search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரம்ஜான் பண்டிகை"

    • ரமலானில் அருளப்பட்ட இறைச்செய்தி.
    • வானவர் மணியோசை போன்று வருவார். அவர் நபியை தம்முடன் இணைத்துக் கொள்வார்.

    ரமலானில் அருளப்பட்ட இறைச்செய்தி

    இறைச்செய்தியின் ஆரம்ப வெளிப்பாடும், இந்த பிரபஞ்சத்தில் உலகப்பொதுமறையாம் திருமறை திருக்குர்ஆன் இறங்கிய துவக்கமும், இறை அழைப்பின் அழகிய ஆரம்பக்கட்டமும் புனித ரமலானில்தான் அரங்கேறியது.

    'ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக்கொண்டதாகவும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப்பெற்றது.' (திருக்குர்ஆன் 2:185)

    நபி (ஸல்) அவர்களுக்கு நாற்பது வயதை நெருங்குவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே அவர்களின் மனம் தனிமையை விரும்பியது. மக்காவில் இருந்து சுமார் இரண்டு மைல்கள் தொலைவில் உள்ள நூர் மலையில் அமைந்துள்ள ஹிரா குகைக்குச் சென்று அங்கே இறைவனுக்காக தவம் மேற்கொண்டார்கள். பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயதை நிறைவு செய்தபோது அவர்களுக்கு நபித்துவ பட்டம் கிடைத்தது.

    ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்த மூன்றாம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 21. திங்கட்கிழமை கி.பி.610 ஆகஸ்டு 10-ம் தேதி முதன்முதலாக இறைச்செய்தி இறங்கியது.

    'ஆயிஷா (ரலி) கூறினார்: 'நபி (ஸல்) அவர்களுக்குத் தொடக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்த கனவு கண்டாலும் அது அதிகாலைப்பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர், தனிமையில் இருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் பல இரவுகள் அங்கே தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டார்கள். அந்த நாள்களுக்கான உணவை தம்முடன் கொண்டு செல்வார்கள். உணவு தீர்ந்ததும் மனைவி கதீஜாவிடம் திரும்புவார்கள்.

    இந்த நிலை ஹிரா குகையில் இறைச்செய்திவரும் வரை நீடித்தது. ஒருநாள் வானவர் தோன்றி, ஓதும் என்றார். அதற்கு நபியவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றார்கள்.

    'அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னை விட்டுவிட்டு மீண்டும் 'ஒதும்' என்றார். 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றேன். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. மூன்றாவது முறை கட்டியணைத்து விட்டு 'படைத்தவனாகிய உமது இரட்சகனின் திருப் பெயரால் ஒதும்! அவனே மனிதனை கரு வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருந்து படைத்தான். ஒதும் உம் இரட்சகன் கண்ணியமிக் கவன்' என்றார். (திருக்குர்ஆன் 96:1,2,3, நூல்:புகாரி)

    இதுதான் உலகில் முதலில் இறங்கியதிருக்குர்ஆனின் இறைச்செய்தியாகும். இறைச்செய்தியின் வகைகள்:

    1) உண்மையான கனவு. இதுதான் இறைச் செய்தியின் தொடக்கம்.

    2) வானவர், நபி (ஸல்) அவர்களின் கண் முன் தோன்றாமல் உள்ளத்தில் இறைச்செய்தியை போடுவது.

    3) வானவர் ஓர் ஆடவரின் உருவில் தோன்றி நபி (ஸல்) அவர்களிடம் பேசுவார். அதை நபி (ஸல்) மனதில் நிலை நிறுத்திக்கொள்வார்கள்.

    4) வானவர் மணியோசை போன்று வருவார். அவர் நபியை தம்முடன் இணைத்துக் கொள்வார்.

    5) வானவர் இறைவன் படைத்த உண்மை தோற்றத்தில் நபி (ஸல்) முன் தோன்று வார்.

    6) நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேல் அழைத்து பேசுவது. இது நபியவர்களின் விண்ணுலகப் பயணத்தில் தொழுகை கடமையாக்கப்பட்ட போது நடந்தது.

    7) வானவரின்றி நேரடியாக அல் லாஹ்வே பேசுவது. இது மூஸா (அலை) அவர்களுக்கு இந்த உலகத்திலேயே கிடைத்தது. நபி (ஸல்) அவர்களுக்கு விண்ணுலகப் பயணத்தின் மூலம் ஏற்பட்டது.

    • ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன.
    • ரமலானில் நோன்பு மற்றும் பிரார்த்தனைகளால் பலன்கள் பெறுவோம்.

    ரமலானில் திறக்கப்படும் வானின் கதவுகள்

    'ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    புனித ரமலானில் நோன்பாளிகளுக்காக வானத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அவர்களின் நோன்பும், மாண்பும், வணக்கமும், வழிபாடும், வானம் வரைக்கும் கடந்து, பிறகு இறைவனிடம் சென்றடைந்து விடுகிறது.

    ரமலான் அல்லாத மாதங்களிலும், நோன்பு அல்லாத வணக்கங்களுக்காகவும் வானங்களின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இப்னு உமர் (ரலி) கூறியதாவது:-

    நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் 'அல் லாஹூ அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வசுப்ஹானல்லாஹி புக்ரத்தன் வஅஸீலா (இறைவன் மிகப்பெரியவன் என்று பெருமைப்படுத்துகின்றேன்.

    எல்லாப்புகழும் இறைவனுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகின்றேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கின்றேன்)' என்று கூறினார்.

    நபி (ஸல்) அவர்கள் 'இந்த வார்த்தைகளை மொழிந்தவர் யார்?" என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், 'நான் தான்' என்றார். நபி (ஸல்) அவர்கள், நான் இதைக்கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன' என்று கூறினார்கள். இவ்வாறு கூறக் கேட்டதில் இருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.' (நூல்: முஸ்லிம்)

    மேலும், ஒவ்வொரு நாளும் மனிதர்களின் செயல்களை கண்காணிக்கும் பொறுப்புவானவர்களுக்கு சாட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் இரு பிரிவினராக செயல்படுகின்றனர். மனிதனின் பகல் நேர செயல்களை கண்காணிக்கும் வானவர்கள் அதிகாலை நேரத்தில் வருகை புரிவர். இரவு நேர செயல்களை கண்காணிக்கும் வானவர்கள் மாலை நேரம் வருகை புரிவர். அப்போது இந்த இரண்டு நேரங்களிலும் வானங்கள் திறக்கப்படுகின்றன.

    மனித செயல்கள் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன . 'ஐந்து இரவுகளில் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அப்போது வானத்தின் கதவுகள் திறக்கப்படுகிறது. அவை: வெள்ளி இரவு, நோன்புப் பெருநாள் இரவு, ஹஜ்ஜுப் பெருநாள் இரவு, ரஜப் மாதத்தில் முதல் இரவு, ஷஃபான் மாதத்தின் 15-ம் இரவு ஆகும் என இமாம் ஷாபி (ரஹ்) கூறுகிறார்.

    'ஒருவர் மனத்தூய்மையுடன் 'லாயிலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறினால், அவருக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அவர் பெரும்பாவம் புரிவதை தவிர்த்திருந்தால்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப் பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    'ஒருவர் தொழுகையின் மூலம் பாவமீட்சி பெற்றாலும் வானத்தின் கதவுகள் திறக்கப் படுகின்றன. மேலும் அவரின் பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படுகின்றன' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்:அஹ்மது)

    'இரவின் மூன்றாம் பகுதியின் நிறைவான நேரத்தில் இறைவன் முதல் வானத்தின் பக்கம் இறங்கி வருவான். அப்போது வானத்தின் வாசல்களை திறப்பான். பிறகு இறைவன் தமது திருக்கரத்தை விரித்து வைத்து என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு கேட்டது வழங்கப்படும்' என்று கூறுவான். இது அதிகாலை உதயமாகும் வரை நீடிக்கும் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: அஹ்மது).

    வானத்தின் வாசல்கள் திறந்திருக்கும் இந்த ரமலானில் நோன்பு மற்றும் பிரார்த்தனைகளால் பலன்கள் பெறுவோம்.

    • மூன்றாம் பிறையில் அன்னை பாத்திமா (ரலி) நினைவு கூரப்படுகிறார்கள்.
    • ரமலான் பிறை 3-வது தினத்தில் அன்னை இறைவனடி சேர்ந்தார்கள்.

    பாத்திமா (ரலி) அவர்களின் தியாகம்

    புனித ரமலான் மாதம் பிறந்துவிட்டால், அதன் மூன்றாம் பிறையில் அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். ஹிஜ்ரி 11-ம் ஆண்டில் ரமலான் பிறை 3-வது தினத்தில் புதன்கிழமை அன்று அன்னை அவர்கள் தமது 25-ம் வயதில் (கி.பி. 632 நவம்பர் 21) பூமியின் மடியிலிருந்து இறைவனடி சேர்ந்தார்கள்.

    அன்னை பாத்திமா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கும் அன்னை கதீஜா (ரலி) அவர் களுக்கும் பிறந்த கடைக்குட்டி செல்லக் குழந்தை ஆவார். நபி (ஸல்) அவர்களுக்கு நபி பட்டம் கிடைத்த ஓராண்டிற்குப் பின் நபி (ஸல்) அவர்களின் 41-ம் வயதினிலே அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் பிறந்தார்கள்.

    இவர்கள் சிறுவயதிலேயே தமது தந்தையின் மார்க்கக் கொள்கையை, ஓரிறைக் கொள்கையாக ஏற்றுக்கொண்டு முஸ்லிம் பெண்மணியாக நடந்து கொண்டார்கள்.

    எல்லா சூழ்நிலைகளிலும் தந்தைக்கு துணையாக, தந்தையின் சொல்படி வாழ்ந்து வந்தார்கள். தந்தையின் சொல்லும், செயலுமே நல்வழி காட்டும் என்பதை உணர்ந்து அதன்படி நடந்தார்கள்.

    தமது தாயின் மரணத்திற்கு பிறகு நபி (ஸல்) அவர்களின் சோதனையான காலகட்டங்களில் தாய்க்கு நிகராக இருந்து ஆறுதல் அளித்து வந்தார்கள். நிழலாக இருந்து தந்தையை கவனித்துக்கொண்டார்கள்.

    உஹதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களின் நடுப்பல் உடைக்கப்பட்டது. அவரது தலைக்கவசம் தலையின் மீது வைத்து நொறுக்கப்பட்டது. பாத்திமா (ரலி) தமது தந்தை நபி (ஸல்) அவர்களின் மேனியிலிருந்து வழிந்த ரத்தத்தை கழுவிக்கொண்டிருந்தார்கள். பாத்திமாவின் கணவர் அலி (ரலி) ரத்தத்தை தடுத்து நிறுத்த முயற்சித்தும் இன்னும் அது அதிகமாகிக் கொண்டே போனது. இதைப்பார்த்த பாத்திமா (ரலி) ஒரு பாயை எடுத்து, எரித்து சாம்பலாக்கி அதை நபியின் காயத்தில் வைத்து அழுத்தினார்கள். உடனே, ரத்தப் போக்கு நின்று விட்டது. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி)

    'ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கஅபாவினருகில் தொழுது கொண்டிருந்தார்கள். குரைஷிகளில் மோசமான ஒருவன், நபி (ஸல்) அவர்கள் சிரசை தாழ்த்தியபோது ஒட்டகத்தின் சாணத்தையும், ரத்தத்தையும், கருப்பையையும் எடுத்து வந்து அன்னாரின் இரு தோள் புஜத்தில் போட்டுவிட்டான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவிலேயே கிடந்தார்கள். இதைப்பார்த்து, குரைஷிகள் ஒருவர் மீது ஒரு வர்

    சாய்ந்துவிடும் அளவுக்கு சிரித்தார்கள். சிறுமியாக இருந்த பாத்திமா (ரலி) அவர் தான் அவற்றை அப்புறப்படுத்தினார். அப்புறம்தான் நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். பாத்திமா (ரலி) குரைஷிகளை ஏச ஆரம்பித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் 'இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்!' என்று மூன்று தடவை கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னுமஸ்ஊத் (ரலி), நூல்:புகாரி)

    அலி (ரலி) அவர்களுக்கும், பாத்திமா (ரலி) அவர்களுக்கும், ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ரமலான் மாதம் திருமணம் நடந்தது. அப்போது பாத்திமா(ரலி) அவர்களுக்கு 15 வயது 5 மாதங்கள் ஆகும். அலி (ரலி) அவர்களுக்கு 21 வயது 5 மாதங்கள் ஆகும்.

    பாத்திமா (ரலி) நபியின் மகள் என்பதனால் அவர்களுக்கென்று தனி சலுகைகளை நபி (ஸல்) அவர்கள் வழங்கவில்லை. 'முஹம்மதின் மகள் பாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள்! தருகிறேன். ஆனாலும், இறைவனின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னைக் காப்பாற்ற முடியாது' என நபி (ஸல்) அவர்கள் தன் மகளிடம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் தன் மகளிடம் கனிவு, பாசம் காட்டினாலும், நீதி, நேர்மையுடன் நடந்து கொண்டார்கள்.

    • ரமலான் மாதம் வந்துவிட்டால் கருணையின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.
    • மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

    `கருணையின் வாசல் திறக்கப்படும் புனித ரமலான்'

    'ரமலான் மாதம் வந்துவிட்டால் கருணையின் வாசல்கள் திறக்கப்படுகின்றன' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்) புனித ரமலானில் கருணையின் வாசல் திறக்கப்பட்டதன் பின்னணியில் தான் மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வணக்க வழிபாடுகளில் ஈடுபட வழி பிறக்கின்றன. பாவங்களில் இருந்து விலகியிருக்க வாய்ப்பு கிடைக்கின்றன.

    அன்பு மலர்கின்றன, அமைதி நிலவுகின்றன, சாந்தி பரவுகின்றன, சமாதானம் பிறக்கின்றன, சகோதரத்துவம் வளர்கின்றன. ஈவு, இரக்கம், ஈகை ஆகிய பண்புகள் பரிணமிக்கின்றன. இறைவனின் அன்பு, அவனின் தரிசனம், சொர்க்கம் இவையாவும் ஒருவரின் வணக்கத்தினால் மட்டுமே கிடைத்து விடுவதில்லை. இதற்கும் மேலாக இறைவனின் கருணை அவசியம் தேவைப்படுகிறது.

    நபி (ஸல்) அவர்கள், 'எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது, (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புக முடியும்)' என்று கூறினார்கள்.

    மக்கள், 'தங்களையுமா? (தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லையா) இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள்.

    அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஆம்), என்னையும் தான்; அல்லாஹ் தனது கருணையாலும், அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர' என்று கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி)

    ஆயிஷா (ரலி) கூறுகிறார்: 'நபி (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன்பு) என் மீது சாய்ந்தபடி, 'இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக! எனக்கு கருணை புரிவாயாக, மிக்க மேலான தோழர்களுடன் (சொர்க்கத்தில்) என்னைச் சேர்த்தருள்வாயாக!' என்று பிரார்த்திப்பதை செவியுற்றேன்.' (நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல் லாஹ் கருணையை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்குகளைத் தன்னிடம் வைத்துக் கொண்டான் (மீதியிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால்தான் குதிரை தனது குட்டியை விட்டுக் கால் குளம்பைத் தூக்கிக் கொள்கிறது'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    'அல்லாஹ் அன்பையும், கருணையையும் படைத்தபோது, அதனை நூறு வகைகளாக அமைத்தான். அவற்றில் 99 வகைகளைத் தன்னிடமே வைத்துக்கொண்டான் (மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான். எனவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளமாட்டான். (இதைப் போன்றே) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்க மாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    'ஆனால் எனது கருணை எல்லாப் பொருட்களின் மீதும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது. எனினும், அதனை பயபக்தியுடன் பேணி நடப்போருக்கும், (முறையாக) ஜகாத் கொடுப்போருக்கும், நமது வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள்செய்வேன்' (திருக்குர்ஆன் 7:156)

    இறைவனின் கருணை கிடைத்திட மேற்கூறப்பட்ட நற்செயல்களையும் சேர்த்து, புனித ரமலானில் நோன்பு நோற்றால் இறைவனின் கருணை கிடைக்கும். இறைவனின் கருணைப்பார்வை நம் மீது விழும் போது பாவ மன்னிப்பும், சொர்க்கமும் உறுதியாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரமலானில் கண்டிப்பாக நோன்பிருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.
    • சிறப்பு மிகுந்த ரமலான் நோன்பை கடைப்பிடிப்போம், நன்மைகள் பெறுவோம்.

    நோன்பின் மாண்பு ரமலான் மாதம் அரபி மாதங்களில் ஒன்பதாவது வரிசையில் இடம்பெற்ற ஓர் ஒப்பற்ற மாதமாகும். ரமலான் என்பதன் பொருள் 'கரித்தல்' என்பதாகும். ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முஸ்லிம்கள் மீது ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டது. "எவர் ரமலான் மாதம் (அல்லாஹ்வின் நற் கூலி கிடைக்கும் என்ற அவனின் வாக்குறுதியை) நம்பியும், நன்மையை நாடியும் நோன்பு இருக்கிறாரோ, அவருக்காக அவர் முன் செய்த (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    "இறை நம்பிக்கை கொண்டோரே, உங்கள் முன்னோர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருப்பது போன்று உங்கள் மீதும் விதியாக்கப்பட்டிருக்கிறது. அதனால் நீங்கள் பரிசுத்த மானவர்களாக ஆகக்கூடும்". (திருக்குர்ஆன் 2:183)

    நோன்பு யாருக்கு கடமை?

    1) முஸ்லிமாக இருக்க வேண்டும்

    2) பருவ வயதை அடைந்திருக்க வேண்டும்

    3) புத்தி சுவாதீனமுள்ளவராக இருக்க வேண்டும்

    4) சுகமுள்ளவராக இருக்க வேண்டும்.

    5) ஊரில் தங்கி இருக்க வேண்டும்

    இந்த ஐந்து அடிப்படைகளின் மீது இருப்பவர்கள், புனித ரமலானில் கண்டிப்பாக நோன்பிருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. இந்த ஐந்து அடிப்படைகளில் ஒன்றை இழந்திருந்தாலும் அவர் மீது நோன்பு நோற்பது கடமையாகாது. நோன்பு இரு வகைப்படும். அவை: கடமையான நோன்பு, உபரியான நோன்பு.

    கடமையான நோன்புகள் மூன்று பிரிவுகளாகப் பிரிகிறது. ரமலான் மாத நோன்பு, குற்றப்பரிகார நோன்பு, நேர்ச்சை நோன்பு, இம்மூன்று நோன்புகளையும் நோற்பது கடமையாகும்.

    உபரியான நபி வழி நோன்புகள் எட்டு வகைகளாக பிரிகிறது. அவை: வாரத்தில் திங்கள், மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களின் நோன்பு, மாதத்தில் பிறை 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களின் நோன்பு, முஹர்ரம் மாதம் பிறை 9, 10 ஆகிய இரண்டு நாட்களின் நோன்பு, ஷவ்வால் மாதத்தின் ஆறு நாட்களின் நோன்பு, துல்ஹஜ் மாதத்தின் 1 முதல் 9 நாட்களின் வரையுள்ள நோன்பு, ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோற்கப்படும் நோன்பு, துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய சங்கையான மாதங்களில் வைக்கப்படும் நோன்பு, ஒருநாள் நோன்பு மறுநாள் ஓய்வு ஆகிய எட்டு வகையான நோன்புகள் உபரியான நபிவழி நோன்புகளாகும்.

    கடமையான ரமலான் மாத நோன்புகளை நோற்பதற்கு, மேற்கூறப்பட்ட எட்டு வகையான நோன்புகளும் பயிற்சிக்களமாக அமைகிறது. இதனால் ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருக்க உடல் வலிமையையும், மன வலிமையையும் முஸ்லிம்கள் பெற்று சர்வ சாதாரணமாக நோன்பிருக்கிறார்கள்.

    `இன்னும் பஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலில் இருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்" (திருக்குர் ஆன் 2:187)

    இஸ்லாம் மனித உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும், அவர்களின் உரிமைகளுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் அளித்திருக்கிறது என்பதை குர்ஆனும், ஹதீஸூம் உணர்த்துகின்றன. நோன்பு வைத்திருக்கும் பகல் வேளையில் மட்டுமே உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் போன்ற செயல்கள் கூடாதே தவிர இரவு நேரங்களில் அல்ல. பகல் இறைவனுக்கு, இரவு நமக்கே. இறைவனுக்காக இருக்கும் உண்ணாவிரதம், மனித உணர்ச்சிக்கு ஒருபோதும் தடையில்லை. சிறப்பு மிகுந்த ரமலான் நோன்பை கடைப்பிடிப்போம், நன்மைகள் பெறுவோம்.

    • தருமபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து மசூதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • அந்தந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

    தருமபுரி,

    முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

    கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்பட்டது.

    இந்த ஆண்டு நோய்தொற்று குறைந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். தொழுகை முடிந்து ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.தருமபுரி நகர அனைத்து மசூதிகளின் கூட்டமைப்பின் சார்பில் தருமபுரி-கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ஈத்கா ஏரிக்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். சிறப்பு தொழுகை முடிந்த பின்னர் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் நல் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    தொடர்ந்து முஸ்லிம்கள் ஏழைகளுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதேபோன்று தருமபுரி டேகிஸ்பேட்டை, கீழ் மசூதி தெரு, முகமது அலி கிளப் ரோடு, மதிகோன்பாளையம், வி.ஜெட்டிஅள்ளி, வட்டார வளர்ச்சி காலனி ஆகிய இடங்களில் உள்ள மசூதிகள் மற்றும் தருமபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து மசூதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

    இதேபோல் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான தொப்பூர், பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், பாப்பா ரப்பட்டி, ஏரியூர், கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெ ட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், மாரண்டஅள்ளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    • கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து 2 மணி நேரம் நிறுத்தம்
    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிக்கு எப்போதும் சுற்றுலா பயணிகள் வந்து பல்வேறு இடங்களை பார்த்து மகிழ்வதுண்டு. அதுவும் விடுமுறை நாட்களில் இங்கு கூட்டம் அதிகமாக காணப்படும். அதன்படி ரம்ஜான் மற்றும் தொடர் விடுமுறை காலம் என்பதால் இன்று கன்னி யாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர்.

    அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர். தொடர்ந்து கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    ஆனால் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் படகு போக்குவரத்து திட்டமிட்டபடி தொடங்கப்பட வில்லை. 2 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு காலை 10 மணிக்கு தான் படகு போக்குவரத்துத்து தொடங்கப்பட்டது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்டன் பயணம் செய்து விவேகானந்தர்மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப்பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட்பாயிண்ட் கடற்கரை பகுதி, கலங்கரை விளக்கம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இன்று ரம்ஜான் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் உள்ள முஸ்லிம் பள்ளி வாசல்களிலும் தொழுகை நடத்த ஏராளமானோர் திரண்டனர்.

    இதற்கிடையில் கடல் சீற்றம் மற்றும் வானிலை மாற்றம் காரணமாக கன்னியாகுமரி, சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, கோவளம், கீழமணக் குடி, மணக்குடி ஆகிய கடற்கரை கிராமங்களைச்சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. நூற்றுக்க ணக்கான கட்டுமரம் மற்றும் வள்ளங்கள் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மீன்வரத்து இல்லாததால் மீன் சந்தைகளும் களை இழந்து காணப்பட்டன.

    • ரமலான் நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகும்.
    • தொழுகைக்கு பின் அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.

    திருப்பூர்:

    இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான பண்டிகை ரம்ஜான் ஆகும். ஈகைத் திருநாளாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகும். ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருந்த பிறகு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்திற்கு உட்பட்ட மங்கலம் , பல்லடம் ,உடுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமிய மக்கள் சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் சார்பில் சிறப்பு கூட்டுத்தொழுகை நடைபெற்றது . இதில் ஆண்கள் , பெண்கள் , குழந்தைகள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் . தொழுகைக்கு பின் அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர் . இதைப்போல் பெரிய தோட்டம் கே .ஜி. கார்டன் , செரங்காடு, கோம்பை தோட்டம் உள்ளிட்ட 27 இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் 2துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் திருப்பூர் மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ரம்ஜானையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். மேலும் தங்களது நண்பர்கள்,உறவினர்களுக்கு பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்கினர்.

    • கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் காலத்தில் இருந்து, தி.மு.க. எப்போதுமே இஸ்லாமிய மக்களுக்கு துணையாக நின்று கொண்டு இருக்கிறது.
    • இஸ்லாமிய மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து களத்திற்கு வருவது தி.மு.க தான்.

    சென்னை:

    சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பாரிமுனையில் ரம்ஜான் பண்டிகை பெருநாள் விழா சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 2 ஆயிரம் இஸ்லாமிய குடும்பங்களுக்கு பிரியாணி அரிசி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மற்ற இயக்கங்களுக்கும் தி.மு.க.வுக்கும் இருக்கும் வித்தியாசம் உங்களுக்கே புரியும். தேர்தல் நடக்க இருப்பதால் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யும் இயக்கமல்ல தி.மு.க. வருடம் முழுவதும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். எப்போதுமே மக்களுடன் இருக்கும் இயக்கம். குறிப்பாக இஸ்லாமிய மக்களுடன் நெருக்கமாக இருக்கும் இயக்கம்.

    கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் காலத்தில் இருந்து, தி.மு.க. எப்போதுமே இஸ்லாமிய மக்களுக்கு துணையாக நின்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வது என்னுடைய குடும்ப விழாவில் கலந்து கொள்ளும் உணர்வை தருகிறது. நம்முடைய தமிழ்நாடு என்பது திராவிட இயக்கத்தால் பண்படுத்தப்பட்ட மண். இஸ்லாமிய மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து களத்திற்கு வருவது தி.மு.க தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தயாநிதிமாறன் எம். பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றி அழகன், மேயர் பிரியா, பேராசிரியர் அப்துல் காதர், துறைமுகம் பகுதி செயலாளர்கள் முரளி, ராஜசேகர், மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, கவுன்சிலர் பரிமளம், வட்ட செயலாளர்கள் பார்த்திபன், கவியரசு, பரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரமலான் என்பது இஸ்லாமியர்களுக்கு மிகவும் புனிதமான காலமாகும்.
    • இறை நம்பிக்கையுடன் நபிகள் நாயகத்தின் தியாகம், நன்மை, ஒழுக்கநெறி உள்ளிட்ட நற்செயல்களை அனைவரும் கடைபிடித்து நல்வழியில் பயணிப்போம்

    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை இன்பமுடன் கொண்டாடும் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம் உலகிற்கு பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்து, இந்த இனிய திருநாளில், என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், எனது உளமார்ந்த ரம்ஜான் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி:-

    இந்த இனிய ஈகைத் திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, அதற்கு முன்னர் ஏழைகளுக்கு 'சதக்கத்துல் பித்ர்' என்னும் பெருநாள் கொடை வழங்கி, அனைவருடனும் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-

    இறைத்தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிலைநிறுத்தி; உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி; தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, இறைவனை வழிபட்டு, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியப் பெருமக்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.

    இந்த இனிய திருநாளில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ந்து கொண்டாடி மகிழ்ந்திடும் இந்த நன்னாளில் மனித சமுதாயத்தில் அன்பு, வாய்மை, வாஞ்சை, நேர்மை, பொறுமை, திறமை, ஒற்றுமை, மனிதநேயம், சகோதரத்துவம் பெரிதும் வளர்ந்தோங்கிட இனிய ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

    இஸ்லாம் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போதிக்கிறது.

    இறை நம்பிக்கையுடன் நபிகள் நாயகத்தின் தியாகம், நன்மை, ஒழுக்கநெறி உள்ளிட்ட நற்செயல்களை அனைவரும் கடைபிடித்து நல்வழியில் பயணிப்போம். இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    உலககெங்கும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க இந்த புனிதமான நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-

    நன்மைக்கான போதனைகளை யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் தேவையில்லை. இதை உணர்ந்து உலகில் அமைதி, வளம், மகிழ்ச்சி, கல்வி, வளர்ச்சி நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகுவதற்காக பாடுபடுவதற்கு இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.

    கடந்த ஒரு திங்களாக பசி, தாகத்தை அடக்கி உண்ணா நோன்பிருந்த இஸ்லாமிய பெருமக்கள் இன்று 'ஈதுல் பித்ர்" என்னும் ஈகைத் திருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடி திளைக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    டி.டி.வி.தினகரன்

    சமாதானம், சகோதரத்துவம் சிறக்கட்டும், சமூக நல்லிணக்கம் என்றும் நம்மிடம் தழைக்கட்டும் என இறைவனை வேண்டி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கின்றேன்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    இஸ்லாமிய நாட்காட்டியின் 9 வது மாதமான புனித ரமலான் மாதத்தில், இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளுள் ஒன்றான ரமலான் நோன்பினை மெய்வருத்தி கடைபிடித்து, "இல்லாரும், இருப்போரும் ஒன்றே" என்ற தத்துவத்தை வெளிப்படுத்தும், இஸ்லாமிய சொந்தங்களுக்கு ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    உலகமெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும், உதவி செய்யும் மனப்பான்மையுடனும் இஸ்லாமியர்களின் கடமைகள் 5-ஐயும் தவறாமல் கடைப்பிடித்து வாழ்ந்து உலக மக்கள் அனைவரிடத்திலும் சமத்துவம் மற்றும் சகோதரத்துடனும் பாசத்துடனும் இயன்றதை செய்வோம் இல்லாதோருக்கு என்று லட்சியத்தோடு வாழ்ந்திட இந்த புனிதமான ரமலான் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்திட வாழ்த்துகிறேன்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    ரமலான் என்பது இஸ்லாமியர்களுக்கு மிகவும் புனிதமான காலமாகும். எவ்வித ஜாதி, மத, பேதமில்லாமல் அனைவருக்கும் இந்த ரமலான் பண்டிகையில் உதவி செய்து வரும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்பு ஓங்குக, அறம் தழைத்திடுக! சமாதானம் நிலவிடுக, சகோதரத்துவம் வளர்ந்திடுக! என்று கூறி என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் என் உளங்கனிந்த ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் யாதவ்:-

    நபிகள் நாயகத்தின் போதனைகள், கோட்பாடுகளை ஜாதி மதங்களை கடந்து நாம் அனைவரும் என்றென்றும் கடைபிடிக்க ரமலான் திருநாளில் உறுதியோம். சமய நல்லிணக்கத்தை கட்டிக்காக்க அனைவரும் உறுதி கொள்வோம். அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.

    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது:-

    சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், சமய நல்லிணக்கம் மலர்ந்து, மக்கள் அனைவரும் பொருளாதார தன்னிறைவு அடைந்து, நாட்டில் என்றும் அமைதி நிலவ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம். அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்.

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரர்கள் சங்க அகில இந்திய தலைவர் டாக்டர் வி.என்.கண்ணன்:-

    சகோதரத்துவத்துடன் 1 மாதம் நோன்பிருந்து ரம்ஜான் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் இனிய ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    • விவசாயிகள் மேச்சேரி வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • செம்மறி ஆட்டு குட்டிகள் ரூ. 1500-க்கு விற்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரியில் வார சந்தை நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இங்கு வழக்கத்தை விட ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.

    விவசாயிகள் மேச்சேரி வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் செம்மறி ஆடுகள் விலை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ செம்மறி ஆடு ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது.

    செம்மறி ஆட்டு குட்டிகள் ரூ. 1500-க்கு விற்கப்பட்டது. வெள்ளாடு ரூ.15 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இந்த சந்தையில் ரூ.20 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் 10 கிலோ செம்மறி ஆடு ரூ.5,500 முதல் ரூ.6,500 வரை விற்பனையானது. ஆனால் இந்த வாரம் கிடுகிடுவென விலை உயர்ந்தது.

    ரம்ஜானை முன்னிட்டு பிரியாணி ருசிக்கு செம்மறி ஆடுகளே அதிகம் விற்பனையாகும். தேவை அதிகரித்த நிலையில், செம்மறி ஆடுகளின் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.
    • ஆடுகள் அதிக அளவில் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேலை சாலையில் ஆட்டு சந்தையில் நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இங்கு வழக்கத்தை விட ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.

    குறிப்பாக ஆயக்கரம்பலம், வேதாரண்யம், கட்டிமேடு ஆலத்தம்பாடி, துளசிப்பட்டணம் வடபாதி ஆதிரங்கம் கச்சனம் மணலி வேலூர் முத்துப்பேட்டை ஆலங்காடு மருதவனம் கலப்பால் பல்லாங் கோயில் மேட்டுப்பாளையம் விளக்குடி கோட்டூர் போன்ற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் சுமார் ரூ. 25 லட்சத்துக்கு மேல் ஆடுகள் வியாபாரம் ஆனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×