search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 235118"

    • கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
    • காச நோயாளிகளுக்கு, மக்கள் பிரதிநிதிகள் உதவ வேண்டும்.

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் தமிழகம் வந்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார்.

    தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

    மத்திய அரசின், தேசிய சுகாதார இயக்கம், பள்ளி மாணவர்கள் மருத்துவ பரிசோதனை திட்டம், நடமாடும் மருத்துவ சேவைகள், பிரதம மந்திரி தேசிய இரத்த சுத்திகரிப்பு திட்டம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காச நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் தலா 3 பேரை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் முழுமையாக காச நோயை நம்மால் ஒழிக்க முடியும்.

    தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் பிரசவங்கள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் பாராட்டுகிறேன். அனைவரும் இணைந்து செயல்பட்டதால் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    இதை தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவார், சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார். நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • அனைவருக்கும் எரிபொருள் வழங்க வேண்டிய தார்மீகக் கடமை மத்திய அரசுக்கு உள்ளது.
    • குறைந்த விலையில் எங்கிருந்து வேண்டுமானாலும் கச்சா எண்ணெய் வாங்கப்படும்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலை அடுத்து ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடமிருந்து எரி பொருள் கொள்முதல் செய்வதை படிப்படியாகக் குறைத்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது கடந்த ஏப்ரல் மாதம் முதல் 50 மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியா வெளிநாடுகளில் இருந்து வாங்கும் மொத்த கச்சா எண்ணெயில் இது 10 சதவீதமாக உள்ளது.

    இந்நிலையில் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள, மத்திய பெட்ரோலித்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், உக்ரைனுடன் ரஷியா போர் புரிந்து வரும் நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நடவடிக்கை தொடரும் என்று கூறினார். இந்திய குடிமக்களுக்கு தடையின்றி எரிபொருள் வழங்க வேண்டிய தார்மீகக் கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள் முதல் செய்ய கூடாது என்று எந்த நாடும் இந்தியாவை நிர்பந்திக்க வில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். குறைந்த விலையில் எங்கிருந்து வேண்டுமானாலும் கச்சா எண்ணெய்யை வாங்கும் மத்திய அரசின் நடவடிக்கை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • ஒரே ஆண்டுக்குள் 140 திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • நவீன வசதிகள் கொண்ட திரைப்பட ஸ்டுடியோ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது

    ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றிய ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் அதிகாரிகள் தற்போது டெல்லியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் பிரதமர் அலுவலக விவகாரத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: 


    ஜம்மு- காஷ்மீருக்கு பிரதமர் மோடி உயர் முன்னுரிமை அளித்து வருகிறார் .வளர்ச்சி மற்றும் அமைதியின் புதிய விடியலை ஜம்மு-காஷ்மீர் கண்டு வருகிறது. 2022 ஜனவரி முதல் இதுநாள் வரை 1.62 கோடி சுற்றுலா பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்துள்ளனர். 75 ஆண்டு சுதந்திர வரலாற்றில் இதுவே மிகவும் உயர்ந்த எண்ணிக்கையாகும்.

    நாட்டில் சிறப்பாக நிர்வகிக்கப்படும் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக ஜம்மு-காஷ்மீரை மாற்றுவதற்கான பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 370 -வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின், ரூ. 56 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

    ஒரே ஆண்டுக்குள் 140 படப்பிடிப்புகளுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் திறமைமிக்க இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, நவீன வசதிகள் கொண்ட திரைப்பட ஸ்டுடியோ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விவசாயிகள், மீனவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.
    • உற்பத்தி திட்டம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைய வேண்டும்.

    டெல்லியில் நடைபெற்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளதாவது:

    புதுமைகளை உருவாக்காத எந்த சமூகமும் தேக்கமடைகிறது என்று பிரதமர் மோடி ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆற்றிய சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக உருவாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும்.

    உற்பத்தி திட்டத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைந்தால், உலகிற்கு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம் இரண்டையும் வழங்கும் நாடாக இந்தியா மாறும். சவால் மிகுந்த கொரோனா காலத்தில் நாட்டின் அறிவியல் சமூகத்தின் முயற்சிகளுக்கு தொழில்நுட்பத் துறையின் பணி பெரும் உதவிகரமாக இருந்தது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள், மீனவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்து தொழில்நுட்பத்துறை ஆராய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நாடு முழுவதும் மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின் உற்பத்திக்கு இலக்கு.
    • இந்திய கடலோரப் பகுதிகளில் 70 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளது .

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளை பகுதியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலையை அமைத்துள்ளது . இதன் மூலம் 4.2 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காற்றாலையை மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை மந்திரி பகவந்த் கூபா இன்று பார்வையிட்டார். 


    அந்த நிறுவன அதிகாரிகளிடம் காற்றாலையின் செயல்பாடு, உற்பத்தி செலவு உள்ளிட்ட விபரங்களை அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    இந்திய கடலோரப் பகுதிகளில் 70 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளது. குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் 35 ஜிகாவாட் அளவிற்கு காற்று வளம் உள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இரண்டு காற்றாலைகளை அமைக்க உள்ளோம். இதன் மூலம் ராமேஸ்வரம் நகர் முழுவதும் மின்சார விநியோகிக்க முடியும். 

    எதிர்காலத்தில் 7 மெகாவட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதற்குப் போதுமான அளவு வாய்ப்பும், வளமும் இந்தியாவில் உள்ளது. சூரிய சக்தி மூலம் 300 ஜிகாவாட் மின்சாரமும் , பிற மரபு சாரா எரிசக்தி மூலம் 200 ஜிகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மூலதனச் செலவினங்களுக்காக மாநிலங்களுக்கு சிறப்பு நிதி உதவி.

    டிஜிட்டல் இந்தியா தொடர்பான மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் மூன்று நாள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தொழில்நுட்பத்துறை மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்னுரிமை அடிப்படையிலான முக்கிய அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டம் சென்றடைய தகவல் தொடர்புத்துறை முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். நாடு முழுவதும் புதிதாக 25,000 தொலைத் தொடர்பு கோபுரங்களை நிறுவ 26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறினார். அடுத்த 500 நாட்களில் இந்த கோபுரங்கள் அமைக்கப்படும் என்றார்.

    மாநிலங்களின் மூலதனச் செலவினங்களுக்காக சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், தொலைத் தொடர்புத்துறையில் வர்த்தகர்களை ஈர்க்கும் வகையில் உகந்த கொள்கைகளை மாநிலங்கள் வகுத்து செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமரின் கதி சக்தி திட்டத்தில் இணைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

    • பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ்,11,308 வீடுகள் கட்ட அனுமதி.
    • கிராமங்களில் பெண்களுக்கு அடிப்படை வசதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    கோவளம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே முட்டுக்காட்டில் செயல்படுத்தப்படும் சமூக நீதி திட்டங்களின் செயலாக்கம் குறித்து மத்திய சமூக நீதித்துறை மந்திரி வீரேந்திர குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அவர் பேசியதாவது:

    மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் 151 கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் தூய்மையான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மேலும் 208 கிராம ஊராட்சிகளுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது.

    பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 16, 265 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 11,308 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு, கடந்த 8 ஆண்டுகளில் கிராமங்களில் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    போதைப் பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மதிய உணவு திட்டத்தின் கீழ் அங்கன்வாடிகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை அதிகாரிகள் அவ்வப்போது, கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்த சாலைத் திட்டம் 4 பகுதிகளாக கட்டப்படுகிறது.
    • சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48% அதிகரிக்கும்.

    சென்னை மதுரவாயல் – துறைமுகம் இடையே பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டம் ரூ.5800 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது என்றும் அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது என்றும் சென்னைத் துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புதிய இந்தியாவில் தடையற்ற பன்னோக்கு போக்குவரத்து இணைப்பை அளிக்கும் வகையில், ரூ.5800 கோடி செலவில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையில் பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டத்திற்கான இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

    மொத்தம் 20.5 கிலோ மீட்டர் தொலைவில் அமைய உள்ள இந்த பாலம் 4 பகுதிகளாக கட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் 2024-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும் என்றும், இதன் மூலம் சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48% அதிகரிக்கும் என்றும், அதேபோல். காத்திருப்பு காலம் 6 மணி நேரம் குறையும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    • காமராஜர் ஆட்சி காலம் தமிழ்நாட்டில் பொற்காலமாக இருந்தது.
    • பணிபுரியும் இடங்களை பராமரிக்க தூய்மை இந்தியா 2.0 இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    மகாத்மா காந்தி பிறந்த தினம் மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தலைவர்களின் நினைவிடத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

    தேசத்தலைவர்களை போற்றும் விதமாக சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை கொண்டாடி வருகிறோம். சுதந்திர தின நூற்றாண்டு விழாவை நோக்கி நமது நாடு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது, 100 வது சுதந்திர தினத்தில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா மாறுவதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

    ஏழைக் குழந்தைகள் கல்வி கற்பதற்காக மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். காமராஜர் ஆட்சி காலம் தமிழ்நாட்டில் பொற்காலமாக இருந்தது. மகாத்மா காந்தி பிறந்த தினத்தில் காதி துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அனைவரும் காதி பொருட்களை வாங்க வேண்டும்.

    மகாத்மா காந்தியின் தூய்மையை பேண வேண்டும் என்ற கொள்கையை போற்றும் விதமாக தூய்மை இந்தியா இயக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக வீடுகள், சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருத்தலை தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக நாம் பணிபுரியும் அலுவலகங்களை சுத்தமாகவும் தேவையற்ற பொருட்களை அகற்றி சிறப்பாக பராமரிக்கவும் தூய்மை இந்தியா 2.0 இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    நேருவே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒழிக்க நினைத்தார், ஆனால் முடியவில்லை, தனி மனிதர்களால் ஆர்எஸ்எஸ்-ஐ ஒழிக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். நேற்று வந்த இயக்கம் அல்ல. பல லட்சம் தொண்டர்கள் தியாகம் செய்து உருவாக்கப்பட்ட இயக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அடுத்த ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை வழங்கப்படும்.
    • 2 ஆண்டுகளில் 90 சதவீத இடங்களில் 5ஜி சேவை வழங்க முயற்சி.

    டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த 6-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையான 5ஜி சேவையை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், இன்னும் 6 மாதங்களில் நாட்டில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படும் என்றார்.

    அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 90 சதவீத இடங்களில் 5ஜி சேவை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்கப்படும் என்றும், குறைந்த விலையில் 5ஜி சேவை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.413.90 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
    • இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டம் 2016 ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.

    இந்திய எண்ணெய் கழகத்தின் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக, சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள காமராஜர் துறைமுகத்தில், ரூ.900 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் துணை துறைமுகப் பணிகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை மந்திரி ராமேஸ்வர் தெலி நேற்று பார்வையிட்டார். பின்னர் நெசப்பாக்கத்தில் இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.) நிரப்பும் நிலையத்தை தொடங்கி வைத்தார். மேலும் 20 பெண் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை அவர் வழங்கினார். 


    நிகழ்ச்சியில் பேசிய மந்திரி ராமேஸ்வர் தெலி, பெண்களின் சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கும் வகையில் பிரதமரின் உஜ்வாலா திட்டம் கடந்த 2016 ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார்.

    கடந்த ஆகஸ்ட் 31ந் தேதிவரை தமிழ்நாட்டில் சுமார் 37 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன என்றார். மேலும் நடப்பு நிதியாண்டில் 62,06,748 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வாங்க தமிழக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.413.90 கோடி மத்திய அரசால் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

    • இது தொடர்பான வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்.
    • மாநிலப் பணிகளில் 434 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்களின் வருடாந்திர மாநாடு டெல்லியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பணியாளர்துறை மந்திரி ஜிதேந்திர சிங், நமது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பில் மத்திய பணி என்பது ஒரு பகுதியாகும் என்று தெரிவித்தார்.


    மாநில அரசுகள், மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தினார். மேலாண்மை தொடர்பான வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். அகில இந்திய பணி அதிகாரி என்பவர் மாநில, மத்திய அரசுகளை இணைக்கம் முக்கியமான ஒருங்கிணைப்பாளர் என்றும் தெரிவித்தார்.

    ஐ.ஏ.எஸ் உள்பட இதர அகில இந்திய பணி அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்ப வகை செய்யுமாறு மாநில அரசுகளை அவர் வலியுறுத்தினார். நடப்பு ஆண்டில், குடிமைப்பணி தேர்வு மூலம் 180 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு வெற்றிகரமாக பணிகளை ஒதுக்கியுள்ளது என்றார்.

    மாநிலப் பணிகளில் இருந்து 434 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஊழலில் சிக்குவோர் மற்றும் திறமையற்ற அதிகாரிகளை களையெடுக்க மாநில அரசுகள் உதவுமாறும் மந்திரி ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டார்.

    ×