search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி விவகாரம்"

    • சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
    • தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தை தொடர்ந்து மருந்து கடைகளில் சில பொருட்களை வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    விதிகளை மீறி தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆல்கஹால், எத்தனாலை மூலப்பொருளாகக் கொண்ட ஸ்பிரிட், சானிடைசர், ஹேண்ட் வாஸ் ஆகியவற்றை முறைப்படி விற்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் உள்ள 37000 மருந்து கடைகளுக்கும் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்க அறிவுறுத்தியுள்ளது.

    • அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும்.
    • இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிரார்த்தனை.

    நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது.

    விஷச்சாரயத்திற்கு அன்பிற்குரியவர்களைப் பலிகொடுத்துவிட்டு அழுது துடிப்பவர்களுக்கு எத்தகைய வார்த்தைகளில் ஆறுதல் சொல்லிவிடமுடியும்? தற்போது அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள், மக்கள் என அனைத்து தரப்பினரின் கவனமும், கவலையும், கோபமும் அதிகரித்திருக்கிறது. அரசும், ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு, இழப்பைக் குறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் நீண்ட கால பிரச்சனைக்கு குறுகிய கால தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை நிச்சயம் பலனளிக்காது.

    கடந்த ஆண்டு இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாரயத்தை குடித்து 22 பேர் பலியானர்கள். அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இப்போது பக்கத்து மாவட்டத்தில் அதே மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து கொத்து கொத்தாக மக்கள் இறந்திருக்கிறார்கள். இப்போதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

    வாழ்வை மேம்படுத்துவார்கள் என நம்பி வாக்களிக்கும் தமிழ்நாட்டு மக்களை, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி நம்மை ஆட்சி புரிந்த அரசாங்கங்களே டாஸ்மாக் வைத்து மக்களை குடிக்க வைக்கிற அவலத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 'மதுவிலக்கு கொள்கை என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்து விடுகிறது.

    டாஸ்மாக்கில் 150 ரூபாய்க்கு குடித்து போதைக்கு அடிமையானவர்கள் பணம் இல்லாதபோது 50 ரூபாய்க்கு கிடைக்கும் விஷச்சாராயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள். குடிக்கு அடிமையானவர்களின் பிரச்சனை என்பது தனிநபர் பிரச்சனை அல்ல, அந்த ஒவ்வொரு குடும்பத்தின், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை என்பதை எப்போது நாம் அனைவரும் உணரப்போகிறோம்?

    அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும். குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்க மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையங்களைத் தொடங்கி அவர்களை குடிநோயிலிருந்து மீட்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற அரசு எத்தகைய தொலைநோக்கு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறதோ, அதேபோல குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் மறுவாழ்விற்கு முன்னுதாரணமான திட்டங்களை வகுத்து ஓர் இயக்கமாகவே செயல்படுத்த வேண்டும்.

    அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்கமுடியும். குறுகிய கால தீர்வை கடந்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் மதுவிலக்குக் கொள்கையில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பார் என மக்களோடு சேர்ந்து நானும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

    சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாரயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம். இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிரார்த்தனை.

    இனி ஒரு விதி செய்வோம்..! அதை எந்நாளும் காப்போம்.!! என்று கூறியுள்ளார்.

    முன்னதாக, கள்ளச்சாராய விவகாரத்தில் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை! நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார்! மீதமுள்ளவர்கள் யாரை கண்டு அஞ்சுகின்றனர்? ஏழை எளிய மக்கள் 200 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி, 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் துல்லியமாக விசாரிக்கப்பட வேண்டும்.
    • அனைத்து நிலை அரசு ஊழியர்கள் அனைவரும் சட்டத்தின் பிடியில் நிறுத்தப்பட வேண்டும்.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் துல்லியமாக விசாரிக்கப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்திற்குக் காரணமான காவல் துறை உட்பட அனைத்து நிலை அரசு ஊழியர்கள் அனைவரும் சட்டத்தின் பிடியில் நிறுத்தப்பட வேண்டும்.

    சாதாரணப் பணியிட மாற்ற நடவடிக்கை மட்டும் போதாது. இந்தச் சம்பவத்திற்குத் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் மெத்தனாலை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது.
    • சாராயம் விற்பனை செய்த கோவிந்த ராஜ் உள்ளிட்டோர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கருணாபுரம் கள்ளச்சாராய மரணங்கள் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    * பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    * கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    * அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது.

    * சாராயம் விற்பனை செய்த கோவிந்த ராஜ் உள்ளிட்டோர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    * கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து அறிந்து அமைச்சர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன்.

    * கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதற்காக ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * தமிழகம் முழுவதும் விஷ சாராய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

    * கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விசாரணை அறிக்கை கிடைத்த உடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.

    * கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் யார் இருந்தாலும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * எதிர்கால சமுதாயத்தை பாதிக்கும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    * கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 16 லட்சம் லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

    * பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்.

    * பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தையின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வரவு வைக்கப்படும். குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.5,000 வழங்கப்படும்.

    * பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தையின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்றைய சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சபாநாயகரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் 120 போ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்துக்கு அ.தி.மு.க., பா.ஜனதா, தே.மு.தி.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    கள்ளச்சாராய விற்பனை பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் தமிழக சட்டசபையில் விஷச்சாராய விவகாரம் இன்று எதிரொலித்தது. இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு கேள்வி-பதிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்குவதாக அறிவித்தார்.

    இந்த சமயத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேச முற்பட்டார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எழுந்து நின்றபடி பேசிக்கொண்டே இருந்தார். அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்ததால் எடப்பாடி பழனிசாமி என்ன பேசினார்? என்று யாருக்கும் கேட்கவில்லை.

    அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நின்று கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர். இதைத் தொடர்ந்து சபாநாயகர் அனைவரும் அமருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் கூறியதை ஏற்காமல் தொடர்ந்து கோஷமிட்டனர்.

    எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் சபாநாயகரின் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா மற்றும் அமளியில் ஈடுபட்டனர்.

    அவர்களை பார்த்து சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். அதையும் மீறி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர்.

    இதனால் சட்டசபையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து சபை காவலர்கள் சட்டசபைக்குள் சென்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றினார்கள். அப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தரையில் அமர்ந்தபடி எழும்ப மறுத்து கோஷமிட்டபடியே இருந்தார்.

    இதனால் சுமார் 10 சபை காவலர்கள் ஒன்றாக சேர்ந்து குண்டுக்கட்டாக தூக்கி அவரை வெளியேற்றினார்கள். அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும், சபை காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பின்னர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட மற்ற எம்.எல்.ஏ.க்களும் வெளியேற்றப்பட்டனர். இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு நிலவியது.

    அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்ட போது சபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் இல்லை. அதன் பிறகு சட்டசபைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் பற்றி விளக்கி பேசும்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்றைய சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். ஆனால் அ.தி.மு.க. சபாநாயகரின் அழைப்பை ஏற்காமல் புறக்கணித்துள்ளது.

    இதனை தொடர்ந்து பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை நடப்பது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
    • கள்ளக்குறிச்சிக்கு முன்னதாகவும் சாராய பலிகள் நிகழ்ந்துள்ளது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒருவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான விசாரணையை, சி.பி.ஐ.-க்கு மாற்ற வலியுறுத்தப்பட்டது.

    இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதற்கு கடந்த ஓராண்டாக செய்தது என்ன? கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை நடப்பது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. கள்ளச்சாராய விற்பனையை தடுக்கும் வகையில் ஓராண்டாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

    கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக கவனத்திற்கு கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பலி. இதற்கு யார் பொறுப்பு? கள்ளக்குறிச்சிக்கு முன்னதாகவும் சாராய பலிகள் நிகழ்ந்துள்ளது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மேலும் விழுப்புரம், மரக்காணம் சம்பவத்திற்கு பிறகு கள்ளச்சாராய விற்பனை தடுப்பு நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விஜய் கேட்டறிந்தார்.
    • விஜய் மருத்துவமனைக்கு வருவதை அறிந்து அவரது ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார்களை நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விஜய் கேட்டறிந்தார். விஜய் மருத்துவமனைக்கு வருவதை அறிந்து அவரது ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

    விஜய் அரசியல் கட்சி தொடங்கி அறிக்கை மற்றும் வாழ்த்து செய்தி மட்டும் வெளியிட்டு வந்த நிலையில் நேற்று நேரிடையாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்றது அவர் அரசியல் பணியில் முழு வீச்சில் உள்ளார் என்பதையே காட்டுகிறது.


    இந்நிலையில், நாளை 50-வது பிறந்தநாளை கொண்டாடும் விஜய், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.


    • கள்ளக்குறிச்சி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட ஒருவர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கள்ளகுறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது.

    சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    மேலும், பலர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட ஒருவர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை அவர் திடீரென ஆஸ்பத்திரியில் இருந்து மாயமானார்.

    ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவரை பல இடங்களில் தேடினர் ஆனால் எங்கும் அவர் இல்லை. இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும் என தெரிவித்து இருந்தார்.
    • கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்து விசாரணை நடத்த உள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டு இருந்தார். மேலும் இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும் என தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

    முதற்கட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், எஸ்பி, வருவாய் அலுவலர் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இதன்பின், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்து விசாரணை நடத்த உள்ளார். மேலும் கருணாபுரம் பகுதிக்கும் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளார்.

    • கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.
    • கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? சிகிச்சையில் உள்ளவர்கள் எத்தனை பேர்?

    சென்னை:

    சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    * மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்துள்ளது.

    * காவல் நிலையத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் கள்ளச்சாராயம் விற்பனை செய்கிறார்கள்.

    * இந்த ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கிறது? உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது.

    * சட்டசபையில் தி.மு.க. அரசு ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளது.

    * பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக எதிர்க்கட்சி தலைவராக சட்டசபையில் குரல் கொடுக்க முடியவில்லை.

    * காவல் அதிகாரிகளுடன் பல ஆய்வு கூட்டங்கள் நடத்தியும் சாராய விற்பனையை தடுக்க முடியவில்லையா?

    * கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.

    * கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? சிகிச்சையில் உள்ளவர்கள் எத்தனை பேர்?

    * கள்ளச்சாராயம் குடித்தவர்களை காப்பாற்றும் குறிப்பிட்ட மருந்து அரசு மருத்துவமனையில் இல்லை. போதிய மருந்து இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு பச்சை பொய் கூறுகிறார். குறிப்பிட்ட மருந்து இல்லாததால் பல மரணம் நிகழ்ந்துள்ளது.

    * கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடப்பது என்ன? உண்மை மறைக்கப்படுகிறது.

    * கள்ளச்சாராயம் உயிரிழப்புகளை மறைக்க ஆட்சியராக இருந்த ஷ்வரன் குமார் முயன்றார். தி.மு.க. அரசின் நிர்பந்தத்தால் ஷ்வரன்குமார் கள்ளச்சாராய பலி இல்லை என பொய் கூறினார். 3 பேர் உயிரிழந்த போதே கள்ளச்சாராயம் தான் காரணம் என கூறியிருந்தால் பலி அதிகரித்திருக்காது. பலி எண்ணிக்கை 50ஐ தாண்டியதற்கு கள்ளச்சாராயம் காரணம் இல்லை என கலெக்டர் கூறியது தான்.

    * எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்த முதலமைச்சர் ஆட்சியரை மட்டும் பணியிட மாற்றம் செய்தது ஏன்?

    * திமுகவினர் துணையோடு தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது.

    * கள்ளச்சாராய வியாபாரி கண்ணுக்குட்டி வீட்டில் திமுக தலைவர்கள் புகைப்படம் உள்ளன.

    * கள்ளச்சாராயத்தால் 50 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

    * கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்கள் குறித்த அறிக்கையை ஏன் வெளியிடவில்லை?

    * எத்தனை பேர் சிகிச்சை, எத்தனை பேர் கவலைக்கிடம் என ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை வெளியிடுகிறது. ஜிப்மர் போல் கள்ளக்குறிச்சி, சேலம் மருத்துவமனைகள் அறிக்கை வெளியிடாதது ஏன்?

    இவ்வாறு அவர் அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பினார்.

    • கள்ளச்சாராய விவகாரத்தை விட சட்டசபையில் பேச வேறு என்ன முக்கிய பிரச்சனை உள்ளது?
    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளால் தமிழ்நாடே கொதித்துப்போயுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அனுமதிக்கப்பட்ட 146 பேரில் 50 பேர் பலியானதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    * கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மரில் 96 பேர் சிகிச்சை பெற்றுவருதாக செய்திகள் வந்துள்ளன. ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 19 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

    * சிகிச்சை பெறும் பலருக்கு கண்பார்வை தெரியவில்லை என செய்திகள் வந்துள்ளன.

    * நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் சம்பவம் குறித்து பேச வாய்ப்பளிக்கவில்லை.

    * கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளால் தமிழ்நாடே கொதித்துப்போயுள்ளது.

    * கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகள் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுப்பு.

    * மக்களின் பிரச்சனை சட்டமன்றத்தில் தான் பேச முடியும். இங்கு நடப்பது ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி போல் உள்ளது.

    * கள்ளச்சாராய விவகாரத்தை விட சட்டசபையில் பேச வேறு என்ன முக்கிய பிரச்சனை உள்ளது?

    * சட்டசபை சபாநாயகர் நடுநிலை தவறி செயல்பட்டுள்ளார்.

    * கள்ளச்சாராயம் குறித்து விவாதிக்க வலியுறுத்திய எதிர்க்கட்சிகள் மீது அடக்குமுறை நடந்துள்ளது.

    * எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமாரை அலேக்காக தூக்கி கைது செய்ய முயன்றனர்.

    * நிர்வாகத்திறனற்ற அரசு, பொம்மை முதலமைச்சர் என்பதால் கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கேள்வி நேரம் தொடங்கும் முன் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
    • கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபை இரண்டாவது நாள் அமர்வு கூடியது. கேள்வி நேரம் தொடங்கும் முன் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மானிய கோரிக்கையை தவிர்த்துவிட்டு கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரி எழுதிய காகிதங்களை தூக்கி காண்பித்து இருக்கையை முற்றுகையிட்டதால் சபாநாயகர் அப்பாவு கண்டித்தார். அமளியில் ஈடுபட வேண்டாம் என்றும் அமைதியாக இருக்குமாறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயர் அப்பாவு அறிவுறுத்தினார்.

    இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

    முன்னதாக, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    ×