search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 245738"

    • துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
    • துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வருகையையொட்டி திருவனந்தபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து நாளை (21-ந் தேதி) திருவனந்தபுரம் வருகிறார். அங்கு பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

    மறுநாள் அவர் திருவனந்தபுரம் சட்டசபை கட்டிட வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அப்போது இது தொடர்பான நினைவு சின்னத்தையும் திறந்து வைக்கிறார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வருகையையொட்டி திருவனந்தபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • புத்தாண்டு விடியல், நமது வாழ்வில் மகிழ்ச்சியையும், பெரிய சாதனைகளையும் கொண்டு வரட்டும்.
    • குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

    2023 புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

    புத்தாண்டு தினத்தில் மக்கள் அனைவருக்கும், வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு விடியல், மகிழ்ச்சியையும், இலக்குகளையும், உத்வேகங்களையும், நமது வாழ்வில் பெரிய சாதனைகளையும் கொண்டு வரட்டும்.

    தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள உறுதி ஏற்போம். புத்தாண்டில் நமது தேசம் மற்றும் மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    புத்தாண்டை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:


    இந்த மகிழ்ச்சியான தருணம், நமது முன்னோக்கிய வளர்ச்சிப் பாதையை உறுதிசெய்து, உத்வேகத்துடன் நமது முயற்சிகளைத் தொடர ஒரு வாய்ப்பாகும். இந்தியாவை முன்னேற்றம் மற்றும் செழிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டுடன் புத்தாண்டைத் தொடங்குவோம்.

    முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேறிக் கொண்டிருக்கும் தேசம், வளர்ச்சி, வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளுக்கு உலகில் மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ளது. நமது வாழ்வில் அமைதி, ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கான நமது முயற்சிகளை நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முன் எப்போதும் காணாத வகையில் இந்தியா எழுச்சி பெற்று வருகிறது.
    • உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா நிச்சயம் உருவெடுக்கும்.

    நாட்டின் மிகச் சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு 2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான சில்ப் குரு விருது உள்பட 78 தேசிய விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. டெல்லியில் மத்திய ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் வி.பன்னீர்செல்வம், 2019ஆம் ஆண்டுக்கான சில்ப் குரு விருதைப் பெற்றார். புதுச்சேரியைச் சேர்ந்த கே.வெங்கடேசன், டெரக்கோட்டா வேலைப்பாட்டுக்காகவும், மாசிலாமணி, ஷோலாபித் வேலைப்பாட்டுக்காகவும், 2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

    விருது பெற்றவர்களில் 36 பேர் பெண்கள். சில்ப் குரு விருதுடன் தங்க நாணயம், ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரப்பத்திரம், சால்வை, சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய தன்கர் கூறியுள்ளதாவது: 


    முன் எப்போதும் காணாத வகையில் இந்தியா எழுச்சி பெற்று வருகிறது. உலக அளவில் முதலீடுகளுக்கு உகந்த இடமாக இந்தியா உள்ளது. கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் தொடர்புடைய கைவினைஞர்கள் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர்.

    கலைஞர்களின் அரிய திறன்கள் இந்தியாவை பெருமிதம் கொள்ள வைக்கின்றன. கைவினைஞர்கள் நமது கலாச்சாரத்தின் சின்னமாக திகழ்கின்றனர். இந்தியா, அளவில்லாத திறன்களைக் கொண்டுள்ளது என்பதை உலகிற்கு அவர்கள் பறை சாற்றுகின்றனர்.

    ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்பதன் மூலம், பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வையை உலகம் கவனிப்பதை சுட்டிக் காட்டுகிறது. இந்த தசாப்தத்தின் முடிவில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக நிச்சயம் உருவெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உலகம் முழுவதும் ஆன்மிக நற்சிந்தனையை பிரம்மகுமாரிகள் பரப்பி வருகின்றனர்.
    • ஆன்மிகம் ஒரு நபரை முழுமையான மனிதன் ஆக்குகிறது.

    அபுநகர்:

    ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபு நகரில் பிரம்ம குமாரிகளின் இயக்கத்தின் 85-வது ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளதாவது:

    பிரம்ம குமாரிக்ள் அமைப்பு மனித குலத்திற்கு மட்டுமின்றி, அனைத்து உயிரினங்களுக்கும் ஆதரவு காட்டுகிறது. உலகம் முழுவதும் ஆன்மிகத்தையும், நற்சிந்தனையையும் பிரம்மகுமாரிகள் பரப்பி வருகின்றனர். பருவநிலை மாற்றத்தை முறியடிக்க இருபது லட்சம் மரக்கன்றுகள் நட்டிய அவர்களது பணி பாராட்டுக்குரியது. சரியான கல்வி, சரியான சிந்தனை, சரியான ஞானம் மட்டுமே தமது தேசத்தை ஆற்றல் மிக்கதாக மாற்றும்.

    நாட்டில் இருந்து முறையற்ற தன்மையையும், நீதியற்ற நடத்தையையும் எதிர்மறை போக்கையும் களைவதற்கு சமூகத்தில் ஆன்மிக மனநிலையை வளர்ப்பது அவசியம். ஆன்மிகம் இல்லாத வாழ்க்கை நிறைவு பெறாது. உலகம் முழுவதும் தற்போது தொழில்நுட்ப மாற்றம் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நமது கல்வியில் ஆன்மிகம் என்பது இன்றியமையாத பகுதி, இது ஒரு நபரை முழுமையான மனிதன் ஆக்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கொரோனா காலத்தில் சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.
    • இந்தியாவை ஆரோக்கியத்திற்கான உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை.

    இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான பிஃக்கியின் 16-வது ஆண்டு சுகாதார மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    இந்தியாவை மருத்துவம் மற்றும் ஆரோக்கியத்திற்கான உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சிகள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும். நாட்டில் சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டாண்மை அவசியம்,

    அனைவருக்கும் சுகாதார சேவை வழங்கும் கனவை நனவாக்க, சுகாதார சேவையில் பொதுத்துறையினரும்-தனியார்துறையினரும் இணைந்த பெரும் கூட்டு முயற்சி தேவை. கொரோனா தொற்று காலத்தில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கவை.

    இந்தியா தனது குடிமக்களுக்கு குறுகிய காலத்தில் தடுப்பூசி செலுத்தியதுடன், பல நாடுகளுக்கு தடுப்பூசிகளையும் ஏற்றுமதி செய்துள்ளது. 1990 முதல் குழந்தை இறப்பு விகிதம் தடுப்பு போன்ற சுகாதாரக் குறியீடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றத்தை பதிவு செய்துள்ளது. இது நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையும் வகையில் உள்ளது.

    அனைவருக்கும் சுகாதாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் ஏழைகள் மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான சுகாதார சேவை கிடைக்கும் இடைவெளி வெகுவாக குறைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மருத்துவ சுற்றுலா துறையில் இந்தியா முக்கிய பங்களிப்பு.
    • ஆயுர்வேத சிகிச்சை மற்றும் யோகா உலக அளவில் பிரபலமடைந்துள்ளது.

    டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2018-19ம் ஆண்டுக்கான தேசிய சுற்றுலா விருதுகளை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வழங்கினார். இந்திய சுற்றுலா புள்ளியியல் 2022 என்ற புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது: 

    நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச அளவிலான மருத்துவ சுற்றுலா துறையில் இந்தியாவின் பங்களிப்பு தனிசிறப்பு வாய்ந்தது. நமது பழமையான சிகிச்சை முறையான ஆயுர்வேதம் மற்றும் யோகா, உலக அளவில் பிரபலமடைந்துள்ளது.

    சுற்றுலாவுக்கான சொர்க்கமாக இந்தியா உள்ளது. சர்வதேச சுற்றுலா தலங்களை காண்பதற்கு முன்பாக முதலில் உள்நாட்டு சுற்றுலா தளங்களை இந்திய சுற்றுலாப் பயணிகள் காணவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • இதில் மதத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களும் பங்கேற்க வேண்டும்.
    • மக்களின் சந்தேகங்களைப் போக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி, உடல் உறுப்பு தானத்திற்கான தேசிய பிரச்சாரத்தை குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய அவர் கூறியுள்ளதாவது:

    உறுப்பு தானம் ஒரு முக்கியமான பிரச்சினை. உறுப்பு தானத்திற்கான ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம். மக்கள் உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிப்பதுடன், அவர்களின் சந்தேகங்களைப் போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 


    இந்த முக்கியமான பிரச்சினையில் மதத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களும் பங்கேற்க வேண்டும். இந்த விஷயத்தில் சரியான சூழலை உருவாக்கும் தாதிச்சி தேஹ்தன் சமிதி அமைப்பின் முயற்சி பாராட்டத்தக்கது. இந்த பணியில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • துணை ஜனாதிபதி பதவி, நாட்டின் 2-வது உயரிய பதவி ஆகும்.
    • துணை ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

    புதுடெல்லி :

    நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் நேற்று பதவி ஏற்றார். அவருக்கு என்ன அதிகாரங்கள் உள்ளன என்பது பற்றிய ஒரு பார்வை இது:-

    * துணை ஜனாதிபதி பதவி, நாட்டின் 2-வது உயரிய பதவி ஆகும். மரணம், ராஜினாமா, நீக்கம் போன்ற சூழலில் ஜனாதிபதி பதவி காலியாகிறபோது, புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறவரையில், துணை ஜனாதிபதிதான் தற்காலிக ஜனாதிபதி ஆக பொறுப்பேற்பார். இந்த கால கட்டத்தில் ஜனாதிபதி பதவிக்கான அனைத்து அதிகாரங்கள், சலுகைகள், சம்பளம், அலவன்சுகள் உண்டு. ஆனால் அவர் மாநிலங்களவை தலைவராக பணியாற்றவோ அதற்கான சம்பளம், அலவன்சுகளையோ பெற முடியாது.

    * துணை ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுக்காலம்தான் என்றாலும் கூட, பதவிக்காலம் முடிந்தாலும் புதிய துணை ஜனாதிபதி பதவி ஏற்கிறவரை, இவர் பதவியில் தொடரலாம்.

    * துணை ஜனாதிபதிதான் மாநிலங்களவை தலைவர் என்ற வகையில், அந்த சபையை நடத்துவது தொடர்பான அனைத்து அதிகாரங்களும் அவருக்கு உண்டு.

    • பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
    • ஜெகதீப் தன்கரின் நீண்டகால பொது வாழ்வின் அனுபவத்தால் நாடு பயனடையும் என்று ஜனாதிபதி ட்வீட்

    புதுடெல்லி:

    நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற தேர்தலில் அவர் 528 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா, 182 வாக்குகளே பெற்றார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி, ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

    துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜெகதீப் தன்கருக்கு, பதவியை நிறைவு செய்ய உள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    'ஜெகதீப் தன்கரின் நீண்டகால பொது வாழ்வின் அனுபவத்தால் நாடு பயனடையும் என்றும் அவரது ஆக்கப்பூர்வமான மற்றும் வெற்றிகரமான பதவிக்காலத்திற்கு வாழ்த்துக்கள்' என ஜனாதிபதி திரவுபதி முர்மு ட்வீட் செய்துள்ளார்.

    • பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    • எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளே பெற்றார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. வாக்குப்பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவடைந்தது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

    இந்த தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் (71), எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்கரெட் ஆல்வா (80) ஆகியோர் போட்டியிட்டனர்.

    மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்ந்து 780 எம்.பி.க்கள் உள்ளனர். இதில், 725 பேர் வாக்களித்தனர். 92.94 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.

    வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். தேர்தல் முடிவுகளை, மக்களவை செயலாளர் உத்பல் குமார் சிங் அறிவித்தார். இதையடுத்து துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் பதவியேற்க உள்ளார். 

    • இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
    • இடைவெளியின்றி நடக்கிற வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது.

    புதுடெல்லி :

    நாட்டின் தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம், வரும் 10-ந் தேதி முடிகிறது. அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (6-ந் தேதி) நடத்தப்படுகிறது.

    இந்த தேர்தலில், பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 788 பேர் ஓட்டு போடுகிறார்கள். எனவே ஓட்டுப்பதிவு டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் மட்டுமே நடைபெறும்.

    இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. வேட்பாளராக மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் கவர்னர் ஜெகதீப் தன்கர் (71) நிறுத்தப்பட்டுள்ளார்.

    அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் மார்கரெட் ஆல்வா (80) போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிட்டாலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலை புறக்கணிப்பது அவருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

    அதே நேரத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும்பான்மை எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் உள்ளனர். அத்துடன் அந்த கூட்டணியில் இடம்பெறாத பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதாதளம் கட்சிகளும், பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே பா.ஜ.க. வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெறுவது உறுதி.

    டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இடைவெளியின்றி நடக்கிற வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது.

    வாக்குப்பதிவு முடிந்த உடனேயே எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணி முடிந்த உடன் தேர்தல் அதிகாரி உத்பால் குமார் சிங் முடிவை வெளியிடுகிறார்.

    எனவே புதிய துணை ஜனாதிபதி யார் என்பது இன்று மாலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும்.

    துணை ஜனாதிபதிதான் பாராளுமன்ற மாநிலங்களவையின் தலைவராகவும் இருந்து செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×