search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் கண்காணிப்பு"

    • கடற்கரையையொட்டி உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் மீது ராட்சத அலைகள் வேகமாக மோதியது.
    • கடல் சீற்றமாக காணப்பட்டதையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் வருகிற 7-ந்தேதி வரை கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குமரி மாவட்டத்தில் வருகிற 7-ந்தேதி வரை அனைத்து கடற்கரை கிராமங்களிலும் கடல் வழக்கத்தை விட சீற்றமாக காணப்படும். காற்றின் வேகம் 35 முதல் 45 கிலோமீட்டர் வரையிலும் சில நேரங்களில் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பான அறிவிப்பு குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலமாகவும், பங்கு தந்தைகள் மூலமாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் நேற்று மாலை கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. கணபதிபுரம் லெழூர் கடற்கரையில் நேற்று மாலை சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு வந்திருந்தார்கள்.

    போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள். முட்டம், தேங்காய்பட்டினம் உட்பட கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். இன்று மாவட்டம் முழுவதும் கடல் சீற்றமாகவே இருந்தது. ராட்சத அலைகள் எழும்பியது.

     

    கன்னியாகுமரி கடற்கரையில் வள்ளங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

    கன்னியாகுமரி கடற்கரையில் வள்ளங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

    கடற்கரையையொட்டி உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் மீது ராட்சத அலைகள் வேகமாக மோதியது. கடல் சீற்றமாக காணப்பட்ட தையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் வள்ளல்கள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. குளச்சல், சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து ஒரு சில விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலோர காவல் படை போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • அருவிக்கரையில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கோடை மழை ஒரு சில பகுதிகளில் கனமழை யாகவும், சில இடங்களில் சாரலாகவும் பெய்து வருகிறது. காலையில் இருந்து வானம் மேக மூட்டமாக காணப்படும் நிலையில் பிற்பகலில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. குறிப்பாக மணிமுத்தாறு அணை பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    பிற்பகலில் தொடங்கிய மழை இரவு வரையிலும் நீடித்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு அதிகபட்சமாக 5.2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளிலும் கனமழை பெய்தது. பிரதான அணையான பாபநாசத்தில் 15 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. கன்னடியன் கால்வாய் பகுதிகளிலும் பலத்த மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. அணைகளுக்கு நீர் வரத்து பெரிய அளவில் இல்லை என்றாலும் கோடை மழையால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் களக்காடு, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக களக்காடு, திருக்குறுங்குடி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் தலையணை அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.

    களக்காட்டில் அதிக பட்சமாக 22.6 மில்லி மீட்டரும், மூலக்கரைப் பட்டியில் 29 மில்லி மீட்டரும் மழை பெய்தது. சேரன்மகாதேவி, முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில் அம்பையில் கனமழை பொழிந்தது. வி.கே.புரம், பாபநாசம், அகஸ்தியர்பட்டி, சிவந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.அம்பையில் 17 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    இதற்கிடையே வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பில் வருகிற 22-ந்தேதி வரையிலும் நெல்லை மாவட்டத்தில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க செல்லவேண்டாம் என கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை நீடித்து வரும் நிலையில், இன்று முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று மாவட்டத்தில் முழுமையாக அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த ஒரு வாரமாகவே அங்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் வரை பழைய குற்றாலம் அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பழைய குற்றாலத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    உடனே சுற்றுலா பயணிகள் அனைவரும் அருவியில் இருந்து வெளியேறிய நிலையில் வெள்ளம் திடீரென அருவியின் படிக்கட்டு பகுதிகளிலும் நிரம்பி ஓடியது. இந்த வெள்ளப் பெருக்கின்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த நெல்லையை சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தான்.

    தீயணைப்பு துறையினர் அவரது உடலை சுமார் 500 அடி தூரத்தில் பாறை இடுக்கில் மீட்டனர். தகவல் அறிந்து அங்கு கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் விரைந்து வந்தனர். தொடர்ந்து பழைய குற்றாலம், மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு கலெக்டர் தடை விதித்தார்.

    மேலும் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் யாரும் அருவிக்கரைக்கு வர வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும் மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 அல்லது 04633 290548 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    இதற்கிடையே மேற்கொண்டு அசம்பாவி தங்கள் நடைபெறாமல் இருக்க பழைய குற்றாலம் அருவியின் அருகே இரும்பு பேரிகார்டுகள் வைக்கப்பட்டு அருவிக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டது. மேலும் பாதுகாப்புக்காக அருவிக்கரையில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் நேற்று வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அணைகளை பொறுத்தவரை ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 6 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. கருப்பாநதி, கடனா நதி நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

    மாலை 3 மணிக்கு பிறகு சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அங்கு இன்று காலை நிலவரப்படி 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    இன்றும் அதிகாலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. குளிர்ந்த சூழ்நிலை நிலவியதோடு மூடு பனியும் நிலவியது. இன்று காலையில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி நிலவியது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன.

    • அனைத்து வாகனங்களும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது.
    • சரக்கு லாரிகளை நிறுத்தி போலீசார் மேலே ஏறி பார்வையிடுகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அய்யங்குன்னு இடிப்பகுற்றி வனப்பகுதியில் கடந்த 13-ம் தேதி போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது போலீசாரின் துப்பாக்கி சூட்டை சமாளிக்க முடியாமல் மாவோயிஸ்டுகள் 3 துப்பாக்கிகளை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ், வசந்த் என்கிற ரமேஷ், கேரளாவை சேர்ந்த சேர்மன் மற்றும் மனோஜ் என்கிற ஆஷிக், கர்நாடகாவை சேர்ந்த ஜிஷா மற்றும் விக்ரம் கவுடா ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க கேரளா போலீசார், கர்நாடகா நக்சல் தடுப்பு பிரிவு, தமிழக கியூ பிரிவு போலீசார் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். தமிழக-கர்நாடகா மாநில எல்லையான ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் வழியாக கர்நாடகாவுக்கு தப்பி செல்லலாம் என்பதால் அங்குள்ள சோதனை சாவடிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் முதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ் முருகன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3-வது நாளாக சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் இருந்து பர்கூர், அந்தியூர் வழியாக ஈரோடு செல்லக்கூடிய அனைத்து பஸ்கள் கார் மற்றும் சரக்கு வாகனங்களையும், தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஈரோடு, அந்தியூர், பர்கூர் வழியாக மைசூரு செல்லக்கூடிய அனைத்து கார் பஸ் மற்றும் சரக்கு வாகனங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

    மேலும் அனைத்து வாகனங்களும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது. பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளிடம் தப்பி ஓடிய மாவோயிஸ்டுகள் போட்டோவை காண்பித்து இவர்களை பார்த்தால் போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    இதேபோல் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான கார பள்ளம் சோதனை சாவடி, பாரதி புரம், எல்ல கட்டை சோதனை சாவடி, பண்ணாரி சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக இரவு நேரங்களில் வரும் வாகனங்களை நிறுத்தி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சரக்கு லாரிகளை நிறுத்தி போலீசார் மேலே ஏறி பார்வையிடுகின்றனர். பண்ணாரி சோதனை சாவடி வழியாக ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான கர்நாடகா சரக்கு வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. எனவே இந்த வாகனங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணிக்கு தொடங்கும் கண்காணிப்பு பணி இரவு 11 மணி வரை நீடிக்கிறது
    • குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசிவம், விஜயபாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் சவுக்கு கட்டைகள், பலகைகளால் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    தாராபுரம்:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் பெரும்பாலும் தீபாவளிக்கு புத்தாடைகள், தங்க நகைகள், பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பெரிய கடைவீதி, ஜவுளி கடை வீதி, பொள்ளாச்சி ரோடு, சின்னக்கடை வீதி ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள், நகை கடைகள் மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்டத்தை தவிர்க்கவும், சீரான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் நகரின் மையப்பகுதியான பூக்கடைக்கார்னரில் தாராபுரம் கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கலையரசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் (சட்டம்-ஒழுங்கு), சஜினி (போக்குவரத்து), குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசிவம், விஜயபாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் சவுக்கு கட்டைகள், பலகைகளால் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாத வண்ணம் 24 மணி நேரமும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தையும், பொதுமக்கள் நடமாட்டத்தையும தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணிக்கு தொடங்கும் கண்காணிப்பு பணி இரவு 11 மணி வரை நீடிக்கிறது. போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில் "பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க பொதுமக்கள் தங்களது பணம் மற்றும் நகைகள்,செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினர். 

    • 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கொண்ட குழுவினர் இந்த தனிப்படையில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
    • ஜேடர்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இனிமேல் வன்முறை நடக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்கிருந்த குடியிருப்பிற்கு கடந்த 13-ந் தேதி மர்மநபர்கள் தீ வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 2 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் கரூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜேடர்பாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் 14 வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் புதிதாக 14 தற்காலிக போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இரவு நேரங்களில் சோதனை சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி விசாரணை நடத்தி அவர்களுடைய முகவரிகளை கேட்டு எழுதப்பட்ட பின்னரே அவர்களை அனுப்பி வைக்கின்றனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம், முதற்கட்டமாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனிடையே நேற்று மேலும் 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கொண்ட குழுவினர் இந்த தனிப்படையில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரியில் இருந்து 600 போலீசார் வரவழைக்கபட்டு, மொத்தம் 750 போலீசார் ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் கரும்பு ஆலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், நாமக்கல் எஸ்.பி கலைச்செல்வன், ஈரோடு எஸ்.பி சக்திகணேசன் உள்ளிட்டோர் வெல்ல ஆலைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இது குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் கூறியதாவது:- ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் 20 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்காலிக சோதனை சாவடிகள் மற்றும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மேற்கு மண்டலத்தில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும், மேற்கு மண்டலத்தில் கள்ளசாராயம் விற்பனை ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார்.

    மேலும் ஜேடர்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இனிமேல் வன்முறை நடக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×