search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து காயம்"

    • செல்வன், கோபிநாத் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    வளசரவாக்கத்தை சேர்ந்தவர் பிரித்திஷ்கா (வயது23). இவர் நேற்று மாலை நண்பர்களான அனகாபுத்தூரை சேர்ந்த செல்வன்(26),கோபிநாத்(23) ஆகியோருடன் ஓரே மோட்டார் சைக்கிளில் காட்டாங்கொளத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு நண்பரை பார்க்க சென்றார்.

    பின்னர் இரவு 9 மணியளவில் அவர்கள் 3 பேரும் அதே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். பிரித்திஷ்கா நண்பர்கள் இருவருக்கும் நடுவே அமர்ந்து பயணம் செய்தார். மீனம்பாக்கம் விமானநிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டு இருந்த போது அங்கு பேக்கரிக்கு பிஸ்கட், பிரட் சப்ளை செய்யும் வேன் ஒன்று பஞ்சராகி நின்றது. அந்த வேன் மீது பிரித்திஷ்கா மற்றும் வரது நண்பர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரித்திஷ்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவருடன் வந்த செல்வன், கோபிநாத் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் பலத்த காயம் அடைந்த சுந்தரலிங்கம் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழவந்தாங்கல் பி.வி நகரை சேர்ந்தவர் சுந்தர லிங்கம்(35).டெய்லர். இவர் மோட்டார் சைக்கிளில் பி.வி நகர் 3-வது தெருவில் சென்றபோது வேகத்தடையில் ஏறி இறங்கினார்.

    இதில் நிலைதடுமாறிய சுந்தர லிங்கம் மோட்டார் சைக்கிளோடு அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த சுந்தரலிங்கம் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்டெய்னர் லாரியின் முன்பக்க சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் உரசியது.
    • விபத்து நடந்த பகுதி சேலம்-கோவை பைபாஸ் சாலை என்பதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பவானி:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சீதாராம் பாளையம் சத்திவேல்நகரைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (65). இவரது மகன் தனசேகரன் (34). இவர்கள் 2 பேரும் இன்று காலை ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஜாதகம் பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    ஜாதகம் பார்த்துவிட்டு மீண்டும் இவர்கள் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர். அவர்கள் பவானி லட்சுமிநகர் காவிரி ஆற்று பாலத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இருந்து நாமக்கல் மாவட்டம் வெப்படைக்கு 14 சக்கரம் கொண்ட கண்டெய்னர் லாரி பஞ்சு லோடு ஏற்றிக் கொண்டு சென்றது. லாரியை கேரளாவைச் சேர்ந்த ஹக்கீம் (47) என்பவர் ஓட்டி வந்தார்.

    அப்போது திடீரென கண்டெய்னர் லாரியின் முன்பக்க சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் உரசியது. இதில் நிலைத்தடுமாறிய அவர்கள் கீழே விழுந்தனர். அப்போது பின்பக்க சக்கரங்கள் அவர்கள் மீது ஏறி இறங்கி நசுக்கியது. இதில் ஞானசேகரன் அவரது மகன் தனசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மூளை சிதறி பலியானர்கள்.

    இது குறித்து தெரிய வந்ததும் சித்தோடு போலீசார் விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்த பகுதி சேலம்-கோவை பைபாஸ் சாலை என்பதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கிரேன் சக்கரத்தில் சிக்கிய விமலேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • விபத்து தொடர்பாக கிரேன் டிரைவர் நித்தின் குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொளத்தூர்:

    சென்னையை அடுத்துள்ள மீஞ்சுர் நந்தியம்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் விமலேஷ்.

    25 வயதான இவர் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு விமலேஷ் தனது மோட்டார் சைக்கிளில் புழலில் உள்ள நண்பர் திருநேசனின் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டனர். கோயம்பேட்டில் உள்ள நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற இவர்கள் ரெட்டேரி பாலம் வழியாக பயணித்தனர். ரெட்டேரி பாலத்தில் ஏறி இறங்கி பாடி வழியாக கோயம்பேடு செல்ல திட்டமிட்டிருந்தனர்.

    ரெட்டேரி பாலத்தில் ஏறி இறங்கிய சிறிது நேரத்தில் முன்னால் ராட்சத கிரேன் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற விமலேஷ் அதனை முந்திச் செல்ல முயன்றார். இதற்காக மோட்டார் சைக்கிளை விமலேஷ் வேகமாக ஓட்டினார்.

    அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் வழுக்கி கீழே விழுந்தது. இதில் நிலை தடுமாறிய இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது கிரேன் சக்கரத்தில் சிக்கிய விமலேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னால் அமர்ந்திருந்த திருநேசன் காயத்துடன் உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று விமலேஷின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து தொடர்பாக கிரேன் டிரைவர் நித்தின் குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு பஸ்ஸின் பின்பகுதியிலும் மோதி நின்றது.
    • குடி போதையில் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.

    அம்மாபேட்டை:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா வளையபாளையத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மகன் கருப்புசாமி (23). பி.பி.ஏ. படித்த இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகன் ராமர் (19). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவர்கள் தங்களின் உறவினர்களான சுப்பிரமணி என்பவரது மகன் கருப்புசாமி (20), ஆறுமுகம் என்பவரது மகன் அன்பரசு (19), பழனிசாமி என்பவரது மகன் பிரசாந்த் (19), கருப்புசாமி மகன் என்பவரது கவியரசு (19) ஆகியோருடன் 3 மோட்டார் சைக்கிள்களில் நேற்று அதிகாலை ஒகேனக்கல் சுற்றுலாவுக்கு சென்றனர்.

    பின்னர் வரும் வழியில் உள்ள மேட்டூர் அணை பூங்காவுக்குச் சென்று சுற்றிப் பார்த்தனர். இவர்கள் மாலையில் மீண்டும் திருப்பூருக்கு புறப்பட்டனர். நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் மேட்டூர் - பவானி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது சின்னப்பள்ளம் அருகே மேட்டூரிலிருந்து ஈரோடு நோக்கி வந்த தனியார் பஸ்சுக்கு பின்னால் கருப்புசாமி, ராமர் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். தற்போது இந்த ரோட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் முன்னால் சென்ற தனியார் பஸ் டிரைவர் 'திடீர்' பிரேக் போட்டார். இதனால் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த கருப்புசாமி, ராமர் ஆகியோரும் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றனர்.

    அப்போது அதே வழித்தடத்தில் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு பஸ்ஸின் பின்பகுதியிலும் மோதி நின்றது. இதில் பஸ் ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் மோதி நின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த கருப்பு சாமி, ராமர் ஆகியோர் லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். லாரி மோதிய வேகத்தில் பஸ் புளிய மரத்தில் மோதி நின்றதால் பயணிகள் அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அம்மாபேட்டை போலீசார் விபத்தில் இறந்த 2 வாலிபர்களின் உடலையும் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பின்னர் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சேசன் சாவடி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (48) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் குஜராத்தில் இருந்து கோவைக்கு டயர் லோடு ஏற்றிக் கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    மேலும் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு கண்டெய்னர் லாரியை ஒட்டி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து குடி போதையில் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.

    மது குடித்துவிட்டு விபத்தை ஏற்படுத்தி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • உயிருக்கு போராடிய ராகுலை ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
    • குமரலிங்கம் பகுதியில் விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குமரலிங்கம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய்(வயது 25). இவரது நண்பர் ராகுல் ( 24).2பேரும் உடுமலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். நேற்று இரவு வேலையை முடித்து விட்டு உடுமலையில் இருந்து குமரலிங்கத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    குமரலிங்கம் சாலை கருப்பட்டிபாளையம் என்ற இடத்தில் வளைவான பகுதியில் திரும்பியபோது ரோட்டில் இருந்த பாலத்தில் நிலை தடுமாறி மோதினர்.பின்னர் கீழே உள்ள வாய்க்காலில் விழுந்தனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் 2பேரையும் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சஞ்சய் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    உயிருக்கு போராடிய ராகுலை ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் உயிரிழந்தார். இது குறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குமரலிங்கம் பகுதியில் விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
    • மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற வாலிபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற வாலிபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பலியானார். பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். அவரது பெயர் ஜீவகுமார். திருவொற்றியூர் ராஜா நகரை சேர்ந்தவர். உயிரிழந்த நபர் யார் என்பது தெரியவில்லை. அவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

    சென்னை வாலாஜா சாலையில் அதிவேகமாக சென்ற கார் சென்னைப் பல்கலைகழக சுவற்றில் மோதியது. இதில் காரை ஓட்டி சென்ற பெரம்பூரைச் சேர்ந்த துணி கடை உரிமையாளர் கார்த்திக் படுகாயம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். காரில் பயணம் செய்த பெரம்பூர் அகரத்தை சேர்ந்த மேகநாதன், ஜெயக்குமார் ஆகிய இருவரும் ஓமாந்தூரார் அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன், (வயது65) கூலித் தொழிலாளி. இவர் சைக்கிளில் திருக்கழுக்குன்றத்தில் இருந்து காட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    நரப்பாக்கம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • பட்டாபிராம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆவடி:

    பட்டாபிராம் கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் மூர்த்தி இவரது மகன் கமலேஷ், 21. இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இன்று காலை 8.30 மணி அளவில் கமலேஷ் வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலம் வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, வளைவில் அதிவேகமாக வந்த போது, திடீரென்று நிலை தடுமாறி ரெயில்வே மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி நிலை தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

    இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிச் சென்று அவரை மீட்டு போரூர் ராமச்சந்திரா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் கமலேஷ் வழியிலே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பட்டாபிராம் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹெல்மட் அணியாததும், அதிவேகமாக சென்றதுமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

    • விபத்தில் பலத்த காயம் அடைந்த 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த வலசைவெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி (58). இவர் நேற்று மதியம் போளிவாக்கள் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது அந்த வழியாக திருவள்ளூரிலிருந்து ஸ்ரீபெரும்புதுார் நோக்கி வந்த காரும் எதிரே திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் சாலையோரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த துளசி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் துளசி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இருசக்கர வாகனத்தில் வந்த கம்மவார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி (48) சதானந்தம் (35) இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • காஞ்சிபுரம் நோக்கி வந்த தனியார் கம்பெனி பஸ் மோட்டார் சைக்கிள் பின்புறம் மோதியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் தினேஷ் (வயது 26). இவர் பிறந்த நாள் மற்றும் திருமண வரவேற்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் இதே தொழில் செய்யும் தனது நண்பரான குமரன் மகன் மற்றொரு தினேஷ் (27) என்பவருடன் காஞ்சிபுரத்தை அடுத்த ஒலிமுகமதுபேட்டையில் பிறந்த நாள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். வழியில் செங்கழுநீரோடை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பொன்னேரிக்ரையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த தனியார் கம்பெனி பஸ் மோட்டார் சைக்கிள் பின்புறம் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்த குமரன் மகன் தினேசுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    விபத்து இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் உயிரிழந்த நம்பிராஜனுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் கருப்பந்துறை ஜெயம் நகரைச் சேர்ந்தவர் இசக்கி நம்பிராஜன்(வயது 29). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலை நம்பிராஜன் மோட்டார் சைக்கிளில் டவுனில் இருந்து பாளைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சீவலப்பேரி சாலையில் அவர் சென்றுள்ளார். சீவலப்பேரி சாலை மணிக்கூண்டு அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு சென்றபோது அவ்வழியாக செங்கல் லோடு ஏற்றிவந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நம்பிராஜன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து நெல்லை மாநகர போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நம்பிராஜனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை நம்பிராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் உயிரிழந்த நம்பிராஜனுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. தற்போது அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நம்பிராஜன் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

    ×