என் மலர்
நீங்கள் தேடியது "மக்கள் போராட்டம்"
- பாஜக சிறுபான்மை மோர்ச்சா மாநிலத் தலைவராக அஸ்கர் அலி உள்ளார்.
- பேரணியில் ஐயாயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத் திருத்த நிறைவேறியது. ஜனாதிபதியின் உடனடி ஒப்புதலுடன் சட்டமாகவும் மாறியது. இந்நிலையில் வக்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த மணிப்பூர் பாஜக சிறும்பான்மை தலைவரின் வீட்டில் தீவைத்து எரிக்கப்பட்டது.
மணிப்பூரில், பாஜக சிறுபான்மை மோர்ச்சா மாநிலத் தலைவர் அஸ்கர் அலி நேற்று முன் தினம் வக்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில் நேற்று கும்பல் ஒன்று பவம் தௌபல் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு தீவைத்துள்ளது.
நேற்று இரவு 9 மணியளவில் அவரது வீட்டிற்கு வெளியே திரண்ட கும்பல் வீட்டை சேதப்படுத்தி தீ வைத்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, அலி இணைய ஊடகங்களில் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அவர் தனது முந்தைய கூற்றுக்கு மன்னிப்பு கேட்டார்.
முன்னதாக, இம்பால் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் வக்பு மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. பேரணியில் ஐயாயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.
போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.இத்தகடுத்து முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் அரசு தீவிரம்.
- விமான நிலையம் அமைக்கும் பணியை கைவிட கோரி கிராம மக்கள் போராட்டம்.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையும் என்று மத்திய அரசு அறிவித்தது. பரந்தூர் விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள விமான நிலையத்திற்காக ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து விளை நிலங்கள், நீர் நிலைகள், குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து ஏகனாபுரம், நெல்வாய் கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் 117வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் கடும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ஏர் ஓட்டும் நிலத்தில் ஏர்போர்ட் தேவையா எனவும், விமான நிலையம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என கூறி முழக்கமிட்டனர்.
- திண்டுக்கல் அருகே எரியோடு ஊராட்சி மன்ற அலுவலகம் புளியம்பட்டியில் செயல்பட்டு வருகிறது.
- சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எரியோடு:
திண்டுக்கல் அருகே எரியோடு ஊராட்சி மன்ற அலுவலகம் புளியம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இங்கு கிழக்கு வடுகம்பாடி, மேற்குவடுகம்பாடி, பாரதிநகர், வரதராஜபுரம், பொம்மகவுண்டன்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வருகின்றனர்.
அங்கிருந்த பழைய அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அலுவலகம் கட்ட கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி புதிய கட்டிடத்திற்கு பூமிபூஜை நடத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வடுகம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை புளியம்பட்டியில் இருந்து வடுகம்பாடிக்கு மாற்ற வேண்டும். புதிய கட்டிடம் அங்குதான் கட்டவேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் ரமேஷ் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வருகிற 12-ந்தேதி சமூகஉடன்பாடு, அமைதிபேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அன்று தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசப்படும் என்றார்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கற்பகம், எரியோடு போலீசார் உடனிருந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் சமரசபேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
- அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை
- 2 மாதத்திற்குள் பணியை முழுமை படுத்த நடவடிக்கை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டது முள்ளுவாடி மலை கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒடுகத்தூருக்கு சென்று தான் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த பகுதி மக்கள் சென்று வர மேல்அரசம்பட்டு பங்களாமேடு கிராமத்தில் இருந்து, முள்ளுவாடி மலை கிராமம் செல்லும் வழியில் பாதி தொலைவு வனத்துறை சார்பில் தார் சாலை அமைக்கப்பட்டது.
சரியான பராமரிப்பு இல்லாததால் இந்த தார் சாலை நாளடைவில் குண்டும் குழியுமாக மாறிப்போனது. இதனால் அந்த பகுதி மக்கள் போக்குவரத்து முற்றிலுமாக பாதித்தது. இதனை சீரமைத்து தரக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த முள்ளுவாடி கிராம மக்கள் 150-க்கும் மேற்பட்டோர் இன்று பங்களாமேடு அருகே ஒன்று திரண்டு வந்தனர். அங்கு சாலையை சீரமைப்பதோடு, விடுபட்ட தூரத்தில் சாலை அமைக்க வேண்டும். கிராமத்திற்கு செல்லும் வழியில் ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் எழுப்ப வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா ஆகியோர் விரைந்து வந்து சமரசம் பேசினார். மேலும் 2 மாதத்திற்குள் பழுதடைந்த தார் சாலை புதுப்பிப்பதோடு, பாதியில் தடைபட்டு நிற்கும் சாலை பணியை முழுமை படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- கெபியில் முன்பு வேளாங்கண்ணி மாதா சிலை உடைக்கப்பட்டு கிடந்தது.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கெபியில் உள்ள அனை வேளாங்கண்ணி மாதா சிலையை சிலர் அவமரியாதை செய்தனர்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது கொம்மாடி தளவாய்புரம் கிராமம். இங்குள்ள சாலையோரம் அன்னை வேளாங்கண்ணி மாதா உருவச்சிலை வைக்கப்பட்ட கெபி உள்ளது. இதனை அப்பகுதி கிறிஸ்தவர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கெபியில் முன்பு வேளாங்கண்ணி மாதா சிலை உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக மணியாச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. லோகேஷ்வரன், இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் மாதா சிலையை உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதற்கிடையே இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியினர் கெபியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்போது அவர்கள் கூறும்போது, ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கெபியில் உள்ள அனை வேளாங்கண்ணி மாதா சிலையை சிலர் அவமரியாதை செய்தனர். இந்நிலையில் தற்போது 2-வது முறையாக நடந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
- பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சாலை அமைத்து தரக்கோரி சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கொட்டையூர் ஊராட்சிக்குட்பட்டது இந்திரா நகர். இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்திரா நகரில் கடந்த 15 ஆண்டுக்கு முன்பு சாலை அமைத்து உள்ளனர். தற்போது இந்த சாலைகள் அனைத்தும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டன. சாலைகளே தெரியாத அளவுக்கு அனைத்து ஜல்லி கற்களும் பெயர்ந்து மண்சாலையாக மாறி உள்ளது.
எனவே இந்த பகுதியில் புதிதாக சாலை அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக சாலை இருந்த இடம் முழுவதும் தண்ணீர் தேங்கி சகதியாக மாறிவிட்டது. மேலும் அப்பகுதியில் கழிவு நீரும் தேங்கி நிற்கிறது.
இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். குழந்தைகள், முதியோர் சேறும், சகதியுமான சாலையில் நடந்து செல்லவே பயப்படும் நிலை உள்ளது.
இந்த நிலையில் அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சாலை அமைத்து தரக்கோரி சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை வசதி கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் சாலை அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது இந்தசாலை பெயர்ந்து சாலை இருந்த இடம் தெரியாத அளவில் காணப்படுகிறது.
தற்போது பெய்து வரும் மழையால் சாலைகள் அனைத்தும் கழிவு நீருடன் கலந்து சேரும் சகதியுமாய் மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்று உள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்பட அபாயம் உள்ளது. சாலை வசதி கேட்டு ஊராட்சி அலுவலகம். ஒன்றிய அலுவலகம், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.
- கிராம சபை கூட்டத்தை மேல பாலாமடையில் மட்டுமே வைத்து நடத்தி வருகின்றனர்.
- 9 கிராம மக்களும் ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்கு உட்பட்ட பாலாமடை ஊராட்சியில் மேல பாலா மடை, இந்திரா நகர், காட்டாம்புளி உள்ளிட்ட 9 குக்கிரமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2006-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை தலைவராக பதவி வகித்தவர்கள் ஒவ்வொரு முறையும் கிராம சபை கூட்டத்தை மேல பாலாமடையில் மட்டுமே வைத்து நடத்தி வருகின்றனர்.
அதனை சுழற்சி முறையில் ஒவ்வொரு கிராமத்திலும் நடத்த வேண்டும், சுழற்சி முறையில் கிராம சபை கூட்டம் நடத்தினால் மட்டுமே அடிப்படை வசதிகளை பேசி பெற முடியும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து மானூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை எடுத்து வந்த நிலையில், நேற்று முன்தினம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திலும் இது தொடர்பாக அந்த கிராமங்களின் பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்துச் சென்றனர்.
இந்நிலையில் இன்று உள்ளாட்சி தினத்தை ஒட்டி மாவட்டம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி பாலாமடை பஞ்சாயத்திலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் இந்த முறையும் 15 ஆண்டுகளாக நடைபெறும் அதே இடத்தில் வைத்து மீண்டும் கிராம சபை கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த 9 கிராம மக்களும் இன்று காலை ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த நெல்லை ஆர்.டி.ஓ. ஷேக் அயூப் தலைமையிலான அதிகாரிகள் ஊராட்சி மன்ற பிரதி நிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆனாலும் கிராம மக்கள் பேச்சுவார்த்தை நடத்த வந்த ஆர்.டி.ஓ. கார் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
- மாவட்ட கலெக்டர் தலைமையில் மீண்டும் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
- எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு நிவாரணம் மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
பொன்னேரி:
மிச்சாங் புயல்காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கழிவு கலந்தது. இதனால் மீனவர்கள் கடும்பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த எண்ணெய் படலம் கடலில் பழவேற்காடு வரை படர்ந்தது. இதனால் பழவேற்காடை சுற்றி உள்ள மீனவ கிராமமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.ஏற்கனவே புயல் காரணமாக கடந்த ஒரு மாதமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில் எண்ணெய் படலத்தால் சுமார் 40 கிராம மீனவர்கள் மீன்பி டிக்க கடலுக்கு செல்லாமல் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் பழவேற்காடு பகுதி மீனவ கிராமமக்கள் தங்களுக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் 40 மீனவ கிராமமக்கள் நிவாரணம் கேட்டு நாளை சென்னை கோட்டை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்து போராட்டம் அறிவித்து உள்ளனர்.இதற்கான ஆயத்த பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்திலும் மனு அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சுதாகர், திருவள்ளூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகுமார், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், மாவட்ட மீன் வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, உதவி இயக்குனர் கங்காதரன் ஆகியோர் மீனவ கிராம மக்களை அழைத்து பழவேற்காட்டில் உள்ள தனியார் மண்ட பத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. மாவட்ட கலெக்டர் தலைைமயில் மீண்டும் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
நாளை நடைபெறும் போராட்டத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்க திட்டும் உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, 40 கிராமமீனவர்கள் கடந்த ஒரு மாத காலமாக மீன் பிடிக்க செல்லவில்லை. எண்ணை கழிவால் ஆயிர த்திற்கும் மேற்பட்டமீன்பிடி வலைகள் படகுகள் சேதமடைந்துள்ளன. எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு நிவாரணம் மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை. எனவே மீனவ கிராம மக்கள் முடிவெடுத்து பேரணியில் குடும்பமாக பழவேற்காடு, பொன்னேரி ,மீஞ்சூர், திருவெற்றியூர் சாலை வழியாக சென்னை கோட்டை வரை நடந்தே சென்று கோரிக்கை மனு வழங்க உள்ளோம் என்றார்.
- குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை.
- பல ஆண்டுகள் தங்கள் கோரிக்கைக்காக போராடி எந்த பலனும் கிடைக்கவில்லை.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள வெள்ளிமலை வனப்பகுதியில் அரசரடி, பொம்முராஜபுரம், நொச்சியோடை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் விவசாயமே முக்கிய தொழிலாக இருந்து வரும் நிலையில் மின்சாரம், சாலைவசதி என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் அளித்து வந்தனர்.
இப்பகுதி வனத்துறைக்கு கட்டுப்பட்ட இடம் என கூறி எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளாமல் இருந்து வந்தனர். வனத்தை சேர்ந்து வாழ்ந்து வந்த இப்பகுதி மக்கள் தங்கள் நிலங்களுக்கு உரம், பூச்சி மருந்து போன்றவற்றை வாங்கி செல்லக்கூட முடியவில்லை.
மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. சேதம் அடைந்த தங்கள் வீடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் கூட வனத்துறையினர் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மலை கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதன்பின்பு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தங்கள் கிராமத்திற்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராததால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தராததால் தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அரசியல் கட்சியினர் யாரும் ஓட்டு கேட்டு இங்கு வர வேண்டாம் எனவும் மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து கருப்புக் கொடி ஏற்றப்பட்ட கிராமங்களுக்கு ஆண்டிபட்டி தாசில்தார் காதர் செரீப் தலைமையிலான அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், பல ஆண்டுகள் தங்கள் கோரிக்கைக்காக போராடி எந்த பலனும் கிடைக்கவில்லை. ஓட்டு கேட்க மட்டும் ஊருக்கு வரும் கட்சியினர் அதன்பிறகு தங்களை கண்டுகொள்வதே இல்லை எனவும் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
- பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
- சொனப்பாடி கிராமத்தில் இன்று காலை பல்வேறு இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே பட்டிப்பாடி வேலூர் ஊராட்சி சொனப்பாடி கிராமம் உள்ளது. இங்கு திரளான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தார் சாலை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சொனப்பாடி கிராமத்தில் இன்று காலை பல்வேறு இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் இதுவரை தார் சாலை அமைக்கவில்லை. பள்ளிக்குழந்தைகள் பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லை. எனவே இதை கண்டித்து வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.
இது தவிர வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி வைத்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் பொதுமக்கள் இன்று காலையில் ஊர் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
- மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
- போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த போராட்டத்தை ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி குழு என்ற அமைப்பு தொடங்கியது. வர்த்தகர்களும் போராட்டத்தை குதித்தனர். மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் சுதந்திரம் தேவை என கோஷம் எழுப்பினர். இதில் முஷாபராபாத் உள்பட சில மாவட்டங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது. பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பேராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. சில இடங்களில் போலீசார், பாதுகாப்பு படையினரை மக்கள் தாக்கினார்கள். இதில் சில போலீஸ்காரர்களை பள்ளத்தில் தள்ளி விட்டனர்.
இந்த மோதலில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். 90 பேர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசாரும்,துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டனர். அவர்கள் கண்ணீர் குண்டுகளை வீசினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரம் அடைந்துள்ளது.
- யானை விரட்டிச் சென்று எல்தோசை பிடித்து தாக்கியது.
- இன்று அதிகாலை 2 மணி வரை போராட்டம் நீடித்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வனப்பகுதி அருகே ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது வன விலங்குகள் தாக்குதலை சந்தித்து வருகின்றனர். இதில் சில நேரம் உயிர்ப்பலியும் நடந்து வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சூரை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி ஆன்மேரி, தனது ஆண் நண்பருடன் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது யானைகள் கூட்டமாக வந்துள்ளன. அவர்கள் வேகமாக சென்றபோது, யானை முட்டித் தள்ளிய மரம் சாய்ந்து விழுந்தபோது ஆன்மேரி அடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த சோகம் மறைவதற்குள் அதே பகுதியில் யானை தாக்கி தொழிலாளி ஒருவர் இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொத்தமங்கலம் அருகே உள்ள கொடியாட்டு பகுதி யை சேர்ந்தவர் எல்தோஸ் (வயது 45), தொழிலாளி. இவர் வேலை முடிந்து தனது நண்பருடன் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார். வீட்டிற்கு சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, காட்டுயானை வழிமறித்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். ஆனால் அந்த யானை விரட்டிச் சென்று எல்தோசை பிடித்து தாக்கியது. இதில் உடல் பாகங்கள் சிதறிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.
அவர்கள் வனத்துறையை கண்டித்து போராட்டத்தில் இறங்கினர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் எல்தோஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் பொதுமக்கள் உடலை எடுக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வருகிறோம். இது பற்றி பலமுறை புகார் கூறியும் வனத்துறை அலட்சியமாக உள்ளது என குற்றம்சாட்டினர். இன்று அதிகாலை 2 மணி வரை போராட்டம் நீடித்தது. அந்த பகுதியில் அகழிகள், வேலிகள் அமைப்பது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வருகிற 27-ந் தேதி எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
அதன்பிறகு போலீசார், பலியான எல்தோஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் எல்தோஸ் குடும்பத்தினரிடம் இன்று காலை அரசின் ரூ.10 லட்சம் இழப்பீடுக்கான காசோலையை வழங்கினார்.