search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை கார் குண்டு வெடிப்பு"

    • கோவையில் சி.சி.டி.வி. கேமராக்களை அனைத்து இடங்களிலும் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
    • புறநகர் பகுதிகளில் இதுவரை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம்.

    கோவை:

    கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தவறவிட்ட, திருட்டு போன செல்போன்களை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்துகொண்டு 155 செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவையில் சி.சி.டி.வி. காமிராக்களை அனைத்து இடங்களிலும் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பொள்ளாச்சி, துடியலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவிகளை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    புறநகர் பகுதிகளில் இதுவரை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். 30 பேர் கண்காணிப்பில் இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை மாவட்டம் முழுவதும் 50 இளைஞர்கள் ஐ.எஸ். இயக்கத்தின் கருத்துக்களுக்கு ஈர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆதரவாக இருப்பது தெரியவந்தது.
    • தற்போது இந்த இளைஞர்களை கண்டுபிடித்துள்ள போலீசார் அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக சிறப்பு பயிற்சிகள் அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    கோவை:

    கோவையில் கடந்த 23-ந் தேதி கார் வெடிப்பு நிகழ்ந்தது. இதில் முபின் என்பவன் உயிரிழந்தான்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகியது. முபின் ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாளராக செயல்பட்டு விசாரணையில் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து உளவுத்துறை போலீசார் முபினை போல ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் இளைஞர்கள் உள்ளனரா? என்று தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் கோவை மாவட்டம் முழுவதும் 50 இளைஞர்கள் ஐ.எஸ். இயக்கத்தின் கருத்துக்களுக்கு ஈர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆதரவாக இருப்பது தெரியவந்தது.

    பின்னர் அவர்கள் யார்? யார் என்ற விபரங்கள் அனைத்தையும் உளவுத்துறை போலீசார் சேகரிக்க தொடங்கினர்.

    தற்போது இந்த இளைஞர்களை கண்டுபிடித்துள்ள போலீசார் அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக சிறப்பு பயிற்சிகள் அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    கோவையில் கார் வெடிப்பு நிகழ்ந்த பிறகு விசாரணை தீவிரமாக நடந்தது. அந்த விசாரணையில் தான் மாவட்டம் முழுவதும் 50 வாலிபர்கள் ஐ.எஸ். கருத்துக்கு ஈர்க்கப்பட்டு ஆதரவாக இருந்த தகவல் தெரியவந்தது.

    அவர்களை அனைவரையும் கண்டறிந்துள்ளோம். அவர்களுக்கு உலமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலமாக நல்வழி பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக பிரத்யேகமாக ஒரு திட்டத்தையும் தொடங்க உள்ளோம்.

    அந்த திட்டத்தில் இளைஞர்களை பங்கு பெற வைத்து, அவர்களை அதில் இருந்து மீட்டு கொண்டு வருவது, தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற கருத்துக்களை போதிக்க உள்ளோம். மேலும் அவர்களுக்கு உலமாக்கள் மூலம் நல்ல கருத்துக்களை போதித்து, அவர்களை நல்ல ஒரு குடிமகனாக மாற்றும் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். விரைவில் இதனை மேற்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருமணத்திற்கு பின்பு பெற்றோருடன் முபின் வசித்து வந்தார்.
    • முபினை பார்ப்பதற்கு நண்பர்கள் யாரும் வீட்டிற்கு வந்ததில்லை. அவரது உறவினர்கள் அசாரூதின், அப்சர்கான் மட்டுமே அவருடன் எப்போதும் இருப்பார்கள்.

    கோவை:

    கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபினின் மாமனார் அனிபா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    திருமணத்திற்கு பின்பு பெற்றோருடன் முபின் வசித்து வந்தார். கடந்த 2019-ல் என்.ஐ.ஏ. விசாரணைக்கு பிறகு அவரது வீட்டில் ஒதுங்கி கொண்டனர். அதன்பின்னர் எங்கள் வீட்டின் அருகே வசித்தார். இப்போது இருக்கும் வீட்டிற்கு சென்று ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தான் சென்றனர்.

    குழந்தைகளை அவர் அடித்ததில்லை. அப்படிப்பட்டவர் இது போன்று செய்தாரா? என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் எங்களுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் முபின் கார் ஓட்டி பழகினார். இதுகுறித்து கேட்டபோது, சரியான வேலை இல்லாததால் ஆக்டிங் டிரைவராக செல்வதற்காக கார் ஓட்டுவதாக தெரிவித்தார். சம்பவம் நடைபெற்ற 2 நாளுக்கு முன்னர் எங்கள் வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்து சென்றார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவே இல்லை.

    முபினை பார்ப்பதற்கு நண்பர்கள் யாரும் வீட்டிற்கு வந்ததில்லை. அவரது உறவினர்கள் அசாரூதின், அப்சர்கான் மட்டுமே அவருடன் எப்போதும் இருப்பார்கள்.

    வீட்டில் இருந்த பெட்டிகள் குறித்து எங்கள் மகள் முபினிடம் கேட்டுள்ளார். அதற்கு நாட்டு மருந்து எனவும் தேனுடன் சேர்த்து விற்பனை செய்வதற்காக வைத்திருப்பதாகவும் தெரிவித்து சமாளித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லாம் என கூறியுள்ளார்.
    • கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரியவந்துள்ளது.

    கோவை:

    கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ந் தேதி கார் சிலிண்டருடன் வெடித்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் தினமும் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் முபின் தனது மனைவியிடம் வெடி பொருட்களை பழைய துணி என கூறி ஏமாற்றிய தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

    அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தபோது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

    அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை(23) முபின் திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை.

    இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லாம் என கூறியுள்ளார்.

    அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார்.

    ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரியவந்துள்ளது.

    கடந்த மாதம் 20-ந் தேதி, முபினின் மனைவி நஸ்ரத் வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

    ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார்.

    அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

    22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது.

    மேலும் முபின் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு வீட்டிற்கு சென்று உடல் முழுவதும் சேவ் செய்து விட்டு, தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி விட்டு வேறு சட்டை அணிந்து கொண்டு காரில் வெடிபொருட்களுடன் சதி திட்டத்தை நிறைவேற்ற புறப்பட்டதும் தெரியவந்தது.

    பொதுவாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் தான் தங்கள் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு உடல் முழுவதும் சேவ் செய்வர். முபினும் அது போன்று செய்துள்ளது போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதுதொட ர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

    இந்த தகவல்கள் அனைத்தும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்லாமியர்களாகிய நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம்.
    • எங்கள் பண்டிகைகளுக்கு, நாங்கள் விருந்தோம்பி, ஒருவருக்கொருவர் 200 ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.

    கோவை:

    கோவையில் கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தான். விசாரணையில் இது திட்டமிட்ட தாக்குதல் என்பது தெரியவந்தது. இதுகுறித்து மாநகர போலீசார் விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர்.

    கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. ஜமாஅத் மற்றும் உலமாக்களை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஜமாஅத் நிர்வாகிகள், மதவாதத்தை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தவும், அமைதியை நிலைநாட்டும் வகையிலும் ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல், கேரள சுன்னத் ஜமா அத் நிர்வாகிகள், கோவை மாவட்ட அனைத்து சுன்னத் ஜமா அத்தின் பொதுச்செயலாளர் இனாயத்துல்லா தலைமையில் 15 பேர் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றனர்.

    அவர்களை கோட்டை ஈஸ்வரன் கோவில் பூசாரிகள், கோவில் செயல் அலுவலர் உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து கைகூப்பி வரவேற்றனர். பின்னர் அவர்களை கோவிலுக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு ஒரு அறையில் கோவில் நிர்வாகிகள், பூசாரிகள், ஜமாஅத் நிர்வாகிகள் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடினர். அப்போது பழைய நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். தேநீர் குடித்த பிறகு ஜமாத் நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அவர்களை கோவில் நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.

    பின்னர் கோவை மாவட்ட அனைத்து சுன்னத் ஜமா அத் பொதுச் செயலாளர் இனாயத்துல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    3 ஜமா அத் நிர்வாகிகளும் மதநல்லிணக்க வருகையாக கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம்.

    கோவையில் சென்ற வாரம் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமும், பல்வேறு சமூகத்திற்கு இடையில் ஒரு பதட்டமான சூழ்நிலை உருவானதை நாம்அறிவோம்.

    இஸ்லாமியர்களாகிய நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இங்கு இருக்கக்கூடிய சங்கமேஸ்வரர் கோவில், இந்த தெருவில் அமைந்துள்ள மசூதி மற்றும் சுற்றுமுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு, அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம்.

    எங்கள் பண்டிகைகளுக்கு, நாங்கள் விருந்தோம்பி, ஒருவருக்கொருவர் 200 ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.

    இந்த சூழ்நிலையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத் கண்டிக்கிறது. இஸ்லாம் ஒருபோதும் வன்முறையை தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். இங்கு வாழும் மக்கள் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து, சிறுபான்மை மக்கள் அனைவரோடும், பெரும்பான்மை மக்களோடும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையை விரும்புகிறோம்.

    ஆகவே இந்த வருகை மதநல்லிணக்கம் பேணுவதற்காக தான். இதை தொடர்ந்து கோவையில் எங்களது ஜமாத்துகள் ஒன்றிணைந்து பல்வேறு வர்த்தக ரீதியாகவும் மற்றும் அனைத்து மசூதிகளும், சிறுபான்மை, பெரும்பான்மை மக்களோடு இணைந்து நற்பணிகள் செய்வது சம்பந்தமாக திட்டமிட்டு செயலாற்ற உள்ளோம்.

    எந்தவிதமான மதபூசலுக்கும், எந்தவிதமான அரசியலுக்கு ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஆகவே உங்களோடு நாங்கள். எங்களோடு நீங்கள் என்ற தாரக மந்திரத்தை நாங்கள் முன்னெடுத்து இன்று சங்கேமஸ்வரர் கோவில் நிர்வாகிகளிடம் உரைத்தோம். அவர்களும் மகிழ்ச்சியோடு எங்களை வரவேற்று சால்வை அணிவித்து கவுரப்படுத்தினர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    அனைவரும் ஒன்றிணைந்து கோவையை தமிழகத்தில் மத அமைதி, மதநல்லிணக்கத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இடமாக மாற்றுவோம். எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடம் கொடுக்க மாட்டோம். எந்த வகையில் பயங்கரவாதம் வந்தாலும் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவிலில் நடந்த கலந்துரையாடல் குறித்து கேட்டபோது இந்த தெருவில் விளையாடியது மற்றும் தேரோட்டம் நடத்தப்படும்போது அளித்த ஒத்துழைப்பு குறித்து நினைவு கூர்ந்தோம். இரு சமூகமும் இணைந்து மதநல்லிணக்கத்துடன் ஒற்றுமையை வலியுறுத்துவோம் என பேசினோம் என்றார்.

    • முபின் 2 செல்போன் மற்றும் 3 சிம்கார்டுகளையும் பயன்படுத்தி இருப்பதையும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
    • கோவையில் 150 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவில் கண்காணித்து வந்தனர். அதில் முபினும் ஒருவர் ஆவார்.

    கோவை:

    கோவை கோட்டை மேட்டில் கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபின்(29) என்ற வாலிபர் உயிரிழந்தார்.

    விசாரணையில் முபின் தனது கூட்டாளிகளுடன் கோவையில் பயங்கர நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் 6-வது நபராக கைது செய்யப்பட்ட அப்சர்கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளது. அதில் போலி பெயர்களில் முபின் கோவையில் தாக்குதலுக்கு சதி செய்ததும், 3 சிம்கார்டுகளை பயன்படுத்தியதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் தாக்குதலை நடத்த முடிவு செய்த முபின், அதற்கு தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக வாங்கியுள்ளார். அப்போது வெடிபொருட்களை வைப்பதற்காக டிரம்கள் தேவைப்பட்டுள்ளன.

    இதையடுத்து அவர், உக்கடம் லாரி பேட்டை பகுதிக்கு சென்று 3 இரும்பு கேன்களை வாங்கி உள்ளார்.

    அப்போது அங்கிருந்தவர்கள் பெயர் விவரங்களை கேட்கவே, அவர் தனது உண்மையான பெயரை மறைத்து விட்டு, அப்துல் ரகுமான் என பெயரை மாற்றி கூறியுள்ளார்.

    இதே போன்று போலி பெயர்களை கூறியே அவர் மற்ற பொருட்களையும் வாங்கி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் அதிகாலையில், முபின், அப்சர்கானுக்கு வாட்ஸ்-அப்பில் போன் செய்துள்ளார்.

    அப்போது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும், தனது வீட்டிற்கு உதவிக்கு வருமாறு கூறியுள்ளார். மீண்டும் போனில் தொடர்பு கொண்டு இதே தகவலை தெரிவித்து அப்சர்கானை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

    ஆனால் முதலில் வாட்ஸ்-அப் காலில் பேசியதால் முபின் அப்சர்கானுடன் பேசிய தகவலை கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் அவன் சாதாரணமாக போனில் பேசியது, அப்சர்கானின் செல்போனில் பதிவாகி விட்டது.

    இது அப்சர்கானின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதற்கிடையே கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ரியாஸ் தனது தாயாரிடம் பேசும் ஆடியோ மற்றும் பெரோஸ், ரியாசிடம் பேசும் ஆடியோக்களும் வெளியாகி உள்ளது.

    ரியாஸ் தனது தாயாரிடம் பேசும் ஆடியோவில், ரியாசிடம் அவரது தாயார் நீ எங்கு இருக்கிறாய்? வண்டி எங்கே என கேட்கிறார்? அதற்கு அவர் முபின் வீட்டை காலி செய்கிறான். அங்கு பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருக்கிறேன். வண்டியை மச்சானிடம் கொடுத்து விட்டதாக கூறுகிறார். எப்போது வருவாய் என்பதற்கு, சீக்கிரம் வந்து விடுவதாகவும் கூறியுள்ளார்.

    இதேபோல் ரியாசை தொடர்பு கொண்டு பேசும் பெரஸ், முபினின் வீட்டிற்கு வா பொருட்களை மாற்ற வேண்டும் என்ற தகவல்கள் பதிவாகி இருந்தன.

    இவர்கள் இதனை தாங்கள் மாட்டிகொண்டால் முபின் வீட்டை காலி செய்வதாகவும், அதற்கு தாங்கள் உதவ வந்தோம் என்பதை தெரிவிப்பதற்காகவே கைதானவர்கள் முன்கூட்டியே போனில் பேசி ரெக்கார்டு செய்ததும், பின்னர் அதனை வைத்து நாடகமாடி வெளியில் வந்து விடலாம் என்பதற்காக இந்த ஆடியோக்களை தயாரித்ததும் தெரியவந்தது.

    தற்போது இது தொடர்பான அனைத்து ஆதாரங்களும் போலீசிடம் சிக்கியுள்ளது.

    இந்த தகவல்கள் அனைத்தும் அப்சர்கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இறந்த முபின் 2 செல்போன் மற்றும் 3 சிம்கார்டுகளையும் பயன்படுத்தி இருப்பதையும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஒரு போன் கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் எரிந்து போனது.

    அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது மற்றொரு போன் சிக்கியது. அந்த போனில் ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா? என்பதை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் 150 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவில் கண்காணித்து வந்தனர். அதில் முபினும் ஒருவர் ஆவார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்தபோது, ஜாதி, மதம் ரீதியான கலவரங்கள் ஏற்படலாம் என மத்திய உளவுத்துறையிடம் இருந்து தகவல் வந்தது. அதன்பேரில் சிறப்பு புலனாய்வு பிரிவான எஸ்.ஐ.சி., எஸ்.ஐ.யு. ஆகியவை கோவையில் மதம் சார்ந்த செயல்களில் ஈடுபடுவதாக 150 பேரை கண்டறிந்து கண்காணித்து வந்தனர். அதில் முபினும் ஒருவர். தொடர்ந்து அவர்களை கண்காணித்து வந்தோம்.

    மற்றபடி கார் வெடிப்பு சம்பவம் நடக்க போகிறது என்றோ, நாசவேலைக்கு திட்டமிட்டனர் என்ற தகவலோ மத்திய உளவுத்துறையிடம் இருந்து வரவில்லை என தெரிவித்தனர்.

    • கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை அப்துல் முத்தலீப் வீட்டில் அதிரடியாக நுழைந்தனர்.
    • வீட்டில் இருந்த அப்துல் முத்தலீப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை வெளியில் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

    திருச்சி:

    கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அந்த வழக்கு என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தினமும் பல்வேறு புதுப்புது தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று திருச்சியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    திருச்சி விமான நிலையம் அருகே வயர்லெஸ் ரோட்டில் உள்ள ஸ்டார் நகர் பகுதியில் வசித்து வருபவர் அப்துல் முத்தலீப் (வயது 35). காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வரும் அவர் எஸ்.டி.பி.ஐ. கட்சி உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

    இவர் பயங்கரவாத செயல்களுக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் என்.ஐ.ஏ. அறிவுறுத்தலின் பேரில் இன்று அவரது வீட்டில் உள்ளூர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை அப்துல் முத்தலீப் வீட்டில் அதிரடியாக நுழைந்தனர். 6 மணி முதல் 7 மணி வரை இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது வீட்டில் இருந்த அப்துல் முத்தலீப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை வெளியில் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு அங்குலம் அங்குலமாக போலீசார் சல்லடை போட்டு சோதனை செய்தனர்.

    இந்த திடீர் சோதனையில் அப்துல் முத்தலீப்பின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டில் இருந்த ஒருசில ஆவணங்களையும் கைப்பற்றி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அப்துல் முத்தலீப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் என்.ஐ.ஏ. அமைப்பினர் இந்த சோதனையை நடத்துமாறு திருச்சி போலீசாருக்கு உத்தரவிட்டதாகவும், அதன்பேரில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

    • முபின் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? என யூடியூப்பில் தேடிய விவரங்களை போலீசார் கண்டுபிடித்து இருந்தனர்.
    • முபின் வீடு மற்றும் அவரது கூட்டாளிகள் வீடுகளில் சோதனை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி வெடிபொருட்கள் மற்றும் கியாஸ் சிலிண்டர்களுடன் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் தினந்தோறும் புதுபுது தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

    இந்த சம்பவத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்ற வாலிபர் உடல் கருகி பலியானார். காரில் வெடிபொருட்களை நிரப்பி வெடிக்கச் செய்து கோவையில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்த நிலையில் கார் வெடித்ததில் அவரே பலியானது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. முபினுக்கு கார் வாங்கி கொடுத்தது, வெடிபொருட்கள் வாங்கி கொடுத்தது என அவருக்கு பல்வேறு வகையில் உதவி செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். முபின் வீட்டில் இருந்து 75 கிலோ வெடிமருந்து உள்பட 109 வகையான பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வெடிபொருட்களில் பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், ரெட் பாஸ்பரஸ், பி.இடிஎன் பவுடர் (பென்டேரித்ரிட்டால் டெட்ராநைட்ரேட் பவுடர்), அலுமினியம் பவுடர் உள்ளிட்டவை அடங்கும். இந்த ரசாயன மூலப் பொருட்கள் எளிதில் தீப்பிடித்து பயங்கர சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக வேதியியல் துறை வல்லுன ர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    முபினின் வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பிஇடிஎன் பவுடர், திரவ வடிவிலான நைட்ரோ கிளிசரின் ஆகியவை மிக முக்கியமானவை. இதில் பிஇடிஎன் பவுடர் டெட்டனேட்டர் தயாரிக்கவும், நைட்ரோ கிளிசரின் ஜெலட்டின் வெடிகுண்டு தயாரிக்கவும் பயன்படும் முக்கிய மூலப்பொருட்களாகும்.

    மேலும் இவை இரண்டும் ஓரிடத்தில் இணைந்திருக்கும்போது அங்கு சிறு தீப்பொறி ஏற்பட்டால் கூட உடனடியாக தீப்பிடித்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். இதன் அளவு அதிகரிக்க, அதிகரிக்க சேதம் அடையும் பகுதிகளின் பரப்பும் அதிகரிக்கும்.

    ரெட் பாஸ்பரஸ் தீ மளமளவென பரவ உதவும். பொட்டாசியம் நைட்ரேட்டும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது தான். இந்த நான்கு மூலப் பொருட்களையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலவையாக்கி அதில் தீப்பொறி படும்போது பாதிப்பு அதிகளவில் இருக்கும்.

    இதில் பிஇடிஎன் பவுடர், நைட்ரோ கிளிசரின் ஆகிய இரண்டும் எளிதில் ஆன்லைன் முறையில் வாங்க முடியாது. பயன்பாடு குறித்து விளக்கி உரிய அனுமதி பெற்ற பிறகே வாங்க முடியும் என்றனர்.

    இந்தியாவில் ராணுவம் மற்றும் சுரங்க தொழிலில் மட்டும் சட்டப்பூர்வமாக பிஇடிஎன் வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மோப்பநாய், எக்ஸ்ரே மற்றும் பிற உபகரணங்களை பயன்படுத்தி அந்த வேதிப் பொருளை எளிதாக கண்டறிய முடியாது. இதனால் பாதுகாப்பு சோதனைகளை எளிதாக கடந்து பல பகுதிகளுக்கும் பயங்கரவாதிகள் எடுத்து செல்கின்றனர்.

    கடந்த 2011-ல் டெல்லி ஐகோர்ட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 17 பேர் பலியாகினர். இந்த குண்டுவெடிப்பில் பிஇடிஎன் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது.

    புனேவில் நடந்த வெடிகுண்டு நிகழ்வும் இந்த வெடிகுண்டு வகையை சேர்ந்தது என கூறப்படுகிறது. ஜமேஷா முபின் தான் வாங்கி வைத்து இருந்த பிஇடிஎன் வேதிப்பொருளை நல்ல வேளையாக பயன்படுத்தவில்லை. பயன்படுத்தி இருந்தால் விளைவுகள் மோசமாக இருந்திருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    ஏற்கனவே முபின், வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? என யூடியூப்பில் தேடிய விவரங்களை போலீசார் கண்டுபிடித்து இருந்தனர். என்ஜீனியருக்கு படித்த அவர் பல நாட்கள் தேடுதலுக்கு பின் தான் இந்த பயங்கர வெடிபொருட்களை வாங்கியிருக்க வேண்டும் என்பது உறுதியாகி உள்ளது.

    இதுதொடர்பாக முபின் வீடு மற்றும் அவரது கூட்டாளிகள் வீடுகளில் சோதனை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் கைதான முபின் கூட்டாளிகள் 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை காவலில் எடுப்பதற்காக கோர்ட்டில் மனு செய்வதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் ஏர்வாடி, மேலப்பாளையம் ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • முகமது இப்ராகிமிடம் ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர்.

    நெல்லை:

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் ஏர்வாடி, மேலப்பாளையம் ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    மேலும் சிலரை ரகசிய இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்குள்ள காதர் மூப்பன் தெருவில் சாகிப் முகமது அலி, செய்யது முகமது புகாரி, முகமது அலி, முகமது இப்ராகிம் ஆகிய 4 பேரின் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இன்று காலை 8 மணி முதல் நடந்த இந்த சோதனையையொட்டி அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    அதில் முகமது இப்ராகிமிடம் ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அவரது வீடு உள்பட 4 வீடுகளில் காலையில் தொடங்கிய சோதனை சுமார் 4 மணி நேரம் நீடித்தது. இதில் எந்த விதமான ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    • காவல்துறையினர் விழிப்புடன் பணியாற்றியதன் காரணமாகவும் பெரும் அசம்பாவிதம் கோவை மாநகரில் தவிர்க்கப்பட்டுள்ளது.
    • இரவும் பகலும் ஓய்வின்றி தன்னலமற்ற வகையில் பணியாற்றி வரும் தமிழ்நாடு காவல்துறையினரின் பணி போற்றத்தக்கதாகும்.

    சென்னை:

    கோவை மாநகரில் கடந்த 23-ந்தேதியன்று அதிகாலை உக்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தினையடுத்து, விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் அவ்விடத்தில் தடயங்கள் ஏதும் கலைக்கப்பட்டு விடாமல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

    சம்பவம் நடந்த அன்று அதிகாலை வேளையில் அப்பகுதியில் விழிப்புடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரைக் கண்டவுடன் ஜமேஷா முபினால் மேலும் அவ்வழியே தொடர்ந்து காரைச் செலுத்த இயலவில்லை.

    இதனைத் தொடர்ந்து அவ்விடத்திலேயே கார் சிலிண்டர் வெடித்து அவரும் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் காரணமாகவும், காவல்துறையினர் விழிப்புடன் பணியாற்றியதன் காரணமாகவும் பெரும் அசம்பாவிதம் கோவை மாநகரில் தவிர்க்கப்பட்டுள்ளது.

    ஒரு சில நபர்கள் உள்நோக்கத்துடன் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக தடுக்கப்பட்டு, தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு நிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் நிலைமை திறம்பட கையாளப்பட்டது.

    சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் தனிப்படைகள் மூலம் புலன் விசாரணை முடக்கி விடப்பட்டு 148 தடயங்கள் சேகரிக்கப்பட்டு, வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு, அச்சம்பவம் தொடர்பாக 5 பேர் 24.10.2022 அன்றே கைது செய்யப்பட்டனர். மறுநாள் 6-வது நபரும் கைது செய்யப்பட்டார்.

    மேலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கைகள் அடுத்த தினமே மேற்கொள்ளப்பட்டன. இரவும் பகலும் ஓய்வின்றி தன்னலமற்ற வகையில் பணியாற்றி வரும் தமிழ்நாடு காவல்துறையினரின் பணி போற்றத்தக்கதாகும்.

    அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்றி சமூக அமைதியை நிலைநாட்டும் வண்ணம் சேவையாற்றிய காவல்துறையினரின் இப்பணியைப் பாராட்டி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை மாநகர காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 58 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிடும் அடையாளமாக 14 காவல் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு, மற்றும் போலீஸ் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சம்பவம் நடந்த இடம், அருகே உள்ள கோவில், கோவிலின் எதிர்ப்புற வீதியில் உள்ள அர்ச்சகர் தங்கி இருக்கும் வீடு உள்ளிட்டவற்றின் தூர இடைவெளியையும் அளவெடுத்து அந்த இடத்தை வரைபடமாக தயார் செய்து எடுத்து சென்றனர்.
    • என்.ஐ. அதிகாரிகள் விசாரணை முழுவதையும் ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

    கோவை:

    கோவையில் கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். விசாரணையில் முபின் கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    என்.ஐ.ஏ. போலீசார் நேற்று தங்களது விசாரணையை தொடங்கினர். என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலைமையில், விசாரணை அதிகாரி விக்‌னேஷ்வரன் அடங்கிய 8 பேர் குழுவினர் சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்தனர்.

    அவர்கள் கார் வெடிப்பு நடந்த இடம், கார் இருந்த நிலை, வெடிவிபத்தால் பாதிக்கப்பட்ட கோவிலின் முன்புறம் உள்ளிட்ட இடங்கள், காரின் உதிரி பாகங்கள், சிலிண்டர்கள் கிடந்த இடம், முபின் உயிரிழந்து கிடந்த இடம், கோவில் வளாகம், சுற்றுப்புற பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் கோவில் பூசாரி சுந்தரேசனிடமும் விசாரணை நடத்தினர். அவரிடம் என்.ஐ. அதிகாரிகள், எத்தனை மணிக்கு சத்தம் கேட்டது. நீங்கள் எப்போது வந்து பார்த்தீர்கள்.

    அப்போது சம்பவ இடத்தில் என்ன மாதிரியான சூழல் இருந்தது என பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு பூசாரி, கோவில் எதிர்புறத்தில் எனது வீடு உள்ளது.

    சம்பவம் நடந்த அன்று அதிகாலையில் நான் தூக்கத்தில் இருந்த போது பெரும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக வெளியில் வந்து பார்த்தேன். அப்போது தான் பயங்கர சத்தத்துடன் கார் வெடித்து எரிந்து கொண்டிருந்த சம்பவத்தை பார்த்ததாக தெரிவித்தார்.

    அதனை போலீசார் வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்து கொண்டனர். பூசாரியிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 40 நிமிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

    அதன்பின்னர் கோவிலுக்குள் சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவில் ஊழியர்களிடம், வழக்கமாக கோவில் எத்தனை மணிக்கு திறக்கப்படும். தினமும் வந்து செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையும் கேட்டறிந்தனர். கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக புகைப்படம் எடுத்தனர்.

    சம்பவத்தின்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் பாண்டியராஜன், ஏட்டு தேவக்குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் சம்பவம் நடந்த இடம், அருகே உள்ள கோவில், கோவிலின் எதிர்ப்புற வீதியில் உள்ள அர்ச்சகர் தங்கி இருக்கும் வீடு உள்ளிட்டவற்றின் தூர இடைவெளியையும் அளவெடுத்து அந்த இடத்தை வரைபடமாக தயார் செய்து எடுத்து சென்றனர்.

    என்.ஐ. அதிகாரிகள் விசாரணை முழுவதையும் ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

    தொடர்ந்து கோவையிலேயே முகாமிட்டு இந்த வழக்கு சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என மதத்தால் பிளவுபடுத்த முயற்சித்தாலும் கூட கோவை மக்கள் ஒன்றாக இருக்கின்றனர்.
    • குற்றவாளிகள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் என்று நாங்கள் கூறவில்லை. எல்லா மதத்திலும் கெட்டவர்கள் உள்ளனர். எல்லா மதத்திலும் நல்லவர்கள் உள்ளனர்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

    கோவைக்கு வர இருந்த பெரிய ஆபத்தை கோட்டை ஈஸ்வரன் தடுத்து நிறுத்தி விட்டதாகவும், இதற்கு நன்றி கூறும் வகையில் கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க கோவை வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

    இன்று காலை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவைக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றார். அவருடன் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்றனர். கோவிலில் அண்ணாமலை கோட்டை ஈஸ்வர சுவாமியை பயபக்தியுடன் வழிபட்டார். தொடர்ந்து மக்கள் நலம் பெற வேண்டி நடந்த கூட்டு பிரார்த்தனையிலும் பங்கேற்றார்.

    தொடர்ந்து கோவிலை சுற்றி வந்து அண்ணாமலை பார்வையிட்டார். அப்போது கோவிலின் தல வரலாறு உள்ளிட்ட தகவல்களை பூசாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

    பின்னர் வெளியில் வந்த அவர் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டார். சம்பவம் குறித்து கோவில் பூசாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து கோவிலில் உள்ள முருகன் சன்னதி முன்பு பக்தர்களுடன் அமர்ந்து கந்தசஷ்டி பாடினார்.

    பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின்போது கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மக்கள் எடுத்து கொடுத்ததாக கூறி பால்ரஸ் குண்டு மற்றும் ஆணிகளையும் அண்ணாமலை காண்பித்தார்.

    கோவை 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்புக்கு பிறகு பின்னோக்கி சென்றிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக மிக கடினமாக போராடி கோவையில் உள்ள மக்கள் தொழில் அதிபர்கள் இணைந்து கோவையை முன்னெடுத்து சென்றுள்ளனர்.

    இந்த நேரத்தில் இந்த வெடிகுண்டு விபத்து, தற்கொலைப்படை தாக்குதல் நடந்து இருந்தால் நினைத்து பார்ப்பதற்கே ஒரு மாதிரி இருக்கிறது. நிச்சயமாக கோவை 20 வருடம் பின்னோக்கி சென்று இருக்கும். அதை தடுத்து நிறுத்தியது நம்மை காக்கும் கடவுளாக இருக்கும் காவல் துறை நண்பர்கள்.

    இந்த விபத்து நடந்த பிறகு மிக துணிவாக காவல்துறையினர் இதனை அப்புறப்படுத்தினர். குற்றவாளிகளை கைது செய்து, அவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களை கைப்பற்றினர். தங்களது உயிரை பணயம் வைத்து வேறு எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் பார்த்து கொண்டனர். அவர்களுக்கு நன்றி.

    இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என மதத்தால் பிளவுபடுத்த முயற்சித்தாலும் கூட கோவை மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். இது மிகப்பெரிய விஷயம். ஏனென்றால் தீய மனிதர்கள் நோக்கம் இதுபோன்ற வெடி விபத்தை நடத்தி மதத்தை வைத்து கோவையை பிரித்து சூழ்ச்சியாடி, தமிழகத்தை பிரித்து சூழ்ச்சியாடி மக்களிடம் இருக்கும் ஒற்றுமை உணர்வை குறைப்பதற்காக தான் இந்த முயற்சி நடந்துள்ளது.

    நாம் சம்பந்தப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தான் கூறுகிறோம். அவர்களுக்கு எந்தவிதமான மதசாயத்தையும் கூட பூசவில்லை.

    சனதான தர்மத்தின் அற்புதம் என்னவென்றால், எந்த மனிதனையும் வேற்றுமைப்படுத்தி பார்க்கக்கூடாது. அனைவரையும் அரவணைக்கக்கூடிய கடமை நமக்கு இருக்கிறது. ஒன்றாக செல்ல வேண்டும். கோவை மாநகரில் எந்த மதத்தவர்களாக இருந்தாலும் நீங்கள் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது. வன்முறையை கையில் எடுப்பவர்களுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடாது. இது தவறான முன் உதாரணம். மதகுருமார்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி யாராவது இளைஞர்கள் தவறான வழித்தடத்தில் சென்றாலும் கூட சொல்வது நமது கடமை.

    மக்கள் எடுத்துக்கொடுத்த பால்ரஸ் குண்டு மற்றும் ஆணிகளை பார்க்கும்போது மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்படுத்த திட்டமிட்டிருப்பது தெரியவருகிறது.

    மாநில அரசை தொந்தரவு செய்ய வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. மாநில அரசுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மட்டுமே நாங்கள் சொல்லி வருகிறோம். தொடர்ந்து கருத்துக்களை சொல்வோம். அதனால் நாங்கள் சொல்வது யாருக்கும் எதிரானது கிடையாது.

    தொடர்ந்து பா.ஜனதா கட்சி போலீஸ் உயர் அதிகாரிகளை கேட்கின்ற கேள்வி இங்கே சில தவறுகள் நடந்து இருக்கிறது. திருத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

    அடுத்த கட்ட தாக்குதல் நடந்த பிறகு நாங்கள் உங்களை பார்த்து, நீங்கள் எங்களை பார்த்து குற்றம் சொல்லாமல் சரியான நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என்பதற்காக தான் கேள்வியை எழுப்பி வருகிறோம்.

    கடந்த ஜூன் 19-ந் தேதி மத்திய உளவுத்துறை தமிழகத்தில் இது போன்ற 96 நபர்கள் ஐ.எஸ்.எஸ். மூளை சலவை செய்யப்பட்டவர்கள், கைதானவர்களை கண்காணிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

    இதில் 89-வது நபராக இந்த வழக்கில் முதல் குற்றவாளியான முபினின் பெயர் உள்ளது. இதை கண்காணிக்க வேண்டும் என கூறியும் அது நடக்காததால் இந்த தவறு நடந்து இருக்கிறது.

    மக்களை எச்சரிக்கைப்படுத்துவது காவல்துறையின் தலையாய பணி. பொதுமக்களுக்கு உண்மையை சொல்வதால் யாரும் எதுவும் தவறாக நினைக்க போவதில்லை. அதனை வெளியில் சொல்ல வேண்டும். அதனை சொன்னால் மக்களுக்குள் பிளவு வந்து விடும் என்பது கிடையாது.

    குற்றவாளிகள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் என்று நாங்கள் கூறவில்லை. எல்லா மதத்திலும் கெட்டவர்கள் உள்ளனர். எல்லா மதத்திலும் நல்லவர்கள் உள்ளனர். ஐ.எஸ். கொள்கை என்பது பொய் என்று நாங்கள் சொல்லவில்லை. இஸ்லாமிய குருமார்களே சொல்கின்றனர்.

    நல்ல குருமார்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோவையை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்து செல்ல முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கார் வெடிப்பு சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவை மாவட்ட பா.ஜ.க. அறிவித்திருந்தது. பின்னர் வியாபாரிகள், மக்களின் கோரிக்கையை ஏற்று பா.ஜ.க.வினர் தங்களது கடையடைப்பு போராட்டத்தை ஒத்திவைத்தனர்.

    ஏற்கனவே மாவட்ட பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க.வினர் மற்றும் இந்து அமைப்பினர் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் விளக்கேற்றி வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    அண்ணாமலை வருகையை முன்னிட்டு அந்த பகுதிக்கு செல்லும் வழிகளில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உள்ளூர், வெளிமாவட்ட போலீசார் என 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த வழியாக வருபவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அடையாள அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்களை கேட்டு பெற்று ஆராய்ந்து விசாரித்த பின்னரே அந்த பகுதிக்குள் அனுமதிக்கின்றனர்.

    இதுதவிர வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    ×