என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பக்ரீத் பண்டிகை"
- மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.
- இறைவனுக்கு மிகவும் விருப்பமானது கால்நடைகளை குர்பானி கொடுப்பதாகும்.
அரபி மாதங்களில் 12-வது நிறைவு மாதமாக இடம் பெறுவது துல்ஹஜ் மாதம் ஆகும். இந்த மாதத்தின் பத்தாம் நாளன்று உலக முஸ்லிம்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படக்கூடியது 'பக்ரீத் பண்டிகை' ஆகும். 'பக்ரா' மற்றும் 'ஈத்' எனும் இரண்டு உருது வார்த்தைகளின் இணைப்புதான் 'பக்ரீத்' ஆகும். இதன் பொருள்- 'ஆட்டைப் பலியிட்டு கொண்டாடப்படும் பெருநாள்' என்பதாகும். மேலும் இதற்கு 'குர்பானி பெருநாள்' என்றும் பெயருண்டு.
'குர்பானி' என்றால் 'தியாகம் செய்தல்' என்பது அர்த்தமாகும். குர்பானி கொடுப்பது முஸ்லிம்கள் மீது ஹிஜ்ரி 2-ம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. இதற்கு காரணமாக ஒரு சரித்திர நிகழ்வும் உண்டு. நபி இப்ராகீம் (அலை) அவர்கள் தமது 86-ம் வயதில் குழந்தை வரம் கேட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்தபோது அவர்களுக்கு இஸ்மாயீல் எனும் ஆண் குழந்தையை இறைவன் வழங்கினான். சில ஆண்டுகள் கழித்து அந்தக்குழந்தையை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவதாக கனவு கண்டார்.
இந்த இறை உத்தரவை செயல்படுத்திட குழந்தையை அறுத்துப் பலியிட துணிந்தார். அவரின் தியாகத்தை ஏற்றுக்கொண்ட இறைவன் குழந்தைக்கு பதிலாக பிராணி ஒன்றை பலியிட வழிகாட்டினார். இதுகுறித்து திருக்குர்ஆன் கூறுவதாவது: "ஆகவே அவ்விருவரும் இறைவனின் விருப்பத்திற்கு முற்றிலும் வழிபட்டு இப்ராகீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட முகங்குப்புறக் கிடத்தினார். அச்சமயம் நாம் 'இப்ராகீமே என அழைத்து உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர்கள் என்றும் நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்' என்றும் கூறி 'நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்' என்றும் கூறினோம்.
ஆகவே மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம். அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம்". (திருக்குர்ஆன் 37:103-108) 'நபியே நீர் உம் இறைவனை தொழுது குர்பானியும் கொடுப்பீராக' (திருக்குர்ஆன் 108:3) இந்த தியாகத்திருநாள் குறித்த நபிமொழிகள் வருமாறு: 'துல்ஹஜ் 10-ம் நாளன்று ஆதமின் மகன் செய்யும் செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது கால்நடைகளை குர்பானி கொடுப்பதாகும்.
அவைகள் மறுமைநாளில் தமது கொம்புகளுடனும் ரோமங்களுடனும் கால்குளம்புகளுடனும் அவர்களை வந்தடையும். அறுக்கப்படும் பிராணிகளின் ரத்தங்கள் பூமியில் விழும் முன்பாகவே இறைவனிடம் அவை சென்றடைகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதி) 'குர்பானி கொடுப்பதினால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என நபித்தோழர்கள் வினவிய போது 'அதன் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு நன்மை உண்டு' என நபி (ஸல்) பதில் தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்: ஜைத் பின் அர்க்கம் (ரலி) நூல்: அஹ்மது) இறைவன் நமக்கு வழங்கிய வாழ்க்கை மற்றும் செல்வங்கள் கால்நடைகள் ஆகிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திட தியாகப்பெருநாள் கொண்டாடப்படுகிறது.
இதன்மூலம் இறை நெருக்கத்தையும் பெறமுடிகிறது. இறைவனுக்கு அடிபணிதலையும் காட்டமுடிகிறது. குர்பானி என்பது தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் அனைத்து சமுதாய ஏழை எளியோருக்கும் உணவு மற்றும் மாமிசங்களை வழங்கி உணவு வழங்குவதை விரிவுபடுத்தி பசியில்லாத சமுதாயத்தை உருவாக்குவதும் உறவுகளை ஆதரிப்பதும் விருந்தினர்களை உபசரிப்பதும் அண்டை அயலாரை அன்புடன் நடத்துவதும் நலிந்தோருக்கு தர்மம் செய்வதும் ஆகும்.
குர்பானி என்பது நபி இப்ராகீம் (அலை) அவர்களின் தியாக வழிமுறையை நினைவு கூர்வதும் அதை கடைப்பிடிப்பதும் ஆகும். குர்பானி என்பது இறைவனின் கூற்றை உண்மைப்படுத்துவதும் இறைவிசுவாசத்தின் மீது உறுதியாக இருப்பதின் சாட்சியமும் ஆகும். இறைவன் பிரியப்படும் விதமாகவும் அவன் பொருந்திக் கொள்ளும் விதமாகவும் அவனது உத்தரவை வெகுவிரைவாக செயல்படுத்துவதும் தான் குர்பானியாகும்.
பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஏழை-எளியோரின் பசிதீர்த்து கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. இந்த நாளில், "ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்; பிறகு நண்பர்கள்; அடுத்துதான் தங்களுக்கு" என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக்கொள்ளும் பண்பையும், மனிதநேயத்தையும் இஸ்லாமிய பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
இத்தகைய உயரிய நெறியினை கடைப்பிடித்து வரும் இஸ்லாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளை கொண்டாடி அன்பை பரிமாறிக்கொள்ளவும், நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்தி கருணை காட்டிடவும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:- உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவி; விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனிதநேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்று மனதார வாழ்த்துவதோடு எனது உளங்கனிந்த பக்ரீத்திருநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- சிறப்பு ஆட்டுச் சந்தை நடந்தது
- வெளி மாநிலங்களில் இருந்தும் மாடுகள் கொண்டு வரப்பட்டது
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை நடந்தது.
இதில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு அதிகளவில் கொண்டுவரப்பட்டன.
வெள்ளாடுகள் அதிகப்பட்சமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று ஒரு நாள் மட்டும் இந்த சிறப்பு ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் வேலூரை அடுத்த பொய்கை மாட்டு சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடக்கும். சுற்றுவட்டார பகுதிகளில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி நேற்று நடந்த மாட்டு சந்தையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட ஏராளமான மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.
அதன்படி கறவை மாடுகள் அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையிலும், எருது மாடுகள் ரூ.60 ஆயிரம் வரையிலும் மற்றும் எருமை மாடுகள் ரூ.50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று ஒரு நாள் மட்டும் பொய்கை வார சந்தையில், அதிக அளவில் ரூ.1.90 கோடிக்கு வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும்.
- விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்.
சென்னை:
பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இறை நினைவோடும், தியாகச் சிந்தனையோடும், பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், எனது உளங்கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.
இத்தியாகத் திருநாளில் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; துன்பப்படுபவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்; எளியவர்களிடம் கருணை காட்டுங்கள், சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.
சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும்; விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-
உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும். இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடுகிற பக்ரீத் பண்டிகை, தியாகத்தை போற்றுகிற நாளாகும்.
தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்கள்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-
உலக முஸ்லிம்களில் பலர் ஐந்தாவது கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்றி, தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
உலக முஸ்லிம்கள் கொண்டாடிடும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் முஸ்லிம் பெருமக்கள் அனைவருக்கும் இதயமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா:-
கொடுங்கோலன் நம் ரூத்தின் அடக்குமுறைகளைத் துணிவுடன் எதிர்கொண்டு வென்ற இறைத் தூதர் இப்ராஹீம் மற்றும் அவரது அருமை மகனார் இஸ்மாயீல் ஆகியோரின் அரும்பெரும் தியாகத்தையும் இறைவனுக்கு அடிபணியும் ஒப்பற்ற தன்மையையும் நினைவு கொள்ளும் வகையில் தியாகத்திருநாள் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றது.
இந்திய துணைக்கண்டத்தில் மாத்திரமல்லாமல் முழு உலகிலும் அமைதியும் வளமும் சுதந்திரமும் உரிமைகளும் மேலோங்குவதற்கும் பிரார்த்தனை செய்வோம். அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
மேலும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணிராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், திருநாவுக்கரசர் எம்.பி., சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஹாரூன் ரசீது ஆகியோரும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
- குறைந்தபட்சம் ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.
- உசிலம்பட்டியில் இருந்து வந்த நாட்டு செம்மறி ஆடு ரூ.65 ஆயிரத்துக்கு விலை போனது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் கால்நடை சந்தை இயங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாடு விற்பனையும், செவ்வாய்க்கிழமை ஆடுகள் விற்பனையும் நடக்கிறது.
இங்கு அண்டை மாவட்டங்களான தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகள் வாங்குவதற்கு வருவார்கள். வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் இஸ்லாமியர்கள் அதிக அளவில் ஆடுகள், மாடுகளை வாங்கி குர்பானி கொடுப்பது வழக்கம். இதனையொட்டி இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்காக குவிந்தன. இதனால் சந்தை களைகட்டி காணப்பட்டது.
இங்கு நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பண்டிகையையொட்டி இந்த ஆண்டு ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். இன்று காலை 6 மணி முதல் சந்தை தொடங்கியதில் இருந்தே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுமார் 3,500-க்கும் அதிகமான டோக்கன்கள் சந்தையில் வினியோகிக்கப்பட்டது. வெள்ளாடு, செம்மறி கிடா, மயிலம்பாடி, பொட்டுக்குட்டி, வேலி ஆடு, கொர ஆடு, பிள்ளை போர், கரும்போர் என பல்வேறு வகைகளை சேர்ந்த ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
குறைந்தபட்சம் ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. குறிப்பாக உசிலம்பட்டியில் இருந்து வந்த நாட்டு செம்மறி ஆடு ரூ.65 ஆயிரத்துக்கு விலை போனது. விலை சற்று அதிகமானாலும் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். சுமார் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- அரசு விடுமுறை வருவதால் பஸ், ரெயில்களில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வகையில் முன் பதிவு செய்யவும் ஆர்வமாக உள்ளனர்.
- பக்ரீத் விடுமுறை வருவதால் நாளைய பயணத்திற்கு அனைத்து ஆம்னி பஸ்களிலும் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
சென்னை:
பக்ரீத் பண்டிகையையொட்டி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அரசு விடுமுறையாகும். இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் தயாராக உள்ளன.
பொதுவாக வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை வெளியூர் பயணம் அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை வருவதால் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக நாளை (புதன்கிழமை) மாலையில் இருந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் தயாராக உள்ளது. அரசு விரைவு பஸ்கள் கூடுதலாக 100 இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல விழுப்புரம், மதுரை, சேலம், கோவை போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அரசு விடுமுறை வருவதால் பஸ், ரெயில்களில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வகையில் முன் பதிவு செய்யவும் ஆர்வமாக உள்ளனர். அரசு பஸ்களில் வழக்கத்தைவிட நாளை (புதன்கிழமை) பயணம் செய்ய முன்பதிவு அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமையை போல் முன்பதிவு கூடி உள்ளது.
குறிப்பாக தென்மாவட்ட பஸ்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பிவிட்டன. காத்திருப்போர் பட்டியல் 300-ஐ தாண்டியுள்ளது. தக்கல் முன்பதிவு காத்திருப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் விடுமுறை தினத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வார நாட்களில் பொதுவாக குறைந்த அளவில் தான் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் பக்ரீத் விடுமுறை வருவதால் நாளைய பயணத்திற்கு அனைத்து ஆம்னி பஸ்களிலும் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் தென்காசி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகரித்துள்ளது.
கூட்ட நெரிசலை குறைக்க கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நள்ளிரவு வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- ரெட்டேரி சந்தையில் மட்டும் ரூ.5 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகி இருக்கிறது.
- ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை விற்பனையாகியுள்ளது.
கொளத்தூர்:
பக்ரீத் பண்டிகை நாளை மறுநாள் (29-ந்தேதி) கொண்டாடப்படுவதையொட்டி தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடுகள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
சென்னையில் புளியந்தோப்பு, ஆடு தொட்டி, ரெட்டேரி சந்தை, தாம்பரம் சந்தை உள்ளிட்ட இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத்தையொட்டி ஆடுகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும் பக்ரீத் பண்டிகையையொட்டி கடந்த 24-ந்தேதியில் இருந்தே ஆடுகள் விற்பனை இந்த சந்தைகளில் சூடு பிடித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்காக வந்துள்ளன.
இநத ஆடுகள் விற்பனை நாளை வரை நடைபெறுகிறது. இதுவரை ரூ.14 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகி இருப்பதாக ஆடு வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ரெட்டேரி சந்தையில் மட்டும் ரூ.5 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகி இருக்கிறது. ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை விற்பனையாகியுள்ளது.
வெளி மாநிலங்களில் இருந்து ஆடுகளை கொண்டு வரும் போது இது போன்ற பண்டிகை நாட்களில் போலீசார் பண வசூலில் ஈடுபடுவது வாடிக்கையாக இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் இருந்து மாதவரம் பகுதிக்கு வருவதற்குள் போலீசாருக்கு ரூ.10 ஆயிரம் வரை பணம் கொடுக்க வேண்டி இருப்பதாகவும் வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
- ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும்.
- திருப்பதி-காட்பாடி இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் ஜூன் 26-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (28-ந்தேதி) இரவு 11.15 மணிக்கு புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரெயில் (எண்:06052) சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு 12.10 மணிக்கும், தாம்பரத்துக்கு நள்ளிரவு 12.43 மணிக்கும் திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 11.45 மணிக்கும் சென்றடையும்.
மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து 29-ந் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரெயில் (எண்:06051) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
திருப்பதி-காட்பாடி இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் (எண்:07581/07660) ஜூன் 26-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல், அரக்கோணத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரெயில்கள் (எண்:16057, 06753) 29-ந்தேதி முதல் ஜூலை 2-ந் தேதி வரை ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும். திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரெயில்கள் (எண்:16054, 06728) 29-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி வரை ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
மேலும் கோவை-திருப்பதி அதிவிரைவு ரெயில் (எண்:22616/22615) 29-ந்தேதியும் விழுப்புரம்- திருப்பதி விரைவு ரெயில் (எண்:16854/ 16853) ஜூன் நேற்று முதல் ஜூலை 2-ந்தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
அதே தேதிகளில் இந்த ரெயில்கள் காட்பாடியில் இருந்து புறப்பட்டு கோவை, விழுப்புரத்துக்கு இயக்கப்படும். தாம்பரம், சாந்த்ராகாச்சி அந்தியோதயா விரைவு ரெயில் (எண்:22842), பெங்களூரு- ஹவுரா குளிர்சாதன அதிவிரைவு ரெயில் (எண்:22864) நாளை (புதன் கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த பெரும்பாலானவர்கள் மூரி வகையான காளை மாடுகளை அதிகளவு வாங்கிச் சென்றனர்.
- சந்தையில் அனைத்து வகையான மாடுகளுக்கும் கிராக்கி நிலவியது.
நெல்லை:
நெல்லை, மேலப்பாளையம் மாட்டுச்சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும்.
இந்த சந்தையில் விற்பனைக்கு வரும் மாடுகளை வாங்க நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவு வருவார்கள்.
இன்று நடைபெற்ற மாட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாடுகள் விற்பனை களை கட்டியது. பக்ரீத் நெருங்கி வருவதால் வியாபாரிகளும், மாடு வாங்குபவர்களும் மாட்டுச்சந்தையில் கூடினர். ஏற்கனவே கடந்த வாரம் நடந்த மாட்டுச்சந்தையில் மாடு வாங்க முடியாதவர்கள் இந்த வாரம் மாடு வாங்க குவிந்தனர்.
மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த பெரும்பாலானவர்கள் மூரி வகையான காளை மாடுகளை அதிகளவு வாங்கிச் சென்றனர். மேலும் சந்தையில் அனைத்து வகையான மாடுகளுக்கும் கிராக்கி நிலவியது. குறிப்பாக வழக்கமான நாட்களை விட இன்று ஒரு மாட்டின் விலை ரூ.3 ஆயிரம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சாதரண நாட்களில் ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் மாடுகள் இன்று ரூ.18 ஆயிரத்திற்கு விற்பனையானது. சந்தையில் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் 1,000-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையாகின்றன.
இதுகுறித்து மாட்டு உரிமையாளர்கள் கூறும்போது, 'மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் மாடுகளுக்கு இன்று கிராக்கி நிலவியதால் வழக்கமான நாட்களை விட இன்று நல்ல லாபம் கிடைத்தது' என்றனர்.
- வருகிற வியாழக்கிழமை அன்று பக்ரீத் திருநாள் வருவதையொட்டி இன்று சந்தையில் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்தது.
- மேலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூரில் சந்தைப்பேட்டை உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை சந்தை நடைபெறும். இதில் ஆடு, மாடு, கோழி மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
மேலூர்-திருச்சி மெயின்ரோட்டில் இந்த சந்தைப்பேட்டை அமைந்துள்ளதால் அனைத்து வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்கின்றன. இதனால் இந்த சந்தையில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். வருகிற வியாழக்கிழமை அன்று பக்ரீத் திருநாள் வருவதையொட்டி இன்று சந்தையில் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்தது.
மேலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதனால் நேற்று நள்ளிரவு முதலே சந்தை பகுதி கூட்டமாக காணப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இந்த ஆடுகள் சுமார் ரூ.8 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.20ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
இதுவரை விற்பனை செய்யப்பட்ட ஆடுகளில் மொத்த மதிப்பு சுமார் ரூ.5 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது.
பக்ரீத் பண்டிகையையொட்டி வெளியூர்களில் இருந்தும் அதிகளவில் ஆடுகள் கொண்டு வரப்பட்டதால் விற்பனை ஜோராக நடந்ததுடன் ஆட்டுச்சந்தை களை கட்டியது.
- வாரந்தோறும் குண்டடம் சந்தைக்கு 1,500 ஆடுகள் முதல் 2ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
- நல்ல கொம்புடன் கூடிய 30 கிலோ எடை உள்ள செம்மறிக்கிடாய் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.
குண்டடம்:
திருப்பூர் மாவட்டம் குண்டடம் வாரச்சந்தை சனிக்கிழமை கூடும். குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உள்ளூர் வியாபாரிகள் மூலம் செம்மறி கிடாய்கள் மற்றும் வெள்ளாடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
வாரந்தோறும் குண்டடம் சந்தைக்கு 1,500 ஆடுகள் முதல் 2ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இந்த வாரம் பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
இதுபற்றி வியாபாரி ஒருவர் கூறுகையில், பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இந்தவாரம் அதிக அளவில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்காக செம்மறிக்கிடாய்கள் கொண்டு வந்ததால் விலை கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.
நல்ல கொம்புடன் கூடிய 30 கிலோ எடை உள்ள செம்மறிக்கிடாய் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. கொம்பு இல்லாத செம்மறிக்கிடாய்கள் ரூ.17 ஆயிரம் வரை விற்பனையானது. மொத்தம் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது என்றார்.
- சாதாரண வாரங்களிலேயே ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையாவது வழக்கம்.
- சென்ற ஆண்டு விற்பனையான தொகையில் இருந்து ரூ.3 ஆயிரம் வரை ஆடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது.
இங்கு வாரம் தோறும் சனிக்கிழமை ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். மதுரை, தேனி, ராமநாதபுரம் , சிவகங்கை, நெல்லை, தென்காசி, விருதுநகர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
இங்கு சாதாரண வாரங்களிலேயே ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையாவது வழக்கம். தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகும்.
அந்த வகையில் வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை வியாபாரம் இன்று களை கட்டியது. இன்று அதிகாலை முதல் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது
வெள்ளாடு, சீனி வெள்ளாடு, செம்மறியாடு, கொடி ஆடு என பலதரப்பட்ட வகைகள் கொண்ட 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்தனர்.
7 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8 ஆயிரத்திற்கு விலை போனது. மேலும் எடைக்கு ஏற்ப ரூ.33 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை இருந்தது. ஜோடி ஆடு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் வரை விலை இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பக்ரீத் பண்டிகையில் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதால் அதிக அளவில் செம்மறி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டுகளை விட ஆடுகளின் விலை இந்த ஆண்டு அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர். இது சென்ற ஆண்டு விற்பனையான தொகையில் இருந்து ரூ.3 ஆயிரம் வரை ஆடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. ரூ.6 கோடிக்கு ஆடுகளின் விற்பனை இருந்ததாக வியாபாரிகள் கூறினர்.
- கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓசூர் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன.
- இன்று ஒரே நாளில் ரூ.6 முதல் 8 கோடி வரை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி:
நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை 29-ந்தேதி முஸ்லிம் மக்களால் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆடுகள் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக கொண்டு வரப்பட்டன.
கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓசூர் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன.
இன்று அதிகாலை 5 மணி முதல் சந்தையில் ஆடுகள் விற்பனை தொடங்கியது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கோலார் மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர் மற்றும் தமிழகத்தில் வேலூர், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு, 12 ஆயிரம் ரூபாய் விலை போகும். ஆனால், பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால் சற்று விலை அதிகரித்து, 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு, 15 ஆயிரம் முதல், 17 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது.
குறைந்த பட்சம் ஒரு ஆடு 10 ஆயிரம் ரூபாய் முதல், அதிகபட்சமாக ஒரு ஆடு 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனை ஆனது.
இன்று ஒரே நாளில் ரூ.6 முதல் 8 கோடி வரை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்