search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமைத் தொகை"

    • விண்ணப்பங்கள் வருகிற 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை நான்கு தினங்களுக்குள் முழுமையாக விநியோகம் செய்யப்பட வேண்டும்.
    • டோக்கன்களில் முகாம் நடைபெறும் நாள், நேரம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளுக்கு டோக்கன் மற்றும் விண்ணப்பங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    தலைமைச் செயலாளர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டதில் காணப்பட்ட குறைபாடுகளை களைந்து நகர்ப்புற பகுதிகளுக்கும் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் குறித்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பங்கள் வருகிற 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை நான்கு தினங்களுக்குள் முழுமையாக விநியோகம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நியாய விலைக்கடைக்கும் தனித்தனியாக விற்பனையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்ப விநியோகத்தை முடிக்க வேண்டும்.

    500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 60 வீதமும், ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 120 வீதமும், 1500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 180 வீதமும், 2000 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 240 வீதமும் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும்.

    எந்தெந்த பகுதிகளுக்கு எந்தெந்த நாட்களில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, அதன்படி விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும்.

    இவ்விபரம் சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடையில் தெளிவாக குறிப்பிடப்பட்டு கடை முன்பு போஸ்டரில் வெளியிடப்பட வேண்டும்.

    ஒரு நாளைக்கான 60 டோக்கன்களை ஒட்டு மொத்தமாக அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யாமல் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியாக பிரித்து டோக்கன் வழங்க வேண்டும்.

    விண்ணப்பங்களில் குடும்ப அட்டை எண் தவறாமல் எழுதப்பட வேண்டும். எழுதுவதற்கு இடம் தனியே ஒதுக்கப்பட்டுள்ளது.

    டோக்கன்களில் முகாம் நடைபெறும் நாள், நேரம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். நேரத்தை பொறுத்தவரை காலை அல்லது மதியம் என்று பொதுவாக குறிப்பிடுவதை தவிர்த்து ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் நேரம் குறிப்பிடப்பட வேண்டும்.

    ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு டோக்கன் விநியோகம் செய்யும்போது அப்பகுதியில் இறப்பு, வீட்டில் ஆள் இல்லாதவர்கள், விண்ணப்ப படிவம் வேண்டாம் என மறுப்பு தெரிவிப்பவர்கள் விவரங்களை அவ்வப்போது குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட முகாமிற்கு ஒரு நாளைக்கு எத்தனை டோக்கன்கள் வழங்கப்பட்டது. அதில் எத்தனை நபர்கள் முகாமிற்கு வருகை புரிந்துள்ளனர் என்பது போன்ற விவரங்கள் மாநில அளவில் அன்றாடம், மிகவும் நுணுக்கமாக கண்காணிக்கப்படுவதால், முகாமிற்கு தேவையான அளவை விட கூடுதலாகவோ குறைவாகவோ டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    • மாவட்டங்களில் 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்ப டும் என அறிவித்தார்.
    • 2,77,236 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத்தி ட்டத்தின்கீழ், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் எனவும், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திடும் வகையில், மாவட்டங்களில் 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்ப டும் என அறிவித்தார். அதனடி ப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திட விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 அன்று தொடங்கி 4.08.2023 வரை நடைபெறவுள்ளது. இதில் 3,41,209 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணிகள் நடைபெ ற்று வருகிறது.

    முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்களில், முதல் 3 நாட்களில் 1,26,769 விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பெறப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் விண்ணப்ப ங்களை பதிவு செய்வதற்கு 1092 தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு முகாமிலும் பயனாளிகளின் விண்ணப்பங்களைச் சரிபார்க்கவும், பூர்த்தி செய்யப்படாத விண்ண ப்பங்களை பூர்த்தி செய்வத ற்கும் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டு ள்ளது.

    இரண்டாம் கட்ட முகாம் 5.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறவுள்ளது. இதில் 690 விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். இம்முகாமில், 2,77,236 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்.  அனைத்து முகா ம்களிலும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளான இருக்கைகள் வசதி, குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோ ருக்கான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.

    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
    • விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்யும் முகாம் தற்போது நடந்து வருகிறது.

    காஞ்சிபுரம்:

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்யும் முகாம் தற்போது நடந்து வருகிறது.

    காஞ்சிபுரம் நகரில், வைகுண்ட பெருமாள் கோவில் தெரு, அசோக் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவு செய்யும் சிறப்பு முகாமை எழிலரசன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு செய்து பார்வையிட்டார். அப்போது, வட்டாட்சியர் புவனேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • சென்னையில் 17 லட்சம் ரேஷன் கார்டுகள் இருந்தாலும் இன்னும் சில வீடுகளுக்கு விண்ணப்ப படிவம் சென்றடையவில்லை.
    • விண்ணப்ப படிவம் வாங்கிய பல பேர் இன்னும் பூர்த்தி செய்து கொடுக்காமல் உள்ளனர்.

    சென்னை:

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ், விண்ணப்ப படிவங்கள் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பொதுமக்களிடம் வழங்கப்பட்டு உள்ளன.

    முதற்கட்டமாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் ஜூலை 24-ந்தேதி முதல் சிறப்பு முகாம்களில் பெறப்பட்டு வருகிறது. ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி வரை முகாம்கள் மூலம் முதற்கட்டமாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை மாநகரில் 1,428 ரேஷன் கடைகள் உள்ளன. அவற்றில் முதற்கட்டமாக 704 ரேஷன் கடை பகுதிகளில் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் 1,730 பதிவு செய்யும் முகாம்கள் சென்னை மாநகரில் அமைக்கட்டுள்ளன. இதில் 2-வது கட்டத்தில் மற்ற முகாம்களில் பதிவு செய்யும் பணிகள் தொடங்கும்.

    ஒவ்வொரு முகாம்களிலும் 2,266 பயோமெட்ரிக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

    மேலும் 704 சிறப்பு முகாம் பொறுப்பு அலுவலர்கள் 1,730 தன்னார்வலர்கள், 704 உதவி தன்னார்வலர்கள்1,515 போலீசார், 154 நகரும் குழுக்கள் இந்த சிறப்பு முகாம்களுக்காக பணியாற்றி வருகிறார்கள்.

    ரேஷன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்கிற வகையில் 1,730 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் இந்த முகாம்களில் இதுவரை 2 லட்சத்து 70 ஆயிரம் பெண்கள், விண்ணப்பங்களை கொண்டுவந்து பூர்த்தி செய்து பதிவு செய்து உள்ளனர்.

    சென்னையில் 17 லட்சம் ரேஷன் கார்டுகள் இருந்தாலும் இன்னும் சில வீடுகளுக்கு விண்ணப்ப படிவம் சென்றடையவில்லை. இதை கருத்தில் கொண்டு வீடுவீடாக தொடர்ந்து விண்ணப்ப படிவம் கொடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் இப்போது 5.30 லட்சம் விண்ணப்ப படிவங்களை வீடுவீடாக சென்று வழங்கி உள்ளதாக மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    விண்ணப்ப படிவம் வாங்கிய பல பேர் இன்னும் பூர்த்தி செய்து கொடுக்காமல் உள்ளனர். இதனால் சிறப்பு முகாம்களில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை. தினசரி 70 ஆயிரம் விண்ணப்பம் என்ற அளவில் முகாம்களில் பதிவாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்பப்படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன.
    • ரேஷன் கடைகளுக்கு அருகே உள்ள இடங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    சென்னை:

    தமிழகத்தில், குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்பப்படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்காக ரேஷன் கடைகளுக்கு அருகே உள்ள இடங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    இந்தநிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நிர்வாகக் காரணங்களுக்காக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. அதற்கு ஈடாக 26.8.23 அன்று (சனிக்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கைரேகை வைத்து பதிவு செய்யும் முறை முற்றிலும் இயங்கவில்லை.
    • சாதாரணமாக பதிவு செய்வதால் ஒவ்வொரு நபருக்கும் அரை மணி நேரம் வரை ஆனது.

    கடலூர்:

    குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் அன்று நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வீடு வீடாக கொடுக்கும் பணி கடந்த 20-ந்தேதி முதல் நடைபெற்று வந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கான முகாம்கள் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளன.

    இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை பதிவு செய்யும் முகாம்களில் சர்வர் முடங்கியதால் கடலூர் மாவட்டம் முழுவதும் விண்ணப்பம் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. கைரேகை வைத்து பதிவு செய்யும் முறை முற்றிலும் இயங்கவில்லை. சாதாரணமாக பதிவு செய்வதால் ஒவ்வொரு நபருக்கும் அரை மணி நேரம் வரை ஆனது.

    இதனால் பெண்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    • சென்னையில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் முதல் கட்டமாக 98 வார்டுகளுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு இன்று சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
    • அதிக குடும்ப அட்டைகளை கொண்ட ரேஷன் கடைகளுக்கு 3 முதல் 5 முகாம்கள் வரை ஒரே இடத்தில் நடக்கிறது.

    சென்னை:

    குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவதற்கான விண்ணப்ப படிவம் கடந்த 20-ந்தேதி முதல் 4 நாட்கள் வழங்கப்பட்டன.

    அந்தந்த ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு படிவத்துடன் எந்த நாளில் சிறப்பு முகாமிற்கு வர வேண்டும் என்பது குறித்த டோக்கனும் வழங்கப்பட்டன.

    சென்னையில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் முதல் கட்டமாக 98 வார்டுகளுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு இன்று சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னையில் மட்டும் 1,428 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் முதலில் 703 கடைகளுக்கு உட்பட்ட 1,500 இடங்களில் சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கின.

    விண்ணப்பங்கள் எளிதாக பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இருப்பதால் பெரும்பாலானவர்கள் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை எடுத்து தயார்படுத்தி வைத்திருந்தனர். தகுதி வாய்ந்த பெண்கள் டோக்கன்களில் குறிப்பிட்டு உள்ள நாட்களில் முகாமிற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    குடும்பத் தலைவிகள் வரும்போது ஆதார் எண், ரேஷன் கார்டு, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித நகலும் இணைக்கத் தேவையில்லை.

    குடும்ப அட்டைக்கு ஒரு முகாம் வீதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக குடும்ப அட்டைகளை கொண்ட ரேஷன் கடைகளுக்கு 3 முதல் 5 முகாம்கள் வரை ஒரே இடத்தில் நடக்கிறது.

    காலை 8 மணிக்கே முகாம்களுக்கு பெண்கள் வரத் தொடங்கினார்கள். முகாம்களில் கூட்டுறவு, ரேஷன் கடை ஊழியர்கள், தன்னார்வலர்கள் பயோமெட்ரிக் கருவியுடன் தயாராக இருந்தனர்.

    பெண்களுக்கு உதவி செய்ய மையங்களும் அங்கு அமைக்கப்பட்டிருந்தன. கூட்ட நெரிசல் இல்லாமல் பதிவு செய்ய விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

    முகாமிற்கு வந்த பெண்களின் ஆதார் எண் முதலில் பதியப்பட்டது. பின்னர் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரி பார்க்கப்பட்டது. விரல் ரேகை பதிவு சரியாக அமையாதவர்களுக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போனுக்கு ஓ.டி.பி. பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

    ஒரு குடும்பத்தில் தகுதி உள்ள பல பெண்கள் இருந்தாலும் ஒரு அட்டைக்கு ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டம் அதிகமாக இருந்த முகாம்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நெரிசல் இல்லாமல் வரிசையில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று முதல் ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி வரை படிவங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

    ஞாயிற்றுக்கிழமையும் இந்த முகாம்கள் செயல்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை ரேஷன் கார்டு வாரியாக பெண்கள் அழைக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.

    இதுகுறித்து சந்தேகங்களுக்கு மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையை 044-25619208 எனும் தொலைபேசி எண். 94454 77205 எனும் வாட்ஸ் அப் எண் மற்றும் 1913 எனும் உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், 15 மண்டலங்களுக்கும் தனித்தனியே கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தாங்கள் சம்பந்தப்பட்ட மண்டலத்தின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலம் முழுவதும் 4.57 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன.
    • 14,104 குழுக்களில் 1.68 லட்சம் உறுப்பினர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களிடம் கேட்டறிந்தார்.

    இதன்பின்னர் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், தமிழ்நாடு முழுவதற்கான திட்டம். நான், எதற்காக தருமபுரிக்கு வந்திருக்கேன் என்றால், அமைச்சர் கூறியதுபோல், 34 ஆண்டுகளுக்கு முன்பு 1989-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தருமபுரி மாவட்டத்தில் முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மகளிர்கள் தன்னம்பிக்கையோடும், யாருடன் தயவுமின்றியும், சுயமரியாதையுடன் மகளிர் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் மகளிர் சுய உதவிக்குழு என்ற அற்புதமான திட்டம்.

    ஏழை, எளிய பெண்களை கொண்டு மகளிர் சுய உதவிக்குழு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கு அன்றைய காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதி விதைத்த விதைத்தான் இன்றைக்கு மாபெரும் திட்டமாக தமிழ்நாடு முழுவதும் தழைத்து, வளர்ந்து லட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்து கொண்டிருக்கிறது.

    தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 57 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழு செயல்பட்டு வருகின்றன. அதில் 51 லட்சம் 46 ஆயிரம் பெண்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 3லட்சத்து 96 ஆயிரத்து 363 குழுக்களுக்கு ரூ.21,641 கோடி கடனாக வழங்கப்பட்டது.

    2006-2011-ம் ஆண்டு ஆட்சியில் துணை முதல்வராகவும், உள்ளாட்சி துறை அமைச்சராகவும் இருந்தபோது பல்லாயிரக்கணக்கான மகளிர் சுயஉதவிக் குழுக்களை நான் உருவாக்கினேன். அப்போது நான், கடனுதவிகளை பலமணிநேரம் மேடையில் நின்று கொண்டு வழங்கியுள்ளேன். அதையெல்லாம் நான் இப்போது நினைத்து பார்க்கிறேன்.

    நான், ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்ற போது, அரசு நிகழ்ச்சியில் கட்டாயமாக மகளிர் சுயஉதவிக்குழுவை பங்கேற்க வைத்து, அவர்களுக்கு சுழல்நிதி உதவி அனைவருக்கும் வழங்கப்பட்டது. குறைந்த பட்சம் 5 ஆயிரம் பேருக்கு நான் வழங்கியுள்ளேன்.

    கடந்த காலங்களில் அரசு நிகழ்ச்சி நடைபெறும்போது, ஒரு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். ஒரு சிலருக்கு தான் உதவிகள் கிடைக்கும். ஆனால், நான், துணை முதல்வராக இருந்தபோது, மகளிர் சுயஉதவிக்குழுகளில் உள்ள பெண்கள் அனைவருக்கும் சுழல்நிதி வழங்கப்பட்டது.

    அதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், பெண்களுக்கு தொடர்ந்து நிதிஉதவி கொடுத்து கொண்டிருக்கும் போது, ஒரு மூதாட்டி என்னிடம் வந்து இப்படி நீண்டநேரம் நின்று கொண்டே இருக்கிறீர்களே உங்களுக்கு கால் வலிக்கவில்லையா? என்றார். அதற்கு நான், நீங்கள் எல்லாம் நிதிஉதவி பெற்று செல்லும்போது உங்கள் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சியை நான் கண்டவுடன் அந்த வலியெல்லாம் எனக்கு தெரியவில்லை என்றேன். இதையெல்லாம் நான்பெருமைப்படுத்தி கொள்வதற்காக சொல்லவில்லை. முறையாக அனைவருக்கும் இந்த திட்டம் போய் சேரவேண்டும்.

    எந்த உணர்வோடு மகளிர் சுயஉதவிக்குழு திட்டம் கருணாநிதி தொடங்கினாரோ, தற்போது அந்த திட்டம் கம்பீரமாக வளர்ந்து நிற்பதை பெருமையாக பார்க்கிறேன். சிறப்பான திட்டத்திற்கு விதை போட்ட மண்தான் தருமபுரி மண்.

    இந்த மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் 1,69.648 மகளிர் குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் 8625 குழுக்களுக்கு ரூ.729 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. தருமபுரியில் தொடங்கினால் தான் தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் சென்றடையும் என்பதால் இந்த திட்டத்தை நான் இங்கு தொடங்கி வைத்துள்ளேன்.

    சுயமரியாதை கொள்கையில் இறுதியாக இருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் வகுத்து கொடுத்த பாதையில் நான் தமிழ்நாடடை வளமான, வலிமையான மாநிலமாக மாற்ற, எல்லா துறைகளிலும் முன்னேற்றம் காண நாள்தோறும் எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.

    நான் முதலமைச்சராக பதவியேற்றுபின்பு போட்ட முதல் கையெழுத்து மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டம். இந்த திட்டம் மூலம் மாதந்தோறும் மகளிர் ரூ.800 முதல் ரூ.1000 வரை சேமிக்க முடியும். இதேபோல் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரு.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம். இந்த திட்டத்தால் மாதந்தோறும் மாணவிகளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் 2லட்சத்து 11,506 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

    இதேபோன்று பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு திட்டம் காமராஜர் கொண்டு வந்தார். அதனை எம்.ஜி.ஆர். முன்னிலைப்படுத்தினார். அதனை மறுக்கமுடியாது. அதன்பின்னர் தி.மு..க. ஆட்சிக்கு வந்தால் சத்துணவு திட்டம் முடக்கப்படும் என்று சிலர் விஷம பிரசாரங்களை பரப்பினர். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி முட்டையுடன் சத்துணவு திட்டத்தை புதுப்பித்தார்.

    காலை சிற்றுண்டி உண்ணாமல் காலை நேரத்தில் பசியோடு வரும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. திட்டத்தினை விரிவு படுத்தபடவுள்ளதால் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். தற்போது பள்ளியில் காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றோம்.

    மகளிருக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று கருணாநிதி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதைத்தொடர்ந்து இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதனால் மகளிரின் வாழ்வாதாரம் மேலும் உயரும்.

    தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி இப்போது நிறைவேற்றபட்டிருக்கிறது. சிறு வியாபாரம், வணிகம் செய்து பிழைப்பு நடத்தும் பெண்கள், விளிம்பு நிலை பெண்கள் என யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் தேவைப்படுமோ அவர்களுக்கு நிச்சயம் வழங்கப்படும். செப்டம்பர் 15-ந் தேதி பெண்களின் கைகளுக்கு உரிமை தொகை வழங்கப்படும்.

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. கொரோனா தொற்றால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அதையெல்லாம் கடந்து, இந்த திட்டத்தை நிறைவேற்றி காட்டுவேன் அது தான், ஸ்டாலினின் பணி. நம்பிக்கையோடு வாக்களித்தவர்க்கும், வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்தே நல்லாட்சி வழங்குவோம்.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான்று செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்கள் வாங்க சிறப்பு முகாம்கள் தொடங்கபட்டிருக்கிறது, விடுமுறை தினமான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் விண்ணப்பங்கள் பெற்று கொள்ள ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது. தகுதியுள்ள பயனாளிகள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக அதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது. எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கே. என். நேரு. பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே.மணி. மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும்.
    • சந்தேகங்களுக்கு மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையை 1913 எனும் உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப்பதிவு முகாம் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.

    முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 98 வார்டுகளில் உள்ள 703 நியாய விலைக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் பகல் ஒரு மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும்.

    குடும்ப அட்டை பயன்பாட்டில் இருக்கும் நியாயவிலைக் கடையில் நடைபெறும் முகாமில் குடும்பத் தலைவி டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    இப்பதிவின் போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து வர வேண்டும்.

    விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் இணைக்க தேவையில்லை. வருவாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெறத் தேவையில்லை.

    விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். விரல் ரேகை சரியாக பதிவாக வில்லை என்றால் ஆதார் அட்டையுடன் இணைக்கப் பட்ட கைப்பேசி வழியாக ஒரு முறை கடவுசொல் (ஓ.டி.பி.) பெறப்படும்.

    எனவே முகாமுக்கு வரும் போது ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசியை எடுத்து வர வேண்டும்.

    இதுகுறித்து சந்தேகங்களுக்கு மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையை 044-25619208 எனும் தொலைபேசி எண்.94454 77205 எனும் வாட்ஸ் அப் எண் மற்றும் 1913 எனும் உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், 15 மண்டலங்களுக்கும் தனித்தனியே கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தாங்கள் சம்பந்தப்பட்ட மண்டலத்தின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல்கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிர் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை நேரடியாக செலுத்தப்பட உள்ளது.
    • முகாமை தொடங்கி வைத்து பயனாளியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

    தர்மபுரி:

    தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

    தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்" என்று பெயரிடப்பட்டது.

    தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு இந்த திட்டத்தின்கீழ் பயன் பெறத்தகுதியானவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.

    இந்த திட்டம் மூலம் முதல் கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிரின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை நேரடியாக செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

    அதில் "தமிழக வரலாற்றில் மாபெரும் திட்டமாக அமையப் போகும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது" என்று மாவட்ட கலெக்டர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் மற்றும் டோக்கனை விநியோகம் செய்து வருகின்றனர். விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெறும் இடம், நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    முதல் கட்டமாக விண்ணப்பங்கள் விநியோகம் செய்வது பெரும்பாலான இடங்களில் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. நேற்று மாலை வரை தமிழகம் முழுவதும் சுமார் 91 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிலையில் இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் இந்த மாதமும், அடுத்த மாதமும் 3 கட்டங்களாக நடைபெற உள்ளன.

    முதல் கட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய சுமார் 21 ஆயிரம் முகாம்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்த 21 ஆயிரம் முகாம்களிலும் இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது.

    இந்த முகாம்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை (திங்கட்கிழமை) தொடங்கி வைத்தார். இதற்காக தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும் பணியைத் தொடங்கி வைத்தார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையம் சென்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கு சென்றார்.

    அங்கு காலை 9.45 மணியளவில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும் பணியை தொடங்கி வைத்து மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் சிலருடன் கலந்துரையாடினார்.

    தொடர்ந்து அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்குச் சென்று மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து உரையாற்றினார். பின்னர் சாலை மார்க்கமாக சேலம் விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை திரும்புகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி செல்வதை முன்னிட்டு மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமையில் 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 6 கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 9 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மற்றும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் முகாமை தொடங்கி வைப்பதற்காக காரில் புறப்பட்டு தருமபுரி மாவட்டம் தொப்பூருக்கு சென்றார்.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டுகள் சிவகுமார், ஸ்டீபன் சேசுபாதம் துணை கமிஷனர்கள் செய்திருந்தனர்.

    ஓமலூர்:

    தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை பதிவு செய்ய இன்று முதல் 35 ஆயிரம் 923 முகாம்கள் நடைபெற உள்ளன.

    இந்த முகாமினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.

    இதற்காக இன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார்.

    விமான நிலையம் முன்பு காவல்துறை சார்பில் நடந்த அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். அவருக்கு விமான நிலையத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் கார்மேகம், மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம். செல்வகணபதி, பார்த்திபன் எம்.பி. மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பூங்கொத்து, புத்தகம் கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

    விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் முகாமை தொடங்கி வைப்பதற்காக காரில் புறப்பட்டு தருமபுரி மாவட்டம் தொப்பூருக்கு சென்றார்.

    வழிநெடுகிலும் அவருக்கு சாலையின் இருபுறமும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் விமான நிலையத்தில் இருந்து தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டுகள் சிவகுமார், ஸ்டீபன் சேசுபாதம் துணை கமிஷனர்கள் செய்திருந்தனர்.

    • தமிழக அரசு, தொழில் அதிபர்களுடன் கைகோர்த்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது.
    • தற்போது தக்காளி விலை ஆப்பிள் விலையை விட அதிகமாக விற்பதை நாம் அறிவோம்.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கொங்கணாபுரத்தை அடுத்த குரும்பப்பட்டி ஊராட்சி நாச்சியூரில் அ.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.

    விழாவில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

    தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றனர். இன்று, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்குவதாக கூறுகின்றனர்.

    இதனால் சாதாரண ஏழை எளிய குடும்ப தலைவிகள் கூட உரிமைத்தொகை பெற முடியாத நிலையில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.

    தமிழக அரசு, தொழில் அதிபர்களுடன் கைகோர்த்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையின்போது கட்டுமான பொருட்கள் அனைத்தும் அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் அந்த வாக்குறுதி இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

    தற்போது தக்காளி விலை ஆப்பிள் விலையை விட அதிகமாக விற்பதை நாம் அறிவோம். இந்த விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கு திருமண உதவித்தொகை, மடிக்கணினி திட்டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமரும் போது இந்த திட்டங்கள் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    ×