொண்டு யாகம் வளர்க்கப்பட்டது.
    • பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்து வேலி சோமகலாம்பாள் சமேத வன்மீகநாத சுவாமி கோயிலில் உலக நன்மையை கருதி ருத்ர ஹோமம் நடைபெற்றது.

    அம்பாள் மற்றும் மூலவர் சன்னதி எதிரில் யாக சாலை அமைக்கப்பட்டு பல்வேறு பொருட்களை கொண்டு மந்திரம் சொல்லி யாகம்வளர்க்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மூலவருக்கும் அம்பாளுக்கும் பல்வேறு திரவங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது,

    உலக மக்கள் நன்மைக்காக நடத்தப்பட்ட இந்த யாகத்திலும் அதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கருட பகவான் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, பெருமாள்-தாயாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • முக்கிய நிகழ்வான கல்கருட சேவை வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த நாச்சியார்–கோயிலில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் கோவில் உள்ளது.

    108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக உற்சவர் பெருமாள்- தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருளி பட்டாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, மேளதாளங்களுடன் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கருட பகவான் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, பெருமாள்-தாயாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இக்கோவிலில், பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவிற்கு பதிலாக பிரகார உலாவாக நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான கல்கருட சேவை வருகிற (ஏப்ரல்) 1-ந்தேதி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து, 6-ந்தேதி உற்சவர் பெருமாள்-தாயாருடன் கோ ரதத்தில் பிரகார உலா நடைபெறுகிறது.

    8-ந்தேதி விடையாற்றி நிகழ்வுடன் விழா நிறைவடைகிறது.

    • யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
    • கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது,

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்பாள் சமேத கஜாரண்யேஸ்வரர் கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அமந்தாளம்மன் கோவில் (சப்தமாதா) ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

    விழாவை யொட்டி கோவில்களின் அருகில் யாகசாலை அமைக்க ப்பட்டு காவிரியிலிருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஸ்திர ஹோமம், கோ பூஜை, தனபூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.

    3 கால யாகசாலை பூஜைகள் நிறைவேற்ற பட்டவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்கள் எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    காலையில் அமந்தாளம்மன் கோவில் குடமுழுக்கும், அதனை தொடர்ந்து லட்சுமி நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கும், அடுத்ததாக காமாட்சி அம்பாள் சமேத கஜாரண்யேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது.

    தொடர்ந்து, கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    விழாவில் கோபிசெட்டிபாளையம் சிவகடாட்சதேசிக சாமிகள், கோவில் செயல் அலுவலர் சிவேந்திரராஜா மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, மாலை கஜாரண்யேஸ்வரர்- காமாட்சி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

    பாதுகாப்பு ஏற்பா டுகளை திருக்காட்டுப்பள்ளி போலீசார் செய்திருந்தனர்.

    • 4-ம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூர்ணாஹுதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் அடுத்த காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் மிக பழமைவாய்ந்த காலபைரவர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி, கடந்த 24-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமங்களுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

    2,3-ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, நேற்று 4-ம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூர்ணாஹுதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்களை மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசத்தை அடைந்தனர்.

    கோவில் குருக்கள் சண்முக சுந்தரம் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் ஓத, வானில் கருடன் வட்டமிட கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    பின்னர், கருவறையில் உள்ள காலபைரவருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    விழாவில் ஊராட்சி தலைவர் ஜோதிவள்ள ராஜேந்திரன், துணை தலைவர் சரவணன், வி.ஏ.ஓ. சிவராமன் மற்றும் விழா குழுவினர்கள், கிராமமக்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 4-ம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கி யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டது.
    • அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை அம்பாள் சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அரசு மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ. 8 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, கடந்த 24-ந்தேதி காலை மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து, 25-ந்தேதி தன, கஜ, கோ, அஸ்வ பூஜைகளுடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து, நேற்று 2, 3-ம் கால யாகசாலை பூஜைகளும், மகா பூர்ணாஹுதியும் நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வான பாலாலய விழா இன்று அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கி யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி ஆணையர் சாந்தா, செயல் அலுவலர்கிருஷ்ண குமார் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதா ரர்கள் செய்திருந்தனர்.

    ×