search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்ஸ்ட்ராங்"

    • கூவம் ஆற்றில் வீசப்பட்ட மற்ற செல்போன்களையும் மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
    • தீயணைப்புத் துறையினர் மற்றும் ஸ்கூபா குழுவினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதான ரவுடி திருவேங்கடம் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளுக்கு உதவியதாக கடம்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க.கவுன்சிலர் ஹரிதரன் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே சிக்கிய வக்கீல்களான ஹரிகரன், அருள் ஆகிய 2 பேருக்கும் ஹரிதரன் நண்பர்களாக இருந்து உள்ளார். அவர்கள் கூறியபடி கொலைகுற்றவாளிகள் பயன்படுத்திய 6 செல்போன்களை ஹரிதரன் வெங்கத்தூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முதல் கூவம் ஆற்றில் தீயணைப்பு வீரர்களுடன், தண்ணீரில் மூழ்கி தேடும் ஸ்கூபா குழுவினரும் இணைந்து தேடினர். இதில் 3 செல்போன்கள் மட்டும் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கூவம் ஆற்றில் வீசப்பட்ட மற்ற செல்போன்களையும் மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இன்று காலை முதல் 2-வது நாளாக மெரினா மீட்பு குழுவினர், திருவூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் ஸ்கூபா குழுவினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். காலை 6.30 மணிமுதல் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழி தீர்த்த அவரது தம்பி பொன்னை பாலு ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஓராண்டாக திட்டம் தீட்டி வந்துள்ளார்.
    • அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் மலர்க்கொடியும் தனது கணவர் தோட்டம் சேகர் கொலையுண்டதற்கு ஆம்ஸ்ட்ராங்கும் ஒரு காரணம் என்று எண்ணி இருந்ததாக தெரிகிறது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த போலீசார் அது தொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, குன்றத்தூர் திருவேங்கடம் உள்பட 11 பேரை கைது செய்தனர்.

    இவர்களில் திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்ட நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சூடு பிடித்து ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ரவுடிகள் பலர் பெரிய அளவில் சதி திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இந்த கொலை வழக்கில் அரசியல் பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு இருப் பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பிரமுகர்களான மலர்க்கொடி, ஹரிஹரன், தி.மு.க. பிரமுகரான அருள், த.மா.கா.வை சேர்ந்த ஹரிஹரன், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு இவர்கள் பல்வேறு வழிகளில் உதவிகளை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய திருப்பமாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவரிடம் போலீசார் அதிரடி விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    திருவள்ளூரை சேர்ந்த அவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க. கவுன்சிலரான ஹரிஹரனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

    அந்த அடிப்படையிலேயே தே.மு.தி.க. நிர்வாகியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவருக்கும் தொடர்பு இருந்தால் அவரை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    தே.மு.தி.க. நிர்வாகியுடன் ஜல்லிமேடு பகுதியை சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 5 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இவர்களில் வக்கீல் ஒருவரும் உள்ளார். இவர்களை தவிர, மேலும் பலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான பெண் தாதா அஞ்சலையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரவுடிக் கும்பலை சேர்ந்தவர்கள் கூட்டாக சதி செய்து ஆம்ஸ்ட்ராங்கை கொன்றிருப்பது அம்பலமாகி உள்ளது.

    ரவுடி ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழி தீர்த்த அவரது தம்பி பொன்னை பாலு ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஓராண்டாக திட்டம் தீட்டி வந்துள்ளார்.

    அதே நேரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் மலர்க்கொடியும் தனது கணவர் தோட்டம் சேகர் கொலையுண்டதற்கு ஆம்ஸ்ட்ராங்கும் ஒரு காரணம் என்று எண்ணி இருந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஆயுள் கைதியான வடசென்னை தாதாவும் ஆம்ஸ்ட்ராங் மீது கண் வைத்திருந்துள்ளார். இப்படி 3 ரவுடிக் கும்பலை சேர்ந்தவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திரைமறைவில் திட்டம் தீட்டி வந்த நிலையில் ஆற்காடு சுரேசின் கொலையால் நிலை குலைந்து போயிருந்த பெண் தாதா அஞ்சலையும் அவர்களோடு கை கோர்த்து செயல்பட்டிருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இப்படித்தான் ஆம்ஸ்ட்ராங் நாலா புறமும் உள்ள ரவுடிகளால் சுற்றி வளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது காவல் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    இதையடுத்து போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்ய தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் போலீஸ் விசாரணை விரிவடைந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் பல அரசியல் பிரமுகர்களும், ரவுடிக் கும்பலை சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட உள்ளனர். இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரும் தப்ப முடியாது என்று தெரிவித்தார்.

    • பெண் தாதாவான அஞ்சலை ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு ரூ.10 லட்சம் பணத்தை வழங்கி இருப்பதாக தகவல்.
    • புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் அஞ்சலையின் பெயர் உள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ரவுடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் போலீசாரால் தேடிவரப்பட்ட பெண் தாதாவான அஞ்சலை புளியந்தோப்பில் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஒட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    பெண் தாதாவான அஞ்சலை ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு ரூ.10 லட்சம் பணத்தை வழங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில் போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்தனர்.

    புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் அஞ்சலையின் பெயர் உள்ளது. கந்து வட்டி வசூலிப்பது தொடர்பாக அவர் மீது புகார்கள் உள்ள நிலையில் பி.வகை ரவுடிகள் பட்டியலில் அஞ்சலை இடம் பெற்றிருக்கிறார். இந்த கொலை வழக்கில் அஞ்சலைக்கு தொடர்பு இருப்பதை தொடர்ந்து பாஜக அவரை கட்சியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

    அஞ்சலையைத் தொடர்ந்து மேலும் இரண்டு ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஐஸ் ஹவுஸை சேர்ந்த எல்லப்பன் என்ற ரவுடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைவாசிகளுக்கு வெளியில் இருந்து பண உதவி, சிறைவாசிகளிடம் இருந்து வெளியில் தகவல்களை கூறுபவராக எல்லப்பன் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

    • ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டே இருப்பதால் போலீஸ் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
    • வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலேயே ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ளனர்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த ஆண்டு சென்னையில் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, குன்றத்தூரை சேர்ந்த திருவேங்கடம் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் மற்ற 10 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங் தீர்த்துக்கட்டப்பட்டு விட்டதாக போலீசார் முதலில் கூறி இருந்தனர். ஆனால் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் ஆற்காடு சுரேசின் கொலை சம்பவம் மட்டுமே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் இல்லை என்பதும் பல்வேறு காரணங்கள் இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வடசென்னையை சேர்ந்த பிரபல தாதா, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்டு சிறையில் இருந்து சதி திட்டம் தீட்டி கொடுத்திருப்பதும், அதற்கு பின்னணியில் வெளியில் இருந்து குட்டி, குட்டி தாதாக்கள் பலரும் உதவி செய்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


    இதையடுத்து அ.தி.மு.க.வை சேர்ந்த மலர்க்கொடி, த.மா.கா.வை சேர்ந்த அரிகரன் ஆகியோரும் இந்த வழக்கில் கூடுதலாக கைது செய்யப் பட்டனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திரைமறைவில் இருந்து இவர்கள் பல்வேறு உதவிகளை செய்து கொடுத்திருப்பதும் அம்பலமாகி உள்ளது. மயிலாப்பூரில் கொலை செய்யப்பட்ட தோட்டம் சேகரின் மனைவியான மலர்க்கொடி தனது கணவர் கொலை செய்யப்படுவதற்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என்று கருதி செயல்பட்டு வந்துள்ளார்.

    இதன் தொடர்ச்சியாகவே, கொலை சம்பவத்துக்கு அவர் ரூ.50 லட்சம் பணத்தை வாரி வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபல பெண் தாதாவான அஞ்சலையும் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு ரூ.10 லட்சம் பணத்தை வழங்கி இருப்பதாகவும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதை தொடர்ந்து அஞ்சலையை கைது செய்ய போலீசார் தேடினார்கள். இதனால் அவர் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார்.

    புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் அஞ்சலையின் பெயர் உள்ளது. கந்து வட்டி வசூலிப்பது தொடர்பாக அவர் மீது புகார்கள் உள்ள நிலையில் பி.வகை ரவுடிகள் பட்டியலில் அஞ்சலை இடம் பெற்றிருக்கிறார்.

    போலீஸ் தேடுவதை அறிந்ததும் அஞ்சலை தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். சென்னையில் அவர் எங்காவது பதுங்கி இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் பல இடங்களில் போலீசார் தேடினார்கள். ஆனால் அஞ்சலை எங்கும் இல்லை.


    சென்னையை விட்டு அவர் தப்பி ஓடி விட்டதை போலீசார் உறுதி செய்துள்ளனர். அஞ்சலைக்கு ஆந்திராவில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் அங்கு சென்று யாருடைய வீட்டிலாவது பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பாஜக பிரமுகரான அவர் கட்சி செல்வாக்கை பயன்படுத்தி அதன் மூலமாக முக்கிய பிரமுகர்கள் யாருடைய வீட்டிலாவது தஞ்சம் புகுந்துள்ளாரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதைத் தொடர்ந்து அஞ்சலையை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். அதே நேரத்தில் சென்னையில் உள்ள அவரது நெருங்கிய உறவினர்கள் சிலரை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அஞ்சலையின் மருமகன் ஒருவரிடம் விசாரணை நடத்திய போலீசார் எப்போது அழைத்தாலும் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என்று எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

    இவரை போல அஞ்சலையின் உறவினர்கள் பலரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    இதற்கிடையே ஆற்காடு சுரேசின் வலது கரமாக செயல்பட்ட தாம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட உடன், 'ஆம்ஸ்ட்ராங்கை கொல்லாமல் விட மாட்டேன்' என்று அந்த ரவுடி சபதம் எடுத்துள்ளான். ஆம்ஸ்ட்ராங் கொலையில் அந்த ரவுடியும் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் அந்த ரவுடிகளையும் அவனது கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    இவர்களை போன்று ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய மேலும் பல ரவுடிகளுக்கும் போலீசார் வலை விரித்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடிக் கும்பலை சேர்ந்த ரவுடிகள் பலரும் ஆந்திராவுக்கு தப்பி ஓடி சென்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இப்படி ஆம்ஸ்ட்ராங் கொலையில் தோண்ட தோண்ட பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டே இருப்பதால் போலீஸ் விசாரணையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    கொலை பின்னணியின் முழு நெட்வொர்க்கையும் போலீசார் அலசி ஆராய்ந்து வருகிறார்கள். இதில் மேலும் பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆம்ஸ்ட்ராங்கை பெரம்பூரில் அவரது இடத்தில் வைத்தே கொலையாளிகள் திட்டம் போட்டு தீர்த்து கட்டி இருப்பது அவரது ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட போது அவரது உடலை பார்த்து கதறி அழுத பலர் "கூடவே இருந்தும் உங்களை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே அண்ணா, யாரையும் சும்மா விட மாட்டோம்" என்று கூறி கதறி அழுதனர்.

    இதைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் பலர் 'பழிக்குப்பழி நிச்சயம்'என சமூக வலை தளங்களிலும் கருத்துக்களை பதிவிட்டனர். "16-வது நாளில் நிச்சயம் பழி தீர்ப்போம்" என்றும் சிலர் சபதம் எடுத்து செயல்பட்டு வருவதாகவும் போலீசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

    ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு நாளை 16-வது நாளாகும். எனவே பழிக்குப்பழியாக சென்னையில் மேலும் ஒரு கொலை சம்பவம் அரங்கேறிவிடக் கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனமுடன் உள்ளனர்.

    வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலேயே ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ளனர். நாளை 16-ம் நாள் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதால் சென்னை, திருவள்ளூரில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ரவுடிகள் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • அனைவரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • 3 பேரிடம் கூடுதல் தகவல்களை திரட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை, அருள் என 11 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    இதனை அடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட 11 பேரையும் பூந்தமல்லி சிறையில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்று ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தான் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    மீதமுள்ள 10 பேரிடமும் விசாரணை முடிக்கப்பட்டு நேற்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்பு போலீசார் மீண்டும் ஆஜர்படுத்தினர். பின்னர் அனைவரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு மற்றும் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த திருமலை மற்றும் அருள் ஆகிய 3 பேரிடம் கூடுதல் தகவல்களை திரட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக புதியதாக எழும்பூர் கோர்ட்டில் விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    • படுகொலை தொடர்பாக 11 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.
    • ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அண்மையில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து, இந்த படுகொலை தொடர்பாக 11 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர். அப்பொழுதே, உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டுமென்ற குரல் ஓங்கி ஒலித்தது.

    இந்த நிலையில், இந்த கொலை வழக்கின் விசாரணைக் கைதியான குன்றத்தூரைச் சேர்ந்த ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வழக்கு நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறும் வகையில், இதனை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டார்.
    • பரிசோதித்த மருத்துவர்கள் திருவேங்கடம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் இன்று போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இதுதொடர்பாக சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடம், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற, மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.

    செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீசார் வாகனத்தை நிறுத்தினர்.

    வாகனத்தை நிறுத்தியபோது பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பி ஓடினார்.

    உடனடியாக பாதுகாவலராக சென்ற காவலர்கள் திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை.

    வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது, மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார்.

    உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டார்.

    காயமடைந்த திருவேங்கடம் உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திருவேங்கடம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    M3 புழல் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற நடுவர் விசாரணைக்காக முதல் தகவல் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க சில அரசியல் கட்சிகள் சதி செய்கின்றன.
    • ஆம்ஸ்ட்ராங் கொலையை சிபிஐ விசாரிக்க பாஜக வலிந்து கூறுகிறது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் இன்று சந்தித்தார். அப்போது அவர்,

    பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளன் கூறுகையில்,

    * தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை கெடுத்து பிரச்சனைகளை உருவாக்க சில கட்சிகள், அமைப்புகள் சதி செய்கின்றன.

    * தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க சில அரசியல் கட்சிகள் சதி செய்கின்றன.

    * பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையிலும் அரசியல் சதி இருப்பதாக விசிக கட்சி சந்தேகிக்கிறது.

    * ஆம்ஸ்ட்ராங் பலியான சில நிமிடங்களிலேயே பாஜவை சேர்ந்த ஒருவர் சிபிஐ விசாரணை வேண்டும் என பேட்டி தருகிறார்.

    * எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் விசாரிக்க கூடாது என கூறியது ஏன்?

    * ஆருத்ரா கோல்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் பாஜகவில் பொறுப்பில் உள்ளார்கள் என ஒரு வருடத்திற்கு மேல் பேசப்பட்டு வருகிறது.

    * ஆருத்ரா மோசடியில் தொடர்புடையவர்கள் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    * ஆம்ஸ்ட்ராங் கொலையை சிபிஐ விசாரிக்க பாஜக வலிந்து கூறுகிறது.

    * கலைஞர் குறித்து கொச்சையாக விமர்சித்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்கின்றனர்.

    * நீட் தேர்வு முறைகேடு உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் அதை மறைக்க பாஜக முயற்சித்து வருகிறது.

    * புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம் மேற்கொள்ள ஆணையம் அமைத்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு என்று அவர் தெரிவித்தார்.

    • கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
    • இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவையொட்டி, பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி பொற்கொடிக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.

    கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.

    இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்! என கூறியுள்ளார்.

    • செய்திகள் அடிப்படையில் தாமாக முன் வந்து பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
    • தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கும் பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி.க்கு பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    செய்திகள் அடிப்படையில் தாமாக முன் வந்து பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? விசாரணை நிலவரம் குறித்து ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

    மேலும், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கும் பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • ரவுடி ஒழிப்பு நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.
    • சென்னையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரவுடி ஒழிப்பு நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.

    தமிழகம் முழுவதும் 21 ஆயிரம் ரவுடிகள் இருப்பதாக கணக்கிட்டு போலீசார் ஏற்கனவே தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சென்னையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட உள்ளன.

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரை ஒழித்துக்கட்ட புதிய போலீஸ் கமிஷனர் அருண் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

    அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உள்ள சரித்திர பதிவேடுகளை தூசு தட்டுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார். போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வரும் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றவர்களில் யார்-யார் எங்கு இருக்கிறார்கள்? அவர்களின் தற்போதைய நிலை என்ன? என்பது பற்றிய விவரங்களை புள்ளி விவரத்தோடு பட்டியல் போட்டு வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஏ.பிளஸ், ஏ, பி, சி என 4 பிரிவுகளாக ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தயார் நிலையில் உள்ளது. தாதாக்கள் போல செயல்படும் ரவுடிகள் ஏ.பிளஸ், பிரிவிலும், அவர்களுக்கு கீழே ரவுடி கும்பலுக்கு தலைமை தாங்கும் ரவுடிகள் ஏ பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர்.


    சிறிய குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் பி மற்றும் சி பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரை பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரித்து வைத்திருக்க வேண்டும் என்கிற உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னையில் 6 ஆயிரம் ரவுடிகள் போலீசாரின் சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 750-க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். போலீசுக்கு பயந்து ரவுடிகள் பலர் வெளி மாநிலங்களுக்கும் தப்பிச் சென்றிருந்தனர்.

    இவர்களில் சிலர்தான் வெளிமாநிலங்களில் இருந்து வந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதையும் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இதுபோன்ற நபர்களையெல்லாம் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ரவுடிகளை ஒழித்துக்கட்டுவதற்காக சென்னை மாநகர காவல் துறையில் உருவாக்கப்பட்டுள்ள 'பருந்து செயலி'யை போலீசார் முறையாக பராமரித்து ரவுடி ஒழிப்பில் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் மற்றும் 12 துணை கமிஷனர்கள் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை மத்திய குற்றப் பிரிவில் ரவுடிகள் ஒழிப்புப் பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுறுசுறுப்பான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

    அவர்கள் ரவுடிகளை ஒழிப்பதில் தீவிரம் காட்டி செயல்பட்டனர். சிறையில் உள்ள ரவுடிகள் வெளி வந்ததும் அவர்களை தீவிரமாக கண்காணித்து குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

    ரவுடிகள் மத்தியில் 'கேங் ஸ்டார் டீம்' என்று அழைக்கப்பட்டு வரும் இந்த ரவுடி ஒழிப்புப் பிரிவை பலப்படுத்தவும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அதே போன்று சட்டம்-ஒழுங்குப் பிரிவில் மின்னல் வேகத்தில் செயல்படும் இன்ஸ்பெக்டர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரை இடமாறுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இப்படி ரவுடிகள் ஒழிப்பில் போலீசார் தீவிரம் காட்டி வருவதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    • சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
    • டி.ஜி.பி.சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குற்றம்சாட்டி இருந்தனர்.

    இதையடுத்து, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, டி.ஜி.பி.சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    முன்னதாக, அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொற்கொடிக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது நடந்த சம்பவம் பற்றி பொற்கொடி விரிவாக எடுத்துக் கூறினார்.

    ×