search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் கண்ணாடி"

    • தனியார் பஸ்சின் கண்ணாடியையும் உடைத்துவிட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வீ.கே.புதூர் வழியாகவும், அகரம் வழியாகவும் 2 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நேற்று மதியம் ஆலங்குளத்தில் இருந்து வீ.கே.புதூர் வழியாக செல்லும் பஸ்சில் ஒரு பெண்ணை ஏற்றி விட்டு அகரம் வழியாக செல்ல வேண்டும் என்று ஒரு நபர் கூறியுள்ளார். ஆனால் அந்த பஸ் அந்த வழியாக செல்லாது என கண்டக்டர் தெரிவித்தவுடன் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே பஸ் பயணிகள் சமாதானம் செய்து 2 பேரையும் அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் மாலையில் அந்த பஸ் சங்கரன்கோவிலுக்கு சென்றபோது வீராணம் பஸ் நிறுத்தத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் சேர்ந்து அதனை மறித்து பஸ் கண்ணாடியை அரிவாளால் உடைத்து பயணிகளை மிரட்டி தப்பி சென்றனர்.

    அப்போது எதிரே ஆலங்குளம் நோக்கி வந்த மற்றொரு தனியார் பஸ்சின் கண்ணாடியையும் உடைத்துவிட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது. இதில் கண்டக்டர் மகேஷ்குமாருக்கு(வயது 37) தலையில் காயம் ஏற்பட்டது. அவர் வீ.கே.புதூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பகலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் தனது கூட்டாளிகளுடன் வந்து பஸ் கண்ணாடியை உடைத்து இருக்கலாமா என்ற கோணத்தில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
    • கே.கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிராட்வேயில் இருந்து மாநகர பஸ் வழித்தடம் எண் 11ஜி நேற்று மாலை பயணிகளுடன் அய்யப்பந்தாங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ராமய்யா ஓட்டி சென்றார்.

    கே.கே நகர் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதை டிரைவர் ராமய்யா கண்டித்தார். இதனால் ஆத்திர மடைந்த பள்ளி மாணவர்கள் திடீரென பஸ்சில் இருந்து கீழே இறங்கி கைகளால் சரமாரியாக குத்தி பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து கே.கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவரை ஆபாசமாக திட்டி தாக்கினார்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அடுத்த ஆத்துவாம்பாடி கிராமத்தில் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே ஊரைச்சேர்ந்த சின்னராஜ் என்பவர் வலதுபுறமாக உள்ள பஸ் கண்ணாடியை உடைத்துள்ளார்.

    இதனை தட்டிக் கேட்ட பஸ்சின் டிரைவர் மாதவனை ஆபாசமாக திட்டி தாக்கினார்.

    இது சம்பந்தமாக அரசு பஸ் டிரைவர் மாதவன் சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து, சின்னராஜை கைது செய்தார்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் மீது கல் வீசிய நபர்களை தேடி வந்தனர்.
    • பஸ் மீது கல்வீசிய பெரிய வீராணம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் மகன் பாலாஜி என்பவரை கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வலசையூருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் கடந்த 28-ந் தேதி பெரிய வீராணம் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது மர்ம நபர்கள் 2 பேர் பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடினர். இது குறித்து அரசு பஸ் கண்டக்டர் வீராணம் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் மீது கல் வீசிய நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், பஸ் மீது கல்வீசிய பெரிய வீராணம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் மகன் பாலாஜி (வயது 18) என்பவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கைதான பாலாஜியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, வாய்க்கால் பட்டறை பகுதியில் பஸ்சில் ஏறிய போது அந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர், தன்னிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பஸ் மீது கல்வீசியதாகவும் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பல்லடம் பஸ் நிலையத்திற்கு பஸ் வந்தவுடன் தூக்கம் கலைந்து திடீரென எழுந்தார்.
    • நடத்துனர் நாகராஜ், வேல்முருகனிடம் கேட்டபோது அவர் தெரியாமல் செய்து விட்டேன் என மன்னிப்பு கேட்டதாக கூறியதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரத்தில் இருந்து கோவை செல்லும் அரசு பஸ் வந்தது. அந்த பஸ்ஸை சம்பத்குமார் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார். நாகராஜ் நடத்துனராக இருந்தார். இந்த நிலையில் அந்த பஸ்சில் மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் என்ற பெயிண்டர் பயணம் செய்தார். குடிபோதையில் தூங்கிய நிலையில் வந்தார்.பல்லடம் பஸ் நிலையத்திற்கு பஸ் வந்தவுடன் தூக்கம் கலைந்து திடீரென எழுந்தார். அப்போது அவர் அணிந்திருந்த கண் கண்ணாடி காணவில்லை என்று கூறப்படுகிறது.

    தேடிப் பார்த்த அவர் கண்ணாடி கிடைக்காததால், ஆத்திரத்தில் பஸ்ஸின் ஜன்னல் கண்ணாடியை கையால் ஓங்கி அடித்துள்ளார். இதில் கண்ணாடி உடைந்து சேதமானது. மேலும் வேல்முருகனின் கையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து நடத்துனர் நாகராஜ், வேல்முருகனிடம் கேட்டபோது அவர் தெரியாமல் செய்து விட்டேன் என மன்னிப்பு கேட்டதாக கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பஸ் பல்லடம் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டது. போலீசார் விசாரணை செய்தனர். சேதமான கண்ணாடிக்கு இழப்பீடாக ரூ.500 வேல்முருகனிடம் வசூலிக்கப்பட்டது. பின்னர் போலீசார் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • பென்னலூர்பேட்டையில் இருந்து திருவள்ளூர் நோக்கி தடம் எண் டி.41-ஏ அரசு பஸ் நேற்று காலை திருவள்ளூர் நோக்கி வந்துக் கொண்டிருந்தது.
    • மர்ம நபர்கள் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    ஆவடி:

    திருவள்ளூர் அடுத்த பென்னலூர்பேட்டையில் இருந்து திருவள்ளூர் நோக்கி தடம் எண் டி.41-ஏ அரசு பஸ் நேற்று காலை திருவள்ளூர் நோக்கி வந்துக் கொண்டிருந்தது. அப்பொழுது புல்லரம்பாக்கம் பஜாரில் பஸ் வந்து நின்றபோது மர்ம நபர்கள் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுதொடர்பாக பஸ் கண்டக்டர் ஹேமநாதன் (வயது 29) புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே மாணவர்கள் பஸ் கண்ணாடியை உடைத்தனர்.
    • பஸ் அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால் பையூர் பகுதியில் பஸ்சை நிறுத்தாமல் பஸ் டிரைவர் ஓட்டிச் சென்றார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே கொங்கராயனூரில் இருந்து விழுப்புரம் நோக்கி இன்று காலை அரசு பஸ் கொண்டு சென்றது. பஸ் அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால் பையூர் பகுதியில் பஸ்சை நிறுத்தாமல் பஸ் டிரைவர் ஓடிச் சென்றார். இதனால் அந்த பகுதிகள் பள்ளிக்கு செல்ல காத்திருந்த மாணவர்கள் சிலர் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த திரு வெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×